வன்முறையில்லாத வளர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 4,197 
 

அது மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்த ஊர், எல்லா ஜாதி, மதங்களை கொண்ட ஊர். அமைதியான ஊர், அதே சமயம் தேர்தல் திருவிழா காலங்களில் ஊர் இரண்டு படும். பகைகள், வன்முறைகள் வெளி வரும். எல்லாம் முடிந்த பின் ஒருவரை ஒருவர் பார்த்து வருத்தப்படுவர். இது இந்த ஊரின் இயல்பு, இதற்கு துணயாக மதுக்கடைகளும் இருக்கும். அந்த நேரத்தில் விற்பனை சாதனையாக பத்திரிக்கைகளிலும் வெளி வரும். அதே ஊரை சுற்றி பல்வேறு ஊர்கள் இருந்ததாலும் சந்தை, கடை வீதி, மற்றும் பல வியாபாரங்கள் நடந்ததால் அந்த ஊர் பரபரப்புடன் காணப்படும். மக்களுக்கு விவசாயம் தொழிலாக இருந்தாலும் அதன் துணையாக ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஊரை ஒட்டி ஓடும் ஆற்று நீரில் மீன் பிடிக்கும் தொழிலும் பிரபலமாய் நடக்கும். எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் சாய்ந்து சாய்ந்து ஆடும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பாதையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ளே செல்ல வேண்டும். ஊருக்குள் இரண்டு பேருந்துகள் வந்து செல்கிறது. இந்த ஊரில் மேனிலைப்பள்ளி இருந்தது, அதனால் வெளி ஊரில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், இந்த பேருந்துகளில் ஊருக்குள் வந்து செல்வர். அதே போல் இந்த ஊரிலிருந்து கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அலுவலகம் செல்லும் ஊழியர்களும், வெளி ஊர் செல்ல நினைக்கும் பிரயாணிகளும் இந்த பேருந்தை நம்பி இருந்தனர்.

ராசப்பன் வீட்டில் அன்று கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. சுமார் இருபத்தைந்து முதல் முப்பது பேர் வரை அந்த கூட்டத்தில் இருந்தனர். ஏறக்குறைய அவர்களின் வயதும் அறுபதுக்கு மேல் இருக்கும். ஒரு சில இளைஞர்களும் இருந்தனர். அங்குள்ளவர்கள் அனைவரும் இந்த ஊரின் ஆணி வேரை போன்றவர்கள் எனலாம். நல்லது, கெட்டது மற்றும் மனித தவறுகள் போன்றவைகளை, கன்ணுக்கு தெரியாத உணர்வுகளால் காத்து வருபவர்கள் எனலாம். அங்குள்ளோரில் பாதி பேருக்கு மேல் ஊரின் மீது பற்று இருந்தது.

ராசப்பன் தன் மனைவியிடம் அனைவருக்கும் மோர் கொண்டு வந்து தரச்சொன்னார். அந்த வீட்டு தாழ்வாரத்தில் நல்ல வசதி இருந்ததால் அனைவரும் அங்கு அமர இடம் இருந்தது. தாகம் தீர்ந்த பின் “ராசப்பன்” மெதுவான குரலில் இப்ப நாம கூடியிருக்கறதுக்கு காரணம் என்னன்னா நம்ம ஊர்ல மேக்கு பக்கமா ஆத்தோரமா இருக்கற ரங்கோடன், பெருமாள் சாமி, பஷீர் பாய், இவங்களோட இடத்தை விலைக்கு கேக்கறாங்க. எதுக்குன்னு கேட்டதுக்கு ஏதோ கம்பெனி கட்ட போறதா சொல்லியிருக்காங்க, அவங்க வந்து விலை கேட்டவுடனேயே இவங்க மூணு பேரும் என் கிட்ட வந்து என்ன பண்ணறதுன்னு கேட்டாங்க, நல்ல விலை தர்றாங்கலாம். நான் எல்லோரையும் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன். இப்ப அவங்களும் நம்ம கூட இருக்கறாங்க. நீங்க உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க. வந்திருந்த கூட்டத்திலிருந்து மயில்சாமி மெல்ல எழுந்து இவங்களுக்கு கொடுக்க விரும்பமுன்னா நாம தடை எதுவும் சொல்ல வேணாம். கம்பெனி வருதுன்னா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும், நம்ம பசங்க படிச்சுட்டு வேலையில்லாம இருக்காங்க. நம்ம ஊரும் நல்லா வளரும் , கண்டிப்பா கம்பெனியை ஒட்டி மத்த இடமும் நல்லா விலை போகும், ரோடு வசதி கரண்ட் வசதி, தண்ணீர் வசதி இதையெல்லாம் பஞ்சாயத்துக்காரங்க சீக்கிரமா போட்டு தருவாங்க.

எல்லாம் சரிதான் மயில்சாமி, அதனால் என்ன பிரச்சினை வரும்னு தெரியுமா? வேலை கிடைக்கும் இல்லைங்கல்ல, நம்ம விவசாயம் பாதிக்கும், வேலைக்கு ஆள் கிடைக்காது, நிலத்தடி நீர் கெடும், முக்கியமா கம்பெனியில இருந்து வெளியேறும் தண்ணி ஆத்துல கலந்துட்டா நாம் இப்ப குடிக்க எடுக்கற தண்ணி எப்படி இருக்கும்னு நீயே யோசனை பண்ணி பாரு. என்றார் ராமசாமி.

நன்மை, தீமை இரண்டையும் பற்றி விவாதித்தனர். இறுதியாக “ராசப்பண்னே” நீங்களே உங்க கருத்தை சொல்லுங்க என்று வற்புறுத்தினர். ராசப்பன் பிறந்ததிலிருந்து இந்த மண்ணீல் உருண்டு புரண்டு வளர்ந்தவர். சுமார் எழுபது பிராயத்தை எட்டியவர். அவரோடு இந்த மண்ணில் வளர்ந்தவர்கள்தான் இங்கு வந்துள்ளோரும். அனைவருமே ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. அதே நேரம் நாம் பிற்போக்காக பேசி ஊர் வளர்ச்சியை தடுத்து விட்டோம் என்ற பேச்சும் வரக்கூடாது என்று நினைத்தனர். ஆகவே ராசப்பன் நல்லது செய்வார் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ராசப்பன் மெல்ல எழுந்து எல்லோரும் உங்க அபிப்ராயத்தை சொன்னீங்க. நாம ஊர் அமைதி கெட்டுடும் அப்படீன்னு இங்க கம்பெனி வரக்கூடாதுன்னு சொன்னா நம்ம இளந்தாரிக நம்மளை குறை சொல்லுவாங்க. அதே நேரத்துல இந்த கம்பெனி வரட்டும்னு சொன்னா அதனால விளையற சங்கடங்களும் நம்ம ஊரை கண்டிப்பா பாதிக்கும். அதனால நான் ஒரு யோசனை சொல்ரேன் கேட்பீங்களா? பீடிகை போட்டார். அனைவரும் சொல்லுங்கண்ணே என்று ஊக்கப்படுத்தினர். இப்ப நம்ம ஊரு மெயிரோட்டுல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளித்தான் இருக்குது. மெயின் ரோட்டுல இருந்து நம்ம ஊருக்கு வர்ற பாதை தெக்கத்து தோட்டத்தை விக்க சம்மதம்னா நாம அந்த கம்பெனிகிட்ட பேசலாம். இப்ப விலை பேசன மேக்கத்து தோட்டங்காரங்க சங்கடப்படக்கூடாது. அதே நேரம் நிலத்தை விக்கணுனு முடிவு பண்ணிட்டிங்கன்னா தெக்கத்து தோட்டக்காரன் என்ன விலைக்கு கம்பெனிக்கு விக்கறானோ அந்த விலைக்கே இவங்க கம்பெனிக்கு வித்தவனுக்கு தோட்ட்த்தை கொடுத்துட்டு கண்டிப்பா விவசாய்ம்தான் பண்ணனும். இதை நீங்க பேசி முடிவு பண்ணுங்க, நாம நாளைக்கு கம்பெனிக்காரங்களை பாக்க போகலாம்.

காலை மணி ஏழு இருக்கும் தொழிலதிபர் மகாலிங்கம் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். வேலையாள் உள்ளே வந்து அவரை பார்க்க பத்து பதினைந்து பேர் வந்துள்ளதாக தெரிவித்தான். எல்லோரையும் உள்ளே உட்கார சொல், நான் வந்து விடுகிறேன். முதலில் அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடு என்று உத்தரவு போட்டு விட்டு தன்னை தயார் படுத்திக்கொள்ள உள்ளே சென்றார் மகாலிங்கம்.உள்ளே வந்த்தும் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து வணக்கம் சொன்னார்கள். மகாலிங்கம் அனைவருக்கும் சொன்னார்.

நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? நாங்க நவாவூர் கிராமத்துல இருந்து வர்றோம். நீங்க எங்க ஊர்ல கம்பெனி ஆரம்பிக்கப்போறதா கேள்விப்பட்டோம். அதைப்பற்றி பேசணும்னு வந்திருக்கோம். இவர் எங்க ஊர் தலைவர் எங்க ஊர் சார்பா உங்க கிட்டே பேசுவாரு என்று ராசப்பனை முன்னிருத்தினர்.

மகாலிங்கம் அனைவரையும் பார்த்து முதல்ல எல்லோரும் உட்காருங்க என்று எதிரில் தானும் உட்கார்ந்தார். ஐயா நீங்க எங்க ஊருல கம்பெனி ஆரம்பிக்கணும்னு இடம் கேட்டிருந்தீங்க. நீங்க வருத்தப்படலேன்னா ஒண்ணு சொல்றேன், இங்க கம்பெனி ஆரம்பிக்க கூடாது அப்படீன்னு சொன்னா எங்க ஊர் பசங்க வேலை வாய்ப்பை நாங்க கெடுத்துட்டதா ஆயிடும். அதே நேரம் கம்பெனி ஆரம்பிச்சா எங்க ஊர் விவசாயம் நாசமாயிடும். அதனால் உங்களுக்கு எங்க ஊர்க்குள்ள வர்ற பாதையில ரோட்டோரமா இருக்கற தெக்கத்து தோட்டத்தை உங்களுக்கு கொடுக்கிறோம். உங்களுக்கும் ரோட்டோரமா இருக்கறதுனால கம்பெனி நடத்த வசதியா இருக்கும். இதை நீங்க ஏத்துக்குவீங்கன்னு நம்புறோம்.

மகாலிங்கம் சிறிது நேரம் கண்னை மூடி யோசித்தார்.இதனால் அவருக்கு லாபம்தானே தவிர நட்டம் ஒன்றுமில்லை. இருந்தாலும் அந்த ஊரின் அமைதி, சல சல வென ஓடும் ஆறு, இவைகள் மனதில் ஓடின. சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். உங்க கோரிக்கையை ஏத்துக்கறேன், ஆனா நீங்க ஊர் அமைதி கெடக்கூடாதுன்னு நினைக்கறீங்க, அதனாலயேதான் நான் அந்த ஊரை தேர்ந்தெடுத்தேன்.

ஆனா அந்த ஊர்ல நான் இருக்கணும்னு ஆசைப்படறேன். என்று பேச்சை நிறுத்தி அவர்களை பார்த்தார். ஊர் மக்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என குழப்பத்துடன் பார்த்தனர். நான் என் குடும்பத்தோட அங்க தங்கணும்னு ஆசைப்படறேன் அதுக்கு தேவையான இடம் கொடுப்பீங்கன்னு நம்பறேன். கம்பெனியை ரோட்டோரமா கொண்டு போயிடறேன், என்ன சொல்றீங்க?

ராசப்பன் மெல்ல எழுந்து அவர் கையை பிடித்து கொண்டு ரொம்ப நன்றி தம்பி நீங்க எங்க வேணும்னு கேட்கறீங்களோ அங்க நாங்க இடம் தர்றோம்.

அப்ப சரி இப்ப எல்லோரும் சாப்பிட்டுட்டு போகலாம் என்றார். அவர்கள் அனைவரும் தயங்கினர், இல்லைங்க, நாங்க வீட்டுக்கு போயி சாப்பிட்டுக்கறோம் தயங்கினர். இப்பத்தான் சொன்னீங்க என்னை உங்க ஊர்க்காரனா ஏத்துக்கிட்டேன்னு அப்ப உங்க ஊர்க்காரன் வீட்டுல சாப்பிட மாட்டீங்களா? அதற்கு மேல் அவர்கள் ஒன்றும் பேசாமல் சாப்பிடுவதற்கு உள்ளே நுழைந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *