(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம்-22
“இது புலிமேல் செய்யும் சவாரி ரூபிணி… நான் புலி வாலைப் பிடித்து விட்டவன்.. இனி இதை விட முடியாது.. என்ன ஒன்று இந்தப் புலி சைவப் புலி… ஆளை அடிக்கும்.. கொன்று திண்காது… குறுக்கு வழியில் போகாது.. ஒருவன் மற்றவரை தன் நேர்மையால் கூட அஞ்ச வைக்க முடியும்.. நான் நேர்மையானவன் ரூபிணி.. என்னிடம் இருக்கும் பணம்.. நான் நேர்வழியில் சம்பாதித்து குவித்த பணம்.. நிழல் உலக தாதாக்கள் என்னைக் கண்டால் நடுங்குவார்கள்.. ஆனால் நிழல் உலகின் வியாபாரங்கள் என்னிடம் இல்லை… இந்த ஹரிஹரன் மீன் பிடித்து ஏற்றுமதி செய்வதில் இருந்து ஹோட்டல்.. காலேஜ்.. என்று ஆயிரம் தொழில்கள் செய்கிறவன்… கஞ்சா கடத்துகிறவனோ.. கடத்தல் தொழில் செய்கிறவனோ இல்லை.. போலீஸ் முதல் பொறுக்கி வரை என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள்… அரசியலில் பெரிய பெரிய தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டன் வரை என் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்பார்கள். நான் கேட்பது எதுவாக இருந்தாலும் உடனே செய்தும் கொடுப்பார்கள்…”
“அது பயத்தினால் வந்தது தானே…”
“இல்லை என் மேலிருக்கும் மதிப்பு மரியாதையினால் வந்தது. கடலூர்.. விழுப்புரம்.. பாண்டிச்சேரி.. என்ற மூன்று பெரிய நகரங்களிலும் நான் கொடி கட்டிப் பறக்கிறவன்.. இது என் ராஜ்யம்… இங்கேயிருக்கும் அரசியல்வாதிகளுக்கு என் தயவு எப்போதும் தேவைப்படும்.. ரவுடிகளுக்கோ நான் சிம்ம சொப்பனம்…”
“அதுதான் எப்படி வந்தது…”
“என் விதி.. வந்துவிட்டது.. ரூபிணி.. நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்தபோது என் தாயும் தந்தையும் என் கண் முன் வெட்டப்பட்டு துடிதுடித்து இறந்து போனார்கள்… அது உனக்குத் தெரியாது..” ஹரிஹரனின் குரலில் கண்ணீர் இருந்தது.
“ஐயையோ.. எதற்காக?” ரூபிணி துடிதுடித்து விட்டாள்.
“என் தகப்பனாரின் மீன் பதனிடும் தொழிற்சாலையை அபகரிக்க.. என் அப்பா சிறிய அளவில் ஆரம்பித்து வளர்த்த தொழில் அது.. அதை விற்று விடுமாறு ஒரு ரௌடி அவரை வற்புறுத்தினான். அவர் மறுத்துவிட்டார்…”
“அவன் ஏன் உங்கள் அப்பாவின் தொழிலை குறி வைத்தான்.”
“கடலும்.. கடல் சார்ந்த தொழில்களும்.. ரௌடிகளின் கையில் இருந்த காலம் அது. மீனை ஏற்றுமதி பண்ணுகிறேன் என்று சொல்லி கஞ்சாவை கடத்தலாம்.. அதனால் கேட்டிருக்கிறான்.. என் அப்பா மறுத்துவிட்டார். அவர் கனவு கண்டு உருவாக்கிய தொழில் அது. அவரது ரத்தத்தை வியர்வையாய் சிந்தி அவர் பாடுபட்டு உருவாக்கிய தொழிற்கூடம் அது. என் அப்பா வசதியானவர்தான்… ஆனால் பணக்காரர் இல்லை. மூன்று வேளை சாப்பாடும் வாழ்நாள் முழுவதும் வாழ சொந்த வீடும்.. உடுத்திக் கொள்ள நல்ல துணிமணிகள் வாங்கிக் கொள்ளப் பணமும் கொண்டவர் அவ்வளவுதான். வீட்டை விற்றுத்தான் தொழிலை ஆரம்பித்திருக்கிறார். அம்மா பயந்திருக்கிறார்கள்… ஆனால் அப்பாவின் விடா முயற்சியில் தொழில் வளரவும் அமைதியாகி விட்டார்களாம்… ஆறே வருடத்தில் தொழிலையும் வளர்த்து சொந்தமாய் புது வீட்டையும் வாங்கி விட்டார் அப்பா.”
“உங்கள் அம்மா சந்தோசப்பட்டிருப்பார்கள்.. ”
“ஆமாம்.. புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறிய அன்று அம்மாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சி இன்றும் என் நினைவில் நிற்கிறது.. அந்த வீடு பாண்டிச்சேரியில் இருக்கிறது…”
“நீங்கள் இப்போது அங்கே குடியில்லையா?”
“இல்லை… அதைக் கோவிலாக மாற்றியிருக்கிறேன். என் பெற்றோர் குடியிருந்த கோவில் அது…”
அவனது துயரம் அவளை உலுக்கியது.. பெற்றவர்கள் கண் முன் வெட்டப்பட்டால் எந்த மகன்தான் பொறுத்துக் கொள்வான்…?
“பொறுத்துக் கொள்ள முடியவில்லை ரூபிணி.. எவ்வளவு கேட்டும் என் அப்பா தொழிற்சாலையை விட்டுக் கொடுக்க மறுத்ததால் கோபம் கொண்ட அந்த ரௌடி என் பெற்றவர்களை என் கண் முன் கொன்று விட்டான். என் அப்பாவை என் முன்னாலேயே வெட்டி மண்ணில் சாய்த்தான். என் தாய் கத்திக் குத்துடன் என் அப்பாவின் மடியில் விழுந்து இறந்து போனார்கள்.. ரூபிணி…” ஹரிஹரனின் குரல் கரகரத்தது.
“சொல்லுங்கள்…” ரூபிணி அழுது கொண்டிருப்பதை ஹரிஹரனுக்கு அவளது குரல் உணர்த்தியது. தன் சுகத்தில் பங்கு கொள்ள ஆயிரம் பேர் இருந்தாலும்.. சோகத்தில் பங்கு கொள்ள யார் வருவார்கள் ? நெஞ்சம் கலந்தவளின் நேசத்தில் கட்டுண்ட ஹரிஹரன் தொடர்ந்து தன் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கூறிக் கொண்டு வந்தான்.
“நாங்கள் மூன்று பேரும் கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தோம்… அப்போதுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. என் அப்பாவும் அம்மாவும் துடிதுடித்து இறக்கும்போதும் திரும்பத் திரும்ப கதறிய வார்த்தைகள் என்ன தெரியுமா ரூபிணி? ‘ஹரி.. ஓடிவிடு..’ ” ஹரிஹரன் பேச முடியாமல் மௌனமானான்.
ரூபிணி தவித்தாள். அந்தத் துயரம் மிகுந்த தருணம் அவளது கற்பனைத் திரையில் தோன்றியது. இறந்து கொண்டிருக்கும் கடைசி வினாடிகளில் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு பெற்றவர்கள் என்ன சொல்லுவார்கள்? அவர்கள் உயிரைக் கொடுத்து வளர்க்கும் பெற்ற மகனின் உயிரைக் காக்கத்தான் துடிப்பார்கள்.. ‘ஓடிவிடு’ என்றுதான் கதறுவார்கள்.
“நான் ஓடினேன் ரூபிணி. என்னைத் துரத்தி வந்த ரௌடிகளின் பிடியில் அகப்படாமல் ஓடினேன்… என்னைப் பெற்றவர்கள் சடலங்களாய் மண்மேல் கிடக்க.. குனிந்து மண்ணை அள்ளி என்னைத் துரத்தி வந்தவர்களின் முகத்தில் வீசிவிட்டு நிற்காமல் ஓடினேன்..” ஹரிஹரன் கூறிக் கொண்டிருந்தான்.
அத்தியாயம்-23
“நிற்காமல் ஓடினேன் ரூபிணி.. என் தாய்மாமனின் மடியில் போய் விழுந்தேன். அவர் திண்டிவனத்தில் இருந்தார். சாதாரண மில் தொழிலாளி… என் அம்மாவின் அண்ணன். தொழிற்சங்கவாதி… கம்யூனிசக் கூட்டங்களில் பேசுகிறவர்.. சிவப்புச் சிந்தனைகள் கொண்டவர்… கொதித்து எழுந்தார்.. அவரது சங்கத் தோழர்கள் அவருடன் நிற்க… என் தாய் தந்தையின் சடலங்களை போலீஸ் ஸ்டேசன் முன்னால் போட்டு உண்ணாவிரதம் இருந்தார்.. அந்த ரௌடி கைது செய்யப்பட்டான்… என் பெற்றோர்களின் உடலுக்கு நான் இறுதிக் காரியங்களை முறைப்படி செய்து கொள்ளி வைத்தேன்…”
ரூபிணி இப்போது வாய் விட்டு அழ ஆரம்பித்தாள். ஹரிஹரன் அழவில்லை. வெறி கொண்ட குரலில் வெள்ளாடாக இருந்தவன் வேங்கையாய் மாறிய கதையைச் சொல்லிக் கொண்டு வந்தான்..
“அந்த ரௌடி மறுநாளே வெளியில் வந்து விட் டான்… அவனது அரசியல் செல்வாக்கின் முன்னாலும் பணபலம் படைபலத்தின் முன்னாலும்.. என் மாதச் சம்பளம் வாங்கும் தாய்மாமனால் எதிர்த்து நிற்க முடியவில்லை… மனைவி.. பெற்ற குழந்தைகளின் எதிர் காலம்.. என் மாமா பொறுமையானார்.. ஆனால் நான் பொறுமையாகவில்லை… பொறுமையாய் இருப்பது போல் நடித்தேன். என் மாமாவின் உதவியுடன் சென்னையில் ஹாஸ்டலில் இருந்து படித்தேன். அடுத்த ஆறே வருடங்களில் என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது போராடச் சக்தியுடன் வெளி வந்தேன்.. ரூபிணி.. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். எடுக்க வேண்டும்.. சென்னையில் ஒரு அன்டர்கிரவுண்டு தாதாவை அவருடைய எதிரிகள் சுட்டுவிட்டார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வரை நான் காப்பாற்றினேன். என்ன வேண்டுமென்று கேட்டார்.. அந்த ரௌடியின் உயிரும்… என் அப்பாவின் தொழிற்சாலையும் வேண்டுமென்று கேட்டேன். இரண்டுமே எனக்குக் கிடைத்தன. எந்த இடத்தில் என் தாய் தந்தையர் என் கண் முன்னாலேயே ரத்தம் சிந்தி இறந்தார்களோ… அதே இடத்தில் அதே மண்ணில் என் கண் முன்னால் அந்த ரௌடி ரத்தம் சிந்தி செத்தான். என் அப்பாவின் தொழில் என் கைக்குள் வந்தது. அன்று நான் முடிவெடுத்தேன்.. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது.. வல்லவனாகவும் இருக்க வேண்டும்.. பணபலம் இருந்தால் மட்டும் போதாது.. படைபலமும் வேண்டும்.. அந்த ரௌடியின் கும்பல் என்னைத் தாக்க வந்தது.. அவர்களை அவர்கள் தொழில் செய்த கடலிலேயே ஒரே ஒரு வெடிகுண்டை அவர்கள் வந்த படகின் மேல் வீசி நடுக்கடலில் வெடித்துச் சிதறச் செய்து கூண்டோடு அழித்தேன்.. ரூபிணி.. அவர்கள் அனைவரும் கொலை.. கொள்ளை.. கடத்தல்களைச் செய்தவர்கள்.. போலீஸின் என் கவுண்டர் லிஸ்டில் இருந்தவர்கள்.. அவர்களைத் தீர்த்தது நான்தான் என்பது போலீஸிற்கு நன்றாகத் தெரியும்… ஆனால் சாட்சி இல்லையென்று கேஸை மூடினார்கள்… அதன் பின்னால் நான் விரும்பாமலேயே எனக்கு ‘தாதா’ பட்டம் வந்துவிட்டது…”
“உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் நீங்கள் செய்ததைத்தான் செய்திருப்பார்கள்…”
ரூபிணியின் வார்த்தைகள் தென்றலாய் ஹரிஹரனின் நெஞ்சம் வருடின.
“இரவு பகலாய் உழைத்தேன்.. அப்போது வேறு சில ரவுடி கூட்டங்களின் தொந்தரவு ஆரம்பித்தது.. என்னிடமிருந்த ஆள் பலத்தால் அழித்தேன்.. மெல்ல வளர்ந்தேன்.. என்னை அணுக ரவுடிகள் பயந்தனர்.. என் செல்வாக்கும் வளர ஆரம்பித்தது. என் தயவு தேவைப்படும் அரசியல்வாதிகளுக்கு கட்சி பேதம் பார்க்காமல் உதவி செய்ய ஆரம்பித்தேன்.. பதிலுக்கு அவர்கள் பொறுப்பிற்கு வந்ததும் நான் எது கேட்டாலும் செய்து கொடுக்க ஆரம்பித்தனர். வேறு புதுத் தொழில்களை ஆரம்பித்தேன்.. இன்று இந்த உயரத்தை வந்தடைந்திருக்கிறேன். ரூபிணி.. நான் கத்தியைத் தூக்கியது தீய சக்திகளை அழிப்பதற்காக.. அப்பாவிகளை அழிப்பதற்காக இல்லை… நான் விரும்பாமலே எனக்கு தாதா பட்டம் கிடைத்துவிட்டது… அதிலிருந்து வெளியே வர நான் முயலவில்லை.. என்னைப் பொறுத்தவரை என் எல்லைக்குள் எந்த ரௌடியும் முளைத்துவிடக்கூடாது.. கண் முன்னே பெற்றோர்களை கொல்வதைப் பார்த்த துயரம் என்னோடு போக வேண்டும்… இன்னொரு ஜீவனுக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்து விடக்கூடாது.. அதற்காக நான் மாட்டிக் கொண்டதுதான் இந்தப் பூச் சாண்டி முகமூடி.. நான் எதிர் பார்த்தபடியே.. இது ஹரிஹரனின் ஏரியாவாகி விட்டது.. இங்கே மற்ற நிழல் உலக தாதாக்கள் நுழையாமல் விலகினார்கள்…”
“உங்களைக் கண்டு அவ்வளவு பயமா?”
“பயம் என்று சொல்வதை விட இது நிழல் உலக தாதாக்களின் கொள்கை.. அவர்கள் வகுத்துக் கொண்ட விதிமுறை என்று சொல்லலாம். ஒருவரின் ஏரியாவிற்குள் இன்னொருவர் நுழைய மாட்டார்கள்.”
“செய்வது அநியாயம்.. இதில் இப்படி ஒரு நியாயமா?”
“யார்தான் அநியாயம் செய்யவில்லை? இந்த உலகில் முழு நியாயவாதி என்று ஒருவரை விரல் நீட்டி சொல்லி விடு.. பார்க்கலாம்.. யாரும் கிடையாது.. ஏன்.. நீ கூடத்தான் என்னிடம் இருந்து விலக முயன்றாய்.. அது எனக்குச் செய்த அநியாயம் இல்லையா…?” ஹரிஹரன் சிரித்தான்.
“உங்களை.. எதற்கு எதை இணை சேர்க்கிறீர்கள்..” ரூபிணி பொய் கோபத்துடன் சினந்து கொண்டாள்.
“விளையாட்டுக்குச் சொன்னேன்… ஏன் உன்னிடம் நான் விளையாடக் கூடாதா?”
“கொஞ்சினது போதும். விசயத்துக்கு வாங்க…”
“ரூபிணி.. யாரையுமே மலிவாய் எடை போட்டு விடக்கூடாது. மடிப்புக் கலையாத சலவை உடுப்புடன் சமூகத்தில் உயர் அந்தஸ்துடன் உலவும் மனிதனின் மறுபக்கம் எவ்வளவு மோசமானது என்று உனக்குத் தெரியாது. அந்த வகையில் தாதாக்கள் நேர்மையானவர்கள். நட்புக்காக உயிரைக் கொடுக்கும் தாதாவும் இருக்கிறான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கும் தாதாவும் இருக்கிறான். கோஷ்டி மோதலில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெட்டிக் கொள்வார்கள். ஆனால் ஒருவரின் குடும்பத்திற்குள் மற்றவர்கள் நுழைய மாட்டார்கள்.. அவர்கள் ஒரு மாதிரியான தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ரூபிணி…”
”உங்கள் பெற்றோரை கொன்றது ஒரு ‘தாதா’ அதை மறந்து விட வேண்டாம்…”
“அவன் ரௌடி.. தாதா இல்லை.. புரிந்து கொள். அதனால்தான் அவனை நான் கூண்டோடு அழித்த போது என் பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு ஒருவர் கூட அவனுக்கு ஆதரவாக வரவில்லை… அவர்கள் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல்கள்தான்.. அதை செய்வதிலும் அவர்களுக்கென்று சில நியாயங்களுடன் செய்வார்கள்.. முக்கியமாக அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்வதில்லை ரூபிணி.. நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தவன் என்று ஒருவனைக் கூட கூற முடியாது… மாறாக அவர்கள் நம்பியவர்கள் செய்யும் துரோகத்தினால் பாதிக்கப்படுகிறவர்கள்தான் நிறைய இருக்கிறார்கள்.”
“விட்டால் இந்த இரவு முழுக்க தாதாவின் புகழ் பாடுவீர்கள் போல…”
“அவனும் மனிதன்தான்.. அவனுக்கும் சில நியாயங்கள் உண்டு என்று கூறினேன் அவ்வளவுதான்.. இப்போது சொல் ரூபிணி.. என்னைக் கண்டு நீ அஞ்சுகிறாயா?”
ரூபிணி யோசித்தாள்… அவன் மேல் அச்சம் வரவில்லை… மாறாகக் காதல் வந்தது. கண்மூடிப் பாடினாள்.
“நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்..
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்….
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்…”
அத்தியாயம்-24
ஹரிஹரனின் காதுகளில் தேன் பாய்ந்தது. எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாள் இவள்?
ஹரிஹரனுக்கு இந்த அனுபவம் புதிது. பெண்களைப் பார்த்திருக்கிறான்.. பழகியிருக்கிறான். ஆனால் எவர் மீதும் வராத ஈர்ப்பு இவள் மீது அவனுக்கு வந்தது. அவளின் பார்வை.. பேச்சு.. சிரிப்பு… எல்லாமே அவனை வசீகரித்தது… அவளது மயங்கிய பார்வையில் தன் அழகை முதன் முதலாய் உணர்ந்தான்.. அவளது அருகாமையில் அவனது ஆண்மை சிலிர்த்தது… இதுபோல் முன்பு அவன் இருந்ததில்லை.
ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவதில் இவ்வளவு சுகம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனான் ஹரிஹரன்.
“ஓ.கே… குட்நைட்..” ரூபிணி மனமேயில்லாமல் கூறினாள்.
“அதற்குள்ளாகவா..?” ஹரிஹரன் ஏமாற்றத்துடன் கேட்டான்.
“சரியாப் போச்சு போங்க… மணி என்ன பார்த்தீர்களா? ஒன்றாகிவிட்டது… நாளைக்கு ஆபீஸில் போய் அன்று போல் மயக்கம் போட்டு விழுகவா..? வேண்டாமே..”
“நீ கெஞ்சுவதால் விடுகிறேன்.. பை.. நாளை பேசலாம்.. ” ஹரிஹரன் போனை அணைத்துவிட்டான். ரூபிணி உடைமாற்றிப்படுத்தாள்.. தூக்கம்தான் வரவில்லை.. ஒருவழியாய் கண் மூடி உறங்கிப் போனாள்.
அலுவலகத்தில் ப்ரீதியின் முகம் சரியில்லாமல் இருந்தது.
“ஏண்டி.. என்னவோ போல் இருக்கிறாய்..?” ரூபிணி அக்கறையாய் விசாரித்தாள்.
“டென்சன்தான் வேறு என்ன?”
“வேலை முடியவில்லையா…?”
“வேலையால் டென்சன் இல்லை… வீட்டால் டென்சன்..”
“வீடு என்ன செய்தது?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்கிறது.”
“யாரை..?”
“என் மும்பை அத்தையின் மகனை…”
“யார்..? ஓ.. அன்று நாம் ஹோட்டலுக்கு சாப்பிடப் போன போது வந்திருந்தார்களே.. அவர்களது மகனையா?”
“ஆமாம்..”
“பண்ணிக் கொள்ள வேண்டியதுதானே..”
“எனக்குக் குழப்பமாய் இருக்குடி..”
“எதற்கு குழப்பம்…?”
“ரூபிணி.. நான் ‘யெஸ்’ என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால் உடனே கல்யாணம் நடந்துவிடும். அதற்குப் பிறகு…?”
“இது என்னடி இப்படிக் கேட்கிறாய்..? நானும் உன்னைப் போல் கல்யாணம் ஆகாதவள்தானே.. எனக்கு எப்படித் தெரியும்…?”
“போடி.. நீ வேற.. நான் எதைக் கேட்கிறேன்.. நீ எதைச் சொல்கிறாய்..” சலித்துக் கொண்டாள் ப்ரீதி.
“உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை ப்ரீதி.”
“ரூபிணி.. என் மனம் கலங்குகிறது.. என்னால் முழு மனதாய் சம்மதம் கொடுக்க முடியவில்லை”
“ஏன்..?”
“ஏனென்றால்.. ஏனென்றால்.. ஐ திங்.. ஐ லவ் ஜவஹர்..” ப்ரீதியின் முகம் சிவந்தது.
“ஏய்ய்… இங்கே பாருடா… கள்ளி.. மனதில் மறைத்து வைத்துக் கொண்டு காதலே இல்லையென்று நாடகமாடினாயா?” ரூபிணி கேலி செய்தாள்.
“எனக்கே என்னைத் தெரியவில்லை ரூபிணி. அத்தை வீட்டில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன் சரி சொல்ல முடியாமல் என் மனம் தவித்தது. அத்தைக்கு என்னை அவங்க மகனுக்கு கட்டி வைக்கணும்னு கொள்ளை ஆசை… அன்று அவர்கள் வந்ததே என்னிடம் சம்மதம் வாங்கத்தான்..”
“ஓ… அதனால்தான் உன் அம்மாவின் முகம் என்னைக் கண்டதும் மாறியதா?”
“யெஸ்.. நாங்கள் டிஸ்டர்ப்னெஸ் இல்லாமல் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நினைத்தார்கள்.. நான் முடிவு சொல்லவில்லை.. தட்டிக் கழித்து விட்டேன்”.
”அன்றே உன்மனம் ஜவஹரிடம் ஓடிவிட்டது.. அப்படித்தானே…”
“சரியாய் சொல்லத் தெரியவில்லை… இந்த ராஸ்கல் தான் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து. டார்ச்சர் பண்ணினானே… எப்படியென்று தெரியவில்லை… என் மனம்.. அவர் வசம் ரூபிணி…”
அப்போது ஜவஹர்.
“வெள்ளைக் கமலத்திலே…
அவள் வீற்றிருப்பாள்… புகழ் ஏற்றிருப்பாள்…” என்று பாடியபடியே அவர்களைக் கடந்து சென்றான்.
“அட நீ வெள்ளை நிறத்தில் சுடிதார் போட்டிருக்கிறாயா..? நானே கவனிக்கவில்லை.. அவர் கவனித்து விட்டார் பாரேன்..”
“வேறு வேலை என்ன இருக்கு அதுக்கு?”
“ஏன்டி அப்படிச் சொல்லுகிறாய்… நிறைய வேலை இருக்கே..” ரூபிணி ப்ரீதியிடம் சொல்லிக் கொண்டிருக்கையில்,
“யாருக்கு நிறைய வேலை இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே ரூபிணியின் அருகில் வந்து நின்றான் ஜவஹர்.
“வேறு யாருக்கு? எல்லாம் உங்களுக்குத்தான்.”
“எனக்கா… என்ன வேலை..?”
“பெண் கேட்டுப் போக வேண்டும்… கல்யாண நாள் குறிக்க வேண்டும். இன்விடேசன் அடிக்க வேண்டும். மண்டபம் பார்க்க வேண்டும். ஊரெல்லாம் அழைக்க வேண்டும்..” ரூபிணி அடுக்கிக் கொண்டே போக.
“போதும்டி..” என்றாள் ப்ரீதி நாணத்துடன்.
ஜவஹருக்கு புரிந்துவிட்டது. நம்ப முடியாமல் ரூபிணியைப் பார்த்தான். அவள் சிரித்தாள்.
“பார்ட்டி சம்மதம் சொல்லியாச்சு.”
“எப்படிங்க?”
“அது அவளுக்கே தெரியவில்லையாமே.. உங்களுக்காக மும்பை மாப்பிள்ளையை தட்டிக் கழித்து விட்டாள்…”
“உண்மையாகவா…?”
“நிஜம்தான்… இதோ இவள் இங்குதானே இருக்கிறாள்.. நீங்களே நேரடியாய் கேட்க வேண்டியதுதானே?”
ஜவஹர் ப்ரீதியின் முகம் பார்த்தான். அவள் வெட்கத்துடன் கம்யூட்டரின் திரையைப் பார்த்தாள். சபாபதி அங்கு வர ரூபிணி எழுந்து கொண்டாள்.
“சபாபதி.. வா.. கேண்டினுக்குப் போகலாம்…”
“என்ன வேணும்ன்னு சொல்லுங்க மேடம்.. நான் வாங்கிக் கொண்டு வருகிறேன்…”
“எனக்கு ஒன்றும் வேண்டாம்… உனக்கு என்ன வேண்டும்ன்னு சொல்லு.. நான் வாங்கித் தருகிறேன்..”
“ஏதும் விசேசமா மேடம்..”
“ஆமாம்…”
“என்ன விசேசம் மேடம்?”
“சொல்லுகிறேன் வா…”
சபாபதியைத் தள்ளிக் கொண்டு கேண்டினுக்கு போய் விட்டாள் ரூபிணி. ஜவஹர் ப்ரீதியைப் பார்த்தான்.
“என்மேல் இப்போதுதான் இரக்கம் வந்ததா?”
“காதல் வந்தது…”
ரூபிணியும் சபாபதியும் திரும்பி வந்தபோது அவர்கள் இருவரும் மும்முரமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். சபாபதி அதிசயப்பட்டான்.
”என்ன மேடம் இது. கிழக்கும் மேற்கும் உறவு கொண்டாடுது?’
”என்ன விசேசம்ன்னு கேட்டாயே.. இது தான் விசேஷம்…”
சபாபதி அங்கிருந்து மாயமானான். அடுத்த சில வினாடிகளில் ஆபிஸிலிருந்த அனைவருக்கும் அந்த விசயம் ஒலிபரப்பப்பட்டு விட்டது… சபாபதி ஒரு நடமாடும் பிபிஸி…!
– தொடரும்…
– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.