பாலிவுட் டான்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 3,000 
 
 

தான் தினமும் ஆபீஸ், வேலை என்று உயிரை விட, கிடைத்த நேரத்திலெல்லாம் மனைவி ஹாயாக சோபாவில் படுத்தபடி புத்தகங்கள் படிக்கிறாளே என்ற எரிச்சல் பிறந்தது சிவாவிற்கு.

“எதுக்கு எப்ப பாத்தாலும் துப்பறியும் நாவலே படிச்சுக்கிட்டிருக்கே?” முகத்தைச் சுளிக்காது கேட்டாலும், குரலும் தொனியும் அவளை மட்டம் தட்டுவது போலிருந்தது.

தனக்குப் பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு தடை?

முகம் மாறாது, “நாலு பக்கத்துக்கு ஒரு கொலை! யார் குத்தவாளின்னு யோசிக்கிறப்போ சுவாரசியமா இருக்கு. அதோட, நாம்ப அப்படியெல்லாம் கஷ்டப்படலியேன்னு ஒரு நிம்மதி!” என்று அடுக்கினாள் அலமேலு.

அவளுடைய விளக்கம் அவனிடம் எடுபடவில்லை. “உருப்படியா எதையாவது படி. படிக்க விஷயமா இல்லே?” என்றபடி நகர்ந்தான்.

அன்று வேலை முடிந்து வீடுதிரும்பும்போது, சிவாவின் கையில் ஒரு பை. “இந்தா, அலமு! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். ஒனக்குத்தான் படிக்கப் பிடிக்குமே!” என்று குத்தலாகக் கூறியபடி, ஒரு பையை மனைவியிடம் நீட்டியவன், “அதுக்காக வீட்டையும் குழந்தையையும் கவனிக்காம இருந்துடாதே!” என்று கேலிவேறு செய்தான்.

பையைப் பிடுங்காத குறையாக வாங்கினாள் அலமேலு. உள்ளே பார்த்தவள் முகம் சுருங்கியது. அறுபது வயதுக்குமேல் ஆன கிழடுகள், `போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே!’ என்ற நப்பாசையுடன் படிக்கும் புத்தகங்கள்!

அவளுடைய தாத்தாதான் இதையெல்லாம் படிப்பார்.

அவளோ, `பெரியவங்க கதையெல்லாம் நீ படிக்கக்கூடாது!’ என்று அம்மா ஓயாது கண்டித்ததால், ‘அப்படி அதில் என்னதான் இருக்கிறது?’ என்ற ஆர்வத்துடன் எட்டு வயதிலிருந்தே காதல் நவீனங்களையும், பத்திரிகைகளையும் படித்தவள். படித்தது எல்லாம் புரியாவிட்டாலும், ஏதோ ரகசியக்குற்றத்தில் ஈடுபட்டதுபோன்ற த்ரில் ஏற்பட்டது.

ஒரு வழியாகப் பதின்ம வயதை அடைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. ‘அம்மா பார்த்துவிடுவார்களோ!’ என்று பயந்து, பயந்து இனி படிக்கவேண்டாம்.

ஒரு தலைமுறைக்குமுன், ‘நான் டான்ஸ் கத்துக்கட்டுமாம்மா?’ என்று தாயிடம் கேட்டதும், அவளுடைய பதிலும் மறக்குமா!

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எப்படி ஆடினாலும், எல்லா ஆம்பளையும் ஒன்னோட ஒடம்பைத்தான் உத்து உத்துப் பாப்பான்!’

அன்று அம்மா. இன்று கட்டியவரா!

அப்போதுதான் இனிமேல் பிறர் சொல்வது எதையும் கேட்டு நடக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

***

“ரேகாவை டான்ஸ் கிளாசில சேர்க்கப்போறேன்”. உத்தரவு கேட்டாற்போல் இல்லை. தகவல் தெரிவிக்க நினைத்தாள். அவ்வளவுதான்.

“ம்!” தூக்கக்கலக்கத்தில் பதில் வந்தது.

மறுநாள், “கிளாசில கொண்டுவிடுன்னு என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே!” என்று அவன் கறாராகச் சொன்னபோது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“சேச்சே!” தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு அளிக்கப்போகும் பெருமையுடன் மறுத்தாள்.

எந்த நாட்டிய வகுப்பில் சேர்ப்பது என்று ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் கணவன் வாங்கிவந்த ஆன்மிகப் புத்தகத்தில் ஒன்றைப் புரட்டியபோது அகன்றது.

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடந்தது என்று ஆரம்பித்தது கதை.

‘ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டியப்போட்டியா! பலே!’ சுவாரசியம் மேலிட, மேலே படித்தாள்.

முடிவு அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘ஊர்த்துவத் தாண்டவம்’ என்று, சிவன் காலைத் தலைக்குமேல் தூக்க, சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டாளாம்.

சிவகாமி நாணினாள், களிப்புடன் சிரித்தாள், அதிர்ந்தாள் என்றெல்லாம் விதவிதமாக விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், கடவுள் செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டுவிட்டார்கள்.

ஒரு பெண் தன் காலைக் கண்டபடி தூக்கக்கூடாது – இது ஆண்கள் விதித்த விதி.

‘எங்களுக்கு மட்டும் என்ன, காலிலே பலம் கிடையாதா? எத்தனை பாலிவுட் சினிமாவிலேயும், தொலைகாட்சியிலேயும் பார்க்கிறோம்!’ அலமேலுவுக்கு ஆத்திரம் பொங்கியது. ‘இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே பெண்களை அடக்கி வைக்கிறது நம் சமுதாயம்!’

பரதநாட்டியம் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பெண்கள் இடுப்பை ஆட்டக்கூடாது, காலைத் தலைக்குமேல் தூக்கக்கூடாது என்று காலத்துக்கு ஒவ்வாத எதையெதையோ கடைப்பிடிக்கச் சொல்வார்கள்.

***

அந்த நடன நிகழ்ச்சிக்கு இரு மாதங்கள் இருந்தன.

வகுப்பில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள் மகள் மேடையில் ஆடப்போகிறாள்! அலமேலுவுக்குத் தலைகால் புரியவில்லை.

“இதிலே பைஜாமா காஸ்ட்யூம் தைக்கணும். உடம்போட ஒட்டினாப்போல இருக்கணும்”. என்று தான் கையோடு கொண்டுவந்திருந்த புடவையைக் காட்டினாள். “மயில்கழுத்து கலர்! கிழிச்சுத் தைச்சா அழகா இருக்கும்”.

“கொஞ்சம் பழசு போல இருக்கே!” என்று தயங்கினார் தையற்காரர்.

“நான் சொல்றபடி செய்யுங்க. புடவையை அப்படியே, மடிப்பு கலையாம, புதுசாவே வெச்சிருக்கேன்,” லேசான அதட்டலும் பெருமிதமாகவும் வந்தது குரல்.

அவளுடைய கல்யாணத்திற்கு அம்மா அதை வாங்கி வந்தபோது, `என்னைக் கேட்காமலேயே, எனக்குப் பிடிக்காத பச்சை கலரிலே ஒரு புடவை வாங்கிட்டு வரணுமா!’ என்று ஏற்பட்ட கொந்தளிப்பில், ஒருமுறைக்குப்பின் அதை உடுத்தவேயில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அந்தப் புடவைக்கு விமோசனம்.

ஒரு சிறு தயக்கமும் ஏற்பட்டது. “அதெல்லாம் தெச்சுடலாம்மா. ஆனா லூசா தைக்கலாமே! சின்னப்பிள்ளை! ஒரே வருஷத்திலே போட்டுக்க முடியாம போயிடும்”.

“தொளதொன்னு வேண்டாம். காலைப் பிடிக்கப் பிடிக்க இருக்கட்டும்”.

இவளுடன் பேசிப் பயனில்லை என்று மேலே எதுவும் பேசாது அதை வாங்கிக்கொண்டார். வரும் வியாபாரத்தை விடுவதாவது!

அருமை மகளுடைய உணவில் சில மாற்றங்களைச் செய்தாள் அலமேலு. ஆடத் தெம்பு வேண்டாமா! தினமும் உருளைக்கிழங்கு, வெண்ணைபோன்ற `சத்துணவு’ வகையறா.

எதிர்பார்த்திருந்த அந்த முக்கியமான தினம் ஒருவழியாக வந்தது.

“எவ்வளவு அழகா இருக்கு, பாரு!” மயில் கழுத்து வண்ண பைஜாமாவைத் தடவிக்கொடுத்தாள் தாய். “போட்டுக்கோ, வா!”

“ரொம்ப டைட்டா இருக்கும்மா!” என்று சிணுங்கினாள் பதின்மூன்று வயது மகள் ரேகா. அம்மாவின் போஷாக்கில் அந்தச் சில மாதங்களிலேயே உடலளவு மாறிப்போயிருந்தது.

“இதுதான் இப்போ ஸ்டைல்! திருஷ்டி படறமாதிரி அழகா இருக்கேடி. ஹிந்தி சினிமா டைரக்டர் எவனாவது ஒன்னைப் பாத்தா, அப்படியே கொத்திட்டுப் போயிடுவான்!”

சினிமா நடிகைமாதிரி இருக்கிறோமாமே? கர்வத்துடன் மேடை ஏறி, வளைந்து, நெளிந்து ஆடினாள் சிறுமி.

அம்மா சொல்லியிருந்த சிவன்-பார்வதி கதை அப்பெண்ணின் நினைவிலேயே நிலைத்திருந்தது. ‘நான் அந்தக்காலத்துப் பெண்ணில்லை,’ என்று சற்றே கோபத்துடன் காலைத் தலைமேல் தூக்க, `டர்’ என்ற ஓசையுடன் தொடையருகே ஆடை கிழிந்தது. காற்றே படாது, உள்ளேயே அமுக்கி வைத்திருந்ததால் புடவை நைந்து போயிருந்ததால் வந்த வினை! உள்ளாடை எட்டிப்பார்த்தது.

கண்களில் நீர் வழிய, பாதி நடனத்திலேயே அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, உள்ளே ஓடினாள் நடனமணி.

முதல் வரிசையில் அமர்ந்து, ‘என் பொண்ணு!’ என்று பக்கத்திலிருந்தவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்த அலமேலு அதிர்ச்சியில் திறந்த வாயை இரு கரங்களாலும் பொத்தினாள். உடல் பின்னோக்கிச் சரிந்தது.

ஈராண்டுகளாக வெளியில் எங்கும் போகமுடியாது வீட்டிலேயே அடைந்து கிடந்து அலுத்த மக்கள், ‘நாட்டியத்தை ரசிக்க முடிகிறதோ, இல்லையோ, நாலுபேரைப் பார்த்துப் பேசலாமே!’ என்று திரளாக வந்திருந்தார்கள்.

‘பாவம்!’ என்ற சில குரல்கள் அவளுக்கும் கேட்டன.

நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@ashleydamico78 எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *