பாலையில் பெய்யும் மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,375 
 
 

அவன் கதவைத் திறந்தது இவளுக்குத் தெரிந்தது. இவள் தூங்கவில்லை. இன்று மட்டுமல்ல… பல நாளாகத் தூங்கவில்லை. வாழ்க்கை இப்படி ஆனது பற்றி யோசித்து யோசித்து இவளுக்குத் தூக்கம் வரவில்லை. வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த இரண்டு மாத பிள்ளை பற்றிய கவலையில் தூக்கம் வரவில்லை.

பெரியவளும், சின்னவனும் இவளுக்கு அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் படுத்திருந்தனர். பெரியவள் வயதுக்கு வந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தாள்.

கதவு என்ற பெயரிலான கீற்றுத் தட்டியை அவன் திறந்தவுடனேயே இவள் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். அவன்தான். இவளின் கணவன்தான்.

அவன் ‘ரெண்டு நாள்ல வரேண்டி’ என்று சொல்லி போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அன்று காலையில்தான் பக்கத்து வீட்டு செல்லில் அழைத்து, வருவேன் என்று சொல்லியிருந்தான். இவள் அவனுக்கென்று எதையும் செய்து வைக்கவில்லை. ஏன் செய்ய வேண்டும்? எப்படி முடியும்?

வந்தவன் இருட்டில் சற்று நேரம் தயங்கினான். இவர்களின் வீடு என்பது ஒரு குடிசை. மண் சுவர் வைத்த குடிசை. கீற்றுத் தடுப்புத்தான் கதவு. சுருக்கி வைக்கப்பட்டமண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திற்கு அவன் கண்களைப் பழக்கிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

சற்று நேரம் கழித்து அவளுக்கு அந்தப் பக்கம் படுத்திருந்த கண்ணனுக்கு அருகே அவன் படுத்துத் திரும்பிக்கொண்டது தெரிந்தது. காலையில் எழுந்து கேட்கும்போது ‘நா வந்துட்டண்டி.. நீ அசந்து தூங்கினியா.. அதா எழுப்புல’, என்று அவன் சொல்வான் என்று இவளுக்குத் தெரியும். சாராயத்தின் நாற்றம் காற்றில் பரவி இவள் நாசியை நிறைத்தது.

இவள் அவனைக் காதலித்ததே அவன் சிகெரெட் கூட பிடிக்கமாட்டான் என்பதால்தான். மினி பஸ் ஸ்டீரிங்கை அவன் இயக்கும் விதமே அழகாக இருக்கும். ஒரு கையில் ஸ்டீரிங்கைப் பிடித்தபடி மற்றொரு கையில் டேப்பை மாற்றி இவளுக்கென்று காதல் பாட்டு போடுவான்.

மினி பஸ் அப்போதுதான் ஊருக்கு வந்திருந்தது. அவளுடைய ஊருக்கு ஒழுங்கான ரோடெல்லாம் கிடையாது. போட்டிருந்த ரோடும் கிரஷர் லாரிகள் சுமை தாங்காமல் கருங்கற்குவியலாக மாறியிருந்தது. மழைக்காலத்தில் சகதி வெள்ளமாக இருக்கும். வெயில் காலத்தில் அனலும் தூசியும் பறக்கும். இவர்கள் ஊருக்கெல்லாம் பஸ் வராது என்ற நம்பிக்கையை உடைத்துக்கொண்டு மினி பஸ் வந்தது. இவளும் மற்ற பிள்ளைகளும் 11வது போவதற்கு அது வாய்ப்பாக அமைந்தது.

இவளின் ஊர்தான் பஸ் கடைசியாக நிற்கும் இடம். பஸ் நிற்கும் கடைக்கு அடுத்ததுதான் இவள் வீடு. இறங்கி உள்ளே சென்றவள், நைட்டியுடன் திரும்பி வந்து வாசலில் நிற்கும் வரை அவன் பஸ் எடுக்கமாட்டான். அவள் வந்து விட்டாள் என்பது தெரிந்து அவன் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து கொள்வான். இவள் சற்றே விலகி பின் சென்று கீற்றுத் தடுப்பில் மறைந்து கொண்டு பிளையிங் கிஸ் கொடுப்பாள். அவன் சட்டென்று உதடுகளில் கைவைத்துக்கொள்வான். இவள் உதடு தித்திக்கும்.

அப்புறம் மினி பஸ் உறுமிக்கொண்டு புறப்படும். இவள் அந்த மறைவிலேயே அவன் நினைவுகளுடன் நின்றிருப்பாள்.

இவளின் பெயர் செல்வி. அம்மாவும் அப்பாவும் கல்லுடைப்பவர்கள். காலையில் போனார்கள் என்றால் இருட்டும்போதுதான் அம்மா வருவாள். அப்பா லேட்டாக வரும்போது சாராய நாற்றம் அடிக்கும். அத்துடன் பீடியின் நாற்றம் இருக்க விடாது. வந்தவுடன் சோறு போட வேண்டும். அப்புறம் தூங்கிவிடுவார்.

அம்மா படுக்க 10 மணி கூட ஆகிவிடும். எல்லா வேலையையும் முடித்து காலையில் செல்வியும் தம்பியும் ஸ்கூல் போக சமைத்துவைத்துவிட்டு தூங்குவாள். அம்மா முகத்தில் எப்போதும் கடுகடுப்பு இருக்கும். அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டதை இவள் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன.

செல்விக்கு அப்போதெல்லாம் பெருங்கவலை. அப்பா போல ஒரு குடிகாரனிடம் மாட்டிகொள்வோமோ? அம்மா பேசாதிருப்பது போல தானும் பேசாத பெண் ஆகிவிடுவோமோ என்று யோசித்திருக்கிறாள்.

அந்தக் கவலையை உடைத்தது முருகன்தான். ஆறடி வளர்ந்து நிற்பவன். விஜய் போல மீசை வைத்திருப்பவன். அவன் வளைவுகளில் ஸ்டீரிங் உடைத்து வளைப்பதே அலாதியாக இருக்கும். வளைத்து ஸ்டீரிங்கை விடுவிக்க உள்ளங்கையை ஓரத்தில் வைத்து அப்படியே அழுத்துவான். வெண்ணெய் போல அது சுழலும், எந்தத் தடுமாற்றமின்றி வளைந்து துள்ளித் திரும்பும் ஆட்டுக்குட்டி போல மினி பஸ் திரும்பும்.

இவள் வயது பெண்களுக்கெல்லாம் அவன் மேல் கண். ஆனால், கடைசியில் செல்விதான் ஜெயித்தாள்.

அவள் ஜெயித்தது ஒரு விபத்தில். பங்களாவைத் தாண்டி பஸ் வந்து கொண்டிருந்தது. இவள் என்ஜின் கவரில் முட்டி படும்படி நின்று கொண்டிருந்தாள். அவன் கியர் மாற்றும்போது இவளின் தொடைகளில் அவன் கைபடும்.

பங்களா திருப்பத்தில் இவளைப் பார்த்தபடி அவன் ஸ்டீரிங்கை ஒடிக்க… எதிரே ஒரு சைக்கிள்காரன் வர.. அவன் ஆக்சிலேட்டரை விடுத்து கிளட்சையும் பிரேக்கையும் அழுத்த பஸ் துள்ளிக்கொண்டு நின்றது.

செல்வியோ முன்பக்கக் கண்ணாடியை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தாள். டிரைவர் இருக்கைக்குப் பின்னிருந்த கம்பியைப் பிடித்திருந்த கை அறுந்துவிடும்போல இருந்தது. அவன் இடது கையை நீட்ட அவன் முன் கையில் தங்கி நின்றாள். பட்டு விலகிய மார்பு வலித்தது. இவளுக்கோ இனித்தது. அன்றுதான் அந்த காதல் தீ வேகம் பிடித்தது.

ஸ்ரீவினாயகா டாக்கீசில் அப்போது மின்சாரக் கண்ணா படம் ஓடிக்கொண்டிருந்தது. இவள் தன்னை மோனிகாவாக நினைத்துக்கொண்டாள். முருகன் விஜய் என்றால், இவள் மோனிகாவாகத்தானே இருக்க வேண்டும். மோனிகா போட்டிருந்த, பின் பக்கம் பெரிதாக திறந்த ஜாக்கெட் ஒன்றும் தைத்துக்கொண்டாள்.

முருகன் தூங்கிவிட்டிருந்தான். குறட்டைச் சத்தம் கேட்டது. ‘குடித்திருக்கிறானே.. சாப்பிட்டானோ?’, என்று சற்று யோசித்தாள். ‘அப்புறம் விடு கழுதைய.. அவ.. அந்த லோலாயி.. சோத்தைப் போடாமலா அனுப்பியிருப்பா.. சக்களத்தி… சோறும் போடுவா.. கசக்கியும் எடுத்துடுவா.. நாற…‘ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

பழைய நாட்கள் இன்னும் செல்வி மனதில் பசுமையாக இருந்தன. ப்ளஸ் டூ முடித்தவுடன் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்தது… முருகன் சாதி கீழ்ச்சாதி என்று வீட்டில் சண்டை வந்தது… ‘பள்ளு, பற, சக்கிலியில’ எது மேச்சாதி?’, என்று இவள் கேட்க, அப்பன் விட்ட அறை எல்லாம் நினைவில் இருந்தது.

அப்புறம் செல்வியும் முருகனும் ஓடிப்போனார்கள். திருப்பூரில் அவன் கார் ஓட்ட இவள் டெக்சுக்குச் சென்றாள். அங்கேதான் பெரியவள் கருவானாள். அத்துடன் பிரச்சனையும் உருவானது.

முருகன் வீட்டிற்கு லேட்டாக வந்தான். ஞாயிறு காலையில் சென்றால், மாலையில்தான் வருவான். அப்புறம் செல்விக்கு நிறைய தெரிய வந்தது. பிள்ளைத்ததாய்ச்சியை விட்டுவிட்டு இவளோடு வேலை செய்தவளிடம் சுகம் தேடிப் போகிறான் என்று தெரியவந்தது.

பிள்ளையைப் பெற மூன்று மாதம் இருக்கும் போது அம்மா கோபம் தனிந்து அழைக்க வந்தாள். முருகன் ஊருக்கு வந்து உடனேயே திரும்பிவிட்டான். பிள்ளையைப் பெற்று நான்கு மாதம் ஆனவுடன் திருப்பூர் சென்று தெரு சிரிக்க சண்டை போட்டு முருகனைக் கையோடு அழைத்து வந்தாள். அப்புறம், மருந்தெல்லாம் வைத்து அவனைக் கைக்குள் போட்டுக்கொண்டாள். எருக்கம்பட்டி மந்திரவாதி கருப்புவின் மை எவனையும் மயக்கி கைக்குக் கொண்டுவந்துவிடும் என்று ஊருக்குள் சொன்னார்கள். அந்த மையையும் வாங்கி வைத்துவிட்டாள்.

முருகன் வேல்முருகன் பஸ்சில் வேலை வாங்கிக்கொண்டு ஊரிலேயே இருந்தான். இரண்டு நாள் டூட்டி.. அப்புறம் வீட்டுக்கு வந்துவிடுவான். இப்போதெல்லாம் புகைக்கத் துவங்கியிருந்தான்.

‘ஏன்’ என்று ஒரு நாள் செல்வி கேட்டாள்.

‘ஏதோ ஞாபகம்’, என்றான் முருகன்.

‘திருப்பூர்காரி ஞாபகமா?’ என்று இவள் கேட்க, அவன் தயக்கமேயின்றி ’ஆமாண்டி.. முண்ட’ என்றான்.

சகித்துக்கொண்டாள்.

அப்போதுதான் சின்னவன் கருவாகியிருந்தான். இவளுக்கு நான்கு மாதம் இருக்கும்போது வீட்டுக்கு வருவது குறைந்தது. போன் போட்டுக் கூப்பிட்டால் வருவான். குடித்திருக்கிறான் என்று தெரியும். அதனை சிகெரெட் புகையால் மறைக்கிறான் என்று தெரியும். சண்டை நடக்கும். அப்புறம் பத்து பதினைந்து நாள் வரமாட்டான்.

இந்த முறை இவன் வண்டியில் டூட்டி பார்க்கும் டிரைவரின் மனைவி என்று தெரியவந்தது. வண்டியைப் போலவே வீட்டு டூயுட்டியையும் மாற்றிக்கொள்கிறார்கள் என்று இவளிடம் சொன்னார்கள். ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். அந்தப் பேச்சையெல்லாம் கேட்டு இவளுக்குக் காது புண்ணாகிவிட்டது.

சண்டை போட்டால் அவன் வேலையை மாற்றிக்கொள்வான். தொடுப்பை மாற்றிக் கொள்வான். வீட்டுக்கு வரமாட்டான்.

பிடித்து வைத்துக் கேட்டால், ‘நீதாண்டி பொண்டாட்டி.. நா இல்லென்னா சொன்னேன்.. வரேன்ல்ல.. எப்பவோ… வூட்டுக்கு வரேன்ல்ல.. நீ பொண்டாட்டிடி.. மத்ததக் கண்டுக்காத. எவ வந்தாளும் ஒனக்கு நான் செய்ய வேண்டிய செய்றேன்ல’ என்பான்.

அவன் வராதபோது பணமும் வராது. முதலில் கல்லுடைக்கப் போனாள். இவளுக்கு கல்தூசு ஒத்துவரவில்லை. உடல் இளைத்தது. அப்புறம் தோட்ட வேலை.. நூறுநாள் வேலை.. அப்படியே இரண்டு வெள்ளாடு என்று சமாளிக்க ஆரம்பித்தாள். பிள்ளைகள் வளர வளர பிரச்சனைகள் வளர்ந்தன. இவள் நெஞ்செலும்பெல்லாம் தெரிந்தன.

இதுதான் அவர்களின் காதல் வாழ்க்கை.

பலமுறை பஞ்சாயத்து வைத்துவிட்டாள். ஊரில், கம்யூனிஸ்ட்டு கட்சி ஆபீசில்.. அப்புறம் மகளிர் காவல் நிலையத்தில்.. எதற்கும் அவன் கட்டுப்படவில்லை.

ஒரு முறை அவன் அதிகாலை கருக்கிருட்டில், பக்கத்து வீட்டிலிருந்து கைலியைக் கட்டிக்கொண்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு விளக்குமாற்றால் விளாசியிருக்கிறாள். இவனையும் அந்த வீட்டுக்காரியையும். அந்த அடுத்த வீட்டுக்காரி முருகனை விட வயதில் பெரியவள்.

இவள் யோசித்துப் பார்த்தாள். என்ன குறைகிறது தன்னிடம்..? இத்தனை ஆண்டுகளில், இரண்டு பிள்ளைகளில் அவள் தளர்ந்திருந்தாள். மோனிகாவாக இல்லை. பிரா கூட போடுவதில்லை. நைந்துபோன ஒடம்புக்கு கஞ்சிதான் முக்கியம் இல்லையா?

ஆனால், அவன் விஜய்யாகவே இருந்தான் என்று பட்டது.

செல்வி எழுந்து அமர்ந்தாள். கோழி கூவியிருந்தது. தூங்காத கண் எரிந்தது. இவர்கள் வீடு ஒரு மேட்டில் இருந்தது. வாசலில் முருகனின் பைக் நின்றிருந்தது. எப்போதும் அந்த பைக்கில்தான் வருவான். மண்ணெண்ணெய் போட்டு ஓட்டுவான். கழுத்தறுந்த கழுதை போல அது சப்தம் போட்டுக்கொண்டு ஓடும்.

பள்ளத்தில் தென்னந்தோப்பு தெரிந்தது. காலையில் போய் மட்டை எடுக்க வேண்டும். இப்போதெல்லாம் கம்மாய் வேலையில் கூலி குறைத்துவிட்டார்கள். எழுபது ரூபாயைத் தாண்டுவதில்லை. இவளுக்குக் காட்டாது என்பதால் கீற்று முடையத் துவங்கியிருந்தாள். முடைந்துபோட்டால், வீட்டு வாசலியே வந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரு நாளைக்கு எப்படியும் நூத்தியம்பதைத் தாண்டி கைக்குப் பணம் வரும். கைக்குப் பணம் வர ஒரு வாரம் ஆகும். கம்மாய் வேலையில் பதினைந்து நாளைக்குப் பணம் வராதே..

தென்னந்தோப்புப் போகும் வழியிலேயே ஒதுங்கி விட்டு சிறுமலை ஓடையில் முகத்தைக் கழுவி தலையை ஈரக்கையால் வாரிவிட்டு தோப்பை நோக்கி நடந்தாள்.

தோப்பை நெருங்கும்போதே, அவர் மோட்டார் செட்டில் துவைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர்தான் அந்த தோட்டத்தின் காவலாளி. மோட்டார் எடுத்துவிடுவது, வெட்டிய காய்களை எண்ணி கணக்கு வைப்பது என்று அவரின் வேலை.

அவர் பெரிய சாதிக்காரர் என்று இவள் கேள்விப் பட்டிருக்கிறாள். அவரின் பெயர் சின்ன பாண்டி. நத்தம் பக்கத்தில் ஊராம். பஞ்சம் பிழைக்க வந்து மனைவியோடு தோப்பில் குடியிருந்திருக்கிறார். ஒரு நாள் அவர் மனைவி தோப்பைத் தாண்டி காட்டுக்கு விறகெடுக்கப் போயிருக்கிறாள். அநியாயத்துக்கு மருந்து போட்டு வெடிவைக்க, குவாரியிலிருந்து பறந்து வந்த கல் அவள் தலையில் இறங்கிவிட்டது.

குவாரிக்காரர் எம்எல்ஏ. சும்மா இருப்பாரா..? பெரிய ஆளாயிற்றே? போலீஸ் கேசாக விடாமல், ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கொண்டாராம். மகராசி… போய் சேர்ந்துவிட்டாள். பணம் கைமாறியதாக ஊரில் பேசிக்கொண்டார்கள்.

ஆனால், அன்று முதல் சின்ன பாண்டி பேசுவதில்லை.

தோப்பில் மட்டை எடுக்க இவள் ஆறேழு மாதமாக போய் வருகிறாள். என்னவோ தெரியவில்லை… சின்ன பாண்டி இவளிடம் மட்டும் பேசுவார். தன் சோகத்தைச் சொல்வார். எம்எல்ஏ கொடுத்த காசில் பாதிதான் கைக்கு வந்ததாம். எம்எல்ஏ கட்சி கிளைச் செயலாளர் அமுக்கிவிட்டாராம். வந்த பணமெல்லாம் ஆஸ்பத்திரி செலவுக்கு வாங்கிய கடன் கட்டவே போதவில்லையாம்…

தானே சமைத்து தானே சாப்பிட்டு, பிள்ளைகள் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை என்று புலம்புவார்.

ஏன் பிள்ளை இல்லையென்று செல்வி கேட்டபோது ‘கடவுள் கொடுக்கல‘ என்று அவர் சொன்னார். ஆனால், ஒருவருக்கொருவர் பிள்ளையாக வாழ்ந்தார்களாம்.

இப்படி ஆரம்பித்த பழக்கம்.. நாட்கள் செல்லச் செல்ல உட்கார்ந்து பேசும் அளவுக்கு வந்தது. அடங்காத தன் புருஷன் பற்றி இவள் சொல்வாள். போய் சேர்ந்த மகராசி கண்ணைப்போல தன்னைப் பார்த்துக்கொண்டாள் என்று சின்ன பாண்டி சொல்வார்.

மட்டையை எடுத்து அடுக்கிக் கட்டி இவள் தலையில் ஏற்றி வைத்து கம்மாய் கரையில் செல்வி ஏறும் வரையில் சின்ன பாண்டி கூட வருவார். ‘இந்த புள்ள தலையில எத்தன சொம’, என்று யோசித்தபடியே இவள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

இப்படியாக நாட்கள் சென்றன.

பின்னர் ஒரு நாள், சின்ன பாண்டிக்குக் கடவுள் பிள்ளை கொடுத்துவிட்டார் என்பதை.. செல்வி தன் வயிற்றில் உணர்ந்தாள்.

இவள் வருவதற்கு முன்பே சின்ன பாண்டி மட்டைகளைக் கட்டி வைத்திருந்தார். செல்வி இரண்டு நாளாகக் காய்ச்சலில் படுத்ததில் தண்டல் கட்டாமல் விட்டதை ஈடுகட்ட வேலை செய்ய வேண்டும். ‘புள்ள சீக்கிரம் போச்சிதுன்னா கூட ரெண்டு தட்டிப் பின்னும்’, என்பது அவரது யோசனை.

வந்தவளை நிற்கக் கூட விடாமல் மட்டையைத் தலையில் ஏற்றி கம்மாக் கரை வந்து அனுப்பி வைத்தார்.

செல்வி மேடேறி வந்து மட்டையை இறக்கிப் போட்டுவிட்டு சரிந்து உட்கார்ந்தபோது பிள்ளைகள் பள்ளிக்குப் போயிருந்தார்கள். முருகன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் அப்படியே தரையில் படுத்திருந்தவள், சூரியன் சுடுவது உணர்ந்து எழுந்தாள். மணி ஒன்பது ஆகியிருந்தது. ஊறியிருந்த மட்டைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள். வயிறு எரிந்தது.

‘இருக்கட்டும்.. பழைய கஞ்சிதான் இருக்குதில்ல.. ரெண்டு மட்டைய முடிச்சிடலாம்’, என்று கண்ணை மூடிக்கொண்டு விரல்களை இயக்கினாள்.

இரண்டாவது மட்டைக்குச் ‘சடை’ பின்னியபோது, எழுந்து வந்த முருகன், ‘என்ன வச்சிருக்கே’, என்றான்.

நிமிர்ந்து பார்க்காமலேயே ‘கஞ்சி..’, என்றாள்.

‘சரியான இவடி.. நீயி’, என்றவன், ‘இரு சிக்கன் வாங்கியாறேன்’, என்று அந்த கழுதை வண்டியில் புறப்பட்டான்.

மதியம் செல்வி சிக்கன் செய்து சோறு வடித்தபோது நேரமாகிவிட்டிருந்தது. மணி இரண்டு இருக்கும்.

இறக்கிவைத்துவிட்டு இவள் திரும்பியபோது அவன் கீற்றுத் தடுப்புக் கதவை அடைத்துக் கொண்டிருந்தான்.

‘அய்ய.. என்ன இப்போ’, என்றவளை அவன் பார்வை முறைத்தது.

‘மூனு மாசமாயிடுச்சிடி‘, என்றபடி அவன் கைலியை அவிழ்த்தான்.

‘யாருக்கு?’ என்று இவள் நேராக அவன் கண்களைப் பார்த்தாள், ‘ஒனக்கு எத்தனை நாளு ஆச்சி?, என்றாள்.

‘ஆம்பள வேறடி.. நீ பொண்டாட்டியில்லியா.. அதா..’ என்றபடி அவன் நெருங்கினான்.

இவள் விலகி மண் சுவற்றில் சாய்ந்தாள். அவள் கையில் மட்டை அரிவாள் தட்டுப்பட்டது. கையில் எடுத்துக்கொண்டாள்.

‘கிட்ட வராத.. அத வெட்டிப்புடுவேன்’, என்ற அவளின் குரலின் வெறி அவனைத் தயங்க வைத்தது. அவளின் கண் பார்வை அவனின் இடுப்பின் கீழிருந்தது.

‘எதடி..?’ என்றான் அவன்.

‘அத.. அத’ என்றாள் இவள்.

‘அப்புறம் எவங்கிட்டே போவ?.. இல்ல போனியாடி..? போனத் திமிறாடி..?’, என்ற அவன் வார்த்தை முடிவதற்குள் துள்ளி எழுந்தபடியே அரிவாளை வீசினாள். அவன் விலக காற்றைக் கிழித்தது அரிவாள்.

‘வாடா.. ஆம்பள நாய.. ஒனக்கு நாளுக்கு ஒன்னு.. நானு.. ஒனக்கு மட்டுமே தேவுடியாளா?’… எழுந்து நின்றவளின் அரிவாள் அவன் இடுப்புக்குக் கீழே இறங்கப்பார்த்தது.

அவன் அவசரமாக கீற்றுத் தடுப்பை விலக்கிக் கொண்டு வெளியே ஓடினான். ஓடும்போதே கைலியைக் கட்டிக்கொண்டான். தடுமாறி விழுந்து எழுந்தான்.

காலையிலிருந்து சாப்பிடாததால் இவளுக்குத் தலை கிறு கிறுத்தது. இவள் சமாளித்து வெளியே வந்தபோது அவன் அந்த கழுதை வண்டியை உதைத்துக்கொண்டிருந்தான். அவளின் அரிவாள் அவன் தொடையில் இறங்கவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. தடுமாறி சரிந்தவன், மிரண்டவனாக மற்ற காலை ஊன்றி சரி செய்து கொண்டு சரிவில் இறங்கினான். இவள் கல் ஒன்றை எடுத்து வீசிவிட்டு மேல் மூச்சு வாங்க நின்றாள்.

அப்படியே அமர்ந்தாள்.

எத்தனை நேரம் போனது என்று தெரியவில்லை.

அடுப்பில் பாத்திரம் சரியும் சப்தம் கேட்டு எழுந்தாள். அவளுக்குத் தெரியும். அது திருட்டுப் பூனை. கறி வாசனை தெரிந்த திருட்டுப் பூனை.. வேகமாக எழுந்து பூனையை விரட்டினாள்.

அப்புறம் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். மினி பஸ் துவங்கி.. தொடர்ந்த வேதனைகளேல்லாம் அவள் நெஞ்சில் குழப்பமாக ஓடின. தானும் தன் தாயைப் போல பேசாத பெண் ஆகிவிடுவோம் என்று பயந்தாள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசித்தாள்.

‘எப்புடிப் புள்ள இப்புடி வாழற..? நாளைக்கு ஒனக்கும் ஒம்புள்ளைகளுக்கும் என்ன ஆகும்..?’, என்று கேட்ட சின்ன பாண்டியின் குரல் அவளுக்கு நினைவு வந்தது.

எழுந்தாள்.

கறியை தூக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு கொஞ்சம் சோற்றையும் இன்னொரு சட்டியில் எடுத்துக்கொண்டாள்.

’தோப்புல அது என்னத்தை காச்சிச்சோ.. என்னத்த தின்னிச்சோ.. இல்ல அதுவும் இல்லியோ’, என்று முனகியபடி, முதல் முறையாக கையில் தூக்குச் சட்டியுடன், நடந்தாள்… சின்ன பாண்டி காவல் காக்கும் தென்னந்தோப்புக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *