(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(‘அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ! இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!’)
காமாட்சிநாதன், வீட்டுத் தெருப்படிப்புரையில் அமர்ந்திருந்தார். கால்கள் தரையை நோக்கித் தொங்கியபடியும் கைகள் படிப்புரையின் தரை ஓடு பாவிய தளத்தில் ஊன்றியபடியும் இருந்தன. குனிந்து, தெருவில் ஈரம் நயந்திருந்த மண் தரையில் ஊர்ந்து கொண்டிருந்த ஒன்றரை அங்குல நீளமுள்ள கரிய ஆயிரங்கால் அட்டையைக் கூர்ந்து கவனித்தவாறிருந்தன கண்களும் சிந்தையும்.
சமீபத்தில் நூலகத்தில் வாசித்த ஜென் கவிதை ஒன்று நினைவில் சுழியிட்டுக் கடந்து போனது. ‘ஆயிரங்கால் அட்டை ஒண்ணு தன் சோலியைப் பாத்துக்கிட்டு அது பாட்டுக்குப் போயிட்டு இருந்தது… வேலை மெனக்கட்டுப் போயி, ரெம்ப இளக்காரத்தோட ஒரு தேரை அதைப் பாத்து கேட்டுது – ஏ! லெக்காளி… நில்லு! நீ ஊந்து போகச்சிலே எந்தக் காலுக்குப் பொறவு எந்தக் காலை எடுத்து வைப்ப – அப்பிடீன்னு ஆயிரங்கால் அட்டைக்கு ரொம்ப நேரமா யோசனை. யோசனைன்னா யோசனை அப்பிடியொரு யோசனை.எப்படி ஊந்து போறதுன்னு யோசிச்சு, அங்கினயே பள்ளத்துக்குள்ள விழுந்து கெடந்தது.’
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் காமாட்சிநாதனின் யோசனையும் அட்டையை ஒத்தவாறிருந்தது. பணி நிறைவு பெற்று இரண்டரை ஆண்டுகள் தாண்டிவிட்டன. மகள் ஆஸ்திரேலியாவில் பெர்த்திலும், மகன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்தியானா போலிசிலும் வசதியாக இருந்தனர். பச்சை அட்டைகளுடனும் குடியுரிமைகளுடனும். மனைவி காலமாகி இரண்டு மாதங்கள் இன்னாவென்று போய்விட்டன.
அவருக்கு தாழக்குடி மேல ரத வீதியில் தகப்பனார் கட்டி வாழ்ந்துவிட்டுப்போன வீடொன்று இருந்தது. நூறாண்டு புராதனமானது. வாசலின் இருபுறமும் நீண்டு அகன்ற படிப்புரைகள். வழிப்போக்கர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், குறு தலைச்சுமடு வியாபாரிகள் சாய்ந்து சற்று நேரம் உறங்கவோ ஓய்வெடுக்கவோ செய்யும் வண்ணம் திண்டுகள் அமைக்கப்பட்டவை. படிப்புரையைத் தாண்டி உள்ளே ஏறியதும் பெரியதோர் திண்ணை. பின்பொரு நடுமுற்றம். முற்றத்தின் நான்கு புறமும் ஒன்றரை அடி உயரத்தில் வராந்தாக்கள். மேற்புற வராந்தாவில் நீளமும் அகலமும் கொண்ட கடம்பு மரக் கட்டில். முற்றத்து மூலையில் வலை போட்டு மூடிய, கப்பி கட்டிய கிணறு. வராந்தாவில் இடமும் வலமும் இரண்டிரண்டு அறைகள். முற்றத்தைத் தாண்டி அக்னி மூலையில் அடுக்களை. அங்கு அம்மி மேடை, ஆட்டுரல் மேடை, திருவை மேடை என ஒரு பால். மறுபாலில் அரங்குக்குப் போகும் வாசல். புறக்கடையில் நாலைந்து தென்னைகள், ஒரு குப்பம் மொந்தன் வாழை, நாரத்தை மரம், செண்டு மல்லிப் புதர், துளசி, மருதாணி, கறிவேப்பிலை என சின்னத் தோட்டம். இடது ஓரத்தில் கக்கூஸ், வெந்நீர் புரை, குளிமுறி. வலது ஓரத்தில் நாலைந்து மாடுகள் கட்டும் விதத்தில் தொழுவம். தகப்பனாருடன் போயின பால்மாடுகளும் ஏர்மாடுகளும். வயலும் விளையும் பாட்டத்து விடப்பட்டன.
தட்டட்டி போட்ட வீடு. பளபளத்த பனங்கைகள் மீது வேங்கை மரப் பலகைகள் அடுக்கி, அதன் மீது கடற்பஞ்சு பரத்தி, தளம் போட்டு, தரை ஓடு பாவிய மட்டுப்பா. ஆளுயரத்துக்குமேல் சுவர் வைத்து, பனங்கைகளால் மோடு கூட்டி, கொல்லம் ஓடு பாவிய கூரை. வராந்தாவில் இருந்து தட்டுக்கு ஏற ஏணிப்படி நெல் அவித்து ஆலாட்ட, தேங்காய் வெட்டிக் கொண்டு போட, அடியந்திரத்துக்கு மாத்திரம் உபயோகப்படும் வார்ப்பு, செம்பு, குட்டுவம், நிலவாய், போணி என அடுக்கி வைக்க, பத்திருபது பேர் படுக்க…
தனபாக்கியம் செத்துப் போன பிறகு, ஆயிரங்கால் அட்டை போலக் கிடந்தார் காமாட்சிநாதன். மனம் தேரை போலக் கேள்விகள் கேட்டது. எந்தக்காலை அடுத்து எந்தக்காலை வைப்பது? முப்பத்தாறுக்குப் பிறகு அறுபத்தெட்டா, பத்தொன்பதுக்கு முன்னால் எண்பத்து ஏழா? எதற்கு முன், அல்லது எதற்குப்பின் எது?
காலையில் இருநூறு பால், இரண்டு தேயிலைக்கு. மாலையில் முந்நூறு பால், ஒரு தேயிலைக்கும் படுக்கு முன் குடிக்கவும். சில நேரம் நாள் ஒரு தேயிலையை மறந்து போனால், மிஞ்சும் பாலை உறை ஊற்றி வைத்துக் கொள்வார்.
காலை ஐந்து மணிக்கு அழகம்மன் கோயிலில் பாட்டுப் போட்டு விடுவார்கள். தைமாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று அழகம்மனுக்கும் ஜயந்தீசருக்கும் அவர் வீட்டுப் பக்கத்திலிருக்கும் நாற்சந்தியில்தான் திருக்கல்யாணம் நடக்கும், பெருமாள் முன்னிலையில் நான்குநாள் திருவிழா.பங்குனிமாதம்தேரோட்டம் உண்டு. பதினோரு நாட்கள் திருநாட்கள். சப்தாவர்ணமும் ஆறாட்டும் நடந்து திருவிழா முடியும். முன்பெல்லாம் தெப்பத் திருவிழாவும் இருந்திருக்கிறது. மதுரை சோமு, கே.பி. சுந்தராம்பாள், மாலி புல்லாங்குழல், காருகுறிச்சி நாகசுரம் என வந்து பாடி இருக்கிறார்கள், வாசித்திருக்கிறார்கள்.
அழகம்மன் கோயிலில் பாட்டுப் போட்ட பின் காலையில் உறக்கம் வருவதில்லை. எழுந்து, பல்துலக்கி, பச்சைத் தண்ணீர் குடித்துவிட்டு நடக்கப் போவார். நடக்கும்போதும் கூட்டு கிடையாது. அதிகம் எவருடனும் உரையாடல் கிடையாது.
அவரது வீட்டிலிருந்து சற்று வடக்கு நோக்கி நடந்தால், மேலரத வீதி முடியும் இடத்தில் தாழக்குடியின் வடக்கில் அமைந்த பெரிய குளத்தின் மறுகால் பாயும். குளத்தை வீரகேரளப் பேரேரி என்பார்கள். எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள் பழமையானது என்றும் தொண்ணூற்று ஒன்பது ஏக்கர் விஸ்தீரணம் உடையது என்றும் சொல்வார்கள். குளத்தின் மேலக்கரை தார்ச்சாலை. நடந்து குளம் முடியும் இடத்தில் நாஞ்சில் நாட்டுப் புத்தனாற்றின் கரை துவங்கும். நெடுக நடந்தால் வலது புறம் சீதப்பால் விலக்கு. சில சமயம் ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம் கடந்து ஒளவையாரம்மன் கோயிலுக்குப் போகும் சாலையில் திரும்பி சற்று தூரம் போய் மடங்குவார். அல்லது புத்தனாற்றங்கரையில் தொடர்ந்து நடந்து ஆண்டித் தோப்பு வரைக்கும். சில சமயம் ஆண்டித் தோப்பையும் தாண்டி, பழையாற்றின் பாலம் கடந்து இடதுபுறம் திரும்பினால் பூதப்பாண்டி வந்துவிடும். பாலத்தில் திரும்பாமல் மேலும் நடந்தால் மண்ணடி. பொதுவுடைமைப் புயல் ஜீவா பிறந்த ஊர் பூதப்பாண்டி. அவர் தனது பள்ளிப் பிராயத்தில் மண்ணடி சாம்பவர் பையனை பூதலிங்கசாமி கோயிலுக்குள் கூட்டிக்கொண்டு போய், ஊர்க்காரர்களிடம் அடிவாங்கி, ஊரைவிட்டு ஓடினார். காமாட்சிநாதனின் நினைவு தாறுமாறாகக் கலைந்தோடும் இடங்கள்.
திரும்பி வந்தால் வீட்டு வாசல் மேடையில் வைத்துவிட்டுப் போன செம்பில் பால் ஊற்றி மூடி வைக்கப்பட்டிருக்கும்.
தேநீர் போட்டுக் குடித்துவிட்டு பேப்பர் வாசனை. வாசனை எனில் மணம், வாசனை எனில் வாசிப்பு. பேப்பர் வாசித்து முடிந்ததும் எண்ணெய் தேய்த்துவிட்டு, கிணற்றில் வாளி கொண்டு தண்ணீர் கோரி, பக்கத்தில் கிடக்கும் கல்தொட்டியில் நிறைத்து, பெரிய செம்பால் கோரி, மடார் மடார் என ஊற்றிக் குளிப்பார்.
வடக்கில் வீரகேரளப் பேரேரி, தெற்கில் நாச்சியார் புதுக்குளம், கிழக்கில் புத்தனாறு, மேற்கில் பழையாறு, மேலும் ஊரைச்சுற்றி, சற்றுத் தொலைவில் செய்யனேரிக்குளம், பள்ளி மைதானமாகிப் போன நம்பி குளம், புலியூர்க்குறிச்சி குளம், வேம்பத்தூர்க் குளம், நாரைக்குளம், சீதப்பால்குளம் என இருந்தாலும் காமாட்சிநாதன் குளிப்பது சொந்த வீட்டு நடு முற்றத்துக் கிணற்று நீரில்தான். நன்றே எனலாம், பிழை எனலாம், யாரே இதற்கு நாயகமே என்பதவர் மனோபாவம். காலையில் குளி எனில் முன்னிரவில் மேல் கழுவலும் முடங்காது.
காலையில் வெள்ளை ரவை, அல்லது சம்பா ரவை, அல்லது மூன்று தோசை. சற்று நேரம் வாசற்படிப்புரையில் காலாட்டி உட்கார்ந்திருப்பார். படிப்புரையில் இருந்து பார்த்தால் தாழக்குடி பேருந்து நிறுத்தம் தெரியும். பஸ்கள் வந்து திரும்புவது தெரியும். பெருமாள் கோயில், மேற்கே பள்ளத்தில் கிடப்பதால் தெரியாது. பத்தரை மணிக்கு வாசக சாலை திறந்துவிடும். வாசக சாலை, நூல் நிலையம், படிப்பகம் என்பனவற்றில் எது சிறந்த சொல் என்பது வெகு காலம் குடைந்து வருகிறது. ஸ்ரீ மூலம் திருநாள் சில்வர் ஜூப்லி ஸ்ரீ கிருஷ்ண விலாசம் வாசக சாலை 1917-ல் கட்டப்பட்டது. முகப்பில் திருவிதாங்கூர் அரச சின்னம் சங்கும் அதைத் தும்பிக்கை உயர்த்தி தொழுது நிற்கும் இரு யானைகளும். வாசக சாலைக்குப் போனால் மற்ற தினசரிகள், வாராந்தரிகள் வாசிக்கக் கிடக்கும். நூலகர் ராமன் பிள்ளை ஓய்வு பெற்ற மூத்த தமிழாசிரியர். சிவஞான போதத்துக்கு விளக்க உரை எழுதியவர். வாங்கும் ஓய்வூதியத்தை நூலகத்துக்கு செலவிடுபவர். அவருடன் சற்று நேரம் உரையாடுவார் காமாட்சிநாதன்.
மத்தியானத்துக்கு சிறுபயித்தங்கஞ்சி அல்லது உளுத்தங்கஞ்சி. கடித்துக் கொள்ள கருப்பட்டி. தொட்டுக் கொள்ள தவணப்புளி. உண்டதும் சிறிய உறக்கம். பால் வந்ததும் மாலைத் தேநீர். வெயில் தாழ்ந்ததும் சாயங்கால நடை. இந்த முறை நடுத்தெரு வழியாக ஊர் அம்பலம், கிழக்குத் தெருவைக் குறுக்கு வெட்டி, கீழாற்றின் கரையோரம் குயவர் குடி, சந்தைவிளைச் சுடுகாடு, ஒளவையாரம்மன் கோயிலின் பின்புறம் இருக்கும் தோவாளைச் சானல் கரையில் சற்று நேரம் காற்றாட உட்காருவார். சூரியன் சாயும்போது எழுந்து, திரும்பி நடந்து, அழகம்மன் சந்நிதியில் கண்மூடி நின்று சன்னமானதோர் குரலில் திருவாசகம். தகப்பனார் வாய்விட்டுத் தினமும் பாடியது. கேட்டுக்கேட்டு பிரிக்கமுடியாமல் நினைவில் தங்கிப்போனது, முரட்டுப் பாறையின் ஊடு ஓடும் வெள்வரி போல.
‘அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ! இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!’
வீட்டுக்குப் போனதும் பசி எடுத்தபோது மூன்று கோதம்பு தோசை, அன்றேல் பச்சரிசி மாவு ரொட்டி. நாளொன்று முடியும் இரவொன்று கழியும் மறுபடியும் விடியும்.
காமாட்சிநாதனுக்கு பணத்தட்டுப்பாடு எதுவும் இல்லை. பன்னீராயிரம் ஓய்வூதியம் வந்தது. வைப்பு நிதிகளில் இருந்து வரும் வட்டி சேர்ந்து கொண்டிருந்தது. எத்தனை கேட்டாலும் தருவதற்கு மக்கள் இருந்தனர்.
பணியில் இருந்தபோதே வாங்கிச் சேர்த்த சமையல் வாயு அடுப்பு, மிக்சி, கிரைண்டர், குக்கர்கள், குளிர்சாதனப் பெட்டி, துவைப்பு இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி எல்லாம் இருந்தன. என்றாலும் நாள்முழுக்க ஏதும் செய்வதற்கில்லாத வெற்று வாழ்க்கை. பொக்குக் கொட்டை அல்லது பேடுத் தேங்காய்.
யாரோ கேட்டார்கள், ஆங்கிலமும் கணிதமும் பயிற்றுவித்தவர்தானே, பத்திருபது பிள்ளைகளுக்குச் சொல்லித் தரலாமே என்று. அதிலெல்லாம் அவருக்கு நாட்டமில்லை, நட்டமும் இல்லை.
நடக்கும்போது சிலசமயம் குளத்தங்கரையில் ஆற்றங்கரையில் நிற்கும் பனைகளை எண்ணிப் போவார். சிலசமயம் வீட்டு வாசலில் இருந்து வீடு வரை காலடிகள். சிலசமயம் மூச்சுக்கள். சில சமயம் குறிப்பிட்ட மூலிகைச் செடியை மட்டும் கவனிப்பார் நாயுருவி, கண்டங்கத்திரி, குருக்கு, குறுந்தட்டி, சிறுதும்பை, கருநொச்சி, நீலஊமத்தை, தூதுவளை, ஆடு தீண்டாப் பாளை, வேலிப் பருத்தி, வாதமுடக்கி, சித்திரப் பாலை, பெருநெருஞ்சி…
நீர்ச் செழிப்பின் காரணமாக நிறைய வேற்றுப் பறவைகள்- அங்குள்ள குளங்களுக்கு வலசை வந்தன. காகம், சிட்டுக்குருவி, மைனா, செண்பகம், கரிக்குருவி, கானாங்கோழி, காடை, கொக்கு, நாரை என்பன சுதேசிகள். அவை அன்றி, வடக்கு நெடுங்குளத்தில் எக்கச்சக்கமாக நீர்க்காகங்கள் கிடந்தன. கோவை மூக்கு நாரைகள் தென்பட்டன. வெள்ளை அரிவால் மூக்கன்கள் கண்ணில் பட்டன. அபூர்வமாக செவ்வரி நாரை காணக் கிடைத்தது. தாமரை இலைமேல் பொத்திப் பொத்திக் கால் வைத்துக் கால் வாங்கி நடப்பதும் ‘குமுக்’கெனத் தண்ணீரில் மூழ்குவதுமாக சின்ன நீர்க்காகங்கள் சின்னப் பறத்தலில் வானில் ஏறி இறங்கும் குஞ்சுகள். தாடகை மலைக்குச் சென்று திரும்பும் புள்ளினம்.
வடக்கு நெடுங்குளத்தின் வடகிழக்குக் கரையொதுங்கி, நீர் சுற்றிய பெரியதோர் பொத்தைப் பாறை உண்டு. ஆன காலத்தில் மேலக்கரையில் இருந்து நீந்திப்போய் பாறையில் உட்கார்ந்து இளைப்பாறி, மூச்சு வாங்கி, வெயில் காய்ந்து, திரும்பக் கரைக்கு நீந்தியதுண்டு. இன்றெல்லாம் காணாக் கனவு.
தாடகை மலை, நீலம் கரைத்து கரும்பச்சைச் சாயம் பூணும் அதிகாலைப் புலரியில் அல்லது முதிர் பச்சை நிறம் அடர்ந்து நீலம் பாரிக்கும் பின்மாலையில், சின்னச்சின்ன எண்பேராயம், ஐம்பெருங்குழுக்களாக கால் மடக்கி இருந்தும் நின்றும் இறகு நீவியும் அலகு பாறையில் தேய்த்தும் வலசை வந்த பறவை இனங்கள் தமிழ் ஆய்ந்து கொண்டிருக்கும். தாடகை மலைச் சரிவிலும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளிலும் எண்ணிலடங்கா மரங்கள் உண்டு. நல்ல வேளையாக நாட்டை நடத்தும் கள்வர்கள் கவரும் தேக்கோ, ஈட்டியோ, சந்தனமோ, மருதோ, வேங்கையோ, கோங்கோ அல்ல அவை. மதிப்பற்ற நாடன் மரங்கள். பலகைக்கு ஆகாது, பணி செய்ய ஒக்காது. வாகை, வேம்பு, புளி, புன்னை, மஞ்சணத்தி, இலுப்பை, மருதம், புங்கு, மா, கொல்லா மா, கடுக்கா, பூவரசு, ஆல், அரசு, அத்தி என கூர்ந்து பார்த்தால் தட்டுக் கூடை போல் பரந்த கூடுகளைக் காணலாம்.
ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து வந்து, தோதான நீர் நிலைகள் தேடி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்து, பறக்கப் பயிற்றி, தேற்றி, கூட்டத்தில் காத்து, சொந்த தேசத்துக்குப் பறந்துச் சென்று, மறுபடியும் அடுத்த ஆண்டு…
சுதேசம் என்பது எவ்வுயிர்க்கும் ஈர்ப்பானதுதான் போலும். இன்றேல், தனக்கெதற்கு ஒதுக்குப்புறமான இந்த ஊரில் தனிமை மெல்லுமோர் ஒற்றை வாழ்க்கை. பரதேசியாகப் போகலாம் எனத் தோன்றியதுண்டு. ஏதேனும் கோயில் திண்ணையில் துயின்று, ஆறு குளங்களில் துவைத்துக் குளித்து, அன்னதானங்கள் வாங்கிப் போசனம் செய்து…
சிரிப்பும் வந்தது காமாட்சிநாதனுக்கு.
எப்போதாவது சொக்காரர், சம்பந்தக்காரர் குடும்ப உறுப்புக்கள் எட்டிப் பார்க்கும்.
“நாலு நாளு எங்க வீட்ல வந்து இரியேம் பெரீப்பா” என. சம்பிரதாயமாகவும் கொள்ளலாம், அல்ல எனவும் தேரலாம். அப்படிப் போவதில்லை அவர். தனபாக்கியம் அதை அனுமதிக்க மாட்டாள். அவளுக்கது அவப்பெயர். விசேசங்கள் என்று கூப்பிட்டால் தவறாமல் போவார், ஒருவேளை உண்பார், கணிசமாகச் செய்யும் சீர் கொடுப்பார்.
சில நாட்கள் தோன்றும் அவருக்கு. தோள்பையில் தண்ணீர் போத்தல், பழங்கள், பிஸ்கட் பொட்டலத்துடன் சீதப்பால் கடந்து, தடம் தேர்ந்து, தாடகை மலை மீது முடியும் வரை ஏறவேண்டும் என. சில சமயம் ஒளவையாரம்மன் கோயிலின் பின்பக்க சானலைத் தாண்டி, பொத்தைகள், குன்றுகள் ஏறித் தாடகை மலை ஏற வேண்டும் என.
பிஞ்சு மாங்காயும் ஈச்சம் பழங்களும் கொல்லாம் பழமும் நெல்லிக்காயும் நாவற்பழங்களும் தேடிப் பறித்துத் தின்ற காலங்கள் மனதிலிருந்து இன்னும் மாய்ந்து போகவில்லை. ஒருமுறை குரங்கொன்று கூர் நகங்களால் பலாப்பழம் ஒன்றினை வகுந்து கொண்டிருந்தது. குரங்கை குச்சி கொண்டு ஓட்டிவிட்டு சுளை பிரித்து வாயில் தேனூறத் தின்றதுண்டு.
மரநிழல் படிந்திருக்கும் தணுப்பான கருங்கற்பாறை மீது துண்டு விரித்து, மல்லாந்து, கண்மூடிக் கிடந்துறங்க கனவு காண்கிறது மனது.
‘நான் ஒருவன் மட்டும் பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ!’
காமாட்சிநாதன் சிலசமயம் எண்ணுவதுண்டு! துறவைக் கனவு காண்பவன் என்று துறவி ஆவான்? தூக்கி எறிந்துவிட்டுப் போவதல்லவா துறவு? ‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்’ என்பது குறள். தனது கருமம் எதுவென யோசித்தார் காமாட்சிநாதன். நடப்பதும் கஞ்சி வைத்துக் குடிப்பதும் உறங்குவதுமா?
அறுபத்தோரு வயதாகும் சில மாதங்களில். ரத்த அழுத்தம், நீரிழிவு, வாத-கப-பித்தக் கோளாறுகள், இதயநோய், அஜீரணம் என்பன ஏதுமில்லை. செவி நன்றாகக் கேட்கிறது. பற்கள் நன்றாக அரைக்கின்றன. கண்ணாடி என்பதோர் குறைபாடெனக் கொள்ளலாமா?
என்ன செய்வது இந்த உடலை? என்ன செய்வது இந்த வயிறை? என்ன செய்வது இந்த வாழும் ஆசையை? பதினொன்று வரை உடன் வாசித்த, நட்பாகப் பழகிய, இன்று பேரன், பேத்தி எடுத்துவிட்ட தைலாம்பாள், எதிர்பட்ட நாளொன்றில் கேட்டாள், “ஒரு கலியாணம் செஞ்சுக்கோ காமாச்சி” என்று.
”ஒனக்கு பேத்தி இருந்தால் சொல்லு’ என்றார் விளையாட்டாக.
ஒன்பதரைக்குப் படுத்தால் ஐந்துக்கு முழிப்பு. பிறகு செய்ய என்ன கிடக்கிறது?
தனபாக்கியம் காலமான பின்பு தங்க நகைகளை, வெள்ளிப் பாத்திரங்களை ஒதுங்க வைத்து ஒழுக்கறைப் பெட்டியில் வைத்துப் பூட்டியாயிற்று. பட்டுப் புடைவைகள் கிடக்கின்றன சில, மகளும் மருமகளும் பிரித்துக்கொள்ள. ஓர் அறை முழுதும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன பெரியபெரிய செம்பு, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள்.
அன்று தகப்பனார் சொல்வார் அடிக்கடி – இருக்கப் பறக்கை, சுகிக்க சுசீந்திரம், சொல்லுக்குத் தேரூர் என்று. மேலும் சொல்வார் தேரூரில் ஒரு பெண்ணும் தெள்ளந்தியில் ஒரு வயலும் சீதப்பால் மேட்டில் ஒரு விளையும் உடையவன் யோகசாலி என்று. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கேட்டார், ‘அல்லால் உறுதி உளதோ?’ என்று.
இன்று மக்கள் யாருக்கும் வேண்டாம் இந்த வீடும் வயலும் விளையும்! நகரில் இருந்து எட்டுக் கிலோ மீட்டர் ஒதுங்கி மலை
அடிவாரத்தில் அமைந்த, ஒதுங்கிப்போன இந்த ஊரில் எவர் வந்து வாழப் போகிறார்? அவர்கள் கணக்கில் மிக அருகில் இருக்கும் திருவனந்தபுரம் விமானத்தளம் எண்பது கிலோ மீட்டர் என்பது!
தொலைபேசி -உண்டு, வங்கி உண்டு, சில்லறைக் கடைகள் உண்டு, சின்ன மருத்துவமனை உண்டு, ஆட்டோ -உண்டு, பேருந்து உண்டு, நல்ல தண்ணீர் உண்டு, நல்ல காற்று உண்டு.
என்ன இல்லை வாழ்வைச் சுகமாக்கிக் கொள்ள? எனில் என்ன உளது வாழ்வைத் தொடர்ந்து கொண்டுபோக? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’ இப்போதும்தான் எது வருகிறது நிழல்போல் ஒட்டியவாறு? பாவம் என்பதென்ன, புண்ணியம் என்பதென்ன?
தனபாக்கியம் வாழ்ந்திருந்தபோது, கூடமாட ஒத்தாசைக்கு மாடத் தெருவில் இருந்து மாலையம்மை வந்து போனாள். வீடு தூத்து வார, நல்ல தண்ணீர் கோரி நிறைக்க, கறிக்கு அம்மியில் அரைத்துக் கொடுக்க, தோசைக்கு மாவாட்ட, இடிக்க, பொடிக்க, புடைக்க, நாவ, அரிக்க, பாத்திரம் விளக்க என.
மலங்காட்டுக்கு கொழுஞ்சிக் குழை பிடுங்கப் போன மலையப்பன் கருநாகம் தீண்டக் காட்டிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள். கை பிடித்து நாடி பார்த்த வைத்தியனார் பாட்டா சுண்டைப் பிதுக்கியபோது மாலையம்மைக்குத் தாலி இறங்கியது. இடுப்பில் ஒன்றும் தொட்டிலில் ஒன்றுமாய் பெண்பிள்ளைகள். முலை சுரப்பு நின்றுபோனது, பசி சுரக்க ஆரம்பித்ததும்.
பிள்ளைகள் பசித்தழுதபோது நடையேறி வந்தாள். பிறகு அவர்களை தனபாக்கியம் பசியோடு இருக்கவிட்டதே இல்லை. தரை வெளுக்க வந்தால் விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள். முழித்து எழுந்து வரும் பிள்ளைகள் காமாட்சிநாதன் வீட்டிலிருந்தே பள்ளிக்குப் போகும். பள்ளிக்குப் போய்விட்டு வீட்டுக்கே திரும்பி வரும். மாலையம்மை வேலை செய்யும்போது பிள்ளைகள் பாடம் எழுதும், படிக்கும், விளையாடும்.
அவரைப் பெரியப்பா என்றும் தனபாக்கியத்தைப் பெரியம்மா என்றும் கூப்பிடப் பழகி இருந்தன. வெளியூர்களில் வேலை செய்த போது அவர் வெள்ளி இரவு வந்து திங்கள் காலையில் திரும்பிப் போவார். அவர் ஊரில் இல்லாத நாட்களில் தனபாக்கியத்துக்கு துணையாக அங்கேயே படுத்தும் கொள்வார்கள். வெளிக்குத் தெரியாமல் பள்ளிக் கட்டணங்களை அவரே கட்டுவார், துணிமணிகள் எடுத்துக் கொடுப்பார், மருந்துச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்.
தனபாக்கியம் செத்துக் கிடந்தபோது அவர்களது கதறல் காணச் சகியாதது. தன்பாக்கியத்துக்கு மாலையம்மை வேலைக்காரி என்பது மாறி உடன் பிறவாதவளாக இருந்தாள். பிள்ளைகள் இரண்டும் பத்துக்கும் பன்னிரண்டுக்கும் வந்துவிட்டிருந்தன.
தாயின் சாவுக்குக்கூட மக்கள் இருவரும் மணவாளரும் அவர்தம் மக்களும் வந்து சேரவில்லை. ஆயிரத்தெட்டுகாரணங்கள் இருந்தன. உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கலாம். தனபாக்கியம் அவர்களைக் கடைசியாகக் கண்டதே நான்காண்டுகள் முன்பு. முன்பானால் மாதமொரு கடிதம் வரும். பின்பு மாதமொரு தொலைபேசி அழைப்பானது. உரித்துப் பார்த்தால் பந்தம், பாசம், பரிவு, அன்பு என்பவை எல்லாம் கால்பந்து அளவிலான பெரியதோர் வெங்காயம் எனலாமா?
தனபாக்கியம் இறந்து, கிழமை முறைகள் முடிந்து, பதினாறு அடியந்திரமும் கழிந்து சொக்காரர்களும் சம்பந்தக்காரர்களும் புறப்பட்டுப் போனபின் வீடு வெறிச்செனக் கிடந்தது. இனி மக்கள் வந்தென்ன, போயென்ன?
காமாட்சிநாதனுக்கு சொந்த மண்ணில் சாகவும் சந்தைவிளைச் சுடுகாட்டில் வேகவும் சாம்பல் கீழாற்றுத் தண்ணீரில் போகவும் ஆசை.
பதினாறு கழிந்தபின் மாலையம்மையை மிச்சம் மீதிகளை அள்ளிக்கொண்டு போகச் சொன்னார். எதற்கினி இத்தனை பலவெஞ்சணங்கள், பானை நிறையப் புழுங்கலரிசி, பச்சரிசி, புரை நிறைய விறகு, காய்கறிகள்?
வீடு ஒதுங்கியது. புழங்கும் அறைகள் தவிர மற்றவற்றுக்குப் பூட்டுப் போட்டார். தட்டுக்குப் போகும் திட்டிக் கதவைச் சாத்தி கொண்டி போட்டார். இனிமேல் தட்டில் சுதந்திரமாக மரநாய்கள் வாசம் செய்து, குடித்தனம் நடத்தி, குட்டி போட்டுப் பெருகலாம்.
காரியங்கள் முடிந்த மறுநாள் காலை, வழக்கம்போல, பலபலா விடிந்து தரை வெளுக்கும்போது மாலையம்மை வந்தாள். விடுமுறைக்காலம் பிள்ளைகளுக்கு. சாவகாசமாகத் தூங்கி எழுந்து பிற்பாடு வந்தன. சில்லறை வேலைகள், கழுவிக் கவிழ்த்தல் ஆனபிறகு, மூவரையும் வைத்துக்கொண்டு சொன்னார்.
“யம்மா, தனம் இருந்தவரைக்கும் சரி! இனிமே நீ வந்தா சோதாப் பயக்க வாயி சும்ம இருக்காது பாத்துக்கோ… நாளைக்கு பிள்ளையோ இன்னொருத்தன் வீட்டுக்கு கெட்டிப் போணும்… எனக்க ஒத்த ஆளுக்க காரியந்தானே! நான் பாத்துக்கிடுகேன்.”
“அது எப்படி? உங்களைத் தனியா விட்டுக்கிட்டு… அக்கா ஏற்கனவே சொல்லீட்டுத்தான் போயிருக்கா… ஏட்டீ, எனக்க காரியம் முந்திக்கூட்டி ஆயிப்போனா, அவரைக் கடேசிக்க காலத்துலே கெவுனிச்சுக்கோ. ஒரு கப்பு காப்பித் தண்ணி வச்சுக் குடிக்கக்கூட அவுருக்குத் தெரியாது பாத்துக்கோ… அப்புராணி மனுசனாக்கும். படிச்சிருக்காரு, உத்தியோகம் பாத்தாரு, ஆனா உலக நடப்புத் தெரியாதுட்டி அப்படீன்னு ஒரு வாரு சொல்லீருக்கா…”
“அது சரிதான் மாலையம்மா… உனக்குத் தெரியும்லா! ரெண்டு மூணு வருசத்துக்கு முந்தி, ஒரு காவாலிப் பய அஞ்ஞூறு ரூவா கடங்கேட்டான். நான் மாட்டம்னு சொன்னேன். கள்ளவாளிப் பய ஊரம்பலத்திலேயும் அழகம்மன் கோயில் செவுருலேயும் கரிக்கட்டை வச்சு நம்மளைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் எழுதிப் போட்டான். நீ தான போயி அழிச்சுக்கிட்டு வந்தே? இப்பம் அவுளும் இல்லாதபோது என்னத்துக்கு ஆகும்மா?”
“அதை நாம என்னத்துக்கு கூட்டாக்கணும்? முதுகிலே புண்ணிருந்தா குனியதுக்கு பயப்படணும்! நீங்க தனியாட்டு இருந்து பொங்கித் திம்பேளாக்கும்? இல்ல, கிளப்புக் கடைக்குப் போவேளா? நல்ல ஆளு… அப்பிடி உள்ள ஆளு, மக கூடயோ மகங் கூடயோ போயி இருக்கலாம்லா?”
“அதெல்லாம் சரிப்படாதும்மா! நான் என்னத்தையாம் போட்டு அவிச்சித் திம்பேன். ரெண்டு பேயம்பழம் வாங்கித் தின்னுக்கிட்டு தண்ணியைக் குடிச்சிக்கிட்டு படுத்தாலும் போச்சு… இன்னைக்குச் செத்தா நாளைக்கு ரெண்டு… நான் செத்துப் போனா, பிள்ளையோ வருகோ வரல்லியோ… பதினாறு நாளு காரியங்களையும் அவுளுக்குச் செஞ்ச மாரி, பொறுப்பா
நின்னு எனக்கும் செய்துரு… அவுளுக்கு கொள்ளி வைக்க நான் இருந்தேன்…எனக்குத் தர்மக் கொள்ளிதான்… இல்ல, அதுக்கும் நாதி அத்துப் போகுமோ? சரி, விட்டுத் தள்ளு… என்னத்துக்கு போட்டு அழுகே இப்பம்? எல்லாருக்கும் உள்ளதுதான! பிள்ளைகளைப் பொறுப்பா படிக்க வைய்யி… நேத்தைக்கு செய்ததை நான் நாளைக்கும் செய்வேன்… அந்தக் கவலை உனக்கு வேண்டாம்…”
மூவரும் கேவி அழுவது துக்கமாக இருந்தது. ‘என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை… இனி தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்’ என்று ஓடியது சிந்தை.
மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. குடியிருக்கும் சிறிய வீடன்றி யாதொன்றும் இல்லாத மாலையம்மை அரிசி புடைக்க, மாவிடிக்க, முறுக்கு சுற்றவும் சமயங்களில் களை பறிக்கவும் கடலை எடுக்கவும் போகிறாள் என்றாள் மூத்த பெண் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தபோது. முகத்திலும் மேனியிலும் வாட்டம் இருந்தது. முன்பானால் தனபாக்கியம் பார்த்தும் பாராமலும் செய்தாள்.
“பெரீப்பா, வீட்டைத் தூத்து வாரிப் போட்டுக்கிட்டுப் போறனே” என்றாள்.
“வேண்டாம்மா, நான் பாத்துக்கிடுகேன்” எனத் தடுத்தும் கேட்கவில்லை.
சிலசமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டும் வந்து கழுவிப் பொறுக்கி, தூத்து வாரி, தோசைக்கு மாவரைத்து, மிளகாய்ப்பொடி இடித்து வைத்துவிட்டுப் போகும். முலை சுரப்பது போலிருக்கும் காமாட்சிநாதனுக்கு. பொறுப்பாகப் படிக்கவைத்தால் இன்னும் நான்கே ஆண்டுகள் போதும் மாலையம்மையின் குடும்பம் நிமிர என்று எண்ணிக் கொண்டார்.
ஒருநாள் மாலை நடக்கப் போகும்போது, நேரக்களைபறி முடிந்து பெண்கள் கூட்டம் ஒன்று வந்தது. முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய கண்டாங்கிகளும் சேறு படிந்த கை கால்களும் கையிலிருந்த பித்தளைத் தூக்கு வாளிகளும் சலசலப்புமாக குளத்துப் படித்துறையில் துவைத்துக் குளித்து வீட்டுக்குப் போவார்கள்.
கூட்டத்தில் மாலையம்மை நடந்து வந்தாள். அவரைக் கண்டு தலை குனிந்து ஒதுங்கி இரண்டு பிள்ளைகளும் வந்தன. காமாட்சி நாதனுக்கு உயிரோடு இருக்கும்போதே யாரோ கொள்ளி வைத்தது போலிருந்தது.
மறுநாள் தான் பணி ஓய்வு பெற்ற, மாலையம்மையின் பெண்கள் படிக்கும் உள்ளூர் அரசு மேநிலைப் பள்ளிக்குப் போனார். பள்ளியின் சுற்றுச் சுவரோரம் நட்டு வளர்த்த பன்றி வாகைகள் மேலும் தடித்திருந்தன. நாலு நாட்களாக இரண்டும் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது. தத்தரவான களைபறி சீசன் போலும்.
அன்றிரவு மாலையம்மையையும் பிள்ளைகளையும் வரச் சொன்னார் காமாட்சிநாதன்.
எல்லாம் வல்ல இறைவன் திருவருளால், நிகழும் மங்களகரமான கொல்லம் ஆண்டு 1183, ஸ்ரீ சர்வஜித் வருடம் கார்த்திகை மாதம் 12-ம் தேதி, புதன் கிழமை புனர்பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 6.30க்கு மேல் 7-30க்குள், விருச்சிக லக்னத்தில், செண்பகராமன் புதூர், வடக்குத் தெரு, தெய்வத்திரு. ம. முத்துக்குமாரசாமி – காந்திமதி அம்மாள் மகள் மாலையம்மைக்கும் தாழக்குடி, மேலத்தெரு, நடு முற்றத்து வீடு, தெய்வத்திரு. தெய்வநாயகம் – சங்கரவடிவு மகன் காமாட்சி நாதனுக்கும் தாழக்குடி ஜெயந்தீசர் – அழகம்மன் கோயிலில் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
பந்து மித்திரர்களும் ஊர் முதலடிகளுமாக இருபது பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.
நடு முற்றத்து வீட்டின் பூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டன. தட்டட்டியின் திட்டிக்கதவு திறக்கப்பட்டு மர நாய்கள் ஓட்டப்பட்டன. புறக்கடையில் நின்ற மரஞ் செடி கொடிகளுக்கு புதிய சிலிர்ப்பு வந்தது. வீட்டின் முன் வாசலில் போடப்பட்டிருக்கும் கோலத்தை சமுண்டாமல் காமாட்சிநாதன் தினமும் காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல நடக்கப் போனார்.