கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,970 
 

கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது.
ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, மதிய சாப்பாடு எல்லாம் தயாராகி விடும். அவளுக்கு மட்டும் எல்லாவற்றையும் டப்பாவில் கட்டி எடுத்துக் கொண்டாக வேண்டும். குணாவுக்கு வீட்டிலிருந்து பத்து நிமிடத்தில் சென்று சேர்ந்துவிடும் தூரத்தில் அலுவலகம் என்பதால், சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டுக் கிளம்பிப் போய், பின் மதியச் சாப்பாட்டுக்கும் வீட்டுக்கு வருவான்.
மகள் வர்ஷினிக்கு தேவையான மதிய சாப்பாடு, நொறுக்குத் தீனி, குடி தண்ணீர் என, சகலமும் தயாராக மேசை மேல் இருக்கிறது. குழந்தையைக் குளிப்பாட்டி தயார் செய்வதை, வீட்டோடு தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுசீலாம்மா, பார்த்துக் கொள்வார். பள்ளி பஸ், வீட்டு வாசலுக்கு அருகே வரும் என்பதால், அவளை ஏற்றி விடுவதும், மாலையில் அழைத்து வருவதையும் கூட, அவரே பொறுப்பாக செய்து விடுவார்.
புரிதல்ஆனால், இந்த சுசீலாம்மா கிடைப் பதற்கு முன்னால், திருமணமான முதல் மூன்று வருடங்களில், அவள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று வருடத்தில் ஏழு பேர், வேலைக்கு வந்து போயிருக்கின்றனர். வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில், தங்களின் இன்றியமை யாமையைப் புரிந்து கொண்ட பின், ஒவ்வொருவரும் பானுவைப் படுத்திய பாட்டில், வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற அவளின் உறுதி கூட, ஆட்டம் காணத் துவங்கியது.
அந்நேரத்தில்தான், தேவதை போல வந்து சேர்ந்தார் சுசீலாம்மா. கணவனை இழந்து, மகனால் உதாசீனப்படுத்தப்பட்ட வழக்க மான சோகக் கதை அவருடையது. வேறு போக்கிடமில்லை என்ற சுயநலமான காரணம் ஒரு ஓரத்திலிருந்தாலும், பாதிக்கப் பட்டு நிற்கையில், ஒதுங்க இடம் கிடைத்தது என்ற நன்றி விசுவாசத்தையும், இன்னமும், சுமக்கும் ஒரு அப்பாவி. அவர் தயவில், பானுவின் பாடு, கொஞ்சம் நிம்மதியாகவே போகிறது கடந்த ஒரு வருடமாக.
காலை எட்டரை மணி அலுவலகத்துக்கு, குணா எட்டே காலுக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும். ஆனாலும், வரி வரியாய் பேப்பர் படித்து, நிதானமாய் குளித்து, சாப்பிட்டுத் தயாராக, எப்படியும் ஏழரைக்கு எழுந்தே ஆக வேண்டும். ஆனால், ஏழரைக்கு பஸ் நிறுத்தத்திலிருக்க வேண்டிய பானுவோ, ஏழு பத்துக்கேனும் வீட்டை விட்டு இறங்கியாக வேண்டும். அந்நேரத்தில், சுசீலாம்மாவும் வர்ஷினியைக் கிளப்புவதில் மும்முரமாய் இருப்பார்.
எனவே, அந்த பத்து நிமிட தூக்கத்தை துறந்து, குணா எழுந்து கதவை சாத்திக் கொள்ள வேண்டும். இதை தினம் காலையில் செய்ய வேண்டியிருப்பதாலும், காலை மற்றும் மதிய உணவைத் தானே போட்டுக் கொண்டு சாப்பிடும் துர்பாக்கியம் வாய்த்திருப்பதாலும் தான், குணா அடிக்கடி புலம்புவான்…
“இப்படி வேலைக்குப் போற பொண்ணை என் தலைல கட்டி, என் வாழ்க்கையையே வீணடிச்சுட்டாங்க என் அம்மா’ என்று.
பானுவுக்கு மிளகாய் அபிஷேகம் நடத்துவது போல, இவ்வார்த் தைகளை வாரம், இருமுறையேனும் சொல்லிவிடுவது குணாளனின் வழக்கம்.
அவளிடம் சொல்வது மட்டுமல்ல, யாரேனும், எங்கேனும், “உனக்கென்னப்பா, ரெண்டு பேரும் வேலைக்குப் போறீங்க, நல்லா சேமிக்கலாம்’ என்று சொல்லிவிட்டால் போதும். பெண்கள் குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி, ஒரு அரை மணி நேர லெக்சரே கொடுத்து விடுவான். அத்தகைய நேரங்களிலும், அருகிலிருக்கை யிலும் பானுவுக்கு இதே எரிச்சல் எழும்.
வீட்டு வேலைகளில் ஒரு சிறு துரும்பையும் நகர்த்திப் போடாத சோம்பேறி என்பதைத் தவிர, மற்றபடிக்கு அவன் ஒரு நல்ல கணவன் தான். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; பண விஷயத்திலும், நல்ல சேமிப்பும், வீட்டுக்கு திட்டமிட்டு சரியாய் செலவு செய்யும் வழக்கமும் உடையவன். ஏன்… பானு மேலும், வர்ஷினியின் மேலும், கொள்ளைப் பாசம் உள்ளவன் கூடத் தான்.
என்ன செய்ய, ரெண்டு பெண்களுக்குப் பிறகு போதும் என்றிருந்த மாமியாருக்கு, காலம் போன காலத்தில், வந்துதித்த ஆண் பிள்ளைச் செல்வம் – வாராது வந்த மாமணி. செல்லத்துக்கு கேட்க வேண்டுமா? “காக்கா வெள்ளை…’ என்று பிள்ளை சொன்னால், அதை திருத்த வரும் கணவர் மேல் தான், எரிந்து விழுவார் அவள் மாமியார் பங்கஜம்.
ஒரு நாள் செய்த பதார்த்தம், மறுநாள் இருக்கக் கூடாது. காலையில் வைத்த சாதம், பொரியல் இதுகளெல்லாம் இரவுக்கு சரி வராது. அதை எடுத்து வேலைக்கு வருபவர்களுக்கு கொடுத்து விட்டு, புதிது தான் செய்வார். இப்போதும் திருச்சிக்குப் போனால், இந்த அறுபதை தாண்டிய வயதுக்கும், அந்த அம்மாள் அப்படித்தான் சமைத்துப் போடுவார் மகனுக்கு.
“வேலைக்காக சென்னை வந்த பின் தான், ஜட்டி பனியனை தானே எடுத்துக் கொண்டு குளிக்கப் போகவே ஆரம்பித்தேன்…’ என்று எந்த குற்ற உணர்வுமின்றி சொல்லும் கணவனைப் பார்த்து, கல்யாணமான புதிதில் ஆடிப் போனாள் பானு.
“அப்படி வேலைக்கு வந்த பின்னும், வாராவாரம் சாக்ஸ் முதல் கர்சீப் வரை, அத்தனை துணியையும் மூட்டை கட்டிக் கொண்டு ஊருக்குப் போய் போட்டு விட்டு, முதல் வாரம் துவைத்து, இஸ்திரி போட்டு வைத்திருந்தவற்றை எடுத்து வந்துவிடு வேன்…’ என்று வேறு விளக்கினான் குணா.
அப்படியே பழகிய மகனுக்கு, மனை வியும் வீட்டிலிருந்து தன்னை தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. ஆனால், குணாவின் அப்பா, அம்மா இருவருக்குமே, காலம் போகும் போக்கில் இரண்டு பேரும் சம்பாதித்தால் தான், எண்ணெய் போட்ட சக்கரமாய் வண்டி போகும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை.
அழகான, அடக்கமான, வேலைக்குப் போகும் பெண்ணாகவும் இருக்க வேண்டும். வசதியான பிறந்த வீடாகவும் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைப் பட்டியல் இருந்தது, பங்கஜத்தம்மாளின் கையில். எல்லாவற்றுக்கும் பொருந்தி வந்த இந்த பானுவை, நேரில் பார்த்த பின், “வேண்டாம்…’ என்று சொல்ல, குணாளனுக்கும் மனம் வரவில்லை.
பானு வேலைக்குப் போவதால், எந்த வொரு வேலையையும் செய்யாமல் விட்ட தில்லை. குழந்தை வர்ஷினிக்கு படிப்பு சொல்லித் தருவதில் ஆரம்பித்து, சமையல், வீட்டு பராமரிப்பு என, சகலமும் ஒரு மாசு மருவில்லாமல் தான் இருக்கும்.
வேலைக்கு வரும் பெண்கள் விடுப்பு எடுத்தால், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையென்றால், குழந்தையின் பள்ளிக்குப் போக வேண்டியிருந்தால் என, எந்தவொரு நிலையிலும் விடுப்பு எடுப்பது அவள் பொறுப்பு என்று ஆனது. “நீங்களும் கொஞ்சம் பகிர்ந்துக்கலாமே…’ என்ற கேள்வியைக் கேட்பதையே பானு மறந் திருந்தாள்; கேட்டால் உடனே, “இதுக்குத் தான் நான் வேலைக்குப் போற பொண்ணு வேணாம்ன்னு சொன்னேன்…’ என்று ஆரம்பித்து விடுவான்.
வர்ஷினியின் சைனஸ் பிரச்னைக்காக, குழந்தைகள் நல மருத்துவர் ஒரு சோதனையை எடுக்கச் சொல்லியிருந்தார். நகரின் சிறந்த மருத்துவர்களில் ஒருவர் அவர் என்றாலும், அவரிடம் உள்ள பெரிய சிக்கல்… அவர், திங்கள் முதல் வெள்ளி வரையிலும், அதிலும், காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை மட்டுமே, சோதனை முடிவுகளை பார்ப்பார்.
காலை மற்றும் மாலை வேளைகளில், நோயாளிகளை நேரடியாகப் பார்க்க மட்டுமே அனுமதி; வெறும் சோதனை அறிக்கையை காண்பிக்கவெல்லாம் அனுமதி கிடைக்காது.
இது போன்ற விசித்திரமான நிபந்தனை கள், ஏதோ வேலைக்குப் போகும் பெண்களை குறி வைத்து தாக்குவதற்காகவே, நிறைய இடங்களில் வைத்திருப்பது போல, அவளுக்குத் தோன்றும். இதுவாவது பரவாயில்லை, மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பள்ளியில், முதல் வருடம் முழுவதும் காலை யிலிருந்து மதியம் வரை, குழந்தையோடு அதன் தாயும் பள்ளிக்கு வர வேண்டும் என்று ஒரு நிபந்தனை உண்டாம். இதைக் கேட்ட போது, அவளுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே புரியவில்லை.
வழக்கம் போல, அவளது உரிமை விடுப்புகள் அனைத்தும் வருட துவக்கத் திலேயே காலியாகி இருந்தது. சம்பளமில்லா விடுப்புகளும், அநேகம் எடுத்து தீர்த்திருந் தாள். எனவே, வழியேயின்றி குணாவிடம் வந்தாள்.
“”இந்த ஒரு தரம் மட்டும் டெஸ்ட் ரிப்போர்ட்டை நீங்க போய் காமிச்சுட்டு வந்துருங்க குணா. எனக்கு சுத்தமா லீவ் கிடையாது. நீங்க லீவ் கூட போட வேணாம், இரண்டு மணி நேர பர்மிஷன் போதுமே… ஈவ்னிங் உக்காந்து வேலைய முடிச்சுட்டு வந்துருங்களேன், ப்ளீஸ்.”
“”அர்த்தமில்லாம பேசாத பானு. எப்ப வேணும்னா போய், எப்ப வேணும்னா வரலாங்கற ப்ளெக்சி டைமிங்க்லாம் சாப்ட்வேர் கம்பெனிகளில் மலையேறி ரொம்ப காலமாச்சு. இப்ப இருக்கற ரிசெஷன் டைம்ல ஆபிஸ்லேர்ந்து லேட்டா கிளம்பறது வேணா நிச்சயம் நடக்கும்; லேட்டா வேலைக்குப் போறதை மட்டும், யோசிக்கவே முடியாது. ஏற்கனவே மிடில் மேனேஜ் மென்ட்டில் இருக்கும் ஆட்களை குறைக்க, புதுசு புதுசா காரணங்களை கண்டுபிடிச்சு கிட்டிருக்காங்க, இப்ப வந்து என் உயிர வாங்காத.”
“ஆமா, இதல்லாம் இல்லைன்னா மட்டும், போயி கிழிச்சிருவீங்களாக்கும். பாப்பாக்காகவோ, எனக்காகவோ என்னிக்கா வது நீங்க லீவ் போட்டிருக்கீங்களா என்ன?’ என்று கேட்க நினைத்தாள்… ஆனால், அது தேவையில்லாத பிரச்னைகளை மறுபடியும் கிளறிவிடும். எவ்வளவு தான் சண்டை போட்டாலும், கடைசியில் அந்த வேலையை தானே செய்ய வேண்டிய திருக்கும் என்பதையும், பானு உணர்ந்திருந் தாள்; அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
“”என்ன பார்க்குற… இதபார், வீட்டு விஷயங்களுக்காக ஆம்பளைங்க லீவ் போட்டால், கேக்கறவங்க சிரிப்பாங்க. உன்னால ரொம்ப முடியலைன்னால் ஒரு வழியா வேலைய விட்டுடு…”
“”அதானே பாத்தேன், எங்கடா வழக்க மான பல்லவிய இன்னும் காணோமேன்னு… கரெக்டா வந்துட்டீங்களா அந்த பாயின்ட்டுக்கு… திருச்சிக்கு போன் போடவா, அத்தைய கேப்போமா – வேலைய விட்டுறவான்னு?” உள்ளுக்குள் அடக்கி இருந்தது, வார்த்தைகளாக வெளியே வந்து விழுந்தது.
“”இந்த ஒரு விஷயத்தை சொல்லியே மிரட்டிட்டிரு… அவங்களுக்கு என் கஷ்டம் என்னிக்கு புரிஞ்சிருக்கு சொல்லு? இப்படி ஒரு வேலைக்குப் போற, வேலைக்குப் போகணும்ன்றதை ஒரு மேனியாவா வச்சிருக்கற ஒரு பொண்ணை என் தலைல கட்டி, என் உயிர வாங்கறாங்க. ஊர்ல, உலகத்துல எல்லாப் பொண்ணுங்களும் சந்தோஷமா, செய்யற வீட்டு வேலைகளை, நீ ஏதோ எனக்காக தியாகம் பண்ணுறா மாதிரி, பண்ணுறதையும் சகிச்சுட்டு, உன்னோட நான் குடித்தனம் பண்ண வேண்டியிருக்கு.
“”எப்ப பார்த்தாலும் நானே எடுத்து போட்டுகிட்டு திங்கணும், எந்த ஒரு வீட்டு வேலைக்கும், இப்படி நீ செய்; நான் செய்யறேன்னு ஏலம் போடறதை சகிச்சுக்கணும், எவ்ளோ டார்ச்சர்… எல்லாம் எங்கம்மாவால வந்த வினை.
“”போகட்டும் போகட்டும்ன்னு பார்த்தா, நீ என்னை கமாண்ட் பண்ற, லீவ் போடுங்க, பர்மிஷன் போடுங்கன்னு… நான் வேலை பாக்கறது கார்பரேட் கம்பெனில. அது என்ன உங்க கவர்மென்ட் ஆபிஸ்ன்னு நினைச்சியா? யூனியன், மண்ணாங்கட்டின்னு வேலை செய்யாம அழிச்சாட்டியம் செய்யறதுக்கும், ரூல்ஸ் பேசறதுக்கும்? மனுஷனோட அவஸ்தை புரியாம பேசி கிட்டிருக்காதே… என்ன சொன்னாலும், என்னால டாக்டர் வீட்டுக்கெல்லாம் போக முடியாது, புரியுதா?”
வீடதிர கத்தி விட்டு, தன் பாட்டுக்கு அலுவலகம் கிளம்பினான் குணா.
எரிச்சலுடனேயே ரிசப்ஷன் பகுதியைத் தாண்டி, வேலையிடத்துக்குள் நுழைய தன் அனுமதி அட்டையை தேய்த்தான். சிவப்பு விளக்கு எரிந்தது. அட்டையை துடைத்து விட்டு, இரண்டு மூன்று முறை தொடர்ந்து தேய்த்தும், “பீப்… பீப்…’ என்ற ஒலியுடன் சிவப்பு விளக்கே தொடர்ந்து எரிந்தது. குழப்பத்துடன் திரும்பியவனை பரிதாபமாகப் பார்த்தாள் ரிசப்ஷனிஸ்ட் மாலதி.
“”என்ன மாலதி இது? காலங்கார்த்தால இந்த அக்சஸ் கார்டு சொதப்புது… ஏகப்பட்ட வேலை கிடக்குப்பா.”
“”ஐ ஆம் சாரி டு சே திஸ் குணா… இனி லே ஆப் பண்றவங்களோட அக்சசை உடனடியா நீக்கிருவாங்க. உங்க நேம் இன்னிக்கு லிஸ்டில் இருக்கு. உங்க செட்டில் மென்ட் டீட்டெயில்ஸ் பத்தி பேச, எப்ப வரலாம்ன்னு ஹெச் ஆர்கிட்டேர்ந்து உங்க பர்சனல் மெயில் ஐடிக்கு மெயில் வரும். இப்ப…” எப்படி முடிப்பதென்று தெரியாமல் இழுத்தாள்.
ஓரளவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று நினைத் திருந்த விஷயம் தான் என்றாலும், அடுத்த நொடியிலிருந்து நீ இங்கே தேவையில்லை என, திடீர் என தூக்கி யெறியப்படுவதின் அதிர்ச்சி தாங்க முடியாத தாகத் தான் இருந்தது. கண்கள் கலங்கி விடுமோ என்ற பயத்தில், மூக்கை உறிஞ்சி சமாளித்துக் கொண்டு, பரிதாபமாக புன்னகைத்தான் குணா.
மாடிப்படியருகில் கையில் புகையும், சிகரெட்டோடும், ஓரளவு கலங்கிய கண்களோடும் சுந்தரமூர்த்தி நின்று கொண்டிருந்ததும், தன்னை பார்த்ததும் வேறு புறம் திரும்பியதும், நினைவுக்கு வந்தது குணாவுக்கு. ஒரு வேளை அவனும், இன்றைய பலி ஆடுகளில் ஒருவனோ என்ற எண்ணத்தோடு, வேகமாய் அவனை நோக்கி போனான்.
குணாவின் முகத்திலிருந்தே அவனுக்கும் தன் கதி தான் என்று புரிந்து கொண்ட சுந்தரமூர்த்தி, ஏதும் பேசாமல் ஆதரவாய் குணாவின் தோளில் கை வைத்தான்.
“”லாபம் குறையுது, ஆட்குறைப்புன்ற தெல்லாம் கூட சரி தான். ஆனா, இப்படி திடுதிப்புனு சொல்றது தான், மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்ன அநியாயம்டா இது?”
பேச எதுவுமில்லாது போல மவுனமாக இருவரும் நெடுநேரம் நின்றிருந்தனர்.
“”சரிப்பா. போய் ரெஸ்யூமை தூசி தட்டி எடுத்து, எல்லா ஜாப் வெப்சைட்லயும் ஏத்துவோம். வேற என்ன பண்றது?” என்றபடியே கிளம்பத் தயாரானான் குணா.
“”உனக்கென்னப்பா கழுத்தை பிடிக்கற அவசரம்? என்னப் போல அடுத்த மாச ஈ.எம்.ஐ.,லேர்ந்து அரிசி பருப்பு வரைக்கும், எல்லாத்துக்கும் கவலைப்பட வேண்டிய நிலையிலயா இருக்க? வேலைக்குப் போற, அதும் கவர்மென்ட் வேலைக்குப் போற பொண்டாட்டி… உன்னை போல கொடுத்து வச்சவன் யாருமில்லைடா… நிதானமா கூட ஜாப் தேடலாமே… சரி, ஆல் த பெஸ்ட். அப்பப்ப மெயில் பண்ணுடா… பை…”
முதல் முறையாக வேலைக்குப் போகும் மனைவி வாய்ப்பது அதிர்ஷ்டம் என்று ஒருவர் சொல்கையில், மறுத்துப் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றிருந்தான் குணா.

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *