குறையொன்றுமில்லை!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,930 
 

புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி வந்து கொண்டிருந்தது 420 வேன் ஒன்று. ஒரு வழியாக மேடு ஏறி ஓரிடத்தில் ஓரங்கட்டி நின்றது. வேனில் வந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். மொத்தம் எட்டு நபர்கள் அதில் இருவர் பெண்கள். துப்பாக்கியுடன் இரண்டு போலீஸ்காரர்களும். சாலையின் ஓர் ஓரத்தில் ஒரு தற்காலிக கீற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. நான்கு பக்கமும் கீற்றறினாலேயே அடைக்கப்பட்டிருக்க, முகப்பில் பட்டேரி ஊராட்சி – வாக்குச்சாவடி என்று எழுதப்பட்ட போர்டு ஒன்று தொங்கி கொண்டிருந்தது.

வேனில் கொண்டு வந்திருந்த பொருட்கள் மற்றும் தத்தம் லக்கேஜ்களை இறக்கி அந்த கொட்டகைக்குள் வைத்தார்கள். இந்த மலைக்கிராமத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. பட்டேரி ஊராட்சி மன்ற தேர்தல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தல். அடிவாரத்தில் உள்ள பட்டேரி ஊராட்சியை சேர்ந்த ஒரு குக்கிராமம் தான் இது. இந்த தேர்தலுக்கு தான் வக்குப்பதிவு அலுவலர்கள் வந்திருக்கிறார்கள்.

தலைமை வாக்குச்சாவடி அலுவலர், கொட்டகைக்குள் நுழைந்து சுற்றும்முற்றும் பார்த்தார். வாக்குச்சாவடி அமைப்பதற்கான எந்த உலகரணங்களும் அங்கு இல்லை. உட்காருவதற்கு ஒரு பெஞ்ச் கூட இல்லை. சரியா வந்து மாட்டிக்கிட்டோம். போலிருக்கு சார். ஒரு பெண் அலுவலர் முனக. மலைக்கிராமம் தானே. பள்ளிக்கூடம் போன்ற பொதுக்கட்டடம் எதுவும் இல்லாததனால் தான் டெம்பரரி கொட்டகை போட்டிருங்காக. இந்த ஊர்க்கரங்ககிட்ட கேட்டு எல்லாம் ஏற்பாடு பண்ணிக்கலாம்… கவலைப்படாதீங்க என்றார் தலைமை வாக்குச்சாவடி அலுவர் பாண்டியன்.

ஊராட்சி ஒன்றியத்துக்கு செல்லில் தொடர்பு கொண்டார். உள்ள நிலவரத்தை விளக்கினார்.

பி.டி.ஓ. கிட்ட பேசிட்டேன். வி.ஏ.ஓ. மீனியல் ஒருத்தர் வந்துடுவாராம். அவர் வந்து எல்லா ஏற்பாடும் செஞ்சு தருவாராம். சரி. சரி.. யாராவது வெளியே போய் அங்கிருக்கிற குடிசைகள்ல ஏதாவது நாற்காலி பெஞ்ச் கிடைக்குதான்னு பாருங்க.

ஓரிருவர் வெளியே செல்ல பாண்டியன் கெட்டகையை விட்டு வெளியே வந்து சுற்றும்முற்றும் பார்த்தார். ஓங்கி வளர்ந்த பச்சைப்படேல் காட்டு மரங்கள். மத்தியான வெயில் சுள்ளென்று அடிதாதாலும் சூழ்நிலையோ குளுமையாகவே இருந்தது.
கண்ணுக்கு எட்டியதூரம் வரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சோளத்தட்டைகள் வேய்ந்த குடிசைகள். ஓரிரு கிழடு கட்டைகள் தவிர, ஜன நடமாட்டம் அதிகம் காணோம். வேலை வெட்டிக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது. வெளியே சென்றவர்கள் ஒன்றிரண்டு ஓலைப்பாயுடன் வந்தார்கள்.
மரப்பலகைகள் எதுவும் இல்லை சார்…. இந்த ஓலைப்பாய் தான் கிடைச்சது.

சரி சரி.. பாயை கொட்டகைக்குள் விரிங்க.. போலிங் மெட்டீரியல்ஸை சரி பார்த்துடுவோம். ஓலைப்பாய்களை விரித்து வட்டமாக அமர்ந்து கொண்டார்கள். நடுவில். கொண்டுவந்திருந்த தேர்தல் பொருட்கள்.

முருகையன் ஸார்… நீங்க வோட்டு பெட்டிகளை திறந்து பாருங்க… சரியா லாக் ஆகுதான்னு சரி பார்த்துடங்க… டீச்சர் நீங்க லிஸ்ட்படி எல்லா பொட்களும் இருக்கான்னு வெரிப்பை பண்ணுங்க. நான் வோட்டு சீட்டுகளை சரி பார்க்கிறேன்.
அவரவர் அனைத்தையும் சரி பார்க்க தொடங்கினார்கள். முக்கியமா வாக்காளர் பட்டியலும் பிரித்தறி சின்னமும் நம்ம போலிங்ஸ்டேஷனுக்கு உரியது தானான்னு பாருங்கள். இன்டெலிபிள் இங்கும், ஆரோகிராஸ் மார்க்கும் போதுமான அளவு இருக்கான்னு பார்த்துடுங்க… பாண்டியன் இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லிக்கொண்டே போனார்.

ஆயிற்று நாளை நடக்கப்போகிற தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிவிட்டது. வாக்குச்சாவடி விவரம். வாக்காளர் மற்றும் வேட்பாளர் விவரம் அடங்கிய போஸ்டர்கள் வெளிப்புறப் பகுதியில் ஒட்டப்பட்டன.

நாற்காலி, பெஞ்சுகள் வந்து விட்டால் வாக்குச்சாவடி தயார். வருவாய் பணியாளரை இன்னும் காணவில்லை. இன்னும் நேரம் தான் இருக்கிறதே… மெதுவாக வரட்டம்.

சற்று சிலுசிலு வென்று அடித்தது. வந்த களைப்பு தீர சற்று தலை சாய்க்கலாம் என்ற எண்ணத்திலே என்ற எண்ணத்தில் உட்கார்ந்த இடத்திலேயே லக்கேஜை தலைக்கு வைத்தபடி பாயில் சாய்ந்தார்கள்.

போலீஸ்காரர் மட்டும் கையில் துப்பாக்கியுடன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஏது தூக்கம்?
மாலை மங்கியது. ரம்மியம் சூழ்ந்து கொண்டது. அலுவலர்கள் எழுந்து கொண்டார்கள். øகாயோடு கொண்டு வந்திருந்த கேன் தண்ணீரை கொண்டு முகம் கழுவிக்கொண்டார்கள்.

வருவாய் பணியாளர் வந்து விட்டார். அடிவாரத்திலிருந்து ஒரு பெஞ்ச். ஒரு நாற்காலி. ஒரு ஸ்டூல் ஆகியவற்றை ஆட்கள் மூலம் தலைச்சுமையாக கொண்டு வந்திருக்கிறார்கள். கூடவே இரண்டு கேஸ் விளக்குகளும், இந்த சாமான்தான் கொண்டு வற்ர முடிஞ்சது. இத வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார். என்று பணியாளர் சொல்ல பார்த்துகிறோம்பா… என்று தலையசைத்தார் பாண்டியன்.

அப்புறம் ஒரு விஷயம் சார்… இந்த பொட்டல்காட்டிலே சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. நீங்க எல்லோரும் கையில் எதாவது ஆகாரம் கொண்டு வந்திருக்கீங்க தானே..
கொண்டு வந்திருக்கோம்பா..

நாளைக்கு வரைக்கும் வச்சிக்கிட்டு சமாளிச்சிக்குங்க… அப்புறம் ஒரேயொரு ரிக்கொஸ்ட்டு… அடிவாரத்துல என் வீடு இருக்கும். என ஒய்புக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. காலையிலிருந்து ஆபீஸிலேயே இருந்துட்டேன். வீட்டுக்கே போகலை. இப்போ சைக்கிள்ல வீட்டுக்கு போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன் சார்…

சரிப்பா… சீக்கிரம் வந்துடு…

வெளியே சலசலவென்று பேச்சு குரம் கேட்டது. மலைக்கிராமத்து மக்கள் வ்நதிருக்கிறார்கள் போலிருக்கிறது.

பாண்டியன் வெளியே வந்தார். அவர்களை பார்த்து கைகூப்பினார். நாளைக்கு இங்க எலெக்ஷன் நடக்க போகுது… அதுக்காக வந்திருக்கோம். இங்க மொத்தம் எத்தனை வோட்டு இருக்கு தெரியுமா?..

பெரிசும் இளசுமாக அரை நிர்வாணக் கோலத்தில் நின்ற கிராம மக்கிளடைதயே ஒரு வர் மட்டும் விஷயம் தெரிந்தவர் போல முன்னே வந்தார். இங்க ஆயிரத்து அம்பது வோட்டு இருக்குது சார்.

எல்லோலையும் கூப்பிடறீங்களா…. வோட்டுப்போடறது எப்படின்னு சொல்லிக்கொடுக்கனும்.

அதெல்லாம் தேவையில்லீங்க… எல்லோருக்கும் வோட்டு போட தெரியும். இதுக்குமுன்னாடி நெறைய தடவ போட்டிருக்கோம்…. நாளைக்கு காலையில் சரியா எட்டு மணிக்கு வோட்டு பதிவு ஆரம்பிச்சிடும்… வேட்பாளர்களுடைய ஏஜென்டுகள் 7.30 மிக்கே வந்துடணும்…

ஏஜென்டா… அப்படின்னா?

இந்த தேர்தல்ல நான்கு வேட்பாளருங்க நிக்கிறாங்க… தேர்தல்ல ஏதாவது தப்புத்தண்டா நடக்க கூடாதுல்ல… அதைக் கண்காணிக்கிறதுக்கா ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்காக ஒரு ஏஜென்ட்டை வாக்குச்சாவடியில உட்கார வைப்பாங்க.
அப்படியெல்லாம் இங்க கிடையாது. சாமி… எந்த வேட்பாளரும் எங் ஊருக்கு வர்றது கிடையாது. என்னப்பா இது ஆச்சரியமா இருக்கு… வோட்டு கேட்கக் கூடா வரலையா?…..

சூரயனும், நிலாவும் தான் எ ங்களுக்கு வெளிச்சம் தர்ற கடவுள். ரொம்ப உசரத்துல இருக்கும் மலையுச்சியில் விழும் சின்ன அருவி தான் தண்ணீர் கொடுக்கும் தெய்வம். மலைப்பாதையே கருங்ங்கல் சாலை. மூலிகையே மருந்து… எங்கள் உழைப்பே ஜீவனம். மத்தவங்களால எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்ல… அதனால எங்களை பார்க் கவெட்கப்பட்டுக்கிட்டு இங்க யாரும் வரமாட்டாங்க.

ஆள் எப்படியிருந்தாலும் பெரிசு விவரமாக தான் பேசினார்.
நான் இப்படிக் கேட்க்கூடாது தான். இருந்தாலும் கேட்கிறேன். ஒரு பள்ளிக்கூட வசதி கூட யாரும் இந்த ஊருக்கு செஞ்சு கொடுக்கல.. ஒரு வசதியும் கிடைக்காத நீங்க வேட்டு மட்டும் ஏன் போடறீங்க.. பாண்டியன் கேட்….

கெக்கே,பெக்கே…. என்று பொக்கை பல் தெரிய சிரித்தார் பெரியவர்.

எங்களுக்கு சூடு. சொரணை இருக்கு சாமி… மத்தவங்களை போல் நாங்க இல்ல… எங்க வேலைய நாங்க சரியா செய்வோம்.
இருட்டத் தொடங்கி விட்டது. கும்மிருட்டு குப்பென்று பற்றிக்கொகண்டது.

கேஸ் விளக்கை எடுத்து ஏற்றி வைத்தார்கள். ததத்தம் உடைகளை மாற்றிக்கொண்டார்கள். அவரவர் கொண்டு வந்திருந்த சாப்பாடு மூட்டைகளை பிரித்து பசியாறிக்கொண்டார்கள்.

கும்பல் கலைந்துபோய் விட்டது.

வெளியே எட்டிப்பார்க்கவே பயமாயிருந்தது. அலுவலர்களுக்கு பல்வேறு டகையான கர்ண கடூர குரல்கள். ஊடே.. பறவைகளின் ஓலிகளும். அவ்வப்போது ஆங்காரமாய் வீசும் காற்றின் ஓங்காரச்சத்தம்.

சூழ்நிலை இறுக்கமாகி போனது.

இப்படியே படுத்துட வேண்டிது தானா?
வேறென்ன செய்றது… பெட்ஷீட்டை எடுத்து வச்சிக்கங்க… அப்படியே ஒருக்களித்துபடுத்துக்கங்க… தூக்கம் வராது. தான். இருந்தாலும் பொழுதை போக்கணுமே… காலையில அஞ்சு மணிக்கு வேற எந்திரிச்சு எல்லாரும் ரெடியாகணும்.
பாண்டியன் கடமையே கண்ணாக பேசினார்.

பூச்சிப்பொட்டு கடிச்சா கூட கேட்க நாதியில்லை… டீச்சர் முனகி கொண்டே கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க தொடங்கினார்.
எங்கிருந்தோ திடீரென்று பேய்க்காற்று வீசியது.

கொட்டகைக்குள் எரிந்து கொண்டிருந்த கேஸ் விளக்கு இரண்டும் அந்த பேய்க்காற்றில் தடுமாறிக் தலைக்குப்புற விழுந்து மேண்டில் உடைந்து போக…

சட்டென்று மீளவும் கும்மிருட்டு கவிழ்ந்த கொண்டது. அலுவலர்கள் செய்வதற்யாது தவிக்க ஆரம்பிக்க பாண்டியன் வெளியே ஓடினார்.

ஐயா… ஐயா… யாராவது வாங்களேன்… ஓங்கி குரலெடுத்து கத்தினார். குரல் கேட்டு தபதபவென்று ஓரிருவர் ஓடிவர விளக்குகள் அனைத்து போனதை தெரிவித்ததும் பயப்படாதீங்க சாமி.. இதோ ஒடனே வந்துடறோம். அடுத்த சில நிமடங்களில் ஆளுக்கொரு தீப்பந்தம் ஏந்திக்கொண்டு ஓடி வந்தார்கள். கொட்டகைக்குள் நுழைந்து மூலைக்கொருவராக உட்கார்ந்து கொண்டார்கள்.

இனி பயமில்லை. நீங்க தூங்குங்க. இவங்க நாலு பேரும் விடிய விடிய இங்க தான் இருப்பாங்க… பெரியவர் சொன்னார்.
வினோத சத்தங்களுடன் நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்து போக விடியற்காலை மூன்று இருக்கும்.

திடீரென்று பல்வேறுவிதமான பதற்றமான குரல்கள். அங்குமிங்கும் தபதப வென்று ஓடும் காலடிச்சத்தங்கள்.
அலுவலர்கள் அனைவரும் அலறி அடித்து எழுந்து கொள்ள
தீப்பந்த ஆள் ஒருத்தன் சொன்னான் ஒண்ணுமில்லை ஐயா… நீங்க காலையில் குளிக்கறதுக்காக தண்ணி கொண்டார மலையுச்சிக்கு எங்க ஆளுங்க போனாங்க.. அதுல ஒருத்தனுக்கு இருட்டுல பாம்பு கடிச்சிட்டு தான்.. அதான் மருந்து வக்கிறாங்க.
தெய்வமே.. என்றார் பாண்டியன். அதற்கப்புறம் யாரும் படுக்கவில்லை. ஆயிற்று. ஐந்து மணி ஆகிவிட்டது.
எல்லோரும் எழுந்து பல்துலக்கி குளிக்க தயாரானார்கள்.
எங்கே போய்க்குளிப்பது?

யாரும் குளிக்க வேணாம்.. இருக்கிற தண்ணிய வச்சிக்கிட்டு பல்லை மட்டும் துலக்கிடுவோம். பெரியவர் அரக்கபரக்க ஓடி வந்தார்.

மலையுச்சிலிருந்து தண்ணி கொண்டாந்து கொப்பரையில் ஊத்தி வச்சிருக்கோம். போய் நல்லா குளிங்க.

குளித்தார்கள். குளித்த பின் சுக்கு காப்பி மணக்க மணக்க கொண்டு வந்து கொடுத்தார்கள். மனம் சுளிக்காமல் வாங்கி சுவைத்தார்கள்.

காலை ஆகாரம் கேப்பங்கூழ் வந்தது. அமிர்தமாக இருந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

தேர்தல் முடிந்தது. வாக்குச்சாவடி ஆவணங்கள் அனைத்தையும், வேனில் வந்திருந்த தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு அந்த வேணிலேயே அனைவரும் புறப்பட்டார்கள்.

இந்த வாக்குச்சாவடியில் எத்தனை பர்சன்ட் போலிங்க் ஆச்சு? தேர்தல் அதிகாரி கேட்க.

நூறு சதவிகிதம் சார்.. என்றார் பாண்டியன்.

என்னது? ஆச்சரியமாயிருக்கே…

ஆமா ஸார்.. இத்தினிக்கும் இந்த ஊருக்கு எந்த வசதியும் யாரும் செஞ்சு கொடுக்கல… லைட் வசதி, குடிதண்ணீர் வசதி எதுவும் கிடையாது. ஒரு பள்ளிக்கூடம் கூட கிடையாது. இருந்தாலும் நூறு சதவிகித வோட்டு போட்டிருக்காங்க. கேட்டா எங்களுக்கு எதுவும் செய்யலன்னாலும் எங்க உரிமையை நாங்க தவறவிடமாட்டோம்கிறாங்க.

நேத்து ராத்திரி தண்ணி கொண்டு வரப்போயி பாம்பு டிச்சி, வைத்தியம் சரியா பண்ண முடியாம ஒருத்தன் செத்துப்போயிட்டான் சாமி. அதனால் தான் அந்த ஒரு வோட்டு கொறைஞ்சி போயிட்டுது. பெரியவர் சொன்னதும், தேர்தல் அதிகாரிக்கே என்னவோ போலாகிவிட்டது.

சாமி,.. என்றான் ஒருவன் கூட்டத்தில் அரசாங்கம் எங்களுக்கு எதுவும் செய்யலன்னாலும், அதனோட ஆபீஸர்களுக்கு நாங்க ஏதாவது குறை வச்சோமா சாமி.. உங்க எல்லோருக்கும் திருப்திதானே.

அப்பாவியாய் அவன் கேட்க, மனத்தை பிழிந்தது அலுவலர்களுக்கு.

– ஜோதிநகர் சிவாஜிகிருஷ்ணா. (அக்டோபர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *