பாலும் பழமும் கைகளில் ஏந்தி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 4,569 
 
 

மழை சொட்டத் தொடங்கி இருந்த இரவு நேரத்து கடைசிப் பேருந்து. அடித்துப் பிடித்து வேகமாய் உள்ளே ஏறிக்கொண்டேன். ஜன்னல் ஒரம் எனக்காக காத்துக் கொண்டு இருந்தது.பையை மேலே ஏற்றிவிட்டு சீட்டில் சாய்ந்து ஜன்னலை விசாலமாக்கினேன். ஆர்டர் விசயமாய் சென்னைக்குப் போய்விட்டு சேலத்துக்கு திரும்ப பயணம். மாதத்தில் மூன்று நான்கு டிரிப்புகள் இதுபோல் போயாகவேண்டும்.வண்டி நகர இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் போல் இருந்தது. முன் இருந்த பேருந்துகள் எல்லாம் ஒவ்வொன்றாய் உறுமிக்கொண்டு கிளம்ப, உலகத்தில் எல்லாருக்கும் நடக்கும் அதேகொடுமை எனக்கும் நடந்தது. நான் அமர்ந்திருக்கும் பேருந்து மட்டும் இன்னும் நடக்கப் பழகாமல் நடைமேடையை உரசிக் கொண்டு நின்றது.கண்டக்டரும், டிரைவரும் டீ குடித்துக் கொண்டு இருந்தார்கள். கடைகளில். வாராந்தரிகளில் உதடு துருத்தி சிரித்துக்கொண்டு இருந்தார்கள் கதாநாயகிகள்!

“உன்மேல ஒரு கண்ணு, நீதான் என் முறைப்பொண்ணு’ என்று சிவகார்த்திகேயன் பாடிக் கொண்டு இருந்தார் எஃப்எம்மில். காலியான இருக்கைகள் நிரம்பத் தொடங்கின.அந்தச் சமயம்தான் வேகமாய் உள்ளே வந்த நபர், மங்கிய வெளிச்சத்தில் இருக்கை தேடி, இறுதியாய் எனது பக்கத்து இருக்கையைக் கண்களால் தத்தெடுத்து என் தலைக்கு மேலே அவருடைய அரிஸ்டோகிராட்டை தொப்பை என் முகத்தில் மோத ஏற்றிவைத்தார்.

“காலையில அடிச்ச வெயிலுக்கு கண்டிப்பா இன்னைக்கு மழை இருக்கும்னு நினைச்சேன்! வந்திடுச்சு” மூப்பு தட்டி இருந்தாலும் அந்தக் குரல் எனக்கு பரிச்சயப்பட்டதாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். இருவரின் முகத்திலும் மின்னல் வெட்டியது.

“நீ நீங்க தண்டபாணி தானே” நான் விரல்நீட்டி ஆச்சர்யம் காட்ட, அவர் முகத்திலும் அதே வெளிச்சவேட்டு!

“நீ… நீ… சுப்புரமணி தானே? டேய் சுப்பு எப்படியா இருக்கே” என்னைவிட அவன் இணக்கமாய் இருந்தான் தண்டு. என்னை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் என் மூப்பெல்லாம் கரைந்தது போல் இருந்தது!உருவங்கள் மாறி இருந்தன. ஐம்பதுகளின் நடுவில் இருக்கிறோம். என்னைவிட தண்டு ரொம்பவே கிழவனாகத் தெரிந்தான். தொப்பை சட்டை பட்டனை தெறிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டு இருந்தது.நிறம்மாறி, கண்ணைச் சுற்றி கருப்புத்திட்டு பதிந்துபோய் இருந்தது. அவன் சுருள்சுருளான முடியெல்லாம் போய், பாதித் தலை தரிசாகியிருக்க, மீதி இருந்தது, வெள்ளையும் கருப்புமான சில பல முடிகள் மட்டுமே. காலம் எத்தனை பெரிய கொடிய அரக்கன் என்று அந்தக் கணம் புரிந்தது.நம்முடைய பெருமிதங்களையும், இளமையையும் நம் கண்முன்னே கரைப்பது மட்டுமே வாழ்க்கையின் ஆதிக்க செய்தி. நான் பெருமூச்சு விட சரியாய் அதை யூகித்தவன் பெருசாய் சிரித்தான்.

“என்னடா செய்றது? அதுதான் வாழ்க்கை! முகத்துக்கு நாம போடாத க்ரீம் இருக்கா? லோகு செட்டியார் கடையில புதுசா வர்ற அத்தனை பொருளையும் நாமதான் வாங்குவோம். நம்மளை நம்பியே எவ்வளவு விலையா இருந்தாலும்,வாங்கிவைப்பாரு! தலைக்கு எத்தனை ஜெல்லு, எத்தனை லோசன் அதெல்லாம் இப்போ நினைச்சா வருத்தமான சுகம்யா!”என் தொடைதட்டிச் சிரிக்க, நானும் சிரித்தேன். இளமை இருந்தபோது உலகம் காலுக்கு அடியில் கிடந்தது. இளமை விடைபெற்ற பிறகு, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நாம் இருக்கிறோம் என்ற நிஜம் புரிந்தது.தண்டபாணிக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன் என்றான். மூத்த பெண்ணைக் கட்டிக் கொடுத்து பேத்தி பிறந்திருப்பதாகச் சொன்னான். என் குடும்பத்தைப் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டான்.பஸ் சாலைகளில் ஊரத் தொடங்கி இருந்தது. டிரைவர் பழைய பாட்டை ஓடவிட ஆரம்பித்தார். இருவரும் சுவராஸ்யமாய் பழைய நாட்களுக்குள் நுழைந்து கொண்டோம்.இரவுநேரம் மழைச்சாலை ஜன்னலில் பொட்டு வைத்த மழைத்துளிகள், மிதமான ஓட்டத்தில் பேருந்து பயணம்… பழைய பாடல்கள்… பக்கத்தில் பால்ய நண்பன்! இதற்குமேல் இந்தபயணத்தை சுகமாக்க என்ன இருக்கிறது! மனசு ஏனோ வாழ்க்கை கவலைகளை மறந்து, இந்த நிமிசத்தை ரசிக்கத்தொடங்கி இருந்தது.நான்கைந்து பாடல்கள் ஓடி இருக்கும்… அந்தப்பாடல் வந்தது.

“பாலும் பழமும் கைகளில் ஏந்திபவளவாயில் புன்னகை சிந்திகோலமயில் போல்நீ வருவாயேகொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே’சட்டென்று இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்துக் கொண்டோம். இருவர் கண்களிலும் பளபளப்பு… முறுவலிப்பு… இதழோரத்தில். ஒவ்வொரு வரியும் ஆணி அடித்ததுபோல் மனசிற்குள் விழுந்து பிசைந்து ஏதோசெய்ய, இருவருக்கும் நடுவில் இருந்த பொதுவான கைப்பிடியில் படிந்திருந்த தண்டின் இடக்கையை பற்றி மென்மையாக அழுத்தினேன். அவனும் புரிந்ததுபோல் தலையாட்டினான்!

“நினைப்பிருக்கா எல்லாம்?” என்றான் சிரித்தபடி. மறக்க முடியுமா என்ன? என் பதில் சிரிப்பே வார்த்தைகள் இல்லாமல் அவனுக்கு பதிலைத் தந்திருக்கவேண்டும்! சீட்டின் முதுகில் என்னைச் சரியாக பொருத்திக் கொண்டேன். அடுத்துவந்த எந்தப் பாட்டுமே என் கவனத்தில் பதியவில்லை. பாலும் பழத்திற்குள்ளேயே நான் நழுவிப் போய் இருந்தேன்எண்பதுகளின் மத்திய காலம். பெல்பாட்டம் விடைபெற்றுக் கொண்டு இருந்த அடுத்தகட்ட நாகரிக வளர்ச்சிக் காலம்! பாக்யராஜ்களும், டி.ராஜேந்தர்களும் புதுயுக்தியை சினிமாவுக்கு வகுத்துக் கொடுத்து கவனம் ஈர்த்துக்கொண்டு இருந்தநாட்கள் அது!மதுரை தல்லாகுளத்தில் எங்கள் வீடு. அங்கிருந்த கலைக்கல்லூரியில் என்னுடைய வணிகவியல் படிப்பு. அப்போதுதான் தண்டபாணி அறிமுகம் கிடைத்தது. தாமரைப்பட்டியில் இருந்து கல்லூரிக்கு வந்துபோனான். மிதமான பணக்காரன்.நட்பு விரிந்து, வேகமாய்ப் பரவியது. நான்கைந்து பேர் ஓன்றாய்ச் சேர்ந்து சுத்துவதும், மாலை நேரத்தில் குட்டிச்சுவரில் அமர்ந்து தம்மடிப்பதும் என்று அந்நாளின் கல்லூரி இளைஞர்களுக்கான முஸ்தீபுகள் துளி கூட குறையாமல் இருந்தது எங்கள் கல்லூரி நாட்களும்!ரணகாளியம்மன் திருவிழாவிற்காக தாமரைப்பட்டியில் இருந்த தண்டபாணியின் வீட்டுக்குப்போய் இருந்தோம். அப்போதுதான் அவரை அங்கே பார்த்தேன். மூர்த்தி சின்னய்யன்!

“யாருடா இது? இம்புட்டு நாள்ல இங்கன கண்டதில்லையே?”

“எங்கப்பாரோட சின்னம்மா மகன். சொந்த தம்பியாட்டம் தான்டா! பெங்களூர்ல டூரிஸ்டுல வேலை பாக்குறாரு. நாற்பது வயசாகுது. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல… ஏன்னு தெரியல” குரலை அமுக்கி மெதுவாய்ச் சொன்னான்.நல்லா சிகப்பாய், அழகாய்த்தான் இருந்தார். பிறகேன் கல்யாணம் பண்ணிக்கல… என்ற கவலை என் மனசுக்குள் அனிச்சையாய் பூத்தது. என் வயசு அப்போதெல்லாம் மனிதன் பிறந்ததே கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் என்று நம்பியது!ஊர் திருவிழாவிற்கு பதினைந்து நாள் அங்கே இருப்பாராம்.கண்ணுக்குள் ஏதோவொரு சோகம் மிதக்கும் அவருக்கு.

“வாங்க மதுரை பாய்ஸ்” என்றுதான் அழைப்பார். அந்த அழைப்பில் இருக்கும் கிறக்கம், பின்னாளில் வேறெந்த அழைப்பிற்கும் வரவேயில்லை. மாடியில் இருந்த சீமையோட்டு அறையில்தான் தங்கி இருந்தார்.மாலையில் கல்லூரி முடிந்ததும் நேரே தாமரைப்பட்டிக்குப் போய்விடுவோம். அந்த அறையில் அவர் எப்போதும் பாட்டுக் கேட்கும் ப்ளேயர், கவனத்தைக் கவர்ந்தது.அது ஒலிநாடாக்கள் சக்கைபோடு போட்டுக் கொண்டு இருந்த காலம். அப்போதும் கூட அவரிடத்தில் மட்டும் ப்ளேயர் இருந்தது. ஒருகுடம் தண்ணீர் பிடிக்கும் என்பதுபோல் அதன் ஒலிதாங்கி துருத்திக்கொண்டு மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். எங்களுக்கெல்லாம் அது அத்தனை ஆச்சர்யம். அதில் எப்போதும் அவர் பழைய பாடல்களை மிதக்கவிட்டுக் கொண்டே இருப்பார்.அதிலும் பெரும்பாலும் நான் கேட்டபாடல் “பாலும் பழமும்’ படத்தில் வரும், “பாலும் பழமும் கைகளில் ஏந்தி’ அந்தப் பாடலை மட்டும்தான்! நல்ல பாட்டுத் தான்… உயிரை உருக்கும் காதல்வரிகள் தான்! ஆனால் ஒரே பாடலை எத்தனை தரம் கேட்பது ஒருநாளைக்கு? சலித்துப் போகாதா?கூட இருந்து கேட்ட எங்களுக்கு சலித்துப் போனது! இரண்டுமணி நேரம் அவர் உடன் இருந்தால், அந்தப்பாடல் மட்டும் ஏழெட்டுத்தரம் ஒலித்துவிடும்! அதுபாட்டுக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர் தன்பாட்டுக்கு எங்களுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஒரு காது கண்டிப்பாய் அங்கே இருக்கும்.பாலும் பழமும் எங்களுக்கு புளித்துப் போனது. தண்டபாணியிடம்,

“உன் வீட்டுக்கே இனி வரமாட்டோம்டா” என்று அலுத்துக்கொண்டு இருக்கிறோம்.

“இன்னும் ஒரு வாரம் தான்டா! சின்னய்யன் ஊருக்கு கிளம்பிடும். அங்கே ப்ளேயர் இல்ல! அதனால போறதுக்குள்ள எத்தனைதரம் முடியுமோ, அத்தனைதரம் கேட்டுக்கணும்னு கேட்டுக்கிறார் போல. நீங்க எப்பவும் போல வாங்கடா” என்றான் கெஞ்சலாக.

“ஏன் அங்கே இந்தபாட்டு இருக்காதா, என்னடா இது? ஆயிரத்தெட்டு கேசட் வந்திருச்சு. என்னவோ அதிசயமா இருக்கு, அவர் சொல்றது”‘ சிரித்தேன். ஆனால் பின்னாளில் தான் உணர்ந்தேன் அதிசயம் என்று ஒரு விசயமே இல்லை! இயல்பான எல்லாமுமே இன்னொருத்தருக்கு அதிசயமானது என்று எனக்குப் புரிந்தது.

“அவருக்கு இந்தப்பாட்டை மட்டும் ப்ளேயர்ல கேட்டாத்தான் பிடிக்குமாம்”

“அட, அதான் ஏன்?”

“யாருக்குத் தெரியும்? தெரிஞ்சுக்கவும் விரும்பல. அவர் உள்ளுக்குள்ள ஏதோ வெசனம் இருக்கும்டா. அதுக்கு நம்மாள ஆறுதல் தரமுடியாதுங்கற போது ஆராயவும் கூடாது” தண்டபாணி சொன்னபோது பிடித்திருந்தது.

“அதென்ன?’ என்ற அலட்சியம் மனசுக்குள் மத்தளம் அடித்தது. அன்று வழக்கம் போல் தண்டபாணி வீட்டுக்குப் போயிருந்தபோது, நண்பர்கள் யாரும் வரவில்லை நான் மட்டும்தான்!மாடிக்குப் போனேன். சித்தப்பா கட்டிலில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். ஒலி குறைந்து மிருதுவாக டி.எம்.எஸ்.ஸின் குரல் அந்த சின்னஅறை முழுக்க பாடல் மிதந்து கொண்டிருந்தது!ஓவ்வொரு வரியையும் லயித்து லயித்து குரலில் செதுக்கிக்கொண்டு இருந்தார் டி.எம்.எஸ்.

“பிஞ்சு முகத்தில் ஒளி இழந்தாயே… பேசிப் பழகும் மொழி மறந்தாயேஅஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே’ என்ற இடத்தில் ப்ளேயர் திக்கியது. நடை… நடை… நடை மெலிந்தாயே! மூன்றுமுறை நடை மெலிந்தது. சித்தப்பாவின் கண்களில் கரகரவென கண்ணீர்.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுநாள்வரைக்கும் அவர் அழுது பார்த்ததில்லை. ஒருவேளை மற்றவர்கள் இருப்பதால் அவர் அழாமல் தன்னைக் கட்டிவைத்தும் இருக்கலாம். பாடல் தொடர்ந்தது.

“உயிரைக் கொடுத்தும் உனைநான் காப்பேன் காப்பேன்..காப்பேன்’ என்று மீண்டும் மூன்றுமுறை அழுத்திவிட்டு ப்ளேயர் அடுத்தவரிக்கு போக, சித்தப்பாவின் கண்ணீர் சுரப்பு இன்னும் கூடுதல் வேகமெடுத்தது.அதற்குப் பின்னிருந்த காரணம் தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அந்நாளில் இல்லை! ஆனால் ஏனோ அந்த ப்ளேயர் திக்குவது அவருக்கு உணர்வுரீதியாக இடைஞ்சலாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.உள்ளே சென்ற நான் எல்.பியை எடுத்து, ஊசியை சரியாகப் பொருத்தும் பொருட்டு எடுக்க, அது சரியாக கை தவறி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது.திடுக்கிட்டு கண் திறந்த சித்தப்பா பெரும் அதிர்ச்சி வாங்கி என்னையும் உடைந்து கீழே கிடைந்த இசைத்தட்டையும் மாறிமாறிப் பார்த்தார்!

“சாரி” நான் வாக்கியத்தை முடிப்பதிற்குள் அவருடைய உள்ளங்கை என் கன்னத்தில் இறங்கி இருந்தது! நான் மலைத்துப்போய் நிற்க, அவர் அதெல்லாம் யோசிக்க விரும்பாமல் அந்த இசைத்தட்டை கைகளில் எடுத்து வெறுமையாய் பார்த்துக்கொண்டு நின்றார்.உடைந்து பகுதிகளை சேர்த்து வைத்து முழுமையாக்க அவர் செய்த முயற்சியைப் பார்த்தபோது அந்த இசைத்தட்டிற்கு பின்னே எண்ணற்ற நினைவுகளை அவர் சுமந்து கொண்டு இருக்கிறார் என்று புரிந்தது.எனக்கு நிஜமாகவே வருத்தமாக இருந்தது! அடித்தது வலிக்கவில்லை… உடைத்தது வலித்தது. அதை ஒன்றாக்க அவர் போராடியது வலித்தது.இரவெல்லாம் தூக்கமே இல்லை. நிலாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். விடிந்ததும் பக்கத்துவீட்டு பஷீர் அண்ணனிடம் டூ வீலரைக் கடன் வாங்கிக் கொண்டு டவுன்ஹால் ரோடு போய் சுற்றி அடித்தேன்.பலர் சிரித்தார்கள்.

“இந்த காலத்துல ப்ளேயர் வந்து கேட்குறே?” கேலி செய்தார்கள். பதினேழு கடை சுற்றி கடைசியாய் வாங்கியும் விட்டேன்.மனசு பெரிய குற்றவுணர்வில் இருந்து மீண்டதுபோல் இருந்தது. வேகமாய் வீட்டுக்கு வந்து குட்டிகுராவை முகத்தில் அப்பிக் கொண்டு தாமரைப்பட்டிக்கு எல்.பி.யோடு பயணமானேன்.

“என்னடா இன்னைக்கு காலேஜ் வரல” தண்டபாணி அருகில் வர அவனையும் அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்தேன். அறை நிசப்தமாக இருந்தது. பாலும் பழமும் சிந்திப்போனதால் வந்த அமைதி அது.என்னைப்பார்த்தார். நேற்றைய கோபமில்லை. பக்கத்தில் போய் புது எல்.பியைத் தந்தேன்!

“சித்தப்பா, உங்களுக்காக டவுன்ஹாலை அலசி, இதை வாங்கிட்டு வந்திருக்கேன்! போட்டுப் பாருங்க!” நான் தந்தபோதும் அவர் அமைதியாகவே நின்றார். நானே ப்ளேயரை இயக்கி, இசைத்தட்டைச் சொருகி ஊசியைச் சரியாக பொருத்தினேன்!மீண்டும் டி, எம்.எஸ் பாலும் பழத்தையும் கைகளில் ஏந்தினார். சித்தப்பா கண்களை மூடிக்கொண்டு நின்றார்! மூடிய இமைகளுக்குள் கருமணிகள் தத்தளித்தன. முகத்தில் சூடான ஏதேதோ உணர்ச்சி!

“பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே, பேசிப்பழகும் மொழி மறந்தாயே அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே அன்னக்கொடியே அமைதி கொள்வாயே” சள்ளென்று பாடல் வழுக்கிக்கொண்டு போனது திக்கவில்லை. சித்தப்பாவின் மூடிய கண்களுக்குள் ஏமாற்றம் தெரிந்தது!\”ஈன்ற தாயை நான் கண்டதில்லை… எனது தெய்வம் வேறெங்கும் இல்லை உயிரைக்கொடுத்தும் உனைநான் காப்பேன் உதயநிலவே கண் மலர்வாயே’இப்போதும் பாடல் வழுக்காமல் கடக்க, காதுகளை பொத்திக்கொண்டு சித்தப்பா கத்தினார்.

“இதில்ல அந்தப் பாட்டு. சுப்பு நீ எடுத்துட்டுப் போ!” அவர் சத்தம் எனக்கு விசித்திரமாய் இருந்தது.

“என்ன சித்தப்பா இது! ஒரே பாட்டு ரெகார்டர்க்கு ரெகார்டர் எப்படி வேறயாக இருக்கும்?”

“ஓரே விசயம் மனிதனுக்கு மனிதன் வேறயா இருக்கே? இந்தியா வெஸ்ட் இண்டிûஸ ஜெயிச்சு உலகப்கோப்பையை போன வருசம் வாங்குச்சு. அந்த ஒரேசெய்தி நமக்கு சந்தோசத்தையும், அந்நாட்டு மக்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கும் தானே அதுமாதிரித்தான் இதுவும்”

“அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயேன்னு சொல்லும்போது மூணுமுறை என் எல்.பி திக்கும்! அதே மாதிரி உயிரைக்கொடுத்து உனை நான் காப்பேன்னு சொல்லும் போதும் மூணுமுறை திக்கும்! நானே நின்னு நிதானமா அதை சொல்றமாதிரி உணர்வுபூர்வமா இருக்கும்! இதுல அப்படி இல்ல… இது என் பாட்டு இல்ல.. எடுத்துட்டு போ இதை” வெறி கொண்டவர் போல், இசைத்தட்டை பிய்த்து எடுத்து விசிறியடிக்க, அது சுக்கல் சுக்கலாய் நொடிந்துபோனது!அந்த நிமிசம் அவர் கண்களில் தெரிந்த வலி, வார்த்தைகளில் அடங்காது.ஏதோ பெரிய உணர்வுப்பூர்வமான தவறைச் செய்துவிட்டதுபோல் நெஞ்சு உறுத்திக்கொண்டே இருந்தது. அடுத்து வந்த நாட்கள் அவர் வீட்டுக்கு போகவேயில்லை. பிறகொரு நாள் அவர் ஊருக்கு கிளம்பிப் போய்விட்டதாக தண்டபாணி மூலம் அறிந்து கொண்டேன்.இறங்கும் இடம் வந்தது. எண்களைப் பரிமாறிக் கொண்டோம்.விடைபெற்று பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தபோது, தண்டபாணி சொன்னது நினைவுக்கு வந்தது.சித்தப்பாவுக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர்பேர் சரோஜா என்றும், அவர் திக்கிப் பேசும் குறையுள்ள பெண் என்பதும், எதிர்பாராத விபத்தில் அவர் இறந்து போனதால் கடைசிவரை சித்தப்பா திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு வருஷத்துக்கு முன்பு இறந்து போனதாகவும் அவன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

– Dec 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *