பிறர் தர வாரா….?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 7,285 
 
 

கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் இந்தத் தெருவில்தான் பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து, பின்பு வாழ்க்கைப்பட்டு போனவள். அவளுடைய சமவயது நண்பர்கள், நண்பிகள், மூத்தவர்கள், என்னைப் போன்று ஐந்தாறு வயது இளையவர்கள், உறவுக்காரர்கள், என்று எல்லோரும் இன்னமும் இந்தத் தெருவில்தான் வசிக்கிறோம்.. தகவல் கொண்டுவந்த ஆள் இன்னமும் எங்கள் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான் கஸ்தூரி அக்காவின் இரண்டு தம்பிகளுக்கும் தகவல் சொல்ல வந்தவனை தற்செயலாய் மடக்கி விசாரிக்கவும் எங்களுக்கு விஷயம் தெரிந்தது..இது கிராமம். ஒரு புதுமுகம் ஊருக்குள்ள தென்பட்டால் யாரு?, எவரு?, யாருவீட்டுக்கு?,என்ன விவகாரம்?, போன்ற விவரங்கள் கொஞ்ச நேரத்திலேயே  ஊருக்கே தெரிஞ்சி போயிடும்.

“கஸ்தூரிக்கு என்னய்யா உடம்புக்கு?.’

“ஒருமாசமா வுடாத ஜுரங்க. டெய்லி தர்மாஸ்பத்திரியில ஊசி போட்டுக்கிணுதான் இருக்குது, கேக்கல ஜன்னி கண்டுடுச்சின்றாங்க  தெரியல ராத்திரியெல்லாம்  ஒரே பெனாத்தலு.டைபாய்ட்டு ஜுரம்ன்றாங்க,, ஒரு டாக்டரு மலேரியான்றான்,ஒருத்தன் விஷ ஜுரம்ன்றான்.ஒரு டாக்டரு டிங்குஜுரம்மாதிரி தெரியுதுன்றான். த்தூ!ஒரு டாக்டரு சொல்ற மாதிரி இன்னொரு டாக்டரு சொல்றதில்லியே அது ஏங்க? எல்லாரும் ஒண்ணாத்தானே படிச்சானுங்க?..” .

“ எப்பா! இவன் தோலுவாயனாட்டமிருக்கு.. யோவ்! அவ தம்பிங்களுக்கு தகவல் சொல்லிட்டியா?.”

“அட ஏம்பா!. இங்க எனுக்கு சோத்துக்குக் கூட வயி இல்லன்னு தம்பிங்ககிட்ட சொல்லு. நான் கேட்டேன்னு ஒரு ரெண்டாயிரம் ரூவா  வாங்கிக்கிணு வான்னு சொல்லுச்சி. ஆனா இவங்க என்னடான்னா  அத்த திட்றாங்கோபா. . திட்டிப்புட்டு தலைய சுத்தி ஆளுக்கு இருநூறு ரூவா போட்டாங்க, ஈயா பங்கனுங்க.. இது மாரி தம்பிங்கள எந்த ஊரிலியும் நான்  பார்க்கலடா சாமீ!. பாவம்பா கஸ்தூரி. காரும் பங்களாவுமா கெத்தா பொயச்சிச்சாம சொல்லுச்சி.. ஒரு பொட்டப் புள்ளய வேற வெச்சிக்கிணு இன்னிக்கி ஒரு வேளை சோத்துக்கு டிங்கி அடிக்குது.எப்பப்பாரு குந்திக்கிணு அயுதுங் கெடக்கும்..”

” படட்டும்…படணும். அந்தத் துலுக்கன் பின்னால போவாதடீன்னு எம்மாம் சொன்னோம். கேட்டாளா? சரிய்யா! கஸ்தூரிய பெத்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க,கவனிக்க வேண்டிய தம்பிகளும் ஒருத்தனுக்கு ரெண்டு பேர் இங்க இருந்தும் ஒதுங்கறானுங்க. நாங்கள்லாம் வேத்து மனுஷாளுங்கய்யா..நாங்க இன்னா பண்றது?. சரிசரி நீ போய்வா.”;—-இது வெங்கிடேச மாமா. வந்தவன் தலையிலடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்

‘ இருப்பா! கஸ்தூரி அக்கா இருக்கிற அட்ரஸைக் குடு நான் வர்றேன்..”—-அவன் கையில் போக்குவரத்து செலவுக்காக ஒரு நூறு ரூபாய் தாளை வைத்தேன்.. எல்லோரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்ததை., அலட்சியப் படுத்திவிட்டு எழுந்துக் கொண்டேன். கஸ்தூரி அக்காவை நினைக்கும் போது எப்பவும் நெஞ்சில் ஏதோ ஒன்று கனமாய் வந்து அழுத்தும் அவளுடைய பளீரென்ற சிரிப்பும், கரிசனமும்தான் அக்காவின் ஸ்பெஷாலிட்டி. அக்காவின் குடும்பம் ஏழ்மையானது. அப்பா விவசாய கூலி. சொற்ப வருவாய். இதில் இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள். அக்கா மட்டும் அவருடைய முதல் தாரத்தின் மகள் ஆகும். முதல் மனைவி இறந்துபோக, அடுத்து வந்த இரண்டாவது தாரத்தின் பிள்ளைகள்தான் மற்ற மூவரும்.

சாயங்கால நேரங்களில் அவள் தம்பிகளுக்கும், எங்கள் தெருவிலிருக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் ஊர் கூத்து மேடையில் வைத்து பாடம் சொல்லிக் குடுப்பாள். அதற்கு ஃபீஸ் என்று எதையும் கேட்டதில்லை.. பெற்றவர்களே பார்த்து கொடுப்பதை வாங்கிக் கொள்வாள். இல்லையென்றாலும் ஒன்றும் சொல்லமாட்டாள். எனக்குத்தெரிந்து நாலைந்து பேர் காசு இல்லாமல்தான் படித்தார்கள். நன்றாக சொல்லிக் கொடுப்பாள்.சொல்லப் போனால் எனக்கு எட்டாம் வகுப்பில் அல்ஜிப்ராவும், ஒன்பதாம் வகுப்பில் ட்ரிக்னாமெட்ரியும் அக்கா சொல்லிக் கொடுத்ததில்தான் விளங்கியது. அவள் என்ன படித்திருக்கிறாள்?, என்று தெரியாது.ஆனால் ஆங்கிலம்,கணக்கு, தமிழ் அறிவியல் என்று எல்லா பாடங்களையும் சொல்லித் தருவாள் நான் பத்தாம்வகுப்பு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்குகாத்திருக்கும் போதுதான்.அக்காவுக்குகல்யாணம் நிச்சயமாயிற்று .அவள் அப்பா தேடித் தேடி சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு மாப்பிள்ளையை பிடித்து வந்தார். ஒற்றைநாடியாய் ,குள்ளமாய், கன்னங்கரேலென்று. அக்கா நல்ல உயரம், நல்லசிகப்பு., அழகாய் இருப்பாள். தெருவே அதைப் பற்றி பேசி தீர்த்தது.

“தங்க விக்கிரகமாட்டம் பொண்ணுக்கு என்ன மாதிரி  மாப்பிள்ளையை புடிச்சாம் பார்றா, கரிச்சட்டியாட்டம்..”—இது மேலத்தெரு கோபால். அக்கா எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. எனக்குத் தெரியும் அக்காவைத் திட்டித் திட்டி ஒத்துக்க வெச்சிருப்பாங்க.. வரதட்சனை போட்டு கட்டிக் கொடுக்க ஐவேஜு இல்லாத குடும்பம், என்ன பண்ணமுடியும்?.சிலநாள் தனிமையில் அவள் அழுததை நான் பார்த்தேன். கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருந்தோம் விமரிசையாக நடந்தது. பிள்ளை வீடு நல்ல வசதி. போலிருக்கு. கழுத்தில் புதுத்தாலி மின்ன, முகத்தில் வரவழித்துக் கொண்ட சந்தோஷத்துடன், கணவனுடன் சென்றாள்., என்னாயிற்றோ தெரியவில்லை ஆறு மாசத்திற்குள் எங்கள் தெருவுக்கே புருஷனுடன் குடி வந்துவிட்டாள். போன இடத்தில் அவள் புருஷன் செய்து வந்த வியாபாரத்தில் பெரும் நஷ்டம் என்று அக்கா சொன்னாள்..

எங்களூரிலிருந்து மூணு கிலோமீட்டர் தூரத்தில் போளுர் டவுன். அங்கே சின்னதாய் ஒரு சிற்றுண்டி கடை ஆரம்பித்தார்கள். கல்லாவில் அக்கா உட்கார, வீட்டுக்காரர் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். பலகாரங்களின் சுவையோ, இவர்களின் நல்ல நேரமோ?,அல்லது அக்காவின் ஆளுமையோ கொஞ்ச நாளில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அடுத்த வருடமே ஓட்டல் டவுனுக்குள். நல்ல ஜங்ஷனான இடத்துக்கு இடம்  மாறியது. மக்களின் இயல்புகளை அறிந்தவளாக  தோசையில் மட்டும் நாலு வெரைட்டிகள், ஆப்பத்தில் நான்கு ரகங்கள், இட்லியில் கூட மூன்று விதங்கள் என்று பலகாரத் தயாரிப்பில் புதுப்புது டெக்னிக்குகளை அக்கா புகுத்தினாள். சிட்டியிலிருந்து சரக்குமாஸ்டர்களை வேலைக்கு வைத்தாள். சைட்டிஷ்களை சிக்கனம் பார்க்காமல் வாரிவிடச் சொன்னாள்.  வட இந்திய உணவு தயாரிப்பு ரெஸிப்பிகளை தேடிப்பிடித்து மெனு லிஸ்ட்டில் சேர்த்தாள். எங்கள் ஹோட்டலின் ஸ்பெஷல் என்று சில ஐட்டங்களை விளம்பரப்படுத்தினாள்.காலை பத்தரை மணிக்கு மேலே போனால்  டிபன் கிடைக்காது,  மாலை ஆறு மணிக்கு மேலே மாலநேர  டிபன் ஐட்டங்கள் எதுவும் கிடைக்காது என்று வியாபாரத்தில் பரபரப்பை வைத்தாள். அதே சமயம் உணவின் தரத்தை சிறப்பாக நிர்வகித்தாள். சர்வர்களை யூனிஃபார்ம் ட்ரெஸ்ஸில் நடமாட வைத்து, ஹோட்டல் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாள். பாத்திரங்களெல்லாம் கொதிக்கும் நீரில் கழுவப்பட்டன. விளைவு?.மற்ற ஹோட்டல்காரர்கள் வாயைப் பிளக்க, வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது..கனவு போல் ரொம்ப சீக்கிரத்திலேயே அது பெரிய ஹோட்டலாக விரிவடைந்தது..

எல்லாம் அக்காவின் ராசி என்று பேசிக்கொண்டார்கள். அக்கா பூரிப்புடன் பொற்குவியலாய் சரஞ்சரமாய் நகைகளுடன் வளைய வந்தாள். எடுபிடி ஆட்கள், பெரிய வீடு, கார் என்று வசதி பெருகியது. அக்காவின் குடும்பமே இவளால் பிழைத்தது, உயர்வடைந்தது. தங்கை செல்விக்கு அக்காதான் கல்யாணம் செய்து வைத்தாள். அரசு கல்லூரியில் பி.எஸ்.ஸி முடித்திருந்த  தம்பிகள் இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதவைத்து, லட்சங்களை லஞ்சமாகக் இறைத்து தேர்ச்சி பெற வைத்தாள். மொத்தத்தில் அந்த குடும்பத்தை அக்கா ஸ்வீகரித்துக் கொண்டாள். இந்தத் தெருவில் பல குடும்பங்களுக்கு விளம்பரமின்றி உதவி செய்திருக்கிறாள். எல்லாவற்றையும்  இந்த தெரு பார்த்துக் கொண்டுதான் இருந்தது.  அப்படி அவள் தயவில் மேலே வந்த தம்பிகள்தான் இன்றைக்கு ஒதுக்குகிறார்கள். சே! அப்படி அவள் எந்த பெரிய தவறையுந்தான் செய்திருக்கட்டுமே.

எனக்கும் அக்காவுக்குமான உணர்வுகள் பிரத்தியேகமானவை.. நான் அவளுக்கு சொந்தமும் இல்லை, அவளுடைய இனத்தைச் சேர்ந்தவனும் இல்லை. நாலாவது வீட்டுக்காரன். நான் நன்றாக படிப்பவன் என்பதால், எனக்கு ஸ்பெஷலாய் சொல்லிக் கொடுப்பாள். நல்ல மார்க் எடுக்கும்போதெல்லாம் என் தம்பி கெட்டிக்கார தம்பீன்னு.. பாசமாய் தட்டிக் கொடுத்து சந்தோஷப்படுவாள்.  அவளுடைய அந்த ஏழ்மையிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் போதெல்லாம் அவளிடமிருந்து எனக்கு பரிசுகள் கிடைக்கும். ஸ்வீட், பேனா, ஸ்கெட்ச்பென், செட், இப்படி…,நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன்

நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது ஒவ்வொரு நாளும் நான் பரீட்சை ஹாலை விட்டு வெளியே வரும்போது வெளியே நின்றிருப்பாள். அங்கேயே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்ன எழுதினேன், எப்படி எழுதினேன். எவ்வளவு மார்க் வரும்?.மொத்தத்தையும் அங்கேயே முடித்து விடுவாள். யாருக்கு வரும் இந்த குணம்?.அவ்வளவு அர்ப்பணிப்புகளோடு செய்வாள். இப்படி நான் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அக்கா அவளுடைய சொந்தத் தம்பிகளை விட அதிகமாக என்னை ஊக்குவித்திருக்கிறாள். அப்புறம் அவளை எப்படி நான் ஒதுக்க முடியும்?. .

நான் பி.இ. இறுதியாண்டு  படிக்கும்போதுதான் அவள் வாழ்க்கையில் அந்த  பெரிய  சரிவு ஏற்பட்டது.. சரியான திட்டமிடுதலுடன் பணக்காரியாய், பரோபகாரியாய் வாழ்ந்துவந்த அவள் வாழ்க்கை திடீரென்று திசை மாறியது. அவள் புருஷன் ஏற்கனவே குடிகாரர்.. கள்ளநோட்டு விவகாரத்தில். ஒன்றுக்கு மூன்று தருகிறார்கள் என்று பேராசையுடன் அக்காவுக்குத் தெரியாமலேயே, வெச்சிருந்த டெப்பாசிட்டுகளையெல்லாம் காலி செய்து, அங்கங்கே தகுதிக்கு மீறி கடன் வாங்கி பெருந்தொகையைத் திரட்டிக் கொண்டுபோய்  பறிகொடுத்துவிட்டு, உதை வாங்கிக் கொண்டு வந்தார். எல்லா இருப்புகளும் காலி. பெரும் கடனாளியாகி, சீக்கிரத்திலேயே ஹோட்டல் நடத்த முடியாத நிலையில், அதை இழுத்து மூடவேண்டியதாயிற்று. காரை ஃபைனான்ஸ்காரன் ஓட்டிக் கொண்டு போய்விட்டான் .நகைகளையெல்லாம்  விற்று கடன்களை அடைத்தார்கள்.வாஸ்து பார்த்து, வீட்டின் காற்றோட்டம், வெளிச்சம், சேஃப்டி என்று பார்த்துப் பார்த்து வாங்கிய வீடு ஏலத்தில் போயிற்று. பாவி! அவ்வளவு பெரிய தொகையையா நோட்டு மாற்றுவதில் பறி கொடுப்பான் ஒருத்தன்.எவ்வளவுன்றீங்க? ஒரு கோடி… நாடகத்தின் அடுத்த காட்சிபோல எல்லா செல்வ செழிப்புகளும் ஒரேநாளில் மறைந்து போக, வாழ்க்கையின் அநித்தியம் உறைத்தது. ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’—வாழ்க்கையை ஒற்றை வரியில் விமர்சித்த சொற்றொடர் இது. என் அப்பா சொல்லுவார் ஒருவனுக்கு செல்வம் சேருவதென்பது சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிக்கும் போது கூட்டம் சேருவது போலவாம். ஒவ்வொன்றாய் வந்து சேருமாம். செல்வம் நம்மை விட்டு போவதென்பது படம் முடிந்து மக்கள் வெளியேறுவது போலவாம் குபீரென்று போய்விடுமாம். அக்கா விஷயத்தில் அது அப்படியே பலித்து விட்டது..

கொஞ்சநாளில் அவள் புருஷன் மிதமிஞ்சிய குடியில் ராத்திரி படுக்கையிலேயே செத்துக் கிடந்தார்.. அடுத்த அடி இது. பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்.நொடியில் வாழ்க்கை கவிழ்ந்து போயிற்று. உறவுகள் எல்லாம் அடித்துக் கொண்டு அழுதன. அக்கா அழவில்லை. அதிர்ச்சி என்று தெரு சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் அப்புறந்தான் தெரிந்தது, இல்லை விடுதலை. அக்காவின் புருஷன் ஒரு நபும்சகன், ஆரோக்கியமான ஆண்மை இல்லாதவர். அதை வெளிக்காட்டாமல் தன் பிறந்த வீட்டு மக்களின் சந்தோஷத்துக்காக விருதாவான  ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாள். இப்படிகூட யாராவது இருப்பார்களா?. இருந்தாள், அக்கா இருந்தாள். எட்டு வருஷங்கள் அவருடன் உப்புசப்பில்லாமல் ஒப்புக்கு வாழ்ந்திருக்கிறாள். அதனால்தான் அவள் புருஷன் அக்காவை அப்படி தாங்கினார் போல.  மனைவியை அடித்து உதைத்து கொடுமைப் படுத்தும் முரடன்கள் கூட சின்னப் பெண்களை இரண்டாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும்போது பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவதும், பெண்டாட்டிக்காக  பணத்தை வாரி இறைப்பதும், அவளுக்குப் பணிந்து பணிவிடை செய்வதும் எல்லாம் தன் குறையை சரிக்கட்டுவது போலத்தான் என்பதைப் போல , அக்கா பணத்தை தண்ணீராய் செலவு பண்ணியதற்கும் அவர் எவ்வித தடையும் சொல்லாமல் இருந்திருக்கிறார்..  இந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியு.ம். லீவில் நான் வீட்டிற்கு வந்தபோது அக்கா வெளியே சொல்லக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, மேலே சொன்னவைகளை சொல்லிவிட்டு அப்படி அழுதாள்..ஐயோ அக்கா நீ எந்த ரகத்தில் சேர்த்தி?. புத்திசாலியா?, அல்லது ஊரார் சொல்வதுபோல வெகுளியா?.

”தம்பீ! அவராலதான் நல்ல சாப்பாடுகூட கிடைக்காமலிருந்த  எங்க குடும்பம் இன்னைக்கு நல்லா இருக்கு. அதுக்கு இதுதான் விலைன்னு நெனைச்சிக்கிறேன். இறந்து போன மனுஷனை குத்திக் கிளறி அசிங்கப் படுத்துறதில யாருக்கு என்ன லாபம் சொல்லு..”

“த்சு!  அக்கா! ஒரு சிலருக்கு வாழ்க்கை எப்பவும் தெளிந்த நீரோடை மாதிரி, தென்றலாய்  கடந்து போயிட்றது. சிலருக்கு அது எப்பவும் போராட்டமாகவே ஆயிட்றது..”

“என்ன பண்றது தம்பீ?,  சிப்பாயாக பொறப்பெடுத்தா, எப்பவும் சண்டைபோட்டுக்கிட்டேதான் இருக்கணும்..அதான் சிப்பாயின் லட்சணம்னு எங்கப்பா சொல்லுவாரு. நானும் அப்படி பொறப்பெடுத்திருக்கேனோ என்னவோ?…”—-சொல்லிவிட்டு சிரிக்கிறாள். வாழ்க்கையை இவ்வளவு தெளிவாய் யோசிப்பவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லமுடியும்/.

அடுத்த வருஷம் நான் டெல்லியில் எம்.பி.ஏ. வில் சேர்ந்து படிக்கப் போய்விட்டேன். படிப்பு முடிந்து பூனாவில் விப்ரோவில் பணியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்கிறேன் என்பதும், பீட்ஸா, பர்கர், கேஎஃப்சி பக்கெட் சிக்கன், என்று அசைவங்களை உள்ளே தள்ளி, தினமும் பியர் குடிச்சி, எந்நேரமும் காதில் குண்டலம் போல செல் ஸ்பீக்கர்களை மாட்டிக் கொண்டு, இளம் தொந்தியுடன், பெண் சிநேகிதிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டு,…இப்படியே நாலைந்து வருஷங்கள் ஓட்டிவிட்டு , இப்போது தாய் மாநிலம் தேடி சென்னையில் டி.சி.எஸ்.ஸில் சேரப் போகிறேன் என்பதும். அதற்கு  முன்பாக ஒரு பத்து நாள் ஓய்வுக்காக வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்பதுவும் என்னைப் பற்றிய நேற்றுவரையிலான சுருக்கமான என் வரலாற்று செய்திகள்.. இடையில் ஒருமுறை பொங்கலுக்கு வந்திருந்த போது அக்காவைப் போய் பார்த்தேன். அப்படி மாறிப் போயிருந்தாள்.அந்த சிரிப்பும், வாடா தம்பீ! என்று வாஞ்சையாய் முதுகைத் தட்டிக் கொடுக்கும்  அன்னியோன்னியமும்  இப்போதில்லை. வறுமை வரும்போது கூச்சமும் வந்துவிடும் என்பது உண்மைதான். அக்காவிடம் பார்க்கிறேன். அவளுடைய நேர்பார்வை தொலைந்து போயிருந்தது..  ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்கிறாளாம். தம்பிகள் யாரும் இங்கே இல்லை. சென்னையில் வேலை செய்கிறார்களாம். அவர்கள் ஏதாவது உதவி செய்கிறார்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு பேச்சுக்கு மாறிவிட்டாள்.

“அக்கா! நீ வேற கல்யாணம் பண்ணிக்கோக்கா. அதாங்கா உனக்கு நல்லது. உத்தமியா இருந்தாக்கூட விதவைன்னா ஊர் ஆயிரம் புறணி பேசுங்க்கா. வேற ஒருத்தியா இருந்தா உனக்கு ஏற்பட்ட இந்த  வாழ்க்கைக்கு எப்பவோ வேற ஒருத்தனை தேடிக்கிட்டு இருப்பாங்க. ஆமாம்..’

“டேய்! பெரிய மனுஷா போயிட்டு வாடா..”—— கிளம்பும் போது வற்புறுத்தி அவள் கையில் ஆயிரம் ரூபாய் தாள்கள் ஐந்தை வைத்துவிட்டு கிளம்பினேன். அடுத்த பொங்கலுக்கு வந்தபோது அக்கா இல்லை. யாரோ ஒரு துலுக்கனுடன் ஓடிவிட்டாளாம்., வெங்கிடேச மாமா எரிச்சலுடன் சொன்னார். ஊரே காரி துப்பியது. இன்னும் சிலருடன் கூட தவறான உறவு உண்டுன்னு கதை கட்டினார்கள். அப்படி இருக்க வேண்டும் என்பது இவர்களின் அரிப்பு, வக்கிரம். அவள் ஒரு முஸ்லீமை விரும்பி இணைந்தது அவ்வளவு பெரிய குற்றமா?. இவர்களெல்லாம் எந்த யுகத்தில் வாழ்கிறார்கள்?. இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நல்லபடி அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அக்காவின் இந்த துணிச்சல் ஒரு பக்கம் எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. நசை வேகம் என்கிறார்களே அது இதுதானா?. எட்டு வருஷங்கள் ஒரு துறவியாய்  வாழ்ந்தவளுக்கு, ஒரு நொடியில் ஒருத்தனை நம்பி எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு மதம் மாறி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் துணிச்சலும் வந்திருக்கிறதே. .

அதற்கடுத்த வருஷம் வந்தபோது அக்கா நம்பிப் போன அந்த முஸ்லீம் அவளை விட்டுட்டு ஓடிப் போய் விட்டானாம். ஐயோ! அக்கா.நீ நிஜமாகவே சிப்பாய் பொறப்புதானா?. முத்துமாமா அந்த விஷயத்தை குரூரமாய் சிரித்துக் கொண்டு  சொன்னார்.

“இப்ப கோயம்பத்தூர் பக்கம் எங்கியோ பணக்கார வீட்டுப்  பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் ஆயா  வேலை செய்து வயித்தை கழுவுகிறாளாம். துலுக்கனுக்கு பொறந்தது ஒரு பொண்ணு. அது அவ கூடத்தான்  இருக்காம்.. அவ்வளவுதாம்பா தெரியும்.”—-என்றார் முத்துமாமா

அதற்கப்புறம் வந்தபோதெல்லாம் எதுவும் செய்தி இல்லை. அந்தப் பெண் குழந்தையும், ஆயா வேலையும்தான் இனி அவள் வாழ்க்கை என்பதுடன் அவள் குடும்பமும், இந்தத் தெருவும் அவளை மறந்து விட்டன. பாவம் அக்கா. அவளுடைய புத்திசாலித்தனத்திற்கு எந்த வேலை செய்தாலும் நெம்பர் ஒன்னாக வருவாள். ஹோட்டலை என்ன திறமையாக நடத்தினாள்?.ஆனால் பணம் இல்லாமல் என்ன செய்யமுடியும்?. . பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.  .

காலை எட்டு மணிக்கெல்லாம் நெற்குன்றம் போய் இறங்கினேன். ஆனி கருக்கு இருட்டிக் கொண்டு லேசாய் கொசுத்தூறல் போட்டுக் கொண்டிருந்தது. அக்கா இந்த ஏரியாவில்தான் தற்போது இருப்பதாக  வந்தவன் அட்ரஸ் கொடுத்திருந்தான்.. அவனிடம் அட்ரஸ் வாங்கி இரண்டு நாட்களுக்கப்புறந்தான் என்னால் வரமுடிந்தது. .ஒரு முஸ்லீமுடன் வாழ போனதற்கப்புறம் இப்போதுதான் அவளை பார்க்கப் போகிறேன். வாழ்க்கையைத் தேடிப் போய் தோற்றதினால் சங்கடப் படுவாள். எப்படியும் அவளை கூட்டிப்போய் ஒரு நர்சிங்ஹோமில் சேர்த்து வைத்தியம் பார்க்கும் முடிவுடன் தான் வந்திருக்கிறேன், அக்காவுக்கு செய்யும் காணிக்கையாக மதிக்கிறேன். நெம்பர்—8, பிள்ளையார் கோவில் தெரு. விசாரித்துக் கொண்டு சென்றேன்..குறுகலான தெரு, ஏழ்மையான தெரு பார்க்கும்போதே தெரிகிறது. தெருவோரங்களில் நிறைந்து கிடக்கும் மனிதக் கழிவுகளின் நாற்றம். கொஞ்ச நேரம் அங்கே நின்றால் மூக்கில் ரத்தம் சொட்டும். நடுநடுவே தெருக்களில் சாக்கடை ஆறு ஓடுகிறது. அடைஅடையாய் ஈக்களும் கொசுபடைகளும். நடந்தேன். முருங்கை மரத்து வீடு என்றானே அந்த ஆளு. அந்தத் தெருவில் நாலைந்து வீடுகளின் முன்பு முருங்கை மரம் இருந்தது. எதிரிலிருந்த கடையில் விசாரித்தேன்.

”இங்க கஸ்தூரின்னு ஒருத்தர்.” ——-கடைக்காரன் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அதோஅந்த  முருங்கை மரத்து வூடு. ஒலைகுடிசை கீதே அதான்.”

வெளியே ஒரு வயதான பொம்பளை உட்கார்ந்திருந்து மல்லிகைப்பூ தொடுத்துக் கொண்டிருந்தாள். வீட்டின் எதிரில் சாக்கடை வெள்ளம்.நாற்றம் தாங்கவில்லை.இங்கியா வசிக்கிறாள்?..

“ஏம்மா! இங்க கஸ்தூரின்னு…’—– என்னை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே எழுந்து போனாள்.

“அடியே கஸ்தூரி! உன்னை தேடி யாரோ வந்திருக்காங்கடீ.”

உள்ளே ஒரு பெண் குரல் ஐயோ!…அம்மா! என்று முனகும் சத்தம் கேட்கிறது.அது அக்காவின் குரல்தான்.

“ஆ…எம்மா…எப்பா…அக்கா! முடியலக்கா. .மூணு நாளா ஒரு பருக்கை தொண்டையில எறங்கல..ஐயோ! தலை வெடிச்சிப் போவுதுக்கா.”

“சரிடீ! அந்த ஆளு வெளியே காத்துங்கீறாங்கடீ. எழுந்திரு. இந்தா இந்த டீயை குடிச்சிட்டுப் போய் பாரு..”

“அக்கா! அதோ மாடத்தில ஜுர மாத்திரை இருக்குது பாரு அதை கொஞ்சம் எடு, போட்டுக்கிணு போறேன். எம்மா!.”—–

அக்கா! தேவதையே! தேவதைகள் கூட சில காலம் சாப விமோசனத்துக்காக இந்த பூவுலகில் பிறந்து, அல்லல்பட்டு, சீரழிந்து சாபநிவர்த்தியாகி, பின்னர் சொர்க்கம் போய் சேருவார்களாமே, நீ எந்த சாபநிவர்த்திக்காக இந்த பூமியில் பிறந்து இப்படி அல்லல் படுகிறாயோ?.

இப்போது அந்த பெண்மணி என்னை உள்ளே கூட்டிச் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார வைத்தாள். ,வருவாங்க இருங்க என்று சொல்லிவிட்டு தெருத் திண்ணைக்குப்  போய் விட்டாள். உள்ளே  இருட்டாயிருந்தது. மின் வசதி இல்லாத வீடு. வெளியே தூறல் சற்று வலுத்திருந்தது.. எனக்கு மனசு ஒரு நிலையில் இல்லை. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது?. ஏழ்மையில் பிறந்திருந்தாலும், இடையில் கார், பங்களா,ஏவல், எடுபிடி என்று அந்தஸ்துடன் வாழ்ந்தவள். இன்றைக்கு இங்கே யாருமில்லா அனாதையாய்…..,என்னைப் பார்த்துவிட்டு  தன் நிலைக்காக எப்படி அழுவாளோ? என்றிருந்தது.

“யாரு?. வாங்க!. ”

அக்காவா இது?.அக்காவேதான். கறுகறுத்து, இளைத்துப்போய் கிழிந்த நாராய் இருந்தாள்.. தலைமுடியை சேர்த்து அள்ளி கொண்டை முடிந்துக் கொண்டே கிட்டே வந்தவள் இருட்டில் என்னை தெரிந்துக் கொள்ளாமலேயே மேல் முந்தானையை எடுத்து கீழே போட்டுவிட்டு வாங்க உள்ளே போயிடலாம் என்று என் கையைப் பிடித்தாள்..

இத்துடன் நிறுத்தி விடுகிறேன். சட்டென்று தாக்கிய அதிர்ச்சியில் நான் உறைந்து போய் நின்றதும், வந்திருப்பது நான் தான்.என்றறிந்தபோது, அக்கா அதிர்ந்து, வெட்கி, தலகுனிந்து, பின்பு வெடித்துக் கதறியதும், நானும் அவளும் கட்டிக் கொண்டு கதறிய அந்த தருணங்களை, உணர்ச்சியான அந்த கட்டங்களைப் பற்றியெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.அதை அவரவர்களின் கற்பனைகளுக்கு விட்டு விடுகிறேன்.

இப்போது என்னுள்ளேகுடைந்துக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.சரியான திட்டமிடலுடன் ,வெற்றிகரமான  பெண்ணாய் வாழ்ந்த அக்காவுக்கு ஏற்பட்ட இந்த அவலமான வீழ்ச்சிக்கு யார் காரணம்?.. நிச்சயம் அவளில்லை. அவளை போண்டியாக்கிய நபும்சக கணவனும், நட்டாற்றிக் கைவிட்ட முஸ்லீம் காதலனும், மெது மெதுவாக நெருக்குதல் தந்து, சீண்டி இந்த சேற்றில் அமிழ்த்திய கசடர்களுந்தான். அத்தனையும் விரும்பாமலேயே அவள் மேல் ஆண்களால் திணிக்கப்பட்டவை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”—–என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்று இவள் விஷயத்தில் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?. சொல்லுங்கள். .

– திண்ணை இணையதள இதழில் பிரசுரமான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *