பவளக் கொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 4,969 
 
 

ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது.

விடிந்தால் கல்யாணம்.

ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான சிரஞ்சீவி முத்தையனுக்கும், சிங்கப்பூர்த் தேவரென்று கூப்பிடப்பட்ட பெரியண்ணத் தேவருடைய ஒரே மகளான சௌபாக்கியவதி பளவக்கொடிக்கும் திருமணம்.

இந்த சுபச் செய்தியைக் கேள்விபட்டதும், பணங்குளம் மட்டுந்தானா மூக்கின் மேல் விரலை வைத்தது?

“கண்டீங்களாடி பொண்டுகளா இந்த அதிசயக் கூத்தை? நம்ப பவளக்கொடி வாழ்க்கைப்பட்டால் தன்னோட சொந்த அயித்தை மகன் வீரமணிக்குத்தான் வாழ்க்கைப்படுவேன்; இல்லாங்காட்டி, காளி கோயில் பாதாளக் கேணியிலே குதிச்சு உசிரை விட்டுப்புடுவேனாக்கும் அப்படின்னு வீறாப்புப் பேசினாளே?… ஆனா, இப்ப கதையே மாறிப் பூடுச்சுதே?… பாவம், பவளக்கொடி. பவளக்கொடி அப்பனுக்கும் வீரமணி அப்பனுக்கும் இடையே ஊடாடி உரப்பட்ட அந்த ஜன்மப் பகைமை கெலிச்சதுதான் மிச்சம் போலே. ஆனா, பவளக்கொடியும் வீரமணியும் தங்க அப்பன்மார்களையும் எகிறிக்கிட்டு ஒண்ணடி மண்ணடியா கூடிக்குலாவிப் பேசி மகிழ்ந்ததெல்லாம் இனிமே கதையாகப் போகுதேடி, பொண்டுகளா!…”

சமைந்த பெண்கள் கற்களாகச் சமைந்து போனார்கள்.

“என்னாங்கடா இது? நம்ப சேக்காளி வீரமணி, தன்னோட அம்மான் மகள் பவளக்கொடியைக் கொண்டுக்கிட வேணும்னு ஒரே வைராக்கியத்தோட ஒத்தைக்காலிலே நின்னுக்கிட்டிருந்தானே? இப்ப என்னடான்னா கதையே தடம் மாறிப் பூடுச்சே?…. என்னோட பவளக்கொடி கழுத்திலே என்னைத் தவிர இன்னொரு பய இந்த ஊர் நாட்டிலே மூணு முடிச்சுப் போட்டுப்புட ஏலுமா? அப்படிக்கொத்த ஒரு இடுசாமம் வரும்னு புரிஞ்சா, அப்பவே எம்புட்டு அம்மான் மகளைச் சிறை எடுத்துக்கிட்டுப் பறந்திட மாட்டேனா நான்?’ அப்படின்னு மார்தட்டிப் பேசினானேடா நம்ப வீரமணி?…. ஐயோ, பாவம்! வீரமணிக்கு இனி பைத்தியம்தான் பிடிக்கப்போகுது!… ஊம்!…”

இள வட்டங்களுக்கிடையிலும் குமுறல்!

ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகிவிட்ட பிறகு, இனிமேல் ஊர் பேசி என்ன, உலகம் பேசி என்ன?

விடிந்தால் முகூர்த்தம்!

***

பெரியண்ணத் தேவருக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. இந்த ரகசியத்தை வாசலை அடித்துப் போடப்பட்டிருந்த மணப்பந்தலின் நட்ட நடுவில் எரிந்து கொண்டிருந்த காந்த விளக்கு அம்பலப்படுத்திக் கொண்டேயிருந்தது.

“உங்க மச்சான் வேலுத் தேவர் வீடு தவிர பாக்கியுள்ள சகலத்தனை வீடுகளிலேயும் கண்ணாலப் பத்திரிகையும் ஊர் வெற்றிலைப் பாக்கும் வச்சு விருந்தும் சொல்லிப்புட்டோமுங்க அண்ணாச்சி!”

“சபாசு!” என்று வாய்விட்டுச் சிரித்தார் பெரியண்ணன். “பாவம், வேலுத் தேவனும் அவன் மகன் வீரமணியும் உப்புப் போட்டுச் சாதம் உண்ணிருந்தாக்க, இம்மா நேரம் அவங்க ரெண்டு பேருக்கும் நானும் என் தங்கப் பொண்ணு பவளக்கொடியும் செஞ்சு காட்டின அவமரியாதைக்கு கேணியிலே விழுந்து உசிர்களை மாய்ச்சுக்கிட்டிருக்கோணும்!…. என்னமோ காளிகோயில் முதல் காளாஞ்சி தாவாவிலே ஆந்தா மூத்தவள். வேலுத் தேவனுக்கு அனுசரணையாக இருந்ததாலே, என்னோட வீம்பு பலிக்காமல் போயிடுச்சு. அதுக்காக அவன் ஊருக்கு உசந்த மனுசனாக ஆகிவிட ஏலுமா? என்னோட பணத்துக்கும் பகைக்கும் முன்னாடி அவன் எம்மாத்திரம்? அதனாலேதானே ரங்கூன் தேவர் எங்க வீட்டுச் சம்பந்தத்தை விரும்பி வந்து ஏற்றுக்கிடவும் வாய்ச்சுது ! …. சரி, சரி, பொழுது ஓடிக்கிட்டிருக்குது. வாழைமரம் கட்டுங்க. கூந்தல் தோரணம் கட்டியாகணும். ஆளுக்கொரு சாயாத் தண்ணியை ஊத்திக்கிட்டு வந்து, அலுவலை முடிச்சுப்புட்டுத்தான் தலையைச் சாய்க்க வேணும்!” என்றார் அவர்.

முதுகுப்புறத்திலிருந்து பெருமூச்சுச் சத்தம் கேட்டது.

பதற்றம் மூள திரும்பிப் பார்த்தார் பெரியண்ணத் தேவர், அட்டே , பவளமா? வாம்மா, வா” என்றார். அவரது கரிய பெருவிழிகள் மகளைத் துருவி அளந்தனவோ?

பவளக்கொடி முல்லைப்பூ மலர்வது போலப் புன்னகை காட்டினாள்; “அப்போ, முதல் காளாஞ்சி தவசலிலே உங்களுக்கு அயித்தை புருசன் ஏற்படுத்தின அவமானத்துக்கு ஒரு படி கூடுதலாவே இப்ப நீங்க அவங்களுக்குச் செஞ்சு காட்டிப்புட்டீங்களே? பலே!….. பலே நம்ம வீட்டு விருந்துச் சாப்பாட்டுக்கு அவங்களுக்குப் பொசிப்பு இல்லாமல் பூடுச்சே! பாவம்!” என்று ஏளனம் காட்டி நகைத்தாள்.

“அல்லாத்தையும் எங்கண்ணு கேட்டுக்கிட்டுத்தான் இருந்தியாக்கும்… நீ சொல்றது ஒட்டு மொத்தமான உண்மை அம்மா”

“உங்களுக்கு வார நல்லது கெட்டது எல்லாம் உங்க மகளுக்கும் சேர்த்துதான் என்கிற துப்பு எம்புட்டுக்கன்னி நெஞ்சுக்கு மட்டுப்பட்டடியும் உங்க வழிக்கு வந்திட்டேனே, அப்பா?

“ஆமா, ஆமா!” என்று பெருமை சுடர் தெறிக்கச் சிரித்தார் தேவர், “அது சரி, நெக்லேஸ் புடிச்சிருக்கா?” என்று கேட்டார்.

“பிரமாதமா இருக்குங்க!”

“தென்னம்பாளைச் சங்கிலி?”

“கழுத்துத் தாங்காது போலிருக்குங்க!”

“அப்பிடியா? சம்பந்தி வீட்டு அந்தஸ்துக்கும், நம்ப அந்தஸ்துக்கும் தக்கனைதான் அல்லாத்தையும் வீச்சாவே முடிச்சிருக்கேனாக்கும்!”

அப்போது சம்பந்தி வீட்டிலிருந்து முகூர்த்தப்பட்டு வந்தது.

நாணம் கண் பொத்தி விளையாட “ரொம்ப நேர்த்தியாய் இருக்குன்னு நான் சொன்னதாகச் சொல்லியனுப்புங்க, அப்பா!” என்றாள்.

“அப்படியே சொல்லியனுப்புறேன். நேரமாயிருச்சுது . காலா காலத்திலே நீ சாப்பிட்டுப்புட்டு கெட்டியமாய்ப் படுத்துத் தூங்கம்மா பவளக்கொடி!” என்றார் தந்தை.

“நீங்க எதொண்ணுக்கும் பயப்படாதீங்கப்பா… எனக்குத் தெரியாம என்னை எவனும் சிறை எடுத்துக்கிட்டுப் போயிட முடியாதுங்க அப்பா!” என்று சிரித்தாள் பவளம்!

***

வட்டிற் சோற்றைத் தட்டி விட்டு எழுந்தான் வீரமணி. வேலுத் தேவர் திடுக்கிட்டார்.

அவருடைய தர்மபத்தினி சீரங்கம் துவண்டாள்; “தம்பி, கெட்ட சொப்பனம் கண்டதொப்ப அந்த இடுசாமச் சங்கதியை மறந்துப்பிடுறத்தை விட்டுப்புட்டு, வட்டிச் சோற்றைத் தட்டி விட்டுட்டியேப்பா?” என்றாள்.

கண்ணீர் மல்க அன்னையை ஏறிட்டு நோக்கினான் வீரமணி, “ஆயி, நான் என்னோட அம்மான் மகள் பவளத்தை நினைச்சு இப்போ கிலேசம் காட்டலே. உங்க கூடப் பொறந்த பொறப்பு நம்மளுக்குச் செஞ்சு காட்டியிருக்கிற அவமரியாதையை நினைச்சுத்தான் சங்கடப்படுறேன். ஊர் வளமைப் பிரகாரம் நம்ம வீட்டுக்கு மாத்திரம் ஊர் வெற்றிலை பாக்கும், கண்ணாலப் பத்திரிகையும் வைக்காமல் பண்ணிப்பிட்டாரே எங்க அம்மான்காரர்? இதை நினைச்சால்தான் நெஞ்சு ஆறவே மாட்டேங்குது!” என்றான் இளவட்டம்.

“தம்பி, கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கணும்னு நம்ப ஊர் நாட்டிலே சொல்லிக்கிடுவாங்க. உன் அம்மானை, சிங்கப்பூர்ப் பணம் கண்ணை மறைச்சிடுச்சு. எங்கிட்டே புதுப்பணம் நடமாடாட்டியும், பழைய பணத்துக்கு குறைச்சல் இல்லேயே? நம்ப மச்சு வீட்டு மனாத்தைக் கட்டிக் காப்பாற்றி விட்ட தங்கமப்பா நீ …. உனக்குப் பொண்ணுக்கா பஞ்சம்? இந்தத் தையிலேயே நம்ம வீட்டிலேயும் கொட்டு மேளம் கொட்ட வச்சுப்புடுறேண்டா, மகனே!” வீறுபூண்டு பேசினார் வேலு.
வீரமணி சிரித்தான்.

“தம்பி, சாப்பிட்டுப்புட்டுப் படுத்துக்க. விடிஞ்சதும், நீ சிலட்டூர் ரேக்ளாப் பந்தயத்தைப் பார்க்கிறதுக்குப் பறிஞ்சிடு. ‘நாளைக்குக் காலம்பற நீ இங்கிட்டு இருந்தா உம் மனசு உன்னையும் தாண்டி மீறிக்கிட்டு ஏங்கித் தவிச்சுக்கிட்டிருக்கும்”

வீரமணி தலையை ஆட்டினான்!

***

மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது. படகுபோல அலங்கரிக்கப் பட்ட காரிலே பவனி வந்த மாப்பிள்ளை முத்தையன், புதிய முறுக்கு மீசை இளம்பரிதியில் மின்ன, தோளில் டிரான்ஸிஸ்டருடன் காரிலிருந்து இறங்கி மணலறையில் அமர்ந்தான்.

மாப்பிள்ளையை உட்கார வைத்துவிட்டு உள்ளே விரைந்தார் சிங்கப்பூர்த் தேவர்.

ஆனால்….

ஏன் இப்படிப் பதறுகிறாள் தேவரின் மனைவி வள்ளியம்மை?

“மச்சான், நம்ப பொண்ணைக் காணலீங்க. எல்லா நகை நட்டுகளையும் போட்டுக்கிட்டிருந்த பொண்ணுகிட்டே கங்கணம் கட்டிக்கிடுறதுக்குப் புதுப் பட்டைக் கட்டிக்கிடச் சொல்லிட்டு உள்ளாற் பலகாரம் சுட்டுக்கிட்டு இருந்தேன். மாப்பிள்ளைக்காகத் திரும்பி வந்து பார்த்தாக்க, நகை நட்டுங்க அல்லாம் ஆல வீட்டிலே அப்படியே அப்படியே இருக்குதுங்க! நம்ப மகளைக் காணலீங்க!”

தாய் துடிக்க, தந்தை துடித்தார்.

‘காளி ஆத்தா, என்ன சோதனை இது?…. நான் எப்பிடி சம்பந்திக்காரங்க மூஞ்சியிலே முழிப்பேன்?’ தவித்துத் தண்ணீராக உருகின பெரியண்ணத் தேவர், உறவுக்காரர்களை அழைத்துப் பவளக்கொடியைத் தேடும்படி காதோடு காதாக உத்தரவிட்டார் அவர் மாப்பிள்ளையோ டிரான்ஸிஸ்டரில் பாரதத்திடம் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த பாகிஸ்தானின் நிலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

தேடப் போனவர்கள் வெறுங்கையாகத் திரும்பினர்.

அப்போது ஒருவன் ஓடிவந்து, “உங்கா அக்கா மகன் வீரமணியையும் வீட்டிலே காணலீங்க!” என்றான். “மெய்யாலுமா” என்று கேட்டுப் பதறினார் தேவர். ஒரு வேளை, வீரமணப் பயல் எம் மகளைக் கடத்திக்கிட்டுப் பறிஞ்சிருப்பானோ?’ என்ற ஐயப்பாட்டில் துடித்த வண்ணம் கொல்லைப்புறமாக ஓடினார்; “அக்கா, எங்கே வீரமணி?” என்று பதட்டம் மூள வினவினார்.

“ஏம்ப்பா, விருந்து சாப்பிடவா?” என்று கேட்டாள்.

“எம் மகளைக் காணலே; அதுக்காகத்தான் விசாரிக்கிறேன்!”

“உம் மகளை எம்மவனா மடியிலே பதுக்கி வச்சிருக்கான்? எம்மவன் ரேக்ளா பந்தயம் பார்க்கப் போயிட்டானாக்கும்!”

மணப்பந்தல் அமளி துமளிப்பட்டது.

“எங்கேங்கறேன் கண்ணாலப் பொண்ணு?” என்று அதிகாரத்தோடு கேட்டார் ரங்கூன் தேவர், தொடர்ந்து, “முத்தையா!” என்று வீரிட்டார்.

“பொண்ணைக் காணலையாம்டா! எங்கிட்டு ஓடிப்பூடுச்சோ?…. இல்லே, அந்தப் பொண்ணோட முறை மச்சான்காரன் சிறை எடுத்துக்கிட்டுப் போயிட்டானோ தெரியலே…! ம்…. ஏந்திருடா… இந்தப் பெரியண்ணன் பண்ணின சின்னத்தனத்துக்கு இவனைப் பின்னாலே ஒரு கை பார்த்துக்கிடுவோம்!”

மாப்பிள்ளை எழுந்து விட்டான். பெரியண்ணத் தேவர் விம்மிக் கொண்டு நின்றார்.

வாசலில் வந்து நின்றது ஓர் அழகான ரேக்ளா . அதில் பவளக்கொடியும் வீரமணியும்.

‘மூத்தையா அண்ணாச்சி…. ஒரு நிமிஷம் நில்லுங்க. நான் பிறந்திச்சு. அப்பவே , எனக்குத்தான் பவளக்கொடி பவளக்கொடிக்குத்தான் நான் அப்படின்னு எங்க இரண்டு தரப்புப் பெற்றோர்களும் முடிவு செஞ்சிட்டாங்க. அந்த உறவு முறையைச் சத்தியவாக்காக நம்பி நாங்க ரெண்டு பேரும் அஞ்சு வயசிலேயே காளி ஆத்தா சந்நிதியிலே ஒருத்தருக்கொருத்தர் கையடிச்சுச் சத்தியம் பண்ணிக்கிட்டோம். ஆனா ஊடாலே முளைச்ச முதல் காளாஞ்சித் தகராறைப் பெரிசுப்படுத்தி எங்க அம்மான்காரர் பவளத்தை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கத் துணிஞ்சிட்டார். ஆனதாலேதானுங்க, நான் என்னோட முறைப் பொண்ணு பவளத்தை என் அம்மான் மகள் பவளத்தைச் சிறை எடுத்துக்கிட்டுப் போனேன், அதோட பரிபூரண சம்மதத்தின் பேரிலே… நான் ஆணாகப் பொறந்தவன்… என்னைப் பற்றி இந்த ஊர் நாட்டிலே எப்படியும் பேசிக்கிடலாம்…. பரவாயில்லே! ஆனா.. எங்க பவளக்கொடி பொண்ணாகப் பொறந்ததாச்சே? அதைப்பத்தி நாளைக்கு ஊர் உலகம் ஏசுமே? அதனாலே நாங்க ரெண்டு பேரும் புருசன் பெண்சாதியாக ஆகிறதுக்கு முன்னாடி ஓடி வந்து விட்டோம்! இது ஆத்தா பேரிலே ஆணை வச்சுப் பேசற தாக்கல்! இதை நீங்க நம்புங்க. பவளத்தை ஏற்றுக்கிடுங்க. வாங்க மணவறைக்கு….”

“வீரமணி’ என்று விளத்தான் முத்தையன், அவன் கண்களும் பனித்தன; “தம்பி, நான் இதயம் இல்லாத பாவி இல்லே. உன்னோட பவளம் உன்னோட பவளமாகவே எப்போதும் இருக்கட்டும்!…. குறித்த முகூர்த்தத்திலே நீ உன் பவளத்துக்குத் திருப்பூட்டு…. என்னைப் பார்க்கிலும் நீயேதான் சகலத்தனை வகையிலவும் உன்பவளத்துக்குப் பொருத்தமானவன்… ம்… இன்னொரு சங்கதியையும் கேட்டுக்க. நான் நாளைக்கு வாரு ‘ க்கு கிளம்பிடறேன். அழைப்பு வந்திருச்சி. இதோ, இந்த டிரான்ஸிஸ்டரிலே.”

முத்தையன் கம்பீரமாக மணப் பந்தலைவிட்டு நடக்கலானான்.

பவளம் உள்ளே போனாள்!

***

“முகூர்த்த வேளை முடியப் போவுது. சீக்கிரம் மணவறையிலே வந்து குந்திக்கிடுங்க, மாப்பிள்ளை!” என்று பகை கடந்த பாந்தவ்யத்தோடு கெஞ்சினார் பெரியண்ணத் தேவர்.

“பவளம்…” “இதோ வந்துடுவா – பட்டு உடுத்துக்கிட்டு…”

“வீரமணி!.. தம்பி!” என்று அலறிக்கொண்டு வந்தான் முத்தையன்: “தம்பி, உன் பவளம் விருந்து அடுப்பிலேருந்து கொள்ளிக் கட்டையை லாவி எடுத்து அதைத் தன் சேலைத் தலைப்பிலே வச்சுக்கிடுச்சு !… ஓடியாயேன்!”

எல்லாரும் உயிர் துடிக்க, உள்ளம் துடிக்க, திட்டி வாசலுக்கு ஓடினர்.

அங்கே …..

தீச்சுடர்கள் அவள் மேனியெங்கும் தொட்டுத் தோடர்ந்து கொண்டிருந்தன.

“பவளம்! பவளம்!” என்று ஓலமிட்ட வீரமணி, தண்ணீ ர் வாளியுடன் அவளை நெருங்கினான்.

“மச்சான்! அங்கிட்டே நில்லுங்க! ஆமா, செப்பிட்டேன்! என்று ஆணையிட்டாள் பவளக்கொடி.

“பவளம்! என்ன விளையாட்டு?”

விழி வெள்ளம் கரை புரள, பவளம் இதழ் திறந்தாள்; “மச்சான்! இது விளையாட்டு இல்லீங்க…. இது அக்கினிப் பிரவேசமாக்கும்…. சீதாப்பிராட்டி தீக்குளி நடத்தினாங்களே, அது ராமர் சாமிக்கு மட்டுந்தானா? ஊர் உலகத்துக்காகவும் தானுங்களே?…. அந்த நாள் தொட்டு உங்களுக்கிண்ணே காத்துத் தவம் கிடந்தவள் நான். ஆனா, இடை, நடுவிலே கதை தடம் மாறிப் பூடுச்சு… ஆனாலும், விதிப்படி அந்தக் கதை முடிய வேளை பார்த்துக்கிட்டும் இருக்குது. அதுக்குள்ளாற , நான் என்னோட பரிசுத்தத்தை உங்களுக்காக இல்லாட்டியும், ஊர் உலகத்துக்கு மெய்ப்பிச்சுக் காட்ட வேணுமில்லே… என்னைப் பெரிய மனசு பண்ணித் தடுக்காதீங்க… எப்பவுமே நான் உங்க சொத்தேதான். அட்டியில்லேதான். ஆனாலும், உங்களால் சிறையெடுக்கப்பட்ட நான், இப்போதிரும்பி வந்திருக்கேன். உங்களுக்கேதான் வாழ்க்கைப் படவும் போறேன். ஆனாலும்….. என்னை ஊர் உலகம் தூய்மையானவள் அப்படின்னு ஒப்புக்கிட வேண்டாமா?”

பவளக்கொடி தீயாகச் சிரித்தாள்.

“பவளம்! நீ தங்கம்! சொக்கப் பச்சை ஆத்தா நீ! உத்தரவு தா!… நெருப்பை அணைச்சுப்புடுகிறோம் தாயே!..”

அழுகுரல்கள் விண்ணைச் சாடின்.

“காளி ஆத்தா!… என் பவளத்தைக் காப்பாற்ற மாட்டீயா, தாயே மூத்தவளே?… சரி, நானும் என் பவளத்துக்குத் துணை போறேன்!….”

வீரமணி வெறிகொண்ட நிலையில், பவளத்தைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீக்கங்குளைச் சரண் அடைந்த போது….

‘பட பட’ வென்று நீதியின் தீர்ப்புப் போலே முழங்கத் தலைப்பட்டது வானம் ! ஆமாம், அதோ மழை பொழிகிறது!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *