புளியமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,399 
 

அப்பா இன்னும் திறக்கேல்லை! ஆ…ஆ, பத்தரை மணியாகுமோ தெரியாது! கெதியா இஞ்சால வந்…அட கட்டாப் போச்சு!

இண்டையோட மூன்று முறை வந்தாச்சு, ஒன்டுமாறி ஒன்டில சைன் பண்ணிப்பண்ணி, போட்டோக் கொப்பி எடுத்து விதானை, ஏஜிஏ ஒபீஸ், ஏரியாக் காம் பட்டாலியன் பிரிவு, சிவில் ஒபீஸ், பிரிகேட் இப்பிடியே திரிஞ்சு திரிஞ்சு எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு இன்னும் அலையிறம் இன்டைக்கிண்டாலும் கிடைக்குமோ தெரியாது.

மல்லி! ஏ…ஏ மல்லி! எண்ட கோ…ஒயாட்ட நம் பிரதீப் நே! ஓம் சேர், நீங்கசரி பாவம் தானே…ரெம்ப…ரெம்ப நாள் வந்து….வந்து போய் ஒயா நம்பர கியன்ன…!

முருகா, இண்டைக்கின்டாலும் சரிவரவேணும், எனது அலைச்சல் அந்த காக்கிச் சட்டைக்காரன் மனதில் எங்கோ கசிந்திருக்க வேணும். உடனேயே எனது கிளியரன்ஸ் துண்டைக் கொண்டு வந்து தந்தார். எனக்கு லொத்தரில் பரிசு விழுந்த மகிழ்ச்சி. எல்லையற்ற மகிழ்ச்சி எல்லாம் எண்ணிக்கட்டி எல்லைக்குள் வைக்கப்பட்ட சூழல் யாழ் குடாவில்! நான் பிரதீப், வயது 19, அப்பா சுவிஸ் போய் 16 வருஷம் அம்மாவோட உடுவில்ல இருக்கிறன். சுவிஸ்சுக்குப் போறத்துக்காக கிளியரன்ஸ்சுக்கு சுன்னாகம் சிவில் ஒபீசுக்கு முன் உள்ள புளிய மர நிழலில் இருந்துதான் சுவிஎப்சில் இருக்கிற என்ர அப்பாவுக்கு…

மகனோட கதைச்சு இடையில் போன் துண்டிக்கப்பட்டதால் மகேஸ்வரநாதன் மனக் குழப்பத்தால் அந்த நான்கு சுவருக்குள்ளும் நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்தார். இன்னும் மனம் ஆறவில்லை . கொட்வோட்டர் கொஞ்சம் எடுத்திட்டு சோபாவில் அமர்ந்தார். மகனின் குரலில் தெரிந்த ஆதங்கம் அவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களைத் தொடுத்து சரங்களாய்த் தொங்கிய நிகழ்வின் வடிவில்.

பதினாறு வருஷத்துக்கு முதல்லயும் இப்படித்தானே அந்த சுன்னாகம் சிவில் ஒபீஸ் புளியமரத்துக்கு கீழே கிளியரன்சுக்காக காத்திருந்த நினைவுகள். காலம் தன் கடமையில் கண்ணாய் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற வாழ்க்கை இலங்கை யில் சீ… சீ…. என்ன இது மானிட ஜன்மம்…… மனிதபிமானம்? இந்தியாவும் செவ்வாய்க் கிரகத்துக்கு ரொக்கற் அனுப்பிப் போட்டுது. சுதந்திர அமெரிக்காவில் சந்திரனுக்கு சுற்றுலா போக முற்பதிவு நடக்குது. ஆனால் யாழ்ப்பாணத்து சனத்தோட ரெலிபோனிலயும் கதைக்கேலாம கிடக்கு. பாதுகாப்பின் பெயரால் ரெலிபோன் கவரேஜ்கள் காணாமல் போகின்றன. படைத்தளபதியோ மந்திரியோ வருவது கைத்தொலைபேசிக் கவரேச்சில் தெரியும்.

ரிங்…ரிங்…ரிங்…ஆ அப்பா நான் பிரதீப் அப்பா கிடைச்சிட்டுது கிடைச்சிட்டுது அப்பா இப்ப இப்ப இப்பதான் தந்தவை. இன்னும் அம்மாவுக்குத் சொல்லேல்ல, அவ சரியா சந்தேசப்படுவா. அப்பா…அப்பா…அப்பா…உங்கால விசா சரிவரும்தானே அப்பா…பதினாறு வருடங்களாக உருவம் காணாத அப்பாவை உணர்வால் மட்டும் அனுபவித்து இப்போ வாலிப வயதிலும் மழலை மொழி பேசும் விசித்திரமும் இங்குதான்.

போராட்டம் வாழ்வுக்காகவா? இல்லை….. வாழ்க்கையே போராட்டமாக…… மக்களைப் பற்றி யார் சிந்திக்கிறார்? இலட்சியங்களும், அரச இலச்சினையும், சட்டங்களும், கட்சிக் கொள்கைகளும், இராஜ தந்திரமும், சதுரங்கமாடி மக்களுக்கு இலைக்கஞ்சி கூட ஊத்தவில்லையே! காலம் கடந்தால் ஞானம் பிறக்கும் என்பர் இங்கு!

ஏதோ அவளையும், பொடியனையும் இஞ்சால கூப்பிட்டிட வேணும். காணி, வீடு போனாலும் பரவாயில்லை. இன்னும் ஒரு கிழமையால கொழும்பு வந்திடுவினம் எண்டு நினைக்கிறன். பிறகு இஞ்சால வர இரண்டு கிழமை எப்பிடியும் ஒரு மாதத்துக்குள்ள நான் அவையளைப் பார்க்கலாம். அதுக்குள்ள கொழும்பு வந்திட்டால் ஸ்கைப்பில எண்டாலும் ஒருக்கா முகம் பார்த்துக் கதைக்கலாம்.

பதினாறு வருடப்பிரிவும் பரிதவிப்பும் உடல் ரோமங்களின் நுனி வரை உணர்ச்சிக் கொப்பளங்களாக வெடிக்கின்றது. இரண்டரை வருசம்தான் அவளோடை இருந்தன். என்னில் எத்தனை காதல் அவளுக்கு. என்னுயிரோடு அவள் கலக்கவில்லை, என் உயிராகவே அவள். பேசி முடித்த கலியாணம் என்டாலும் முதற் பார்வையிலேயே அவள் என்னவள் என்ற உணர்வு. இரண்டரை வருட தாம்பத்திய வாழ்விலும் சரி, பதினாறு வருட நீண்ட பிரிவிலும் சரி, அவள் சம்பந்தமாகவா அவள் பேசினாள்! சம்பளத்துக்காகவா அவள் குடும்பம் நடத்தினாள், சடங்காகவா தாம்பத்தியம் கொண்டாள். சஞ்சரிக்கும் எண்ணங்கள் இந்த சுவிஸ் குளிரிலும் என் இதயத்தை சூடேற்றியது.

ஹலோ…ஹலோ…அப்பா ரிக்கெற்றும் எடுத்தாச்சு. வார வெள்ளிக்கிழமை அதான் 28ஆம் தேதி அப்பா….. சரி… சரி…. என்னெண்டு இவ்வளவு கெதியா எடுத்தனி? முதல்லேயே பதிஞ்சு டோக்கனும் எடுத்தனான். இருந்தும் இஞ்சால அங்கால கொஞ்சம் கொஞ்சம் வெட்டித்தான்…. அட… கட்டாப் போச்சு. அடிக்கடி கட்டாகிறதுதானே எங்கட வாழ்க்கை. வாழ்க்கைவட்டம் எண்டு பள்ளிக்கூடத்தில படிச்சனான். இஞ்சையும் வாழ்க்கை வட்டம்தான் நடக்குது. விறகு – உமி – மண்ணென்ணெய் – மின்னடுப்பு – காஸ் குக்கர் இப்ப மறுபடி விறகு. வட்டம் எண்டால் ஆரம்பம் முடிவு இல்லாதது. அதுபோல சங்கம் எப்ப திறக்கும், பெற்றோல் எப்ப கிடைக்கும், கப்பல் எப்ப வரும், பிளேன் எப்ப போகும், கரண்ட் எப்ப வரும், எப்ப நிக்கும், எண்டு ஒண்டும் புரியாமல் சுற்றும் வட்டமாக முடிவில் ஆரம்பித்து ஆரம்பத்தில் முடியும் தமிழர் வாழ்க்கை வட்டத்தில் இனப் பிரச்சினை மட்டும் பலமான அச்சாக அட.. அட.. லைன் கிடைச்சிட்டு. (F) பெஸ்ட் பிளைற்றுக்குத்தான் எடுத்தனான். சிலவேளை செக்கன்ட் பிளைட் நிப்பாட்டிப் போடுவாங்கள்……. ஆ…. சரி….. அப்பன் இனி நான் எடுக்கிறன் நீ வை. மூளைக்கு எட்டிய முன்னெச்சரிக்கை எல்லாம் குடாநாட்டு மக்களின் குருதியில் உள்ள செங்குருதி, வெண்குருதிக் கலங்கள் போல காலத்தின் சோதனைக் கலங்களா? பரிமாண வளர்ச்சி என்பது மனிதனின் பகுத்தறிவு உணர்ச்சியைப் பரீட்சிக்கும் நிலையில் இந்த மண்.

அம்மா நாங்கள் முதல் நாளே ரவுன் சித்தப்பா வீட்டை போய் படுத்தால்தான் நாளைக்கு விடிய 5 மணிக்கு கியூவில நிக்கலாம். கேவ்யூவால விடியப் போகேல்லாது. கொஞ்சம் பிந்தினாலும் செக்கன்ட் பிளைற்காரரை எடுத்துப் போடுவாங்கள்.

அம்மா உனக்கொண்டு சொல்ல மறந்திட்டன்.

அண்டைக்கு கிளியரன்ஸ் தந்த ஆமி என்னோடை வடிவா கதைச்சவன். பெயர் சுதுபண்டா தேப்பன். 96ல முகமாலையில் போயிட்டாராம். அதாலதான் தனக்கு இந்த வேலை தந்தவையாம். தான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவராம் என்டு தேப்பன்ற படத்தையும் காட்டினவர். எனக்கு ஒரே அதிர்ச்சி. அம்மா! அம்மா! அவரோட பக்கத்தில யார் நிண்டது தெரியுமே.

அட சொல்லண்டா….. ஆர் நிண்டால் எனக்கென்ன?

அம்மா நீ சொல்லு பாப்பம்……

அட எனக்கு மூளை குழம்பிக் கிடக்கு. வீடு, வாசல், காணி, சாமான், சொந்தம் பந்தம், எல்லாம் விட்டுட்டு அப்பாட்ட போறது சந்தோசம்தான். ஆனால் இந்தளவு நாளும் வாழ்ந்த இந்த மண்,

சூழல் ஏதோ எனக்கு ஒரு மாதிரிக் கிடக்கு……

அம்மா அது ஆர் தெரியுமே எங்கட அப்பாதான்!

நானும் மலைச்சுப் போனன், எனக்கு அவனிட்ட சொல்லவும் பயமாக் கிடந்திச்சு. எண்டாலும் என்ர அலைச்சலைப் பார்த்து அவனாக் கூப்பிட்டு எனக்குக் கிளியரன்ஸ் தந்தவன் என்டபடியால பயப்பிடாமச் சொன்னன். பக்கத்தில நிக்கிறது என்ர அப்பா எண்டு அவனுக்கு ஒரே சந்தோசம். பிரியந்த சமரவீர தான் தேப்பன்ட பெயராம். வீட்டை லீவில 96 அளவில வரேக்கதானாம். இந்தப் படத்தையும் தந்து தனக்குப் பக்கத்தில நிக்கிறது மகேஸ் மாத்தையா எண்டு சொல்லி தமிழர் எல்லாம் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் இல்லை . அதுகளும் வாழத் துடிக்கிற சனங்கள்தான் எண்டு சொன்னவராம். பிரியந்த சமரவீரவுக்கும் சுதுபண்டாவுக்கும் புரிந்தது ஏனோ இன்னம் இறைவனுக்குப் புரியவில்லை . கலியுகத்தில் தன் கருணை இவ்வளவுதான் முடியும் என்று கண்ணை மூடிக் கொண்டாரே. ரிக்கெட் எடுத்ததை சின்னம்மா விட்ட சொல்லுவம் எண்டு றோட்டுக்குப் போனா குறுக்க மரக்கட்டை அட கொன்வே.

எத்தனை மணியாகுமோ தெரியாது….. கொஞ்ச நேரம் நிண்டு பார்ப்பம். உடல் நிக்குறது உள்ளம் ஓடியது……. நகரங்களில் வீதி விதிமுறைகள் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், மற்றும் குறியீடுகள் பெயர்ப்பலகைகள். இங்கும் வீதி விதி முறை உண்டு. வீதியில் கட்டை – கொன்வே, வீதியில் தார்பரல் – விரைவுச் சோதனை, வீதியில் ரயர் ஹர்த்தால், வீதியில் கல் – காவலரண், வீதியில் மேடு – இராணுவ முகாம், நகரத்தில் அது வீதி விதிமுறை இங்கு நரகத்தில் இதுதான் வரன்முறை.

சின்ன மாமியிட்டயும் சொல்லியாச்சு. இனி பிரயாணம் தான். இஞ்சயும் படம் பிடிப்பாங்களாம். பிறகு கொழும்பிலயும் படம் பிடிச்சு பதியவும் வேணுமாம். புற்றுநோய் வந்தவன் உள்ளம் போல இலங்கை தனக்கு மட்டும்தான் சொந்தம் எண்டு பற்று வைத்தவன் உள்ளத்தில் இன்னும் எத்தனை விதி முறை வியாதியோ யார் கண்டது!

அப்…அப்…அப்பன் சு..சுமி வாங்கோ … வாங்கோ இலங்கையில் சீதையைக் கண்ட இராமன் போல என் சுமியை சுவிஸில் கண்டது பெரு மகிழ்ச்சியாகி சுக அனுபவமாக அதை உணர்த்தியது! ஆதிக்கமான அரவணைப்பும், அருவியான ஆனந்தக் கண்ணீரும், ஆசைமுத்தங்களும் அடுக்கடுக்கானபோது வார்த்தை களுக்கு எங்கே வழி……! அப்பன் இந்தா இந்த அவுட் கோட்டையும் போடு, இப்ப இஞ்ச சரியான சுனோ… மைனஸ் 28ல இருவர் முகத்திலும் ஆச்சர்யமான பார்வைகளுக்கிடையிலும் எனது கார் ஹைவேயில் கரைந்து கொண்டிருந்தது.

அப்பா! உங்களுக்கு ஒண்டு சொல்ல வேணும் என்ன…!?

சொல்லு!…நான் சுன்னாகத்தில் அந்தப் புளியமர சிவில் ஒபீஸில கிளியரன்சுக்கு நிக்கேக்க ஒரு ஆமி என்னோட கதைச்சவன், அவன் தான் கிளியரன்சும் தந்தவன். அவன்ர அப்பாவின்ர போட்டோ வில அவரோட நீங்களும் நிற்கிறியள்!! எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு.!!!

ஓம்! அப்பன்…அந்தநேரம் நானும் இப்பிடித்தான் பாசுக்கு அலைஞ்சு திரிஞ்சனான். பிறகு சமரவீரதான் எனக்கு ஹெல்ப் பண்ணினவர். நல்ல மனுசன். அந்தாள் என்னில ஏனோ நண்பன் மாதிரி விருப்பப்பட்டு படம் எடுக்க வரச்செல்ல ரெண்டுபேரும் அந்தப் புளியமரத்தடியில நிண்டுதான் படம் எடுத்தனாங்கள்…எனக்கு எல்லாம் இப்ப…கனவு மாதிரிக்கிடக்கு…!!

கனவுகளான வாழ்க்கையைச் சொன்ன நிழற் படத்திலிருக்கும் புளியமரம் படமாக மட்டும் இல்லாமல் தமிழர் வாழ்வின் நிஜங்களான வெற்றிகளையும், தோல்விகளையும், அந்தரங்க அபிலாசைகளையும், ஆதங்கங்களையும், சோகங்களையும் நினைவூட்டிக் கொண்டு தலைமுறை பலகண்டு இன்றும் கம்பீரமாக நிழல்பரப்பி நிற்கின்றது.

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *