பேங்கிற்கு எடுத்துச் செல்ல எனது பென்ஷன் ஆர்டர் புத்தகம் தேவைப்பட்டது. அறைக்குள் வந்து பீரோவைத் திறந்தேன். பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமானவற்றின் ‘பேக்’கில் வைத்திருந்தேன். அந்தப் புத்தகத்தை எடுக்கப் போகும்போது எனது பார்வையில் பட்டது ஒரு கார்டு சைஸ் போட்டோ. எடுத்துப் பார்த்தேன். நினைவு பின்னோக்கிச் சென்றது.
நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அறிமுகமாகி, நல்ல பழக்கமானாள், லதா. ஒரு நாள் அவளிடம் ஆசையாகக் கேட்டேன், ‘‘ஸ்டூடியோவுக்குப் போய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்குவோமா?’’அந்தக் காலத்தில் இப்போது போல சர்வசாதாரணமாக போட்டோ எடுத்துக் கொள்ள செல்போனோ… செல்ஃபியோ கிடையாது. அவசரமாய் மறுத்தாள், ‘‘ஐயையோ! சேர்ந்தெல்லாம் எடுத்துக்க வேண்டாம். போட்டோ வேற யாரு கையிலேயாவது கிடைச்சா அவ்வளவுதான்!’’
‘‘உன்னோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு ஆசையா இருக்கு லதா…’’
‘‘எனக்கு வேற இடத்திலே கல்யாணமாகி… அப்புறம் எப்படியோ பார்க்கக்கூடாதவங்க கைல அது சிக்கிட்டா என் வாழ்க்கை பிரச்னையாயிடும்…’’
‘‘யாரு கண்ணுலேயும் படாம பத்திரமா வெச்சுக்குவேன். என்னை நம்பு…’’
நிறைய உறுதிமொழிகளைக் கொடுத்து கெஞ்சி சம்மதிக்க வைத்தேன்.
‘‘பேங்குக்குக் கிளம்பாம யாரோட போட்டோவைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க?’’ அறைக்குள் கேட்டுக்கொண்டே வந்தவளிடம் சொன்னேன்.
‘‘நம்ம போட்டோவைத்தான்!’’
– ஜனவரி 2017