பெரியவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 9,970 
 
 

“சிங்கப்பூரில் சின்ராசு” என்ற திரைப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெற்றிக்கரமாகமுடித்துவிட்டு, படக்குழுவினர் ஊருக்கு கிளம்பஆயத்தமானார்கள்.

உதவி இயக்குநர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, இயக்குநர் வாணிதாசனிடம்,” சார், எல்லோரும்தயாராயிருக்காங்க.. இப்ப விமான நிலையம் போனா.. நேரம் சரியா இருக்கும், நீங்க தயாரா..?”

“நான் ரெடி… வாங்க…” என வாணிதாசன் காரில் ஏறிஅமர்ந்தார்.

கார் சாங்கி விமான நிலையம் நோக்கி விரைவு சாலையில்குலுங்காமல் விரைந்து சென்றது. தண்ணீரில் நீந்திசெல்லும் மீன் குஞ்சுப் போல தார் ரோட்டில் கார் வழுக்கிகொண்டு சென்றது.

என்னை உங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறேன். நான், வாணிதாசன்.. இந்தப் பெயரைத் தெரியாதவர்கள்யாரும் தமிழ்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு பிரபலம். காரணம் இன்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தஇயக்குநர்களில் நானும் ஒருவன்.

மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களிலிருந்து, என்னுடைய படைப்புகள் முற்றிலும் வேறுபட்டவை. நாலுசண்டை, ஆறு பாட்டு, அம்மா, தங்கை பாசம், ஒருவரைஒருவர் அடித்து உதைத்துக் கொள்ளும் நகைச்சுவைஎன்ற தமிழ் திரைப்பட கோட்பாட்டை உடைத்தெறிந்துசமூக நலனுக்காக… சமுதாய கண்ணோட்டத்துடன்எடுத்த திரைப்படங்களால் எனக்கு திரையுலகிலும் சரி, வெளியுலகிலும் சரி தனி மரியாதை உண்டு.

எனது அனைத்து படங்களும் அதிகம் செலவு இல்லாமல்எடுக்கப்பட்டதால்.. என்னால் தயாரிப்பாளர், வினியோகிஸ்தர், திரையரங்க முதலாளி யாருமே நஷ்டம்அடைந்ததில்லை. இந்த ‘சிங்கப்பூரில் சின்ராசு’ படத்தயாரிப்பாளரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.. இந்தப்படத்தை சிங்கப்பூரில் இயக்க ஒப்புக்கொண்டேன்.

” சார், ஏர்போர்ட் வந்துடுச்சு.. இறங்குங்க…” என்ற என்உதவியாளரின் குரல் கேட்டு… கலைந்தது என் சிந்தனை, “மன்னிக்கணும் வாசகர்களே.. இன்னொரு சந்தர்ப்பம்கிடைக்கும்போது என்னைப் பற்றி முழுசா சொல்கிறேன்..” என்று

விமான அனுமதி சீட்டு பெறுவதற்காக வரிசையில்நின்றேன்.

இங்கே எல்லாமே அழகாக.. அமைதியாக… ஒழுக்கமாகநடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இதுமாதிரி நம்மநாடும் மாறாதா? என ஏங்கினேன்.

காற்றை கிழித்துக் கொண்டு விமானம் மேல் நோக்கிசென்றது.. அதே வேகத்தில் என் நினைவலைகள்பின்னோக்கி சென்றது.

எனது சொந்த ஊர் காரைக்கால் பக்கமுள்ள பூஞ்சோலைஎன்ற கிராமம். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம்முடித்து.. வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில்… பொழுது போகாத நேரத்தில்.. ஏரிக்கரையில் அமர்ந்து… ‘கவிதை’ எழுதுகிறேன் பேர்வழினு எதையாவது கிறுக்கிகொண்டிருப்பேன்.

அப்பொழுது என் பெயர் முத்துக்குமார், முத்துக்குமாராகிய நான் “வாணிதாசனாக” அவதாரம் எடுக்க யார் காரணம்தெரியுமா? பெரியவர்..! யார் அந்த பெரியவர்?

எங்க கிராமத்துல எல்லோரும் பாசத்தோடும், மரியாதையோடும் ‘பெரியவர்’ என்று அழைக்கப்படும்மாயாண்டி கவுண்டர் தான் நான் சொல்லுகிற பெரியவர். அவருக்கு இப்போ கிட்டத்தட்ட எண்பது வயசிருக்கும்.

ஒருநாள், அவர் என்னுடைய கிறுக்கல்கள் அடங்கியநோட்டு புத்தகத்தை படித்துவிட்டு, ” டேய், குமாரு.. அந்தகலைவாணியோட அருள் ஒனக்கு இருக்குதுடா.. அதுனாலதான் இவ்வளவு அற்புதமா தமிழைசெதுக்கிருக்கே.. இனிமே நீ குமாரு இல்லை… வாணிதாசன்..”னு வேடிக்கையாக பெரியவர் சொன்னது, இப்ப நிஜமாயிடுச்சு.

மேலும் அவர், ” டேய், வாணிதாசா… நீ இங்கே சும்மாசுத்திகிட்டு இருக்காம சென்னைக்கு போயி சினிமாவுலேசேர்ந்திடு.. நிச்சயம் ஒரு நாளைக்கி நீ பெரிய ஆளாவருவே..”னு என்னோட மனசுல சினிமாங்கிற ஆசைத்தீயை மூட்டிவிட்டார்.

அதன்பிறகு வீட்டுக்குத் தெரியாமல், திருட்டு ரயில் ஏறி, சென்னைக்கு வந்து, சோறு தண்ணி இல்லாமகஷ்டப்பட்டு, பல அவமானங்களை சந்திச்சு, இன்னிக்குஒரு நல்ல இயக்குநரா இருக்கேன்னா, அதுக்கு காரணம்அந்த பெரியவர் தான்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன், என்னுடைய கார் ஓட்டுனர் சந்தோஷத்துடன், ” சார், இங்கே வாங்க..” என்று கையாட்டினார்.

நான் காரில் ஏறி அமர்ந்தவுடன், ” சார்.. ஏதாவதுசாப்பிட்டுவிட்டு போகலாமா?”

“வேண்டாம்.. டீ இருக்கா?”

ஃப்லாஸ்க்ல சூடா வாங்கி வச்சிருக்கேன்.. தரவா?”

“கொடு”

என் மனைவி, குழந்தைகளை அழைத்துவர பூஞ்சோலைகிராமம் நோக்கி கார் பயணம் தொடர்ந்தது.

வாசகர்களே! உங்களுக்கு ஒரு உண்மையை சொன்னா.. நீங்க ஆச்சரியப்படுவீங்க, என்னுடைய பலதிரைப்படங்களுக்கு “கதைக் கரு” சொன்னவர்பெரியவர்தான். அதுனால என்னுடைய ஐம்பதாவதுபடத்தின் கருவையும் அவரிடமே கேட்க போகிறேன்.

பயண களைப்பின் அசதியில் என்னையறியாமல் தூங்கிப்போனேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. ஆனால் ஒரு பள்ளத்தில் காரின் பின் சக்கரம் இறங்கி.. ஏறியதில்.. திடுக்கிட்டு விழித்தேன்.

உடனே, ” சாரி சார், பள்ளம்.. கவனிக்கல..”

“இனிமே ரோடு, இப்புடித்தான் இருக்கும்.. பார்த்துமெதுவா ஓட்டு..” என்று நேரம் பார்த்தேன், சரியாக மணிஇரவு 12, தூரத்தில் சுடுகாடு தெரிந்தது. அந்தசுடுகாட்டை தாண்டி ரெண்டு கிலோ மீட்டர் போனா.. பூஞ்சோலை கிராமம்.

கிராமத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காரின்ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு.. தலையைவெளியே நீட்டி பார்த்தேன்.

ஆஹா! இயற்கை இங்கே அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறது. சில்லென காற்று என் முகத்தைஇறுக்கி அணைத்துகொண்டது. மின்மினி பூச்சுகளைப் போல தெரு விளக்குகள் ஆங்காங்கே கண் சிமிட்டியது. தூரத்தில் நாய்கள் குலைப்பது, தெள்ளத் தெளிவாககேட்டது.

என்னதான் பட்டணத்து வாழ்க்கையில் வசதிகள்இருந்தாலும்.. கிராமத்து வாழ்க்கைக்கு ஈடாகாது. இதன்சுகத்தை வார்த்தைகளால் சொல்வதை விடஅனுபவித்தால் தான் புரியும்.

அப்போது எதிரே யாரோ வருவது போல தெரியவே.. வாகனத்தை அவரருகில் நிறுத்த சொன்னேன். வாகனம்நின்றதும், யாரென்று பார்த்தேன், என்னால் நம்பவேமுடியவில்லை, நான் யாரைப் பற்றி யோசித்துக்கொண்டுவந்தேனோ! அந்த பெரியவர்.

அவர், ” டேய், வாணிதாசா.. நல்லா இருக்கியா, ஒன்னயப்பார்த்து எவ்வளவு நாளாச்சு”

“ஒங்க ஆசிலே நல்லாயிருக்கேன் பெரியவரே.. வரும்போதுதான் ஒங்களப் பத்தி நெனச்சேன்.. ஒங்களுக்கு ஆயுசு நூறு!”

“அதெல்லாம் யாருக்கு வேணும், ஆமா என்ன விசயம்?”

“பெரியவரே.. என்னுடைய ஐம்பதாவது படத்துக்கு நீங்கதான் ஒரு கரு சொல்லணும்”

” வாணிதாசா! நானும் ஒன்னயத் தான் எதிர்ப்பார்த்தேன், இந்த காலத்துப் பசங்க, தன்னை வளர்க்க தாய்தந்தைஎவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு யோசிக்காம, வளர்ந்துதனக்குனு ஒரு குடும்பம் வந்ததும், பெத்தவங்கள தூசுமாதிரி நெனச்சு ஒத்துக்குறாங்க.. அந்த கொடுமையநெனச்சா தாங்க முடியலடா..” என்று சொல்லிமுடிக்கவில்லை..

அதற்குள் நான், ” பெரியவரே ! சூப்பர் கரு.. இத மையமாவச்சு அடுத்தப் படத்த எடுக்குறேன்”

உடனே பெரியவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில்ஒற்றிக்கொண்டார்.

நான் தயங்கியப்படியே, ” பெரியவரே! தப்பா நெனைக்கக் கூடாது, நா ஒங்களுக்கு ஏதாவது கைமாறு செய்யணும், நீங்க மறுக்க கூடாது. ஒங்களுக்கு பணமா வேணுமா? இல்ல பொருளா வேணுமா?”

” இந்த கெழவனுக்கு அதெல்லாம் எதுக்கப்பா.. அதுக்குப்பதிலா பக்கத்து ஊர்ல இருக்குற முதியோர்இல்லத்துக்கு நன்கொடை கொடுத்திடு” என்றுசொல்லிவிட்டு நடந்தார்.

” வாங்க.. கார்ல போகலாம்..”

“ஒனக்கு எதுக்கு சிரமம்.. நான் போறேன்..” தொடர்ந்துநடந்தார்.

பிறகு நான் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா, மனைவி, பிள்ளைகள் எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது அம்மா, ” ஏண்டா, இப்புடி நடு ராத்திரி நேரத்துல வர்றே, ஒனக்கு சேதி தெரியுமா? நம்மபெரியவரு இறந்து மூணு நாளாச்சு.. அவரு ஆவியாஅலையுறாருனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.. இனிமே நீராத்திரி நேரத்துல வெளியே போகாதே”

“என்ன.. பெரியவர் இறந்து மூணு நாளாச்சா..?” என்னையறியாமலே திடுக்கிட்டேன். அப்போ நான்பேசியது பெரியவர் ஆவியிடமா? நெஞ்சை ஏதோபிசைய… ஒன்றும் புரியாமல் சிலைப் போல் நின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *