பொய் மான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,251 
 
 

‘தாத்தா!’ என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து.

அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

ராகவிக்கு தன் தாத்தா மேல் கொள்ளை பிரியம். ஐந்தாவது படிக்கிறாள். தினமும் ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வரும் போதே ‘தாத்தா’ என்று தான் நுழைவாள். தாத்தாவும் உருகிப்போய் நிற்பார்.

“தாத்தா, இன்னைக்கு ஸ்கூல்ல எங்க தமிழ் வாத்தியாரு என்ன சொல்லி கொடுத்தாரு தெரியுமா?”

“என்ன சொல்லிக் கொடுத்தார்?”

“கவரிமானைப் பத்தி சொல்லிகொடுத்தார். அந்த மான் கௌரவமான தன்னுடைய உடம்பிலிருந்து ஒரு முடி உதிர்ந்தா கூட உடனே செத்துப்போயிடுமாம். அந்த அளவுக்கு அதனுடைய கௌரவம் தான் அதுக்கு முக்கியமாம். தன்னுடைய மானம் கொஞ்சம் போனாலும் அதனால உயிர் வாழமுடியாதாம். அதுபோலதானாம் பண்டைய காலத்திலேர்ந்தே தமிழர்கள் பண்பாடும். உண்மையா தாத்தா?”

தன்னுடைய பேத்தியை சிங்கமுத்து கூர்ந்து பார்த்தார். அவருடைய மனதில் ஆயிரம் நினைவலைகள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய நெஞ்சை பிளந்து சுக்குநூறாக்கிய அந்த குரல் இன்னும் அவர் மனதில் இருக்கிறது. “டேய் சிங்கமுத்து, நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா வெளிய வாடா. எனக்கு தர வேண்டிய எண்பது லட்சத்தை எண்ணிவைடா”..

மறக்க முடியுமா அதை? ஊரே வேடிக்கை பார்க்க வெளியே நின்று கத்தினானே அவன். எதுவானாலும் தயவு செய்து உள்ள வந்து பேசுங்க என்று அவர் மனைவி கெஞ்சியும் அவன் வெளியே நின்றுதான் கத்தினான். “நாலு பேருக்கு தெரியட்டுமே? அப்பதாண்டி உன் புருஷனுக்கு உரைக்கும்” என்று அவர் மனைவியைப் பார்த்து அவன் சுடுசொற்களை பாய்ச்சினான். சிங்கமுத்துவே தன் மனைவி ராஜேஸ்வரியை ‘டி’ போட்டு அழைத்ததில்லை. ஆனால் அவன் எத்தனை தடவை வாடி போடி என்று ஏசினான்.

அவன் – காளிங்கன். அனேக தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் அவனை தெரியும். பணச்சுரங்கம் அவன். பெரும் ரவுடி கூட்டத்துக்கும் சொந்தக்காரன். எப்போது போனாலும் அவனிடமிருந்து பணம் கிடைக்கும். ஆனால் வட்டி மேல் வட்டி போட்டு வறுத்துவிடுவான். அவன் தான் அன்று சிங்கமுத்துவின் வீட்டுக்கு முன் வந்து அப்படி கத்திக்கொண்டிருந்தான்.

ஆனால் நல்லவேளையாக அவருடைய ஒரே மகள் அப்போது வீட்டிலில்லை. சென்னையில் கம்பியூட்டர் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிக்கிறாள். இல்லாவிட்டால் இதையெல்லாம் பார்த்து அவள் மனமும் புண்பட்டிருக்கும்.

சிங்கமுத்துவும் பணக்காரர் தான். ஜமீன் பரம்பரை. ஆனால் அவரது போதாத காலம். சில திடீர் நண்பர்களால் தூண்டப்பட்டு, அப்போது சினிமா படம் ஒன்றை தயாரித்தார். முதலில் ஒரு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்க பட்ட படம் மெல்ல மெல்ல மூன்று கோடிகளை விழுங்கியது. அதில் இரண்டு கோடி கடன். அதுவும் காளிங்கனிடம். அந்த இரண்டு கோடியும் ராட்சச வேகத்தில் குட்டிபோட்டு நான்கு கோடியாகிவிட்டது.

படம் வெளியாகி படுதோல்வியடைந்தது. திரையுலகம் எப்படி இயங்குகிறது என்று சிங்கமுத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் முடிந்த பிறகு, அவருக்கு மீதிமிருந்தது அவருடைய குடும்பம், அவருடைய கடன் மட்டும்தான். நண்பர்கள் மற்றும் உறவினர்களெல்லால் தூர விலகிப்போயிருந்தார்கள்.

இருந்த நிலபுலன்களை எல்லாம் விற்று பெரும் பகுதி கடனை அடைத்துவிட்டார். மீதிமிருந்தது அந்த வீடு மட்டும்தான். அதுவும் காளிங்கனிடம் அடமானத்திலிருந்தது.

“டேய் சிங்கமுத்து, இன்னும் ஒரு நாள்தான் டைம். அதுக்குள்ள என்னுடைய பணத்தை எண்ணிவை. இல்லைன்னா உன் வீட்டை காலி பண்ணு’ என்று கர்ஜித்துவிட்டு போனான்.

தெருவிலிருந்து அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அன்றிரவு…

“எல்லாம் போச்சு ராஜேஸ்வரி. பரம்பரை பரம்பரையா சேர்த்து வைச்சிருந்த சொத்தும் போச்சு. அதையெல்லாம் விட என் மானமும் போச்சே” என்று மனைவியிடம் அவர் அழுதார்.

ராஜேஸ்வரி அம்மாளும் கலங்கியழுது கொண்டிருந்தார்.

அப்போது தான் சிங்கமுத்துவின் மனதில் அந்த விபரீத எண்ணம் தோன்றியது.

“பேசாம நாம்ப தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போயிடலாமா? மானம் மரியாதை போனதுக்கப்புறம் எதுக்கு வாழனும்?”

கன்னத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் அறைகள் வாங்கியவர் போல திகைத்துப் போய், தன் கணவனை நோக்கினார் ராஜேஸ்வரி அம்மாள். அழுவதை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசித்தார்.

சிங்கமுத்து தன் மனைவியின் பதிலுக்காக திகிலுடன் காத்திருந்தார். நிமிடங்கள் பல ஓடின.

பொறுமையாக ஒரு முடிவுக்கு வந்த ராஜேஸ்வரி அம்மாள் அமைதியாக பதிலளிக்க ஆரம்பித்தார் “தற்கொலையெல்லாம் கூடவே கூடாதுங்க. மானம் போனா அதை திரும்பி பெற முயற்சி பண்ணனுமே தவிர, கோழை மாதிரி சாக முயற்சிக்ககூடாதுங்க. ஆண்டவன் ஒவ்வொரு உயிரையும் படைக்கும் போது, அது புழுவானாலும் சரி பூச்சியானாலும் சரி, ‘வாழு. அதுதான் உன்னுடைய ஒரே குறிக்கோள்’ன்னுதான் கட்டளையிடறான். சாகச் சொல்றதில்லை. அதனாலதான் எல்லா உயிரினங்களும், ‘தான் வாழனும்’னு தினம் இயங்குதுங்க. திரும்பவும் அழுத்தமா சொல்றேன். மானம் போனா என்னங்க? இழந்த மானத்தை திரும்பி பெறலாம். ஆனா வாழ்க்கை போனா, திரும்பி வருமா? அதுவும் இந்த சமயத்துல செத்துப்போனோம்னா நாம்ப தோத்துப்போனவங்களாயிடுவோம். மேலும் காலேஜ்ல படிக்கிற நம்ப பெண் நம்பளை பத்தி என்ன நினைப்பா? குழந்தை துடிதுடிச்சு போயிடாதா?

“அப்ப காளிங்கன்?” மெதுவாக இழுத்தார் சிங்கமுத்து.

“என்னதான் பண்ணுவான் பார்ப்போமே. நம்ப வீட்டை புடுங்கிகிட்டு நம்பளை நடுத்தெருவில் நிறுத்தப்போறானா? நிறுத்தட்டும். நின்னுதான் பார்ப்போமே! அசிங்க அசிங்கமா திட்டப்போறானா? திட்டட்டும்? ரொம்ப திட்டுனா, இல்லை அடிச்சா மானா நஷ்ட வழக்கு போடுவோம். போலீசுக்கு போவோம். என்ன தான் பண்ணுவான் பார்த்திடலாம்” என்றார் ராஜேஸ்வரி அம்மாள் வேகமாக.

அதற்கு பிறகு வந்த வருடங்களில் நிறைய மாற்றங்கள் நடந்தன.

காளிங்கனிடம் அவர்கள் தங்களிடமிருந்த ஒரு வீட்டையும் இழந்ததும், பிறகு சென்னை சென்று தங்கள் மகளுடன் ஒரு சிறிய போர்ஷன் வீட்டில் வாடகைக்கு தங்கியதும், பக்கத்திலிருந்த ஒரு ஹோல்சேல் கம்பெனியில் சிங்கமுத்து கணக்கராக் வேலை பார்த்ததும், கல்லூரியில் கம்பியூட்டர் படிப்பை முடித்த அவர் மகள் ஓராண்டிலே, புதியதாய் ஒரு மென்பொருள் சூத்திரத்தை கண்டுபிடித்ததும், அதை ‘இன்போஸிஸ்’ நிறுவனம் இருபது கோடி கொடுத்து வாங்கியதும், அதைக்கொண்டு காளிங்கனிடமிருந்து தங்கள் சொத்தையெல்லாம் திரும்ப வாங்கி இழந்த பெருமையை மீட்டதும் (அய்யாவும் அம்மாவும் நான் சொன்னதையெல்லாம் மனசுல வைச்சுக்ககூடாது, ஹி, ஹி – காளிங்கன்), மகளுக்கு அவள் விருப்பப்படியே அவள் கூடப்படித்தவனை கல்யாணம் பண்ணிவைத்ததும், அவர்களும் சிங்கமுத்துவுடனேயே ஊருக்கு வந்து செட்டிலாகி, ஒரு புதிய கல்வி நிறுவனம் மற்றும் ஸாப்ட்வேர் நிறுவனம் நடத்துவதும், பேத்தி ராகவி அந்த வீட்டில் பிறந்ததும், அவள் தினமும் தன் வால்தனத்தால் தாத்தா பாட்டியை உண்டு இல்லையென்று ஒரு வழி பண்ணுவதும்…அவற்றில் குறிப்பானவை.

“தாத்தா!!! தாத்தாஆ!! ராகவி அழுத்தமாக கூப்பிட்டாள்.

“என்னம்மா?” மெதுவாக தன் எண்ணங்களிலிருந்து விடுபட்ட சிங்கமுத்து கேட்டார்.

“என்னம்மாவா? சரியாபோச்சு. கவரிமானுன்னு ஒண்ணு இருப்பது உண்மையா பொய்யான்னு கேட்டா நீங்க பாட்டுக்கும் ஏதோ யோசிச்சிகிட்டு இருக்கீங்களே?”

சிங்கமுத்து மெதுவாக தன் பேத்தியை பார்த்தார். பின்பக்கம் உள்ள தோட்டத்தில் அவர் மனைவி ராஜேஸ்வரி யாரிடமோ சிரித்து பேசிக்கொண்டிப்பது அவர் காதில் விழுந்தது. பிறகு சிறிய புன்முறுவலுடன்..

“கவரிமானுன்னு எதுவும் இருந்ததில்லை. சும்மா, எல்லாம் பொய். அது ஒரு பொய்மான்” என்றார்.

ராகவி முகத்தில் குழப்ப ரேகை. “அப்ப தமிழர் பண்பாடு?”

“ஆங்! அதுவா? மானம் போனா மீண்டும் போராடி அதை திரும்ப மீட்டு பெறுவதுதான் தமிழர் பண்பாடு” என்று முடித்தார்.

– ஜூலை 27 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *