(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அடேடே! அது யாரது? பாஞ்சாலியா? என் ஆசைக்கிளி பாஞ்சாலியேதானா!… பாஞ்சாலி பாஞ்சாலி…. அவள் ஏன் இங்கே வந்தாள்? – என்னைக் கண்டும் காணாதவள் மாதிரிப் போகிறாளே! அவள் பாஞ்சாலிதானா?…
(என்ன இது? பாஞ்சாலியாவது, ஆசைக்கிளியாவது! அது யாரது பாஞ்சாலி? முதலில் நீர் யார் காணும்?)
நான் அப்போது ஒரு சிப்பாய். மகா யுத்தம் ஓய்ந்து விட்டது. எனக்கு இனி வேலையில்லை. ஆனாலும் பட்டியைப் பிரித்து எனக்கு இன்னும் சுதந்திரம் வழங்கவில்லை. பரதேசமெல்லாம் அலைந்து படாது பாடெல்லாம் பட்டு, “பிராஞ்சு நாட்டுச் சுதந்திரத்தைப் பிடிச்சுக் கொடுத்து”, “போலந்துக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்து” – எல்லாம் முடிந்த பிறகு என்னுடைய அடிமை நாட்டிலே பழையபடி காலவைத் திருந்தேன். அப்போது ஒருமாத லீவு கிடைத்திருந்தது. லீவு கிடைத்த வுடனேயே வீட்டு நினைவுகள் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. “தம்பி பேசாமல் பறையாமல் ஓடிப்போய்ப் பட்டாளத்திலே சேர்ந்தானே” என்று அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நிற்கும் அருமைத் தாயாரைப் பார்க்க வேண்டும். அதற்கும் மேலாக என் அருமைப் பாஞ்சாலியைப் பார்க்க வேண்டும். ஊரிலே என்னை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்களிடம் என்னுடைய அனுபவங்களை – வீரப்பிரதாபங் களைச் சலிக்கச் சலிக்கப் பேச வேண்டும் – இத்தகைய ஆசைகள் முன்னேயிருந்து பிடித் திழுக்க ரயில் ஏறினேன். பிரயாணம் செய்துகொண்டிருக்கையிலே இன்னொரு ஞாபகம் வந்தது.
“தம்பி தம்பி” என்று என்மேல் உயிராயிருக்கும் சித்தப்பாவையும், சின்னம்மாவையும் போகிற வழியில் இறங்கிப் பார்த்துக்கொண்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப் போகலாமென்று தீர் மானித்தேன். பாவம், அவர்களும் தங்கள் மலட்டுச் சொத்துக்களெல்லாவற்றையும் எனக்கே தந்து, என் கையால “கொள்ளி” வாங்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தீர்மானித்தபடி இடைவழியில் இறங்கினேன். என்னைக் கண்டதும் அவர்கள் அடைந்த ஆனந்தம்! – எவ்வளவு உபசாரம் நடந்தது!
சின்னம்மா உள்ளே சமையல் வேலையில் ஈடுபட்டிருக்க. சித்தப்பாவும் ஏதோ அலுவலாக வெளியே போக, எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது. அறைக்குள்ளே போய் “அப்பாடா” என்று கட்டிலில் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. ஊர் நினைவுகள் – முக்கியமாக தாயாரின் அன்பு முகமும், பாஞ்சாலியின் இன்ப வதனமும் மாறிமாறி என் நினை வுகளில் குறுக்கிட்டன. இந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோதுதான் சமையலறையில் பேச்சுக் குரல் கேட்டது. “பாஞ்சாலியாவது, இங்கே வரவாவது! வீண் பிரேமை” என்று முதலில் நினைத்தேன். ஆனால், வரவரச் சந்தேகம் அதிகரித்தது. போய்ப் பார்த்து விடுவதென்று தீர் மானித்தேன். நான் அறையைவிட்டு வெளியே வந்ததும், அவள் வந்த காரியம் முடிந்து வெளியே போனதும் சரியாக இருந்தது. என்னால் சரியாக அவதானிக்கமுடியவில்லை. படலையைத் திறந்து போகையில் திரும்பிப் பார்த்தாள். என்னைக் கண்டதும் ஒருகணம் ஆச்சரியப் பட்டவள் போலத் தயங்கி நின்றாள். பிறகு டக்கென்று படலையைச் சாத்தி விட்டுப் போய்விட்டாள்!
அவள் பாஞ்சாலிதானா? பாஞ்சாலியென்றால் என்னைக் கண்டபிறகும் அப்படிப் போவாளா?… பாஞ்சாலி இல்லையென்றால் எதற்காகத் திரும்பி நின்று அப்படி மலைத்துப் பார்த்தாள்?… ஒன்றும் விளங்கவில்லை . சின்னம்மாவிடம் கேட்டுப் பார்த்தால் தெரிகிறது!….. ஏதோ சாதாரணமாகக் கேட்பதுபோல, “சின்னம்மா! அது யார், இங்கே வந்துவிட்டுப் போகிறது?” என்றேன்.
“உனக்குத் தெரியாதா தம்பி? உங்கள் ஊர்க்காரிதானே? செல்லம்மா என்று…”
“ஓ! அவளா?” என்று என் வாய் சொல்லிற்று. நெஞ்சு “பட் பட்” என்று பலமாகத் துடிக்க ஆரம்பித்தது. பதறும் குரலோடு மறுபடியும் கேட்டேன்.
“அவள் இங்கே ஏன் வந்தாள்?”
“இரண்டு மாசத்துக்கு முன் அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கிறது. உனக்குத் தெரியாது, “நாகலிங்கம் என்று – அவன் இரண்டாம் தாரமாகக் கட்டியிருக்கிறான்!”.
நான் திரும்பி அறைக்குள் வந்து கட்டிலில் சரிந்தேன். அடித்துப் போட்ட பாம்பு போல்!
(இது என்ன ஓய்! யாரோ ஒரு செல்லம்மாவுக்குக் கலியாணம் நடந்தால் உமக்கேன் உடல் பதறுகிறது? உம்முடைய பாஞ்சாலி கதையைச் சொல்லும்!)
செல்லம்மா!
அவள் ஊருக்கெல்லாம் “செல்லம்மா.” எனக்கு மட்டும் “பாஞ்சாலி” நான் ஆசையாக வைத்த செல்லப்பெயர அது. “அவளை நான் காதலித்தேன்” என்று சொன்னால், நீங்கள் என்னென்னவோவெல்லாம் தவறாக நினைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு விளங்கக் கூடிய வார்த்தையிலே சொல்கிறேன்: “அவளோடு நான் சினேகிதமாயிருந்தேன்.”
அவளுடைய கிழக் கணவன் – முதல் கணவன் ஒரு வருடத்துக்கு முன்னரே. செத்துப் போனான் என்ற செய்தி நான் தபால் மூலம் அறிந்த விஷயம், ஆனால் அவள் மறுபடி – இரண்டு மாதத்துக்கு முன்பு கலியாணம் செய்துகொண்டு ஊரை விட்டு வந்துவிட்டாளென்ற செய்தி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
அவள் கலியாணம் செய்துகொண்டதில் எனக்குக் கொஞ்சஞ்கூடக் கவலையில்லை. உண்மையைச் சொன்னால், அவள் ஊரைவிட்டு வந்து விட்டாளே என்று சிறிது கவலை யேயல்லாமல், கலியாணம் நடந்ததைப் பற்றி எனக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால்….. |
என்னைக் கண்டும் காணாதவள்போலப் போகிறாளே, ஏன்? ஏன்? ஏன்?…
என்னை மறந்துவிட்டாளா?
அவளாவது, என்னை மறப்பதாவது! பின் எதற்காக இந்தப் பாராமுகம்? ?????
ஒன்றும் விளங்கவில்லை . ஒரே குழப்பமான சிந்தனைகள். இதிலே ஒரு ஏக்கம் –
(உம்முடைய பழைய சரித்திரம் சுவையாக இருக்கும் போலிருக்கே, அதையும் சொல்லி விடுமேன்!)
அவளுடைய தாயார் அவளை ஒக்கலையிலே தூக்கிக்கொண்டு திரிந்த நாள் முதல் எனக்கு அவளை நன்றாகத் தெரியும். “செல்லம்மா செல்லம்மா” என்று அவளை வெகு செல்ல மாகத்தான் வளர்த்தார்கள். நானும் அந்தக் காலத்தில் செல்லம்மா என்றுதான் கூப்பிடுவேன். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேயே என் வீடும் இருந்தது. ஒரே வேலி. மண் விளையாட்டுக் காலம் முதல் நானும் அவளும் சினேகிதம். எத்தனை நாட்கள் சண்டை பிடித்துக்கொண்டு “கோபம்” விட்டிருப்போம். அந்தக் காலத்துக் கோபமெல்லாம் எத்தனை நிமிஷத்துக்கு? உட னேயே “உறவும் ஆகிவிடுவோம்.
இப்படியே பல வருடங்கள் போயின. வயது வளர வளர, உள்ளமும் வளர்ந்தது. உலக இயல்புகள் தெரிந்தன. “ஆண் – பெண்” என்ற வேற்றுமை உள்ளத்தில் புகுந்தது. இப்போதெல்லாம் நாங்கள் முன் போலல்ல. ஏதாவது அவசியம் உண்டானால் இரண்டொரு வார்க்தைகள் பேசுவோம். அவள் உலகம் வேறு ; என் உலகம் வேறு என்றாகிவிட்டது.
இந்த நிலையில் அவள் “பருவம்” எய்தினாள். பிறகென்ன, கிராமத்துப் பெண்களுக்கு இந்தநிலை வந்துவிட்டால், “படலையைத் திறந்து வெளியே வருகிற சுதந்திரமில்லை அவளை நான் காண்பதும் அருமையாகிவிட்டது. எப்போதாவது எங்கள் வீட்டுக் கிணற்றுக் கட்டில் நிற்கையில் திருப்பிப் பார்த்தால் அவள் உருவம் தெரியும். யாராவது எனது செயலைக் கவனித்துக் விடுவார்களோ என்ற பயம் உடனே இறங்கி வந்து விடுவேன். ஆனால் அவ ளுடைய நினைவுகள் அடிக்கடி வந்து மனத்தை அரித்துக்கொண்டுதான் இருந்தன. வீட்டில் எனது தாயார் இல்லாத சமயத்திலே கிணற்றடியில் நான் பொழுது போக்குவது வழக்கமாகி விட்டது. எனது பார்வை சில சமயங்களில் அவள் பார்வையைச் சந்தித்துவிடும். “டக்”கென்று அவள் வீட்டுக்குள்ளே போய் விட்டாள்.
ஏன் கதையை வளர்த்துகிறீர்? உமக்கு அவள் மீது காதல் ஏற்பட்டு விட்டதென்று சொல்லும்?
காதல்!
நான் அவளைக் காதலித்தேனென்று சொல்லமுடியாது. அவளுக்காக நான் எல்லாவற் றையும் துறந்துவிடத் தயாராக இல்லை. என் மனத்திலே அவ்வளவு துணிவுமில்லை. காத லின் முடிவு “கல்யாணம் என்றேயிருந்தால், நான் அவளை நிச்சயமாகக் காதலிக்கவில்லை.
நல்லதம்பி விதானையாரின் பேரப்பிள்ளையான நானெங்கே, அவளெங்கே! எவ்வ ளவோ சொத்துப்பத்துக்களுக்கு ஒரே வாரிசாக இருக்கிற நானெங்கே, அடுத்தவேளைக் கஞ்சிக்குக் கஷ்டப்படுகிற அவள் எங்கே!
காதல்!… அது வந்துவிட்டால் எல்லாவித உயர்வு தாழ்வும் மறைந்து விடுமென்று சொல் கிறார்களே. இதிலே எனக்கு நம்பிக்கையில்லை. “அவளை நான் கல்யாணம் செய்யலாம்” என்று நினைப்பது கூட முடியாத காரியம். “உன்னை நான் கலியாணம் செய்கிறேன்” என்று அவளிடம் நான் சொல்லி விட்டால் -அவள் நடுநடுங்கி உயிரையே விட்டுவிடக்கூடும்!
சம அந்தஸ்து இல்லாத இருவரிடையே “காதல்” தோன்றலாம். ஆனால் கல்யாணம் தோன்றுமென்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கதைகளில்தான் அது நடக்கும். வாழ்க் கையில் யாராவது சில தீரர்கள் துணிந்துவிடலாம். பொதுவாக இது நிஜமனிதனின் சுபாவமல்ல.
அவளுடைய தாயார் அதிகமாக வீட்டில் இருப்பதில்லை. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். அவளின் தாயார்தான் வெளியே போய் ஏதும் “பிய்த்துப் பிடுங்கிக் கொண்டுவர வேண்டும். அந்தச் சமயங்களில்ெலாம் அவள் வீட்டில் தனியாகவேயிருப்பாள்.
இப்படியான ஒரு சமயம். அவளுக்கு என் மனவிருப்பத்தைத் தெரிவிக்க வேண்டு மென்று துணிந்து விட்டேன். எப்படித் தெரிவிப்பது? தெருவிலே போய் அவள் வீட்டுப் படலை யைத் திறக்கும் தைரியம் இல்லை. போகும் போதோ வரும்போதோ யாராவது பார்த்து விட டால்? ஒரு கடிதம் எழுதி வேலியால் கொடுப்பதென்று தீர்மானித்தேன். ஐந்தாம் வகுப்புவரையும் படித்தவள் அவள்.
ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து எழுதினேன்:
“அன்பே .
உன்னை நினைத்து நினைத்து ஏங்குகிறேன். உன்னோடு ஒரு வார்த்தை கூட இப் போது பேச முடியவில்லையே! என் மனநிலை உனக்குத் தெந்திருக்குமென நம்புகிறேன். நீயும் மனம் வைத்தாயானால் ஒவ்வொரு இரவையும் எங்கள் இன்ப இரவாக்கிவிடமுடியும்.
“உன் அன்பான பதிலை உடனே தருக.”
– இவ்வளவு தான். அவளுடைய பெயரும் இல்லை என்னுடைய கையொப்பமும் இல்லை. நேர் நேராகக் கொடுக்கும் போது அவையெல்லாம் எதற்கு?
கிணற்றுக்கட்டில் ஏறிப்பார்த்தேன். அவள் நிற்பது தெரிந்தது. ஏனோ நெஞ்சு “படபட” வென்று துடித்தது. இனியென்ன திரும்பிப் போவதா? ஏதோ ஒரு “முற்று”க் கண்டே விடுவது. தலையா போய்விடப் போகிறது?….
“உஷ்ஷ்..” என்று மெதுவாக சீக்காயடித்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். இதயம் படபடத்தது. இனிப் பின்வாங்க முடியுமா?
“இங்கே வா!” என்று தலையசைத்தேன்.
திகைத்தவள் போல நின்றாள். மறுபடியும் தலையசைத்தேன்.
என் சொல்லை மீற முடியவில்லைப் போலும்! வந்தாள்.
தயாராக வைத்திருந்த கடிதத்தை அவள் முன்பாகப் போட்டேன். எடுத்துப் பார்த்தாள்.
அவள் வாய் திறப்பதற்கு முன் “இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன். பதில் எழுதி வைத்திரு” என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி வந்து விட்டேன். அதற்குமேல் அங்கே நிற்கத் தைரியமில்லை .
உடம்பெல்லாம் இன்னும் பதறிக்கொண்டு தானிருந்தது. மனத்திலே ஒரே குழப்பம். “கடிதத்தைத் தாயாரிடம் காட்டி விடுவாளோ” என்ற ஏக்கம். அப்படியானால் – ஆகாயமே தலையில் இடிந்து விழுவது போன்ற ஒரு உணர்ச்சி!
சே. அப்படிச் செய்யமாட்டாள். அவளுக்கும் என்மீது ஆசை இருக்காதா? பருவகால உணர்ச்சிகள் அவளுக்கு மட்டும் இல்லையா? அவள் அன்பான பதில் வரும். பிறகு… மனத்திலே இன்ப அலை மோதிற்று.
நேரமோ போகமாட்டேனென்கிறது. “ஒன்று, இரண்டு, மூன்று.. ” என்று மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன். ஐநூறு எண்ணி முடியப்போனால் சரியாக இருக்குமென்ற நினைவு. வாய் எண்ணிக் கொண்டிருந்தது. மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் அலை போலப் புரண்டன.
ஐநூறு! சே, இதற்குள் எழுதிவிடுவாளா? மறுபடியும் ஒரு ஐநூறு எண்ணலானேன்.
மறுபடியும் எல்லை வந்துவிட்டது. இனிப் போகலாம். அதிக தாமதித்துவிட்டேனோ? ஒருவேளை வந்து காத்துக்கொண்டிருக்கிறாளோ?
கால்கள் விரைவாக நடந்தன. கிணற்றுக் கட்டில் ஏறினேன்.
அவளைக் காணவில்லை. நெஞ்சு “திக்” என்றது. புறக்கணித்து விட்டாளோ!… இன்னும் கொஞ்சநேரம் பார்கலாம்.
“ஒன்று, இரண்டு, மூன்று …. முன்னூற்றி நாற்பத்தேழு…”
அதோ, வருகிறாள்!
தேகமெல்லாம் ஒரு கிளர்ச்சி. ஒன்றும் பேசக் கூட முடியாது போலிருக்கிறதே! உதடுகள் நடுங்கும் ; நாத் தடுமாறும், வந்தாள்.
அவள் கையிலிருந்த கடிதம் வேலிக்கு மேலாகப் பறந்து வந்தது. நிலத்தில் விழ விடாமல் எட்டி ஏந்திக்கொண்டேன்.
நான் எழுதிய அதே கடிதத்தின் மறுபக்கத்தில் பென்சிலால் எழுதியிருந்தாள்:
“நீங்கள் இந்தமாதிரி நினைப்பீர்களென்று கருதவில்லை. உங்களைப் பற்றி மிக மரி யாதையாக எண்ணியிருந்தேன். நீங்கள் செய்ய எண்ணிய காரியம், இன்னொருவர் அறியும் போது எப்படியிருக்கும், பலநாள் திருட்டு ஒரு நாளாயினும் அகப்படுவது நிச்சயந்தானே!
உங்களுக்கு வயது வந்துவிட்டது. உங்களுக்கக் தகுதியான இடத்தில் நல்ல பெண் ணைக் கலியாணம் செய்யுங்கள்.
இனிமேல் இவ்விதம் எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.”
வாசித்து முடிந்ததும் மனதிலே சொல்ல முடியாத ஒரு வேதனை தோன்றிற்று. கிளு கிளுத்துக் கொண்டிருந்த உற்சாக உணர்ச்சியெல்லாம் “புஸ்”ஸென்று அணைந்துவிட்டன.
பிரேதம் போன்ற நிலையில் தலையை நிமிர்த்தினேன். அவள் போய் விட்டாள். வீட்டுக்கு வந்தேனோ! படுக்கையில் குப்புற வீழ்ந்தேனோ!
(பிறகு? பிறகு?)
பிறகு நான் கௌரவமாகத்தான் நடந்து கொண்டேன். அவள் மேல் கெட்ட எண்ணம் தோன்றவேயில்லை . மரியாதையுடன் அவள் மறுத்துக் கடிதம் எழுதியதையும், புத்திசாலித தனமாக என் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்ததையும் நினைக்க நினைக்க அவளைப் பற்றிக் கீழ்த்தரமாக எண்ண முடியவில்லை. நடந்த விஷயங்களை அவளும் மறந்துவிட்டவள் போல் இருந்து விட்டாள்.
இப்படிப்பட்டவள் இப்போது உம்மைக் கண்டும் காணாதவள்; மாதிரித் தானே போவாள்? இதற்காக நீர் ஏன் வருந்துகிறீர்?… ஓ! அவள் முதலில் ஒரு கிழவனைக் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொன்னீரே, அதென்ன சங்கதி?
அவளுக்குக் கல்யாணம் நடந்தது.
யாழ்ப்பாண மண்ணிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு அழகும் புத்திசாலித் தனமும் மாத் திரம் இருந்தால் போதாது. அவளுக்குச் “சீதனம்” வேண்டும்; பொன்னுடமை” வேண்டும். இந்த இரண்டுமில்லாவிட்டால்… அவளுக்கு நரகம் இங்கேதான் காத்திருக்கிறது.
அவளுக்கு அந்தக் கிழவனின் ரூபத்தில் நரகம் வந்தது. அந்தக் கிழவனைச் சொல்லி என்ன, அவனில்லாவிட்டால்; இன்னொரு கிழவன்; அல்லது நோயாளி :ஒரு முடம்: குருடு – இப்படி ஏதாவதொன்று வந்து அவள் கழுத்திலே தாலியைக் கட்டியிருக்கும்.
அந்தக் கிழவன்…
அவன் சிறுபெண்ணாக இருக்கும் போது நேராகக் கூப்பிடும் போது “பெரியப்பா!” என்றும், வெளியில் பேசும் போது “சுப்பையாக் கிழவன்” என்றும் அவளால் சொல்லப்பட்ட வன்தான். சுப்பையாக் கிழவனுக்கும் அவளுடைய தாயாருக்கும் ஏதோ தொடர்பு இருந்த தென்று கூடச் சொல்லுவார்கள். நன்றாகத் தெரியாத விஷயங்களை நாம் எதற்காகப் பேச வேண்டும்?
அவளுக்கும் சுப்பையாக கிழவனுக்கும் கலியாணம் நடந்தது. அவனுக்கு இவள் மூன்றாவது தாரம்!
சுப்பையாக் கிழவனுக்கு ஊரிலே ஒரு சின்னக் கடையும் கொஞ்சக் காணி பூமியும் இருந்தன. “ஏதோ சாப்பாட்டுக்கும் சீலை துணிக்கும் கஷ்டப்படாமலிருக்கக் கூடிய இடத்தில் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன்” என்ற திருப்தியோடு அவள் தாயாரும் கண்மூடிவிட்டாள். கிழவிக்குத் தெரியாதா? பெண்ணுக்குச் சீலை துணியும் சாப்பாடும்தானா பிரதானம்? அல்லது கந்தையைக் கட்டிக்கொண்டு பட்டினி கிடந்தாலும்….
கிழவிக்குத் தெரிந்திருக்கும். ஒருகாலத்தில் அவளும் இவளைப் போல யௌவன ஸ்தி ரீயா இருந்தவள்தானே! ஏதோ இயன்றதைச் செய்து திருப்திப்பட்டாளோ? அல்லது வாழ்க் கையின் கசப்பான அனுபவங்களைக் கடந்து வருகையில் பழைய உணர்ச்சிப் போக்குகளை மறந்துவிட்டாளோ?
சுப்பையாக் கிழவனோடு அவள் வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது – அல்லது தள்ளாடித் தள்ளாடி நடந்துகொண்டிருந்தது – இதில் எது சரி? அவளுடைய ஓட்டத்துக்கும், அவனுடைய தள்ளாட்டத்துக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ? அவனால் நிச்சயமாக ஓடமுடியாது. ஆகவே அவள் தான் தன் ஓட்டத்தை அடக்கவேண்டும். அடக்கி அடக்கி அந்த நெருப்பிலே துடித்திருக்க வேண்டும். பாவம்! பாவம்!….
எப்படியிருந்தாலும் மஞ்சள்கொடி கழுத்திலே ஏறியபின். அவளுக்குப் படலையைத் திறந்து வெளியிலே வரும் சுதந்திரம் கிடைத்தது. பக்கத்து வீடுதானே, இடையிடையே எங்கள் வீட்டுக்கு வருவாள். அம்மாவோடு பேசுவாள். போவாள். நான் அவள் இருக்கிற பக்கம்க தலையைக் காட்டுவதில்லை. ஒருநாள் வந்தாள் அம்மா வீட்டில் இல்லை. “அம்மா இல்லையே!” என்றேன். பேசாமல் போய்விட்டாள்.
இப்படித்தான் சில நாட்கள் மௌனமாக ஓடிக் கழிந்தன.
ஒருநாள் நான் படித்துவிட்டு வைத்த “கள்வனின் காதலி”யைத் தேடினேன். காணவில்லை.
“அம்மா, மேசையில் ஒரு புத்தகம் இருந்ததே, எடுத்தாயா?” என்றேன்.
“அதுவா? செல்லம்மா படித்துவிட்டுத் தருகிறேன் என்றாள். “கொண்டு போ” என்று சொல்லிவிட்டேன். இப்போதே தேவையானால் சொல்லு; கூப்பிட்டு வாங்கித் தருகிறேன்.”
“கிடக்கட்டும். கெதியாகப் படித்துவிட்டுத் தரச்சொல்!” என்றேன்.
ஓ! அவள் கதைப்புத்தகங்களும் படிக்கிறாளா? அவை – அந்தக் காதல் கதைகள் அவள் வேதனையை அதிகரிக்கத்தானே செய்யும்? ஏதாவது புண்ணிய புராணப் புத்தகங்களைப் படித்தாலாவது….
மூன்று நாட்கள் கழிந்தன. “அம்மா !” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவள். கையில் புத்தகம்.
“அம்மா இல்லை” என்றேன்.
புத்தகம்” என்று சொல்லி நீட்டினாள்.
வாங்கிக்கொண்டேன். ஒன்றும் பேசாமல் மொட்டையாக இருப்பதா?
“கதை எப்படியிருந்தது?”
“நல்ல கதை!”
அவள் போகவில்லை. நின்றாள். “வேறே…”
“இப்படி நல்ல கதைப்புத்தகம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?”
“இப்போது இல்லை, நாளைக்கு வா; தருகிறேன்” பின்பும் கொஞ்ச நேரம் நின்றாள். மௌனம்தான். என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“அம்மா வருவதற்கு அதிக நேரமாகுமோ?”
“அப்படித்தான் நினைக்கிறேன்.”
அப்போதும் அவள் போகவில்லை . எனக்கு ஏதாவது பேசிக் கொண்டிருக்கவும் தெரியவில்லை.
“நான் போய்விட்டுப் பிறகு வருகிறேன்” என்று சொல்லித் திரும்பினாள். அந்தத் திரும்ப லிலே ஒரு தயக்கம்.
நாலடி நடந்தபின் திரும்பி ஒரு பார்வை. அந்தப் பார்வை என்ன சொல்லிற்று என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை .
என்ன ? இது!…
என் மனத்தில் வித்தியாசமான உணர்ச்சிகள் ஒன்றுமில்லை. அன்றொரு நாள் அவளுடைய கடிதத்தை உடனே கிழித்தெறிந்துவிட்டது உண்மைதான். ஆனாலும் அதிலிருந்த வார்த்தைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவேனா!
….. உங்களைப் பற்றி மிக மரியாதையாக எண்ணியிருந்தேன்… இனிமேல் இவ்விதம் எண்ணமாட்டீர்களென்று நம்புகிறேன்.”
இந்த வார்த்தைகளை நான் எப்படி மறக்க முடியும்? நான் மனிதன் தான்; மிருகமில்லை.
இப்படி இன்னுஞ் சில சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தன. இந்தச் சந்தர்ப்பங்களின் போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள அப்போது என்னால் முடியவில்லை. “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” என்பார்கள். நான் நல்ல மாடாகத்தானிருந்தேன். என் இதயத்தில் பட்ட அந்த “முதற் சூட்டின் விறுவிறுப்பு” என் கண்பார்வையை மறைத்தது. உண்மையை உணரும் சக்தியை இழந்திருந்தேன்.
அதெல்லாம் இருக்கட்டும். இந்தச் “செல்லம்மா”வுக்கு நீர் “பாஞ்சாலி” என்று செல்லப் பெயர் கொடுத்ததாகச் சொன்னீரே. அதெல்லாம் எப்போது நடந்தது?
நான் நினைத்திருந்ததற்கு முற்றிலும் மாறான பாதையில் அவளின் போக்கு மாறி விட்டது. என்னுடைய கடிதத்தைக் கௌரவத்துடன் திருப்பி விட்டுப் புத்திமதியும் சொன்னவள், இந்த மாதிரியெல்லாம் நடக்க ஆரம்பிப்பாளென்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. முதலில் நான் “ஊர்க் கதை”களை நம்பவேயில்லை. ஆனால், காலப்போக்கில் – கண்ணால் நேருக்கு நேராகக் காணாவிட்டாலும் – நம்பவேண்டித்தானிருந்தது.
ஆம், அவள்… பச்சை பச்சையாகச் சொன்னால் – அவள் வேசையாட ஆரம்பித்து விட்டாள்!
மூன்று பேர்களை எனக்கு நிச்சயமாகத் தெரியும். தமிழ்ப் பள்ளிக் கூடத்துப் புதிதாக வந்த உபாத்தியாயர் ஒருவர் – அவருக்கு அவள் வீட்டிலே தான் சாப்பாடு. பிள்ளையார் கோவி லுக்குப் பூஜை செய்கிற ஐயர் இரண்டாவது பேர்வழி. செக்கச் செவேலென்று நல்ல நிறமும், “குழுகுழு” வென்று நல்ல உடம்பும், நடுத்தர வயதும் – ஆள்பிழையில்லை . ஆனாலம் “கிளி” போல அவருக்கு ஒரு மனைவி வீட்டிலே இருந்தாள்! மூன்றாவது புள்ளி கொஞ்சம் பெரிய புள்ளி. ஊருக்குள்ளே கொஞ்சம் நடப்பானவர். நாற்பது வயதுக்குக் கிட்டத்தட்ட இருக் கும். அழகான ஆண்பிள்ளையென்று சொல்ல முடியாது. ஆனால், நல்ல சோக்கானி பொருள்பண்டம் நிறைய உள்ளவர்.
இந்த மூன்று பேர்களைத் தவிர வேறு யாரும் போவதாகவும் தெரியவில்லை.
அவளுடைய போக்கு இப்படியாகிவிட்டதென்பதை நிச்சயமாக அறிந்ததும் என்மனம் குறுகுறுத்தது. கலியாணம் முடிந்த சில நாட்களின் பின் அவள் என்னோடு நடந்துகொண்ட மாதிரிகள் ஞாபகத்துக்கு வந்தன. “அட முட்டாள்தனமாக நடந்து கொண்டோமே!” என்று நொந்து கொண்டேன்.
அவள்தான் என்ன செய்வாள்? அவளுடைய வயிற்றுப் பசியைத் தீர்க்கத்தான் சுப் பையாக் கிழவனால் முடிந்தது. அது மாத்திரம் அவளைத் திருப்தி செய்யவில்லை. பருவப் பசியையும் அவள் தீர்க்கத்தான் வேண்டி யிருந்தது.
என் இதயத்திலே ஒரு துடிப்பு. மூடிய பெட்டி ஒன்று எனக்காகவே வந்தது. “வெறும் பெட்டிதான்” என்ற எண்ணத்தோடு நான் அதைத் திறக்காமலே இருந்துவிட்டேன். யாரோ ஒரு “மூன்று பேர்” அதைத் திறந்து அதற்குள் இருந்த சுவையான உணவுகளை….
நாளுக்குநாள் என் துடிப்பு அதிகமாயிற்று. அவள் வீடு பக்கத்தில்தானே! சந்தர்ப்பம் வராமலா போகப்போகிறது!
ஒருநாள் ஒரு பெரிய புத்தகத்தைக் தூக்கிக்கொண்டு வந்தாள். என் தாயார் வீட்டி லில்லை. புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்தாள். வாங்கிக் கொண்டே, “என்ன புத்தகம் இது?” என்றேன்.
“பாரதம் அம்மாவினுடையது!”
“ஓ! பாரதமா படிக்கிறாய்!” என்று சொல்லி அவளை ஒரு பார்வை பார்த்துச் சிரித்தேன். அந்தப் பார்வையின் வேகம் அவள் முகத்தைச் சிவக்க வைத்தது. அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சிரித்தாள்.
“பாரதம் படித்துத்தான் சரியாக பழக்கம் பழகுகிறாய்!”
“என்ன பழக்கம்?”
“பாஞ்சாலிப் பழக்கம்!”
அன்று அவள் பிரியும்போது, “உன்னை இனிமேல் “பாஞ்சாலி” என்று தான் சொல்லிக் கொள்வேள். கோபம் வருமோ உனக்கு?” என்றேன்.
“இனிமேல் நான் பாஞ்சாலி மாதிரியில்லை!”
“…”
“எந்தப் பெண்ணுக்காவது இரண்டு புருஷர்கள் இருந்ததுண்டா? வேண்டுமானால் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்கள்!
“ஓ!” என்று சொல்லி அவள் கன்னத்தை இலோசாகக் கிள்ளினேன். “இப்படி நீ மாறிவிடு வாயென்று எனக்குத் தெரியும். இருந்தாலும் “பாஞ்சாலி” என்ற பெயர்தானே உன்னை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது!”
“உங்கள் இஷ்டம்!”
“பாஞ்சாலி”
“நானும்…”
“என்ன?”
அவள் திரும்பி நடந்துகொண்டே மெதுவாக “உங்களை “அர்ச்சுனராஜா” என்றுதான் சொல்வேன்!” என்று சொல்லி மறைந்துவிட்டாள்.
பூரித்து நிறைந்துவிட்ட உள்ளத்தோடு மேசை மேலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து விரித்துப் பார்த்தேன். ஒரு எழுத்தும் தெரியவில்லை . அவளின் உருவந்தான் தெரிந்தது. பக்குப் பக்கென்று நெஞ்சு துடிக்கும் சத்தமும் கேட்டது.
இதற்குப் பிறகு….
அருச்சுனாராஜாவும் பாஞ்சாலிதேவியும் உயிரும் உடலும் போல. மணமும் மலரும் போல, வீணையும் நாதமும் போல… எப்படியெல்லாமோ இன்ப வாழ்வு வாழ்ந்து வந்தார்கள்…
பிறகு, நீர் பேசாமல் பறையாமல் ஓடிப் போய் பட்டாளத்திலே சேர்ந்ததும், ஒரு வரு டத்துக்கு முன்னால் சுப்பையாக் கிழவனின் மரணச் செய்தியைத் தபால் மூலம் அறிந்ததும் தெரிந்த விஷயங்கள்….
சித்தப்பா வீட்டு அறையிலே படுத்திருந்த அந்த நிலையிலேயே எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.
அடி பாஞ்சாலி, உன்னைப் பார்க்கவேண்டும் என்று எவ்வளவு ஆவலாக ஓடிவந்தேன்! நீ… நீ… இவ்வளவு அலட்சியம் செய்து விட்டாயா என்னை ? நான் உனக்கு என்ன தவறு செய்தேன்? அந்த இன்பகரமான நாட்களையெல்லாம் எப்படித்தான் மறந்தாயோ!
பெண்கள்!
உன் குலத்தின் இயற்கைக்குணம் இதுவேதானா? “ஆலகால விஷத்தையும் நம்பலாம்….”
(ஆச்சரியமாகத்தானிருக்கிறது! பாஞ்சாலிதேவி எப்போதாவது அர்ச்சுன ராஜாவை மறக்க முடியுமோ? கொஞ்சங்கூடப் பொருத்தமாக இல்லையே!)
வெகு நேரம் கழிந்துவிட்டது!
மறுபடியும் சமையலறையில் பேச்சுக் குரல்.
அவள்தான்!
அவளைத் தனியாகச் சந்தித்தால் இந்த மூடுபணியை நீக்கி உண்மையைக் கண்டு விடலாம். ஆனால் அவளைத் தனியாகச் சந்திப்பது முடியாது போலிருக்கிறதே!
திடீரென்று ஒரு யோசனை உதித்தது. ஒரு துண்டுக் கடதாசி எடுத்து எழுதினேன்:
“என் பாஞ்சாலி, என்னை மறந்துவிட்டாயா? நீ கூட அடையாளம் தெரிந்து கொள்ளாதபடி நான் உருமாறிவிட்டேனா? பாஞ்சாலி, உன் அர்ச்சுனராஜாவை உனக் குத் தெரியவில்லையா? அல்லது உன் மனமே தான்…..
நாளைக்காலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தேன். இனி உனக்காக எத் தனை நாட்களும் தங்குவதற்குத் தயார். முதலில் உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும். எங்கே? எப்போது? உன் வீட்டுக்கு வரலாமா?
உனது அர்ச்சுனராஜா”
கடிதத்தை மடித்துக் கையினுள் மறைத்து வைத்துக்கொண்டு அவள் இருந்த இடத்துக்குப் போனேன்.
“சின்னம்மா, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கொஞ்சம்!” “தேத்தண்ணீர் வைக்கட்டுமா?”
“இல்லையில்லை. சும்மா நல்ல தண்ணீர்!”
தண்ணீரை வாங்கிக் குடித்துக்கொண்டு நிலைமையைக் கவனித்தேன். சின்னம்மா “அடுப்போடு” தன் வேலையில் கவனமாயிருந்தாள். பாஞ்சாலியின் கண்கள் எங்கேயோ”
கவனமாக இருந்தன. இடையிடையே என் பக்கம் சுழன்றடித்தன.
தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பினேன். பாஞ்சாலி நின்ற பக்கமாக வந்து சின்னம்மாவைப் பார்த்தேன்….
சரி கடிதத்தை நீட்டினேன்.
தயக்கத்துடன் சின்னம்மாவின் பக்கம் பார்த்தாள் ; வாங்கிவிட்டாள். நான் வந்து விட்டேன்.
பிறகு அவளைத் தனியாகச் சந்தித்தீரா?
வெகு சீக்கிரமாக அவள் வீட்டுக்குப் போய்விட்டாள். அரைமணி நேரம் கழிந்திருக்கும். என் அறையின் கதவருகே ஒரு முகம்.
பாஞ்சாலி!
ஒரு துண்டுக் காகிதத்தை உள்ளே வீசி எறிந்தாள். போய்விட்டாள்.
கடிதத்தை எடுத்தேன். முன்போல நான் எழுதிய அதே கடிதத்தின் மறுபக்கத்தில்,
“மன்னிக்க வேண்டும். ஏதோ அறியாமையினாலே அந்தக் காலத்தில் கெட்ட வழியில் பிரவேசித்தேன். அந்த நாட்களை மறந்துவிட்ட நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்? அந்த நாட்களை நீங்களும் மறந்து விடுங்கள்! “பாஞ்சாலி” எப்போதோ இறந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளுங்கள்!
இனியாவது ஒழுங்கான வாழ்க்கையை நடத்தவேண்டுமெனத் தீர்மானித்தி ருக்கிறேன். இக்கடிதத்தைக் கிழித்துவிடுங்கள்! உங்களை நம்பித் தருகிறேன். நீங்கள் கிழித்து விடுவீர்களென்று எனக்குத் தெரியும்” என்று எழுதியிருந்தது.
கடிதத்தைக் கைக்குள்ளே கசக்கினேன். கடிதம் மாத்திரமா – என் இதயமும் கசங்கிற்று!
என்ன இது! இந்த “ஞானம்” இவளுக்கு எங்கிருந்து வந்தது? எப்படிப் “பதிவிரதை” யானாள்?
அவள் கேட்டுக் கொண்டபடி கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டேன்.
பொழுதுபடுகிற சமயம். வெளியே போய்க் கொஞ்சத் தூரம் உலாவி வரலாமென்ற நினைவோடு படலையைத் திறந்தேன்.
“ஹலோ !…” அவனைக் கவனித்தேன்.
“அடேடே, லிங்கமா!”
லிங்கம் என்னோடு கலாசாலையில் ஒன்றாகப் படித்தவன்.
“மறந்துவிட்டாயா? எப்போது இங்கே வந்தாய்?… அதோ, அதுதான் என்னுடைய வீடு. வா, போகலாம்!” என்றான் லிங்கம். பேசாமல் அவனோடு நடந்தேன்.
“என்னிலும் ஒரு வயதுதானே நீ குறைவு – இந்த வயதுக்குள் நான் இரண்டு பெண் களின் கையைப் பிடித்துவிட்டேன் நீயானால்….”
“உன் அதிர்ஷ்டம்!” என்றேன். இதற்கிடையில் அவன் வீட்டுக்கு வந்து விட்டோம்.
-இப்போது என் வீட்டுக்கு வந்திருக்கிறாளே அவளை அவள் அழகுக்காகவே செய் தேன். பிறகுதான் அவளுடைய பொன்னான குணத்தையும் கண்டுகொண்டேன். என் அதிர்ஷ்டம்தான்… நீ கேட்டால் ஆச்சரியப்படுவாய். அவள் ஏழை… அவளுக்கும் நான் இரண்டாவது புருஷன்…” என்றான் லிங்கம்.
என் உடம்பெல்லாம் என்னவோ ஒரு நடுக்கம். நின்றிருந்தால் விழுந்திருப்பேன். நல்லவேளை, நாற்காலியில் உட்கார்ந்த பிறகுதான் இதைச் சொன்னான்.
“செல்லம்! என்ன செய்கிறாய்? வெற்றிலைத் தட்டத்தைக் கொண்டுவா, இங்கே!”
அவள் வந்தாள்.
மரியாதையாக வெற்றிலைத் தட்டை மேசை மீது வைத்துவிட்டுப் போய் விட்டாள். பாஞ்சாலி! அவள் பாஞ்சாலி!
நான் அதிக நேரம் அங்கே தங்கவில்லை.
லிங்கம் – அவனைப்போல அழகும், யௌவனமும், செல்வமும் உள்ள ஒரு கணவன் வாய்த்த பிறகு எந்தப் பெண்தான் விபசாரியாவாள்? அதுவும் பாஞ்சாலியா?
அவள் பதிவிரதையாகிவிட்டாள்!
– வரதர் புதுவருஷ மலர் – 1950.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.