பூவும் புயலும்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 5,962 
 
 

அலுவலகம் செல்ல தயாராக இருந்த கணேஷ் சட்டென்று நெற்றியை நெருக்கி, முகத்தைச் சுருக்கி, பொட்டுக் குழியை அழுந்த பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.

பார்த்த அவன் மனைவி மகேஸ்வரிக்குச் சொரக்கென்றது.

“என்ன…? !” பதறியபடி ஓடி வந்தாள்.

“த….தலைவலி..!” முணகினான்.

“தலைவலின்னா உங்களுக்குத் தாங்காதே..!” படபடத்தாள்.

ஆமாம். கணேசுக்குத் தலைவலி தாங்காது. துடித்துப் போய்விடுவான்.

மகேஸ்வரி மணியைப் பார்த்தாள். 8.35.

அவன் அலுவலகம் செல்ல வேண்டும். அப்படியே இவளையும் கொண்டு வேறொரு அலுவகத்தில் விட வேண்டும்.

“என்ன செய்யப் போறீங்க..?”கேட்டாள்.

“வேலைக்குப் போக முடியாது. விடுப்புதான் எடுக்கனும் மகேஷ் !”நெற்றியைப் பிடித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் சொன்னான்.

“என்னைக் கொண்டு விடனுமே…!”

“முடியாது மகேஷ். நீ பேருந்துல போயிடு..”\

“நீங்க விடுப்பு கொடுக்க வரலையா..?”

“நான் போன் பண்ணிடுறேன்.”

“சரி. மருந்து, மாத்திரை..?”

“பக்கத்துல இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிக்கிறேன்.”

‘தானும் விடுப்பு எடுத்து கணவனைக் கவனிக்கலாம். ஆனால் முடியாது. நேற்றே செய்ய வேண்டிய ஒரு முக்கிய வேலையை இன்று செய்யலாமென்று தள்ளி வைத்து வந்தாகி விட்டது. இன்று முடிக்கவில்லை என்றால்… அதிகாரி கோபித்துக் கொள்வார். நிலைமை சங்கடம் !’என்று நினைத்த மகேஸ்வரி…

“சரி. பத்திரமா. இருங்க. நான் சாயந்தரம் வந்து பார்த்துக்கிறேன். வேலைக்காரி வந்தாள்ன்னா அவள் வேலையை மட்டும் செய்யட்டும். என் வேலை பாரத்தைக் குறைக்க வேறு எந்த வேலையும் பார்க்க வேணாம். வென்னீர் வேணும்ன்னா கொஞ்சம் போட்டுக் கொடுக்கச் சொல்லி பிளாஸ்க்ல வாங்கி வைச்சுக்கோங்க.”என்று சொல்லி மடமடவென்று கிளம்பி சுறுசுறுவென்று வீட்டை விட்டு வெளியேறினாள்.

பேருந்து கூட்டத்தில் கசங்கிப் போய் அலுவலகத்தில் விழுந்து, முதல் வேலையாய் அந்த முக்கிய வேலையைப் பரபரவென்று ஒரு மணி நேரத்தில் முடித்தாள்.

அதை எடுத்துக் கொண்டு அதிகாரியிடம் சென்றாள்.

அவரும் திருப்தியாய்த் தலையாட்டி நிமிர்ந்தார்.

“இன்னைக்கு விடுப்பு வேணும் சார்…”

“என்னம்மா திடீர் விடுப்பு..?”

“கணவருக்குத் திடீர் தலைவலி. தாங்க மாட்டார். அவர் விடுப்பு. விட்டுட்டு வந்திருக்கேன். சமைக்கலை,. சமைக்கனும். இந்த வேலையை முடிச்சிக் கொடுக்கத்தான் விடுப்பு சொல்லாமல் வந்தேன் சார்.”

அவள் பொறுப்பை உணர்ந்த அவர்…

“சரி. அரை நாள் விடுப்பெழுதி கொடுத்துட்டு உடனே புறப்படு !” என்றார்.

“நன்றி சார்”

பத்து நிமிடத்தில் அலுவலகம் விட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றாள்.

மணியைப் பார்த்தாள்.

‘இன்னும் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ! வெறுப்பாய் நின்றாள்.

சே,,! இரண்டு பேர் சம்பாத்தியத்தில் யாரும் யாரையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இப்படி திடீரன்று ஒருவருக்கு வந்துவிட்டால் எதுவுமே செய்ய முடிவதில்லை. தத்தம் வேலைகளைத் தாங்களேப் பார்த்துக் கொண்டு ஓடுவதற்குத்தான் நேரம் காலம் சரியாக இருக்கிறது. கணவனுடன் ஆசையாய் ஒரு வார்த்தை பேச முடிவதில்லை. குழந்தைகளிடம் கொஞ்ச முடிவதில்லை. அவரும் மனைவி மக்களிடம் மனம் விட்டுப் பேச, கொஞ்ச முடிவதில்லை. பொருளாதாரம் வசதியாக இருந்தாலும் கணவன், மனைவி, குழந்தைகளுக்குள்ளான பாசம் நேசங்கள் விட்டுப் போகிறது.

இது இயந்திரத்தனமான வாழ்க்கை.!!

காலையில் எழுந்து வாசல் தெளித்து, கோலம்போட்டு, காபி போட்டு , டிபன் செய்து, மதியத்திற்கும் சமைத்து, முடித்து எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் பள்ளிக்குக் கிளப்பி……

ஏ … அப்பா ! மூச்சு விடநேரமிருக்காது.

“மகேஷ்..!” என்று கணேஷ் அழைத்தால் ஏனென்று கேட்க முடியாது.

குழந்தை” அம்மா..!” என்று அலறினாலோ, அழைத்தாலோ ஓடிப்போய் ஆசையைத் தூக்கி அரவணைத்து ஆசுவாசப் படுத்த முடியாது.

அவர்கள் கொஞ்சம் முரண்டு செய்தாலும்…

“ஏய்… ! என்ன அடம், விளையாட்டு. சீக்கிரம் கிளம்பு !” என்று துரத்த வேண்டும். அவசரத்தில் கையைச் சுட்டுக்கொண்டாலும், காலை சுட்டுக் கொண்டாலும்” அய்யோ ! அம்மா” என்று கத்த முடியாமல், வேலையை முடித்து , அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு, அள்ளிச் சொருகிக் கொண்டு கணவனுடன் ஓட வேண்டும்.

மாலையில் அலுவலம் விட்டு வந்தும்… அலுத்து, சலித்து உட்கார, படுக்க முடியாது. உடம்பு களைத்திருந்தாலும், மனசு சளித்தாலும், சோர்வாக இருந்தாலும், காலையில் போட்டது போட்டது மாதிரி கிடப்பவைகளை எடுத்துக் போட்டுக் கொண்டு தேய்க்க வேண்டும். இரவு சமைக்க வேண்டும். படுக்க வேண்டும். இதில் கணவன் தொட்டால் மனசு ஒன்றாமல் உடன்படவேண்டும்.

குடும்பத் தலைவிக்குத்தான் இவ்வளவு அல்லலென்பது இல்லை. தலைவனுக்கும் அல்லல். காலையில் எழுந்து பால் வாங்கி, முக சவரம் செய்து, வீட்டிற்குத் தேவையான மளிகை, காய்கறிகள் எல்லாம் வாங்கிப் போட்டு..காலை மாலை பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து….பெண் அளவிற்கு ஆணுக்கும் வேலை !!

இதில் எங்கே கணவனும் மனைவியும் அனுசரணையாய் இருப்பது..?

பெரு மூச்சு விட்டாள்.

பேருந்து வர… ஏறி அமர்ந்தாள்.

மனைவி வேலைக்குப் போகக்கூடாது. வீட்டிலிருந்து கொண்டு கணவன், குழந்தைகளுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். கட்டியவனுக்குத் தலைவலியா..? வலிக்கும் இடத்தில் தைலம் தேய்த்து நீவி விட வேண்டும். குழந்தைகளுக்கு அவசரப்படாமல் அன்பாய், பண்பாய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். கணவன் குழந்தைகளுக்கு நல்ல தாயாய், தந்தையாய், தாரமாய், தோழியாய் இருக்க வேண்டும்.

மகேஸ்வரி பேருந்தை விட்டு இறங்கி அவசர அவசரமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

வாசல் கதவைத் தட்டப் போனவள் கை சட்டென்று நின்றது.

வாசலை ஒட்டிய படுக்கை அறையில்… செல்லச் சிரிப்பு, சிணுங்கல்… உள்ளே பேச்சு.

“ஏன் லதா லேட்டு.?”

“இன்னைக்கு அம்மா போய்த்தானே வரச் சொன்னீங்க. அதான் கொஞ்சம் தாமதமா வந்தேன். அப்புறம் அம்மாவை எப்படி தனியே அனுப்புனீங்க..?”

“அதுவா..? அலுவலகம் கிளம்பி தலையை வலிக்குதுன்னு பொய்யாய் நடிச்சி அப்படியே உட்கார்ந்தேன்.’என்னால் அலுவலகம் போக முடியாது. நான் விடுப்பு. நீ கிளம்பி போ !’ சொல்லி அனுப்பினேன். இருந்தாலும் மகேசுக்கு என் மேல ரொம்ப கரிசனம் தெரியுமா..? எனக்கு ஒன்னுன்னதும் துடிச்சுப் போய்ட்டாள்; உடம்பு அலுவலகத்தில் இருந்தாலும் அவள் மனசு நினைப்பெல்லாம் இப்போ என் மேலதான் இருக்கும். தாயாய், தாரமாய்த் துடிச்சிக்கிட்டிருப்பாள். !” நிறுத்தினான்.

கள்ளத்தனம். !

மகேஸ்வரிக்குள் சட்டென்று உடலும் உள்ளமும் தீப்பிடித்து எரிந்தது.

‘பாவி ! பொய்யாய் நடிச்சி, வேலைக்காரியோட சல்லாபம். ! நான் அங்கேயிருந்து துடிச்சு வந்தால் இங்கே தலையில் கொள்ளி, அநியாயம். !” ஆத்திரம் தலைக்கேற கதவைப் படபடவென்று தட்டினாள்.

கணேஷ்தான் அவசரமாக வந்து கதவைத் திறந்தான்.

மனைவியை பார்த்த அதிர்ச்சியில் முகத்தில் பேயடித்தது. உடல் வியர்வையில் நனைந்தது.

அறையில் இருந்த லதா உறைந்து நின்றாள்.

மகேஸ்வரிக்கு ஆத்திரம் இன்னும் தலைக்கேற…

“ரெண்டு பேரும் மொதல்ல வெளியே போங்க ..”புயலாய்க் கத்தினாள்.

லதா அவசர அவசரமாக வெளியேறினாள்.

“ம…மகேஷ் !” கணேஷ் மெலிதாய் முனகினான்.

“எதுவும் பேசவேணாம். என்ன சொன்னீங்க…? தாயாய், தாரமாய் தவிச்சிக்கிருப்பேன்னுதானே.. ! தாரமாய் அப்படித்தான் தவிச்சு வந்தேன். இப்போ தாயாய் மாறி இருக்கேன். அவள் பின்னாடி நீங்களும் வெளியே போங்க..” என்று அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தியவள்… திறந்து…

“இந்தா ! இதையும் எடுத்துக்கிட்டுப் போ. மீறி தகராறு பண்ணினே.. கூப்பாடு போட்டு அக்கம், பக்கத்தைக் கூட்டி உன்னை நாறடிச்சுடுவேன்.” கத்தி தாலியைக் கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்து கதவைச் சாத்தினாள்.

கணேஷ் அடுத்து பேச வாயின்றி மெல்ல நடந்து வாயிற்படியைத் தாண்டினான்.

பூவும் புயலானதைக் கண்டு தன் மதிப்பிழந்து கீழே கிடந்த தாலி அவனைப் பார்த்துக் கேவலமாகச் சிரித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *