புனரபி பயணம்

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,214 
 

மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்; ஜன்னல் கம்பிகளில் தலை சற்றைக் கொருதரம் இடிபடுவதைப் பற்றிய லட்சியம் ஏதுமின்றி, சன்னமான விசும்பலுடன் காயாத கண்ணீர்கோடுகளுடனும்… பாவம், வயதானவள் ; அறுபதுக்கு மேலிருக்கும் நிச்சயமாய்…

கூட இருந்த பெரியவரும் அப்படியே ! பேச்சில்லை ; ஓரிருமுறை இருமியதோடு சரி ! வழியில், ஓரிடத்தில் வண்டியை விலகித் தள்ளி நிறுத்தச் சொல்லி, இறங்கிப்போய், ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், அவனுக்காக ஒரு குளிர்பானமும் வாங்கி வந்தார்.
தண்ணீரால் முகம் கழுவிய கையோடு, சின்ன மருந்துக் குப்பியைத் திறந்து ஒரு மாத்திரையை எடுத்து அவசரமாய் நாக்கடியில் திணித்துக்கொண்டார். வண்டி புறப்பட்டதும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து “”சிவ,சிவ” இடையில் திடீரென்று வந்த விழுகின்ற, ஒரு வேகமான “”சிவ,சிவ”வும், எதையோ பொறுக்க மாட்டாதடவராய்த் தலையை அடிக்கடி உலுக்கிக் கொள்வதும் அவர் பெருந்தவிப்போடு இருப்பதை உணர முடிந்தது. குறிப்பாய், சிவந்து இடுங்கிய கண்களில் தெரிவது வெறும் சோகம் என்று மட்டும் தோணவில்லை பெருமாளுக்கு !

புனரபி பயணம்

இன்னும் நாற்பது கி.மீ.தான். “”ஏக்” தம்மில், ஒரே அழுத்தமாய் அழுத்திக்கொண்டு சேர்த்து விடலாம் ; மனசுக்குள் கணக்குப்போட்டு வண்டியின் வேகம் கூட்டினான் பெருமாள்.
சைக்கிளில் நண்பர்களுடன் சேர்ந்து ட்யூசன் போனவனாம்; ரௌண்டானாவில் லாரிக்காரன் கண்மண் தெரியாமல் திரும்பியிருக்கிறான். மூன்று நாட்கள் ஆஸ்பத்திரி வாசம்; செயற்கை சுவாசம்; இன்று காலையோடு அதுவும் கூட முடிந்து போனது!

ரிசப்னிஸ்ட் அம்பிகா சொல்லிக்கொண்டிருந்தாள்.””படிப்புக்காக தாத்தா வீட்டுக்கு வந்த புள்ளையாம்ப்பா! பெத்தவங்க வேலைக்குப் போறவங்க… புள்ள, சாயங்காலம் ஏழுமணிவரைக்கும் ஒண்டியாத்தானே இருக்கு? பாவம்ன்னுட்டு, “”நாங்க ரெண்டுபேரும் சும்மாத்தான இருக்கோம்? அவனுக்குன்னு என்ன தனி உலையா வைக்கப் போவுது?”ன்னு சொல்லி தாத்தாக்காரர்தான் சண்டை போட்டு அழைச்சிட்டு வந்தாராம் புள்ளைய! விதி…ம் !”

காலம், இருந்திருந்து, இந்த எழுபது வயசுக்கு மேல், அவர் தலையில் தீராதத் தீயை அள்ளிப் போட்டிருக்கிறது. வேறென்ன?
முதல்நாள் சாவியைக் கையில் கொடுக்கும்போதே, சூப்பர்வைஸர் சொல்லிவிட்டார். “”தண்ணி போடாதே; சிகரெட் புடிக்காதே; இஷ்டத்துக்கு லீவு சொல்லாதே. இது எல்லா டிரைவருக்கும் உள்ளதுதான் பெருமாளு!

ஆனால், ஆம்புலன்ஸூ வண்டி ஸ்டிரியங்கப் புடிக்கிறவனுக்கு இன்னோன்னும் உண்டு. “”சென்ட்டிமெண்டே” கிடையாது.அந்தக் கிருஷ்ண பராமாத்மா வாட்டம் “”ஒ-ர்-ரே- மனசோட” வேலை பார்க்கணும்; கேட்டியா? வண்டி ஓட்டுறதுக்கு மட்டும்தான் நீ பொறுப்பாளி; வேறயெதுக்கும் கிடையாது.பொழச்சா<லும் சரி… போனாலும் சரி ! அதுக்குன்னு இந்த வேலையாச் போச்சேன்னும் சொணங்கிடாதே ! என்ன?”

தலையாட்டி வைத்தான்.பூம் பூம் மாடாட்டம்.
சாப்பாடு, தண்ணி, தூக்கம் போல-துக்கமும் கூட வாழ்க்கையில் நித்திய நியதியாகிப் போகுமென்று அவன் அறிந்திருக்கவில்லை அப்போது!

பயமாயிருக்கிறது இப்போது. வரவர எதையும் சாவோடே சிந்தித்துப் பார்க்கிறது; வாழ்க்கையின் வண்ணமே சோகமும், சோகம் சார்ந்ததாகவும்…

சூப்பர்வைஸரும், ரிசப்ஷனிஸ்ட்டும் கண்ணயர்கிற நேரத்தில், கந்தசாமி வாட்ச்மேன், அவனிடம் வருவார்; பேச,தூக்கத்தை விரட்ட… எதிலேதிலோ மோதி, பேச்சு, ஒருநாள் இவனிடமே திரும்பியது; “”நீ போகயில <உன் எதிர்க்கப் பொணம் வரது “”அவ்வளவு” நல்ல சகுனம் பெருமாளு!”

“”ப்ச்! தாத்தா,செத்த சும்மாயிருக்கியளா?”

“”நெசந்தாண்டான்னா…”

“”என்னா நெசம்? பொணத்துக்கூடவே வரது? பொழுது விடிஞ்சு போழுது போனா ரெத்தத்தையும் சாவையுமே தூக்கிட்டு அலையறது? இதெல்லாம் அப்ப “”ரொம்ப,ரொம்ப” நல்ல சகுனமா? ம்? சொல்லு தாத்தா? அப்பன்னா, நான் ரொம்ப நல்லாயிருக்கின்றியா?” பொங்கினான் பெருமாள்.

“”டேய் பெருமாளு! நீயென்னத்த திருடுறியா? வறண்டுறியா ? ஒண்ணுக்குப் பத்தா வச்சு ஏய்ச்சிப் பொழைக்கிறியா ? ஏண்டா மனசுப் போட்டு அலட்டிக்கிற ? ஹூம் ! தெய்வம் உனக்குன்னு காமிச்சிருக்கு? என்ன பண்றது ? எல்லாருக்குமே பல்லாக்குலப் போகணும்னாத் தூக்குறது யாரு ? சொல்லு ?”

அவர் ஏதோ தத்துவார்த்தமாகச் சொன்னபோதுகூட, அவனுக்குத் திடுமென்று, தொலைக்காட்சிகளில் பார்த்த “”அகோரிகளின்” ஞாபகம் வந்து விட்டது !

மூன்று முறை, பத்தாம் கிளாசில் “”கோட்டடித்த பெருமை”அவனுடையது !

இந்தப் பெரிய ஆஸ்பத்திரியின் உள்ளே “”நுழைய முடிந்ததே” போன ஜென்மத்துப் புண்ணிய பலன் !

ஆனாலும், அறிமுகப்படலம் தொடங்கி வாடகைக்கு வீடு தேடுவது வரை… எல்லாச் சமயத்திலும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன அசூயையை, நாசூக்கான விலகலை… ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, தோளில் கை போடத் தயங்கும் தோழமையை.

அப்போதெல்லாம், “”குபுக்” என்று நெஞ்சில் பாய்ந்தேறிக் கொள்கிற ஒன்றை என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை ! அதிலும் குறிப்பாய், இதுபோன்ற சிறுபிள்ளைகளின் மரணம் என்றாலே, ஒரு வாரத்திற்கு ஒன்றும் புரிபடாது பெருமாளுக்கு ! எத்தனையோ முறை, கையில் எடுத்துவிட்ட விபூதியை பூசிக்கொள்ள மனமின்றி, விசிறி விட்டு வந்திருக்கிறான் ! எப்ப வருவாள் ? எப்ப வருவாள்? என்று பார்த்திருந்து, மகள் ரம்யா உள்ளே நுழைந்ததும், பாய்ந்து, புத்தகப்பையைப் பிடுங்கி வீசி, அவளை மடியில் உட்கார்த்தியபடி ஏதோதோ யோசனைகளில் தொலைந்து போயிருக்கிறான்.

அது ஒரு ஜனவரி; புது வருஷத்தின் முதல் அழைப்பு ! பைப்பாஸில் விபத்து; தகவலே-தாமதம்தான்! நிறைய ரத்தசேதம்! அடிபட்டவன் குடித்துத் தொலைந்திருந்தான் போலும், மிக முயன்றும் தோற்றுப் போனார்கள் !
ஆனால், அடிபட்டவனின் அப்பா, அவனைத் தேடி வந்து ஓங்கி அறைந்தார். “”அடிபட்டு, ஒன்றரை மணி நேரம் கழிச்சு ஆடம்பரமா வந்தியே ? போனியா? பாவி ! உன்னாலதாண்டா!” என்று அவன் சட்டையைப்பிடித்து உலுக்கி, வசவை வாரியிறைத்தபோது, அவன் முற்றிலும் தளர்ந்து போனது நிஜம்!
“”கடவுளே இந்த வேலை வேணாம்போதும் ! என்னை விட்டு விடு…”மன்றாடினான். சூப்பர்வைஸரிடம் சொன்னபோது மசியவில்லை. “”திடீர்னு சொன்னா எப்படிப்பா பெருமாளு ? இதப் போயி பெருசு பண்றியே ? இந்த காலத்துல டாக்டருங்களையே இழுத்துப் போட்டு புரட்டிருறாங்க ஜனங்க. ம்…ம்? ஒண்ணு செய்யேன்; நீவேணா, ஒரு ரெண்டு நாளைக்கு லீவு எடுத்துக்க!” எனப் பெரியமனதுடன் சொன்னார் ! பெருமாள் நகராமல் நின்றதைக் கண்டதும், “”அட, என்னப் பாக்கற? இந்த ரெண்டு நாளே நீ இல்லாட்டிப் போனாச் சங்கடம்யா…”

பாராட்டா? தேற்றுதலா? வரமா? சாபமா? என்னவென்று புரியாமல்தான் தேரோட்டுகிறான் பெருமாளு, ஆறு வருஷமாக…
இதெல்லாம் கூட பெரிதில்லை; பொண்டாட்டியே சில சமயத்தில் ஏதாவது குத்தலாய்ச் சொல்லிடும்போது அவன் சரிந்து போகிறான். ஒரேயடியாய் விழுந்து போகிறான்.
ஏதேதோ நினைவுகள்…

தூரத்தில் சாலையோரம் தன் பேரனின் படம் போட்டக் கண்ணீர் அஞ்சலி பேனர்களைக் கண்ட மாத்திரத்தில் அந்தப்பெரியவரின் மூக்கு விடைத்துச் சிவந்தது. புஸூபுஸூ வென்று பெரிதாய்க் கிளம்பியது அழுகை. மஞ்சள் பெயிண்ட் அடித்த வீடு; அதன் அவசர ஷாமியானாவிற்குள் வண்டி நுழைந்தது. நிறுத்திய அதே நொடியில், அலங்கமலங்க இறங்கிய பெரியவரைப் பாய்ந்து எதிர்கொண்டவன்தான் அவர் மகனாயிருக்க வேண்டும்.

“”உங்கள நம்பித்தானே விட்டேன் ? ஏம்ப்பா இப்படி வாரிக் கொடுத்தீங்க?” என்று அவன், அவர் சட்டையைப் பற்றி உலுக்கினான். மகனின் கைகளைத் தன் கையால் இழுத்துத் தன் தலையிலும் நெஞ்சிலுமாக அறைந்துகொண்டார் !

“”ஐயோ! என்றிருந்தது பெருமாளுக்கு; இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தனக்காகக் கூல்ட்ரிங்ஸ் வாங்கிய அவர் கரிசனமா? “”சிவசிவ” வென்று பயணம் முழுவதும் கூடவே வந்த ஓய்வொழிச்சலில்லாத அரற்றலா? அவர் கண்ணில் அலையாடிக் கொண்டிருந்த துக்கம் தாண்டிய இன்னொன்றா?
ஒரு கணம், என்ன செய்கிறோம் என்பதன் தீவிரம் அறியாமல், பெருமாள் பாய்ந்து அவர் பிள்ளையின் பிடியிலிருந்து பெரியவரை விடுவித்தான். “”பாவம், நெஞ்சு வலிக்காரர் வேறு!”
ஆனால், அடுத்த கணம், மிகக் கொடுமையானது. “”ஏய்! இவனை செட்டில் பண்ணி அனுப்பு!” என்று யாரையோ ஏவினான் பிள்ளை. பெரியவரின் பார்வையிலும்கூடப் பட்டென்று ஒரு வித்தியாசம்; புறக்கணிப்பு! இதென்ன அதிகப்பிரசங்கித்தனம் என்பதான ஒன்று! பெருமாள் தன்னைத்தொட்டு அழுக்காக்கியதைச் சரி செய்வதுபோல் வெடுக்கென்று ஒருமுறை தன் உடம்பை உதறிக்கொண்டான் !

“”ப்ச்! பழக்கப்பட்டதுதான்! பெருமாள் சமாளித்துக் கொண்டான்! மௌனமாய் ஒருகணம், கிடத்தப்பட்டிருந்த அந்தப் பையனின் முகத்தைப் பார்த்துவிட்டு வெளியேறினான்.

வழியில் ஒரு மோட்டார் கொட்டகையில் நிறுத்தி, வண்டியைக் கழுவியபின் தானும் குளித்தான்; அம்மாவின் குரல் கேட்கவேணும் போலிருந்தது. அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். மறுமுனையில் அவள், “”நா…னே, உன்னைக் கூப்பிடணும்னு இருந்தேன்…ய்யா” என்ற போது தண்ணென்றிருந்தது.

“”சொல்லும்மா…”

“”நம்ம கீழத்தெரு நல்லகண்ணு மவன்… புத்திகெட்டுப் போயி மருந்தக்குடிச்சிட்டான்.நெலமை ரொம்ப மோசமாயிட்டுப்பா. பாவம், அவங்க அம்மாக்காரி மட்டும் தனியா என்ன பண்ணுவான்னு நானும் கூடவே போனேன்யா. பாதிவழியிலேயே “”தீந்துபோச்சு!”என்ன உடு, வயசுப்புள்ள நீ; தெனப்படிக்கும் “”இதயே” எப்படிப்பா?… நீ வந்துருய்யா…நெதம் ஐய்யரவும் பதட்டமுமா வேலைக்குப் போனின்னாக்கா, காசு வரும்; நிம்மதி வருமாய்யா? போவட்டும்! இந்தச் சாமி மலைல ஒரு பூக்கடை வெச்சாவது பொழச்சுக்கலாம் ! சொன்னாக் கேளுப்பா!” குரல் கரகரத்துத் தேயத் தேய வார்த்தைகளுக்காகத் தடுமாறினாள் !

காத்திருந்தவன் போல பொதுத் தொலைபேசியென்றும் பாராமல், “”ஓ”வென்று உடைந்து, கண்ணீரில் கரையத் தொடங்கினான் பெருமாள் !

– ரோஷினி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *