பாதி மலர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,997 
 

சரசு யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தைப் போலவே வெளியே வெறுமை முத்திரையிட்டிருந்தது….. வெளியே –

சித்திரை மாதத்துக் கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலின் தகிப்பிலே ‘தார் றோட்’டெல்லாம், உருகி அவற்றின் மேற் கானல் நெளிந்தாடிக்கொண்டிருந்தது… அந்தத் தார் றோட்டில் அந்த உச்சிப் பொழுதில் ஒருகாக்கைக்குருவியைக் காண வேண்டுமே?…

இடையிடையே அந்தப் பாதையிற் பயங்கரமாக ஓசையிட்டுக்கொண்டுவரும் லாரிகளையும், கடகடவெனத் தனது வருகையைப் பறைசாற்றி வரும் ‘இ.போ.ச.’ பஸ் வண்டிகளையும் தவிர எந்தவிதப் போக்கு வரத்தும், நட மாட்டமும் இல்லா திருந்தபோதும் …

வேர்வை ஒழுகும் மேனியுடன் மார்புக்குமேல் தூக் கிக் கட்டிய புடவையுடன் தலையில்- விற்பனையாகிப் பின் வெறும் சுமையாகக் காணப்படும் – கறிக்கூடையுடன் ஒரு கையால் தலைக்கூடையைப் பிடித்தவண்ணம், கூடையை நோட்டம் பார்க்கும் காக்கைகளை விரட்ட மறுகையில் ஒரு சிறு குச்சியுடன் ‘லொங்கு, லொங்கு’ என்று ஓட்டமும் நடையுமாக நடக்கும் கறிக்காரிகளும், அப்பாதையில் இடையிடையே போகாமலில்லை. தார் றோட்டிற்கு அப்பால் –

ஒரே பனை வடலியாகக் காட்சியளித்துக் கொண்டு இருந்தது, அப்பிரதேசம். கரும்பலகையிற் ‘பளிச்’சென வெண்கட்டியாற் கோடுகிழித்தாற்போல அவ்வடலிக் கூடாக ஒரு ஒற்றையடிப்பாதை சென்று கொண்டிருந்தது. அப்பாதையில் மக்கள் அடிக்கடி போக்குவரத்துச் செய்வதை நினைவூட்டியது. அவ்வடலிப் பிரதேசம் அவ்வேளையிலே எந்தவிதச் சலனத்தையும் காட்டாது வெறிச் சோடிக்கிடந்தது. அந்த வடலிக் கூட்டங்களிடையே தனித்தனியே நெடிதுயர்ந்து நின்ற ஓரிரு பனை மரங்களும் அந்தப்பொழுதிலே அப்பிரதேசத்திற்கு ஒரு வித அமானுஷ்ய பயத்தை ஊட்டியவண்ணமிருந்தன … காற்றிலே காவோலைகள் மரங்களுடன் உராயும் ‘கர் கர்’ என்ற சப்தமும் அந்தப் பிரதேசத்தின் வெறுமையைக் கலைத்துக் கொண்டிருந்தது….

சரசுவின் வீட்டு முற்றத்திலே காயப் போட்டிருந்த நெல், அந்த வாரத்திய அரசாங்கத்தின் படியளப்பை நினைவூட்டியது. அந்த நெல்லுக்குக்காவலாக ஒரு ‘பழமிளகாய்” ஒரு ஈர்க்கிற் செருகி நெல் காயப் போட்டிருந்த பாயிற் குத்தப்பட்டிருந்தது. என்ன இருந்தாலும் அர சாங்கம் கருணை மிகுந்ததுதான்! இல்லாவிட்டாற் சுப்பனுக்கு நெல்லாகக்கோடையில் வழங்கியிருக்குமா?… மாரி காலத்திற் சில வாரங்களுக்கு நெல்லைக் கூப்பனுக்கு வழங்கும்போது அப்பகுதி மக்கள் படும் அவதி? அப்பப்பா!-.

திடீரென்று சுழல் காற்று விசிறியடித்தது! ….. அந்தக் காற்றின் வேகத்தில் நெற்பாய் சுருண்டது. நெல்மணிகள் நிலத்திற் சிதறின. இவையொன்றும் அவள் கவனத்தைக் கவரவே இல்லை….

“சாசு!”

“……”

“எணை பிள்ளை சரசு! நெற்பாயைக் காத்தெல்லே கவிட்டுப் போட்டுது! அதைப்போய்ப் பார்!” –அம்மா தான் சொன்னாள்.

சரசு அசையவில்லை. அவள் உணர்வு விழிக்கவில்லை. ஜடமாக நின்றுகொண்டிருந்தாள்.

காற்று நின்றதும், குப்பை மேட்டிற் கிளறிக்கொண்டிருந்த கோழிகள் சிதறிய நெல் மணிகளைப்பொறுக்க ஓடி வந்தன. அதைப் பார்த்துவிட்டு, அடுப்படியிற் கையலுவலாக இருந்த அம்மா கூச்சலிட்டாள். “நீ வீட்டுக்குள்ளே இருந்து என்ன தான் செய்யிறாய்? நெல்லைப் பாராமல்?”

எந்தவித பதிலுமில்லாமற் போகவே அங்கிருந்து கொண்டே , “சூ! சூ!” எனக்கோழிகளை விரட்டினாள். “நாசமாப்போன கோழிகள்!…” என அவள் வாய் முணுமுணுக்கிறது!

சரசு கல்லாய், மரமாய், ஜடமாய் நின்றுகொண்டிருந் தாள்.

உணர்வு விழிக்கிறது; திரும்புகிறாள். எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவள் உருவம் பிரதிபலிக்கிறது ….. ‘யார் இந்தப் பெண்?’ உதட்டளவில் வந்த கேள்வி தடு மாறுகிறது! ‘நானா?… நானா இந்த உருவம்?’- முகம் இரு ளடைகின்றது.

அவள் அங்கங்களிலே மிளிர்ந்த பருவப் பூரிப்பு எங்கே….? மாம்பழக்கன்னங்களின் பளபளப்பு எங்கே?… மாந்தளிர் மேனியின் ஜொலிப்பு எங்கே ……. எங்கே ………. எங்கே ?….

‘ஐயோ அம்மா!’ – என்று வாய்விட்டலறவேண்டும் போலிருந்தது….

இயற்கை அவளை அப்படி வஞ்சித்திருக்கவேண்டாம். அந்தச் சின்னம்மை’ நோய் வந்து அவள் கோலத்தையே மாற்றிவிட்டது முகத்திலே திட்டுத் திட்டாகக் கறுப்புப் புள்ளிகள் திட்டுத் திட்டாகப் புழுமேய்ச்சற்பட்ட முக மாக மேடு பள்ளங்கள் …..

அவளைப் பார்க்க வருபவர்களுக்கு அது குறையாகத் தெரிகிறது; ஆனால்- அவள் உள்ளத்திலே நிகழும் போராட்டங்களும், மன உளைச்சல்களும் யாருக்குத் தெரிகிறது?

‘இதென்ன ஓரிரு வெள்ளிக் கம்பிகள் தலையிலே ….? எனக்கும் நரைக்க ஆரப்பித்துவிட்டதா, என்ன? எனக்கென்ன அவ்வளவு வயதாகிறது?’ ‘அடி பேதைப் பெண்ணே உனக்கு இந்தச் சித்திரையோடு இருபத் தெட்டு வயதாகிறது, உனக்குப் புரியவில்லையா?’

‘இருபத்தெட்டாகிறதா ….? உம்…! …’ பெருமூச் சொன்று அவள் நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளியேறுகிறது,…. இந்த நீண்ட காலமாக, நெடுந்தூரம் தனிவழி நடந்துகொண்டிருக்கிறேனா?… என் வாழ்வு இப்படியே போய்க்கொண்டிருந்தால்….?’ உடல் சிலிர்க்கிறது…

எதிரிலிருந்த சுவரைப் பார்க்கிறாள். அதிலே –

ஓடையிலே கண்ணன் ராதா ‘ஜலக்கிரீடை’ செய்து கொண்டிருக்கும் படம் மாட்டப்பட்டிருக்கிறது. அப்படத்திலே தெய்வத் தன்மையை மீறி, ஆபாசம் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அதை வரைந்த ஓவியன் முதலில் மக்களின் கண்களைக் கவர்ந்து தான் தெய்வத்தை அறிமுகப்படுத்துகிறான்! அப்படத்திற்குச் சூடியிருந்த பூக்கள் அதற்குத் தெய்வத் தன்மையை அளிக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் படத்தைச் சரசு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றாள் ….

அவள் உடலிலே ஒரு கதகதப்பு! உள்ளத்திலே உணர்ச்சிச் சுழிப்புகள்! கண்மலர்கள் படபடக்கின்றன! இதழ்கள் துடிக்கின்றன! மலர் விழிகளில் ஒருவித மயக்கம் படர்கின்றது… ‘இதைப்போல் நான் வாழ்வது என்று ….’ உள்ளத்து உணர்ச்சிகள் உடலை ஊடுருவவே கண்களை மூடிக்கொள்கிறாள். கண்களின் இமைத்திரை பாதி மூடியும், பாதி விலகியும் நிற்கையில் நழுவி ஓடும் எண்ணங்கள் ஆசை அடங்காமல் எட்டிப்பார்க்கின்றன …

‘ஆ! இதென்ன மயக்கம்! கண்ணன் காட்சியளித்த இடத்தில், சுருண்ட கேசமும், அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமுடைய இந்த இளைஞன் எங்கே வந்தான்?… யார் … சந்திரனா . அத்தானா?… அவன் எங்கே இங்கு வந்தான்? – பிள்ளைப் பருவத்தில் ‘கீச்சு மூச்சுத் தம்பளம்’ – விளையாடியதிலிருந்து, வளர்ந்து வாலிபனானபின் மணந்தால் அவளைத்தான் மணப்பேன், என ஒற்றைக் காலில் நின்ற அவன் தான் வஞ்சித்துவிட்டானே?’

வெள்ளத்திலே தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போற் சம்பந்தா சம்பந்தமில்லாத எண்ணச் சிதறல்கள் இமைத்திரையிற் சுழன்று நீந்துகின்றன.

“மாமி! என்னை மன்னித்து விடுங்கள்! என்னாற் சரசுவை மணக்க முடியாது!”- என்கிறான்!

அம்மா திகைக்கிறாள். சொல்பவன் சந்திரனா? “ஏன் என்ன தம்பி நடந்தது?” அமைதியாகத்தான் அம்மா கேட்கிறாள் !

“இதென்ன மாமி கேள்வி? சரசுவின் முகத்தைப் பார்த்தீங்களோ? எனக்கு வருபவள் இப்படி அவலட்சணமாகவா இருக்க வேண்டும்?”-பதற்றமில்லாமற் கூறுகிறான்!

அம்மாவின் அமைதி பறந்துவிடுகிறது. சீறுகிறாள்: “முந்தித் தேனாக இருந்தவள் இன்று எட்டிக் காயா கக்கசக்கிறாளோ? என்ன தம்பி! நீங்கள் இவ்வளவு படிச்சிருந்தும் இப்படிப் பேசுவது நியாயம் தானா? உங்களுக்கு வெளியழகுதான் முக்கியமாப் போட்டுது! இதைக் கேட்டா சரசு எவ்வளவு துடிப்பாளென்று சிந்தித்தீங்களா? பெண் பாவம் பொல்லாதது! நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்! உங்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் வேண்டாம் என்றா சொல்வாள், சரசு? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்! என் சரசுவை நீங்களே முடிக்காவிட்டால் பின் யார்தான் முடிப்பார்கள்? உங்கள் காலில் விழுகிறேன்! என் சரசுவை நீங்களே வாழவையுங்கள்!…” அவள் காலில் விழப்போகிறாள். அவன் பதறிக் கொண்டே அவளைத் தாங்குகிறான். மூலையிலிருந்து சரசுவின் குரல் ஒலிக்கிறது:

“அம்மா!! அவர் விருப்பப்படியே போகவிடுங்கள். அவரை வற்புறுத்தாதீர்கள் ! அவர் கூறுவதும் நியாயம் தானே? …. அவர் விருப்பத்தைத் தடைசெய்ய நாம்யார்? அவரைத் துன்புறுத்தாதே!”

அம்மா திகைக்கிறாள். ‘நல்ல பெண்ணடி நீ!’ சரசு வீட்டிற்குள் செல்கிறாள். விழிநீரை விரலாற் சுண்டிவிட்டுச் சந்திரன் செல்கிறான்.

***

“மாமி! மாமி!”- வெளியிலிருந்து கொண்டே கூப்பாடு போட்டுக்கொண்டு நுழைந்தது யார்?

சரசுவின் சிந்தனைத் தொடர் அறுகிறது…..

“யாரது?…. ஜானகியா?… வாம்மா … வா!”- அம்மா வின் குரல் தெளிவாகக்கேட்கிறது. ஜானகி வருகிறாள்; அவள் கையில் ஆறுவயதுப்பாலகன் ஒருவனைப்பற்றி வருகிறாள். பாலகன் குறும்புப் பார்வையுடன், பொக்கை வாய்ச் சிரிப்புடன்; கன்னக் கதுப்புகளும், மேனியும் பூநயத்துடன் பிரகாசிக்கின்றன. கன்னக்கதுப்பைக் கடித் தின்று விடலாம் போல – அவ்வளவு அழகு… கொள்ளை அழகு …!

“எங்கை மாமி! சரசுவைக்காணோம்?” ஜானகி கேட் கிறாள்.

“எங்க போகப்போகிறாள்! எல்லாம் வீட்டுக்கைதான் முடங்கிக் கிடப்பாள்!” என்று கூறிவிட்டு, உள் நோக்கிச் “சரசு! சரசு!” என்று கூப்பிடுகிறாள்.

‘நன்றாகக் கூப்பிடட்டும். யார் போகப் போகிறார்கள்?’

‘ஜானகி எனக்கு எதிராக முளைத்தவளல்லவா? என்னை மறந்துவிட்டு இவள் பின்னால் தானே அத்தான் போனார் ! என்னிடமில்லாத எதை இவளிடம் கண்டார்? ….கள்ளி, என் அத்தானை என்னிடமிருந்து களவாடி விட்டு அவளுக்கு எவ்வளவு பெருமிதம்! என்னை விட ஏழெட்டு வருடங்கள் சிறியவள்!… அதற்கிடையிற் கையிலே அவர்களின் அன்புச் சின்னமொன்று ….. இன்னொன்று வயிற்றிலே வளர்ந்துகொண்டிருக்கிறது! ஆணோ ….பெண்ணோ ? அவவின் பூரிப்பு அவள் முகத்திலே….

‘உம்!’… அடிவயிற்றிலிருந்து பெருமூச்சு சொன்று கிளம்புகிறது. அவள் கண்கள் தாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் பாலகன் மேற் செல்கின்றன … ‘அந்தச் சிரிப்பும் ….. சுருண்ட காதும் …. அப்படியே அத்தானையல்லவா உரிச்சு வைச்சிருக்கு…!’

சிரிப்புச் சப்தம் கேட்கிறது வெளியே. தொடர்ந்து “எங்க வெளியே வரமாட்டாபோலிருக்கே? என்மீது ஏதா வது கோபமா….?” ஜானகி கேட்பது கேட்கிறது.

“இந்த அறைக்குள்ளதான் அடைஞ்சு கிடக்கிறாள். பிரமை பிடிச்ச மாதிரி!”– அம்மா.

“ஓம், மாமி! சுந்தரம் நேற்று என்ன சொல்லிவிட்டுப் போறான் கலியாணத்தைப் பற்றி?”

“அந்த வயிற்றெரிச்சலை நீ யேன் கேட்கிறாய் அவன்! கொழும்பிலை யாரோ பெட்டையைக் காதலிக்கிறானாம்! காதல் தானாம் அவனுக்குப் பெரிசு – தங்கை கலியாணத்தை விட! நாங்க சொல்கிறதை அவன் கேட்டாத்தானே?”- அம்மா பெருமூச்சு விட்டுக்கொண்டே கூறுகிறாள்.

‘சுந்தரம்! சொந்த அண்ணனான அவனா இப்படிச் சொன்னான்? … சரசு, சரசு என்று கொஞ்சநேரம் அவளைக் காணாவிட்டாற் பதறித் துடித்துவிடும் அண்ணா .. வயது வளர வளர அன்பு, இரக்கம், பாசம் எல்லாம் வற்றி விடுமா?… ஆமாம் நெற்கதிர் முற்ற முற்ற ஈரம் வற்றித் தான் போகிறது..!’ வேதனை அவள் அடிவயிற்றை ஏதோ செய்கிறது …

சுந்தரத்தை நம்பித்தான் அவள் இதுவரை ஒருவித நப்பாசையுடன் கழித்துவந்தாள். அவனே அவளுக்கு வாழ்வளிக்க முன் வராதபோது….

சுந்தரம் படித்துவிட்டுக் கொழும்பிலை நல்ல உத்தி யோகம் ஒன்றிலிருந்தான். அம்மா தனியே சரசுவுக்கு மாப்பிள்ளை தேடிக்களைத்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந் தாள். சுந்தரத்துக்குப் பெண் பார்க்குமிடத்திலேயே சரசு வுக்கு மாப்பிள்ளை பெறவும் முனைந்தாள். அதில் தான் எவ்வ ளவு கஷ்டங்கள்! அம்மாவுக்கு மாப்பிள்ளை பிடித்த இடத் தில், பெண் பிடிக்கவில்லை. பெண் பிடித்த இடத்தில் மாப் பிள்ளை ஒழுங்கற்றவனாக இருந்தான். அம்மாவுக்கு இரண் டும் பிடித்த இடத்தில் அவர்களுக்குப் பெண் பிடிக்காமற் போய்விடும்! ஆமாம்! அம்மா தான் இந்த மாற்றுக் கல்யா ணத்துக்கு எவவளவு முயன்றாள்!

அம்மாவின் விருப்பத்திற்கேற்றபடி ஒரு இடத்தில் எல்லாம் திருப்தியாக அமைந்தபோது …. விடயம் கேள்விப்பட்டு வந்த சுந்தரம் குதித்தான். “இதுவென்ன வாழ்வா, வியாபாரமா? ஒரு பொருளைக் கொடுத்து இன் னொரு பொருளை வாங்குவது போல்….’!’

“உன் தங்கையின் வாழ்வடா…. !” என்று கெஞ்சினாள் அம்மா .

“அதற்கு நானா பொறுப்பு? இந்த வியாபாரத்திற் காகவா என்னைப்பெற்று வளர்த்து, படிக்கவைத்தீர்கள்?’

“உன் தங்கையின் ஆசையில் மண்ணைப் போடாதே! அண்ணன் தன்னை வாழ வைப்பானென்ற நம்பிக்கையை மோசம் செய்தாதே!” அம்மா காலைப் பிடித்துக்கெஞ்சாக் குறையாகக் கேட்டாள்.

“அப்படியானால் என் காதலிக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? என் ஆசைக் கனவுகள் மண்ணா கப் போகலாமா?”

அம்மா கெஞ்சினாள்; பதறினாள் – முடிவு-? வார்த்தைகள் தடித்தன, உறவு முறிந்தது. சுந்தரம் நேற்றே கொழும்புக்கு ரயிலேறிவிட்டான்!

கடைசி நப்பாசையும் அற்றுப்போய்விட்டது; நேற்றி லிருந்து சரசு பிரமை பிடித்தவளாக, வானத்தையும் தெருவையும் பார்த்தவளாக,…….. சம்பந்தா சம்பந்தமில் லாச் சிந்தனைகளால் அவள் தலையே வெடித்து விடும் போல் வலியெடுத்தது. நெற்றிப் பொட்டுத் தெறித்துவி டும்போலிருந்தது. நெற்றிப் பொட்டைக் கட்டைவிரலால் அமத்திக்கொண்டாள்.

“இந்தா பொன்னம்மா! விடயத்தைக்கேட்டியே…?” நீட்டி முழக்கிக்கொண்டு வருவது யாராக இருக்கலாம்?

வேறு யார் செல்லாச்சிதான் ……

“என்ன பாட்டி?”

“பிரேமாவெல்லே ஓடிட்டாளாம்!” அம்மா திகைக்கிறாள்!” பிரேமாவா ஒடிட்டாள்! நம்பமுடியல்லிலே?”

“என்னத்தை நம்புறது இந்தக் கலிகாலத்திலை? எது தான் நடக்காது?”- பாட்டி.

சரசு சிரித்துக்கொண்டாள். பிரேமா சரசுவின் நெருங்கிய தோழி. ஆனால், அவள் மணமாகி இரண்டாண்டுகள் மட்டுமே கணவனுடன் வாழ்க்கை நடத்திப்பின் வாழ்விழந்தவளாகப் பூவிழந்தவளாக நரக வாழ்க்கை நடத்தியவள்! எனினும் வாழவேண்டும்; வாழ்க்கை வாழ்வதற்கே, என்ற துடிப்பு மிக்கவள். எப்போதுமே அவள் துணிச்சற்காரிதான். அவள்தான் ஓடிவிட்டாளாம்.

“ஆமாம் மாமி உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சு!” ஜானகி ஒத்துப் பாடுகிறாள்!

அவளுக்கென்ன கண்ணுக்கு நிறைந்த புருஷனையும், கருத்துக்கு நிறைந்த பிள்ளைக்கனியமுதையும் பெற்றிருக் கிறாள்! அவளுக்கு எல்லாம் நிறைவு. ஆனால்

‘பிரேமாவுக்கு…? எனக்கு….?’ ‘குறையைத் தவிர வேறென்ன மிச்சம் எங்களுக்கு?’

“வாழ்ந்து கெட்டதெல்லாம் வாழத் துடிக்குதுகள்! ஆனால் வாழவேண்டிய என் சரசு…?”– அம்மாவின் விழி களிற் பனித்திரை படர்கிறது! கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்!

சரசுவின் நெஞ்சத்தில் விரக்தி நிழலாடுகின்றது….

“அப்பாவி, அம்மா நீ! சீவன் போகும் கிழங்கட்டை கள் கூட வாழத்துடிக்குதுகள்! ஏன் கழுத்தறு பட்ட கோழி, ஆடு, மாடு கூடத்தான் தம் உயிர்ப்பறவை பறக் கும் ஒரு சில விநாடிகள் வரையும் வாழத் துடிக்கின்றதை அறிவாயா நீ?”

பேச்சுத் திசை மாறுகிறது.

“கவலைப்படாதேங்கோ மாமி! சரசுவுக்கு என்று ஒரு வன் எங்காவது பிறந்து தானிருப்பான்!” – ஜானகி சொல் கிறாள்.

யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்கிறது. அப்பா தான் வருகிறார். ஜானகியும் செல்லாச்சிக்கிழவியும் விடை பெறுகின்ற னர்!….

அப்பாதான் சால்வை, சட்டையைக்கழற்றிக் கதிரை யின் கைப்பிடியிற் போட்டுவிட்டு, ” உஷ்! என்ன வெ யில்! காண்டாவனம் தான் கொழுத்துது!” என்கிறார்!

“கேட்டியளே கூத்தை …!” என்று ஆரம்பிக்கிறாள்.

“அது கிடக்கட்டும். சரசு எங்கே காணோமே, வெளி யில?” என்று கவலையுடன் விசாரிக்கிறார்.

“உள்ள தான் படுத்திருக்கிறாள் ! கூப்பிடக் கூப் பிட…!”

“அவளை யேன் தொந்தரவு படுத்துறாய்? போய்ச் சோத்தைப் போடு!”

தட்டு அலம்பும் சப்தமும், அதனைத் தொடர்ந்து, அப்பாவை அம்மா அழைக்கும் சப்தமும் கேட்கிறது. அப்பா போகிறார்……

தனிமை அவள் உள்ளத்தை மீண்டும் சூழ்கின்றது. இதுவரை தனிமையில் இருந்தாலும் அவள் செவிப்புலன் கள் வெளியே மேய்ந்து கொண்டிருந்தால் தனிமையின் தாக்குதல் அவளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இப் போது- காரிருளிற் கண்ணைக் கட்டிவிட்டாற்போல…

“ம் மா ……..!” – அவள் அன்புடன் வளர்க்கும் லட்சுமி கத்துகிறது. பசிவேளை வந்துவிட்டது. வழக்கத்தில் இந்நேரம் சரசு பிண்ணாக்குக் கரைத்து வைத்துவிடுவாள். இன்றோ …?”

“பசி! பசி! எல்லாருக்கும் பசி! ஆனால் வேறுபட்ட பசி! உனக்குத் தீனியல்லாததால் ஏற்பட்ட பசி! எனக்கு ஏற்பட்ட பசி? யாரால் இந்தப் பசி தீரும்! உனக்குத் தீனிபோட்டால் தீரும் பசி! எனக்கோ அன்பு செலுத்துவோர் , ஆதரவுடன் அணைப் போர் இருந்தால் தீரும் பசி! இயற்கையின் தாக்குத லால் ஏற்பட்ட பசி. இது யாரால் தீரும்? இது யாரால் தீர்த்திருக்க முடியுமோ அவர் உனக்கு எட்டாப் பொரு ளாக – கற்பனை உருவாக விளங்குகிறார்!”

“ம்…மா!- லட்சுமி கத்துகிறது, நன்றாகக் கத்தட்டும்! யார் போகப்போகிறார்கள்!

மீண்டும் தன்னைப்பற்றிய எண்ணத்தில், நினைவு சுழல்கிறது ……..!

‘நான் என்ன உண்மையிலே பெண் தானே?’

…….. நான் முழு மலர்ச்சி பெற்றுவிட்டேனா’ ஒரு பெண்ணின் முழுமை தாய்ம்மையடைவதில் தான் நிறை வுறுகிறது என்பார்களே? அப்படியானால் நான் எப்போது தாய்மையடைவது…..?”

சிரிக்கிறாள்- தன் பேதமையை எண்ணி. ‘எருமை வாங்குமுன் நெய்க்கு விலை கூறியதுபோல்! திருமணமே ஆகவில்லையாம் அதற்குள் தாய்மையைப்பற்றிய எண்ணமே வந்துவிட்டதே!……’

எனக்குத் திருமணமா? என்னை ஒருவன் இனி மணப் பா?ை இதுவரை என்னை வந்து கைப்பிடிக்காதவன் இனிமேலா வரப்போகிறான்? நான் எப்போது முழுமை யடைவது? நான் மலர்ச்சிபெற்றுவிட்டேனா?’

நினைவு அலைகள் அவள் மூளையைப் பலமாகத் தாக்க ஆரம்பிக்கின்றன. கண்களிலே மின்னல் பறித்தாற்போல …கண்கள் இருளடைகின்றன – தலை சுழல்வதுபோல …

“ஹஹ்ஹா … ஹஹ் ..ஹா …!” இதென்ன சரசுவுக்குச் சித்தம் சிதறிவிட்டதா? ……..”இல்லை …… இல்லை ….. நான் பூரண மலரல்ல!… நிச்சயமாக இல்லை . நான் மலர்ந்தும் மலராது நிற்கும் பாதிமலர் – பாதிமலர் .. ஹஹ்ஹா …!” பயங்கரமாகச் சிரிக்கிறாள்!

அப்பாவும், அம்மாவும் சப்தம் கேட்டு ஓடி வருகிறார் கள்! சரசு சிரிக்கிறாள்…. “நான் பாதிமலர்..!ஹஹ்ஹா ….! நான் பாதிமலர்!”.. மீண்டும் பேய்ச்சிரிப்பு! இனி –

சரசு என்றும் சிரித்துக்கொண்டே இருப்பாள்!

– கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

செம்பியன் செல்வன்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களில் இவரும் ஒரு வர்; இலக்கியப்பித்துக் கொண்ட இவர், தமிழின்பம், கதம் பம், கலைச் செல்வி , அமுதம் என்பனவற்றிற் சிறுகதை கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்; ‘மின்னல் பூ’ இவ ரது உயர்ந்த சிருஷ்டி; உருவகக் கதைகள் படைப்பதில் வல்ல இவர் ஒரு விமர்சகர். ஆ. இராஜகோபால் என்பது இவர் இயற் பெயர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *