பெய்தலும் ஓய்தலும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 12,808 
 
 

இப்போது பெய்து கொண்டிருக்கிற மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை.

மகமாயி மழைத்தண்ணீரை அண்டாவில் பிடித்துக்கொண்டு இருக்கலாம். வாசலில் ஈரத்தரையில் மழைப்புள்ளிகள் தெறிக்க, அரை அரைக் கொப்புளங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கன்றுக்குட்டிக்கு இன்னும் தொப்புள்கொடி விழவில்லை. நனைய வேண்டாம் என்று ஜன்னல் கம்பியில் கட்டிப் போட்டிருக்கிறார்கள். காரை பெயர்ந்திருக்கிற சுவரை, அது முகர்ந்து பார்த்துக் கொண்டிருக் கிறது. சைக்கிள் பெடல் இடித்து இடித்தே சுவர் பெயர்ந்துவிட்டிருந்தது.

இன்னும் என்னால் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்க முடியவில்லை என்பதில் கதிரேசனுக்கு வருத்தம். அப்பா மாதிரி இருக்கிறவங்க எல்லாரும் பைக் வெச்சுக்கிட்டு ஆபீஸ் போறாங்க. இவங்கதான் இன்னும் சைக்கிளை விடமாட்டேங்கிறாங்க?” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அப்பா வாங்காவிட்டால் என்ன? நீ வாங்கு” என்று சொல்லிவிட்டு, “எலுமிச்சங்கா ஊறுகாய் போடவா?” என்று கேட்கிற அம்மாமீது கதிரேசனுக்கு வருத்தமிருக்குமா, தெரியவில்லை!

என்மீது கோபம் இருந்திருக்கும் போல…. அப்பாமீது மகன்கள் கோபப்படுவார்கள் என்பதை நான் யோசிக்கவே இல்லை இதுவரை கதிரேசன் நன்றாகப் படித்தான். ஸீட் கிடைத்தது. இன்ஜினியரிங் முடித்து, நல்ல வேலைக்கும் போய்விட்டான். என்னால் முடிந்ததை யெல்லாம் நான் செய்துகொண்டுதானே இருக்கிறேன்.

“காலேஜுல சேர்த்ததோடு சரி…. நாலு வருஷத்துல ரெண்டு தடவைகூட ஹாஸ்டலுக்குப் போய்ப் பார்க்காத அப்பா – அம்மா நாமளாகத்தான் இருக்கும் – கதிரேசன் படிப்பு முடிந்த சமயம் மகமாயி சொன்னாள்.

“உன் மகன் உன்கிட்டே வருத்தப்பட்டானாக்கும்” என்று நான் கேட்டதற்கு மகமாயி நேரடியாகப் பதில் சொல்லவில்லை.

“அவன் கேட்காவிட்டாலும் ஊர்ல கேட்கிறாங்க இல்லே… ‘மாமு, உன் மகனைப் பார்த்துட்டு வந்தியா? எப்படி இருக்கான்?’னுட்டு..” “நல்லாத்தான் இருக்கான்னு சொல்லிவிட வேண்டியதுதான்!”

நாம் ஓரளவுக்கு நன்றாகத்தானே இருக்கிறோம் என்பதை அப்படிச் சொல்லத் தோன்றியது எனக்கு மழை முன்பைவிட அடித்துப் பெய்யத் தொடங்கிவிட்டது. மழையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். வேறு யாருமே இல்லாமல் இப்படிப் பார்த்துக்கொண்டே இருக்கிறபோது, திடீரென்று யாருடனாவது மழையைப் பற்றிப் பேசவேண்டும் போலத் தோன்றும் அப்படித் தோன்றினவுடன், யாராவது பக்கத்தில் வந்து பேச ஆரம்பித்து விட்டால் எவ்வளவு நல்லது.

‘ராத்திரி முழுதும் விடாது போல’ என்று, ‘கொட்டு கொட்டுனு கொட்டுதே!’ என்று இப்படிச் சாதாரணமாக இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறவர்கள் போதும்!

வீரராஜுவுடைய அப்பா இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தன்னுடைய அப்பாவுக்கு மனநிலை சரியில்லை என்று வீரராஜ் ஒருபோதும் சொன்னதில்லை. ‘சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட காண்பிச்சு மருந்து கொடுத்துட்டு இருக்கோம்’ என்றுதான் சொல்வார். அந்த வார்த்தையே இந்தப் பக்கம் புதுசு. வீரராஜ் திடீரென்று ஒரு நாள் லீவு போட்டுவிட்டுப் போனார். ராத்திரி பத்து, பதினோரு மணி இருக்கும். இரண்டு கைப்பை களுடன் அவரைக் கூட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். தூக்கத்திலிருந்து முழித்த கண்ணுடன், இந்த அறையிருக்கிற மாடியிலிருந்து பார்க்கிறேன்.

ஆட்டோவிலிருந்து வீரராஜும் அவரும் இறங்கி நிற்கிறார்கள். “ரெண்டு, மூணு தடவை பெல் அடிச்சேன். ஊருக்குப் போயிட்டீங் சுளோனு நினைச்சேன். நல்லவேளை, இருந்தீங்க” என்று வந்தவுடன் சொன்னார்.

இடது ஓரம் இருக்கிற, அதிகம் வெளிச்சம் விழாத அந்த மாடிப் படிகளில் இரண்டு பேரும் ஏறி வருவதைப் பார்க்கும்போது, வீரராஜுடன் வருகிறவர் குடித்திருப்பாரோ என்பதுபோல இருந்தது. வரிசையான நாற்காலிகளில் உட்காருவதற்குத் தேர்ந்தெடுக்கிற இடத்தைப் பொறுத்து, குழந்தைகளை அணுகுவதை வைத்துச் சொல்ல முடிவதைப் போல, படிகளில் ஏறுகிற விதத்தைப் பொறுத்தும் ஒருவரைப் பற்றிச் சொல்லிவிடலாம் இல்லையா?!

“நல்லவேளை, அப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. சங்கிலியோட கட்டிப்போட்டு வெச்சிருந்தாங்க. எல்லோரும் அப்படியே கருகிப் போயிட்டாங்க. கண்றாவி!” – வீரராஜ் இதைச் சொல்லும்போதும் வீரராஜின் அப்பா பேசாமல்தான் இருந்தார்.

“ஒரு பத்து நாள் இங்கே இருக்கட்டும்னு தோணுது. நிலைமை கொஞ்சம் சரியாயிடுச்சுன்னா, மறுபடியும் அங்கேயே கொண்டுபோய் விட்டுடலாம்னு நினைக்கேன், வேறு வழியில்லை…” – பனியனைக் கழற்றுவதற்கு இரண்டு கைகளையும் உயர்த்திய நிலையில், ஒரு விநோத பொம்மை போலிருந்த வீரராஜிடமிருந்து முகமற்ற குரல் வந்தது.

வீரராஜ் அப்பா கட்டிலில் படுக்க ஒப்பவில்லை. கழிவறையை உபயோகிப்பதிலும் அவருக்குத் தயக்கம் இருந்தது. பின்பக்கமுள்ள வெற்றிடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் உட்கார்த்தி வைத்தபோது, சப்போட்டா பழமரத்தடியில் படுத்திருக்கிற பூனையை அவர் விரட்ட ஆரம்பித்தார்.

“பூனை போயிட்டுது. நீங்க ஒண்ணுக்கு இருந்துட்டு வாங்க..” என்று வீரராஜ் சொல்லும்போதும் அவர் திரும்பத் திரும்ப, “ச்சூ ச்சூ…” என்று இல்லாத பூனையை விரட்டிக் கொண்டிருந்தார். அவர் உடுத்தியிருந்த கட்டம் போட்ட சாரம் நனைய ஆரம்பித்திருந்தது.

வீரராஜுக்குச் சட்டென்று கோபம் வந்தது.

“உட்கார்ந்து இருங்கனு சொல்லுதேன்லா-” என்று கத்தினார். அடி விழுவதைத் தடுப்பது போலக் கையை உயர்த்திக் கொண்டு வீரராஜ் அப்பா நின்றார். மேலும் மேலும் அவர் உடுப்பு நனைந்து, காலின் வழியாக வடிந்தது.

“அப்படியே குப்புறப் புடிச்சுத் தள்ளிடுவேன்!” வீரராஜ் கத்தினார்.

“அதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு இங்கே கூட்டிட்டு வந்திருக்கணுமா? ஒரு சங்கிலியை வாங்கி, அங்கேயே ஒரு இடத்துல கட்டிப் போட்டிருக் கலாம், இல்லையா?” – நான் சொல்லி விட்டு, வீரராஜ் அப்பா பக்கம் போய் நின்றேன்.

“நீங்க உள்ளே போங்க… நான் பார்த்துக்கிடுதேன்…” நான் சொன்னது வீரராஜிடம் போய்ச் சேர்வதற்குள், வீரராஜ் அறைப்பக்கம் திரும்பி, இருட்டில் விழுந்து சிதறுகிறபடி எதையோ முணுமுணுத்தார்.

உயர்த்தின கை கொஞ்சம் கொஞ்சமா இறங்க, வீரராஜ் அப்பா நின்றார். பெட்டிக்கடைக்கு அருகில் கிடக்கிற, காய்ந்துபோன வாழைப்பழத்தார் மாதிரி இருந்தது – நான் தொட்ட அவருடைய கை, இடுப்பில் இருந்த துணி முற்றிலும் நழுவியிருந்தது.

ஒரு உலர்ந்த மரம் போல, இருட்டுக்குள் அவர் நின்று கொண்டிருந்தார். ஒரு வௌவால் மிகச் சுலபமாக அவரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளமுடியலாம். ஜவ்வு மாதிரி இறகுகள் முளைத்த நிலையை, நான் இப்போது அடைந்துவிட்டதாக எண்ணியே மேலும் அவரைத் தொட்டேன்.

அவர் என்னைப் பார்க்கவில்லை. ஆனால், நான் தொட்டதை உணர முடிந்தது அவருக்கு. வலது பின் தோளில் வைத்த கையை முதுகு முழுவதிலும் படர்த்தி, அவரது இடப்புறமாக வந்து நின்றபோது அவர் எதுவும் சொல்லாமல், முன்பக்கம் மட்டும் மறைக்கிறபடி துணியைச் சுருட்டிக்கொண்டு, அறையைப் பார்க்க என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

“உங்க வீட்டுல யாரும் இப்படி இருந்தாங்களா?” – வீரராஜ் தரையில் பாயை விரித்தபடி கேட்டார். சற்று நேரத்துக்கு முந்திய கத்தலுக்கான வெட்கம் இருந்தது குரலில்,

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஒரு விநாடி என்னையே அப்படிக் கற்பனை செய்து கொண்டேன். வீரராஜ் போல கதிரேசன் என்னைப் பார்த்துக் கத்துவானோ?

‘உங்களுடன் சண்டை போடுவது போலச் சொப்பனம் கண்டேன் என்று முன்பு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். ‘உங்கள் மீது எனக்கு நிறையக் கோபமுண்டு. இப்போது சற்றுக் குறைந்திருக்கிறது’ – சமீபத்தில் எழுதியிருக்கிறான். என்னுடைய பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன கடிதத்தில் இதையும் ஏன் எழுதியிருக்க வேண்டும். எழுதாமல் இருந்திருக்கலாம்.

கதிரேசனுக்கு மழைபார்க்க எல்லாம் நேரம் இருக்குமா? மழை பெய்யும்போது ஊர் ஞாபகம் எல்லாம் வருமா? என்னுடைய வேலை காரணமாக ஏழெட்டு ஊர் மாறினதற்கு இடையில், அவனுக்கு எந்த ஊர் ஞாபகம் மழை பெய்யும் போது வரும்?

ஒரு வெயில் பிளக்கிற ஊர் அல்லது அதன் பளீர் தெரு அல்லது ஊருக்கு வெளியே உள்ள மொட்டைக் கோபுரத்தில் நிற்கிற வெள்ளாட்டுக் குட்டி ஞாபகம் எல்லாம் வராது என்பது நிச்சயமா என்ன ?
இப்படி யோசிக்கிற இந்த விநாடியில் தண்டவாளங்களின் ஞாபகமும் அவுரிப் பூக்களின் ஞாபகமும் எப்படி எனக்கு வருகிறது? சின்னம்மை உடம்பை வாங்குவதற்குக் காத்திருந்த மார்ச்சுவரி ஞாபகம் ஏன் வருகிறது?

கிழித்துப் போட்ட சீட்டுக்கட்டுகள் – ஒரு துண்டில் ஆடுதன் ராணியின் சிவப்புத்தலை – எங்கிருந்து ஞாபகத்துக்கு வந்தது? மழைக்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமே இல்லை என்பதுதான் ஒரே சம்பந்தமா? வீரராஜ் அப்பா என்ன செய்கிறார் என்று அறைக்குள் பார்த்தேன்.

“இந்த ஒரு சன் டே மாத்திரம் அவரைப் பார்த்துக்கிடுங்க, ஊர் வரைக்கும் போயிட்டு வந்திருதேன். ஒரு கேதம் இருக்கு” என்று வீரராஜ் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனார். எனக்கு வீரராஜ் அப்பாவுடன் இப்படித் தனியாக இருப்பதில் ஒரு விருப்பம்கூட இருந்தது.

ஒரு மனநலக் காப்பகத்தின் அடுத்தடுத்த படுக்கை வாசிகள் நாங்கள் என்று நினைத்துக் கொண்டேன். டிரான்சிஸ்டரில் செய்திகள் கேட்கும் போது, அவர் என் பக்கம் வந்துவிட்டுப் போனார். அகில பாரத சங்கீத நிகழ்ச்சியின் சந்தூர் இசை அவரை ஒன்றும் செய்யவில்லை.

நான் காற்றுக்காகத் திறந்து வைத்திருந்த என் பக்கத்துச் ஜன்னல் கதவுகளைக்கூட அவரே சாத்தியபோது நான் எந்த மறுப்புப் சொல்லவில்லை. இன்னொரு நபருடனான வாழ்வில், மறுப்புக்கான அனுமதி இருவருக்குமே இல்லை என்ற யோசனையில் நான் இருந்தபோது அவர் தூங்கிவிட்டிருந்தார்.

நடு இரவில் மழைச்சத்தம் கேட்டுத்தான் விழித்தேன். ராத்திரி ஆரம்பித்த மழைதான் இன்னும் விடவில்லை. சம்பளம் வாங்கியதும் ஊருக்குப் போகும்போது மகமாயியிடம் மழையைப் பற்றிப் பேசலாம் வீரராஜ் அப்பாவைப் பற்றிப் பாதிதான் சொல்லியிருக்கிறேன். உடம்புக்குச் சரியில்லாதவர் என்று மட்டும்தான் என் தகவல்.

‘மூணு பேருக்கும் இடம் போதுமா?’ என்று மட்டும் மகமாயி கேட்டாள்.

‘வயசாளிக்கும் கைப்பிள்ளைக்கும் எவ்வளவு இடமிருந்தாலும் காணாது’ என்று அவளே மீண்டும் சொன்னாள்.

“எல்லாத்தையும் நீயே சொல்லி முடிச்சிரு. எனக்கு ஒண்ணும் பாக்கி வைக்காதே…”

“அவங்கவங்க சொன்னது அவங்க அவங்களுக்கு நீங்க இப்போ ஏதாவது சொன்னீங்க என்றால், அது உங்கள் பாக்கி. அவ்வளவுதான்!” – மகமாயி சொல்லி முடித்தாள்.

சரியாகத்தான் தோன்றியது. ரொம்பவும் நெருக்கமானவர்களிடம் அல்லது நெருக்கமான இடங்களில் வார்த்தைகள் நம்மையறியாத வெளிகளுக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன. அலுவலகக் கடிதங்களில் இது வாய்ப்பதில்லை!

பரசுராமன் சார் ஒரு தடவை தன்னுடைய கண்ணாடித் தடுப்பறைக்குக் கூப்பிட்டார். “இதை நீங்கள்தானே டிராஃப்ட் செய்தீர்கள்?” என்று கேட்டார். “மிகச் சுருக்கம், மிக நேர்த்தி. பாராட்டுக்கள்” என்று கைகொடுத்தார்.

புரட்டிப் பார்த்தால் பரசுராமன் சாரின் கைதான் இன்னும் உள்ளங்கையில் மோதிர அழுத்தங்களுடன் தங்கியிருக்கிறது. உள்ளங் கையைக் குவித்தும் விரித்தும் பார்க்கப் பார்க்க, ஒரு பறவை கூடுகட்டு வதற்குச் சுள்ளிகள் அடுக்கினது மாதிரி குறுக்குமறுக்குமாக ரேகைகள் மடங்கின.

எங்கோ நாய் குரைக்கிற சத்தம் கேட்டது.

வீட்டுச் சொந்தக்காரர்கள் கீழ்வீட்டில் இருக்கிறார்கள். டோனி என்பது அவர்கள் வளர்க்கிற பாமரேனியன் நாயின் பெயர். அநேகமாக அதை அவர்கள் கட்டிப் போடுவதில்லை.

இந்த மழையின் மீதிருந்த கவனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, முற்றிலுமாக நாய்க்குரைப்பின் மீது சென்றுவிட்டது. மழைத் தாரைகளின் ஊடே அந்தக் குரைப்பு தெறித்துக் கொண்டிருக்க, சங்கிலிக் குலுங்கலும் கழுத்துப் பட்டையுமாக அது இருக்கிற திசையைப் பார்வை தேட ஆரம்பித்து விட்டது.

இரண்டு ஆட்டோக்கள், சினிமாச் சுவரொட்டி ஒட்டப்பட்ட மருதமரம், உட்கார்ந்து புத்தகம் வாசிக்கிற அண்ணா சிலை, அதற்கு அப்புறம் என்று மாடியிலிருந்தே அந்தச் சத்தத்தைக் கண்டு பிடித்து விடும் விளையாட்டில் இறங்கிவிட்டேன்.

கனத்த சங்கிலியின் தேய்வும் குரைப்புமாக அது மழையைவிட அடர்த்தியாகிக்கொண்டு வந்தது. வளர்த்தியும் சதையுமாக இருக்கிற ஒரு நாயின் ஊளையாகவும் குரைப்பாகவும் மாறிமாறி இடம் பெயர்ந்து துரத்தியதில் மழை கடிபடாமல் தப்பித்து விலகி விலகித் தரையில் விசிறி ஓடியது. சிவந்த வாதாம் இலை, பாலிதீன் பைகள் எல்லாம் தன்வசமற்று மிதந்து நகர ஆரம்பித்திருந்தன.

வீரராஜ் அப்பா அறைக்குள் தரையில் உட்கார்ந்து இருந்தார். அன்றன்றைக்கு மீந்து போகிற சில்லரைகளை நான் போட்டு வைத்திருக்கிற அகன்ற பீங்கான் கிண்ணத்தை அவர் கீழே கொட்டிக் கொண்டு அதை நாணயவாரியாகப் பிரித்து, சிறு தூண்களாக அடுக்கியபடி இருந்தார்.

அவ்வளவு முதிர்ந்த மனிதர் ஒருவர், எந்த நோக்கமும் இன்றி இப்படிச் சில்லறை நாணயங்களை அடுக்கிக்கொண்டு உட்கார்ந் திருக்கிற விதம், இந்த விடாத மழை, தொடர்ந்த நாய்க்குரைப்பு, தரையில் இழுபடுகிற சங்கிலிச் சத்தம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் உண்டா? எந்த நேர்க்கோட்டில் இவை எல்லாம் வருகின்றன? ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகலின் நகரும் கடிகார முட்களுக்கிடையில், இவற்றின் நகராத தன்மைகள் எதைத் தீர்மானிக்கின்றன.

வீரராஜ் அப்பாவுக்குத் தேநீர் பிடிக்கும் வேண்டுமா என்று கேட்ட போது அவர் ஒரு தடவைகூடத் தேநீரை நிராகரித்ததில்லை. இரண்டு பேருமாகத் தேநீர் சாப்பிடலாம் என்று தோன்றியது.

புத்தக மூலையை மடித்து வைப்பது போல, மூன்றாவது வீடுவரை நாய்க் குரைப்பை அடையாளம் வைத்துவிட்டுப் பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருந்தேன்.

வராந்தாவில் செருப்புகளின் பூஞ்சான் வாடை அடித்தது. வீரராஜ் அப்பாவைத் தாண்டிப் போகும்போது, விளையாட்டுப் போல, ஒரு சிறு தூணாக நின்ற இருபத்தைந்து பைசா நாணய அடுக்கைத் தூக்கிப் பீங்கான் கிண்ணத்தில் போட்டேன். வீரராஜ் அப்பா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மறுபடியும் அதைத் தரையில் கொட்டி அவர் அடுக்க ஆரம்பித்தபோது, நான் பால், தேயிலைத்தூள் மற்றும் சர்க்கரையுடன் ஸ்டவ் முன்னால் போயிருந்தேன்.

தேநீர் காட்டமாகவும் சரியாகவும் வாய்த்திருந்தது. எவர்சில்வர் டம்ளர்களைவிட பீங்கான் கோப்பைகளில் தேநீர் பருகுவது உசிதமானது என்று தோன்றியது. கோப்பைகளைத் தேடினேன். கழுவிய பிறகும் பாச்சை வாசம் அடித்தது. சரி என்று எவர்சில்வர் டம்ளர் களிலேயே இரண்டாகப் பகிர்ந்துகொண்டு முன் அறைக்கு வந்தேன், சில்லறை அடுக்குகள் மட்டுமே இருந்தன.

வீரராஜ் அப்பாவைக் காணோம். சிறுநீர் கழிக்க மொட்டை மாடிக்குச் சென்றிருப்பாரோ என்று போனேன். போகும்போதே, மொட்டை மாடியில் இருந்து அவர் குதித்திருந்தால் என்ன ஆகும் என்ற பதைப்பு உண்டாயிற்று.

மேலும் இரண்டிரண்டு படியாகத் தாவியேறினால், மொட்டை மாடி முழுவதும் நனைந்து கிடந்தது. கொடியில் முந்தின தினத்தில் உலர்த்தின துணிகள் மேலும் நனைந்திருந்தன. ஒரு பனியன் சொத்தென்று கீழே விழுந்து கிடந்தது. தென்னங்கீற்றின் சருகுகள் வடிகாலை அடைத்துக் கொண்டிருந்தது. பற்பசை வெற்று டப்பா மிதந்து திரும்பியது.

வீரராஜுக்கு நான் பதில் சொல்ல அவசியமாகிவிட்டது என்று தோன்றியது. அவருடைய அப்பாவைத் தேடிக் கீழே இறங்கினேன். படிக்கட்டில் நேற்றிரவு போட்ட விளக்கு அணைக்காமல் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் கை இழுபடுகிற அவசரத்திலும் மழைப்பாசி வாசம் சுவரில் இருந்து கிளம்பியது. அதன் கரும்பச்சைக்குள்ளிருந்து வீரராஜ் அப்பா வந்துவிட மாட்டாரா என்று தோன்றியது.
இரும்புக் கதவை திறக்கும்போது மருதாணிச்செடி அசைந்தது.

தரையோடு தரையாக உட்கார்ந்து எடுத்த புகைப்படம் போலத் தெரு முற்றிலும் நனைந்து கிடந்தது. கடைசி வரை தெரிய முடிவது போல எந்த நடமாட்டமும் இன்றி தெரு திறந்து கிடந்தது.

நான் கிட்டத்தட்ட ஓட ஆரம்பித்தேன். எவ்வளவு முயன்றாலும் வீரராஜ் முகம்தான் அவருடைய அப்பா முகத்தைக் காட்டிலும் ஞாபகத்துக்கு வந்தது.

சற்று நேரத்தில் அந்தக் குரைப்பு நின்றுவிட்டிருந்ததை முதல் முறையாக உணர முடிந்தது.

சிவப்பு ஓடுகளும் பலாமரங்களும் உள்ள அந்த வீட்டிலிருந்து வீரராஜுவின் அப்பா வெளியேறிக் கொண்டிருந்தார்.

அவிழ்த்துக் கையில் வைத்திருக்கிற சங்கிலியும் நாயுமாக அவர் எங்கள் அறையைப் பார்க்கத் திரும்பிவர ஆரம்பித்தபோது, மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

– ஆனந்த விகடன் (13.04.2003)

Print Friendly, PDF & Email
வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *