பூங்காவனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 9,796 
 
 

“தலைல அடி பட்டிருக்கு ; அபாயம் தாண்டினாலும் ட்ரீட்மென்டுக்கு கவர்மென்ட் ஆசுபத்திரி சரியில்லை. ப்ரைவேட் தான் போகணும். ஒரு லட்சம் வரைக்கும் செலவாகும்”

டாக்டரின் பேச்சு இடி போல இறங்கியது பூங்காவனத்தின் காதுகளில். ஒரு லட்சம்! பணம் என்றதும் சேட் சோஹன்லால் தான் நினைவுக்கு வந்தான். உடனேயே உடலை மேயும் அவனது காமக் கண்களும் நினைவுக்கு வந்தது. கவர்மெண்டு இன்சூரன்சு இன்னும் அவள் கிராமத்துக்கு வரவில்லை. இருந்தாலும் அது ஆபத்துக்கு உதவுமா தெரியவில்லை.

கண்களை மூடிப் படுத்திருந்த காளியனைப் பார்த்தாள். நல்ல உயரம். உருண்டு திரண்ட கரு கரு தேகம். முறுக்கிய மீசை. ஆனால் பாவம் ஒரு சஹாயமில்லாத குழந்தை போலப் படுத்திருந்தான்.

காளியன் விஷக்கடி வைத்தியன். பாம்பு, தேள், நண்டுத்தெரக்கான், பூரான், வெறிநாய் கடி என்று எல்லா விஷங்களுக்கும் வைத்தியம் பார்ப்பான். கிராமப்புறம் என்பதால் அவன் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது. நேற்று ஏதோ வேலையாக டவுன் பக்கம் போனவனை சாயந்திரம் இரண்டு பேர் கொண்டு வந்து வீட்டில் விட்டார்கள். கார் மோதி கீழே விழுந்து விட்டானாம்.

சரியாகிவிடும் என்று நினைத்தால் ராத்திரியில் தலை வலிக்கிறது என்றான். வாந்தி எடுத்தான். மிகவும் பயந்த பூங்காவனம், பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் அவனை டவுன் ஆசுபத்திரியில் சேர்த்தாள் . இதோ இப்போது தான் எல்லா டெஸ்டும் எடுத்து முடித்து டாக்டர் சொல்கிறார் ‘பிரைவேட்’ போகணுமாம்.

வேறு வழியில்லை. சேட்டிடம் தான் போக வேண்டும். வீட்டுப்பத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு லட்சம் கடன் கொடுக்க அவனுக்கு மட்டும் தான் முடியும் கிராமத்தில். ஆனால் அவனது நடவடிக்கைகள் இவளுக்குப் பிடிக்காது. இப்படித்தான் போன வருஷம் இவள் ச்நேஹிதி லச்சுமிக்கு ஒரு அவசரம் நேர்ந்தபோது அவளும் சேட்டிடம் போனாள். அவன் அவளுக்கு உதவி செய்ய கேட்ட வட்டி அவளுடன் ஒரு இரவு! இப்படிப்பட்ட ஆளிடம் போய் எப்படி உதவி கேட்பது? ரொம்ப யோசித்து ஆனது ஆகட்டும் என்று பத்திரத்தை எடுத்துக் கொண்டு சேட்டுக் கடைக்குச் சென்றாள்.

சேட்டு, ஹாயாக சாய்ந்த மாதிரி உட்கார்ந்து கொண்டு ஏதோ ஹிந்திப் பாட்டுக் கேட்டுகொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தான். லைட் ஸ்விட்ச் போட்டது போல சட்டென்று அவன் கண்களில் காமம் மிளிர்ந்தது.

இது அசந்தர்ப்பம் என்றாலும், இங்கே பூங்காவனத்தின் அழகைப் பற்றி ஒரு சில வரியாவது சொல்லித்தான் ஆகவேண்டும். பூங்காவனம் மாநிறம். உருவி விட்டது போன்ற தேகம். நீண்ட அடர்த்தியான கூந்தல். அவள் உடல் வாகுக்கு கண்ணைக் குத்தும் இளமைகள். ஒரு நாட்டியம் போல நடப்பாள். பார்த்த மாத்திரத்தில் காமம் எழவில்லை என்றால் பார்த்தவர் மேல் சந்தேகம் தான் வரும்.

சேட்டு அந்த சந்தேகத்துக்கு இடமே வைக்கவில்லை. அவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்தான். அவன் கண்கள் இங்கு தான் என்றில்லாமல் வரைமுறையின்றி அவள் உடம்பில் மேலும் கீழும் மேய்ந்தது. சில இடங்களில் நின்று நிதானித்தது. சில இடங்களில் ஊடுருவியது.

பூங்காவனம் கூசினாள்.

“என்ன வனம்! எங்க இவ்ளோ தூரம்? எதுனாச்சியும் ஹெல்ப் ஒணுமா?”

“ஆமா சேட்டு! என் புருசனுக்கு ஆக்சிடெண்டு ஆயிரிச்சி. ஆசுபத்திரில சேத்துருக்கு. தலைல அடி. ப்ரைவேட்டுல போகணுமாம். செலவு ஆவுமாம் ஒரு லட்சம் வரைல. அதான் இந்த வீட்டு பத்திரத்த வெச்சு ஒதவி கேக்கலாம்னு வந்தேன்” பூங்காவனம் ஒருவாறு சொல்லி முடித்தாள்.

“ ஐயோ பாவம் காளியன்! கேக்கவே கஷ்டமா இருக்கு. ஆனா லச்சத்துக்கு எங்க போவறது வனம்?” என்று சேட்டு எங்கோ பார்த்தவாறு சொன்னான்.

“சேட்டு! ஒன்னிய நம்பித்தான் வந்தேன். என்னிய கை வுட்ராதே” என்று பூங்காவனம் அவன் கால்களில் விழுந்தாள்.

“ஏய் வனம்! இன்னாதிது? எந்திரி” என்று சொல்லி சோஹன்லால் அவள் புடவை மறைக்காத இடுப்பை இரண்டு கைகளாலும் பற்றித் தூக்கினான்.
பூங்காவனம் உடல் கூசியது. சேட்டு அவள் கண்களில் பார்த்தான்.

“அவசரம்னா டவுன் போய் நம்ம தோஸ்து கிட்ட வாங்கித் தர்றேன். நீயும் கூட வா. வேலைய முடிச்சிரலாம்” என்று இரண்டு பொருள் பட பேசினான்.

அவளுக்குப் புரிந்து விட்டது. புரிந்து தானே வந்திருக்கிறாள்! தீனமாக தலையை ஆட்டினாள். சேட்டு பத்திரத்தை வாங்கி பீரோவில் வைத்தான். கடையைப் பூட்டிக்கொண்டு தன் காரில் அவளை ஏற்றிக்கொண்டு டவுன் சென்றான்.

நேராக வேறு ஒரு சேட்டிடம் போனவன், இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுகளுடன் திரும்பி வந்தான். “இந்தா!” என்று சொல்லி அவள் கைகளில் தந்தான்.

பின்னர் இருவரும் ஆசுபத்திரி சென்று காளியனை டிஸ்சார்ஜ் செய்து வேறு ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். எமர்ஜென்சி என்பதால் உடனே ஆபரேஷன் செய்தார்கள். ஒரு மணி நேரம் ஆயிற்று. பின்னர் வெளியே வந்த டாக்டர் “இந்தாம்மா! இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் ஆவும் நினைவு வர. அப்புறம் icuல ஒரு நாள் வெப்போம். “ என்று சொல்லிப் போனார்.

பூங்காவனம் சேட்டைப் பார்த்தாள். அவன் மெலிதாகப் புன்னகைத்தான். “அதான் டாக்டரு சொல்டாரில்ல? அப்றம் இன்னா டென்சன்? வா! போய் சாப்டு வர்லாம்” என்று அழைத்துக்கொண்டு ஒரு வீட்டுக்குப் போனான். அந்த வீட்டில் ஒரு காவலாளி மட்டுமிருந்தான். இவனைப் பார்த்ததும் “நமஸ்தே சாப்!” என்றான்.

“போய் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு. நாங்க கொஞ்சம் ரெஸ்டு எடுக்கணும். ஒரு ரெண்டு அவர்ல லஞ்ச எடுத்து வா” என்று அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினான்.

“பயப்படாதே வனம்! இது நம்ம வீடுதான்! ரெஸ்டு எடுக்க இங்கதான் வருவேன்” என்று காமமாகச் சிரித்து அவளை கரம் பற்றி தன்பக்கம் இழுத்தான். ஒரு வேரறுந்த கொடிபோல பூங்காவனம் அவன் மேல் விழுந்தாள். அவன் கரங்கள் அவளை வெறியுடன் அணைத்தன.

பூங்காவனம் செத்துப் போனாள் மனசுக்குள்ளே.

அப்புறம் காளியன் உடல் தேறி வீடு வந்தான். அவன் நன்கு குணமானதும் அவனிடம் வீட்டை அடமானம் வைத்தது பற்றி சொன்னாள். திகைத்துப் போனான். ஒரு லட்சம் எப்படி சம்பாதித்து எப்படி மீட்கப் போகிறோம்? திடீரென்று நினைத்துக் கொண்டு பூங்காவனத்தை வெறித்துப் பார்த்தான்.

“என்ன மச்சான் பாக்குற?”

“வீட்ட மட்டுமதா அடமானம் வெச்சியா இல்ல… “ என்று இழுத்தான்.

அவன் கண்களைப் பார்க்க தைரியமில்லாமல் அவள் தலை குனிந்தாள். காளியன் அதிர்ந்தான்.

அப்புறம் நான்கு நாட்கள் அவளிடம் பேசவில்லை. ஐந்தாம் நாள் அவளை அழைத்தான்.

“தா பாரு! என்ன நடந்திச்சின்னு எனக்கு புரியுது! என்னக் காப்பாத்தத்தான் இப்டி செஞ்சேனாலும் தப்புத்தா. அதுனால இனிமேட்டு நாம புருசன் பொஞ்சாதியா வாள முடியாது. ஆனா உன்னியத் தள்ளி வக்கவும் மனசு எடம் கொடுக்கல. அதுனால ஊருக்கு மட்டுமதா நாம புருசன் பொஞ்சாதி” என்றான்.

பூங்காவனம் கண்களில் கரகரவென்று கண்ணீர்.

இவர்கள் வாழ்க்கை இப்படியே ஓடியது. அப்போது ஒரு நாள் ராத்திரி. இவர்கள் வீட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். திறந்து பார்த்தால் சேட்டு மனைவி!

“காளி! என் புருசன பாம்பு கடிச்சிருச்சு. சீக்கிரம் வாய்யா!”

காளியன் சிலை போல நின்றான். சேட்டு மனைவியின் கண்களில் மருட்சி.

“காளி நீ இன்னா நினைக்கறேன்னு எனக்குத் தெரியும். ஆனா என்னக் கை வுட்ராதே! நீ தான் எனக்கு பகவான்! என் புருசன் செஞ்ச தப்புக்கு எனக்கு தண்டன கொடுக்காதே! இந்தா உன் வீட்டுப் பத்திரம்! இன்னும் வேறு எதுனாச்சியும் வேணும்னானாலும் தர்றேன்” என்று அழுத்தமாக சொன்னாள்.

சேட்டு மனைவி இப்படிச் சொன்னதைக் கேட்ட காளியன் “அம்மா” என்று அவள் காலில் விழுந்தான். பத்திரத்தைப் பூங்காவனத்திடம் தந்து விட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு அவளுடன் சென்றான்.

சேட்டின் காலில் இருந்த கடிவாயைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை இன்ன பாம்பு தான் தீண்டியிருக்கிறது என்று அறிந்தான். அந்த இடத்தில் ஒரு துணியைக் கட்டி வாய் வைத்து விஷத்தை உறிஞ்சித் துப்பினான். பின் அந்த விஷத்துக்கான மருந்தைக் கொடுத்துவிட்டு சேட்டின் அருகிலேயே உட்கார்ந்தான். சேட்டு மனைவி சேட்டுப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து சோஹன்லால் கண் விழித்தான். விழித்தவுடன் அவன் கண்ணில் பட்டது அழுது கண் சிவந்திருந்த அவன் மனைவியும் அருகே அமர்ந்திருந்த காளியனும். அவனுக்குத் தலை சுற்றியது.

அவன் நினைவுக்கு வந்ததைப் பார்த்து மற்ற இருவரும் அவனருகே வந்தார்கள். “மத் ஆவோ (வராதே)” என்று கத்தினான். பின் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

காளியனுக்குப் புரிந்து விட்டது. தன் மருந்துகளை எடுத்துக் கொண்டு மெளனமாக வெளியே போக யத்தனித்தவன், திரும்பி சேட்டு படுத்திருந்த கட்டில் அருகே வந்தான். வந்து ஒரு சில நொடிகள் அவன் முகத்தை வெறித்துப் பார்த்து விட்டு “தூ” என்று அவன் முகத்தில் துப்பினான்.

பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். அதுவரை மூடியிருந்த மேகங்கள் விலகி நிலவு பிரகாசித்தது.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *