புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18 வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு வரும். நடேசமூர்த்தி சைக்கிளை ஓசி வாங்கி, அதில் பல்டி முதல் கைவிட்டு ஓட்டுவது வரை அநேக வித்தைகள் பழகியது… நடேசமூர்த்தியே பயந்துவிட்டான். சைக்கிள் உயரம்கூட இல்லாமல், ஆளே சராசரிக்குக் கொஞ்சம் கட்டைகுட்டை யாக உருண்ட தேகம், எப்படி சைக்கிளில் வித்தைகள் பழகினான் தைரியமாக!
படிப்புதான் ஏறவில்லை. மனசுக்குள் எதுவும் தங்கவில்லை. எத்தனை உயர மரத்திலும் விறுவிறுவென்று மேலேறி தேன் எடுத்தான். தேங்காய் பறிக்க, கிணற்றுக்குள் விழுந்த வாளியை இறங்கி எடுக்க என்று ஊர் மொத்தத்துக்கும் உபகாரம். தன் வீட்டுக்குத்தான் சல்லிக்குப் பிரயோசனமில்லை. அப்பா அடி பிரியர். ஒன்று அவர் அடிப்பார். இல்லை… அடி வாங்கிக் கொண்டு முகம் வீங்க வீடு திரும்புவார்.
பிள்ளையாவது உருப்படுவான் என நினைத்துக் கனவு கண்ட அம்மைக்கு முகத்தில் கரி பூசினான் சிவசண்முகம். அப்பாவுக்கு பயந்து பஜனை மடத்தில், ஆற்றங்கரை மண்டபத்தில், ஆல நிழலில் படுத்து உறங்குதல் வாடிக்கை என்றாயிற்று. அம்மா தேடி வருவாள், அழுதபடி கூட்டிப் போவாள். அம்மா சிரித்துப் பார்த்த ஞாபகம் இல்லை. நான் மாட்டாவிட்டால் ஒருவேளை அப்பா, அவளை அடிப்பாராக இருக்கும். பரீட்சையில் தோற்று வீடு திரும்ப மனசில்லாமல் வெளியேறிய அந்தக் கணம், இனி அம்மா மாட்டிக்கொள்வாள். வேறு வழியில்லை என்று வருத்தமாக இருந்தது.
பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் என்ன, காலம் கற்றுத் தந்தது பாடங்கள். எதுவும் சாப்பிடக் கிடைக்காமல் தொடர்ச்சியாகத் திகைத்த நாட்கள். ‘நான் பிச்சைக்காரன் அல்ல… அல்ல’ என தனக்குள் கதறிய நாட்கள். கோயில் திருவிழா என்று கேள்விப்பட்டு இலவசச் சாப்பாடு சுகம் கண்டு அங்கேயே அந்த வாரம் முழுதும் வேடிக்கையும் கூத்துமாகக் கழித்த நாட்கள். விதவிதமான வண்ணங்களில் சர்பத், அதன் பேரே கலர்தான். சிலம்பாட்டம், குத்துச்சண்டை, கோழிமுட்டு-ஆடுமுட்டு என முரட்டுத்தனமான போட்டிகள்.
‘கிங் சர்க்கஸ்.’ வசீகரமான எம்.ஜி.ஆர். பாட்டுடன் வரவேற்பு. டிக்கெட் கவுன்ட்டரை நோக்கிச் சிறுவர் பட்டாள உற்சாகம். நெடும்பட்டைகளாக அடர்சாயத்தில் கூடாரம். உச்சியைக் குடுமிக் கூம்பாகக் கட்டி, காற்றுக்கு அது விம்மியடங்குவதைப் பார்க்க மனசே பொங்கியது.
காட்சிகள் துவங்க, வெளியே பொழுது போகாமல் காத்திருந்தான். உள்ளே கோமாளியின் கூத்துக்குப் பையன்களின் ஊளைச்சிரிப்பு. வாசலில் டிக்கெட் கிழிக்கிறவன் அவனைப் பார்த்தான். ”சர்க்கஸ் பார்க்கணுமா?” என்றான் புன்னகையுடன். அனுமதித்து விடுவான் போலிருந்தது.
”இல்ல… சேரணும்!” என்றான்.
மறுநாள் காலையில் ஏழு மணிக்கே சர்க்கஸ் பயிற்சிகள் துவங்கிவிட்டன. வெளி மணல்வெளியில் யானையைப் பெரும் குழாய்த் தண்ணீரைப் பீய்ச்சி ஒருவன் குளிப்பாட்ட… சுகமாகக் காட்டிக்கொண்டிருந்தது. நீளக் கழுத்தசைத்து முகத்தை நீட்டியபடி அசைபோடும் ஒட்டகம். அது வேறு உலகமாக இருந்தது. வித்தை மாஸ்டர் சிவாஜி. அவரே கோமாளி வேஷம் போடுவார். அவனிடம் சைக்கிளில் பல்டி அடித்துக் காட்டினார். சைக்கிளில் வந்த வேகத்தில் ஒரு தவ்வு தவ்வி பல்டி அடித்து தரையில் ஊன்றித் தடுமாறாமல் நின்றார். அசந்துவிட்டான்.
”செய்யறியா?” ‘தெரியாது’ என வெட்கத்துடன் தலையாட்டினான். அவனை செய்யச் சொல்லி தான் பிடித்துக்கொண்டு ரெண்டு முறை இறக்கிவிட்டார். மூணாம் முறை விட்டுவிட்டார். தடுமாறி விழுந்தான். ”வலிக்குதா?” – ‘இல்லை’ என்று தலையாட்டினான். அடுத்த முறை சரியாகச் செய்ய முடிந்தது. பயம் போய்விட்டது.
அப்போது வயது 11. இப்போது 18 வருடங்கள் கடந்துஇருந்தன. எத்தனை வித்தைகள் கற்றுத் தேர்ந்துவிட்டான். சிவாஜி மாஸ்டரே ஓய்வு எடுத்துக்கொண்டு அவனை முன்னுக்குத் தள்ளிவிட்டார். இத்தனை சிரத்தையாகக் கற்றுக்கொள்ள அவர் காலத்தில் ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவருக்கு.
டவுசரும் இல்லாமல் பேன்ட்டும் இல்லாமல் முக்கால் அளவில் ஒரு சராய். அதன் விநோதப் பட்டித் தொங்கல்கள். மூக்கில் ஒட்டவைத்த எலுமிச்சை அளவு பிளாஸ்டிக். கண்மை, கன்ன ரவுஜ் என்று பார்க்கவே பிள்ளைகள் ஹ¨வென்று கொந்தளித்தார்கள்.
ஆள் இல்லையென்றால் அரிதாரம் அழித்து வளையத்துக்குள் முதலில் நாய் பாய, பின்னாலேயே அவனும் பாய்வான். யானைகளை, சிங்கங்களை வைத்து ரிங் மாஸ்டரோடு ஊடே ஊடே போய் பயந்தாற் போல வேடிக்கைகள் செய்வான். நகைச்சுவைப் பேச்சு காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டே இருக்கும்.
ஹிந்தி, மாராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எத்தனையோ பாஷைகள் தெரிந்துகொள்ள நேர்ந்தது. பள்ளிக்கூடத்தைவிட அதிகம் படிக்கத் தெரிந்துகொள்ள நேர்ந்தது. சிவாஜி மாஸ்டருக்கு மொத்தம் 18 பாஷைகள் தெரியும் என நினைக்க ஆச்சர்யம். அந்தந்த மாநிலத்தில் அந்த பாஷை பேச வேண்டிஇருந்தது. பாஷை தெரியாத மாநிலம் என்றால் உள்ளூர் ஆள் ஒருத்தனிடம் மைக் கொடுத்துப் பேசச் சொல்லிவிடுவார்கள். காட்சிகள் மௌனமாக நடக்கும்… அந்த பாஷையின் முக்கிய வார்த்தைகள் – ‘நன்றி மீண்டும் வருக’ போலப் பேசி கைத்தட்டல் பெறுவார்கள்.
வாழ்க்கைச் சக்கரம் பெரும் சுற்றாகக் கீழிறங்கிய கணம் அது. சர்க்கஸ் வண்டி பத்து மைல் நெருக்கத்தில் வரும்போதே தன் ஊர்க் காற்றின் பரவசம் தாள முடியவில்லை. அடிவயிற்றுக் குளிருடன் அதை ரசித்தான். சிரிப்பில் கண் பனித்துவிட்டது. 18 வருடங்களில் ஊர் எத்தனைக்கு மாறியிருக்கும். தெரியவில்லை.
அம்மாவைப் பார்க்கிற வேகத்தில் நெஞ்சு படபடத்தது. எப்பவாவது கையில் காசு தங்கினால் அம்மா பெயருக்குப் பணம் அனுப்பி வைப்பான். சர்க்கஸ் வேலை என்று மனசு நிலைப்பட்டதும் உடனே அம்மாவுக்கு (அப்பாவுக்கு அல்ல) ஒரு வரி எழுத துடிப்பாக இருந்தது. என்றாலும், கட்டுப்படுத்திக்கொண்டான். ‘கொஞ்ச நாள் போகட்டும், போகட்டும்’ என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான்.
முதலாளி அனுமதி தந்தால் ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வரலாம். ஆனால், சர்க்கஸ் கம்பெனியில் விடுமுறை என்று கிடையாது. ஓய்வு கிடையாது. எல்லாரும் கடுமையாக உழைத்தார்கள். மிருகங்கள் உட்பட. சரவணனின் கல்யாணத்தன்றுகூட விடுமுறை இல்லை. சைக்கிள் வித்தை செய்யும் ரம்யாவையே கல்யாணம் செய்து கொண்டான். முதலாளிமுன்னிலை யில் மாலை மாற்றிக்கொண்ட எளிய கல்யாணம். பின்னிரவுக் காட்சி முடிந்த பின்தான் சரவணன் அரிதாரம் அழித்து முதலிரவு என்று கித்தான் அறைக்குள்ஒதுங்கி னான். விடுமுறை என்றால் வித்தை செய்யும்போது யாருக்காவது அடி பட்டு இரத்தம் தெறிக்க ஆஸ்பத்திரி போனால்தான்.
அம்மா எப்படி இருப்பாள். தெரியவில்லை. அந்தப் பக்கங்களில் வந்தாலும் இதுவரை ஊருக்கு இவ்வளவு கிட்டத்தில் டேரா போட்டது இல்லை. காலையில் ஒருநாள் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு ஒருநடை போய்ப் பார்த்துவிடத் துடிப்பாக இருந்தது. சிவாஜி மாஸ்டர் சிரிப்புடன் தலையைத் தடவிக் கொடுக்கிறார். ”நான் எங்க ஊருக்குத் திரும்பிப் போனப்ப அம்மா செத்துப்போயிருந்தாங்க. ஆனா, நீ அதிர்ஷ்டக்காரன் சம்முவம்!” என்றார்.
ஊர் எல்லையில் அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் டேரா போட்டிருந்தார்கள். ரெண்டு கிராமத்தின் நடு எல்லைதான் கூட்டம் சேர்க்க வசதி. வித்தை செய்கிற மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனான். ‘டபடப’ என்று அதன் சத்தமே வெடிச் சத்தமாக, வித்தியாசமாக இருந்தது.
தெரு மாறவே இல்லை. வாசலில் ஐயா உட்கார்ந்திருந்தார். உடல் கட்டுத் தளர்ந்து மிகுந்த அலுப்பாக இருந்தார். ‘முரட்டுத்தனம் விலகிவிட்டால் செத்துத் தொலையலாம், இனி என்னத்துக்கு இன்னமும் வாழ்க்கை இழுத்துக்கொண்டு கிடக்கிறது’ என்கிறாற்போல.
கண் பார்வை அத்தனைக்கு இல்லை அவருக்கு. ”சிவு?” என்று பரபரப்புடன் வந்தாள் அம்மா. ‘
‘எய்யா! யாரு வந்திருக்காக பாரும்…”
”ம்” என்றார் ஐயா. அவரால்தான் விரட்டப்பட்டான் அவன் என்கிற குற்ற உணர்வின் நெருடல். அதெல்லாம் பழைய கதை, என்றிருந்தது அவனுக்கு.
”அம்மா பக்கத்தூர்ல… கிங் சர்க்கஸ்… எங்கதுதாம்மா. அதுலதான் நான் இருக்கேன்…” என்கிறான் அவள் கையைப் பிடித்துக்கொண்டே. அவன் தோளில் சாய்ந்தபடி அழும் அம்மாவைப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருக்கிறது.
”ஊர்ல எல்லாப் பயலுவளும் என் நடிப்பை அப்பிடிச் சொல்றாங்க. எங்க சிவாஜி மாஸ்டருக்குப் பிறகு நான்தான் மெயின். எல்லா வித்தையும் செய்வேன்…”
”ரொம்ப சந்தோசம்டா” என்கிறாள் அம்மா. அவளுக்குப் பேசவே வாயில்லை. பையனைப் பார்த்ததே பெரிய விஷயமாக இருந்தது.
”நாளைக்கு வந்து பாரும்மா. எய்யா! நீரும் வாரும்” என்றான்.
அப்பா ஏனோ வரவில்லை. அம்மா முன் வித்தைகள் செய்வது அதுவே முதல் முறை என்பதால் சந்தோஷமாக இருந்தது. உள்ளே கூட்டிப்போய் முதலாளி முதல் சிவாஜி மாஸ்டர் வரை எல்லாரையும் அறிமுகம் செய்தான்.
உள்ளேயே தனியே அவளை உட்காரவைத்தார்கள். பபூன் வேஷத்தில் அவனைப் பார்த்த அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.
உற்சாகமாக ஊஞ்சலில் தாவிஏறும்போது சர்ரக்கென்று விழுந்து விடுகிறாற்போல பாசாங்கு செய்து விநாடி நேரத்தில் சுதாரித்து ஏறினான்.
கூட்டம் ஒருவிநாடி திகைத்து பின் வியந்து கைதட்டியது.
கைதட்டலுக்கு சந்தோஷப்படுவாள் அம்மா என நினைத்தான்.
அடுத்த காட்சி. சிவாஜி மாஸ்டர் அவன் தலையில் பூசணிக்காயைவைத்து சுடுவது போல் பாவ்லா செய்தார். பயந்து அவன், ”விட்ருங்க மாஸ்டர், விட்ருங்க மாஸ்டர்” எனக் கதறி அழ வேண்டும். படார்! அவன் நெஞ்சுக் குள்ளிருந்து சிவப்பு மையைப் பீய்ச்சி மயங்கி விழுந்தான்.
கூட்டம் ஆரவார சிரிப்புடன் கைதட்டி ரசித்தது.
”ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சி!” என்று அம்மா சர்க்கசுக்குள் ஓடிவந்தாள். ஏனோ இவனுக்குக் கொஞ்சம் அழ வேண்டும் போல் இருந்தது!
– ஆகஸ்ட், 2009