நெஞ்சினலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 11,435 
 
 

“அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். சந்திரா அத்தை இறந்து விட்டார் என்ற செய்தி என்னில் பெரும் சோகத்தை தோற்றுவிக்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் சந்திரா அத்தை எங்கள் வீட்டுக்கு வர மாட்டார்களா என்று தவம் கிடந்திருக்கிறேன். அதற்குக் காரணம் சந்திரா அத்தை மேலுள்ள பாசம் அல்ல. சந்திரா அத்தை எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவர் மகள் புவனாவையும் கூட்டி வருவார். ஏனோ தெரியாது புவனா வருகிறாள் என்ற நினைப்பே என்னுள் அத்தனை பரவசத்தை ஏற்படுத்தும் அது ஒரு காலம்.

சந்திரா அத்தை இறந்து விட்டார் என்ற செய்தி எனக்குள் துக்கத்தை ஏற்படுத்தாததற்குக் காரணம் நீண்ட நாட்களாக அவர்களைப் பார்க்காததும், பழகாததுமாக இருக்கலாம். நான் நகரத்துப் பாடசாலைக்கு வந்த பின் லீவுக்கு மட்டுமே வீட்டுக்குப் போவேன். அப்புறம் கொழும்பில் வேலை கிடைத்து இங்கு வந்து விட்டபின் எப்போதாவது பண்டிகைக்கு மாத்திரமே வீட்டுக்குப் போவதுண்டு. இந்த நீண்ட நாட்களில் சந்திரா அத்தையையும் புவனாவையும் நான் சந்தித்ததே இல்லை. அவ்வப்போது புவனாவின் நினைப்பு வந்து என் மனதை கசக்கிப்பிழியும். ஆனால் என்ன காரணத்தைக் கூறிக் கொண்டு நான் அவளைச் சென்று பார்ப்பது என்று குழம்பிப் போய் அவள் நினைவுகளை நெஞ்சுக்குள்ளேயே புதைத்து விடுவேன்.

இப்போது இந்தத் தந்தி புவனாவின் நினைப்பை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியது. அத்தை இறந்து விட்டார் என்பதைப் பார்க்கிலும் புவனாவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலே எனக்குள் மேலோங்கியிருந்தது. கடைசியாக அவளைப் பார்த்தது அவளது பூப்புனித நீராட்டு விழா நாளன்று. நானும் அம்மாவும் அப்பாவுடன் அவள் வீட்டுக்குப் போயிருந்தோம். நான் முதன் முதலாக அவள் வெட்கப்பட்டதை அன்றுதான் பார்த்தேன். அவளுக்கு மட்டுமென்ன என்னுள்ளும் வெட்கம் என்ற உணர்வு அன்று தான் புகுந்து கொண்டது.

அவள் எனது விளையாட்டுத் தோழி தானே என்ற நினைப்பில் அன்று அவள் அருகில் சென்று அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவளை மணப் பெண் போல அலங்கரித்திருந்தார்கள். வீட்டில் உற்றார் உறவினர் எல்லாம் கூடியிருந்தார்கள். முதல் முதல் எங்கள் சித்தி தான் அந்தப் பேச்சை ஆரம்பித்தாள். எங்கள் இருவரையும் பார்த்து “”என்ன! அதற்குள்ளேயே புவனா மாப்பிள்ளையைப் பார்த்து விட்டாள் போல் இருக்கிறதே அத்தை மகன் தானே பரவாயில்லை…..” அவள் சத்தமாகச் சொன்னது எல்லோர் கவனத்தையும் எங்கள் பால் ஈர்த்தது. கூடியிருந்தோர் எல்லோரும் பெரிதாக வாய் விட்டுச் சிரித்தார்கள்.

புவனா வெட்கத்தால் நெளிந்தாள். எனக்கு வாழ்வில் முதன் முறையாக வெட்கமும், அதனால் சங்கடமும் தோன்றியது. அந்த உணர்வு மனதுக்குள் குடைந்தாலும் அது எனக்கு மட்டுமே சொந்தமான இன்ப உணர்வாக இருந்தது. அன்று முழுவதும் உறவினர் பலரும் என்னையும் புவனாவையும் இணைத்துக் கேலி பேசி வேடிக்கையில் சிரித்து மகிழ்ந்தார்கள். அவர்கள் கேலி பேசியது என்னை நோகடிக்கும் நோக்கத்திலும் இருந்திருக்கலாம். ஆனால் அன்றுதான் புவனா என்னுள் மிக ஆழமாகப் புகுந்து கொண்டாள். அதன் பின் எத்தனை நாள் அவள் நினைவை எண்ணி எண்ணி குமைந்திருக்கிறேன்.

ஆனால் நான் ஒரு நாளும் அவனைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று முயற்சித்ததில்லை. கடிதம் எழுத வேண்டும் என்று கூட கருதியதில்லை. என்ன காரணத்தைக் கொண்டு அதனை நான் செய்வது. என்னுள் தோன்றியிருக்கும் இந்த உணர்வு என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் அவளது நினைவு இத்தனை இன்ப உணர்வை ஏற்படுத்துகிறது? ஏன் என் மனம் அவள் அண்மையை நாடுகிறது? அவள் இல்லையே என ஏங்குகிறது. என் தவிப்பை யாரால் விளங்கப்படுத்த முடியும்.

நான் வசித்த தேயிலைத் தோட்டம் தான் இந்த உலகத்திலேயே மிக அழகானது என்று நான் கருதினேன். சுற்றிவர மலைக் குன்றுகள், பசுமையான மரங்கள் மலையருவிகள், மைனாக்கள், குருவிகள் அத் தோட்டத்துக்கு அழகூட்டின. சிவப்பும் மஞ்சளும் கலந்து ஒரு குருவிக் கூட்டம் அங்கு வந்திருந்தது. மக்கள் அதனை நெருப்புக் குருவிகள் என்று அழைத்தார்கள். அதன் வர்ணம் காரணமாக அவற்றை அவர்கள் அப்படி அழைத்திருக்கக் கூடும். அக் குருவிகளின் உண்மைப் பெயரை அறிந்து கொள்ள நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் யாருக்குமே அது தெரியவில்லை என்ற போது ஏமாற்றமடைந்திருக்கிறேன். எனக்கு அந்தக் குருவிகளை ரொம்பப் பிடிக்கும். அவற்றைப் பிடித்து வீட்டில் வளர்க்க வேண்டுமென்று கருதியிருக்கிறேன். ஆனால் குருவிகளைப் பிடிப்பது பாவம் என்று வீட்டில் கூறுவார்கள். எனது ஆசை ஒரு போதும் நிறைவேறியதில்லை.

நான் வசித்த தோட்டம் எத்தனை அழகானது என்று யாரிடம் சொன்னாலும் யாரும் ஏற்றுக் கொண்டதே இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒருவரும் அந்த அழகைப் பார்த்ததில்லை. நான் அந்த தோட்டத்தையும் அதனைச் சூழவுள்ள மலைச் சாரலையும் அனுபவித்து நேசித்த அளவுக்கு அவர்களால் அந்த சூழலை விரும்ப முடியவில்லை. அவர்கள் கணிப்பில் நான் வெறும் வேலையற்ற வெட்டிப்பயல் அவ்வளவுதான்.

புவனாவும் அவர்கள் குடும்பத்தினரும் முன்பு எங்கள் தோட்டத்தில் தான் வசித்தனர். புவனாவின் அப்பõவான எனது அம்மாவின் தம்பி என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நான் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். நானும் அவரை மாமா….. மாமா என்று எப்போதும் அவர் தோளில் தான் தொங்கிக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் புவனாவும் அநேகமாக எங்கள் வீட்டில் தான் இருப்பாள். நான் எப்போதும் அவளுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். பாடசாலைக்கு நாங்கள் தோட்டத்தி ஏனைய பிள்ளைகளுடன் ஒன்றாகவே சென்று வருவோம்.

பாடசாலை அடுத்த டிவிசனில் இருந்தது. அதனை மேற்கணக்கு என்று அழைப்பார்கள். எங்கள் டிவிசனை பணிய கணக்கு என்று அழைப்பார்கள். மேல் கணக்கு மலைக்கு மேல் உயரத்தில் இருந்தது. படிக்கட்டில் ஏறி நீண்ட தூரம் செல்ல வேண்டும். அந்தப் படிக்கட்டில் ஏறுவது ஒரு போதும் எங்களுக்கு கஷ்டமாக இருந்ததில்லை. அதில் ஆயிரத்து இருபத்தெட்டுப் படிகள் இருந்தன. நாங்கள் அவ்வப்போது யார் அந்தப் படிகளை முதலில் ஏறிக் கடப்பது என்ற போட்டி வைப்போம். என்னால் அந்தப் போட்டிகளில் இலகுவாக வெல்ல முடியும். ஆனால் புவனாவால் அந்தப் படிகளில் வேகமாக ஏறிச் செல்ல முடியாது. அவளுடன் ஒன்றாய்ச் செல்ல வேண்டும் என்பதாலேயே நான் அந்தப் போட்டிகளில் தோற்றுப் போவதுண்டு. புவனாவுக்காக நான் அடையும் தோல்விகள் எனக்கு வருத்தத்தைத் தருவதில்லை.

எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது மாமா இறந்து போய் விட்டார். புவனாவுக்கு அப்போது வயது எட்டு, மாமா கொழுந்து மலையில் தான் கங்காணி வேலை பார்த்து வந்தார். அன்று கொழுந்து மலையில் இருந்து அந்த சோகமான செய்தி வந்தது. மாமாவை நாகபாம்பு தீண்டி விட்டது. அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போய்விட்டார் என்று செய்தி வந்தது.

அந்தச் செய்தியைக் கேட்டு புவனாவும் அத்தையும் அழுத காட்சி எனக்கு இப்போதும் நேற்று நடந்ததைப் போல் ஞாபகமிருக்கிறது. அத்தை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். புவனா அத்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினார். எனக்கும் அழுகை அழுகையாகத் தான் வந்தது. மாமா என்னிலும் அந்த அளவுக்குப் பிரியம் வைத்திருந்தார். ஆனால் எல்லாவற்றையும் விட புவனாவின் சோகத்தையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் விக்கி விக்கி அழும் போதெல்லாம் என் தொண்டையிலும் ஏதோ வந்து அடைத்துக் கொள்கிறது. அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. மாமா இறந்ததை விட புவனாவுக்காகவே நான் அழுதேன்.

அடுத்த வருட முற்பகுதியில் என்னை நகரத்துப் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அது மட்டுமன்றி போடிங்கிலும் போட்டுவிட்டார்கள் மிக மகிழ்ச்சியாக தோட்டத்தின் காடு, மலை, ஆறு, அருவி, புல்,புதர் என சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த என்னை நரகத்தில் தூக்கிப் போட்டது போல் இருந்தது. எனக்கு படிப்பு வேணாம் என்று எவ்வளவு அழுது அடம் பிடித்தும் என் அப்பா அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

எனக்கு அந்த போடிங்கில் இருக்க கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை. அடிக்கடி காய்ச்சல் வந்தது. நன்றாக மெலிந்து போய் விட்டேன். சீக்குப் பிடித்த கோழி என்றெல்லாம் என்னை அழைத்தார்கள். வீட்டுக்கு செய்தி அனுப்பி அப்பா வந்து பார்த்தார். அப்பாவுக்கு என்னைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும் அவர் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. போடிங் உரிமையாளராகவும், எம்மைப் பராமரிப்பவராகவும் இருந்த லலிதா அன்ரியிடம் என்னை நல்லா பார்த்து கொள்ளும்படி கூறி கொஞ்சக் காசையும் கொடுத்து விட்டுப் போய் விட்டார். எனக்கு அப்பா மேல் வந்த கோபத்துக்கு அளவேயில்லை. அவர் எங்கள் தோட்டத்துக்குப் போகும் வழியில் காட்டாற்றுக்கு மேல் போடப்பட்டிருக்கும் மரப்பாலத்தில் இருந்து விழுந்து செத்துப்போக வேண்டுமென்று மனதுக்குள் கருவிச் சாபமிட்டேன்.

புவனா இல்லாத அந்தப் பாடசாலை என்னை வருத்தும் சிறைக் கூடமாகவே இருந்தது. எங்கள் தோட்டத்துப் பாடசாலை எத்தனை மகிழ்ச்சியானது. அந்தப் பாடசாலையில் நாங்கள் ஐம்பது பிள்ளைகள் படித்தோம். எங்களுக்கு ஒரே ஒரு வாத்தியார்தான் இருந்தார். அவர் தான் எல்லாப் பாடங்களையும் படிப்பிப்பார். சில நாட்கள் அவர் தமது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்யச் சொல்வார். வீட்டைக் கூட்டித் துப்பரவு செய்யச் சொல்வார். சில நாட்கள் விருப்பமான கதை சொல்வார். நானும் புவனாவும் அருகருகேதான் அமர்ந்திருப்போம். எனினும் நாங்கள் சிரித்துப் பேசி அகப்பட்டால் அவர் எங்களை அருகருகே இருக்க அனுமதிக்க மாட்டார் என்பதனால் நாங்கள் பாடசாலை நேரத்தில் வாத்தியார் கவனிக்கும் விதத்தில் எதுவும் செய்வதில்லை. மிக நல்ல பிள்ளைகளாக இருப்போம். புவனா என்னருகில் இருக்கிறாள் என்பதே எனக்கு மிகத்திருப்தியாக இருக்கும்.

நான் நகரத்துப் பாடசாலையில் சேர்ந்து மூன்று மாதம் கழிந்து விட்டிருந்தது. இந்த மூன்று மாதங்களே நான் என் வாழ்நாளில் அனுபவித்த மிக துன்பகரமான நாட்கள். மீன்களை ஆற்றிலிருந்து எடுத்து கரையில் தூக்கிப் போட்டது போன்ற துன்பம். யாராவது மீண்டும் ஆற்றில் எடுத்து போடமாட்டார்களா என்பது போன்ற ஏக்கம். என்னால் பாடங்களைப் படிக்கவே முடியவில்லை. நான் முதல் தவணை விடுமுறையை எதிர்பார்த்துத் தவம் கிடந்தேன்.

முதல் தவணை விடுமுறை நாள் வந்தது. உலகத்தில் நான் அனுபவித்தறியாத மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. வீட்டுக்கு நான் போகலாம். அங்கே நான் எனது தோட்டத்து நண்பர்களையும் சந்திக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக புவனாவை நான் பார்க்கப் போகிறேன். அதைவிட என் வாழ்வில் வேறு என்ன பேறு எனக்கு கிடைக்க வேண்டும். எனது தோற்றம் முன்னர் இருந்ததிலும் பார்க்க மூன்றில் ஒன்றாகக் கரைந்து இருந்தது. என் அம்மா என்னைப் பார்த்தால் எவ்வளவு துன்பப்படுவாள். எனது இந்த மெலிந்த தோற்றம் அவளுக்கு உண்மையில் துன்பத்தைத் தரத்தான் போகிறது. புவனாவுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த ஜீவன் என் அம்மாதான்.

இந்த நினைப்புக்கள் எல்லாம் என் விடுமுறையை நோக்கிய பயணத்தை மாபெரும் எதிர்பார்ப்பு நோக்கித் தள்ளியது. நான் அந்தக் குளிரிலும் விடிய முன்பே எழுந்திருந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானேன். என்னிடமிருந்த பிரயாணப் பெட்டியை எடுத்து தூசி தட்டி என் துணிமணிகளை எல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தேன். நான் போட்ட சந்தடியால் மற்றவர்களும் எழுந்து விட்டனர். அவர்களுக்கும் விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும் எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் என் மனது தவித்த அளவுக்கு அவர்கள் ஏங்கித் தவித்திருக்கக் கூடுமா? அதைப்பற்றி சிந்திக்கும் பொறுமை எனக்கில்லை.

என் அப்பா வரத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீண்ட யுகமாகத் தோன்றியது. எனக்குத் தெரியும், அவர் பகலாகித்தான் வருவார் என்று. இருந்தாலும் இந்த மனதை எப்படி நான் சமாதானப்படுத்துவேன். அதற்கு எப்படிச் சொல்லியும் புரியமாட்டேன் என்கிறது. என் எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

என் தந்தை நகரத்துக்கு வந்து நேரே என்னிடம் வரவில்லை. அவர் தனது வேலைகளை எல்லாம் திட்டமிட்டபடி முடித்துக்கொண்டு போகும் வழியிலேயே என்னிடம் வந்தார். அப்பா போடிங் வீட்டில் நுழைந்த கணத்திலேயே நான் எனது பிரயாணப் பெட்டியை கையிலெடுத்துக் கொண்டேன். என் தந்தை எனது ஆவலைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளவில்லை. அவர் போடிங் உரிமையாளரான லலிதா அன்ரியுடன் ஆறுதலாக நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பின் அவருக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை கொடுத்து விட்டு ஆறுதலாகவே புறப்பட்டார்.

நாங்கள் பஸ்ஸை விட்டிறங்கி எங்கள் தோட்டத்தை வந்தடைய மூன்று கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டும். அந்தப் பாதையில் நடந்து செல்வது எனக்கு மிகப் பிடித்த விடயங்களில் ஒன்று. ஏனெனில் பாதைக்கு மேலே வளர்ந்திருக்கும் பற்றைகளுக்கூடாக புளிச்சங் கொய்யாக்கா சிவப்பாகப் பழுத்திருக்கும். புவனாவுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்கென அவற்றை முன்பு பிடுங்கிச் செல்வதுண்டு.

வழியில் இருந்த காட்டாற்றுக்கு குறுக்கே போடப்பட்டிருந்த மரப் பாலத்தில் நண்பர்களுடன் வரிசையாக நின்று ஆற்றுக்குள் சர்ரென்று மூத்திரம் பெய்வது எத்தனை மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த ஆற்றோரம் நெல்லி, விரலிக்காய் மரங்கள் கூட இருக்கும். அவற்றில் எல்லாம் எத்தனை முறை ஏறி காய் பிய்த்திருக்கிறேன். அந்த வழியால் செல்லும் போதெல்லாம் கற்களை பொறுக்கி எடுத்து அந்த ஆற்றுக்குள் தெப்பக் குளம் கட்டி நிறைந்திருக்கும் நீருக்குள் விட்டெறிந்து அவை எழுப்பும் நீர்த்திரலைகளை எத்தனை முறை ரசித்தாலும் அலுக்காது.

ஆனால் இம்முறை இந்தச் செயல்கள் எதனையும் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. அப்பாவுக்குப் பின்னால் அமைதியாக நடந்து கொண்டிருந்தேன். எத்தனை முறை அடித்து வெளுவல் கொடுத்தாலும் அவை உதைக்காமல் அடுத்த கணத்தில் இன்னுமொரு சுட்டித்தனம் செய்யும் பயல் இன்று என்ன இப்படி அமைதியாக வருகிறான் என்று என் அப்பா நினைத்தாரோ என்னவோ ஒரு முறை திரும்பி என்னைப் பார்த்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை. நான் மௌனமாகவே தொடர்ந்தும் நடந்து சென்றேன்.

எனது முழுக்கவனமும் வீட்டை அடைவதிலும் நண்பர்களைப் பார்ப்பதிலும் புவனாவை சந்திப்பதிலும் தான் இருந்தது. இந்த மூன்று மாதத்தில் அங்கே எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். மாடசாமி கோவிலுக்கு இடது பக்கமாக இருந்த பட்டுப்போன வாகை மரத்தின் பொந்தில் குடியிருந்த மைனாக்கள் குஞ்சு பொரித்துக் கொண்டு போயிருக்கும். வீரச்சாமி வீட்டு நாய் போட்டிருந்த மூன்று குட்டிகளும் பெரிதாக வளர்ந்திருக்கும். வீட்டுக்கு முன்னால் களிமண் குழைத்து வரிச்சு கட்டி கூரை போட்டு செய்து வைத்திருந்த விளையாட்டு வீட்டை யாரும் உடைத்திருப்பார்களோ? நான் பந்தயங்கட்டி ஜெயித்து ஜெயித்து சேர்த்து போத்தலில் போட்டுக் கவனமாக வைத்திருந்த என் ஜில் போலைகள் அப்படியே இருக்குமா? இப்படிப் பல சந்தேகங்கள் என் மனதில் தோன்றின.

உச்சி வெயில் சுரீர் எனச் சுட்டுக் கொண்டிருந்தது. என் அப்பா நகரத்தில் வாங்கிய மரக்கறி, மீன், தேங்காய் மற்றும் பொருட்களை ஒரு உமல் பையில் வைத்துக் கட்டி அதனை தலையில் சுமந்து சென்று கொண்டிருந்தார். அவர் வாங்கியிருந்த பெரிய நீண்ட கருவாட்டு மீனின் வால் உமல் பைக்கு மேலாக வெளியில் துருத்திக் கொண்டிருந்தது. சில வேளைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்து மைல் தூரத்துக்கு அப்பால் வெட்டகத்தெனிய என்ற இடத்தில் கூடும் சந்தைக்கு என்னையும் அப்பா அழைத்துச் செல்வார். இப்படித்தான் ஒரு உமல் பையில் சாமான்களை வாங்கிக் கட்டி என் தலையிலும் ஏற்றி விடுவார். நான் வழியெல்லாம் சபித்துக் கொண்டே சுமந்து வருவேன்.

நாங்கள் ஒருவாறு வீடு வந்து சேர்ந்து விட்டோம். நான் நினைத்தபடியே அம்மா என் வரவை வழிமேல் விழி வைத்துத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓடி வந்து என் தோளில் இருந்து பெட்டியை இறக்கி வைத்து கட்டித் தழுவிக் கொண்டார். என் அம்மா ஒருபோதும் இவ்வளவு நாள் என்னைப் பிரிந்திருந்ததில்லை. என் மெலிந்த உருவத்தைப் பார்த்து அவள் கண்களில் பொல பொலவெனக் கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அவள் என்னைத் தழுவியவாறே தேம்பியழுதாள். நானும்தான் அழுதேன். அந்த அழுகையை நீண்ட நேரம் நிறுத்த முடியவில்லை. அப்பா ஒன்றுமே பேசவில்லை. தலைப்பாரத்தை இறக்கி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று செம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் குடித்த கையுடன் நெற்றியில் வடியும் வியர்வையை வழித்து சுண்டியெறிந்தார்.

அம்மா அன்று எனக்கு மிகக் கரிசனையுடன் சோறு பரிமாறினாள். இடைக்கிடை என் முகத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். தன் இடது கையால் என் தலையைக் கோதி விட்டாள். அம்மா என்றால் அம்மாதான். அவள் விரல்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு சக்தி. அவள் விரல்கள் என் நெற்றியிலும் கன்னங்களிலும் வருடும் போது எவ்வளவு இதமாக இருக்கிறது. அவளது ஸ்பரிசம் எனக்கு மிக ஆறுதலளித்தது.

நான் சாப்பிட்ட உடனேயே நண்பர்களையும் புவனாவையும் பார்க்க திட்டமிட்டேன். நான் கிளம்புவதை அறிந்த அப்பா “வந்தவுடன் எங்கேடா போறாய்?’ என்று அதட்டினார். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. புவனாவுக்காக கள்ளமாக வாங்கி வந்திருந்த சொக்லட்டையும், நண்பர்களுக்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கட் பக்கற்றையும் எடுத்து சட்டையின் முன் பட்டனை திறந்து நெஞ்சுக்கூடாகத் திணித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.

நாங்கள் வழக்கமாகக் கூடும் இடமான பிரட்டுக்களச் சந்திக்கு வந்த போது ஏற்கனவே என் வரவை கேள்விப்பட்டிருந்த பாலா, முத்து, பெரியசாமி, கந்தையா, சுந்தரம் எல்லோரும் என் வரவை எதிர்பார்த்திருந்தனர். நாங்கள் முனியாண்டி கோயில் ஆலமரத்தடிக்குச் சென்று பேசுவதென்று தீர்மானித்தோம். சிலவேளை செய்தியறிந்தால் புவனாவும் வருவாள். அல்லது அத்தை வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நண்பர்களிடமும், புவனாவிடமும் சொல்ல எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன. அதுபோல எனக்குச் சொல்ல அவர்களிடமும் நிறைய விசயங்கள் இருக்கும். நாங்கள் எல்லோரும் முனியாண்டி கோயில் ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தோம். அவர்களில் பாலாதான் என் நெருங்கிய நண்பன். நான் பிஸ்கட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன். சொக்லட் இருக்கும் விடயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை.

பாலாதான் மௌனத்தைக் கலைத்தான்.

“உனக்கு விசயம் தெரியுமாடா?’

“என்னடா’ எனக்கு ஆவலாக இருந்தது.

“புவனா இப்ப இங்கே இல்லடா’ எனக்கு திகீர் என்றது.

“என்னடா சொல்ற. அவ எங்கே போய்ட்டா?’

“அவ அப்பா செத்ததோட அவுங்களுக்கு வருமானம் இல்லாம போச்சு. அவுங்க வேற தோட்டத்துக்குப் போய்ட்டாங்க’

“எந்த தோட்டத்துக்கு…’ என் குரல் பலவீனமாக ஒலித்தது.

“மேரிவலைத் தோட்டத்துக்கு….’

மேரிவலைத் தோட்டம் எங்கள் தோட்டத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் இருந்தது. அங்கே எப்படிப் போவது. அம்மாவிடம் தான் கேட்டுப் பார்க்க வேண்டும். அத்தையைப் பார்க்கப் போக வேண்டுமென்று, இந்த ஏமாற்றத்தால் அதன் பின் நண்பர்கள் கூறிய கதைகள் எல்லாம் சுவைக்கவில்லை. நான் புவனாவுக்காக வாங்கி வைத்திருந்த சொக்லேட்டையும் அவர்களுக்கே கொடுத்து விட்டேன்.

அம்மா முன்பை விட இப்போது என் மீது அதிக அக்கறை காட்டினாள். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன். அத்தைக்கும் புவனாவுக்கும் என்ன நடந்ததென விசாரித்தேன். மாமா இறந்த பின் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த வருமானம் போதவில்லை என்றும் அத்தை மலையில் வேலை செய்ய விரும்பவில்லை என்றும், அதனால் மேரிவலைத் தோட்டத்திற்குப் போய்விட்டார்கள் என்றும் தனக்கு நண்பர்கள் கூறிய தகவலையே அம்மாவும் கூறினாள்.

அத்தையைப் போய் பார்த்து வரலாமா என்று அம்மாவிடம் கேட்டேன். வரப்போகும் சித்திரைப் பெருநாளுக்கு அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் வரலாம் என்று கூறினாள் அம்மா. எனக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை. அப்பாவுடன் போனால் அன்றே அவர் திரும்பி வந்துவிடுவார். அம்மாவுடன் போனால் இரண்டு நாட்கள் அடம் பிடித்து தங்கிவிட்டு வரலாம்.

சித்திரைப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. அவ்வளவு நாட்கள் என் மனம் காத்திருக்குமா? வேறு ஏதும் மார்க்கம் இருக்கிறதா? என் சுறுசுறுப்பும் உற்சாகமும் எங்கோ போய் மறைந்து விட்டன. முதல் முறையாக அந்த அழகிய தேயிலை மலைகள் அவற்றின் சௌந்தரியத்தை இழந்து விட்டவை போன்று தோன்றின. எல்லாவற்றுக்கும் இந்த உணர்வுகள் தான் காரணம். நாடி, நரம்பு, கை, கால், மூட்டுக்கள் எல்லாம் உணர்வுகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன போல் தோன்றியது. நான் ஏன் இப்படி சோர்ந்து போய்க் கிடக்கிறேன். எறும்பு போல் ஊறித்திரிந்த நான் இப்படி முடங்கி விட்டதன் காரணம் என்ன?

அந்த இரண்டு வாரங்களும் என்னை மேலும் சித்திரவதைக்குள்ளாக்கின. முன்பெல்லாம் அம்மா சமைக்கும் சாப்பாடு, அமிர்தமாக ருசிக்கும். ஆனால் இப்போது கை சாதத்தை பிசைகிறதே தவிர வாயில் ஊட்ட மறுக்கிறது. அப்பா அத்தை வீட்டுக்குப் போய்வர மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவருக்கும் தன் தங்கையைப் பார்க்க ஆசையாய் இருந்திருக்கும்.

அத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல அம்மா முதல் நாளே பலகாரங்கள் எல்லாம் தயார்படுத்தியிருந்தார். மேரிவலைத் தோட்டத்துக்கு நடந்துதான் போக வேண்டும். அதுவும் ஏத்தத்தில் ஏறி இறக்கத்தில் இறங்கி ஆற்றைத் தாண்டி போக வேண்டும். புவனாவைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு என்னில் பழைய உற்சாகத்தையும் தெம்பையும் வரவழைத்திருந்தது. அப்பா வாங்கித் தந்திருந்த புதுச் சட்டையும் அதற்கேற்றாற் போல் பெல்ட், ஷý எல்லாம் அணிந்து கொண்டேன்.

நாங்கள் புவனாவின் வீட்டையடைந்த போது பகல் பத்து மணியாகி விட்டது. அத்தை மலர்ந்த முகத்துடன் எங்களை வரவேற்றார். என்னை அணைத்து உச்சி முகர்ந்தார். பாடசாலை பற்றியெல்லாம் விசாரித்தார். என் கண்கள் புவனாவைத் தேடித் துலாவின. அவளைக் காணவில்லை. எனது தேடலை புரிந்து கொண்ட அத்தை “யாரைத் தேடுற தம்பி… புவனாவா… அவ அங்கே தோட்டத்துப் பக்கம் செல்வராசாவுடன் விளையாடப் போனா…’

அம்மா, அப்பா, அத்தை தங்களது விவகாரங்களை பேச ஆரம்பித்தனர். நான் வெளியில் இறங்கிச் சென்றேன். அங்கே தோட்டத்துப் பக்கம் சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்க அங்கே புவனாவும் செல்வராசா என்று அத்தை குறிப்பிட்ட பையனும் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களும் புத்தாடை அணிந்திருந்தனர்.

புவனா என்னைக் கண்டதும் ஓடோடி வந்தாள். என் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று செல்வராசாவுக்கு அறிமுகப்படுத்தினாள். செல்வராசாவுக்கு என்னை விட இரண்டு மூன்று வயது அதிகமாக இருக்க வேண்டும். ஏனோ அவனை எனக்குப் பிடிக்கவில்லை. புவனா முன்பெல்லாம் எனது நண்பர்களான பாலா, சுந்தரம், முத்து, பெரியசாமி ஆகியோருடனெல்லாம் விளையாடுவதுண்டு. ஆனால் எனக்கு ஏனோ இந்த செல்வராசாவுடன் புவனா விளையாடுவது பிடிக்கவில்லை. இருந்தாலும் நானும் அன்று முழுவதும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனக்கு புவனாவுடன் விளையாட அன்று மட்டும்தான் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்பா மாலையானதும் புறப்பட்டு விடுவார். என்னால் வேறு என்ன செய்ய முடியும். நான் அன்று மிகத் துயரத்துடன் தான் புவனாவைப் பிரிந்து சென்றேன்.

அதன் பின் நான் புவனாவைச் சந்தித்தது அவளது பூப்புனித நீராட்டுவிழா அன்று தான். அதைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லி விட்டேன். நான் பாடசாலை விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அத்தை வீட்டுக்குப் போக எத்தனை முறை முயற்சித்தும் அது கைகூடவில்லை. நான் க.பொ.த (உஃத) பாஸ் பண்ணியவுடன் என்னை கொழும்பிலுள்ள தனியார் கம்பனியொன்றில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அப்பா. இக்காலத்தில் அத்தை வீட்டுடனான உறவு தூரத்தில் விலகிப்போயிருந்தது.

இப்போது அத்தையின் சாவுச் செய்தி வந்திருக்கிறது. கட்டாயம் நான் போகத்தான் வேண்டும். இது நான் புவனாவைச் சந்திக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கக்கூடும்.

நான் புவனாவின் வீட்டை சென்றடைந்த போது மாலையாகியிருந்தது. எனது உற்றார் உறவினரெல்லாம் அங்கே கூடியிருந்தனர். அத்தையின் உயிரற்ற உடல் பெட்டியில் வளர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நான் நேரே சென்று அத்தைக்கு எனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினேன்.

பின் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் சென்றமர்ந்தேன். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து விசாரிக்கத் தொடங்கினர். என் கண்கள் அங்கிருந்தோரை நோட்டம் விட்டன. எங்கேயும் புவனாவைக் காணவில்லை. நீண்ட நேரமாகியும் புவனா வரவில்லை.

அங்கே கூடியிருந்தோரில் என் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். தூரத்தே பாலா அப்போது தான் வந்து கொண்டிருந்தான். நான் அந்தக் கூட்டத்திலிருந்து மெல்ல விலகிச் சென்றேன். பாலாவை வழிமறித்து ஓரமாக அழைத்துச் சென்றேன். “ஏன் இங்கே புவனாவைக் காணவில்லை’.

அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான்.

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மண்டையில் கூரிய ஊசி கொண்டு குத்தியது போலிருந்தது.

“புவனா செல்வராசாவுடன் ஓடிப் போய் விட்டாள். அந்த சோகத்திலேயே அத்தை மனமுடைந்து நோயாளியாகி செத்துப் போய் விட்டார். தன் மரணத்துக்குக் கூட அவளை வரக் கூடாது என்று அத்தை கூறி விட்டாள்’.

அதன் பின் பாலா என்ன சொன்னான் என்பது என் காதுகளுக்குக் கேட்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *