கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 10,618 
 

காலை மெதுவாகப் புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒவ்வொன்றாக விழித்துக் கொண்டு சங்கீதமாகக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன. அந்தச் சப்தத்தோடு சற்றும் சுருதி கூடாமல் நாராசமாய் இரைந்தவாறே பால்காரனின் மொபெட் வண்டி தெருவிற்குள் நுழைந்தது. தெருவின் கடைசியில் பரணியின் வீடு இருக்கிறது. பால்காரன் வழக்கம் போல சீட்டியடித்துக் கொண்டே பரணியின் வீட்டுக் கதவில் தொங்க விடப்பட்டிருந்த பையில் பாக்கெட்டுகளைத் திணித்தான். அப்போது கூட அவன் அது அங்கிருந்ததைக் கவனிக்கவில்லை. லேசாக மிதித்தும் விட்டான். அடுத்த சில நிமிடங்களில் சுகுணா வாசலுக்கு வந்து பாலை எடுக்கும்போது பார்த்தாள். வீட்டு வாசலில் கதவுக்கு வெளிப்பக்கம் வழியை மறித்துக் கொண்டு ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

ஒரு மணி நேரம் கழித்து உள்ளிருந்து பனியனுக்குள் சொறிந்தபடியே பரணி அன்றைய தினசரியை எடுக்க வாசலுக்கு வந்தான். வாசலில் படுத்துக் கிடந்த நாயைப் பார்த்ததுமே வந்தவன் அசௌகரியமாக நெளிந்தான். வழக்கமான நோஞ்சான் தெரு நாய்களை விடவும் பெரியதாய், கருப்பாய், வீட்டையே வெறித்துப் பார்த்தபடி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கொஞ்சம் திகிலாகவே படுத்திருந்தது. அதன் வால் அசையவே இல்லை. வயிறு மட்டும் மிக மெதுவாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அதன் கண்கள் ரொம்பவும் வித்தியாசமாய் இருந்தன. ஓர் அதீத வெறுமையும் அமைதியான மூர்க்கமும் அவற்றில் நிரம்பியிருந்தன. சும்மா குலைக்கிற ரகமாய்த் தோன்றவில்லை. அதன் பார்வை தன் மேலேயே ஊர்வது போல உணர்ந்து அதிகம் நெருங்காமல் நாளிதழை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

பொதுவாகவே பரணிக்கு நாய்கள் என்றால் ஆகவே ஆகாது. பயம் என்று மற்றவர்கள் சொல்வார்கள். ‘பயமெல்லாம் இல்லை .. ஒரு அருவருப்பு உணர்ச்சி’ என்று பரணி சொல்வான். நெருக்கமானவர்களிடம் மட்டும் ‘பயமெல்லாம் இல்லை… மரண பீதி’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறான். சின்ன வயதில் என்றோ ஒருவன் ‘ஏன் நாய்னா பயப்படுறே’ என்று கேட்டதற்கு அவனும் சகஜமாய், தன்னை முன்னொரு முறை நாய் கடித்திருப்பதாகவும் அதிலிருந்துதான் பயம் என்றும் ஒரு பொய் சொல்லியிருக்கிறான். வெறுமனே பயம் என்பதை விட ஒரு முறை கடிக்கப்பட்டதால் பயம் என்று சொல்லிக் கொள்வது கௌரவமாக இருந்திருக்க வேண்டும். யாராவது ரொம்பக் கிண்டல் செய்தால் ‘உன்னை இதுவரை நாய் கடிச்சதில்லை.. ஒரு தடவை நீயும் கடி வாங்குனா உனக்கும் புரியும்’ என்று சமாளிக்கலாம். பின்னர் அவன் வாழ்வில் வளர வளர நாய் பயத்துக்குக் காரணம் கேட்டவர்களிடமெல்லாம் இட்டுக் கட்டிச் சொல்லிச் சொல்லி அந்தப் பொய்யும் கூடவே வளர்ந்தது. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் இன்னும் கொஞ்சம் விவரங்களைச் சேர்த்து உண்மை போலவே சொல்லி வந்ததில், அவனின் ஆழ்மனமே கூட தன்னை நிஜமாகவே ஒரு பழுப்பு நாய் ஓட ஓடத் துரத்திக் கொண்டு வந்து இடது முழங்காலுக்குக் கீழே கடித்து விட்டதாய் நம்பத் தொடங்கி விட்டிருந்தது. நாய்களுக்குப் பயந்தவாறே அவனும் படித்து முடித்து, வேலைக்குப் போய், சுகுணாவைக் கட்டிக்கொண்டு, ஒரு குழந்தைக்கும் தகப்பனாகி விட்டிருந்தான்.

அன்று வாசலில் கிடந்த கருப்பு நாய் அவனை ரொம்ப இம்சித்தது. வழக்கத்தை விட மெதுவாகவே வேலைக்குக் கிளம்பினான். குளிக்கும்பொழுதும் சட்டை மாட்டிக் கொள்ளும்பொழுதும் உப்புமா சாப்பிடும் பொழுதும் அந்த நாய் நினைவில் வந்து கொண்டே இருந்தது. அவனுடைய வீடுதான் தெருவிலே கடைசி வீடு. கொஞ்சம் குழி வேறு. ஒரே ஒரு வாசல்தான். ஒடுங்கலாய் இரண்டு ஆள் அகலம் மட்டும் உள்ள வெளி மதில் கதவு. அந்தக் கம்பிக் கதவின் வெளியேதான் வாசலை அடைத்துக் கொண்டு வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு ‘வாடா… வாடா’ என்பது போல் கிடந்தது அது. வேலைக்குப் போகுமுன் அது இடத்தைக் காலி பண்ணி விட்டிருக்குமா? இருந்தால் புண்ணியம். இல்லாவிடில் எப்படி?

வாடகை குறைச்சலென்று கூடுவாஞ்சேரியில் குடிவந்து அதிலும் குறைச்சலென்று இவ்வளவு உள்ளே தள்ளி இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்ததற்கு அவன் பல முறை உள்ளூரப் புலம்பி இருக்கிறான். காலையில் நடந்து சென்று இரயிலைப் பிடித்து எழும்பூருக்குப் போக வேண்டும். மாலையிலும் இரயில் கூட்டத்தில் பிதுங்கி கையையும் பையையும் தனித்தனியாக லாவகமாக உருவி எடுத்துக் கொண்டு, இறங்கியதும் அவற்றை ஒட்ட வைத்துக் கொண்டு வீடு வரை நடக்க வேண்டும். இது பரவாயில்லை. நேரம் பிந்தி விட்டால் தெருவில் நாய்கள் கூட்டம் சேர்ந்து கொள்ளும். சுகுணாவையும் குட்டியையும் மறுபடியும் பார்ப்போமா என்றே சந்தேகங்கள் வந்து, செத்துப் பிழைத்து வீடு வர வேண்டும். குறைந்தபட்சம் தெருவில் முதலில் உள்ள வீட்டையாவது பிடித்திருக்கலாம். வேறு வழியில்லை. சுகுணா வேலைக்குப் போவதில்லை. குட்டியையும் அடுத்த வருடம் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும்.

செருப்புகளை மாட்டிக்கொள்ளும் முன், எதேச்சையாக வெளியே எட்டிப் பார்த்தான். அது நகரவே இல்லை. இப்போது ஜன்னல் வழியாகத் தன்னையே முறைப்பது போல் தோன்றியது. சரிதான் ! இன்று விதி விளையாடியே தீருவேன் என்று விடிந்திருக்கிறது போல … யோசனையில் அப்படியே அசமஞ்சமாய் உட்கார்ந்திருந்தான். போன வாரம் ஊரப்பாக்கத்தில் ஒரு பள்ளிச் சிறுமியைத் தெரு நாய்கள் கூட்டம் ஒன்று பட்டப்பகலில் கடித்துக் கொன்றதாகப் படித்த செய்தி வேளை கெட்டு ஞாபகம் வந்தது. கடவுள் மேலும் கார்ப்பரேஷன் மேலும் கோபம் கோபமாய் வந்தது. ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரை நாள் விடுப்பெடுக்கத் துணிந்து விட்டான் பரணி. எத்தனை நேரம்தான் அது அப்படியே கிடக்கும்?!

காலையிலிருந்தே ஒரு மாதிரியாய் அவன் இருப்பதை சுகுணா கவனித்திருந்தாள். “ஏங்க அப்பிடியே உக்காந்திருக்கீங்க .. கிளம்பலையா?” . “இல்லடா … இன்னிக்கு அரை நாள் லீவு போட்டுறலாம்னு இருக்கேன்…”. “லீவா .. ஏன் என்னாச்சு?” . உண்மையைச் சொல்லக் கூச்சமாய் இருந்தது. “இல்ல… கொஞ்சம் தலைவலியா இருக்கு .. அதான்”.

குட்டிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவள் அவனை ஒரு கணம் ஆச்சரியமாகப் பார்த்தாள். அவன் வழக்கமாக இப்படியெல்லாம் விடுப்பெடுப்பதே இல்லை. முதலில் அவளுக்குச் சிரிப்புதான் வந்தது. “என்னங்க … குழந்தைங்க ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க.. எல்லாம் கிளம்பினப்புறம் என்ன?” அந்த எள்ளலின் பின்னோடு கூடவே ஒரு சந்தேகப் பார்வையும் வந்தது. “நிஜமா தலைவலியா … ? ராத்திரி நல்லாதானே இருந்தீங்க ?”

அவளின் சந்தேகம் அவனைக் கடுப்பேற்றியது. கொஞ்சம் குதர்க்கமாகவே, “ஆமா தல வலியெல்லாம் பொய்.. திடீர்னு உன் மேல இன்னிக்கு ஆசை பெருகிடுச்சு. அதான் இன்னிக்கு லீவு போட்டுட்டு குட்டி கூட விளையாட ஒரு தம்பிக்கு ஏற்பாடு பண்ணலாம்னு பாக்குறேன்….. நெஜமா தலைய வலிக்குதுடா.. போய் கொஞ்சம் காபி போட்டுத் தாரியா?” என்று அவளைத் திசை திருப்பி விட்டான். அவளும் அக்கறையும் குழப்பமுமாய் அடுக்களைக்குள் போனாள்.

சாவகாசமாய் அலுவலகத்துக்குத் தலைவலித் தகவல் சொல்லிவிட்டு பாட்டு கேட்கிறேன் என்று உள்ளறைக்குப் போய் விட்டான் பரணி. காபி வந்தது. அவன் மனம் நாய்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயம் தனக்கு எப்படி வந்தது என்று யோசித்தான். அவனின் ஆழ்மனம் முதலில் அந்த இடது முழங்கால் நாய்க்கடி கதையை அவனிடமே சொன்னது. கொஞ்சம் வெறுப்பாய்த் தனக்குள் புன்னகைத்துவிட்டு உண்மையான காரணத்தைத் தன் நினைவுகளில் தேடினான். சரி வர ஒன்றுமே புலப்படவில்லை. அறியாத வயதில் வெகு சாதாரணமாய் என்றோ ஒரு நாள், “சரி நாளையிலிருந்து நாம் நாய்களுக்குப் பயப்படுவோம்” என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது! நிஜத்தில் இரண்டு முறை நாய்க்கடிக்கு வெகு அருகில் வந்து தப்பியிருக்கிறான். ஒன்று தெரு நாய். மற்றொன்று கல்லூரி நண்பன் மணிவண்ணன் வீட்டு ராஜபாளையம் வகையறா.

பரணிக்கு நாய்களில் ஜாதி வகையறாவெல்லாம் வெகுவாய்ப் பரிச்சயம் கிடையாது. நாலு கால் ஒரு வால் கொண்டு குரைக்கும் அத்தனையுமே அவனுக்கு நாய் என்று மட்டுமே அர்த்தமாகும். குட்டிகள் கூட விதிவிலக்கில்லை. ஆடு (நாய்) பகை என்றால் குட்டி உறவாக முடியுமா என்ன ?! நாய்களைப் பிரியமாய் வளர்க்கும் பலரை அவன் அறிவான். கூடுமானவரை அவர்களின் வீடுகளுக்குப் போவதை எப்படியாவது தவிர்த்து விடுவான்.

நாய் ஒரு சிக்கல் என்றால் இந்த நாய் வளர்ப்பவர்கள் மற்றொரு சிக்கல். வீட்டுக்கு வரும் எல்லோரையும் நாய்க்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் தம் நாயோடு கொஞ்சிக் குலாவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ‘கடிக்காது … ஒண்ணும் பண்ணாது .. சும்மா வாங்க’ என்று அவர்கள் சொல்லும் போதெல்லாம் ஒரு வறட்டு எரிச்சல்தான் வரும். எங்கே நாயை விட்டுக் கடிக்கச் செய்து விடுவார்களோ என்று அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்வதில்லை. சர்க்கஸ் கூடாரங்களில் சிங்கத்தைப் பழக்குபவனிடம் கேட்டால் அவனும் ‘கடிக்காது … சும்மா கிட்ட வந்து பாருங்க’ என்று தான் சொல்வான். அதற்காக இவர்கள் சிங்கங்களுடன் பழகி விடுவார்களா என்ன ?

ஒதுக்குப் புறமான குடியிருப்பு என்பதால் அந்தத் தெருவிலேயே பெரும்பான்மை வீடுகளில் நாய் வளர்ப்பதுண்டு. மாலை தாண்டிவிட்டால் கடுகு அளவிலிருந்து கரடி அளவு வரை அவரவர் நாய்களோடு உலாத்திக் கொண்டிருப்பார்கள். தெரு நாய்கள் வேறு அங்கு அதிகம். நேற்றைய இரவில் நெடு நேரம் வரை தெருவில் நாய்கள் சண்டையிடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது நினைவுக்கு வந்தது. இந்த வாசலில் கிடக்கும் கருப்பு நாயும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘எத்தனை எதிரிகளை வேட்டையாடிவிட்டு என் வாசலில் இன்று ஓய்வெடுக்கிறதோ’ என்று ஒரு கணம் எண்ணினான். அதன் கண்கள் நிலைகுத்தி நின்றபோதும் அப்படி ஒரு மூர்க்கத்தை வடிய விட்டுக் கொண்டிருந்தன.

நேரம் போய்க் கொண்டே இருந்தது. சுகுணா குட்டியையும் வைத்துக் கொண்டு காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தாள். நல்லவேளையாக அவளுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லை. இப்படி மாட்டிக்கொண்ட நாளில் அவள் வேறு அந்த இழவை எல்லாம் இரைய விட்டுக் கொண்டு இருந்திருந்தால் அதற்கு நாய்க்கடியே மேல் என்று வலியப் போய் நாயிடம் தொடையைக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வாசலில் எட்டிப் பார்த்தான். நாய் அசையவே இல்லை. அதன் மெத்தனம் பரணியின் பொறுமைக்கும் வீரத்துக்கும் ஒரு சேரச் சவால் விட்டது. ஆனது ஆகட்டும் என்று அவன் விறு விறுவென வாசல் பக்கம் போனான்.

தள்ளி நின்று கொண்டு சூ சூ என்று அதை விரட்டப் பார்த்தான். பின்பு எங்கோ தேடி ஒரு குச்சியை எடுத்து வந்தான். அது அப்படியே அவனைப் பார்த்தவாறே கிடந்தது. குச்சியைக் காற்றில் வீசியும் தரையில் தட்டியும் அதைத் துரத்த முயற்சித்தான். ‘அடுத்தது என்ன செய்யப் போகிறாய்’ என்ற தோரணையில் அந்தக் கொழுத்த நாய் அவனை மதிக்கவே இல்லை. வெறுத்துப் போய்க் கொஞ்சம் பக்கமாய்ச் சென்று கைகளை முடிந்தமட்டும் நீட்டி குச்சியால் அதைக் குத்தினான். அது ஆவேசமாய் அசைந்தது போல் ஒரு உதறல் கொடுத்த மாதிரி இருக்கவும் படபடவெனப் பின்வாங்கி விட்டான். தீபாவளிக்கு முதன்முதலில் அணுகுண்டு பற்ற வைக்கும் பிள்ளைகள் திரி பற்றிக் கொண்டதாய் எண்ணிக் கொண்டு ஊதுபத்தியைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி பயந்து ஓடி வருவதும், திரி பற்ற வில்லை என்று அசடு வழிய உணர்ந்து மீண்டும் முயற்சிப்பதும், மீண்டும் ஏமாந்து ஓடி வருவதும் போல் இருந்தது பரணியின் முயற்சி.

அவனின் சேட்டைகளையெல்லாம் சுகுணா கவனித்து விட்டிருந்தாள். அவன் தோற்றுப் போய் உள்ளே வருகையில் பரிகாசமாக, “ஏங்க ஒரு நாய்க்குப் பயந்துகிட்டா படி தாண்டாம வேலைக்கு மட்டம் போட்டீங்க” என்றாள். பரணி அதை எதிர்பார்க்கவில்லை. அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது. ஏதோ மழுப்பினான்.

அவள் கிண்டலும் கோபமுமாக அவனைத் திட்டினாள். “என்னங்க இப்பிடி இருக்கீங்க…? நாய்க்குப் பயந்து வேலையை விட்டா எப்பிடி குடும்பம் நடத்துவீங்க?”

“ஏ .. ரொம்பப் பேசாதே சுகுணா. நான் வேற எதுக்காவது பயந்து பாத்திருக்கியா… பொண்டாட்டிக்குப் பயந்தவன் போலீசுக்குப் பயந்தவன் எல்லாம் நாட்டிலே குடும்பம் நடத்தலையா? ஏதோ நாயின்னா கொஞ்சம் பயம்.. அதைப் பெரிசாப் பேசுறியே..”

“சரிங்க .. அதுக்காக ஆம்பிளை இப்பிடியே இருக்க முடியுமா?”

விவாதம் இப்படியே வளர்ந்து விட்டது. பரணி பயந்தாங்கொள்ளி கிடையாது என்று சுகுணா நன்கு அறிவாள். பல முறை அவன் தைரியத்தைப் பார்த்து அவளே பெருமைப் பட்டிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் மனிதர்கள் மத்தியில். இந்த நாய் பயத்தை எப்படி விரட்டுவது என்று யோசித்து இறுதியில் சொன்னாள், “இது சரிப்படாதுங்க… பேசாம நாமளும் வீட்டுல ஒரு நாய் வளர்ப்போம். வீட்டுக்கும் பாதுகாப்பு. உங்க பயமும் தெளியும்… அடுத்த வாரமே ஒரு குட்டி நாயை வாங்குவோம்”

“சுகுணா இப்பவே சொல்லிட்டேன்.. வீட்டுக்குள்ள நாயி கீயின்னு எதையாவது இழுத்துட்டு வந்தா, பேசாம நான் விவாகரத்து கொடுத்துடறேன்.. அப்படியே நீ உன் அப்பா வீட்டுக்குப் போயிரு” என்று சொல்லிவிட்டு பரணி உள்ளே போய்விட்டான். தலையில் அடித்துக் கொண்டு தானே அதை விரட்டுவதாகச் சொல்லிவிட்டு அந்தக் குச்சியை எடுத்தாள் சுகுணா. உள்ளே போனவன் வேகமாக வந்து அவளைத் தடுத்து, “ஏ அறிவு கெட்டவளே.. அந்தச் சனியன் என்ன பண்ணாலும் போக மாட்டேங்குது. அது முழியே சரியில்ல. ரேபீஸ் கீபீஸ் வந்ததா இருக்கப் போகுது. பேசாம் உள்ளே போ. நானே எதாச்சும் பண்ணுறேன்” என்று அவளை உள்ளனுப்பினான். “என்னமோ போங்க” என்று அவளும் கோபமாகப் போய்விட்டாள்.

பரணி அடுத்து என்ன செய்வது என்று யோசித்து நண்பன் ஜெயக்குமாரை செல்லில் அழைத்தான். விஷயத்தைக் கேட்டதும் ஜெயக்குமார் கெக்கேபுக்கேவென்று சிரித்துவிட்டு, “டேய் மடையா… போயி கார்ப்பரேஷனுக்கோ புளூ கிராஸுக்கோ போன் பண்ணுடா.. பொண்டாட்டி கூடல்லாம் இதுக்காக சண்டை போட்டுட்டு… போயி சிஸ்டரைச் சமாதானப்படுத்து போ” என்று அறிவுரை கூறித் தொடர்பைத் துண்டித்தான். பேசி முடித்ததும் பரணிக்கு சுகுணாவைத் திட்டியிருக்க வேண்டாம் என்றும் ஜெயக்குமாரிடம் சொல்லி இருக்கவே வேண்டாம் என்றும் தோன்றியது. ஒரு நாலு கால் ஜீவன் தனக்குப் பெரிய பலகீனமாகி தன்னை ஒரு கேலிப்பொருளாக்கி விடுகிறதே என்று கடுப்பாய் வந்தது. நாய்கள் மேலான வெறுப்பு இன்னும் கூடி உலகின் அத்தனை நாய்களையும் வரிசையில் நிற்க வைத்துக் காயடித்து விட வேண்டும் என்றெல்லாம் தோன்றியது.

இணையத்தில் தேடி நம்பர் கண்டுபிடித்து முதலில் கார்ப்பரேஷனை அழைத்தான். எவரும் போனை எடுக்கவில்லை. புளூ கிராஸில் விஷயம் கேட்டுவிட்டு ஆள் அனுப்புவதாகச் சொன்னார்கள்.

கொஞ்சம் நிம்மதியாகச் சாய்ந்து உட்கார்ந்து நடந்ததையெல்லாம் அசை போட்டுப் பார்த்தான். ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. சுகுணா சொன்னது எல்லாம் நியாயமாகவே பட்டது. கணவன்மார் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா மனைவிகளும் சில எதிர்பார்ப்புகளை வைத்திருக்கத்தானே செய்வார்கள். குட்டியை இப்படி எந்த பலகீனமும் இல்லாமல் தைரியலெட்சுமியாக வளர்க்க வேண்டும் என்று தோன்றியது. கராத்தே எல்லாம் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

சுகுணா கோபமாகப் போய்ப் படுத்துக் கொண்டிருந்தாள். குட்டியும் தூங்கிப் போயிருந்தாள். பரணி சுகுணாவிடம் சண்டை போட்டதற்கு மன்னிப்பு கேட்டு அவளைச் சமாதானப்படுத்தினான். முதலில் கொஞ்சம் முரண்டு பண்ணிவிட்டு அவளும் நடந்ததை எண்ணிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். “இதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. எங்கேயோ படிச்ச ஞாபகம் இருக்கு. திருவொற்றியூர்ல ஒரு கோயில் இருக்காம்.. அங்க போயி பைரவர் சாமிக்கு வேண்டிகிட்டா நாய் தோஷம் பயம் எல்லாம் போயிருமாம். நாம வேணும்னா அங்க ஒரு தடவை போயிட்டு வந்துருவோமா?”

“ம்.. போலாம்.. போலாம்.. நான் வேற யோசிச்சிட்டிருக்கேன்”

“என்ன யோசிச்சிட்டிருக்கீங்க அப்பிடி?”

“இல்ல.. காலையில ஏதோ சும்மா சொன்னேன். இப்போ நிஜமாவே உன் மேல திடீர்னு ஆசை பொங்குதே.. லீவு வேற போட்டாச்சு.. என்ன சொல்றே ?”

“அது சரி .. அப்பிடியெல்லாம் எண்ணம் போகுதா உங்களுக்கு ? புளூ கிராஸுக்கு வேற சொல்லி விட்டிருக்கீங்க.. ஒரு மணி நேரத்துல அவன் வந்து கதவைத் தட்டப் போறான்.. ஜாக்கிரதை. தள்ளிப் போங்க முதல்ல…”

“ரைட்டு விடு .. முதல்ல புளூ கிராஸ் ஆகட்டும்.. அப்புறம் ……….”

சில மணி நேரம் கழித்து சொல்லியபடி ஆள் வந்தான். வாசல் மணி கேட்டுக் கதவைத் திறந்த போது நாயைக் காணவில்லை. அவர்களின் வண்டிதான் இருந்தது. வந்திருந்த ஆள் கேட்டான். “தோ .. இங்க வாசல்ல கெடந்துச்சே ஒரு கருப்பு .. அத்தையா சொல்லிருந்தீங்க?”

“ஆமா”

“அது செத்துப் பூட்டுது சார். நேத்து ராத்திரியே செத்திருக்கும் போல.. தெரு நாய் மாரிதான் தெரிது.. சண்டை போட்டிருக்குதுங்க போல ………”

– ஜூன், 20

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *