பெருந்தேவிக்கு பி.ஜி.உடௌஸ் வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 3,206 
 
 

அப்பாவும் நானும் நண்பர்கள் போல்தான் பழகியிருக்கிறோம். இருந்தாலும், ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லும்போது ஏதோ வந்து தடுக்கிறமாதிரி இருந்தது. நானும் அவரும் சொந்த விஷயங்களைப்பற்றிப் பற்றிப் பேசும்போது அநேகமாக எப்போதும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். ஆனால், ஏனோ தெரியவில்லை, இந்த விஷயத்தை இங்கிலீஷில் சொன்னேன். சொல்லும்போது எனக்கே அது ஓர் அந்நிய விஷயம் மாதிரி கேட்டது.

என்னுடைய சங்கடம் அப்பாவுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் புன்னகைத்தார். ‘என்ன பெயர்?’ என்று தமிழில் கேட்டார்.

‘பெருந்தேவிப்பா. எல்லாரும் “தேவி”ன்னு கூப்பிடுவா.

‘பெருந்தேவியா?’ அவர் புருவம் உயர்ந்தது.

‘ஆமாம், பெருந்தேவி. கொஞ்சம் பழைய பெயர், இல்லையா?’

‘ஆனால் நல்ல பெயர். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தாயார் பேரு பெருந்தேவி. இந்த காலத்தில் பெண்களுக்கு பெருந்தேவி, வேதவல்லி, ஆண்டாள், அலர்மேல்மங்கை, இந்தமாதிரியெல்லாம் யார் பேர் வைக்கிறா? எங்க பெரியம்மா பேர்கூட பெருந்தேவிதான். ஆனால் எல்லாரும் “பெந்தா”ன்னுதான் கூப்பிடுவா. “பெந்தா”ன்னு கூப்பிட்டா கூச்சல் போடறமாதிரி இருக்கும். அதுவும் எங்க பெரியப்பா கிணத்தடியிலுருந்து கூப்பிட்டாரானால், ஏதோ அடிபட்டு அலறுவதுமாதிரி கேக்கும். “தேவி”ன்றது மென்மையா, இனிமையாக் கேக்கறது. இட் ஜஸ்ட் ரோல்ஸ் ஆஃப் த டங். சரி, பெருந்தேவி என்ன படிச்சிருக்கா, ரகு? என்ன வேலை பார்க்கிறா?’

பேச்சு இப்படிப் போய்க்கொண்டிருந்தது. கேட்கவேண்டிய எல்லாக் கேள்விகளும் வந்துகொண்டிருந்தன. ஆனால் என் பதில்களை அவர் அகடமிக்காக அணுகிக்கொண்டிருந்தார். அப்பா எப்போதுமே இப்படித்தான். அவர் ஒரு பார்வையாளர்; பங்கேற்பாளரல்ல. தனக்கு மிக நெருக்கமான விஷயங்களைக்கூட கொஞ்சம் ஒதுங்கிநின்று, விஞ்ஞானி மாதிரி பார்க்கக்கூடியவர். அவர் தொழிலிலும் விஞ்ஞானிதான்; பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் வானூர்தி இயல் விஞ்ஞானியாக இருபத்தைந்து வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இப்போது நிறைய படிக்கிறார், எழுதுகிறார், பயிலரங்குகளுக்கு நிபுணராகச் செல்கிறார்.

இப்போது அம்மாவும் காஃபியுடன் வந்துவிட்டாள். அம்மாவிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டதால் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அப்பாவின் பெயராராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது.

‘தேவி, உனக்கும், வரப்போகும் உன் மாட்டுப்பொண்ணுக்கும் ஒரே பேர். உன்னை தேவின்னு கூப்பிட்டுப் பழகியாச்சு; திடீர்னு ஸ்ரீதேவின்னு நீட்டிமுழக்க முடியாது. ஸோ, அவளைப் பெருந்தேவின்னுதான் கூப்பிடப்போறேன்.

‘உங்க பெரியப்பா மாதிரி பெந்தான்னு கூப்பிடறது.’

‘கூப்பிடறது இல்ல; கூச்சல் போடறது. வேண்டாமே.’

‘ஒரு விஷயம் தெரியுமா, ரவி? தேவி உன்னை மாதிரிதான் — நிறைய படிக்கிறாளாம்.’

‘அப்படியா? ரொம்ப சந்தோஷம். ஆனா, உன்னை மாதிரின்னு சொல்லு — பேர்லயும் சரி, வாசிக்கறதிலயும் சரி. அவளுக்கு ரொம்பப் பிடிச்ச எழுத்தாளர் யார், ரகு?’

‘பி. ஜி. உடௌஸ், அஃப் கோர்ஸ் — நமக்கெல்லாம் பிடிச்ச எழுத்தாளர்,’ என்றேன் குரலை உயர்த்தி.

‘குட்! உடௌஸை நான் படிக்க ஆரம்பிச்சபோது எனக்கு வயசு பதினெட்டுதான். இப்பவும் எப்பவாவது படிக்கிறேன்; அலுக்கறதில்ல. சரி, தேவியை நாம பாக்கப்போகும்போது, உடௌஸைப் பத்தி ஒரு சின்ன விவாதம் வெச்சுக்கலாம், என்ன சொல்றே?’

‘கட்டாயம்.’

அடுத்த அரை மணி நேரத்தில் பெண்ணையும் அவள் குடும்பத்தினரையும் எங்கு சந்திக்கலாம் என்பதை தேவியின் அப்பாவுடன் பேசி முடிவு செய்தோம். சம்பிரதாயமாக வீட்டில் வேண்டாம், கஃபே காஃபி டேயில் சனிக்கிழமை மாலை சந்திக்கலாம் என்று அம்மா யோசனை கூறினாள். அப்பாவுக்கு இது பிடித்திருந்தது. ஆனால் முதல் சந்திப்பு தன் வீட்டிலேயே நடந்தால் நல்லது என்று தேவியின் தந்தை ஆராவமுதன் விருப்பப்பட்டார். அப்பாவுக்கு அதுவும் பிடித்திருந்தது. ‘அப்படியே ஆகட்டும்,’ என்றார்.

இப்போது நான் தேவியின் வாசிப்புப் பழக்கங்களைக் குறித்து சிந்தனை செய்ய ஆரம்பித்தேன். அம்மாவின் நல்மதிப்பைப் பெறுவதற்காக ‘தேவி அப்பாமாதிரி ஒரு புத்தகப்புழு’ என்று ஒரு போடு போட்டேன். உண்மையில் அவளுக்கு வாசிப்புப் பழக்கம் இருக்கிறதா? அவள் ஒரு சினிமா பைத்தியம், அது எனக்குத் தெரியும். ஹாலிவுட் படங்களையும், தமிழ், ஹிந்தி படங்களையும் ஏகப்பட்டது பார்த்திருக்கிறாள்; அவற்றைப்பற்றி உற்சாகத்துடன் பேசியிருக்கிறாள். ஆனால் அவள் ஒரு புத்தகப் பைத்தியமா? அவள் இதுவரை எந்தப் புத்தகத்தையும் என்னிடம் பிரஸ்தாபித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. பின்பு எதற்கு எனக்குத் தெரியாத அவளுடைய வாசிப்புத்திறனைப்பற்றி அம்மாவிடம் கதையளந்தேன்? அப்பாவிடம்வேறு அவளுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் உடௌஸ் என்று ஒரு வேகத்தில் உளறிவிட்டேன். தேவி உடௌஸ் படித்திருப்பாளா? என்ன முட்டாள்தனமான சந்தேகம் இது! தேவிமாதிரி ஒரு பெண் உடௌஸ்கூட படிக்காமல் வளர்ந்திருக்க முடியுமா?

அன்று மாலை தேவியைச் சந்தித்ததும் நான் முதலில் கேட்டது உடௌஸ் பற்றித்தான். ‘தேவி, நீ எத்தனை உடௌஸ் படிச்சிருக்கே?’

‘உட் ஹௌசாவது, கான்க்ரீட் ஹௌசாவது! கட்டுமான விஷயமெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, ரகு. நான் கட்டிடக்கலையா படிச்சிருக்கேன்? நான் படிச்சது இங்கிலிஷ் லிட்ரச்சர்.’

எனக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது. ‘தேவி, உடௌஸ் என்பது மரவீடு இல்லை; அது ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளருடைய பெயர். நீ பி. ஜி. உடௌஸ் படிச்சதேயில்லையா?’

‘கேள்விப்பட்டதுகூட கிடையாது. அது என்னமாதிரி விலங்கு?’

‘அது ஓர் அபூர்வமான விலங்கு, தேவி. எழுபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவை நாவல்களையும், இருநூறு சிறுகதைகளையும், நாப்பதுக்குமேல் நாடகங்களையும் எழுதிக்குவித்த ஒரு விலங்கு. நூறு வருஷத்துக்கு மேலும் தன்னைப் படிக்கவைத்துக்கொண்டிருக்கும் விலங்கு. உலகம்…’

‘கொஞ்சம் மூச்சு வீட்டுக்கோ, ரகு. எதுக்கு இப்படி ஒரு ஆவேசம்?’

‘ஐ அம் சாரி. எங்காத்தில் எல்லாரும் ஒவ்வொரு உடௌஸ் நாவலையும் மூணு நாலு தடவை படிச்சிருக்கோம். எங்கப்பா உடௌஸ்பத்தி ஒரு ஆராய்ச்சிப் புஸ்தகமே எழுதக்கூடியவர். அக்காவும் நானும் உடௌஸைப் படித்து, பேசி, விவாதம் பண்ணி வளர்ந்தோம். இப்பகூட அக்கா அமெரிக்காவிலிருந்து கால் பண்ணினா, ஜீவ்ஸ் மாதிரி பேசி சிரிக்க வைப்பா. அம்மாவைப்பத்தி உனக்கே தெரியும். அவள் இங்கிலிஷ் ஃப்ரஃபஸர். அவுளுக்கு ஜனரஞ்சகமான எழுத்துக்கள் அவ்வளவாகப் பிடிக்கறதில்ல. ஆனா சின்ன வயசுல, பி. ஜி. உடௌஸ், அகாதா க்றிஸ்டி, இர்விங் வாலஸ் — ஏன், ஹெரல்ட் ராபின்ஸ்கூட — படிச்சி வளர்ந்தவ; எங்கிட்ட சொல்லியிருக்கா. ஆனால் உடௌஸை ஜனரஞ்சகமான எழுத்தாளர்ன்னு நான் சொல்லவே மாட்டேன். நெறயபேருக்கு உடௌஸ் பிடிக்காது, புரியக்கூட புரியாது. சரி, நீ உடௌஸ் படிக்கவில்லை, போகட்டும். உனக்கு ரொம்பப் பிடிச்ச எழுத்தாளர் யார்?’

‘அந்த மாதிரியெல்லாம் யாரும் கிடையாது. உண்மையைச் சொல்லணும்னா, நான் இதுவரை எந்தப் புஸ்தகத்தையும் முழுசா, கவர் டு கவர் படிச்சதில்லே. வேறமாதிரி சொல்லணும்னா, பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்குமேல நான் எந்தப் புஸ்தகத்தையுமே படிச்சதேயில்ல; அதுக்கு மேல படிச்சா எனக்குத் தூக்கம் வந்துடும்.’

‘என்ன ஒரு மகத்தான உண்மை! லிட்ரச்சர் கோர்ஸ்ல நீ ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா இதையெல்லாம் படிக்கலையா?’

‘லுக், மூல நூல்களை — ஒரிஜினல்ஸை — மாணவர்கள் யாரும் படிக்கமாட்டா; படிக்கவேண்டிய அவசியமும் இல்லை. பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு இலக்கியப் படைப்புக்கும் கடைகளில் ஸ்டடி கைட்ஸ் உண்டு. யார்க் நோட்ஸ்ன்னு ஒரு கைட் இருக்கு; நான் அதைத்தான் படிச்சேன். அதைப்படிச்சு பரீக்ஷை எழுதினா நிறைய மார்க் வாங்கலாம். உனக்கு ஒண்ணு தெரியுமா? ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள ஷேக்ஸ்பியரைவிட யார்க் நோட்ஸ்ல நன்னா எழுதியிருக்கான். அதைப்படிச்சு பரீக்ஷை எழுதிதான் நான் யூனிவர்சிடியில கோல்ட் மெடல் வாங்கினேன்.

‘தேவி, நீ என்னை மன்னிக்கணும். நீ ஒரு யார்க் நோட்ஸ் அறிவாளின்னு எனக்குத் தெரியாது. நீ ஒரு புஸ்தகப்புழுன்னு எங்கப்பா அம்மாகிட்ட வலியுறுத்திச் சொல்லிட்டேன். அதுவும் உடௌஸ்ல நீ பெரிய புலின்னு வேற அளந்திருக்கேன்.’

தேவியின் முகம் சிவந்தது. ‘உன் கிண்டலைக் கொஞ்சம் நிறுத்து. சரி, உனக்கு தஞ்சாவூர் பெயின்டிங் வருமா?’

‘வராது.’

‘வராது. ஏன்னா, அது ஒரு புஸ்தகத்தைக் கையில் வெச்சுண்டு சீடையைச் சாப்பிட்டுண்டே கண்ணை ஓடவிடற விஷயம் இல்லே. எனக்கு வரும்; நான் நிறைய பண்ணியிருக்கேன். ஆன்லைன் ஆர்ட் கேலரியில நீயே பாத்திருக்கே. அதைப்பத்தி — என் உண்மையான திறமையைப் பத்தி — உங்கம்மா அப்பாகிட்டே சொல்றத விட்டுட்டு, புஸ்தகத்தில புழு, புலின்னு எதுக்கு உளறணும்? உங்கப்பாகிட்ட நானே சொல்றேன், நான் வாசிக்கும் விஷயத்தில் புழுவும் இல்லே, புலியும் இல்லேன்னு.’

‘ஓ, நோ!’ நான் பதறிப்போனேன். ‘உன்னைப்பத்தி உசத்தியா சொல்லணும்னு நான் எதையோ சொன்னேன். அதனால் என்ன இப்போ? அப்பா என்ன உடௌஸ்ல உனக்கு வினாடி வினாவா நடத்தப்போறார்? உடௌஸ்ல உனக்கு என்ன நாவல்கள் பிடிக்கும்னு கேட்டா, ரெண்டு டைட்ல்களை சொல்லிவெய்யேன். உடௌஸ் பத்தி யார்க் நோட்ஸ் இருக்காது; எந்தப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இந்த எழுத்தாளர் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இண்டர்னெட்ல ஏகப்பட்டது இருக்குது. கொஞ்சம் பாத்துவெச்சுக்கோ.’

அவள் கோபத்துடன் என்னைப் பார்த்தாள்.

‘தேவி, நீ இப்ப எப்படி இருக்கே தெரியுமா?’

‘பிசாசு மாதிரியா?’

‘சீச்சீ, இதுவும் ஓர் அழகு. மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு தான்!”

‘ஆஹா, எனக்குப் பிடிச்ச பாட்டு! சைவம் படத்தில் உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடினது.’

சில வினாடிகளுக்கு முன்பு சுருங்கிய அவள் முகம் இப்பொது மலர்ந்து விரிவதை வியப்புடன் பார்த்தேன். ‘தேவி, வாஸ் திஸ் த ஃபேஸ் தட் லான்ச்ட் அ தௌசண்ட் ஷிப்ஸ்…?’

அவள் முகம் மேலும் மலர்ந்தது. ‘நீ ஷேக்ஸ்பியரை எங்கே படிச்சே? ஐ.ஐ.எம்.முக்கும் ஷேக்ஸ்பியருக்கும் என்ன சம்பந்தம்?’

‘டார்லிங், இது மார்லோ. இதெல்லாம் யார்க் நோட்ஸ்ல இல்லையோ என்னமோ!’

‘நீ என்ன மட்டம் தட்டிண்டே இருக்கப்போறயா?’

‘தேவி, நீ வேணும்னா பார். கல்யாணம் ஆனபிறகு, நான் வாசிப்பது — குறிப்பாக, உடௌஸ் வாசிப்பது — மேற்கோள் காட்டுவது, நையாண்டி செய்வது, என் தகப்பனார்-தாயார்-அக்கா புராணம் பாடுவது இது எல்லாத்தையும் நிறுத்திட்டு, சமத்தா உங்கிட்டே தஞ்சாவூர் பெயின்டிங் கத்துண்டு, உன் காலடியிலேயே எதோமாதிரி கிடப்பேன். இது என் சபதம்!’

‘நீ இந்த ஜன்மத்தில் திருந்தப்போவதில்லை.’ சொல்லிவிட்டு அவள் கலகலவென்று சிரித்தாள். தலை ஒரு புறம் சாய, முகம் சிவக்க, விரிந்த கண்கள் பளிச்சிட, புருவங்கள் மேலேற, பூரிக்கும் இதழ்கள் பிரிந்து விரிய, அவள் உதிர்க்கும் அந்த சிலவினாடி சிரிப்பைப் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்கு முன்னால் உடௌஸாவது, ஷேக்ஸ்பியராவது!

***

ஜீவா பார்க்கின் எதிர்ப்பக்கம் மரங்களடர்ந்த ஒரு விசாலமான தெருவில் இருந்தது தேவியின் வீடு. பளபளக்கும் பித்தளைப் பெயர்ப்பலகை அவள் தந்தை ஆராவமுதனை “சார்ட்டட் அக்கௌன்டன்ட்” என்று அறிவித்தது. வீடு பழைய கட்டிடம்; ஆனால், அக்கறையுடன் பராமரிக்கப்பட்டிருந்தது புரிந்தது. மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்னால், சதுரஅடி அடிப்படையில் கறாராக விலை நிர்ணயிக்கப்படாத ஒரு காலத்தில், கட்டப்பட்டிருக்கவேண்டும். கட்டிடத்தில் எங்கும் பாரம்பர்யம் திகழ்ந்தது. உயர்ந்த கூரையுடன் கூடிய பரந்தகன்ற தாழ்வாரம். அதில் வேலைப்பாடுடன்கூடிய மரத்தூண்கள். தாழ்வாரத்தின் இருபக்கமும் அலுவலக அறைகள், அறைகளுக்கு வெளியே பச்சைக்கலரில் பிரம்பு நாற்காலிகள். திருமண், சங்கு சக்கரம், பெரிய திருவடி, சிறிய திருவடி உருவங்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட, வேலைப்பாடுடன்கூடிய மேல்வாயிற்படி. வாசற்படிக்கு முன்னால் நெற்றியில் ஸ்ரீவைஷ்ணவ சின்னங்கள் துலங்க, புன்னகையுடன் தேவியின் அப்பா ஆராவமுதன்.

‘ரவி,’ என்று கையைக்கூப்பினார் அப்பா.

‘அடியேன் ராமானுஜதாசன்.’

‘அற்புதமான வீடு! என்ன மாதிரி வெராண்டா — கோவில் மண்டபம் பாணியில்! கட்டி ஒரு நூறு வருஷம் ஆகியிருக்குமா?’

‘சரியா நூறு வருஷம் ஆறது. எப்படி அவ்வளவு துல்யமா சொல்லமுடிஞ்சது?’

‘ஒரு யூகம்தான். நூறு வருஷம் — மை குட்னஸ்! வீடு மாதிரியே உங்க மனசும் பெரிசுதான். இல்லாட்டா, இங்க ஒரு பெரிய வணிகக் கட்டிடம்னா வந்திருக்கும்!’

‘எனக்கு நிறைய அழுத்தம் வந்தது. வீட்டைப் பராமரிக்கறதும் ரொம்ப கஷ்டமாயிடுத்து. இருந்தாலும் பெரியவா வாழ்ந்து வெச்சிட்டுப்போன வீட்ட இடிக்கறத்துக்கு எனக்கு மனசு வரல. 2015 வெள்ளத்தில சேதம் நெறய. அப்பதான் இவம்மாவும் போய்ச்சேர்ந்தா…’ அவர் பேசுவதை நிறுத்தினார். வாசலில் இருந்த பூகன்விலியாவை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ஸாரி டு ஹியர் தட்.’

‘த வே அஃப் ஆல் ஃப்லெஷ். வாங்கோ, உள்ள உக்காந்துண்டு பேசலாம்.’

அம்மா வீட்டைச் சுற்றிப்பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். தேவி அவள் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். நாங்கள் எல்லோரும் அவர்கள் பின்னால் சென்றோம்.

எட்டு அறைகள், இரண்டு முற்றங்கள், பெரிய சமையலறை, அதையொட்டி பூஜையறை. “கிடங்குள்” என்று தாழ்ப்பாள் போட்டிருந்த ஓர் அறையைக் காட்டினார் ஆராவமுதன். எங்கள் யாருக்கும் புரியவில்லை. ‘ஒண்ணுமில்லை, ஸ்டார் ரூம்,’ என்றாள் தேவி.

அடுத்து ஒரு விசாலமான அறைக்குள் நுழைந்தோம். ‘அப்பாவுடைய நூலகம்,’ என்றார் ஆராவமுடன். சுவரில் மூன்று புறமும் உயரமான தேக்கு அலமாரிகளில் ஆயிரத்துக்குக் குறையாத புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

‘அப்பா டாக்டர். பேரு சடகோபன். வெறும் எம்.பி.பி.எஸ்.தான், ஆனால் நல்ல ப்ராக்டிஸ். அவர்கிட்ட ரெகுலரா வைத்தியம் பண்ணிண்டவா இன்னும்கூட சிலபேர் இருக்கா. க்ளினிக் வெராண்டாவில்தான். நோயாளிகள் இல்லாதபோது இங்க வந்து வாசிச்சிண்டிருப்பார். அவர் போனபிறகு இந்த லைப்ரரிக்கு வாசகர் கிடையாது. எனக்கு வாசிக்கும் பழக்கம் ரொம்ப குறைவு. ஆனா மாசம் ஒரு தடவை தூசிதட்டி சுத்தம் பண்றோம்.’

‘அதனால் என்ன, தாத்தா வழியில் பேத்தி இருக்கா இல்லையா?’ என்றார் அப்பா.

‘என்னது?’ ஆராவமுதனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எங்கப்பா வழியில் தேவியா? எப்படி?’

‘புத்தகப்புழு,’ என்றாள் அம்மா. சொல்லிவிட்டு எச். எல். மென்கனின் செய்தித்தாள் நாட்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆராவமுதனின் குழப்பம் அதிகமாகியிருக்க வேண்டும். அவர் தேவியை விழித்துப் பார்த்தார். தேவி அவர் பார்வையைத் தவிர்த்து என்பக்கம் திரும்பினாள்.

‘உடௌஸில் புலி!’ என்றேன் நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு. தேவி என்னை எரித்துவிடுவதுமாதிரி பார்த்தாள்.

‘எதில் யார் புலி?’ என்றார் ஆராவமுதன்.

‘உங்கள் பெண் தேவிதான். உடௌஸில் புலி அவள்,’ என்றேன்.

புத்தக அடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அப்பா திரும்பிப் பார்த்தார். ‘பெருந்தேவி, ரொம்ப சந்தோஷம்மா,’ என்றார். ‘உடௌஸ் எங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்.’

‘அது என்னது அது உடௌஸ்?’ என்றார் ஆராவமுதன்.

‘உங்க பெண்ணைக் கேளுங்கோ. பெரிய லெக்சரே கொடுப்பா,’ என்றார் அப்பா. பிறகு தேவியைப் பார்த்துக் கேட்டார். ‘பெருந்தேவி, உடௌஸில் உனக்கு பெர்ட்டி ரொம்பப் பிடிக்குமா, ஜீவ்ஸ் ரொம்பப் பிடிக்குமா?’ கேட்டுவிட்டு அவரும் ஒரு பெரிய புத்தகத்தைக் கையில் எடுத்தார். ‘ஆலன் வார்னர். அடாடா, என்ன அருமையான புஸ்தகம்! இப்ப இது அச்சிலியே இல்ல.’

தேவிக்கு வியர்த்தது. என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். பிறகு ‘ஜீவ்ஸ்’ என்று குரலை உயர்த்திச் சொல்லிவிட்டு லைப்ரரியைவிட்டு வெளியே சென்றாள். அவளைப் பின்பற்றி நானும் அவள் அப்பாவும் சென்றோம். அம்மா இன்னும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த லைப்ரரியைவிட்டு வெளியே வருவதற்கே மனம் இல்ல.

‘வாட் டு யு லைக் மோஸ்ட் இன் ஜீவ்ஸ்?’ கையில் இருந்த புத்தகத்தை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்பினார் அப்பா.

”வாட் த டிகன்ஸ்…!’ என்று குரலைத் தாழ்த்தி ஏதோ சபித்தாள் தேவி.

நான் கொஞ்சம் பதற்றத்துடன் அவளைப் பார்த்தேன். இது என்ன இது, விளையாட்டு விபரீதமாகிக்கொண்டு இருக்கிறதே!

அவள் முணுமுணுத்தது அப்பாவின் காதில் சரியாக விழவில்லை. ‘என்ன சொன்னேம்மா?’ என்று கேட்டார்.

‘ஏதோ “வாடர் ஸ்ட்ரீட் இங்கிலிஷ்”ன்னு சொன்னாப்பா,’ என்றேன் நான் அவசரமாக. ‘அப்படீன்னா என்னப்பா?’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

அப்பாவின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. ‘ரகு, நான் சொல்றதைவிட எச். டபிள்யு. ஃபௌலரைப் படிச்சு நீயே தெரிஞ்சுக்கோ; நம்ம லைப்ரரியில ஒரு பிரதி இருக்கு. இல்லாட்டா, பெருந்தேவியைக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. ஜீவ்ஸோட இங்கிலீஷை “வா(ர்)டர் ஸ்ட்ரீட்”ன்னு எவ்வளவு பொருத்தமா சொல்லியிருக்கா பார்த்தயா! நன்னா படிச்ச பெண்!’

எல்லோரும் வெளியில் வந்து சோஃபாவில் உட்கார்ந்தோம். இதற்குள் அம்மாவும் லைப்ரரியைவிட்டு வெளியே வந்துவிட்டாள். தேவியின் தோளில் தட்டிவிட்டு அவள் பக்கத்திலேயே உட்கார்ந்தாள்.

அப்பா தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். ‘எனக்கும் ஜீவ்ஸின் வாடர் ஸ்ட்ரீட் பிடிக்கும். ஆனால் எனக்கு பெர்ட்டியின் மேஃபேர் ஸ்லாங்கும் பிடிக்கும். இவை இரண்டும் அடுத்தடுத்து வரும்போது — ஐ மீன், ஜக்ஸ்டஃபோஸ் ஆகும்போது — ரொம்ப வேடிக்கையா இருக்கும் இல்லையா? உடௌஸ் நாவல்களில் அடிக்கடி இந்த வேடிக்கை நடக்கும்.’

‘ஆமாம்,’ என்று தயங்காமல் பொய் சொன்னாள் தேவி. இப்போது அவளுக்கு ரொம்ப தைர்யம் வந்துவிட்டது. நான் என் வலது கட்டைவிரலை லேசாக உயர்த்தினேன்.

இப்போது அம்மாவும் உரையாடலில் நுழைந்துவிட்டாள். ‘ஓ, உடௌஸ் விவாதம் நடக்கிறதா? நான் கவனிக்காம இருந்துட்டேன். உடௌஸ் நீ விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் இல்லையா, தேவி? சரி, அவர் கதைகள்ளே உனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் எது?’

‘அடிக்கடி கல்யாணங்கள் நின்னுபோறது.’ இதை தேவி உரத்த குரலில் உற்சாகமாகச் சொல்லிச் சிரித்தாள்.

ஆராவமுதன் அவளைக் கோபமாகப் பார்த்தார். ‘என்ன கண்ராவி இது!’ என்றார். அப்பாவின் ஆர்வம் மறைந்து அவர் முகம் இறுகியது. அம்மா ஒன்றும் சொல்லாமல் இருந்ததிலுருந்து அவளும் இந்த பதிலை ரசிக்கவில்லை என்று தோன்றியது.

ஏதாவது செய்து இந்த சங்கடமான மௌனத்தை உடைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ‘தேவி, உன்னோட தஞ்சாவூர் சித்திரப் படைப்புகள் பற்றி அப்பா அம்மாகிட்டே சொல்லிருக்கேன். உன் கேலரியைக் காமிக்கிறயா?’

‘கட்டாயம். என் லேப்டாப் கொண்டுவரேன்,’ என்று எழுந்தாள். நானும் அவளைப் பின்தொடர்ந்து அவள் அறைக்குச் சென்றேன்.

‘தேவி, என்னது இது, நீ பாட்டுக்கு கல்யாணங்கள் அடிக்கடி நின்னுபோறது பிடிக்கும்னு சொல்லிட்டே?’

‘வாயை மூடு, இதுக்கெல்லாம் நீதான் காரணம். உடௌஸ்பத்தி இணையத்தில் பாத்துவெச்சுக்கோன்னு சொல்லிட்டே. நேத்து ராத்திரி ரெண்டுமணி நேரம் செலவு பண்ணி, உடௌஸ் நாவல்கள்பத்தி குறிப்புகள் எடுத்தேன். ஒரு ஆர்டிக்கில் ரொம்ப பிடிச்சிருந்தது. ஏன் தெரியுமா? அது யார்க் நோட்ஸ் மாதிரியே இருந்தது. பெர்ட்டி ஊஸ்டருக்கு எத்தனை முறை நிச்சயதார்த்தம் நடந்தது, ஒவ்வொரு நிச்சயதார்த்தமும் எப்படி ரத்தாச்சு — இதைப்பத்திதான் அந்தக் கட்டுரை. ஜஸ்ட் ஒரே பக்கம்தான். நன்னா படிச்சுவெச்சுண்டேன். ஒரு நிச்சயதார்த்தம் பற்றிய விசேஷம் உனக்குத் தெரியுமா? அது ரொம்ப குறுகியகால நிச்சயதார்த்தம்; முப்பது வினாடிகள்தான் தொடர்ந்தது! உடௌஸ்ல நிச்சயமா எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான். உங்கம்மா கேட்டவுடனே டக்குனு சொல்லிட்டேன்.’

நான் தலையில் அடித்துக்கொண்டேன். ‘நீ எதோ பரீக்ஷயில கேள்விக்கு யார்க் நோட்ஸ்ல படிச்சு பதில் எழுதினாமாதிரி சொல்ற. அங்க எல்லாரும் திகைச்சுப்போயிட்டா. உங்க அப்பாவுக்குக் கோபமே வந்துடுத்து. சரி, உன்னோட தஞ்சாவூர் ஓவியங்களைக் காமிச்சு அதை மறக்கடிக்கலாம்.’

மிகத்திறமையாகச் செய்யப்பட்ட விளக்கக்காட்சி அது. தன் ஆற்றலை வெளிப்படுத்த தேவிக்கு ஓர் அருமையான சந்தர்ப்பம்; அவளும் அதை நன்றாக உபயோகப்படுத்திக்கொண்டாள். தஞ்சாவூர் ஓவியப்பாணியை இரண்டு மூன்று நிமிடங்களில் அறிமுகம் செய்துவிட்டு, பிறகு தன்னுடைய ஓவியங்களைக் காண்பித்து விளக்கம் அளித்தாள். அப்பாவும் அம்மாவும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆராவமுதனுக்குக்கூட இது முதல் அனுபவம் என்று நினைக்கிறேன்; தன் பெண்ணின் திறமையை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். எல்லோருடைய பாராட்டுக்களையும் நான் பெருமையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நன்றாக நடந்து முடிந்த காட்சி அது. அதுவே அன்றைய இறுதிக்காட்சியாக இருக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். நல்லவேளையாக ஆன்டிகிளைமாக்ட்டிக்காக எதுவும் நடக்கவில்லை. விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

***

வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். நான் காரை ஒட்டிக்கொண்டிருந்தேன். அப்பாவும் அம்மாவும் பின் சீட்டில் இருந்தார்கள்.

‘நல்ல பெண், குடும்பமும் நல்ல குடும்பம், இல்லையா, ரவி?’ என்றாள் அம்மா. அப்பாவிடமிருந்து பதில் ஒன்றும் இல்லை.

‘ரவி, நான் கேட்டது காதில விழலயா? என்ன பாத்துண்டிருக்கே ஸ்மார்ட்ஃபோனிலே?’

‘என்னது?’

‘ஒண்ணுமில்ல, தேவி ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னேன். கெட்டிக்காரப் பொண்ணு, இல்லையா?’

‘ஓ எஸ், அழகான, திறமையான பொண்ணு. ஆராவமுதனும் அற்புதமான மனிதர்; பாரம்பர்யத்திற்கு மதிப்பு கொடுப்பவர்.’

‘என்ன திடீர்னு பிஸி ஆயிட்டே செல்ஃபோன்ல?’

சில வினாடிகள் எந்த பதிலும் இல்லை. பிறகு பேசினார். ‘பி. ஜி. உடௌஸ் பத்தி இணையத்தில் பாத்துண்டிருந்தேன்.’ அவர் குரலில் சுரத்தில்லை.

அம்மா ஒன்றும் கேட்கவில்லை. அவரே சொல்லுவார் என்று பொறுத்திருந்தாள் போலிருக்கிறது. முப்பத்துவருட திருமண வாழ்க்கையில் இவர்கள் இருவரிடமும் நல்ல புரிதல் வளர்ந்திருந்தது.

‘தேவி, உடௌஸ் கதைகள்ல அடிக்கடி கல்யாணங்கள் நின்னுபோறது தனக்குப் பிடிக்கும்ன்னு அந்தப் பொண்ணு சொன்னா இல்லையா? அவன் கதைகள்ல நிச்சயதார்த்தங்கள் அடிக்கடி நின்னுபோறது ஒரு வேடிக்கையான விஷயம். ஒரு கதையில் பெர்ட்டியோட பெரியம்மா அகாதா சொல்றா: “பெர்ட்டி, உன்னுடன் நிச்சயதார்த்தம் ஆகி, பிறகு தப்பிச்சுப்போன பெண்களை வரிசையா நிக்கவெச்சா, அந்த வரிசை (லண்டனில்) பிக்கடில்லியிலிருந்து ஹைட் பார்க் மூலை வரைக்கும் போகும்.” அதாவது ரெண்டு மைல் — மூணு கிலோமீட்டருக்கு மேல! இதில கொஞ்சம் மிகைப்படுத்தல் இருந்தாலும், நிறைய உண்மை இருக்கு. ஆனா, பெருந்தேவி அவ்வளவு ஆர்வமா அது தனக்குப் பிடிக்கும்ன்னு சொன்னா பாரு, அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலையாயிடுத்து. பெருந்தேவி சாதாரண வாசகி இல்லே; ஜீவ்ஸின் இங்கிலிஷை வாடர் ஸ்ட்ரீட்ன்னு அடையாளம் சொல்லக்கூடிய அளவுக்கு ஞானம் உள்ளவள். அவளிடம் இப்படிப்பட்ட தாக்கமா!’

‘அப்பா, இந்த பிரச்னைக்கெல்லாம் காரணம் நான்தான். நான் எல்லாத்தையும் விளக்கமா …’

‘கொஞ்சம் இரும்மா, ரகு. நாங்க ரெண்டு பேரும் முடிச்சபிறகு பேசு.’

தொடர்ந்தார். ‘உடௌஸ் என்னமோ அதை வேடிக்கையா எழுதிட்டுப் போய்ட்டான். அதனோட தாக்கத்தைப் பார்த்தியா! ஒரு சின்ன பொண்ணு நிச்சயதார்த்தங்கள் நின்னுபோறது தனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு உற்சாகமா சொல்றா!’

அவர் நிறுத்திவிட்டு அம்மாவினுடைய பதிலுக்காகக் காத்திருந்தார்.

‘அவள் அதைச் சொல்லும்போது எனக்குக்கூட “இது என்ன அசட்டுத்தனமான பேச்சு!”ன்னு தோணித்து. ஆனா, அதைத் தாக்கம்ன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படின்னு நெனைக்கிறேன். உடௌஸ் கதைகள்ளே நின்னுபோற ஒவ்வொரு நிச்சயதார்த்தமும் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம்; நாமெல்லாம் வாசிச்சு, சிரிச்ச விஷயம். அவளும் அந்த அர்த்தத்தில்தான் சொன்னாள்ன்னு நெனைக்கிறேன். டோன்ட் ரீட் டூ மச் இன்டு இட்.’

‘இருக்கலாம். ஆனால் ஜாக்கிரதையா இருக்கறது நல்லது இல்லையா?’

‘ஜாக்கிரதையா? வாட் டூ யு மீன்?’

‘அதாவது… இதை எப்படிச் சொல்றது? தேவி, உடௌஸ் கதைகள் என்னமாதிரி இலக்கியம்? அஃப் கோர்ஸ், பாப்யுலர் இலக்கியம்ன்னு சொல்லமாட்டேன்; அதுக்கு கொஞ்சம் மேலேதான். ஆனால் படிச்சு, சிரிச்சுட்டு தூக்கிப்போட்டுட்டுப் போயிண்டே இருக்கவேண்டிய கதைகள்; அதில நகைச்சுவைக்கு மேல என்ன இருக்கு, சொல்லு? நிஜ வாழ்க்கையில் மனுஷா எந்த நேரமும் நிச்சயதார்த்தம் பண்ணி உடனே ரத்து பண்ணிண்டா இருக்கா? என்ன மடத்தனம் இது! எனக்கு செஸ்டர்டன் சொன்னது ஞாபகம் வரது. உடௌஸ் கதைகளை “எய்மியபில் நான்சென்ஸ்”ன்னு சொன்னான் அவன். அதனாலதான் நாம ரெண்டுபேரும் இந்தமாதிரி சூபர்மார்க்கெட் இலக்கியத்தையெல்லாம் எப்பவோ நிறுத்திட்டு, இலக்கியத் தகுதி — தகுதின்னு சொல்றதுகூட சரியில்ல — இலக்கியச் சிறப்பு இருக்க புஸ்தகங்களை வாசிக்க ஆரம்பித்தோம்?’

அப்பா என்ன சொல்ல வருகிறார்? அவர் இவ்வளவு அழுத்தமாக, பாதிக்கப்பட்டவராக, வறட்டுத்தனமாகப் பேசி நான் எப்போதும் கேட்டதில்லை. என்ன ஆகிவிட்டது அவருக்கு?

இப்போது அம்மாவின் குரல் கேட்டது. ‘எய்மியபில் நான்சென்ஸ், சூபர்மார்க்கெட் இலக்கியம், இலக்கியச் சிறப்பு! மேலே சொல்லு, ரவி. ஐயம் ஆல் இயர்ஸ்.’

இந்தக் கிண்டலை லட்சியம் செய்யாமல் அப்பா தொடர்ந்தார். ‘பெருந்தேவிகூட இனிமேல் உடௌஸ் கதைகளைப் படிப்பதை நிறுத்திட்டு இலக்கியச் சிறப்பு இருக்க புஸ்தகங்களை வாசிக்கறது அவளுக்கு நல்லது, இல்லையா? ஒரு ஆலோசனை, அவ்வளவுதான். யாருக்கும் யாரும் நிபந்தனைகள் போடமுடியாது.’

நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அப்பாடா, பெருந்தேவியின் புகுந்த வீட்டில் உடௌஸ் பற்றிய பேச்சே இருக்காது! அவள் தன்னை வருத்திக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. இதைக்கேட்டால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!

அம்மாவின் குரல் கேலியாகக் கேட்டது. ‘கேட்டயா, ரகு? பேசறது விஞ்ஞானி இல்லை, ரகுவோட அப்பா. ஓர் அறிவாளியின் சொல்லியலில் உங்க தாத்தா ஆசூரி வரதாச்சாரியாரோட குரல் ஒலிக்கறது!’

‘இல்லைம்மா, அப்பா சொல்றது ரொம்ப சரி. இந்த விஷயத்தை எங்கிட்ட விட்டுடுங்கோ; நான் தேவிகிட்ட பேசிக்கிறேன். அவளுக்கும் உடௌஸுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இருக்காது.’

‘நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு,’ என்று வாய்க்குள்ளாகப் பாடிக்கொண்டே காரை கோபாலபுரம் முதல் தெருவுக்குள் திருப்பினேன்.

– நன்றி: https://solvanam.com/, Issue 248 / June 12, 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *