பட்டாசுக் கட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 1,528 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்பா, பட்டாசு என்று வீரன் மகன் அழுதால், வீரன் எங்கிருந்து பட்டாசு வாங்கிவர முடியும்? அக்கிரகாரத்திலும் முதலியார் தெருவிலும் குழந்தைகள் தீபாவளிக்கு மூன்று நாள் முன்னிருந்தே பட்டாசு சுட ஆரம்பித்தார்கள். வீரன் மகன். தெரு வில் நாலு மார் தூரம் எட்டி நின்று பார்த்துக்கொண் டிருந்தான். வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கப் போனான். ‘போ..’ என்று அதட்டித் துரத்தினார்கள்.

மறுநாள் ஊரிலுள்ள பல வீடுகளிலும் பட் பட் . என்று பட்டாசு சத்தம் கிளம்பிற்று. வீரன் மகனுக்கு அடங்காத ஆசை . ஏன் எல்லார் வீட்டிலும் பட்டாசு . தன் அப்பன் வீட்டில் மட்டும் கிடையாது. என்று அவன் மனதில் தோன்றிய கேள்விக்குப் பதில் அவனுக்குப் புலப்படவில்லை. அப்பனைக் கேட்கவும் அவனுக்குப் பயம்.

சேரிக்குத் திரும்பிப் போகவே மனம் வரவில்லை. பசியானாலும் வெகுநேரம் வரை நின்று கொண்டு ஊர்க்குழந்தைகள் பட்டாசு சுடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“எட்டி நில் என்றார் தெருவில் போகிற ஓர் ஐயர் ..”

வீரன் மகன் நடுங்கி ஓடிப்போய் ஒரு சந்தில் சுவரை ஒட்டிக்கொண்டு பதுங்கினான்.

ஏன் இப்படிப் பதுங்க வேண்டும் என்கிற கேள்வி வீரன் மகனுக்குத் தோன்றிற்றோ இல்லையோ, எப்படி நம்மால் சொல்ல முடியும்? குழந்தைகள் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாருக்குத் தெரியும்? பக்கத் தில் ஒரு நாய்க்குட்டி. அதுதான் தன் இனம் என்று அதை மெதுவாகத் தடவிக் கொடுத்துக்கொண்டு, ஐயர் போகும் வரையில் அங்கே இருந்துவிட்டுப் பிறகு வெளியே வந்தான்.

வெகுநேரம் கழித்துச் சேரியிலுள்ள தன் குடி சைக்குச் சென்றான்.

“அப்பா, எனக்குப் பட்டாசு வாங்கித் தரமாட்டாயா?” என்று வீரனைக் கேட்டான். பளீர் என்று ஓர் அடி கன்னத்தில் விழுந்தது. பையன் கிறுகிறு வென்று சுருண்டு கீழே விழுந்தான்.

“குடித்துப் போட்டுக் குழந்தையை ஏன் அடிக்கி றாய்?” என்று தாய் சீறிக்கொண்டு வந்தாள். ‘கள் ளுக்குப் போட்ட காசைக் குழந்தைக்கு ஒரு கட்டுப் பட்டாசுதான் வாங்கித் தரக்கூடாதா? கேட்டதே பாவமா? ஏன் அடித்துக் கொல்லுகிறாய்? என்று குழந்தையிடம் ஓடிப்போய், தூக்கிப் பிடித்தாள்.

“அம்மா, பட்டாசு” என்றான் மறுபடியும்.

“சும்மா இரு. பறைப்பையனுக்குப் பட்டாசு என்னத்திற்கு?” என்று தாய் சொல்லிவிட்டு அடுப் பண்டை போய்விட்டாள்.

“மறுபடி கேட்டாயானால் கொன்று போட்டுவிடுவேன். தெரியுமா?” என்று அதட்டினான் வீரன்.

துரைசாமி ஐயங்கார் வீட்டில் பெரிய தடபுடல். மாப்பிள்ளை பட்டணத்திலிருந்து பெட்டியும் படுக்கை யுமாக வந்து இறங்கினார். இவர் துரைசாமி ஐயங்கா ருடைய மூன்றாவது பெண்ணின் கணவர். பேர் செல்ல மய்யங்கார் . பி. ஏ. சென்ற சித்திரை மாதம் விவாகம் வெகு விமரிசையாய் நடந்தது ; ரூபாய் நாலாயிரம் செலவு. இதுதான் முதல் தீபாவளி. மைத்துனன்மார் இரண்டு பையன்களுக்குமாக வாங்கிக்கொண்டு வந் திருந்த பட்டாசுக் கட்டு இருப்பதையும். மத்தாப்புத் தினுசுகளையும் அந்தக் குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு, மாமியாரைப் பார்க்கப் போனார். கிட்டுவும். சீனுவும் – மைத்துனர். முறையே ஏழுவயது. நான்கு வயது – பட்டாசுக்கட்டுகளைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். மஞ்சள் கட்டாகவே தனக்கு வேண் டும் என்று சீனு அழுதான். கிட்டு கொடுக்கமாட்டேன் என்று சண்டை போட்டான்.

“பாவம் குழந்தைக்கு மஞ்சள் கட்டுக் கொட்டா..” என்றாள் கமலம். இவள் தான் கலியாணப் பெண்.

பிறகு குழந்தைகளுக்குள் சமாதானம் செய்து வைத்து. “இப்போது சுடக்கூடாது. நாளைக்குத் தான் தீபாவளி. எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்துவிட்டுச் சுடலாம் ” என்று சொல்லி, கமலம் தாயாரண்டை போய்விட்டாள்.

இப்பவே சுடுவேன்’ என்றான் கிட்டு. நான் சுடமாட்டேன் ” என்றான் சீனு. “நான் ஒரு கட்டுச் சுட்டுவிட்டு மீதியை நாளைக்கு வைத்துக்கொள்வேன் என்றான் கிட்டு.

இருவரும் பட்டாசுக் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு தாயாரிடம் போனார்கள்.

“அம்மா பத்திரமாக வைத்திரு என்று சீனு தன் பங்குக் கட்டுகளைத் தாயார் மடியில் போட் டான். மாப்பிள்ளை வந்திருக்கும் ஆனந்த சாகரத் தில் மூழ்கியிருந்த சீதம்மாள் குழந்தையைக் கட்டி முத்தமிட்டு. சீனு, நல்ல பையன் ‘ என்று சொல்லி எழுந்து வெள்ளிச் சாமான் வைத்திருந்த அல மாரியில் பட்டாசுக் கட்டுகளை வைத்துவிட்டு மாப் பிள்ளையை விசாரிக்கப் போனாள்.

***

தீபாவளி நாள் வந்தது. “ஐயோ! எல்லாம் தூக்கிக்கொண்டு போய்விட்டானே! ஆயிரம் ரூபாய் வெள்ளிச் சாமானும் போச்சே” என்று கதறினாள் சீதம்மாள்.

‘கைப்பெட்டியைக் காணவில்லையே, பாங்கியில் வாங்கி வந்த நோட்டெல்லாம் அதிலே வைத்திருந் தேனே’ என்று கத்தினார் துரைசாமி ஐயங்கார்.

“போலீசுக்குப் போய்ச் சொல்லவேண்டும் என்றார் மாப்பிள்ளை செல்லமய்யங்கார்.

“எத்தனை வைத்திருந்தீர்” என்று கேட்டார் சீதம்மாள் தம்பி ஆராவமுதையங்கார்.

“அம்மா. பட்டாசு எல்லாம் எங்கே?” என்றான் சீனு.

“சும்மா இரு. பட்டாசு எல்லாம் திருடன் கொண்டு போய் விட்டான்’ என்று சீனு காதில் கிட்டு மெள்ளச் சொன்னான்.

“கிட்டு. திருடன் என்றால் யார்?” என்றான் சீனு.

கரேலென்றிருப்பான். வீட்டுக்கு உள்ளே மெள்ள வந்து இராத்திரி நாம் தூங்கும்போது சாமான் எல்லாம் கொண்டு போய் விடுவான்” என் றான் கிட்டு.

“நேற்று வந்தானா?” என்றான் சீனு. கிட்டு தலை அசைத்தான்.

“எல்லாப் பட்டாசும் கொண்டு போய் விட்டானா?” என்று சொல்லிச் சீனு அழ ஆரம்பித் தான்.

“அழாதே! குழந்தாய்! அந்தத் திருடனைப் பிடித்து உதைக்கலாம்” என்று சீதம்மாள் குழந் தையைத் தடவிக் கொடுத்தாள்.

“குழந்தையின் பட்டாசைக்கூடக் கொண்டு போய் விட்டான் பார்த்தாயா. பாவித் திருடன் என்றாள் கமலம்.

கைப்பெட்டியை வீடெல்லாம் தேடிப் பார்த்து விட்டுக் கிடைக்காமல் துரைசாமி ஐயங்கார் தலை மேல் கையை வைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டார்.

“போனது போனதுதான். இனிக் கிடைக்கப் போகிறதா? வாருங்கள் ஸ்நானம் செய்ய ” என்று சீதம்மாள் மாப்பிள்ளையை அழைத்தாள்.

“இல்லை. சாவடியூருக்கு உடனே போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி விட வேண்டும். வாருங்கள். மாமா என்று செல்லமய்யங்காரும் மாமா கிருஷ்ணய்யங்காரும் வெளியே போனார்கள்.

ஒன்று கூடவிடாமல் எல்லா வெள்ளிச் சாமான் களையும் எடுத்துப் போய்விட்டானே. நான் எப்படி மாப்பிள்ளைக்கு விருந்து பண்ணப்போகிறேன்? என்று மறுபடியும் அலறினாள் சீதம்மாள்.

வீரன் மகன் பட்டாசு சுட்டுக் கொண்டிருந் தான். சேரியில் மற்றக் குழந்தைகள் எல்லாம் சுற்றிக்கொண்டு கை தட்டிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏது பட்டாசு?

எப்படியோ தெரியவில்லை. தீபாவளி யன்று காலை பட்டாசுக் கட்டுகள் நான்கு கொண்டுவந்து வீரன் தன் மகனிடம். சுடு என்று கொடுத்தான்.

பையன் ஒரே குதியாய்க் குதித்து, “அம்மா! நெருப்புக் கொடு” என்று ஓடினான்.

தீபாவளிக்கு அடுத்த சனிக்கிழமை யாரோ இருவர் வந்து வீரனைக் கூப்பிட்டுக்கொண்டு போனார் கள். போனவன் பிறகு திரும்பி வரவில்லை. பெண் சாதியும் மகனும் அலறிக்கொண்டு ஊருக்குள் வாத் தியாரண்டை ஓடினார்கள். “விண்ணப்பம் போட்டுப் பார்க்கிறீர்களா?” என்று அழுதாள்.

“அவர்கள் போலீஸார். உன் புருஷன் மேல் கன்னக் களவு கேசு” என்றார் வாத்தியார் மகா லிங்கம் பிள்ளை.

“ஐயோ கெட்டேனே” என்று தலைமேல் அடித்துக்கொண்டாள்.

கள்ளுக்கடையில் கிடைத்த செய்தியின் மேல் போலீஸார் உடுப்பில்லாமல் சேரிக்கு வந்து குப் பனை இட்டுக்கொண்டு போய் . பிறகு திரும்பி வந்து சேரியில் விசாரித்தார்கள். குப்பையில் கிடந்த பட் டாசுத் துண்டுகளைப் பார்த்து. “ஏது பறைச்சேரியில் பட்டாசு?”

பிறகு. வீரனைச் சாவடியூருக்குக் கொண்டுபோய் ஸ்டேஷனில் விசாரித்தார்கள். விசாரிப்பது என்றால் தான் தெரியுமே!

“அடிக்காதீர்கள், சாமி. சொல்லி விடுகிறேன்” என்றான் வீரன்.

மறுநாள் தலையூரில் வேங்கடன், சென்னராயன் என்ற இரு குறவர்களையும் பிடித்துப் போனார்கள். அடுத்த நாள் பக்கத்து ஊரில் குப்பன் ஆசாரி வீட்டில் சோதனை போட்டார்கள். சில வெள்ளி சாமான்கள் கிடைத்தன. பிறகு குப்பன் ஆசாரியை விசாரித்தார் கள். இரண்டு நாள் கழித்துக் குப்பன் ஆசாரி மாமனார் வீட்டைச் சோதனைப் போட்டதில் நோட்டுகளாக ஐந் நூறு ரூபாயும் சில வெள்ளிச் சாமான்களும் அகப்பட்டன.

வீரன் மகன் சாட்சிக் கூண்டில் நிற்கிறான்.

“உன் அப்பன் உனக்குப் பட்டாசு கொடுத்தானா?”

“ஆமாங்கோ – இல்லைங்கோ – சாமி” என்றான் சிறுவன்.

“தைரியமாய்ச் சொல்! பயப்படாதே” என்று இன்ஸ்பெக்டர் அதட்டிக் கேட்டார்.

“நான் பட்டாசு அப்பனைக் கேட்டேன். ஒரு அடி கன்னத்தில் போட்டான். நான் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். நான் பட்டாசு சுடவேயில்லை , சத்தியம்” என்றான் பையன்.

“அப்படித்தானுங்கோ, சாமி! எல்லாரும் பொய் சொல்கிறார்கள்” என்று கோர்ட்டில் ஒரு மூலையில் ஜனக் கூட்டத்திற்கு இடையில் நின்று கொண்டு திடீர் என்று கத்தினாள் தாய். ‘பிடி அவளை’ என்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

உடனே இரண்டு போலீஸ்காரர்கள் பாய்ந்தார்கள். வீரன் மனைவியை இழுத்துக்கொண்டு மாஜிஸ்ட்ரேட் மேஜைக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

“ஜாக்கிரதை! சாட்சிக்குச் சொல்லித் தரவா இங்கே வந்தாய்?” என்று மாஜிஸ்ட்ரேட் அதட்டின அதட்டில் வீரன் மனைவி மூர்ச்சை போகும் மாதிரி நடுநடுங்கினாள்.

“கொண்டுபோ வெளியே” என்றார்கள் மாஜிஸ்ட்ரேட்டும். இன்ஸ்பெக்டரும் ஒரே மூச்சில்.

பிறகு விசாரணை நடந்தது. பட்டாசுகளைப்பற்றிப் பையன் இரண்டு மூன்று விதமாய் மாற்றி மாற்றிச் சொன்னான்.

“போதும்” என்றார் மாஜிஸ்ட்ரேட்டு. பிறகு இன்ஸ்பெக்டர் வெகுநேரம் பேசினார்.

ஒரு வாரம் கழித்து மாஜிஸ்ட்ரேட்டு வீரனையும் தலையூர்க் குறவர்களையும் விடுதலை செய்துவிட்டார். இரண்டு ஆசாரிகளுக்கு மட்டும் தண்டனை. “வீரன் போலீஸாரிடம் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு குறவர்களைத் தண்டிக்க முடியாது” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

பட்டாசுக் கட்டு வீரன் பேரிலும் போதிய சாட்சியம் கிடையாது. சேரியில் எப்படிப் பட்டாசு வந்தது என்பது மிகவும் சந்தேகத்திற்கு இடமாயிருப்பினும், துரைசாமி ஐயங் கார் வீட்டில் களவு போன பட்டாசுதான் சேரியில் குப்பையில் கிடந்த துண்டுகள் என்று நிச்சயமாக யாரும் சாட்சி சொல்லவில்லை என்கிற காரணத்தைக் கொண்டு வீரனையும் விடுதலை செய்துவிட்டார்.

“ஏண்டா. வேங்கடா, அந்த மடப்பயல் தவிர வேறு யாராவது பட்டாசுக் கட்டை எடுத்துப் போவானா? அதனாலல்லவோ இத்தனை எழவு ஏற்பட்டது” என்றான் சென்னராயன்.

“அப்பவே நான் சொன்னேன். வேறு ஏதாவது ஒரு சாமான் எடு என்று. நான் சொல்லச் சொல்ல அந்தப் பட்டாசுக் கட்டுகளையெல்லாம் வாரி வாரி மூட்டை கட்டிக்கொண்டிருந்தான். அதற்குள் வீட்டிற்குள் யாரோ ‘ஊம்’ என்று கத்தினார்கள். நாம் போக வேண்டியதாச்சு” என்றான் வேங்கடன்.

“ஜாதிக்கு இயலாத தொழிலில் எவனும் போகக் கூடாது. நாம் இவனைச் சேர்த்துக்கொண்டு போனது நம்முடைய தவறு” என்றான் சென்னராயன்.

முதல் நாள் பையன் பட்டாசுக்காக அழுததும், வீரன் குடி வெறியில் பையனை அடித்ததும் அந்தக் குறவர்களுக்குத் தெரியாது.

வீரன் சேரிக்குத் திரும்பி வந்தான். ஜெயிலில் வேளைக்கு வேளை ஆகாரம் கொடுத்து வந்தார்கள். வீட்டிலோ சோற்றுக்கு வழியில்லை. சட்டியைத் தூக்கிக் கொண்டு குடியானத் தெருவுக்குப் போனாள் வீரன் மனைவி. இருந்தாலும், புருஷன் வீட்டுக்குத் திரும்பி வந்தான் என்கிற மகிழ்ச்சியைப் பசிப் பிணியும் மறைக்க முடியாது.

மறுபடி வீரன் மகன் பட்டாசுக்காக அழமாட்டான். யாராவது பட்டாசு சுடுவதைக் கண்டால் தூரப் போய்விடுவான்.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது. டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *