பங்கு கொடுப்பாரா அப்பா?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 5,445 
 
 

கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்…. தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல…. வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த எண்ணம் பளிச்சிட்டது.

பற்றிக்கொண்டு நிரம்ப யோசித்தாள். மனதுக்குள் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டு வழி தென்பட்டது போலிருந்தது.

” என்னங்க..? ” அருகில் அமர்ந்திருக்கும் கணவனை மெல்ல அழைத்தாள்.

”என்னம்மா..? ” கனகராசன் மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்தான்.

” ஒரு யோசனை…? ”

” சொல்லு..? ”

” உங்க அம்மா அப்பா வசதியானவங்கன்னு சொன்னீங்கல்லே..? ”

” ஆமாம்..! ”

‘ உங்களுக்குன்னு கொஞ்சம் பங்கு, பாகம், இருக்குமா..? ”

‘ என்ன பேசுகிறாள்..? !….’ – விளங்காமல் அவன் அவளைப் பார்த்தான்.

” புள்ளைங்க வீட்டை விட்டு வெளிக் கிளம்பிட்டா பொறந்த புள்ளைகளே இல்லாமப் போயிடுமா..?!…. இல்லே, அவுங்களுக்குச் சேர வேண்டிய பங்கு, பாகம்தான் காணாமப் போயிடுமா….? ”

‘ அந்த கேள்வி, வார்த்தைகள் கொஞ்சம் இடக்கு முடக்காய் இருந்தது.’ – புரியாமல் பார்த்தான்.

” பங்கு பாகம் இருக்கும் என்கிறது என் நினைப்பு…! ” சொன்னாள்.

புரிந்தது.

” இருந்தா…??…”

” போய் கேட்கலாம் என்கிறது என் அபிப்பிராயம்..! ”

கனகராசன் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

” என்ன பேச்சையேக் காணோம்…?! ” ரம்பா விடவில்லை.

” எனக்கும் அந்த யோசனை இருக்கு ரம்பா. ஆனா… பத்து வயசுல அப்பா அடிச்சாருன்னு ஓடி வந்து இன்னையோட இருபது வருஷம் ஆச்சு. அஞ்சு தங்கச்சிங்க, ரெண்டு தம்பிகளை விட்டு வந்தேன். நான் வீட்டை விட்டு வரும்போது அப்பா மிராசு. ரெண்டு வேலி சொந்தக்காரர். இப்போ என்னைப் பெத்தவங்க…எல்லாப் புள்ளைங்களையும் கரைசேர்த்து ஏழையாகிட்டாங்களா..? இல்லே…. இல்லாமலே போய்ட்டாங்களா தெரியல. நானும் தொலைஞ்சவன் தொலைஞ்சவனாகிட்டேன். திரும்பிப் பார்க்கலை. அவ்வளவு ஏன்….. நான் எங்கே இருக்கேன் எப்படி இருக்கேன்னு கூட அவுங்களுக்குத் தெரியப்படுத்திக்கலை. ” முகத்தில் வருத்தம் , கவலையாகச் சொன்னான்.

” இருப்பாங்கன்னே நினைப்போம்…. ” ரம்பா நம்பிக்கையாய்ச் சொன்னாள்.

கனகராசன் பேசவில்லை.

” அவுங்ககிட்ட போய் உங்க பங்கைக் கேட்கிறது தப்பில்லேன்னு என் மனசுக்குப் படுது..”

மெளனமாக இருந்தான்.

” நீங்க நல்லா இருந்து அவுங்ககிட்ட போய் உங்க பங்கை வேணும், அபகரிக்கணும்ன்னு கேட்கலை. கஷ்டப்படுறீங்க… கேட்குறீங்க. இது சட்டப்படியும் சரி. நியாயப்படியும் நியாயம். நீங்க நல்லா இருந்து அவுங்க கெட்டுப்போயிருந்தாங்கன்னா… பார்த்துட்டுச் சும்மா வரமாட்டீங்க. வர முடியாது. ஏதாவது உதவி செய்தே ஆகணும். அது உங்க கடமை. அது போல பெத்தப் புள்ள நொடிச்சுப் போனாலும் பெத்தவங்க கை தூக்கி விட உரிமை இருக்கு.” சொன்னாள்.

கனகராசனுக்கு இது என்னவோ சரியாகப் பட்டது.

” நம்ம மாதிரியே அவுங்களும் நொடிச்சுப் போயிருந்தா…? ” கேட்டான்.

” அவுங்களுக்கு ஆயுசு நூறு. நல்லா இருப்பங்கன்னே நினைப்போம்.! ” நம்பிக்கையை விடாமல் சொன்னாள்.

” நல்லாவே இருக்கட்டும். சந்தோசம். இருபது வருசமா அவுங்களிடம் எந்தவித ஒட்டு, உறவு, உழைப்புமில்லாம இப்போ போய் பங்கு, பாகம்ன்னு கேட்கிறது எப்படி சரி..? ”

” நாமே கேள்வி கேட்டு பதிலும் சொல்லி தயங்கி தடுப்பணை போட்டுக்க வேணாம். நல்லதையே நினைச்சி கிளம்புங்க. கேட்க உங்களுக்கு உரிமை இருக்கு. கொடுக்க அவுங்களுக்கும் கடமை இருக்கு. அங்கே சூழ்நிலை எப்படியோ அப்படித் திரும்புங்க. அதுக்கேத்தாற்போல் நடந்துக்குங்க…” கிளம்பினாள்.

இதற்கு மேல் மனைவியிடம் எப்படி மல்லுக்கு நிற்பது..? ! அது சரியும் இல்லை. அதே சமயம்… தன் நிலையும் சரி இல்லை. – கனகராசன் மனதைத் தேற்றி திடப்படுத்திக்கொண்டு கிளம்பினான்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே…. அவனுக்குள் தான் பிறந்து, வளர்ந்த கிராமம் படமாக விரிந்தது.

நண்பர்களுடன் அவன் ஓடியாடிய இடம். அவர்களுடன் அடித்த கூத்து எல்லாம் துண்டு துண்டாக வந்தது.

” மொளச்சி மூணு இலை விடலை. அதுக்குள்ளே என்னடா கயவாளிப் பசங்களோட பீடி…? ” நண்பர்கள் மத்தியில் அப்பா தணிகாசலம் இவனை இரும்புப் பிடியாகப் பிடித்து உதைத்து துவைத்ததுதான் கடைசி.

அப்பா அப்படி அடித்துத் துவைத்ததுகூட இவனுக்குத் தவறாகப் படவில்லை. நண்பர்கள் மத்தியில் அப்படி செய்ததுதான் இவனுக்குப் பெரிய அவமானம், மானக்கேடு.

‘ மிராசு வீட்டுப் பிள்ளை ! ‘ என்று நண்பர்கள் மத்தியில் கெத்தாக வளம் வந்தது இனி எப்படி முடியும்…? !

அப்பா மேல் கோபம். ஊரில் தலை நிமிர்ந்து நடக்க மானக்கேடு. இனி எவர் முகத்திலும் விழிக்கக் கூடாது என்று முடிவெடுத்து ரயிலேறி சென்னையில் வந்து விழுந்தான்.

எந்தவித திட்டமிடல், . முன்னேற்ப்பாட்டுடன் கிளம்பாததால்…. வயிற்றுப் பசிக்காக ஓட்டலில் கையேந்தி, அங்கேயே எடுபிடியாகச் சேர்ந்து… வாலிப வயதில் விலகி, என்னென்னவோ வியாபாரங்கள்.

மூட்டைத் தூக்கும்போதுதான் சோத்துக்கடை ஆயா பழக்கம். அப்படியே பேத்தி ரம்பா நெருக்கம்.

திருமணம் எளிமையாக ஒரு குப்பத்துக் கோவிலில் நடந்தது. அங்கேயே குடியிருக்க சொற்ப வாடகையில் ஒரு குடிசை….. வறுமை.

பேருந்து நின்றதும் கனகராசன் நினைவுகள் கலைந்தது.

மதுராந்தகம் !

” வண்டி பத்து நிமிசம் நிக்கும். எல்லோரும் இறங்கி பசியாறலாம்…! ” சொல்லி நடத்துனர் இறங்கினார்.

அவரைத் தொடர்ந்து….ஓட்டுநர் , பயணிகள்.

கனகராசன் எல்லாருக்கும் பின் கடைசியாக இறங்கும்போது…இவனுக்கு முன் சென்றவரின் பர்ஸ் கீழே விழ… அவர் கவனமில்லாமல் சென்றார்.

இவன் சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு இறங்கினான். கனமாக இருந்தது.

‘ கடவுள் கொடுத்திருக்கிறார். எடுத்துக் கொள்ளலாமா…? வேறொரு பேருந்தில் ஏறி தப்பிவிடுவது சுலபம். ‘ – மனம் நினைத்தாலும்…… இஷ்டப்படவில்லை.

என்ன பசியோ…. ப்ரஸைத் தவற விட்டவர் ஓட்டலில் அவசர அவசரமாக விழுங்கிக் கொண்டிருந்தார்.

இவனுக்குப் பசி இல்லை. காபி சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தான்.

கல்லாவில்தான் அவர் பையைத் தடவி ….

” ஐயோ…! ” என்று அலறினார்.

” என்ன சார்..? ” – கல்லா முதலாளி.

” ப…. பர்ஸ்….” முகம் வெளிறி அவர் பேண்ட் பாக்கட்டை மேலும் கீழும் தடவினார்.

” இதுவா பாருங்க…” கனகராசன் நீட்டினான்.

அவருக்கு வியப்பு, திகைப்பு.

” நீங்க பேருந்தை விட்டு இறங்கும்போது விழுந்தது. எடுத்து வந்தேன். சரியா இருக்கா பாருங்க…” கொடுத்து நின்றான்.

அவரால் நம்ப முடியவில்லை.

” இருக்கும் தம்பி. இவ்வளவு யோக்கியமா திருப்பிக் கொடுக்கிற மனுஷன் சத்தியமா நாணயமாத்தான் இருப்பான். எண்ணத் தேவை இல்லை.” – சொல்லி வற்புறுத்தி இவன் காபிக்கு அவரே காசு கொடுத்துவிட்டு கனகராசனுடன் வந்தார்.

” என் பேரு சந்திரசேகரன். வங்கி மேலாளர். நீங்க…? ”

பெயரை மட்டும் சொன்னான்.

” மாம்பலத்துல வேலை. ஏதாவது உதவின்னா வங்க….” வாஞ்சையுடன் சொல்லி பேருந்தில் அமர்ந்தார்.

வண்டி புறப்பட்டது.

‘ அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் எல்லோரும் வீட்டில் இருப்பார்களா…? ” இருக்கையில் அமர்ந்த இவனுக்கு நினைவு ஓடியது.

தம்பிகள் இருக்கலாம். தங்கைகள் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் குழந்தை குட்டிகளோடு இருப்பார்கள்.

அம்மா, அப்பா முகத்தில் எப்படி விழிப்பது..?

”வாப்பா உள்ளே…! ” அம்மா பாசம் அழைக்கலாம்.

” போடா வெளியில…” அப்பா கோபம் துரத்தலாம்.

” பத்தாவது முடிக்கிற வரைக்கும் இந்த வீட்டுச் சோத்தைத் தின்னிருக்கே. பள்ளிக்கூட படிப்பு செலவு வைச்சிருக்கே. மத்தபடி இந்த வீட்டுக்கு வருமானம், தம்பி, தங்கச்சிங்களைக் கட்டிக்குத்தேன், கரையேத்தினேன்னு சொல்லு..?

வேணாம் ! இந்த இடத்துல இருக்கேன்னு கடுதாசியாவது போட்டிருக்கியா சொல்லு..? பங்கு கேட்குறீயே என்ன நியாயம்..? கெட்டு முறிஞ்சதுனால வந்திருக்கே. நல்லா இருந்தா வருவீயா ..? உதவிகூடப் பண்ண மாட்டே. போனவன் போனவனாவே இருப்பே. எப்படி நாங்க பங்கு கொடுக்க முடியும்..? எல்லாத்துக்குமா உழைச்சு கஷ்டப்பட்ட எங்களுக்கும் ஒரு பங்கு. எதிலும் ஒட்டாம ஓடி ஒளிஞ்சு இருந்துட்டு வந்த உனக்கும் நோகாம ஒரு பங்கு . எந்த வகையில் நியாயம் …நீயே சொல்லு..? ” அப்பா, தம்பி என்ன எவர் கேட்டாலும் இவனால் பதில் சொல்ல முடியாது.

திரும்பிவிடலாமா…? – கனகராசனுக்குள் மனசு தடுமாறியது;

மனைவியிடம் என்ன பதில் சொல்வது..? சிந்திக்க….

” சார் ! நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி..” நடத்துனர் சொன்னார்.

இவன் திடுக்கிட்டு இறங்கினான். தன் கிராமத்தை நோக்கி கிழக்கே நடந்தான்.

ஊர் அப்படியே இருந்தது. கடைக்கோடியில் இவன் வீடும் நிலைமை மாறாமல் அப்படியே இருந்தது.

தயக்கத்துடன் வாசலில் நின்றான்.

” என்னங்க..! வாசல்ல யாரோ வந்திருக்காங்க…” உள்ளே ஒரு பெண் ஓங்கி குரல் கொடுத்தாள்.

வந்து பார்த்த இளைஞனை இவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

” நீ…நீங்க….”

”நான் கனகராசன்..! ”

” நான் வெங்கடேசன். உள்ளே வாங்க…”

இருவருக்குமே அடையாளம் தெரிந்துவிட்டது.

கனகராசன் வீட்டை விட்டு ஓடும்போது இவன் கைக்குழந்தை.

” உட்காருங்க…” வெங்கடேசன் நாற்காலியைக் காட்டினான்.

அமர்ந்தான். எதிர் சுவரில் அம்மா, அப்பா ஜோடியாக மாலை போட்டு தொங்கினார்கள்.

உள்ளே சென்ற வெங்கடேசன் சிறிது நேரத்தில் கையில் காபியுடன் வந்தான்.

” குடிங்க…” கொடுத்தான்.

இவன் மூன்றாம் மனிதனாய் எடுத்துக் கொண்டு உறிஞ்சினான்.

” கணேசன் அண்ணன் ஆறேழு வயசுல விபத்து ஒன்னுல செத்துப் போச்சு. உங்களையும் சேர்த்து ரெண்டைப் பறி கொடுத்துட்டேன்னு அப்பா, அம்மா ரொம்ப புலம்பினாங்க. எல்லாருக்கும் மூத்தவனாய் இருந்து செய்ய வேண்டியவன்னு அக்காளுங்க கல்யாணத்தின்போதெல்லாம் அவுங்களுக்கு உங்க பேச்சுதான். உசுரோடு இருக்கேனா இல்லியான்னு தெரிவிக்காம பாசமில்லாத பயலை நினைக்கப்படாதுன்னு சொல்லி உங்களைப் பத்திதான் எப்பவும் பேச்சு. இருக்கானா, செத்தானா தெரிலையே…! அம்மா நெனச்சி நெனச்சி அழுவாங்க. ரோசக்காரப் புள்ளைய அடிக்கிறதான்னு அப்பாவைத் திட்டுவாங்க. கடைசியா பங்கு, பாகம் பிரிக்கும்போது பொண்ணுங்களுக்குப் போக மீதி உள்ளதை… நமக்கு ஆளுக்கொரு பங்கா சமமா பிரிச்சாங்க.எங்க ரத்தம் வந்தா குடுன்னும் சொல்லிப் போனாங்க. பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு..! சரியான சொல்லு..” நிறுத்தினான் வெங்கடேசன்.

” என்னங்க..? ” அவள் உள்ளிருந்து அழைத்தாள்.

” அது என் மனைவி…! ” வெங்கடேசன் சொல்லி உள்ளே சென்றான்.

திரும்பி வந்தான். கையில் பை.

” எனக்கும் பாசம் தெரியல. வேரறுத்தது மாதிரி இப்படியும் ஒரு புள்ள இருக்குமான்னு எனக்கு உங்க மேல வெறுப்பு . புள்ளைய அப்பன் கண்டிக்கலாம்ன்னு கோபம் மாறி வந்திருக்கக் கூடாதான்னு காழ்ப்பு, மனசுல வருத்தம். மத்தபடி…உசுரோட இருந்தா எங்கே, எப்படி கஷ்டப்படுறீங்களோன்னு நினைப்புதான் சகோதர சதை ஆட்டம்..”

கேட்க.. கேட்க… ” தம்பி ! ” என்று கதறி அவன் காலில் விழுந்து அழ மனசு துடித்தது கனகராசனுக்கு.

ஏன்… மனம் மனசாற விழுந்தே துடித்தது. இவன் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தான்.

” இந்தாங்க உங்க பங்கு பணம். அப்பாவே போட்டு வச்சார். அஞ்சு லட்ச ரூபா ! ” வங்கி கணக்குப் புத்தகத்தை அந்த பையிலிருந்து எடுத்து அவன் எதிரில் வைத்தான்.

கனகராசனுக்குக் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

” உங்க பேர்லேயே இருக்கு. உங்களை பார்த்ததும் தேட அவகாசமில்லே. அவளே எடுத்துத் தந்தா. அதான் கூப்பிட்டுக் கொடுத்தாள்.”

கனகராசன் வெறித்தான்.

‘ தொட கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா..? ‘ மனசாட்சி இடித்தது.

” வேணாம் ! ” தீர்மானமாய் சொல்லி எழுந்தான்.

” ஏன்..? ” வெங்கடேசன் திடுக்கிட்டான்.

” பணத்தைத் தேடி வந்த எனக்கு பாசத்தையும் இங்கே கூறுகட்டி வைச்சிருக்கீங்க. எது எடுத்துக்கலாம் என்கிற தடுமாற்றத்துல பாசமே அதிகமா இருக்கு. அதுவே எடுத்துக்கிறேன்.! ” கனகராசன் குரல் தழுதழுத்தது.

” அண்ணா…! ” வெங்கடேசன் தாவி அணைத்தான்.

உள்ளே சுவர் ஓரமாக நின்ற வெங்கடேசன் மனைவி கண்களில் கசிந்த நீரை புடவை முந்தானையால் துடைத்தாள்.

” இ,.,…இது போதும் எனக்கு. இந்த பணத்தை இங்கே இருக்குற நீங்க எல்லாரும் பங்கு போட்டுக்கோங்க.அதற்கான ஏற்பாட்டை நான் செய்யறேன். வங்கிக்கு எழுதி தர்றேன். வர்றேன். வர்றேன் தாயி..! ” கனகராசன் தம்பிக்கும், அவளுக்கும் விடை சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *