சிறுவயதில் அம்மாவுடன் வெளியே போவதற்கு எனக்கு பிடிக்கும். ஒருநாள் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு பெரியகடைக்கு வெண்கலப்பானை ஒன்று வாங்கவென்று போனார். நாலு கடைகள் ஏறி இறங்கி அவரின் மனதில் இருந்த ஏதோ ஒரு பானையை தேடி அலைந்து கடைசியில் ஒரு கடையில் அதைக் கண்டுபிடித்தார். அந்தப் பானை முப்பது நாற்பது பேருக்கு சமைக்க ஏற்றதாக இருக்கும் என்று கடைக்காரன் அபிப்பிராயப்பட்டான். அம்மா அதை ஏற்றுக்கொள்ளாமல் அதேபோல இன்னும் வேறு பானைகளையும் எடை பார்ப்பதுபோல தூக்கித்தூக்கி ஆராய்ந்தார். பானையின் உள்ளேயும், வெளியேயும், விளிம்புகளையும் தொட்டுத் தடவி உறுதி செய்தார்; டங் டங் என்று தட்டிப் பார்த்தார். அப்படியும் திருப்தி வராமல் பானையை தூக்கி சூரியனுக்கு எதிராகப் பிடித்து முகத்தை உள்ளுக்கு விட்டு ஓட்டை ஏதாவது தெரிகிறதா என்று சோதித்தார்.
அதன் பிறகுதான் பேரம் ஆரம்பமானது. கடைக்காரன் ஒரு விலை சொல்ல, அம்மா இன்னொரு விலை கேட்க பேரம் படியவில்லை. இறுதியில் அம்மா கோபித்துக்கொண்டு வெளியே புறப்பட, கடைக்காரன் மறுபடியும் கூப்பிட்டான். இப்படி மாறி மாறி நாலு தரம் வெளிநடப்பு செய்தபிறகு அம்மாவும் அவனும் ஒரு விலையில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மா முந்தானையில் இருந்த காசை பிரித்து கொடுத்துவிட்டு, பானையை கையிலே வாங்கியபோது அவருடைய முகத்து மகிழ்ச்சி கண்கொள்ளாததாக இருந்தது.
ஒரு வெண்கலப்பானை வாங்குவதற்குகூட எவ்வளவு வாக்கு சாதுர்யம் தேவைப்படுகிறது என்று நான் அம்மாவை வியப்புடன் பார்த்தேன். அம்மா இப்படி சந்தோசமாக இருப்பதும் அபூர்வம். நான் சொல்லிவிட முடிவு செய்தேன். ‘அம்மா, பள்ளிக்கூடத்தில் என்னை பேச்சுப் போட்டிக்கு தெரிவு செய்திருக்கிறார்கள்’ என்றேன். ‘அப்படியா, அப்படியா’ என்று அம்மா நம்பமுடியாமல் கேட்டார். அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இரண்டு மடங்கானது. பானையை இறக்கி நடுவீதியில் வைத்துவிட்டு நாரியில் இரண்டு கைகளையும் ஊன்றி நின்று நிமிர்ந்து பார்த்தார். யாழ்ப்பாணத்திலேயே மிகப் பிரகாசமான சூரியன் அப்போது காய்ந்துகொண்டிருந்தான். சிறிது நேரம் மௌனமாக இளைப்பாறிவிட்டு என் கன்னத்தை தொட்டு ‘சரி, ஆவியுலகத்துடன் பேசுவதை இன்றுடன் நிறுத்து. நீ பேச்சுப்போட்டியில் முதலாவதாய் வரவேண்டும். நேரத்தை வீணாக்கக்கூடாது’ என்றார். நான் சந்தோசப்படுவதற்காக திறந்த வாயை இப்பொழுது துக்கப்படுவதற்காக மாற்றினேன். ஒரே வசனத்தில் அதி மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் ஆகத் துக்கம் தரும் ஒரு செய்தியையும் கொடுப்பதற்கு அம்மா ஒருவராலேயே முடியும்.
அம்மா சொன்ன ஆவியுலக விருத்தாந்தம் இதுதான். பக்கத்து வீட்டில் ஆவியுடன் பேசுவார்கள். எங்கள் கிராமத்திலும், இன்னும் அயல் கிராமங்களில் இருந்தும் சனங்கள் இறந்தவர்களுடன் பேச அங்கே வருவார்கள். நாலு பக்கமும் சட்டம்போட்ட ஒரு சதுரக் கண்ணாடியில் சுற்றிவர A,B,C,D என்று எல்லா ஆங்கில எழுத்துக்களும் எழுதியிருக்கும். கண்ணாடி நடுவிலே ஒரு மைப்புட்டியின் மூடியை கவிழ்த்து வைத்து, ஒரு சிறுவனும் சிறுமியும் எதிரெதிராக உட்கார்ந்து மூடியின் மேல் இரண்டு விரல்களால் தொட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த மூடி தானாகவே அசைந்து ஒவ்வொரு எழுத்தாக தொட்டுச் செல்லும். அந்த எழுத்துக்களை குறித்துவைத்து ஆவிகள் என்ன பேசுகின்றன என்பதைச் சொல்வார்கள்.
வீட்டுக்காரருடைய மகள் தனலட்சுமிதான் மீடியம். நான்தான் எதிர் மீடியம். ஆணும் பெண்ணும் எதிரெதிராக அமர்ந்தால்தான் மீடியம் முழு விசையுடன் செயல்படுமாம். யாராவது ஆவியுடன் பேசவந்தால் பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு ஆளனுப்புவார். நானும் சந்தோசமாய் சென்று மீடியம் வேலையை செய்துவிட்டு திரும்புவேன். ஒரு நாளாவது அம்மா எந்த விதமான எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மனது சந்தோசமாக இல்லை என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரியவந்தது. ஆவியுடன் பேசி முடிந்ததும் எனக்கும் தனலட்சுமிக்கும் ஏதாவது தின்பதற்கு தருவார்கள். ஆவிகள் எங்கள் உடம்பு வழியாக இறங்குவதால் எங்களுக்கு களைப்பாக இருக்கும் என்று சொல்லி இந்த உபசாரம் நடக்கும். அதை நானோ தனலட்சுமியோ எந்தக் காலத்திலும் மறுத்தது கிடையாது.
அம்மா தடையுத்தரவு போட்ட பிறகு அடுத்த வீட்டிலிருந்து யாராவது என்னை மீடியம் வேலைக்கு தேடிவந்தால் அம்மாவே பதில் சொல்லி அனுப்பிவிடுவார். ‘அங்கே போய்ச் சொல்லுங்கோ அவன் பேச்சுப்போட்டிக்கு பேர் கொடுத்திருக்கிறான் என்று. இரவிரவாக அவன் கண்விழிச்சு பேச்சை பாடமாக்கவேணும். இன்றைக்கு வர ஏலாது. இந்தப் போட்டி முடியும் வரை அவனை கரைச்சல் பண்ண வேண்டாம்.’ இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தபிறகு அவர்கள் வேறு ஏற்பாடு செய்து கொண்டார்கள். ஆவியுலகத்துடன் எனக்கிருந்த தொடர்பு இப்படித்தான் திடீரென்று துண்டிக்கப்பட்டது.
பத்துப் பேர் கலந்துகொண்ட எங்கள் பள்ளிக்கூட பேச்சுப் போட்டியில் நான் முதலாவதாக வந்திருந்தேன். அடுத்த சுற்றுக்கு என்னை தயார் செய்யும்படி சரித்திரப் பாடம் கற்பிக்கும் வாத்தியாரை தலைமையாசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். வடமாகாணத்தில் நடக்கப்போகும் போட்டியில் 20 பள்ளிக்கூடங்களுக்கு மேலாக கலந்துகொள்ளுமாம். எனக்கு பயம் பிடிக்கத் தொடங்கியது. ஆவிகள் தினமும் என் உடம்பில் இறங்கி வந்தபோது ஏற்படாத நடுக்கம் இப்போது ஏற்பட்டது.
நான் தலைமையாசிரியர் சொன்ன அறைக்கு முன் நின்றேன். சரியாக ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கதவைத் தட்டுவதா அல்லது கூப்பிடுவதா அல்லது தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போவதா? என்னுடைய 12 வயது வரைக்கும் நான் ஒரு கைப்பிடி வைத்த கதவையோ, குமிழ் வைத்த கதவையோ கண்டதில்லை. எல்லாக் கதவுகளும் எங்கள் ஊர் தச்சு வேலைக்காரர்கள் செய்தவைதான். தள்ளித்தான் திறக்கவேண்டும். திறப்பை துளையினுள் நுழைத்து இழுத்துத்தான் கதவைப் பூட்டவேண்டும்.
கடைசியில் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தேன். எல்லாம் என் பேச்சு விசயமாகத்தான். மாஸ்ரர் ‘வாவா, உன்னைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தனான்’ என்றார். கறுப்பாக சிநேகமாக வெள்ளைப் பற்களால் சிரித்தார். அவர் என்னிலும் பார்க்க பெரிய ஆயத்தத்துடனும், என்னிலும் பார்க்க அதிக உற்சாகத்துடனும் இருந்தது என்னை கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ‘சேர், இதுதான் என்ரை பேச்சு’ என்று நான் கொண்டுபோன தாள்களைக் கொடுத்தேன். அவர் அதைக் கையில் எடுக்கவில்லை. ‘நான் உன்னுடைய பேச்சில் ஒரு வசனத்தையும் மாற்றமாட்டேன். அது அப்படியே இருக்கட்டும். நல்ல பேச்சு. புதிசாக எழுதி பாடமாக்க நேரமும் போதாது’ என்றார்.
‘ஓம் சேர்.’
‘சரி. நான் உன்னுடைய சாதகத்தைப் பார்த்தனான். உனக்கு புதன் ஏழாம் இடத்திலே இருக்கு. நல்லாய்ப் படிப்பு வரும்; பிரசங்கமும் செய்வாய். கிரேக்க புராணத்தில் புதன்தான் பேச்சுக்கு அதிபதி. திருடர்களின் கடவுளும் அவன்தான். திருடுவது என்றால் என்ன, தந்திரம் செய்வது. நான் உனக்கு அதைத்தான் சொல்லித் தரப்போறன். எப்படி நிற்பது, எப்படி உச்சரிப்பது, எங்கே குரலை உயர்த்துவது, எங்கே தாழ்த்துவது, எப்பொழுது இடைவெளி விடுவது போன்ற பயிற்சி என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் இன்னொரு முறை பேச்சை எழுதி மனப்பாடம் செய்யச் சொல்லப்போகிறார் என்று நான் அடிவயிற்றில் கலங்கிக் கொண்டிருந்தேன்.
பயிற்சி தொடங்கியது. ஒரு வாரகாலமாக அவர் சொன்ன நேரத்துக்கு போய் அவரிடம் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். ‘மகாத்மா காந்தி 1869ம் ஆண்டு போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார்.’ இதுதான் முதல் வசனம். ‘மகாத்மா’ அல்ல ‘மஹாத்மா’ என்று திருத்தினார். ‘தென்னாப்பிரிக்காவில்’ என்று தொடங்கும்போது குரலை நெகிழ்த்தி இரக்கத்தை கொண்டுவரவேண்டும் என்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற வாசகம் வரும்போது வேசமாக கைகளை தலைக்கு மேலே தூக்கி காட்டவேண்டும். ‘அன்பே தகழியாகவும், அஹிம்சையே நெய்யாகவும், என்புருக்கும் தியாகமே இடுதிரியாகவும்’ என்று நான் ஏதோ புத்தகத்திலிருந்து திருடிச் சேர்த்த வசனத்தின்போது கையை நெஞ்சிலே வைத்து சபையோரை காருண்யம் ததும்பும் கண்களால் கரைக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லித் தந்தார். நான் ஒரு முதல்தர மாணவனாக இருந்து மாஸ்ரர் சொன்ன ஒவ்வொன்றையும் வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் கடைப்பிடித்தேன்.
பேச்சுப்போட்டி நடுவர்கள் மேடையில் வீற்றிருந்தார்கள். பல மைல் தூரத்திலிருந்து நானும் மாஸ்ரரும் அப்போதுதான் இளைக்க களைக்க வந்து சேர்ந்தோம். வயதுக்கு தக்கமாதிரி பேச்சுப் போட்டியாளர்களை வகைப்படுத்திய முதல் சுற்றுப் பேச்சில் நான் தேறிவிட்டேன். இரண்டாவது சுற்றில் என்னுடன் போட்டியிடுபவர்களுடைய பேச்சை கேட்க விருப்பப்பட்டேன். மாஸ்ரரும் சரி என்றார்.
நான் முன்பு பார்த்திராத ஒரு கறுப்பு மாணவன், என்னிலும் உயரத்தில் சின்னதாகத் தோற்றமளித்தவன், பேசினான். அவனுடைய உயரத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை. குரல் கணீரென்று அரங்கத்தின் எல்லைவரைக்கும் கேட்டது. கப்பலோட்டிய தமிழனைப் பற்றிய பேச்சு. ஒரு பந்து துள்ளுவதுபோல அவன் மேடை முழுக்க துள்ளியபடியே பேசினான். அவன் வாயிலிருந்து சொற்கள் நில்லாமல் உருண்டு வந்து விழுந்தன. அவன் முடித்ததும் அவனுக்கு விழுந்த கைத்தட்டு அவன் பேசிய நேரத்திலும் பார்க்க கூடியதாக இருந்தது.
அடுத்தது, என்னிலும் உயரமாக தோன்றிய ஒரு பெண். கறுப்பு பூச்சிகள் மொய்ப்பதுபோல அடர்த்தியான இமைகள். அவளுடைய குடும்பம் முழுக்க ஏதோ திருவிழா பார்க்க புறப்பட்டதுபோல வந்திருந்தது. அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி என்று அவர்களே அரங்கத்தில் அரைவாசி இடத்தை பிடித்துவிட்டார்கள். அவள் ஆறுமுக நாவலரைப் பற்றி பேசினாள். அவள் குரலில் ஏற்றமோ இறக்கமோ கிடையாது ஆனால் குரல் சங்கீதம் கேட்பதுபோல இருந்தது. அவளுடைய இரட்டைப் பின்னலில் ஒன்று முன்னுக்கு இருந்தது பேச்சின் முடிவில் எப்படியோ பின்னுக்கு போய்விட்டது.
இந்தப் பெண் பேசும்போது வாயைக் குவித்துவைத்து பேசினாள். எல்லா உணர்ச்சிகளையும் அவளால் வாயைக் குவித்தபடி காட்டமுடிந்தது. கோபமாக இருக்கும்போதும் வாயைக் குவித்தாள். மகிழ்ச்சியை காட்டும்போதும் வாயை குவித்தாள். இரக்க குணத்தை வெளிப்படுத்தும் போதும் வாயை குவித்தாள். அவள் பேச்சு காதுக்கு கேட்பதற்கும், கண்ணுக்கு பார்ப்பதற்கும் குளிர்ச்சியாக இருந்தது. நான் நடுவராக இருந்தால் அவளுக்குத்தான் வாக்கு போடுவேன்.
என்னுடைய முறை வந்தபோது நான் நாலு படிகளில் ஒவ்வொன்றாக ஏறி மேடையின் நடுவில் போய் நின்றேன். முதலில் மாஸ்ரர் எங்கேயிருக்கிறார் என்று தேடினேன். அவர் முதலைபோல சிரித்தபடி தூரத்தில் தெரிந்தார். நான் பேசும்போது என்னுடன் சேர்ந்து அவருடைய சொண்டுகளும் அசைந்தபடி இருக்கும். புதன் அனுக்கிரகம் இருப்பதால் மாஸ்ரர் என்னை ‘புத்திநாதன்’ என்று விளித்ததை நினைத்துக் கொண்டேன். முழங்கால்கள் ஒன்றோடொன்று இடிக்காமல் தடுப்பதற்கு நான் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. குரலை உயர்த்தவேண்டிய இடத்தில் உயர்த்தி, இறக்கவேண்டிய இடத்தில் இறக்கி, கைகளை எங்கேயெங்கே எந்த திசையில் எவ்வளவு உயரத்துக்கு காட்டவேண்டுமோ அவ்வளவையும் காட்டி கச்சிதமாக பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தேன். பேச்சின் ஆரம்பத்தில் முதல் வாக்கியத்தின் போது முதல் வார்த்தையை ‘மகாத்மா காந்தி’ ‘மகாத்மா காந்தி’ என்று எதற்காக இரண்டுதரம் சொன்னேன் என்பது எனக்கோ மாஸ்ரருக்கோ புரியாத ஒன்று.
பேச்சுப்போட்டி முடிந்தபோது பெரும் மழை பிடித்துக்கொண்டது. ஒருவரும் எதிர்பாராமல் திடீரென்று பெய்த மழை, அது வந்தமாதிரியே உடனேயே போய்விடும் என்றார்கள். ஆனால் மழை விடாமல் இரண்டு மணி நேரமாக கொட்டியது. திரும்பும்போது மாஸ்ரர் சைக்கிளை உழக்க நான் பின் சீட்டில் உட்கார்ந்து வந்தேன். சைக்கிள் மெதுவாக சென்றபடியால் டைனமோவும் மெதுவாகவே சுழன்று மங்கலான வெளிச்சத்தை கொடுத்தது. கறுப்பு வானமும், குறுகலான வீதியும், மழையில் நனைந்து கூனிப்போன மாஸ்ரரின் முதுகும், வெட்டவெளியில் தனியாக நின்ற பனைமரம் ஒன்று இடி விழுந்து எரிந்துகொண்டிருந்ததும் என்னுடைய அன்றைய மன நிலையில் அப்படியே பதிந்து போனது. ஒழுங்கைகளில் வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. வாத்தியார் எங்கள் வீட்டுப் படலையில் என்னைக் கொண்டுவந்து இறக்கி விடும்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. ‘பார்த்துப்போ’ என்று சொல்லிவிட்டு மாஸ்ரர் சைக்கிளை திருப்பிக்கொண்டு போனார்.
வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரேயொரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காக தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கியமான காரியமாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்பதுபோல அம்மா எனக்காகக் கண்விழித்திருந்ததை இன்றுவரைக்கும் என்னால் மறக்க முடியாது.
என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து, தலையைத் தடவி ஈரம் இல்லையென்று உறுதி செய்த பிறகு ‘பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுறேன்’ என்றார். அன்றைய பேச்சுப் போட்டியில் என்ன நடந்தது என்றோ, நான் எப்படிப் பேசினேன் என்றோ, யாருக்கு பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக் கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப் படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.
அன்று அம்மா விசேஷமாக சமைத்திருந்தது தெரிந்தது. நான் வெற்றிக்கிண்ணம் கொண்டுவருவதை கொண்டாடுவதற்காக இருக்கலாம். கோப்பை நிறைய சோறு பரிமாறி, அதற்கு மேலே பலவிதமான கறிவகைகளை பரப்பி வைத்து, பிசைந்து ஓர் அபூர்வமான மணம் கொடுக்கும் குழையலை கைப்பிடியில் உண்டாக்கி ஒவ்வொரு வாயாக வைத்து வயிறாரச் சாப்பிட்டேன். படுப்பதற்கு பாயும் தலையணையும் பக்கத்தில் தயாராக இருந்தாலும் அம்மாவுக்கு அன்று நடந்த பேச்சுப் போட்டி விவரங்களை முழுவதுமாகக் கூறவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் இருக்கும் மூன்றாவது பரிசுக் கிண்ணம், அதுகூட கிடைக்காததன் காரணத்தை நான் அம்மாவிடம் சொல்லவேண்டும். நான் நாலாவதாகக்கூட வரவில்லை. ஏழோ, எட்டோ அதற்குமேலோ இருந்தேன்.
‘அம்மா, கெதியாய் வாங்கோ’ என்றேன். ‘வாறன், வாறன். எல்லாம் முடிஞ்சு போச்சு.’
உண்ட களைப்பில் தாழ்வாரத்து சுவரில் தலையை சாய்த்து அம்மாவுக்காகக் காத்திருந்தேன். இரட்டைப்பின்னல்காரி, அவள் தலையளவு கோப்பையை தூக்கிக்கொண்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. துள்ளித் துள்ளிப் பேசின கறுப்பு பையன் வென்ற கோப்பையும் பெரிசாக பளபளவென்று இருந்தது. ஏழாம் வீட்டுக்கு அதிபதியான புதன் அன்று என்னை மறந்து இன்னும் பெரிய தந்திரக்காரனுக்கு உதவப் போயிருக்கலாம். மெல்ல மெல்ல கண் அயர்ந்துகொண்டு வந்தது. அம்மா சமையலறையில் தனியாக உட்கார்ந்து கைவிளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டுவிட்டு, சோற்றுப் பானையை மூடி, கறிச் சட்டிகளை கழுவி, பாத்திரங்களையும் தண்ணீர் குவளைகளையும் அலம்பி, துடைத்து அடுக்கி வைத்து, சமையலறையை கூட்டித் துப்புரவாக்கி அடுத்தநாள் காலைச் சமையலுக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யும் சத்தம் வெகுநேரமாக எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது.
– 2011-02-28