அப்பா சொன்ன நரிக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,573 
 

1.

இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.

அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்

ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.

எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான். அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

2.

“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா”

ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.

“யெஸ்”

“உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்”

இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில் அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.

நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.

3.

அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது, அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.

சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள். நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.

– Saturday, October 24, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *