பிரிகூட்டில் துயிலும் விதைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 12,941 
 

சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய ‘மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும் உள்ளிழுத்தபடியே மிக வேகமாகச் சுழல்வதைக் கண்டு, தலையைத் தூக்கிப் பார்த்த மறுகணமே தீய்ந்துகிடந்த புல்பூண்டுகளைக் கரண்டத் தொடங்கின.

தரிசு நிலம் எங்கும் வெயில் கொளுத்தியது. கோவணத்துணியாக விழுந்திருந்த நிழலில் ஒதுங்கிய பெருமாள், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். செம்மறிகள் என்றால் மேய்ப்பதில், வளைப்பதில் இவ்வளவு சிரமம் இருக்காது. இவை யாவும் வெள்ளாடுகள்… சிறிது நேரம் கண்ணயர்ந்தாலோ, தலை மறைந்தாலோ போதும், பயிர்பச்சை தென்படாதாஎனப் பாய்ந்துவிடும்.

pirivu1

பனையின் நிழல், பெரியவர் பெருமாளை இடம் நகர வைத்துகொண்டே இருந்தது. பார்வைக்கு அப்பாலும், விரிந்து செல்லும் வெளியெங்கும் காங்கலின் பிடி இறுகி இருந்தது. ஈரத்துணியால் சுற்றப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பாட்டிலின் நீர்கூட சுடுதண்ணியாகி இருந்தது. நா வறட்சியை அடக்க ஒரு மிடறு குடித்தவரின் மனத்தில், கோபத்தைக் கிளப்பிவிட்டு அலைந்தது அனல்காற்று. பெயருக்குக்கூட மரங்கள் ஏதுமின்றிக் கருகிக்கொண்டிருக்கிறது தரிசுக்காடு.

கோடையிலும் மணலின் அடியில் தண்ணீரைத் தேக்கிவைத்திருந்த ‘உப்புவாரி ஓடை’யைத் தொலைத்துத் தனிமைப்பட்டுப் போய்விட்ட ‘வடக்கிக்காடு’ வெறும் தரிசு நிலமாகிப்போனதால், தாகத்துக்காக இப்படி கயிறு கட்டிய பாட்டிலோடு அலையும்படி ஆகிவிட்டது.

பல்லுயிர்களின் உறைவிடமாக பல நூறு ஏக்கரில் வனமாக விரிந்திருந்த வடக்கிக்காட்டைக் காணவில்லை. ஆல், அரசு, வேம்பு, வாகை, இலந்தை, இலவம், ஈச்சு, கடம்பை, மருதம், நாவல், நாகலிங்கம், புங்கன், பூவரசு, வேலம், வன்னி, வேங்கை… என மனித வாடையே இல்லாத காடாக நிழல் விலகாப் பகுதியாக… இருந்த வடக்கிக்காட்டில், தடுப்பார் யாருமின்றி வகைதொகை இல்லாமல் மரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட பின்பு எஞ்சியது சில பனைமரங்களே!

அய்யாவோடு வந்து ஆடு மேய்த்த காடா இது? பெரியவரிடம் இருந்து வெளியேறிய பெருமூச்சிலும் காங்கலின் நெடி வீசியது.

நினைவின் ஆழத்தில் பசுமை மாறாத முட்செடியில் இருந்து ‘கிளா’ பழங்களைக் கொய்துகொண்டிருந்த மகனைப் பார்த்துச் சத்தம் போட்டார் ஏழுமலை. ”ஏலேய் பெருமாளு… என்ன மசுர நக்குன வேலயா செஞ்சுகிட்டு இருக்க? பொசாயப் போவும்போது பறிக்கப்படாது! தெக்காலக் கொல்லிக்கு ஆடுவ போவுது பாரு… ஓடுடா ஓடு… வளைச்சி ஓட்டியாடா” – எரிச்சலுடன் வைதார்.

பறித்தது வரை போதும் என்று, துண்டின் முனையில் கொட்டி முடிந்தபடி ஓடினான் சிறுவன். தெக்காலக் கொல்லையில் ‘வெஞ்சாமரச் சோளம்’ (வெண்சாமரம்) பயிரிட்டு இருக்கிறார் நடேசன். ஆடுகள் மேய்ந்துவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும். சோளப்பயிர் தின்று வயிறு வீங்கிவிட்டதை, எந்தக் கசாயத்தாலும் காப்பாற்ற முடியாதே! கொல்லைக்காரனிடம் ஆடுகள் அகப்பட்டுக்கொண்டால் மானம் போச்சு. சாவடிக்குப் போயி கும்பிட்டு விழுந்து அபராதம் கட்டிவிட்டே ஓட்டிவர வேண்டியதாகிவிடும். பின்னே, ஏழுமலை கோபப்படத்தானே செய்வார்.

pirivu2

ஓடி வளைத்து ஓட்டிக்கொண்டு வந்து புதர்க்காட்டில் விட்டான். மூச்சு வாங்கியது. அறுத்துப்போட்டதும் தழைகளை மேயத் தொடங்கின. அய்யா பார்த்துக்கொள்ள, ‘தண்ணிவெடை’ எடுக்கவும் மேற்கால நடந்தான். அடம்பாக வளர்ந்திருந்த தாழையை விலக்கிவிட்டு, கரையில் இறங்கித் தெளிந்து ஓடிய நீரில் குனிந்து, வாய் வைத்து தாகம் அடங்கும் வரை குடித்தான். உப்புவாரி ஓடைத் தண்ணியைக் குடித்தால்போதும், பொசாய வீடு போகும் வரை களைப்பே வராது. மலர்ச்சியுடன் திரும்பினான் சிறுவன் பெருமாள்.

ஊரில் இருந்து மூன்று மைல் தூரத்தைக் கடந்துதான் வடக்கிக்காட்டுக்கு ஆடு ஓட்டி வரவேண்டும். சூரை, காரை கிளாவென்று பழங்களைப் பறித்துத் தின்னலாம் என்ற ஆசையே, அய்யா ஆடு ஓட்டும்போதெல்லாம் நிழலைப் போல பின்தொடர்ந்துவிடுகிறான்.

பச்சைக்காய்களாக மணலில் புதைத்துவைத்து, மறுநாள் எடுத்து மண் ஊதித் தின்ற நுணாப்பழம் தந்த காலத்தில்தானே அரும்பு மீசைக்காரனாக ஆடு ஓட்டித் திரிந்தான். மேலத் தெரு மீனாட்சி, தெற்குத் தெரு வடிவு, கிழக்குத் தெரு அலமேலு குமரிகளுடன் கதை பேசி, அவிழ்க்க முடியாத முணிச்சாய் வெடிப்போட்டு (விடுகதை), பதில் வெடிக்கு இவன் பதில் போட்டும், முதல் வெடிக்கு விடை தெரியாமல் திருதிருவென விழித்து நின்றவர்களிடம், கட்டவிழ்க்க… அம்மணவிடை சொன்ன பெருமாளை வசுவுகளால் தாக்கியபோதுதானே கேடயமாக வந்து நின்றாள் கமசலை.

‘உப்புவாரி ஓடை’ தந்த தாழம்பூவை, அவள் கூந்தலில் செருகி தன் நேசத்தைச் சொன்னான். அவளின் வரவால்தான் காடே மணப்பதாகப் பித்து ஏறித் திரிந்த காலம் அல்லவா! புதர்காடு எங்கும் ஜோடி கௌதாரிகள் என அலைந்தவர்களுக்கு, முதல் வாழ்த்தையும் ஆசியையும் வழங்கிய காடு அல்லவா இது. கருங்கொடிகாகப் பின்னிக்கொண்டு நேசம் நீண்டது இங்குதானே!

புழுதி கிளப்பிப் போகும் டிப்பர் லாரிகளைக் கண்டு மிரளாமல், தலையைத் தூக்காமல் வெள்ளாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. வெயில் தாங்காமல் வந்து அடைந்துகொண்ட இளங்குட்டியை அருகில் இழுத்துத் தடவிக்கொடுத்தார். ‘கொடி ஏதாச்சும் கெடைச்சா அறுத்துப் போடலாம்’ என எழுந்தார்.

கம்பும், கேழ்வரகும், சோளமும், வரகுமாக தானியங்களால் சூழப்பட்டிருந்த நிலம் எல்லாம் இன்றோ மனைகளாகவும் ஆலைக்காரன்களின் சுரங்கங்களாகவும் பறிபோய்விட்டதால், எங்கும் மண்மலைகளும் கிடுகிடு பள்ளங்களுமே தெரிந்தன. இரவும் பகலுமாக பல லட்சம் டன்களாக வெட்டிஎடுத்துப்போகும் சிமென்ட் ஆலைக்காரர்களா, வேலியையும் கொடியையும் விட்டுவைப்பார்கள்!? ”யேங் குட்டிவளுக்குக் கொடியறுத்துப் போடக்கூட வழியத்த காடா போயிடுச்சே!” – வாய்விட்டுப் புலம்பியபடியே ஆடுகளை மேலக்காட்டை நோக்கி ஓட்டினார் பெருமாள்.

இளங்குட்டிகள் ‘சேங்கிட்டி’ அடித்தபடியே முன்னால் ஓட, கொராவைத் துரத்தி முகர்ந்து ‘வாடை’ பிடித்துகொண்டு கிடா வர, சினை ஆட்டுக்குப் பின்னால் மூன்று கொரா ஆடுகள் வர கடைசியாக காலைக் கெந்திக் கெந்தி நடந்து வந்துகொண்டிருந்தது கிழட்டுத் தாய் ஆடு. பெரியவரின் தோல் மிதியடியை ஏமாற்றிவிட்டுத் தைத்த நெருஞ்சிமுள்ளைக் குனிந்து எடுத்து எறிந்துவிட்டு நடந்தார். வியர்வையைச் சுரக்கவைத்தபடியே இருந்தான் சூரியன். பாளம் பாளமாக வெட்டியெடுத்துக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்மேட்டில் இருந்து ஒதுங்கிக்கிடந்த மண்பாறை ஒன்றில், படிவங்களாகப் பதிவாகி இருந்த ஏதோ உயிரியின் கால் தடம், ரகசிய மொழியை அடைகாத்தபடியே வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

pirivu3

உப்புவாரி ஓடையை, மண்மேடு தின்றிருந்தது. திசை மாறியதை அதட்டி சீழ்க்கை ஒலி எழுப்பி ஒழுங்குப்படுத்தினார். உயிர்வேலி இருந்த இடம் என்ற அடையாளத்தை மௌனமாக உணர்த்தியபடி, மெள்ள தன் உயிர்ப்பை இழந்துகொண்டிருந்தது பால்கள்ளி. அதன் அடியில், சில சிறகுகள் உதிர்ந்துகிடந்தன. லாரித் தடத்தின் ஓரங்களில் இருந்த எருக்கஞ்செடியும் ஆவாரைகளும், புழுதியை அப்பியபடி காற்றில் அசைந்துகொண்டிருந்தன.

வெடி வைத்துத் தகர்த்தும் வெட்டியும் உண்டாக்கி இருந்த பெரும் பள்ளத்தை நோக்கி ஆடுகள் எல்லாம் ஆவலாக ஓடின. காலடியில் சுருங்கிப்போய் இருக்கும் நிழலைப்போல சேறும் சகதியுமாகத் தேங்கிக்கிடந்த நீரை, நாவால் நக்கிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் மேடு ஏறி வந்தன.

மேலக்காட்டில் மணியின் ஐந்து காணி நிலம் மட்டுமே ஆலைக்காரனுக்கு அகப்படாமல் தப்பி இருக்கிறது. அவரின் நிலங்களை ஒட்டியே பெரும் பள்ளங்கள் தோண்டப்படுவதால், கடந்த வருஷத்தின் இறுதிவாக்கிலேயே பம்புசெட் கிணற்றில் நீர் வற்றத் தொடங்கிவிட்டது. தண்ணீர் தட்டுப்பாடு, ‘இனியும் விவசாயம் செய்ய முடியுமா?’ என யோசிக்கவைத்தது. ”யேங் குட்டிவளுக்குத் தழ தாம்பு ஒடிச்சிப் போடவாச்சும் மணி கொல்லைய விக்காம இருக்க நீயிதான் கண்ணைத் தொறக்கணும்” – ஆடு ஓட்டிக்கொண்டு மேலக்காட்டுக்கு வரும்போதெல்லாம் தன் குடிசாமியிடம் முறையிட்டு வேண்டத் தொடங்கிவிடுவார் பெரியவர்.

உயிர்வேலி, கண்களில் பட்டதும் ஆடுகள் எல்லாம் ஆவலோடு பாய்ந்து ஓடின. இளங்குட்டிகள் வேலிகளின் மீது வாகாக முன்னங்கால்களை விரித்து ஊன்றி, கிளுவைத் தழைகளை முட்களோடு சேர்த்தே கடித்து மென்று ருசிக்கத் தொடங்கின. பெரிய ஆடுகளும் கிடாவும் தாவுகால் போட்டு நாவையே தொரட்டியாக்கி, கோவக்கொடியை இழுத்துக் காயோடு சேர்த்து மேய்ந்தன.

வேலிக்கு வெளியிலும் பரவி இருந்த அழிஞ்சில் மர நிழலில் அமர்ந்தார். வியர்வை நசநசப்பை, கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போக்கிக்கொள்ளலாம்தான். குடிக்கவே கெதியற்ற காட்டில் மேனியையா கழுவ முடியும்? மேலக்காட்டுல இருந்த ‘கல்லுவெட்டுக்குழி’, தெக்கிக்காட்டுல இருந்த ‘ஈச்சங்குளம்’ கிழக்கே அம்மாயி ஊருக்குப் போகும்போதெல்லாம் முங்குநீச்சல் போட்டுக் களித்த ‘பூவாயிக்குளம்’ எல்லாமே கடந்த 30 வருஷ இடைவெளியில் ஒவ்வொன்றாக இல்லாமலாகி, குழாய் தண்ணீருக்கு அலையும் கொடுமையை என்ன சொல்ல? புழுங்கிக்கொண்டிருக்கும் மனசையும், அலைச்சலால் உண்டான களைப்பையும் ‘செத்த’ ஆற்றிக்கொள்ள, மடியில் இருந்த பொட்டலத்தை வெளியில் எடுத்துப் பிரித்தார். வெற்றிலைச் செல்லத்தைப் பிரியமாக வாயில் போட்டு மெல்லத் தொடங்கினார்.

நெளிந்து, அசைந்த கொடியைக் கவனமாக விலக்கிய ஆட்டை தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, அடப்பில் ஓடி மறைந்தது பச்சைப்பாம்பு. வெற்றிலை எச்சிலை காறித் துப்பிவிட்டு அலவாங்கோடு எழுந்தார். பழுப்பு நிற நெற்றுகளை அறுத்தறுத்துப் போடவும் கருவைக்காய்களை மொறுமொறுவெனக் கடித்துத் தின்றன. தாளி, கோவ, பிரண்டை முஷ்டை… என, கொடிகளை ஆடுகள் விரும்பித் தின்னும்படி அறுத்துப் போட்டுக்கொண்டே இருந்தது அலவாங்கு.

மூன்று காணி மேட்டாங்காட்டையும் பத்து உருப்படி ஆட்டு மந்தையையும்தான் அய்யா சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போனார். ஆறு மாத இடைவெளியில் அம்மாவும் போய்ச் சேர்ந்துவிட்ட பின்பு, வரகு, சோளம் என தானியத்தால் கொழித்தது மேட்டாங்காடு. எப்போதுமே இருளடைந்துவிடாதபடி தானியங்களால் நிரம்பி இருந்தது பிரிகூடு. விதைப்புக் காலங்களில் யாரிடமும் கேட்டு அலையாமல், பிரிகூட்டில் துயிலும் விதைகளை அள்ளி எடுத்துதான் தெளிப்பார் பெருமாள். ஊரிலுள்ள விவசாயிகள் பலர், இவரைத் தேடித்தான் விதைப் புட்டியோடு வருவார்கள். ஓய்வு இல்லாத மேய்ச்சலால் பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த தெம்பில், இரண்டு சகோதரிகளையும் சீர்வரிசையில் ஒரு குறையும் வைக்காமல் தனத்தை மேலப்பழுவூரிலும், வசந்தாவை கீழ அரசூரிலும் கட்டிக்கொடுக்க முடிந்தது.

ஆடுகளை மேயவிடாமல் துரத்தியபடியே இருந்த கிடாவை, அலக்குக் கழியின் அடிப்பகுதியால் இரண்டு வைத்தார். ”துளுத்த தவ ரெண்டைக் கடிச்சதும் நாக்கத் துருத்திக்கிட்டா அலையுற… இரு இரு பொசாய பொழுது போவட்டும் கீழத்தெரு தாடிய ‘கிட்டிக்கழியோடு’ வரச்சொல்றேன்… ஓம்பனங்கொட்டய ஒரு நசுக்கு நசுக்கினா, எல்லாம் தன்னால வடிஞ்சிடும்” – கோபம் துளியும் இல்லாமல் கேலியோடு வைதார் பெரியவர்.

pirivu4

வதங்கிப்போயிருந்த வெளாரி செடியில் நெற்றுகளே மிகுதியாகத் தெரிந்தன. அரவம் கேட்டதும் அடம்பில் இருந்து வெளியேறி தாழப் பறந்தோடின கௌதாரிகள் இரண்டும். மேட்டாங்காட்டையும் கருவிடச்சேரி ஊரிலுள்ள ஓட்டுவில்லை வீடு மற்றும் ஒரு மனையையும், இரண்டு மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, ஊருக்கு வடக்கே ஆடுகள் அடைக்கும் பட்டியாக இருந்த தோட்டத்தைச் சீர்படுத்திக் குடியேறி ஐந்து வருஷம் கடந்தாகிவிட்டன. காவட்டைப்புல் வேய்ந்த கூரையும் செம்மண் சுவருமாக அமைந்துள்ள குடிசை, தனி ஆளுக்குப் போதுமானதாகவே இருந்தது.

சாயங்காலமாகியும் சுள்ளென்று அடித்தபடியே அலைந்தது தணல் காற்று. இருக்கிற நிலைமையைப் பார்க்கும்போது மணிகூட நிலத்தை விற்றுவிடுவாரோ என்று விசனப்படவைத்தது பெரியவரை. வருடாவருடம் நீர்மட்டம் குறைந்தபடியே இருக்கிறது. விவசாயிகள் இனி மண்ணை நம்பி வாழமுடியாத நிலை வந்துவிடுமோ? என்று எண்ணும்படிதான் கிணறுகள் எல்லாம் வறண்டு போய்விட்டன. சுற்றிலும் உள்ள கிராமத்து ஜனங்களுக்கு எல்லாம் உசுரு தண்ணிய வற்றாமல் கொடுத்த ‘கோனாங்குளம்’ பாளம் பாளமாக வெடித்துகிடக்க, எங்கும் வேலிக்கருவை வளர்ந்துவிட்டது. ‘இன்றோ நாளையோ நம்ம கத முடிஞ்சிடும். வரும் தலைமுறை?’ கேள்விகள் பிலித்தொரட்டி முள்ளாகக் குத்திக் கிழிக்க, ஆடுகளை வளைத்து ஓட்டிக்கொண்டு போனார் பெருமாள்.

தாகம், ஆடுகளின் நடையை வேகப்படுத்தியது. வழக்கம்போலவே தார்ச்சாலையின் அருகே வந்ததும், ஆடுகள் நின்றுகொண்டன. விரையும் வாகனங்களை அச்சத்துடனே பார்த்துக்கொண்டு நிற்பது ‘அனிச்சை செயலை’ப் போல அதுகளுக்குப் பழகிப்போய்விட்டது. 10 நிமிடங்கள் கழிந்த பிறகும், சாலையைக் கடக்கும் வழியை மறித்தபடியே போகும் லாரிகளைப் பார்த்தபடியே நின்றார். ”எம்மாந்நாழி ஆடுவ மந்திரத்தில் கட்டுப்பட்ட மாரி நிக்கும்?” – வாகனங்கள் போகும் திசையைப் பார்த்து வைதார். நீண்ட நேரக் காத்திருத்தலுக்குப் பின்பு, ஹாரன் ஒலியற்றுக்கிடந்த சாலையின் குறுக்கே அலவாங்குக் கழியை நீட்டியபடியே இவர் முன்னால் போக, சில நொடி இடைவெளியில் சாலையைக் கடந்து செம்மண் புழுதியில் குளம்புகளைப் பதித்து நடந்தன ஆடுகள்.

படவாசலை அவிழ்த்துவிட்டதும் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்து தொட்டியில் உள்ள நீரை எல்லாம் வயிறு புடைக்கக் குடித்து ‘தீராத் தாகத்தை’ தணித்துக் கொண்டன. ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, கோனாக்குளத்தின் கரையில் உள்ள அடி பைப்பில் தண்ணீர் அடித்து, தொட்டியையும், புழங்கத் தேவையானவற்றைப் பிற குடங்களிலும் கொண்டுவந்து ஊற்றி நிரப்பிக்கொண்டார்.

”செத்த ஒடம்பக் கெடத்தினால் தேவலாம்தான், கமசலையா இருக்கா… அவ பாத்துப்பானு இருக்க..? போன வருசம் இதே சித்திர மாசத்துலதானே எம்புண்ணியவதி ‘கெடந்து சீரழிடா கெழட்டுப்பயலே’னு ஒண்டியாத் தவிக்கவெச்சிட்டுப் போயி சேந்திட்டாளே…’ – ததும்பி வழிந்ததைத் துடைத்துக்கொண்டு, சுள்ளிகளைப் பொறுக்கி அடுப்பை மூட்டத் தொடங்கினார்.

செம்பழுப்பாகத் தகதகத்தது போதும் என்று அந்தியை அழைத்துப்போனது மேற்கு. பாலூட்டும் அவசரத்தில் சாலையைக் கடக்க முயன்ற கீரி, கணப்பொழுதில் பளீரிட்ட வெளிச்சத்தால் பயந்துபோய் குடுகுடுவென ஓடிவந்து வேலிக்கருவை அடியில் பதுங்கியபடியே காத்திருந்தது. இருளும் மௌனமும் பிணைந்து இருந்த சத்தமற்றத் தருணத்தில் தரை அதிர்கிறதா என்று உன்னிப்பாகக் கவனித்த கீரிப்பிள்ளை பாய்ந்தோடி மொட்டப் பனையின் அடியில் உள்ள புதருக்குள் நுழைந்து மறைந்தது. கண் திறக்காத குட்டிகள் வாடை பிடித்து மடியைத் தேடி பசியாறத் தொடங்கின.

கூப்பன் அரிசி சோற்றுக்காக சூடு பண்ணி வைத்திருந்த கத்திரிக்காய்க் குழம்பு தோதாக இருக்க, சாப்பிட்டு முடித்து எறும்பு ஏறாமல் இருக்க சோற்றுப்பானையை ‘வேடுகட்டி’ உறியில் வைத்த கையோடு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் திருப்பானைக் குறைத்துவிட்டு வாசலுக்கு வந்தார்.

தணல் இல்லாத காற்றின் தழுவல் இதமாக இருந்தது. தார்ச்சாலையின் கதறல் விடாமல் எழுந்தாலும், அதற்கு ஏற்றபடி செவிகளும் மனசும் பழகி இருந்தன. காசரை நார்க்கட்டிலில் படுத்திருந்த பெருமாளின் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் சுழன்றபடியே இருந்தன.

‘ஆடு ஓட்டி வரும்போதே வாசலில் நின்று வாலாட்டி வரவேற்கும் கருப்பன், இன்னும் வரலியே!’ என்ற எண்ணமே சஞ்சலத்தைக் கூட்டியது. இன்னுமா தெருவைச் சுற்றிக்கொண்டு இருப்பான்? கமசலை கொடுத்துவிட்டுப் போன தனிமையின் துயரைத் துடைத்தெறிய வந்த துணையாகத்தான் கருப்பனை நேசித்தார் பெரியவர். நாயாக அவர் ஒருநாளும் நினைத்ததே இல்லை.

மின் இணைப்பு இல்லாத குடிசையின் உள்ளே சன்னமாகக் கசிந்து பரவியிருந்த வெளிச்சத்தில் பூச்சிகளைப் பிடித்துத் தின்றபடி இருந்த பல்லியைப் பார்த்துகொண்டிருந்தது லாந்தர் விளக்கு.

பிரதான சாலைக்கு அருகில் உள்ள அரை ஏக்கர் தோட்டம், அலுவலகம் கட்ட ஏற்றதாக இருக்கும் என்று, ஒரு வருட காலமாகக் கேட்டு வந்த ஆலைக்கான தரகனிடம், முன் பணமாகப் பெருந்தொகை ஒன்றை வாங்கிக்கொண்டு, சம்மதம் தெரிவித்ததோடு, நாளைக்கே பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அப்பாவை அழைத்துவந்துவிடுவதாக உறுதியளித்து இருந்தனர் பெரியவரின் மகன்கள் இருவரும்.

பசியோடு வந்து தட்டில் உள்ள சோற்றைத் தின்ற கருப்பன், கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். கடைசிக் காலம் வரை வாழ்ந்த கமசலையின் நினைவை அடைகாத்துவரும் குடிசை வீடும், ஆடுகளின் வாழ்விடமாக இருந்த கீற்றுக்கொட்டாயும், பட்டியும், நாளைய பொழுதுக்குள் பறிபோகப்போகிறது என்பதை அறிந்திடாத பெரியவர் பெருமாள், பால் குடிக்கும் குட்டிகளின் மெல்லொலியைக் கேட்டு ரசித்தபடியே நன்றாக அயர்ந்து தூங்கிப்போயிருந்தார்!

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *