கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 7,022 
 
 

சுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வைக்கோல் போட்டு கொளுத்தி காய்ச்சியதில் நமர்த்துப் போயிருந்த வார்கள் இறுகி தப்பட்டைகள் கணகணவென்று பேசுகின்றன.

மங்கா… கிழவி போய்விட்டாள்.

மங்கா..? மங்கையர்க்கரசியின் திரிபு. ஓடிக் களைத்த ஜென்மம். கூடத்தில் அவளை கிடத்தி வைத்திருந்தார்கள். ஹாலைத் தொட்டு பின்கட்டுவரை கூட்டம் வியாபித்திருந்தது. சற்றைக் கொருதரம் எவளாவது உறவுக்காரி வருவதும், வரும்போதே பிலாக்கணம் பாடியழ, உட்கார்ந்திருக்கும் பெண்கள் தப்.. தப்பென்று தத்தம் மார்புகளில் அடித்துக் கொண்டு அழ, அழுகைச் சத்தம் தெருக்கோடிவரை கேட்கிறது. சின்ன வயசிலேயே ஒற்றைப் பிள்ளையை அவளுக்குத் துணையாக விட்டு விட்டு அவள் புருஷன் அல்பாயுசில் போனப்போ அவளுக்கு நெசவுத் தொழில்தான் கை கொடுத்தது. லுங்கித் தறி, மோட்டா ரகம்… நாற்பதுக்கு நாற்பது. உழைப்பு…. உழைப்பு.

அப்படி உழைத்தவளுக்குக் காலம் ஒருநாள் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. பக்கவாதம் தாக்கி, இடது கை,கால்கள் செயலற்று விழ, படுக்கையிலேயே எல்லாமும் என்றாகி விட்டது. பேச்சுக்களும் நினைவுகளும் அரைகுறையாகிப் போயின.

தூண் ஓரம் கிழவிக்கு வாய்த்த பிள்ளை, சீமந்த புத்திரன், சுவாமிநாதன் தன் பெருத்த சரீரத்தை சாய்த்து வைத்திருந்தான். கிழவி செய்த வில்லங்களுக்கான மொத்த உரு போல. முரடன், மொடாகுடியன், சோம்பேறி, சற்றுத் தள்ளி பேத்திகள் ராணியும், கீதாவும் உட்கார்ந்திருந்தனர். பெரியவள் சமைந்து எட்டு வருஷங்களாகின்றன. இன்னமும் ஒரு ராஜகுமாரன் எட்டிப் பார்க்கவில்லை. வந்தால் மட்டும் என்ன? கட்டிக் கொடுக்க ஐவேஜூ இருக்கா? வயிற்றுக்கே சரியாய் போகிறது. வழிவழிபோல அந்த வீட்டில் மாமியார் நெய்த தறியில் இப்போது மருமகள்தான் நெய்கிறாள். இவள் நெய்து நாலு ஜீவன்கள் ரொம்பணும். சின்னவள் கீதா இப்பவோ அப்பவோ உட்கார்ந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள். கிழவியின் அருகில் நெருக்கமாய் மருமகள் லட்சுமி உட்கார்ந்து மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறாள். ஒற்றை நாடி, வற்றிப் போன முகம், அழுதழுது களைத்துப் போயிருந்தாள். காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் பல்லு மேல் படவில்லை.

வெளிப்பக்கம் திண்ணையில் ஊர் ஆம்பிளைகள் கடுப்புடன் உட்கார்ந்திருந்தனர். ரெண்டு நாள் பிழைப்பு போச்சுது. இது மார்கழி மாசம். வருஷத்தில் இந்த மாசந்தான் நெசவாளிகளுக்குக் கெடுபிடியான வேலை. வரப்போகிற சங்கராந்தி பண்டிகைச் செலவு. நெய்யக்காரன்களுக்கு புதுத்துணி, பணம் கொடுத்து பொங்கல் மரியாதை செய்யணும். இப்ப பார்த்தா இந்தக் கிழவி மண்டையைப் போடணும்? சாவு எடுத்து மறுநாள் பால் வைக்கிற வரைக்கும் ஊரில் யாரும் தறியில் உட்கார மாட்டார்கள். இது வாலாயமாய் இருக்கிற ஊர் கட்டுப்பாடு.

மங்காவின் உடல் உறங்குவதைப் போலவே வாயை திறந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து மருமகள் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். உள்ளே வதைத்துக் கொண்டிருக்கும் மனசாட்சிக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஐயோ..! கொன்னுட்டேனே.. எல்லாம் இந்த கண்ணம்மா கிழவியால் வந்த வினை. அவ போதனைதான் என் புத்திய மாத்திட்டுது.

“”அத்தே.. அத்தே….”- அவள் நேற்றைய நிகழ்வுகளில் மூழ்கிப் போனாள்.

“”இன்னாடீ லெச்சுமி! உன் மாமியா சட்டு புட்டுன்னு போவாம உனக்கு ஆட்டம் காட்றாப்பல தெரியுது..?”- இது கண்ணம்மா கிழவி.

“”அதை ஏன் கேக்கற? போனபாடுமில்லாம இருந்தபாடுமில்லாம, எல்லாம் என் தலையெழுத்து. எங்க வூட்ல வசதி இல்லேன்னாலும் ராணி மாதிரி இருந்தேன். இன்னிக்கு தோட்டியா சீரழியறேன். என்னிக்கு இதுக்கு கை காலு வெளங்காம போச்சோ, அன்னிக்கே என் வயிறு தூர்ந்து போச்சி ஆத்தா. நரகலை வாரிக் கொட்டி வாரிக் கொட்டி சாப்பிட உக்காந்தா ஒப்புதா? ஹும் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போறது தெரியல அதுக்கு. எழைச்சிக்குது. இன்னா பண்றது? கேக்குதா? இருக்கிற காலத்தில இன்னா சுத்த பத்தமா இருக்குந்தெரியுமா? அதான் தூக்கமுடியாம தூக்கிப் போயி, எல்லாக் கர்மத்தையும் வழிச்சிப் போட்டு, கழுவி, துடைச்சிட்டு தரையைக் கழுவறதுக்குள்ளே குமட்டிக்கிட்டு வருது. வாந்தியா எடுக்கறேன்”

“”ஏன்? உன் வூட்டுக்காரன் இன்னா பண்றானாம்? பெத்தவதான?”

“”ஓ! செய்வாங்களே.. மந்திரி மாசம் மும்மாறி மழை பெஞ்சுதா? என்றாப்பல”

“”அடியேய்.. உன் மாமியா உனக்குப் பண்ண கொடுமைக்குத்தாண்டி இன்னக்கு எழைச்சிக் கெடக்குறா..” “”வுட்றீ! அப்படிப் பண்ணவளுக்கு இந்த ஏழுமாசமா வாரிக் கொட்டறியே. இதான்டீ பெருசு. வேறொருத்தியா இருந்தா எப்பவோ கழுத்து மேல காலை வெச்சிட்டிருப்பா- லெச்சுமீ! உனக்கு ஒரு யோசனை சொல்றேன்…”

எச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். யாருமில்லை.

“”பேசாம கெயவிக்கு மூணு எண்ணை கூட்டி தலைக்கு ஊத்திடு!”

“”ஊத்திட்டா?”

“”நல்லெண்ணை, விளக்கெண்ணை, நெய்யி மூணுத்தையும் ஒரே அளவாய் கலந்து தலைக்கு தேய்ச்சி ஊத்திடு..”

“”இன்னா ஆவும்?”

“”இதுமாரி மாசக் கணக்கா இழுத்துங் கெடக்கிற கேஸýங்க கதை டக்னு முடிஞ்சிரும். சேப்பக்காரன் (சிலேத்துமக்காரகன்) வந்து தொண்டைய கட்டிரும். அரை நாள்ல மண்டையப் போட்ரும். இது பழைய காலத்து மொறைடீ…”

“”ஐயோ! கொலையா?”

“”ஏன்டீ கத்தறே? இது கொலை இல்லடீ. ஊர்ல ஒலகத்தில நடக்கிறதுதான். வாழ்ந்து சலிச்சஒடம்புக்கு விடுதலை. ஏன் உனக்குந்தான்…”

“”ஐய்யய்யோ! வாணாம் ஆத்தா. என்னால அப்பிடி செய்யமுடியாது. அதுவா வதைஞ்சி, இம்சைப்பட்டுக்கூட போவட்டும். விதி முடிஞ்சி போவட்டும். என் வூட்டுக்காரனுக்கு தெரிஞ்சிதோ வெட்டிப் போட்ருவாங்க!”

“”உன் கஷ்டம். இதிலே ஒரு தப்புமில்ல. ஒரு வருசமா இழுத்துங் கெடந்துச்சே மூலை வூட்டு கன்னிப்பன் கெயவன். அதுக்கு இப்பிடி தலைக்கு ஊத்திதான் போன புரட்டாசியில வழியனுப்பி வெச்சாங்க…”

அன்றைக்கெல்லாம் லட்சுமிக்கு வேலையே ஓடவில்லை. கிழவி விதைத்துவிட்டுப் போய்விட்டாள். இவள் கிடந்து தவிக்கிறாள். படபடப்பாயிருந்தது. மாமியாரை நினைக்கையில் எப்பவும் ஒரு கனல் அடி வயிற்றில் கொழுந்துவிட்டு எரியும் அவளுக்கு. அவ்வளவு பண்ணியிருக்கிறாள்?

கண்ணம்மா கிழவி சொல்கிறார் போல வேறொருத்தியாய் இருந்தால் இந்நேரம் எப்பவோ கதையை முடித்துவிட்டிருப்பாள். இதில ஒண்ணுந் தப்பு இல்லை. வாழ்ந்து சலிச்ச உடம்பு. ஐயோ! வேண்டாம் சாமி. என்ன பாவம் பண்ணேனோ இப்பவே அனுபவிக்கிறேன். பாவிமுண்ட அநியாயமா பழி சொன்னாளே. பொம்பளைக்குப் பொம்பளை இப்படி நாக்கிலே நரம்பு இல்லாம பேசலாமா? சின்னவ பொறந்து ரெண்டு வருசம் எங்கம்மா வூட்லதானே சீரழிஞ்சிக் கெடந்தேன். பெத்தவ பேச்சைக் கேட்டு என்னை வெளியே அனுப்பிட்டாங்களே இந்த ஆம்பள. நெய்யக்காரனுக்கு பொண்ணை பெத்தேன்னு பழி சொன்னாளே பாவி.

நினைக்கும் போதே கழுத்து நம்புகள் புடைத்துக் கொள்ள, முகம் ஜிவுஜிவு என்று சிவந்துப் போக, உடனே அழுகை வெடிக்கும் அவளுக்கு.

நான் வேறொருத்தனுக்கு முந்தானி விரிச்சேன்றீயடீ பாவி. இதோ மேல எரிஞ்சிப் போறானே அவந்தான் உனக்கு கூலி கொடுக்கணும். அதுக்கு இந்த ஆம்பளை அப்பிடிப் போட்டு அடிச்சாங்க. இன்னா சொல்லிட்டேன். வாய் கூசாம என்னை தட்டுவாணின்னு சொல்லிட்டியே. நீ கூடந்தான் அறியாததில அறுத்திட்ட. உன் கதை இன்னா சிரிப்பாய் சிரிச்சதோ யார் கண்டது?ன்னு சொன்னேன். அதுக்குத்தான் அப்பிடி அடி. நான் தட்டுவாணின்னா யாருக்கு அசிங்கமாம்?

அன்றைக்கெல்லாம் லட்சுமிக்கு ஒரே குழப்பம். கை வேலைகளை மறந்தாள். உள்ளுக்கும் புறக்கடைக்குமாய் நடந்துக் கொண்டிருந்தாள். ஐயோ விஷயம் அந்தாளுக்குத் தெரிஞ்சா அடிச்சே கொன்னுடுவாப்பல. மூர்க்கன். முன்னே ஒருக்கா இன்னமோ சொல்லிட்டேன்னு பீச்சாங்கை ஆட்காட்டி விரலைப் புடிச்சி மொடுக்குன்னு ஒடிச்சானே பாவி. மாவுக்கட்டு, புத்தூர் கட்டுன்னு எலும்பு கூட சரியா ஒரு வருசம் ஆச்சுதே. வாணம்டா சாமி. காங்கியாத்தாவுட்ட வழி ஆவட்டும். எத்தினி காலம் தோட்டியா சீரழியணும்னு எந்தலைல எழுதியிருக்கோ?

மறுநாள் கண்ணம்மா கிழவி வந்தபோது மங்கா புத்திமாறாட்டமாக புரியாத லாடப் பேச்சு பேசிக் கொண்டிருந்தாள். தோதாய் லட்சுமி புருஷன் தறிக்கு உண்டை நூல் வாங்கவும், கூலி பாக்கியை வாங்கவும் பணிக்கர் வீட்டுக்கு டவுனுக்குப் போய்விட்டான். மதியம் சாப்பாட்டு நேரம். தவறிதான் வருவான். நிதானத்தில் வருவானோ என்னவோ. ராணியும் கீதாவும் பாவுஓட ஆலைக்காரர் வீட்டுக்குப் போயிருக்குதுங்க. மதியந் தாண்டித்தான் அதுங்க திரும்பும்.

“”ஆத்தா! நெசமாவே அந்த எண்ணைக்கு அம்மாம் பவுருகீதா..?”

“”இப்ப எட்டரை மணி ஆச்சில்லடீ? இப்ப தேய்ச்சி ஊத்தினா ஒரு மணிக்கெல்லாம் சேப்பக்காரன் வந்து தொண்டைய அடைச்சிடும். சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் புண்ணியவதி வலி தெரியாம போய் சேர்ந்திடுவா..”

“”ஐயோ! படபடன்னு வருதே. இந்த ஆம்பளைய உனக்குத் தெரியாது ஆத்தா, வெட்டிப்புடுவாங்க காங்கியாத்தா..!”

“”சீய்! இப்பிடி திடமில்லாம பேசறதா இருந்தா நான் போறேன்டீயம்மா.. எனக்கு வாணாம். உனக்குத்தான்டீ.. விடுதலை. இந்த விசயம் ஏன் வெளிவரப் போவுது சொல்லு. நீ நோறை மூடி வெச்சிருக்கோ போறும்..”

“”இல்லே ஆத்தா!”

“”ஊஹூம்! இது சரிப்படாது..”

லட்சுமி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். லட்சுமியின் கைகளில் நடுக்கமிருந்தது. அடிக்கடி நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். கிழவி தட்டிக் கொடுத்தாள். அப்புறம் காரியங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன. இருவரும் சேர்ந்து மங்காவை உள் வாசலுக்கு தூக்கிச் சென்றார்கள். லட்சுமி வெளிக்கதவை அடைத்துத் தாள் போட்டாள். கண்ணம்மா கிழவி மூன்று எண்ணைகளையும் கலந்துக் கொடுக்க, லட்சுமிதான் தளர தேய்த்துவிட்டாள். மங்காவிடம் எந்த மாற்றமுமில்லை. எதையும் உணரமுடியாதவளாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் ஊறட்டுமென்று கிழவி உட்கார, இவளுக்கு இருப்புக்குக் கொள்ளவில்லை. இந்த விஷயம் செத்தாலும் வெளியே வரக்கூடாது. மாரியாயீ! உளறிடாம இருக்க நீதான்டீயம்மா எனக்கு துணையிருக்கணும். ஒருவேளை இந்தக் கெயவியே வெளியே சொல்லிடுவாளோ? மூலை வூட்டு கன்னியப்பன் கதைய நம்மகிட்ட சொன்னாப்பல, நம்ம கதையை சொல்லமாட்டாளா என்ன? ஐயய்யோ!

அவளுக்கு உதறல் கண்டது. பாதி கெணறு தாண்டியாச்சு. இனிமே என்ன பண்ணமுடியும்? மாரியாயீ!

“”அடி லெச்சுமி! எந்திரிடி! ஊறினது போதும்…”

கிழவி தண்ணீர் தெளிக்க, ரெண்டு பாக்கெட் சீயக்காய் தூளைப் பிரித்துக் கொட்டி லட்சுமிதான் தேய்க்க ஆரம்பித்தாள். தண்ணீர் சில்லென்றிருந்தது. பச்சைத் தண்ணீரில்தான் குளிப்பாட்டணுமாம். எல்லாம் முடிந்த போது, மங்கா கிழவிக்கு வெட வெடவென்று உதறியது. பேச்சுகள் நின்றுப் போக, இலக்கின்றி பார்வைகள் அலைய ஆரம்பித்தன.

ஆயிற்று தலையை துவட்டி, உடம்பை நன்றாகத் துடைத்து விட்டு, முதுகுப் பக்கம் பள்ளம் பள்ளமாய் இருந்த படுக்கைப் புண்களில் பவுடர் கொட்டி, வேறு புடவையை சுற்றி படுக்க வைத்தார்கள்.

கூலி என்று நூற்றைம்பது ரூபாயை கறந்துக் கொண்டு கண்ணம்மா கிழவி கிளம்பிவிட்டாள். மதியம் நெருங்குவதற்குள் மங்காவுக்கு ஜுரம் வந்துவிட்டது. ஐயோ! இந்த ஆம்பிளை வர்ற நேரம், தைரியத்தை குட்றீ காங்கியாத்தா. என் அத்தை பட்ற அவஸ்தையைப் பார்க்க முடியாமதான் இப்படி பண்ணிப்புட்டேன் சாமீ! என்னை காப்பாத்து.

இரண்டு மணிக்கு மங்கா ஒருதடவை லெச்சுமீ… லெச்சுமீ! என்று கத்தினாள். இவள் எழுந்துகிட்டே ஓடுவதற்குள் நினைவு தவறிவிட்டது. முதலில் விட்டுவிட்டு இருமலும் தும்மலும் வந்து பின்னர் நாலு மணிக்கெல்லாம் கொய்ங்… கொய்ங்.. என்று இழுக்க ஆரம்பித்துவிட்டது. இன்னமும் புருஷன் வரவில்லை. பெண்கள் ரெண்டும் வந்து பாட்டியைப் பார்த்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டதுகள். மறுபடியும் மங்காவுக்கு நினைவு வந்தபோது லட்சுமி பக்கத்திலேயே இருக்க, லெச்சுமீ! என்று கத்திவிட்டு அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். கண்ணீர் தாரை தாரையாக இறங்குகிறது.

“”அத்தே… என்ன அத்தே?”

– மீண்டும் நினைவு போய்விட்டது.

லட்சுமிக்கு இப்போது கிழவியைப் பார்க்க, காரணமில்லாமல் அழுகை வந்தது. செத்த பாம்பை போய் அடிச்சிட்டமே. ஏழு மாசமாக ஜடமாய் கிடக்கிற இதுவா நம்ம எதிரி? அந்த கொடுமைக்காரி இப்போது இல்லை. தன் புள்ளையை எனக்கு பங்கு கொடுக்க பொறுக்காமல் பழி சொல்லி என்னை துரத்திவிட்ட அவ இல்லை இது.

“”அத்தே… அத்தே…!” – மேலும் கீழும் மார்பு தூக்கிப் போட கொய்ங்.. கொய்ங்.. அத்தே! அந்த மனுஷனை இன்னுங் காணோம். போதையிலதான் வருவான். மங்கா கண் திறந்தாள்.

“”லெச்சுமீ!”

அவளுடன் ரெண்டு பெண்களும் ஓடிவந்தனர்.

“”பாட்டீ… பாட்டீ…!”

பேத்திகளை மையமாய் பார்த்தாள். கண்ணீர் கோடாய் இறங்கியது. லட்சுமி, கிழவியின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள்.

“”ம..ன்..னி..ச்..சி..ட்..றீ!” – கிழவியின் குரல் பலவீனமாக இருந்தது. நினைவு வந்துவிட்டது.

“”அத்தே.. அத்தே.. அழுவாதே..” – இவளுக்கும் இப்போது அழுகை வந்துவிட்டது. ஆச்சர்யமான விஷயம். மங்கா இப்போது திணறி திணறி பேச ஆரம்பித்தாள்.

“”நீ.. எனுக்கு மூணு எண்ணை கூட்னதுதாண்டி சரி..”

அய்யய்யோ தெரிஞ்சிபோச்சா? உடனே சுதாரித்தாள்.

“”டியேய் ராணி! நீயும் பாப்பாவும் பக்கத்து தெருவுக்குப் போயி நம்ம சம்முகம் அய்யா இல்லே? அவரை கூட்டியாங்க. சீக்கிரம் சீக்கிரம்..” விரட்டினாள். ஓடிவந்து கிழவியின் கையை பிடித்துக் கொண்டாள் “”ஐயோ! அத்தே மன்னிச்சுடு அத்தே… புத்தி கெட்டுப் போயி சொல்வார் பேச்சைக் கேட்டு தப்பு பண்ணிட்டேன் அத்தே…”

அணையப் போகிற தீபம் பிரகாசிக்கிற மாதிரி மங்கா இப்போது பலவீனமாக ஆனால் ஓரளவுக்குப் பேச ஆரம்பித்தாள்.

“”சர்தான்.. எம்மாம் நாள்தான் வாரிக் கொட்டுவே? என் நாத்தம் எனக்கே ஒப்பலடீ…”

“”ஐய்யோ..! அவங்களுக்குத் தெரிஞ்சா கொன்னுடுவாங்களே…”

சொல்லாதே என்று ஜாடை காட்டினாள்.

“”அவன்… எங்க?”

“”பணிக்கரு வூட்டுக்கு போய்க்கீறாங்க.. வர்ற நேரந்தான்…”

மங்காவுக்கு இப்போது தொடர்ச்சியாய் இருமல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுற்றிலும் பார்வை அலைந்தது.

“”இன்னா அத்தே சொல்லு?”

“”எந்திரி.. எந்திரி.. சீக்கிரம்..” – பரபரப்பாயிருந்தாள். அவசரம் காட்டினாள். சக்தியை திரட்டி உரக்க குரல் எழுப்பினாள்.

“”போ.. போ…” – உள் பக்கம் கையைக் காட்டினாள். லட்சுமிக்குப் புரியவில்லை.

“”போ! புளிப்பானைக்குக் கீழே.. மண்ல…!”

“”மண்ல இன்னாது அத்தே?”

“”எடுத்துக்கோ.. அவன் கண்ல… காட்டா..தே!”

“”சரி அத்தே!” – இவளுக்கு அழுகை வந்துவிட்டது. என்னவாக இருக்கும்? மங்கா இரண்டு விரலை நீட்டிக் காட்டினாள்.

“”பே..பே..பேத்திங்க…”

“”ஆமா.. ரெண்டு பேத்திங்க…”

“”ரெண்டும்.. பொட்டக் குட்டிங்களா வெச்சிங்கீறியே…”

இவள் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.

“”ரெண்டும் பொட்டைங்களா போச்சே. இந்தக் குடிகாரப் பாவிய வெச்சிக்குணு இன்னா பண்ணுவேன் அத்தே..?”

“”போ… போ..!” – சொல்லிவிட்டு மங்கா ஆயாசம் மேலிட கண்களை மூடினாள்.

இவள் உள்ளே ஓடி பழங்காலப் பானைகளை நகர்த்தி வைக்க, பிருமனைக்கு நடுவில் மட்டும் மண் தரை பொலபொலவென்று உதிரி மண்ணாக இருந்தது. இவள் கிளறக் கிளற மஞ்சள் கிழங்காம் டாலடிக்க, வில்லை வில்லையாக மொத்தம் பன்னிரெண்டு சவரன்கள் கிடைத்தன. குபுக்கென்று தண்ணீர் கொப்பளித்தது. ஒரு நிமிடம் மங்கா கிழிவியின் முன்னால் தான் நிர்வாணமாக நிற்பதாக கூனிக் குறுகினாள்.

அத்தே! அத்தே.. சிறுவச் சிறுவ இந்த பன்னிரெண்டு சவரன்களை சேர்க்க நீ எம்மாம் பாடுபட்டிருக்கணும்? உன் மனசில் நானும் எங்கொயந்தைங்களுந்தான் இருக்கோம்னு தெரிஞ்சிக்காம பூட்டேனே.. உம் புள்ளைக் கூட இல்லியே.

“”ஐயோ அத்தே..! உன் உள் மனசு தெரியாம பண்ணிப் புட்டேனே. இந்த ஜென்மம் கெழக்கே போறவரைக்கும் என் உள்ளே வேக்காளத்தை வெச்சிட்டியே. பாவிமுண்ட! என்னை பழிகாரியா ஆக்கிட்டியடீ…”

லட்சுமி கதறியபடி ஓடிவந்து மாமியாரிடம் நிற்க, மங்காவுக்கு நெனவு தவறிப் போயிருந்தது. இனி சொல்லி அழ எதுவுமில்லை. நெடுஞ்சாண் கிடையாக மாமியாளின் கால்மாட்டில் விழுந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *