பொட்டு வைத்த வட்ட நிலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 10,792 
 
 

“ஏம்மா.. இன்னும் எவ்வளவு தூரம்மா நடக்கணும்…”

“யாருடி இவ… நானும் உங்கூடத்தானே வாரேன்…”

“பஸ்ஸ விட்டு எறங்கி இவ்வளவு தூரம் நடக்கணும்னு சொல்லவே இல்ல…”

“சொல்லியிருந்தா மட்டும் என்ன செஞ்சிருப்ப…”

“ம்… வெயில் கொளுத்துது… ஒதுங்கி நிக்க ஒத்த மரங்கூட இல்ல… இன்னும் நாலடி எடுத்து வைப்பனான்னு சந்தேகம்தான்…”

“பேசாம வாடி… அந்தாத்தெரியுற கடையில ஆளுக்கொரு டீ குடிச்சுப்பிட்டு நடப்போம்…”

“அம்மா… மத்தியான நேரம்… சோறு இல்லைன்னாலும் ஒரு இளநீ வாங்கித்தருவியா.. டீ வாங்குறேங்கிற…”

“சரி… அங்க என்ன இருக்கோ வாங்குறேன் வா…”

மாற்று உடைகளை இரண்டு சிறு பொதிகளாகவும் அவசியத் தேவைக்கான சமையல் பாத்திரங்களை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து நான்கு புறமும் கனத்த சணல் கொண்டு இருகக்கட்டி மேலே பிடிப்பதற்கு வசதியாக கொஞ்சம் இடைவெளி விட்டுக்கட்டிய சுமையாகவும், மற்றுமொரு பையும் சுமந்துகொண்டு, தாயும் மகளும் அங்கே புலப்பட்ட சின்ன பெட்டிக் கடையை அடைந்தனர். சற்றே தள்ளாடி மயக்கத்துடன் அந்த பெஞ்சின் ஒரு ஓரம் அமர்ந்த மகளைச் சற்று கவலையுடன் பார்த்துவிட்டு கடைக்காரரின் பக்கம் திரும்பினாள் லலிதாம்மா, “ஐயா சாப்பாடு இருக்குமா?”

“இது ஓட்டல் கடை இல்லைம்மா, காபி, டீ, கலர்த்தண்ணி இருக்கு, ஊருக்குள்ள போனீகன்னா ஐயர் களப்புக் கடை இருக்கு”

இதற்கு மேல் மகளால் பசிதாங்க முடியாது என்றுணர்ந்த லலிதாம்மா, “கலர் குடுங்க..” என்று வாங்கி மகளிடம் நீட்டினாள்.

அரை மயக்கத்தில் தாய் நீட்டியதை வாங்கி வாயில் வைத்தாள் மல்லிகா, பாதிக் கலர் வாயிலும் மீதி வாய் கொள்ளாமல் வெளியேறி அவள் கன்னங்களை நனைத்து கழுத்து வழி இறங்கி ரவிக்கை தாவணியை நனைத்தது. தனக்கு ஒரு டீ வாங்கி குடித்த லலிதாம்மா, மடியில் சொருகியிருந்த சுருக்கிலிருந்து நாணயங்களைத் தேடி கடைக்காரர் கேட்ட விலையைக் கொடுத்துவிட்டு மகளைப் பார்த்துக் கேட்டாள், “நடப்போமாடி”.

மல்லிகா சற்றே நிமிர்ந்து கடைக்காரரைப் பார்த்து, “இங்கேருந்து மாணிக்கப்புரம் எவ்வளவு தூரம்?”

“அது சரி ஊருக்கு புதுசா?” என்றார் கடைக்காரர்.

“ஆமா… ஏன் கேக்குறீக?” என்றாள் லலிதாம்மா.

“பெறகென்ன… ஊருக்குள்ள வந்து இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு கேக்குறீக”.

சட்டென முகம் மலர்ந்தது மல்லிகாவிற்கு.

“ஊரு வந்துருச்சா…” ஆச்சரியமாகக் கேட்டாள் லலிதாம்மா. “சரி முத்தையா ஐயா வீட்டுக்கு எப்படிப் போகணும்?” என்று சிறு உற்சாகத்துடன் தொடர்ந்தாள்.

“இந்தாத் தெரியுதுல்ல கிழக்குத் தெரு போர்டு, அந்த வழியா நேராப் போங்க சின்ன ஊரணி தெரியும் ஊரணிக்கு தெக்கே ஒரு ஆல மரம், ஆல மரம் தாண்டி சரியா எண்ணிக்கிட்டே போங்க எடது பக்கம் பத்தாவது வீடு” என்று வழி சொன்னார் கடைக்காரர்.

கடைக்காரர் சொன்னபடி போர்டு சொன்ன வழியே நடந்து சின்ன ஊரணி, ஆலமரம் கடந்து இடது பக்கம் பத்தாவது வீட்டில் நின்றார்கள் தாயும் மகளும்.

வர்ணம் பூசப்பட்டு அலங்காரக் கம்பிகளால் ஆன வெளிக்கேட்டு சங்கிலி போட்டுப் பூட்டப் பட்டிருந்தது பூட்டு உட்பக்கம் தொங்கியது. கம்பிக் கதவு தொடங்கி வீட்டு வாயிற்படி வரை சுமார் இருபதடிகள் இருக்கும். அதுவரை இரண்டு பக்கங்களிலும் வண்ண விண்ணப் பூச்செடிகள் வாழை மரங்கள் என்று சிறு தோட்டம் பசுமையைப் படரவிட்டிருந்தது. வாயிற்படியின் இருபுறமும் திண்ணைகள் ஒவ்வொரு திண்ணையிலும் இரண்டிரண்டு தூண்கள்.

கம்பிக்கதவைப் பிடித்து லேசாக ஆட்டினாள் லலிதாம்மா, பூட்டுச்சங்கிலியோடு கம்பிக்கேட்டு எழுப்பும் சல சல சத்தம் உள்ளே கேட்டு யாரும் வந்து எட்டிப் பார்க்கக்கூடும்.

“ஏம்மா திண்ணை எதுக்கு வைப்பாக… வழியில போற வாரவுக களைச்சு வந்தா உட்காரத்தானே? இப்படி திண்ணை வச்சுக்கட்டி வெளியில கேட்டுப் போட்டு பூட்டி வச்சா என்ன கணக்காம்?”

“யாருடி இவ… வாய வச்சுக்கிட்டு சத்த நேரம் சும்மா இருக்க மாட்டே”, மெல்லிய குரலில் கோபமின்றி மகளைக் கடிந்துகொண்டாள் லலிதாம்மா.

கம்பிக்கேட்டுச் சத்தம் உள்ளே இருப்பவர்களுக்குக் கேட்டிருக்க வேண்டும், ஐம்பது வயது மதிக்கத்தக்க முத்தையா ஐயா வெளியில் வந்தார், கைப்பனியன் நாலுமுழ வேட்டி தோளில் குத்தாலந்துண்டு. வாயிற்படி தாண்டி அந்தச் சிறு தோட்டம் கடந்து கேட்டின் அருகில் வந்துகொண்டிருந்தார்.

“ஐயா நான் லலிதா இது என் மக, போஸ்ட்மேன் மாரியப்பன்…” என்று சொல்லவந்ததை முடிக்கும் முன்னமே முத்தையா தொடர்ந்தார்,

“ஒ… போஸ்ட்மேன் சொன்ன லலிதாம்மா நீங்கதானா, கொஞ்சம் இருங்க ரைஸ்மில் வீட்டு சாவிய தரச் சொல்றேன்”. என்று சொல்லிவிட்டு திரும்பி வீட்டினுள் சென்றார்.

“அட பாவி மனுசா… வெயில்ல வாரோம்… கதவை தொறந்து உள்ள உட்காருங்க.. தண்ணி குடிங்கன்னெல்லாம்… சொல்லற பழக்கமே இல்ல போல.”

“மல்லி… இப்ப நீ வம்பிழுக்காம இருக்கமாட்டியா”, என்று மீண்டும் மெல்லிய குரலில் மகளைக் கடிந்துகொண்டாள் லலிதாம்மா.

இப்போது வீட்டினுள்ளிருந்து வெளியில் சாவியுடன் வந்தவர் ஒரு பெண்மணி, முத்தையா ஐயாவின் மனைவியாக இருக்கவேண்டும். கேட்டின் அருகே வந்தவர் கம்பிகளின் இடைவெளியில் ரைஸ்மில் வீட்டுச்சாவியை நீட்டினார். “ஒரு வாரத்தில காலி பண்ணிக் கொடுத்திறனும், ஏன்னா அடுத்தவாரம் புது மிசின் போடுற ஆளுக வந்தா அங்கதான் தங்கணும், அதுக்குள்ளே அக்கம் பக்கத்தில வேற வீடு தேடிக்குங்க, நானும் எனக்குத் தெரிஞ்சாச் சொல்லுறேன்.”

“நல்லதும்மா, எங்களுக்கும் அதான் வசதி, ஒரு வாரம் என்ன ஒண்ணு ரெண்டு நாள்ள கெடச்சிட்டாகக்கூட உடனே மாத்திக்குவோம். நன்றிம்மா” என்றாள் லலிதாம்மா.

“வீட்டுக்கு வழி தெரியாதுல்ல, கேட்டுக்குங்க, நீங்க வந்த வழிதான் அந்த ஆல மரம் தாண்டி சின்ன ஊரணி ஓரமா நடந்திகன்னா ஊரணிக் கரை முடிஞ்சு ஒரு ஒத்தையடிப் பாதை போகும் அதுதான் குறுக்கு வழி நடக்குறதுக்கும் தோது. அந்த வழிய போனீகன்னா கொஞ்ச தூரத்தில ரைஸ்மில் கட்டடம் தெரியும் மில்லுக்குள்ள பயலுகள்ட்ட எங்க வீட்டுக்காரர் பேரச்சொல்லி, அவுகதான் அனுப்பினாகன்னு சொல்லுங்க. வீட்டுக் கதவு எந்தப்பக்கம்ன்னு கேட்டீகன்னா சொல்லுவாய்ங்க.”

“நல்லதும்மா, போயிட்டு வாரோம்” என்று விடை பெற்றுத் தாயும் மகளும் ரைஸ்மில் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பிரம்மாண்டமான ரைஸ்மில், வெளியில் இரும்புக்கதவு தாண்டி பத்தடியில் இரு புறமும் பக்கத்திற்கு ஒன்றாக புன்னை மரங்கள். மரத்ததைத்தாண்டி ஐந்தடியில் ரைஸ்மில் முகப்பு. முகப்பு ஓரமாக இரு புறமும் பக்கத்திற்கு மூன்று என ஆறு அசோக மரங்கள். அசோக மரங்களின் ஊடே ஒன்றிரண்டு சைக்கிள்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது. முகப்பை அடைந்ததும் உள்ளே யாரையாவது கூப்பிடலாமா என்று எட்டிப் பார்த்தாள் லலிதாம்மா. பின்னால் நடந்து வந்த மல்லிகா புன்னை மர நிழலில் நின்றுகொண்டு மரத்தில் ஆங்காங்கே பூத்துக்கிடந்த பூக்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

“ஐயா” என்ற லலிதாம்மாவின் குரல் கேட்டு ரைஸ்மில் பணியாளர் ஒரு சிறுவன் அருகில் வந்தான். லலிதாம்மா அவனிடம் விவரத்தைச்சொல்ல, “கொஞ்சம் இருங்க அண்ணனைக் கூப்பிடுகிறேன்”, என்று அந்தச் சிறுவன் உள்ளே இடதுபுறமாக இருந்த அலுவல் அறைக்குள் சென்றான். சற்று நேரத்தில் வாலிபர் ஒருவருடன் சிறுவன் வெளியில் வந்து லலிதாம்மாவைக் காட்டி “இவங்கதான்”, என்றான்.

வந்த வாலிபர் லலிதாம்மாவிடம் “சரவணன் உங்களுக்கு வீடு காட்டுவான்”, என்று சிறுவனைக் கை காட்டிவிட்டு, “ஐயா வேற ஏதாவது சொன்னாங்களா?” என்றார்.

“வந்து ஒரு வாரத்துல காலி பண்ணிடணும்னு சொன்னாங்க, எங்களுக்கும் அதான் வசதி, நானும் என் மகளும் மட்டும்தான், நாங்க தங்குற மாதிரி அதிக வாடகை இல்லாம சின்னதா ஒரு இடம் உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்க”, என்றாள் பணிவாக லலிதாம்மா.

“ம்… சொல்றேன்”, என்று புன்னகைத்தபடியே, “சரவணா அவங்களுக்கு கதவு எந்தப் பக்கம்னு காட்டு”, என்று கட்டளை இட்டுவிட்டு மீண்டும் அலுவல் அறை நோக்கி நடந்தார் வாலிபர்.

சிறுவன் சரவணனின் துணையோடு வீட்டைத்திறந்து, கொண்டுவந்திருந்த சுமைகளை ஒரு சுவற்றின் ஓரம் வைத்தனர். பெயர்தான் வீடு ஆனால் அது சீமை ஓடுகள் வேய்ந்த ஒற்றை அறைதான், ஒரு ஓரம் சிமெண்ட் மேடை, அடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேடைக்கு அருகே பானை ஒன்று. பானையத் திறந்து பார்த்தாள் மல்லிகா தண்ணீர் நிறையவே இருந்தது, ஆனால் அது எத்தனை நாட்கள் பழையது என்று சொல்ல முடியாது. தற்காலிக தங்குதலுக்கு உகந்த இடம். சரவணனிடம் எங்கே காய்கறிகள் வாங்குவது என்ற விபரம் கேட்டுக்கொண்டாள் லலிதா ஆனால் பொருட்கள் வாங்கிவந்து சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு அவர்களின் வயிற்றுப்பசி அவர்களுக்கு நேரம் தரவில்லை. சரவணனிடமே எங்கே உணவு விடுதி இருக்கிறது என்று வினவ அவனும் தானே வாங்கிவந்து தருகிறேன் என்று சொல்லி இரண்டு தயிர் சாதப் பொட்டலம் வாங்கிவந்து கொடுத்துவிட்டு அவர்களிடம்

விடைபெற்றுச்சென்றான். உண்டுமுடித்த இருவரும் மற்றவற்றைப் பிறகு யோசித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வெற்றுத்தரையில் கைகள் தலையணையாக சற்று கண் அயர்ந்தார்கள்.

சட்டென ஓட்டைப் பிரித்துக்கொண்டு, வேட்டி கட்டி விபூதிப் பட்டையுடன் ஒரு உருவம் வீட்டினுள் இறங்க, வாய் திறந்து கத்துவதற்கு முற்பட்டாள் லலிதாம்மா, இறங்கிய உருவம் அவளைக் கத்தவிடாமல் ஒரு கையால் அவள் வாய்யைப் பொத்தியது மறுகையால் அவளை அணைத்து “என்ன ஊரை விட்டு வந்துட்டா எல்லாம் மாறிப் போயிடுமா, உன்னையும் விடமாட்டேன் உன் மகளையும் விடமாட்டேன்”, என்று கர்ஜிக்க, “மல்லீ…” என்று அலறிக்கொண்டு பதட்டமாக விழித்தாள் லலிதாம்மா, நடந்தது கனவில் என்று உணர சற்று நேரம் எடுத்தது அவளுக்கு.

“என்னம்மா கனவா” என்று தாயின் அலறலில் விழித்துக்கொண்ட மல்லிகா தன் தாயின் கையைப் பிடித்தாள்.

“என்னவோ கனவுடி, சரி”, என்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு “பக்கத்தில எங்க பால் கிடைக்கும்னு பாக்குறேன், காபியை கலந்துட்டு மத்த வேலையைப் பார்க்கணும், மணி அஞ்சுக்கு மேல ஆயிருக்கும் போல நல்ல உறக்கம்” என்று படுத்திருந்த லலிதாம்மா எழுந்துகொண்டாள். தாயைத் தொடர்ந்து மகளும் உறக்கம் கலைந்து எழுந்தாள்.

“போஸ்ட்மேன் நாளைக்கு வருவாராம்மா”

“ஆமாடி, வரும்போது எல்லாம் தயாரா வருவாரு”, தாயிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறு மகிழ்ச்சியில் புன்முறுவல் பூத்தாள் மல்லி.

கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றி ஒருமுறை புது இடத்தைப் பார்த்தாள் மல்லிகா, மதியம் பாதி மயக்கத்தில் வீடு வந்து சேர்ந்தவள் உறக்கத்திற்குப்பின் சோர்வு தீர்ந்து இப்போது தெளிவாக இருந்தாள்.

“அம்மா இங்க பாரேன் பச்சைப் பசேல்ன்னு வயல் வெளி, சூரியன் எறங்குற நேரம் அந்த மரத்துக்குப் பின்னால சூரிய ஒளி, இந்தப்பக்கமா நிழல், ஜில்லுனு காத்து, ஆஹா…. சினிமால பாக்குறமாதிரி இருக்கும்மா” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வீட்டு வாசலில் சுற்றிச்சுற்றி வந்தாள் மல்லிகா.

மகளின் மகிழ்ச்சித் துள்ளலை ரசித்துக்கொண்டே தனக்குள் பேசிக்கொண்டாள் லலிதாம்மா, “ராமர் குருக்கள் மட்டும் போனவாரம் கண்ணுல படாம இருந்திருந்தா இன்னைக்கு இங்கே இருந்திருக்க மாட்டோம்” என்று.


கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத்திருந்தாள் லலிதாம்மா.

“வாங்க போஸ்ட்மேன், உங்களுக்காகத்தான் காத்திருந்தேன், வாங்க உட்காருங்க”, என்று சுவற்றோரம் கைகாட்டினாள்.

“ஊருல எங்களப்பத்தி பேசுறாங்களா”, கேட்டாள் லலிதாம்மா.

அவள் காட்டிய இடத்தில் தரையில் உட்கார்ந்த போஸ்ட்மேன் மாரியப்பன், “அதெல்லாம் இல்லம்மா, அவங்களுக்கு நீங்க யாரு சொந்தமா சொத்தா?”

“ஆமா, இருந்தாலும் எனக்கு ஒரு நெனப்பு, பதினாலு வருசமா இருந்து பழகின ஊரு”, என்று சற்றே குரல் தழுதழுத்தாள் லலிதாம்மா.

“நீங்க இருந்தீங்க எங்கயோ போயிட்டீங்க, அதோட அவுங்க உங்கள மறந்திடுவாங்க”, என்று எதார்த்த வார்த்தைகள் சொன்னார் போஸ்ட்மேன்.

“முத்தையா ஐயா உங்களுக்கு ரைஸ்மில்லுல வேலை போட்டுக் குடுத்திருவாரு, நீங்க வீடு மட்டும் சீக்கிரம் மாத்திக்குங்க”, என்ற போஸ்ட்மனின் வார்த்தைகளுக்கு பதிலுரைத்தாள் லலிதாம்மா, “ஆமா சொன்னாங்க, நானும் வீடு வேணும்னு ரைஸ்மில்லுல கேட்டிருக்கேன், அந்தத்தம்பி கேட்டுச் சொல்லுறதா சொல்லி இருக்கு”.

“போன வெள்ளிக்கிழமையே வாத்தியாரைப் பார்த்துப் பேசிட்டேன், இன்னிக்கு மல்லிகாவை கூட்டிட்டுப் போனாப் போதும், எங்க மல்லிகா… கெளம்பிடுச்சா”, என்று போஸ்ட்மேன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, பக்கத்துப் பம்பு செட்டிற்க்குக் குளிக்கச் சென்றிருந்த மல்லிகா குளித்து முடித்து ஈரக்கூந்தல் துண்டுடுத்தி, கையில் ஈரத்துணிகளுடனும் வந்துகொண்டிருந்தாள். போஸ்ட்மன் வீட்டினுள் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, “வாங்க அண்ணெ”, என்றவள், தொடர்ந்தாள், “அம்மா விடியும் முன்னாடி பம்புசெட்டுக்கு போயிட்டு வந்துடுச்சு நான் கொஞ்சம் லேட்டு”, என்று க்ளுக்கேன சின்னச் சிரிப்பை உதிர்த்தாள்.

ஒற்றை அறை வீட்டில் தான் அமர்ந்திருந்தால் மல்லிகா எப்படி உடை மாற்றிக் கிளம்புவாள், நிலைமையை புரிந்துகொண்ட போஸ்ட்மேன், “நான் ரைஸ்மில்லுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன், சீக்கிரம் கிளம்பிடு மல்லிகா”, என்று சொல்லிக்கொண்டே மாரியப்பன் எழுந்திரிக்க, “கொஞ்சம் இருங்க இந்தக் காபியை குடிச்சுட்டு போலாம்”, என்று காபி தம்பளரை நீட்டினாள் லலிதாம்மா.

காபியை வாங்கிக்கொண்டே வெளியில் கிளம்பினார் போஸ்ட்மேன் மாரியப்பன்.

வேகமாகச்செயல்பட்டாள் மல்லிகா, மகளின் சுறுசுறுப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் லலிதாம்மா, மீண்டும் அந்த ராமர் குருக்களின் நினைப்பு, அப்படி என்ன ரகசியம் அவரிடம் இருக்கிறது, ஆம் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பன்னீர் புரத்தை விட்டு ராயப்பட்டிக்கு வந்ததே இந்த ராமர் குருக்களால்தான் இப்போது மீண்டும் ஒரு இடமாற்றம் அவரை ராயப்பட்டியில் பார்த்ததால்.

பன்னீர் புரத்தில் சிவன் கோவிலில் மடப்பள்ளி வேலைகள் செய்துகொண்டிருந்த நாட்கள், ஒரு நாள் அதி காலை வேலை முடித்து வீட்டிற்குத் திரும்புகையில் மண்டபத்தில் மல்லிகைக்கொடி படர்ந்த அந்தத் தூணோரம் ஒரு குழந்தை! தான் பார்ப்பது கனவா நிஜமா என்று ஒரு முறை கண்களை தேய்த்துக்கொண்டாள் லலிதாம்மா. நிஜம்தான் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை யார் இங்கே பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா? அதுவும் இவ்வளவு அதிகாலையில்… சந்தேகத்துடன்… சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை, உறக்கத்தில் இருந்தது குழந்தை, குழந்தையைப் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு கடிதம் சொருகப்பட்டிருந்தது, எடுத்துப் பிரித்துப் படிக்கத்துவங்கினாள் லலிதாம்மா,

“இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் சக்தியையும் பணவசதியையும் இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை. ஆகவே இறைவனே அந்தப் பொறுப்பை ஏற்கட்டும். கண்ணுக்கு முன்னால் என் குழந்தையை அப்படிப் பார்க்கவும் எனக்கு மனம் இல்லை. குழந்தையை கோவிலுக்கு நேர்ந்து இக்கடிதம் எழுதுகிறேன். குழந்தை வளரும்பொழுது பொட்டுக்கட்டி தேவரடியார் ஆக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தேடவேண்டாம்.

இப்படிக்கு

இந்தக் குழந்தையின் தாய்.”

படித்து முடித்த லலிதாம்மாவிற்கு பகீர் என்றது மனது, அறியாத குழந்தையை அப்படி விட மனமில்லை, குழந்தையின் தாயைத் தேடியும் பயன் இல்லை. கடிதத்தை கிழித்து வாயில் இட்டு மென்று விழுங்கினாள். தொண்டை விக்க மின்னலாகச் செயல்பட்டாள் கோயில் குளத்தில் இறங்கி தன் இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகினாள் தண்ணீரால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மீண்டும் படியேறி மல்லிகைக்கொடியின் தூணோரம் வந்தாள் இன்னும் சூரியன் கோடாகத்தான் தெரிந்தான். வானம் இளம் இருட்டாகவே இருந்தது. யாரும் குழந்தையைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குழந்தையைத் தன் இரு கரங்களாலும் போர்வையோடு தூக்கினாள். எதிர்பாராத விதமாக எதிரில் வந்தார் ராமர் குருக்கள்.

“ஏண்டிம்மா என்ன பண்ணப்போற”, என்றார் குருக்கள்.

“சாமி… இந்தக் குழந்தையை நான்… வளர்த்து… ஆளாக்குறனே…”, யோசித்து யோசித்து பதிலளித்தாள் லலிதாம்மா.

“கடிதாசியை நானும் வாசிச்சேன். சரி நன்னா வளர்த்துக்கோ, ஆனா வயசு வறச்சே, கடிதாசியில கண்டிருக்கபடி செஞ்சுடு சரிதானே”

அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு குழந்தையோடு நகர்ந்தால் சரி என்கிற நோக்கத்தில், “சரி சாமி”, என்று பதிலளித்துவிட்டு, “நான் வரேன்” என்று புறப்பட்டவள் சற்றும் தாமதிக்காமல் பன்னீர் புரத்திலிருந்து புறப்பட்டு ராயப்பட்டிக்கு குடி பெயர்ந்தாள். ராயப்பட்டியைப் பொறுத்தவரை லலிதாம்மாவின் சொந்தக் குழந்தைதான் மல்லிகா.

“அம்மா இந்த பூவை வச்சுவிடு”, என்று பூச்சரத்தை தாயிடம் நீட்டி லலிதாம்மாவின் சிந்தனையைக் கலைத்தாள் மல்லிகா.

சற்று நேரத்தில் போஸ்ட்மேன் திரும்பிவர, பச்சைப் பாவாடை ரவிக்கையும் வெளிர்மஞ்சள் தாவணியும் அணிந்து, கூந்தலை மூன்று கால் சடைப் பின்னல் இட்டு மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டிய பூச்சரம் வைத்து சின்னச் செந்தூரப்பொட்டை நுதலில் சிரிக்க வைத்து, “கிளம்பிட்டேன்”, என்று புன்னகையோடு வெளியில் வந்தாள் மல்லிகா.

காலியான காபி தம்ளரை லலிதாம்மாவிடம் நீட்டிவிட்டு, “சரிம்மா நாங்க கிளம்பறோம்”, என்றார் போஸ்ட்மேன்.

அம்மாவைப் பார்த்து, புதுப் பள்ளிக்கூடத்தில் தன் படிப்பைத் தொடரப் போகும் ஆனந்தத்தில் “போயிட்டு வரேன்மா”, என்று வாய்கொள்ளாமல் சிரித்தாள் மல்லிகா. பேரானந்தத்தில், ‘சென்றுவா மகளே வென்று வா இனி உனக்கு இருக்கிறது உலகாளும் பொறுப்புகள் நிறைய’ என்கிற தோரணையில் கர்வத்துடன் வழியனுப்பிவைத்தாள் லலிதாம்மா.

– ‘குடைக்குள் கங்கா’ சிறுகதைத்தொகுப்பில் வெளிவந்த கதை. ஆண்டு 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *