பொம்பள மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 2,225 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அவளை முதலில் கவனிக்காமல், வந்தவர்கள் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்த கண்ணதாசன், திடீரென்று திரும்பிப் பார்த்த போது அவள் முதுகுப் பக்கமே தெரிந்தாலும் ஜெசிகா தான், என்று உணர்ந்ததும் உடலில் மயிர்க்கால்கள் சில்லிட்டு நிற்பதை உணர்ந்தான்.

‘ஜெசிகா எப்படி இந்த திருமணத்திற்கு வந்தாள். என் அக்கா மகள் சித்ரா கல்யாணத்திற்கு இவள் எப்படி… கண்டிப்பாக எங்கள் சைடிலோ அத்தான் பக்கத்திலோ அவள் தூரத்து உறவாக இருந்திருந்தால் கூட தெரிந்திருக்கும். ஒரு வேளை சித்ராவின் தோழியாக இருக்கலாம். கண்டிப்பாக என்னைக் கடந்து போன போது என்னைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால் ‘ஹலோ’ கூட சொல்லாமல் போனதிலிருந்து அவள் கோபம் இன்னும் நன்றாகப் புரிந்தது.யோசித்துக் கொண்டே திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தவனை அருகில் வந்த பிரபு “டேய், ஜெசிகா வந்திருப்பதைப் பார்த்தாயா?” என்று கேட்டான்.

கண்ணதாசன் பதில் சொல்லாமல் புன்னகைத்து விட்டு ‘அப்புறம் பேசலாம்’ என்று பிரபுவிடம் சைகை காட்டி விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அந்தப் பக்கமாக வந்த அத்தான் திரவியம் “டேய் கண்ணா, போய்க் கொஞ்சம் சமையலைக் கவனி” என்றார்.

பிரபுவை அழைத்து ரிசப்ஷனில் நிற்க வைத்து விட்டு சமையல் செய்யுமிடத்திற்கு வந்த போது தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஜெசிகா கோபமான விழிகளுடன் முறைத்து பார்க்க, ஒதுங்கிப் போனான் கண்ணதாசன்.

“என்னைத் தெரியுதா மிஸ்டர் கண்ணதாசன்?” என்று அவள் கோபத்தில் கேட்டது யாரோ சாட்டையால் அடித்த மாதிரி வலித்தது.

“திரும்பிப் பார்க்காமல் பதில் சொல்லாமல் போவது தான் அழகா?” என்று அவள் திரும்பவும் கேட்க, “என்ன. ஜெ…சி…கா எப்படி இருக்கே?” என்று திக்கிக் திணறியவாறு கேட்டான் கண்ணதாசன்:

“ஓ! என் பெயர் கூட நினைவிருக்கிறதா? வெரி குட்” என்று அவள் நக்கலாக கேட்க அந்த சமையல்காரர், “தம்பி எல்லாம் ரெடி அப்பளம் நீங்கள் சொன்னதும் பொறிக்க ஆரம்பித்து விடலாம்” என்றார்.

“சரி அய்யரே, நான் பந்தி ஆரம்பிக்கும் முன்னாலே வந்து சொல்கிறேன்” என்று அவன் மெதுவாக கிளம்ப எத்தனிக்க, “எங்க கூட பேசக் கூட நேரமிருக்காதே” என்றாள் ஜெசிகா கோபத்துடன்.

ஏதோ ஆவேசம் வந்தவனாக “நீ கல்யாண வீட்டிலே வந்து கலாட்டாப் பண்ண வந்திருக்கியா என்ன? நான் என் பக்கத்துக் காரணங்களை எடுத்துச் சொல்லிய போது கேட்கப் பொறுமையில்லாமல் போனவள் தானே நீ! உனக்கு உன் கோபம் பெரிது. தப்பு என் பக்கம் மட்டுமில்லை. இயற்கை சதி செய்து விட்டது. என்றால் நீ நம்பத் தயாராக இல்லை. அப்புறம் நான் ஏன் உன்னோடு பேச வேண்டும்” என்று அவன் கத்திய போது எல்லோரும் வேடிக்கைப் பார்க்க அவள் ஓடிச் சென்று மணப் பெண்ணின் அறையில் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

கண்களை நன்றாகத் துடைத்து விட்டு முகம் கழுவி துடைத்து விட்டு அத்தானிடம் வந்து “எல்லாம் ரெடி அத்தான் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு பந்தி பரிமாற ஆரம்பித்து விடலாம்” என்றான்.

“சரி, நீ போய் மேளக்காரனை உள்ளே வரச் சொல்லு” என்று சொல்லி விட்டுப் போனார் அத்தான் திரவியம்.

மேளக்காரனை அழைக்கக் கிளம்பிய கண்ணதாசனை ஒரு சிறு பெண் பிள்ளை அழைத்து “அங்கிள், உங்களை அந்த அக்கா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

திரும்பிப் பார்த்த போது அழுது வீங்கிய முகத்துடன் ஜெசிகா நின்று கொண்டிருந்தாள்.

மேளக்காரர்களை உள்ளே வரச் சொல்லி விட்டு ஜெசிகாவை நோக்கி நடந்தான் கண்ணதாசன். “நாம் சந்தித்து எவ்வளவு நாள் ஆகி விட்டது தெரியுமா?”

“ஆறு வருடம் மூன்று மாதம் நான்கு நாட்கள் பதினெட்டு மணி நேரம்” என்று கண்ணதாசன் கொஞ்சலாக ஏக்கத்துடன் சொன்ன போது விக்கித்துப் போனாள், ஜெசிகா.

“இவ்வளவு கரெக்டா மணிக்கணக்கிலே கணக்கு வைத்திருக்கிற நீங்களா நான் கேட்ட போது பேசாமல் திரும்பியும், கத்தி விட்டும் போனீர்கள் கண்ணா”

“நான் எத்தனை முறை உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா ஜெசிகா”
“…”

“ஏன் பதிலில்லை. நான் என் பக்கத்தின் விளக்கம் சொல்ல வந்த போதெல்லாம் விலகி விலகி ஓடினாய், நானும் மனிதன் தானே- ஒரு வருடமாய் என்னைப் புரிய வைக்க உன் பின்னால் அலைந்தேன் தெரியுமா?”

“ஆனால் நீங்கள் செய்தது துரோகமில்லையா கண்ணா?”

“திரும்பத் திரும்ப அதைத் தான் சொல்கிறாய் ஜெசிகா. என் பக்க விளக்கத்தைக் கூட கேட்க மறுத்து விட்டு நான் துரோகம் செய்து விட்டேன் என்கிறாய், ஆமாம் திருமணமாவது செய்து கொண்டாயா”

“உன்னைத் தவிர என் கழுத்திலே யாரும் தாலி கட்ட முடியாது கண்ணா”

“இவ்வளவு ஆழமாகக் காதலிக்கிற நீ நான் என் பக்க விளக்கத்தைச் சொல்ல வந்த போதொல்லாம் ஓடினாயே. எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது தெரியுமா?”

“நீ என்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாய் என்று கூட தெரியும் கண்ணா?”

“அப்புறம் எனக்கு இன்னும் புரியாத மாதிரி நான் உன்னைத் தேடி வந்த போதெல்லாம் ஏன் விரட்டியடித்தாய் ஜெசிகா”

“நீ எனக்குச் செய்த துரோகம் அவ்வளவு எளிதில் மறந்து போகுமா?”

“நாம் இருவரும் ஓடிப் போவதாகப் போட்டிருந்த திட்டத்தை அறிந்து என் அண்ணன் என் அறையை மூடி பூட்டிப் போட்டு விட்டு போய் விட்டான். நான் வீட்டு ஓட்டுப் பகுதியில் இருந்த குழாய் பகுதியை உடைத்து விட்டு வெளியே வந்தேன். இருட்டில் நாய் கிடப்பதைக் கவனிக்காமல் மிதித்து விட அது என் காலில் கடிக்க நான் கீழே விழுந்ததில் நெற்றியில். அடிபட்டு வீட்டிலுள்ளோர் எல்லோரும் எழுந்து என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.”

“நீ சொல்லுகின்ற கதையை என்னை நம்பச் சொல்லுகிறாயா?”

“கதையா- விளையாடுகிறாயா?”

“பின்னே என்ன. என்னை விட பணக்காரி காஞ்சனாவின் வலையில் நீ விழுந்து விட்டாய். அவளை மணந்து கொண்டால் பணக்காரனாகி விடலாம் என்று நாம் பிளான் பண்ணியபடி நான் இரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க நீ வராமலே இருந்து விட்டாய்”

“சுத்தப் பொய்”

“கொஞ்சம் பொறு, அவளுக்கு என் மீதுள்ள பொறாமையால் உன்னிடம் ஆசை காட்டி விட்டு பிறகு மணந்து கொள்ள மறுத்து விட்டாள். இது அவளாகவே என்னிடம் சொன்னது”

“அப்படியானால் நான் சொன்னதை நம்ப மாட்டாய். அடுத்த நாள் அடிபட்ட கட்டோடு வந்து விவரம் சொல்ல வந்த போது கூட இதனால் தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாயா.”

“ஒன்று மட்டும் உண்மை கண்ணதாசன் என் மனசு சொல்லுகிற வரைக்கும் உண்மை எனக்குப் புரிகிற வரைக்கும் நீ காத்திருக்க வேண்டும்”

“போச்சுடா இன்னுமா காத்திருக்க வேண்டும்” என தலையில் கை வைத்தான் கண்ணதாசன்.

– தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *