மச்சான்களின் எச்சரிக்கை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 5,956 
 
 

(இதற்கு முந்தைய ‘வாரிசு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

நாலே எட்டில் இசக்கி கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார். மனசுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எப்படியோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கிணற்றைத் தோண்டி விட்டார்! அதுக்காக உடனே கிணற்றில் குதித்து நீந்திக் குளிச்சிரவா முடியும்? முதலில் கிளம்பி வருகிற பூதத்தை விரட்டி அடித்துவிட்டு அல்லவா குளிக்கிற சமாச்சாரமெல்லாம்…

ராத்திரி சாப்பாட்டின்போது, இசக்கி அண்ணாச்சி கருவாட்டுக் குழம்பை சோத்துக்கு நடுவில் நெறய ஊத்திப் பிசைந்து நாலு வாய் போட்ட பிறகு மனைவியைப் பார்க்காமலே, “நீ என்ன நெனைக்கிறே?” என்று கேட்டார்.

“எதப்பத்தி?” கோமதி புருசனைப் பார்த்தபடியேதான் கேட்டாள். இந்த மாதிரியான நேரங்களில் ஆம்பளைகளை விடப் பொம்பளைகளுக்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி!

“காவலூரான் சொன்னதைப் பத்தி.”

“அவஞ் சொல்வான், சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு…”

“அவனை மாதிரி ஜோசியம் சொல்றவன் சுத்துப்பட்டியில எவனும் கெடையாது.”

“இப்ப நீங்க என்ன சொல்ல வாரீங்க..?” வெடுக்கென்று கேட்டாள்.

“காவலூரன் ஒண்ணும் தப்பா சொல்லிடலையே.”

“என் அபிப்பிராயம் அதில்லை.”
“அதைத்தேன் கேட்டேன்.”

“பதில் தெரிஞ்சிருச்சில்ல, இனிமே அதைப்பத்தி பேசாதீங்க.”

“ஒனக்குத் தாலி கட்டினதுக்கு முந்தியும், பிந்தியும் ஒன்னைத் தவிர்த்து வேற எந்தப் பொம்பளைப் பிள்ளையையாவது மனசால நா நெனச்சிப் பாத்திருப்பேனா சொல்லு?”

“இப்ப அதுக்கெல்லாம் பரி வேணுமாக்கும்?”

“அந்தக் காலத்ல எங்க அப்பா பனங்காட்டுப் பக்கம் இருந்து பெழைக்க வந்து ஏதோ நாலு துட்டு சம்பாரிச்சி இந்த வீட்டை வாங்கி அல்பாயிசில போயி சேர்ந்தாரு பாவம்… பெறகு நானும் எங்க அம்மாவும் படாத பாடெல்லாம் பட்டு இந்த வீட்டைக் காப்பாத்தி, ரெண்டு மச்சி கட்டி, கல்யாணம் பண்ணி, நாலு தலை முறைக்குப் போதுமான துட்டு சம்பாரிச்சி, பெரிய பணக்காரன்கள்ல ஒருத்தனா நானும் இந்த ஊர்ல தலை நிமிந்து ரொம்ப வசதியா வாழ்றன்னா, நாளைக்கி என் பேரு சொல்ல ஒரு வாரிசு வேண்டாமா? நாளைக்கி என் பணமும், வீடும் வாசலும் வாரிசு இல்லாம நாசமாவா போவணும்? அதை யோசிக்க மாட்டேங்கிறேயே..! இப்படி வாரிசு இல்லாமப் போயிட்டோமேன்னு எவ்வளவு வேதனைப் பட்டிருப்பேன் தெரியுமா?”

இசக்கி அண்ணாச்சிக்கு கருவாட்டுக் குழம்பு புரையேறிவிட்டது. ரெண்டு இருமல் இருமிக் கையால் உச்சந்தலையில் நாலஞ்சு தடவை அடித்துக்கொண்டார். இதுவே வேறொரு நேரமாக இருந்தால் கோமதி ஓடிப்போய் சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வருவாள், புருசன் கேட்பதற்கு முந்தியே… பாவம், இப்போது இசக்கியே ‘கொஞ்சம் தண்ணி கொண்டாயே’ ன்னு கேட்டு வாங்க வேண்டியிருந்தது..!

“அதனால கேக்குறேன். என் வம்ச வெளக்கு என்னோட அழிஞ்சி போயிடக்கூடாது! என் வம்ச வெளக்கை ஏத்தறதுக்கு எனக்கு வாரிசு வேணும். அந்த ஒரு காரணத்துக்காக நா இன்னொரு பொண்ணைப் பாத்து கல்யாணம் செய்துக்கப்போறேன். அதுக்கு ஒன் சம்மதம் வேணும் எனக்கு.”

சாப்பிட்டு முடித்த இசக்கி பொய்யாக ஒரு ஏப்பம் விட்டார். ஒண்ணும் சொல்லாமல் கோமதி பாத்திரங்கள் ஒவ்வொண்ணா எடுத்துப்போனாள். சமையல் அறைக்குள், தூரத்தில் உட்கார்ந்து இசக்கி பார்த்துக்கொண்டே இருந்தார். கோமதி சாப்பிடாமல் படுத்துவிட்டது தெரிந்தது. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து எழுந்து போனார்.

கோமதி சேலைத்தலைப்பால் முகத்தை மூடியபடி வெறுந்தரையில் படுத்துக் கிடந்தாள்.

“ஏன் சாப்பிடலையா?” மொட்டைக் கட்டையாய் கேட்டார்.

பதில் இல்லை.

“ஒன்னைத்தான்..”

கோமதி பேசாமலேயே படுத்திருந்தாள்.

“நா கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லவேயில்லையே?”

கோமதி முகத்தை மூடியிருந்த சேலையை விலக்கினாள்.

“இனிமே அதைப்பத்தி பேசாதீங்கன்னுதேன் சொல்லிட்டேனே… பெறகென்ன சும்மா சும்மா வந்து கேக்குறது? என் உடம்புல ஜீவன் இருக்கிற வரைக்கும் இன்னொருத்தியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு மட்டும் நா சம்மதிக்கவே மாட்டேன்.” குரல் உடைந்தது.

கோமதி திரும்பவும் சேலைத்தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டாள். அவள் உடம்பு குலுங்கியது.

இசக்கிக்குக் கடுப்பாகிவிட்டது. படுக்க அன்றும் மாடிக்குப் போய்விட்டார்.

இந்தச் சண்டை புருஷன் பெண்டாட்டிக்குள் தினமும் நடந்தது, இந்த மாதிரியான விவகாரங்களில் எல்லா புருசப் பயல்களின் மனோபாவமும் ஒண்ணுதான்… ஆடிக் கறக்க வேண்டிய மாட்டை ஆடிக் கறக்கப் பார்ப்பான்கள்..! பாடிக் கறக்க வேண்டிய மாட்டை பாடிக் கறக்கப் பார்ப்பான்கள். பெரிய எம்டன்களாச்சே! விடுவான்களா…!

“எவனுக்குத் தெரியும் இலஞ்சின்னு ஒரு ஊரு இருக்கிறதே! அப்படியாப்பட்ட ஒரு ஊர்ல எங்கியோ ஒரு மூலையில் கிடந்த ஒன்னைக் கல்யாணம் பண்ணி இந்த டவுனுக்குக் கூட்டிட்டு வந்து, பனங்காட்டு இசக்கியோட சம்சாரம்னு சொன்னாலே லச்சம் பேருக்குத் தெரியற மாதிரி ஒனக்கு ஒரு பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது யாரு? நானா ஒங்க தாத்தாவா? நாந்தான். அதுக்காகவாவது எனக்கு நீ இந்தக் கைம்மாறை பெரிய மனசு பண்ணி செய்யலாம்ல..!”

இப்படி ஒரு நேரத்தில்…

“என்னடா நம்ம வாழ்க்கையை பங்கு போடறதுக்கு ஒருத்தி வரப்போறாளேன்னுல்லாம் நீ நெனச்சி கவலையே பட வேண்டாம். என்கிட்ட கேட்டா வரவ எனக்கு வாரிசைப் பெத்துத் தாரதுக்குதேன். வேற எதுக்கும் கெடையாது. மத்த எல்லா விசயத்துக்கும் நீதேன் இந்த வீட்ல எப்பவும் போல… அதிலெல்லாம் எந்த ஒரு மாத்தமும் கெடையாது. எந்த மாத்தமும் வரவுஞ் செய்யாது.”

இப்படி ஒரு நேரத்தில்…

இசக்கி போட்டு கோமதியை உலுக்கிக் கொண்டேயிருந்தார்.

முதலில் கோமதி அசைக்கமுடியாத பனைமரம் போலத்தான் இருந்தாள்! கொஞ்ச நாட்கள் கழித்து அசைந்தாடுகிற பாக்கு மரமானாள்! கடைசியாக ஒருநாள் முறிந்து விழுகிற பப்பாளி மரமானாள்…!

ஆனால் அவள் முறிந்து விழுந்த இடம் இலஞ்சியில் இருந்த அண்ணன் தம்பிகளின் இரும்பு போன்ற தோள்களில்…

அவ்வளவுதான். கோமதியையும் இழுத்துக்கொண்டு அவளின் அண்ணன் தம்பிகள் அடுத்த பஸ் பிடித்து பாளையங்கோட்டைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

“நாங்க கேள்விப்படறது ஒண்ணும் நல்லாயில்லையே மாப்ளை!” என்ற நேரடிப் பாய்ச்சலிலேயே களத்தில் இறங்கி விட்டார்கள்.

“நல்லாயில்லேன்னு சொல்லும்படியா என்ன அப்படிக் கேள்விப் பட்டுட்டீங்க?”

“அத எங்க வாயாலவேற சொல்லச் சொல்றீகளாக்கும்?”

“என்ன இப்படி வந்து பேசறீக… என்னவோ நா எவ கழுத்லேயோ தாலியைக் கட்டி கூட்டியாந்திட்ட மாதிரி?”

“அதுக்குத்தா திட்டம் போட்டுக்கிட்டு வாரீக.”

“ஆமா. ஏதோ ஜோசியக்காரன் சொன்னான்… பெறகுதேன் எனக்கே வாரிசு வேணும்னு அந்த ஆசை வந்திச்சி. நா கேக்குறேன், ஒரு ஆம்பளைக்கி ஆசையே வரக்கூடாதா?”

“எனக்குக் கூடத்தேன் நாலு பொண்டாட்டி கட்டிக்கணும்னு ஆசை! அதுக்காக நாலு பெண்டாட்டியை கட்டிக்க முடியுமா?”

“இது விதண்டாவாதம் மச்சான்!”

“சோசியக்காரன் சொன்னான் என்கிறதுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு கால்ல வென்னியைக் கொட்டிக்கிட்டு ஆடறதுதேன் விதண்டாவாதம்.”

“யாரு அந்த சோசியக்காரன்? மொதல்ல அவனைக் கூப்பிட்டு எலும்பை எண்ணனும்!” இடையில் வேறொரு மச்சான் இந்த மாதிரி களத்தில் புகுந்தார்.

“இப்படி எலும்பை எண்ணனும், கிலும்பை எண்ணனும்னெல்லாம் பேசறது நல்லாயில்லை மச்சான்! அவ்வளவுதேன் சொல்லுவேன்.” இசக்கி வேட்டியை மடித்து டப்பாக்கட்டு கட்டிக்கொண்டார்.

“நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுக்க பாக்கிறானே பாவி.. சோசியம் கீசியம்னு சொல்லி.”

“நா கேக்குதேன் இப்ப என்ன கெட்டுப் போச்சி?”

“கத்தி தலைக்கு வந்திருச்சே!”

“கத்திக்கு குறுக்கே தலையைக் கொண்டாந்து நீட்டிக்கிட்டு இப்படியொரு பேச்சு!”

“எதுக்கு மாப்ளை வெட்டிப் பேச்சு. வாரிசுக்கோ எதுக்கோ! நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்க நாங்க விடமாட்டோம்.”

இசக்கியின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது!

“நா இன்னொரு கல்யாணம் செஞ்சா என்ன பண்ணுவீங்க?” தேள் கொடுக்கு மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு கேட்டார்.

“கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வந்து இந்தக் கேள்வியைக் கேளுங்க! அப்ப பதில் சொல்றோம்…” கண்கள் சிவக்க கொதித்தனர்.

இப்போது கோமதி தவிப்புடன் தன் அண்ணனின் கைகளைப் பிடித்தாள். நிலைமை கட்டு மீறிப் போகிறதே என்ற பயம் அவளின் ரெண்டு கண்களிலும் பளிச்சென்று தெரிந்தது. பொம்பளைப் பிள்ளைகளின் பாடு இது. கூடப் பிறந்தவன்கள் வந்து புருசன்காரனிடம் நியாயம் கேட்க வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் புருசன்காரனை ஒரேயடியாய் ஏறி மிதித்து அவமதித்து விடவும் கூடாது. ‘ஏன்தான் அண்ணன்களை கூட்டிக்கிட்டு வந்தோமோ’ன்னு ஒரு நிமிசத்தில் அவர்களின் புத்தி மாறிப்போய் விடும்!

பெண் புத்தி பின் புத்தின்னு சொல்றது இதைத்தான். வேற எதையும் இல்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “மச்சான்களின் எச்சரிக்கை

  1. கட்டற்ற காட்டாறு போல போய் விட்டதாய் நம்ம இசக்கி அண்ணாச்சி வாழ்க்கை.பாவம் கோமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *