எண்.150 ஜாம்பியா, எண்.264 அமெரிக்கா,எண்.125.கென்யா..எண்.194.இந்தியா.. அமெரிக்க நாட்டில் நடை பெற்றுக்கொண்டிருந்த உலக அதெலெட் போட்டியில் அறிவிப்புகள் சொல்லிக் கொண்டு வர அறிவிக்கப்பட்ட நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் ஒவ்வொருவராய் அந்த பந்தய மைதான வரிசையில் வந்து நின்றனர். ஒவ்வொரு நாட்டு வீராங்கனைகளும் பந்தய தொடக்க புள்ளி இடத்தை அடையும் போது சுற்றி இருந்த அவரவர்களின் நாட்டு இரசிகர்கள், தங்கள் நாட்டு கொடியை காட்டி ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். அந்த வீராங்கனைகளும் அவர்களை பார்த்து கை அசைத்து கரகோஷத்தை ஏற்றுக்கொண்டனர்.
எண்.194 இந்தியா அறிவித்தவுடன் மைதானத்தில் இறங்கிய பிந்துவுக்கு இரசிகர்கள் காட்டிய உற்சாகமும், கொடி அசைப்பும் அவளை உயிர்ப்பித்தது. அவர்களை நோக்கி கை அசைத்துகொண்டே தனக்கு ஓடுவதற்கு அமைக்கப்பட்ட ஓடு பாதையின் தொடக்க புள்ளியின் இடத்தில் போய் நின்றாள்.
அரங்கம் அமைதியானது. பத்து பேர் மைதானத்துக்குள் ஓடுவதற்கு தயாராய் நின்று கொண்டிருந்தனர். அரங்கம் உறங்கிய அமைதியில் மைதானத்தில் அவர்களின் ஓட்டத்தை காண ஆவலாய் இருந்தது.
பிந்துவின் மனநிலை !
பொம்பளை புள்ளைக்கு எதுக்கு படிக்கற செலவெல்லாம் ! ராசப்பன் மனைவி அருக்காயிடம் வள்ளென்று விழுந்தான்.அருக்காயி எதுவும் பேசவில்லை. எது பேசினாலும் அடிப்பான், அதுவும் கையில் கிடைத்ததை கொண்டு அடிப்பான். பல்லை கடித்து அப்படியே பேச வந்ததை விழுங்கினாள். அம்மாவின் நடவடிக்கைகளை மூக்கில் ஒழுகும் சளியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பூசாணி.
முணு முணுத்துக்கொண்டே வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்த ராசப்பன் சட்டைப்பையில் துழாவி எடுத்த பீடியை வாயில் வைத்தவன், ஏய் ..எருமை மாடு.. உள்ளே பார்த்து சத்தம் போட்டான். அவனின் சத்தம் பூசாணியை மிரள செய்து அம்மாவிடம் ஒண்டிக்கொண்டாள். அருக்காயி எதுவும் பேசாமல் வெளியே வந்து அவன் முகத்தை பார்க்க வத்தி பெட்டி எடுத்தா… அங்கன இருந்தே கேட்டா என்ன? இங்க வந்து நான் ஒருக்கா சொல்லி போய் எடுத்தாருவாளாம்மா…சத்தமாய் முணு முணுக்க.. அங்கிருந்தே கேட்டாலும் திட்டுவான், ஏன் தொரசாணிக்கு இங்க வந்து கேட்டா ஆகாதோ? மனதில் நினைத்துக்கொண்டவள் பல்லை இறுக்கி கொண்டு வத்திப் பெட்டியை கொண்டு போய் அவனருகில் வைத்து விட்டு திரும்பினாள்.
ஏய் நில்லு இங்க பாரு, வருசத்துக்கு பத்து ரூபாய் கையில கொடுத்துடுவாங்க, அப்ப அப்ப துணி மணி எடுத்து கொடுத்துடுவாங்க, மூணு வேளைக்கும் சோத்தையும் போட்டுடுவாங்க, நான் சொல்றைதை கேக்கறியா? பேசாம அவளை தோட்டத்து மாரியப்பன் கிட்ட விட்டுடலாம். புரியுதா, பீடியை நன்றாக இழுத்து புகையை வெளியே விட்டவன் ஆகாயத்தை பார்த்து கனவுலகில் பேசுபவன் போல இப்ப போனா கையில அஞ்சு ரூபாயாச்சும் கொடுத்துடுவான்,
இவளை அங்க கொண்டு போய் விட்டுட்டு மிச்சத்தை வாங்கிக்கலாம். ..சொல்லிக்கொண்டே போனான்.
அவனை கோபத்தில் விழித்து விட்டு சட்டென உள்ளே சென்ற அருக்காயியை பார்த்து கெட்ட வார்த்தைகளை வீசியவன், இந்தா பாரு நான் இப்ப போயி தோட்டத்து மாரியப்பன் கிட்டே பேசி பணத்தை வாங்கிட்டு வந்துடுவேன், உன் புள்ளையை சரி பண்ணி ரெடியா இரு.. சட்டென திண்ணையிலிருந்து வேகமாய் வெளியே கிளம்பினான்.
அவனுக்கு அவசரமாய் பணம் தேவைப்பட்டது. போன வாரம் சீட்டாட்டத்தில் மணியிடம் இரண்டு பெரிய நோட்டை கடன் வாங்கி விளையாண்டு அவனிடமே விட்டுவிட்டான். பணத்துக்கு பணமும் போய் கடனை கேட்டு விரட்டினான் மணி. எப்படியும் பூசாணியை தோட்டத்து மாரியப்பன் கிட்டே தள்ளி விட்டு பத்து ரூபாய் கிடைச்சா, கொஞ்ச நாளைக்கு சீட்டு விளயாட பணம் தட்டுப்பாடு வராது. இந்த எண்ணம் மேலோங்க, தன்னுடைய நடையை தோட்டத்து மாரியப்பன் வீட்டு பக்கம் துரிதப் படுத்தினான்.
அருக்காயி உள்ளே சென்றவள் முடிவு செய்து விட்டாள். அவளுக்கு பூசாணி படிப்பு, வாழ்க்கை முக்கியம். இவளை கர்ப்பத்திலேயே கொல்ல வந்த குடும்பம் இவனது குடும்பம், பொம்பளை புள்ளை எதுக்கு? பொம்பளை புள்ளை பெத்தா, இவன் அம்மா மருத்துவச்சியிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்ததை பக்கத்து வீட்டு முனியம்மா இவளிடம் சொல்ல இவள் டவுனுக்கு ஓடி அங்கிருந்த அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் சொன்னாள்.
அந்த பெண்ணும், இவளை அங்கேயே தங்க ஏற்பாடு செய்து நல்லபடியாய் பூசாணியை பெற்று கொடுத்தவள், ராசப்பனையும், அவன் அம்மாளையும் அழைத்து மிரட்டி ஏதாவது ஏடாகூடம் பண்ணுனே போலீசில புடிச்சு கொடுத்திடுவோம். இந்த மிரட்டலில் பயந்து போன இருவரும் இதுவரை பேசாமல் இருந்தனர். நல்ல வேளை அடுத்த இரு வருடங்களில் அவன் அம்மாள் போய் சேர்ந்து விட இவள் ஆறு வருடம் எப்படியோ வளர்த்து இதா, இந்த வருசம் ஸ்கூலுல சேத்துடலாம் அப்படீன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது….!
டவுனுக்குள் பஸ்ஸை விட்டு இறங்கிய அருக்காயி அந்த நகர பரபரப்பை கண்டு மிரண்டு போய் நின்று வேடிக்கை பார்த்த பூசாணியை தர தர வென இழுத்துக்கொண்டு அன்று தனக்கு இவளை பத்திரமாய் பெற்று தர உதவி புரிந்த ராஜேஸ்வரி நர்ஸ் வீட்டுக்கு விரைந்தாள்.
ஒரு மாதம் ஓடியிருந்தது, நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா அருக்காயி !
கவலையுடன் கேட்டாள் நர்ஸ் ராஜேஸ்வரி. ஆமாம் என்னால இவளை வளர்த்த முடியாது, இவ நல்லா வாழனும், நல்ல படிப்பை இவளுக்கு கொடுக்கணும், இதெல்லாம் சத்தியமா எங்கிட்ட இருந்தா என்னால முடியாது, என் வூட்டுக்காரனும் இதை நல்லபடியா வளர விடமாட்டான். நீங்கதான் எப்படியாவது இவளை யார்கிட்டேயாவது கொடுத்து நல்லபடியா படிக்க வச்சு வளத்தறதுக்கு ஏற்பாடு பண்ணி தரணும்.
நீ என்ன பண்ணுவே ?
என்னை பத்தி கவலைப்படாதீங்க, மறுபடி ஊரு போய் பிழைச்சுக்குவேன்.
உன் புருசன் ஏதாவது பண்ணுனான்னா?
பூசாணி எங்கிட்டே இல்லேண்ணா அவனால என்னைய என்ன பண்ண முடியும் ?
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று ரவுண்டு ஓட்டங்களில் பிந்து கூட்டத்தில் நான்குக்கும் ஐந்துக்கும் இடையில் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க…இறுதி சுற்று…
எதிரே யாரோ நின்று கொண்டு அவளை அழைப்பது கண்ணுக்கு தெரிகிறது. அந்த விழிகளில் தெரிந்த ஆர்வம்..வா..வா..கைகளை விரித்து இவளை அழைக்க, அவள் ஓட்டத்தை விரைவு படுத்த ஆரம்பித்தாள்….. கலைந்த தலையாய், கிழிசலான சேலையுடன்..கண்களில் மட்டும் ஒளி வெளிச்சமாய் அந்த பெண்..இவளை நோக்கி பூசாணி, வா..வா..அவளை இரு கைகளை ஏந்தி கூப்பிட்டுக்கொண்டே இருக்கும் பெண்ணை நோக்கி……
அம்மா…………கண்களில் நீர் வழிய அம்மாவை நோக்கி ஓடி ஓடி அந்த எல்லைக்கோட்டை கடக்கிறாள் பூசாணியாய்…
மண்டியிட்டு தலை கவிழ்ந்து அம்மா அம்மா என்று அழுது கொண்டிருந்த அவளை தொட்டு தூக்கி இந்தியா முதலாவதாக வந்து தங்க பதக்கத்தை பெற்றுவிட்டது. இந்த அறிவிப்பு அந்த அரங்கத்தில் ஒலிக்க……தேசியக்கொடியுடன் இரசிகர்கள் ஆர்ப்பரிக்க..
பிந்து பூசாணியாய் பெற்ற அம்மாவை நினைத்து, அவளை வளர்த்த அப்பா அம்மாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறாள்..!
அதே நேரத்தில் அவளது பிறந்த ஊரில் காலையில் இறந்து போன அருக்காயியை சுற்றியுள்ளோர் கொண்டு போய் எரித்து விட்டு குடிசைக்கு வந்த போது இராசப்பன் ஒரு தொல்லை ஒழிந்தது என்று வீட்டுக்குள் உட்கார்ந்து சாராயத்தை குடித்துக் கொண்டிருந்தான்.