அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ்.
ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன் ரூமிற்குள் நுழைந்தவன் திடுக்கிட்டான்.
அவனுடைய மனைவி தன் துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தததைப் பார்த்துக் காரணம் புரியாமல் அவளை ஏறிட்டான்.
“மனோஜ், இன்று இரவு நான் புறப்படணும் எத்தனை மணிக்கு பஸ்?”
“அதுக்குள்ளேவா, பத்துநாள் காரியம் முடியட்டுமே வசந்தா.”
“புரியாமப் பேசாதீங்க. நான்தான் வரும்போதே சொன்னேனே, லீவு அதிகம் எடுக்க முடியாதுன்னு. அதோட அப்பா காரியம் ஆகி இரண்டு நாள் ஓடிட்டுது. நான் இங்கேயிருந்து என்ன செய்யப்போறேன்?”
“துக்கம் கேட்க வரவங்க என்னையும் உன்னையும் தானே பார்க்க வருவாங்க.”
“அதான் நீங்களும் அம்மாவும் இருக்கீங்களே, நான் ஒரு பொறுப்புள்ள பாங்க் ஆபிஸர். இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் லீவு போட்டுட்டு உட்கார முடியாது. எத்தனை மணிக்கு பஸ்ஸுன்ன்னு கொஞ்சம் விசாரித்து வையுங்க.”
“இன்னொரு விஷயம் வசந்தா, அப்பா இருந்த வரையிலே அம்மா இந்தக் கிராமத்திலே காலம் தள்ளி விட்டாங்க. இனிமே வயதான நேரத்திலே துணை இல்லாம அம்மா தனியா இங்கே இருக்க முடியாது . அதனால “
“அதுக்கு என்ன செய்யப் போறீங்க? உங்க வேலையை விட்டுட்டு அம்மாவோட தங்கப் போறீங்களா?” ஏளனமாக கேட்டாள்.
“அதில்லை வசந்தா. பத்துநாள் காரியம் முடிஞ்சதும் அம்மாவை நம்மோடதான் வைச்சுக்கும்படி இருக்கும். அம்மாவுக்கும் உறவுன்னு சொல்லிக்க வேறுயாரு இருக்கா என்ன விட்டா?”
“இதப்பாருங்க என்னால இதுக்கெல்லாம் ஏத்துக்க முடியாது. உங்க அம்மா பழைய காலத்து மனுஷி. ஏதாவது தொண தொணத்து கிட்டு இருப்பாங்க என்னால சுதந்திரமா இருக்க முடியாது ஏன் இந்த கால் கட்டு? பேசாம தனியா ஒரு வீடு பார்த்து வைச்சுடுவோம். அது தான் அவங்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது.
“அப்படி தனியா வைக்கிறதுக்கு அவங்க இங்கேயே இருக்லாமே வசந்தா”
“உள்ளுரிலே வைக்கிறது எப்படி? வெளியூரிலே வைக்கிறது எப்படி? ஏதாவது ஒண்ணுன்னா சடாரென்று போய்ப்பார்க்க முடியும் ஒரு வேலைக்காரியை வீட்டோடு வைச்சுட்டாப் போச்சு”
அதற்கு மேல் இது பற்றிப் பேசிப் பலனில்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரியும் அடக்கு இல்லையென்றால் அடங்கு என்ற தத்துவம் அறிந்தவன் மனோஜ்.
அன்று இரவே வசந்தா சொன்னபடி சென்னை கிளம்பிவிட்டாள். கேட்டவர்களிடம் எல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தான் மனோஜ்.
பத்து நாள் காரியம் முடிந்தது.
அம்மாவை சம்மதிக்க வைத்துத் தன்னோடு அழைத்துச் சென்றான் மனோஜ்.
வேண்டா வெறுப்பாக மாமியாரை உபசரித்தாள் வசந்தா.
இரவு மனோஜிடம் சொன்னாள்.
“நான் சொன்னபடி மாம்பலத்தில் ஒரு வீடு பார்த்திருக்கேன். உங்க அம்மாவை நல்ல நாள் பார்த்து அங்கே கொண்டு வைச்சுடுவோம்.
“ஏன் நம்ம ஏரியாவிலேயே இடம் கிடைக்கலையா அவ்வளவு தூரத்திலே . . . துணைக்கு யாரை . .”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதா? நம்ம கிட்டே ஏற்கெனவே வேலை செஞ்சாளே அஞ்சலை, அவ சும்மாதான் இருக்காளாம், அவளை இன்னைக்குப் பார்த்து பேசிடறேன் பணத்தை விட்டெறிஞ்சா எவ வர மாட்டாள்! ஆபிஸிற்கு நேரமாயிட்டுது நான் வரேன் மனோஜ்“ சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் வசந்தா.
அவன் போனதும் மனோஜ் அம்மாவிடம் சமையல் செய்து ப்ரிஜ்ஜில் இருப்பதைக் காட்டினான். கதவைச் சாத்திக் கொள்ளச் சொன்னான். ஏதாவது தேவையென்றால் பக்கத்து வீட்டு மாமியிடம் கேட்கச் சொன்னான். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.
மாலை அஞ்சலையைத் தேடிச் சென்றாள் வசந்தா.
“அடடே, என்னா கண்ணு, இம்மாந்தூரம், என்னா விஷயம்? வா. உள்ளே வந்து குந்துன்னு சொல்லக்கூட வீட்லே ஒரு நல்ல பாய்கூட இல்லை.”
“அஞ்சலை நான் இப்போ உட்கார வரலே. ஒரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன்,” பீடிகை போட்டாள் வசந்தா.
“என்னா கண்ணு விஷயத்தைச் சொல்லு.”
“என் மாமனார் இறந்துட்டாரு. மாமியாரை ஊரிலே தனியா வைக்க முடியாது. அவங்களுக்குத் துணையா உன்னை வீட்டோட இருக்க முடியுமான்னு கேட்கத்தான் வந்தேன் அஞ்சலை.”
“என்னம்மா விளையாட்டு பண்றியா? உன் கிராமத்துக்கு என்னை போகச் சொல்றியா?”
“இல்லே அஞ்சலை, மாமியாருக்கு மாம்பலத்திலே ஒரு வீடு பார்க்கப் போகிறேன். அதுக்குத்தான் துணையாக உன்னை . . . “
“உனக்கு இருக்கிற வசதிக்கு ஏம்மா வயசானவங்களைத் தனியா வைக்கணும்? உங்க வீடுதான் பெரிசாச்சே? அவங்க பாட்டுக்கு வீட்டுக்குக் காவலா இருந்துட்டுப் போகட்டுமே . . .
“அது சரிப்படாது அஞ்சலை. அவங்க ஆசாரம் பார்க்கிறவங்க அதோட எட்டியிருந்தாத்தான் எல்லாருக்கும் நல்லது. இதெல்லாம் அப்புறம் விளக்கமா பேசிக்கலாம் நீ எப்ப வரே?”
“மன்னிச்சுடும்மா, எனக்கு தோதுப்படாது.”
“அஞ்சலை, சம்பளத்தைப் பத்தி யோசிக்காதே. மூன்று வேளை சாப்பாட்டோடு நீ கேட்கிற பணத்தை நான் தரேன்.”
“அதுக்கில்லையம்மா பணம் என்ன பணம். மனுஷங்களை விடவா பெரிசு, மனம் இருந்தா பணத்தைச் சம்பாதிச்சுடலாம். நான் அதுக்காகச் சொல்லலை.”
“பிறகு என்ன யோசனை அஞ்சலை?”
“இந்தக் குடிசைக்குள்ளே வந்து சித்தபாரு கண்ணு” அழைத்துப் போனாள்.
அவள் காட்டிய இடத்தைப் பார்த்துத் திகைத்துப் போனாள் வசந்தா.
கால்கள் சூம்பிப் போன ஒரு எட்டுவயதுச் சிறுவன் ஒரு அழுக்குப் பாயில் முடங்கிக் கிடந்தான்.
“உனக்குத்தான் புள்ளை இல்லையே அஞ்சலை இது யாரு?”
“இது என் வீட்டுக்காரருடைய சின்ன வீட்டுப் புள்ளை. பாவி மக சக்களத்தி கை கால் விளங்காத இவனை என்னன்னே கேட்கிறதில்லே.
அவளுக்கு வேண்டியது புருஷசுகம் மட்டும்தான். பெத்த பிள்ளையாச்சேன்னு நெஞ்சிலே கொஞ்சம் கூட ஈரம் இல்லாம இவனை தூக்கியெறிஞ்சுட்டா. என் புருஷனாலே எனக்கு எந்த சுகம் இல்லாவிட்டாலும் என்னால அப்படி இருக்க முடியலேம்மா. என்ன இருந்தாலும் என் புருஷனுக்குப் பிறந்தவன் தானே இவன். கை, கால் விளங்காதவனை கவனிக்கவே எனக்கு நேரம் சரியாயிடுது. ஏதோ இவன் வயிற்றுக்கும், என் வயிற்றுக்கும் போதுமான அளவுக்கு நான்கைந்து வீடு கிடைச்சிருக்கு இது போதும் எனக்கு. என்னை மன்னிச்சிடு அம்மா.”
அற்பமான, புழுவை விட கேவலமாய் மதித்த வேலைக்காரி புல் பூண்டாய் சீப்பாய் நினைத்த அஞ்சலையா இத்தனை மனித நேயத்தோடு பேசுகிறாள்! அவள் வார்த்தைகள் வசந்தாவை சாட்டையால் விளாசுவதை உணர்ந்தாள். கூனிக்குறுகிப் போனாள். படிக்காதவளுக்கு உள்ள மனித நேயம் கூடத் தன்னிடம் இல்லாமல் போனதை நினைத்து வருந்தினாள்.
தன்னை மணந்தவனின் தாயைச் சுமையாக நினைத்தோமே! பண்பில், பெருந்தன்மையில் எத்தனை உயர்ந்து விட்டாள் அஞ்சலை!
“அஞ்சலை, இந்தா இந்த பணத்தை வாங்கிக்க “ என்று கூறி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினாள் வசந்தா.
“எதுக்கும்மா இதெல்லாம், உங்க அன்பு ஒண்ணு போதும்மா” என்று சொன்னாலும் வசந்தா வற்புறுத்த அஞ்சலை பணத்தை வாங்கிக் கொண்டாள்.
விடைபெற்றுக் கொண்ட வசந்தாவின் மனத்தில் ஒரு தீர்மானம் ஏற்பட்டது.
வீட்டிற்குள் நுழைந்த வசந்தாவிடம் கேட்டான் மனோஜ்.
“என்னாச்சு வசந்தா? அஞ்சலை ஒத்துக் கொண்டாளா!” கவலையோடு கேட்டான்.
“அதுக்கு அவசியம் இல்லே, அம்மா நம்மோடயே இருக்கட்டுமே என்ன குறைஞ்சிடப் போவுது ,” என்று சொல்லியபடியே இரவு சமையலுக்கு ஆயத்தமானாள் வசந்தா.
மனைவியின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு காரணம் புரியாத மனோஜ் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் வாயடைத்து நின்றான்.
– கலைமகள்