கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,629 
 

“அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர்.

“இருடா தோசைதானே கல்லு அடுப்பில் வைத்துவிட்டேன், மூன்று தோசைதான் சாப்பிடுவே அதுக்கு ஏன் இப்படி பறக்கறே”

“சரிம்மா வழவழன்னு பேசாதீங்கம்மா, தோசையை கொடுங்க, மதியம் என்னம்மா”

“மதியத்திற்கு சாம்பாரும் உருளை கிழங்கும் வைத்திருக்கிறேன்”

“சரிம்மா” என்று வேகமாக சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

“பாஸ்கர் வாடா கேண்டீன் போய் சாப்பிட்டு வரலாம்” என்றான் தினேஷ்

“தினேஷ் நான் சாப்பிட்டுதான் வந்தேன், நான் வரவில்லை ஏண்டா வீட்டில் சாப்பிடாம கேண்டீன்ல சாப்பிடறே”

“பாஸ்கர் உங்க வீட்டு நிலைமையும் எங்க வீட்டு நிலைமையும் ஒரே மாதிரிதான், உனக்கு தெரியாதாடா, தினமும் கஞ்சி கூல்தான் இருக்கும், அதையே தினமும் சாப்பிட்டு வெறுப்பா இருக்குடா, அதான் ஒரு நாள் மட்டும் இட்லி, தோசை ஏதாவது சாப்பிடலாம் என்று நினைத்தேன்”

“சரி வா நான் காபி குடிக்கிறேன், நீ சாப்பிடு” என்று சென்றனர்

“பாஸ்கர் உங்க அம்மா மட்டும் எப்படிடா தினமும் இட்லி தோசை செய்றாங்க”

“அதெல்லாம் தெரியாதுடா, காலையில் இட்லி என்றால், இரவு தோசை இப்படியே மாறி மாறி இருக்கும்டா”

“நீ கொடுத்துவைத்தவண்டா, எங்க வீட்டில் மட்டும் ஏன்தான் இப்படி என்று தெரியவில்லை” இருவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

மாலை வீட்டிற்கு வந்ததும், “அம்மா தினேஷ் வசதியும் நம்ம வசதியும் ஒரே மாதிரிதான், ஆனால் நீங்க மட்டும் எப்படிம்மா தினமும் எனக்கு இட்லி தோசை தரீங்க”

“நீ கல்லூரிக்கு போகும் பையன், உனக்கு அதெல்லாம் சாப்பிட ஆசையாக இருக்குமில்லையா, அதனால் செய்து தருகிறேன்”

“அது சரிதான்ம்மா, அதுக்கு வருமானம் வரனுமில்லையா, அதனால்தான் கேட்டேன்”

“உனக்கெதுக்குப்பா இப்போ அதெல்லாம், நீ படிப்பதில் மட்டும் கவனம் செலுத்து அது போதும், எனக்கு நீ நன்றாக படிக்கனும் அதுதான் வேண்டும்”

“சரிம்மா, நீங்க ரொம்ப கஷ்டப்படறீங்கம்மா, சீக்கிரமே இதுக்கு ஒரு விடிவு காலம் வரும்” அவன் சொல்ல,

அவன் தாயார் சிரித்துக் கொண்டே, “சரி நீ வா சாப்பிட என்று இட்லியை சுடச் சுட பரிமாறினார்”

சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குள் வந்தான், அவன் தாயார் மதியம் மீதி இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அதைக் கண்டதும் அம்மா ஏன் மீதமிருந்த சாப்பாட்டை சாப்பிடறாங்க, எப்படி எனக்கு மட்டும் இட்லி என்று நினைத்துக் கொண்டே ஒன்றும் கேட்காமல் சென்றான்.

இரவு பத்து மணியளவில் அவன் தந்தையும் வர, அவர் என்ன சாப்பிடுகிறார் என்று கவனித்தான், அவனது தாயார் அவருக்கும் மதிய உணவையே பரிமாறினார், இதையும் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் அமைதியாகச் சென்றான்.

மறுநாள் காலையிலும் அவனுக்கு தோசை தயாராக இருந்தது, தன் அம்மாவையே பார்த்தான், “என்னப்பா அப்படி பார்க்கிறே, என்னைக்கும் இப்படி பார்க்க மாட்டியே ஏன் அப்படிப் பார்க்கிறே”

“ஒன்றுமில்லைம்மா சும்மாதான் பார்த்தேன்”,

“என்னப்பா பணம் எதுவும் தேவைப்படுகிறதா?”

“இல்லைம்மா அதெல்லாம் இல்லை, நான் கல்லூரிக்கு கிளம்புகிறேன்” என்று யோசனையிலே சென்றான்.

“என்னாடா பாஸ்கர் ஏதோ யோசனையிலேயே இருக்கே, எதுவும் பிரச்சினையாடா”

“இல்லைடா தினேஷ் தினமும் எனக்கு மட்டும்தான் இட்லி தோசை கொடுக்கிறாங்க, அம்மா, அப்பா வீட்டில் இருப்பதைதான் சாப்பிடறாங்க, எனக்கு மட்டும் எப்படி என்று யோசனையா இருக்குடா”

“அதுக்கு ஏண்டா கவலைப்படறே, எல்லோருக்கும் செய்ய வசதி குறைவுதானேடா, அதனால் உனக்கு மட்டும் செய்றாங்க போல”

“சரி அதைவிடுடா அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம், நம்ம கல்லூரியில் எல்லா துறையிலும் போட்டிகள் பற்றி அறிவிப்புக் கொடுத்து இருக்காங்க அதைப் பற்றிப் பேசலாம்” என்று இருவரும் போட்டியைப் பற்றி விவாதித்துக் கொண்டேச் சென்றனர்.

மாலை வீட்டிற்கு வந்தால் பூட்டியிருந்தது, அம்மா இன்னும் கடையில் இருந்து வரவில்லை போலிருக்கு என்று கடைக்குச் சென்றான், கடையில் மாவு அரைக்க ஆட்கள் அதிகமாக நின்றிருந்தனர். இவனும் கூட சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினான்.

ஆட்கள் குறைந்ததும், “என்னப்பா கடைக்கு வந்துவிட்டாய், வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுதானே வந்தேன், தேவி உன்னிடம் தரவில்லையா”

“அவர்கள் என்னைக் கவனித்து இருக்க மாட்டார்கள்ம்மா, அதனால் கொடுத்து இருக்க மாட்டாங்க, சரி உங்களுக்கு வேலை முடிந்ததா, வீட்டுக்கு போகலாமா”

“போலாம்பா இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள், அவர்கள் சென்றதும் போகலாம்பா”

ஆட்கள் குறைந்ததும் அவன் தாயார் உள்ளே சென்று ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தார், “என்னம்மா பாத்திரத்தில் என்ன இருக்கிறது”

“ஒன்றுமில்லைப்பா அப்பாவுக்கும் எனக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தேன்”

காபிக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் என்று பாஸ்கர்க்கு சந்தேகம் வந்தது. வீட்டில் வேறு சிறிய பாத்திரங்கள் இல்லையா என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் தன் அம்மாவை கவனிக்கத் தொடங்கினான், “என்னப்பா இன்று படிக்க ஒன்றுமில்லையா, வெளியிலேயே உட்கார்திருக்க”

“படிக்க இருக்கும்மா சும்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு போகலாம் என்று இருந்தேன், சரிம்மா நீங்க வேலை பாருங்க” என்று உள்ளே செல்வது போல் சென்று சிறிது நேரத்தில் சத்தமில்லாமல் வெளியே வந்து, சமையலறையில் எட்டிப் பார்த்தான், அவன் தாயார் கொண்டு வந்த பாத்திரத்தில் இருந்து இவனுக்கு மாவை எடுத்து இவனுக்கு இட்லி ஊற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கர்க்கு அதைக் கண்டதும் நெஞ்சில் ஏதோ கனமாக அழுத்துவது போலிருந்தது. அவனுக்கு இப்போதுதான் புரிந்தது தனக்கு தினமும் இட்லி தோசை எப்படி கிடைக்கிறது என்று அதை நினைத்து, அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வெகு நேரமாக யோசித்துவிட்டு, “அம்மா பசிக்குதும்மா” என்றான்.

“இதோ நீ சாப்பிட உட்கார் எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று பரிமாறத் தொடங்கினார்.

“அம்மா இனிமேல் எனக்கு இந்த இட்லி தோசை எல்லாம் வேண்டாம், எனக்கு இதையே சாப்பிட்டு வெறுப்பாக இருக்கும்மா, எனக்கு தினமும் சாதமே கொடுங்கள்”

“என்ன இப்படிச் சொல்றே உனக்கு இது ரொம்ப பிடிக்கும்தானே, ஏன் வேண்டாம் என்கிறே”

“அதான் சொன்னேன்ல தினமும் அதையே சாப்பிட்டதால் வெறுப்பாயிருக்கு, அதான் வேண்டாம்மா”,

“சரிப்பா இனிமேல் செய்யவில்லை, நீ கேட்கும் போது செய்து தருகிறேன்”

அவன் சாப்பிட்டு முடிக்கவும் தினேஷ் அவனைத் தேடி வந்தான்.

“என்னடா இந்த நேரத்தில் வந்திருக்கே”

“காலையில் போட்டிப் பற்றிப் பேசினோம் இல்லையா, அதில் சின்ன மாற்றங்கள் அதனால் பேசலாம் என்று வந்தேன்”

“சரி வாடா வெளியில் காற்றோட்டமாக உட்கார்ந்து பேசலாம்” என்று வெளியில் சென்றனர்.

“என்ன பாஸ்கர் காலையில் பார்த்ததை விட, இப்போ உன் முகத்தில் ஒரு தெளிவு தெரியுது”

“அது ஒன்னுமில்லைடா அப்பா மாவு அரைக்கும் கடைதானே வைத்திருக்காங்க, அங்கு அரைத்துக் கொடுக்கும் மாவிலிருந்து, கொஞ்சம் மாவை எடுத்துதான் அம்மா எனக்கு தினமும் இட்லி தோசை செய்து தராங்க”

“அதுக்கு என்னடா அப்படியாவது, உனக்கு பிடித்த சாப்பாடு கிடைக்குதானே”

“எனக்கு பிடித்திருக்கு என்பதற்காக, என் அம்மாவும் அப்பாவும் பிச்சை எடுக்கவிடலாமாடா, இதுவும் ஒரு வகை பிச்சைதானேடா, அது மட்டுமில்லாமல் ஆட்கள் நிற்கிறார்கள் என்று அவர்கள் சென்றதும், அம்மா எடுத்துக் கொண்டு வருகிறார்கள், இது என்றாவது ஆட்களுக்கு தெரிந்தால், அம்மாவையும் அப்பாவையும் அசிங்கப்படுத்தி விடுவார்கள்டா”,

“எனக்காக அவர்களை அசிங்கப்பட எப்படிடா விட முடியும், கஞ்சியோ கூலோ நம் உழைப்பில்தான் சாப்பிடவேண்டும், நான் பிறக்கும் முன்னிலிருந்தும், என்னை வளர்த்து இன்று கல்லூரியில் நான் படிக்கும் படிப்பு வரை, அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள், இது மட்டுமா அவர்கள் உயிர் இருக்கும் வரை என்னக்காகதானேடா வாழப் போகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்காக எனக்கு பிடித்ததை விட்டுக் கொடுக்கக் கூடாதா”

இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வந்த பாஸ்கரின் தாயார், இவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர் கண்களிலிருந்து நீர் அருவி போலக் கொட்டத் தொடங்கியது, இனிமேல் இப்படி செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டு, வந்த சுவடே தெரியாமல் சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *