நுழைபுலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,213 
 
 

பால் பூத்திற்கருகில் வந்தபோது தான் கவனித்தான் ஒரு யானை பால் பூத்திற்கு குறுக்காக நின்று கொண்டிருப்பதை. முட்டுசந்தின் “ட” னா முனையில் அமைந்திருந்த பால் பூத்தின் மறுபக்கம் ஒரு லாரி நின்றிருந்தது. லோடு கொண்டு வந்த லாரியாய் இருக்கலாம். பால் பூத்தை நெருங்கும்போது பால் கவிச்சி வாடை ஒரு மாதிரி குமட்டியது அவனுக்கு. யானையும், லாரியும் பால் பூத்தை மறைத்துக் கொண்டு நின்றதால், அவனுக்கு பால் பூத்திற்கு போக வழியில்லாமல் அடைபட்டு கிடந்தது. கொஞ்சம் நேரம் பாகனைத்தேடியவன், காணாமல் போகவே, நின்று கொண்டிருந்த யானைக்கு அடியில் இடம் இருப்பது தெரிந்து தவழ்ந்து போய்விடலாம் என்று முடிவு செய்தான். கைலியை தூக்கிக் கட்டிக் கொண்டு, யானைக்கு அடியில் போக குனிந்து உள்ளே நுழைந்தான். என்ன நினைத்ததோ, யானை திடீரென்று உட்கார்ந்து விட்டது. மூச்சுத்திணறி, கண்கள் பிதுங்க, கையையும், காலையும் ஆட்டியபடியே வெளியே உடம்பை இழுத்தபோது தரையின் குளுமை உடலில் பட. படக்கென்று முழித்தான். டைம்பீஸை பார்த்தபோது ரேடியம் தடவிய முட்கள் மணி விடிகாலை மூணே முக்கால் என்றது. எழுந்தவன், நாலு மணிக்கு வைத்திருந்த அலாரத்தை அமர்த்தினான்.

உடல் முழுதும் நணைய தொப்பலாய் வேர்த்திருந்தான், கரண்ட் போய்விட்டிருந்தது தெரிந்தது. என்ன மாதிரியெல்லாம் கனவு வருது, அவகிட்ட சொன்னா சிரிப்பா! எதுக்கெடுத்தாலும் எளக்காரம் தான், அதுவும் இவன் விஷயம் என்றால் இன்னும் அதிகம். ”எப்படித்தான் இப்படில்லாம் கனவு வருதோ உங்களுக்கிண்டு?” புஷ்பத்துக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான். கல்யாணத்தன்று கூட, சங்கத்துப் பெரியவர் திருக்குறள் படித்து தாலியெடுத்து தரும்போது அவர் தெற்றுப்பல்லைப் பார்த்து சிரித்து விட்டாள். மைக்கிற்கு முன்னால், தெற்றியப்பற்களுக்கிடையே காத்தும் வார்த்தையும் கலந்து ஒரு விசில் மாதிரி வர, அதுக்கும் சிரிப்பு. இவனுக்கு மேடையில இருக்குறவுங்க என்ன நினைப்பாங்களோ கவலையா இருந்தது. மஹாஜன சங்கத்தில் இருந்து பெரிய ஆட்களெல்லாம் வந்திருந்தார்கள்.

சிரிக்கும்போது கண்கள் சுருங்கி பார்க்க வசீகரமாய் இருப்பாள் புஷ்பம். பொடியா முத்துவைச்ச மூக்குத்தியும், காதை ஒட்டிய இலைத்தோடும், அவளுக்கு அத்தனை பாந்தமாய் இருக்கும். அவள் சிரிக்கும்போது சுருக்கிய மூக்குத்தியும் சிரிப்பது போலிருக்கும் அவனுக்கு. சேர்மக்கனிக்கு நல்ல யோகந்தான்லே! என்று எல்லோரும் சொன்னது, இவனுக்கு பெருமையா இருந்தது. புஷ்பத்தோட அப்பா சுப்ரமணியபுரம் மார்க்கெட்ல தேங்காக்கடை வச்சிருக்கார், நாலு பெண்கள், இவ தான் மூத்தவ. அவளோட அம்மாவின் நிறம் அப்படியே, நல்லா கழுவி ஊற வச்ச வெந்தயம் மாதிரி அப்படி ஒரு நிறம். இவனுக்கு.

குழந்தையும், புஷ்பமும் டிவி ஸ்டாண்ட் ஓரத்தில் வளைந்த மாதிரி உறங்கிக் கொண்டிருந்தார்கள். புஷ்பம் படுத்திருந்த கோணத்தையும், அக்குளில் வியர்வைப்பூத்து, முன்பக்கமாய் வழிந்திருந்த முந்தானையின் ஊடாய் ரவிக்கை தப்பிய வெளுத்த மார்பின் வழி பிரண்டு கிடக்கும், தாலியையும் பார்க்க கிறக்கமாய் இருந்தது சேர்மக்கனிக்கு. அவளின் மார்போடு ஒட்டிக்கொண்டு உறங்கும், பிசுபிசுத்த வாய் பிளந்து உறங்கும் குழந்தையைப் பார்க்க பார்க்க ஆசையாய் இருந்தது. திரும்பவும் அவர்களை கட்டிக் கொண்டு படுக்க வேண்டும்போலத் தோன்றியது, ஆனால் முடியாது. இப்போது கிளம்பி யானைக்கல்லுக்கும், சந்தைக்கும், கீழவாசல், தெற்குவாசல் கமிஷன் கடைகளுக்கும் போகவில்லை என்றால், கடைய ஆறுமணிக்கு திறக்கமுடியாது.

காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, கக்கூஸில் கிடந்த நடுவே துளையிட்ட மரஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு குளிரக் குளிர கிணற்றுத்தண்ணீரில் குளித்தான். ஈரத்துண்டோடு அவன் அப்பா, அம்மாவின் படத்தின் முன்னால் வந்து நின்று சாமி கும்பிட்டுவிட்டு, சூடத்தட்டில் இருந்த விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டான், இன்னைக்குப் பொழுது நல்லா இருக்கணும் மகமாயி என்று வேண்டிக் கொண்டான்.

அடுப்படியில் நுழைந்து காப்பிக்கு டிகாக்‌ஷன் கலந்து வைத்துவிட்டு, இவனுக்கு மட்டும் கொஞ்சம் கருப்பட்டி போட்டு கருப்பட்டி காப்பி செய்துகொண்டான். அவளை எழுப்பாமல், கதவைத் திறந்தவன், சீட்டின் அடியில் சொருகியிருந்த துணியை எடுத்து சைக்கிளைத் துடைத்தான். அது சைக்கிள் வாடகைக்கு விடற கடையில இருந்து வாங்குனது. சிறுவர்களுக்கான சைக்கிள் அது. பெரிய சைக்கிளில் இப்போது கால் எட்டுவதில்லை. சைக்கிளுக்கு வியர்த்ததுபோல முத்துமுத்தாய் பனி இருந்தது, பனியைத் துடைத்து காரியரை விரித்து, அதில் சுற்றியிருந்த பிரித்து மறுபடி கயிறை சீராக சுற்றிக்கொண்டான். கதவை ஓசைப்படாது மூடி, வெளிப்பக்கமாக தாழிட்டான். புஷ்பம் பின்பக்கக் கதவைத் திறந்து முன்வாசல் வந்து விடுவாள், காலையில்.

சந்தையில் காய்கறிகளும், கீழவாசல், தெற்கு வாசல் கமிஷன் கடைகளிலும், பருப்புகள், கருப்பட்டி, வெல்லம், எண்ணெய் எல்லாம் வாங்கிக் கொண்டான். சைக்கிளில் ஏற்றமுடியாத சரக்குகளை ஒரு டிரைசைக்கிள் வாடகைக்குப் பிடித்து அனுப்பினான். வழக்கமாய் வருபவன் என்பதால், அவனே கடைக்கு போய்விடுவான், இவன் போக சிறிது லேட்டாய் ஆனாலும், அவன் காத்திருப்பான். சாயங்காலமாய் போய் ரேஷன் கடை தயாளனைப் பார்க்க வேண்டும், அரைமூடை ஜீனியும், இருபது லிட்டர் மண்ணெண்ணெய்யும் எடுத்து வைக்கச் சொல்லணும். புஷ்பத்தைப் போகச்சொன்னா, அந்தாளு ஒரு மாதிரியா பாக்கான் மாமா! அவ மூஞ்சியும் எச்சி வடிஞ்சா மாதிரி மீசையும் நான் போகமாட்டேஞ்சாமின்னு! சொல்லிடுவா, இவந்தான் போகணும். வாஸ்தவந்தான், அவன் பொம்பளங்கன்னாலே தனிக்கவனமாத்தான் இருப்பான் எப்போதும் என்று நினைத்துக் கொண்டான்.

மீதமிருந்த காசில் கடலை எண்ணெய்யும், ஊமைச்செட்டியார் செக்கில் தும்பை எண்ணெய்யும் வாங்கிக் கொண்டு சைக்கிளை மிதித்தவனின் வலது கெண்டைக்காலில் இருந்து நீர் கசிந்து, வழிந்து ரப்பர் செருப்பில் ஒட்டியது. வழிந்தது தெரியவில்லை. ஆனா முன்பை விட இப்போது வலி மட்டும் அதிகமாய் இருப்பதாய்ப்பட்டது. சைக்கிளில் அதிகம் கனமில்லை சில்லறைச் சாமான் கொட்டானும், வத்தல் மூடைமட்டும் தான் இருந்தது. எண்ணெய் டின் இரண்டும் சைக்கிள் ட்யூப்பில் கட்டி இரண்டு பக்கமும் தொங்க விட்டிருந்தது. முன்பெல்லாம் இதை விட அதிகம் கனமான பொருளெல்லாம் சைக்கிளிலேயே தூக்கிவந்திருக்கிறான் சேர்மக்கனி, காலில் அடிபட்ட பிறகு இது எதுவும் முடியவில்லை.

சின்னையாபுரத்துக்கு குடும்பத்துடன் குலசாமி கும்பிட போயிட்டு எல்லாருமா திரும்பி வரும்போது நடந்த ஆக்சிடெண்ட்ல இரண்டு காலிலேயும் கெண்டைக்கால் எலும்பு ரெண்டு உடைஞ்சு போயி ரொம்பவே சிரமப்பட்டான், இன்னும் படுகிறான். அஞ்சு மாசத்துக்கு மேல கடையத் தொறக்கமுடியலை. அவனோட மாமனார் தான் முழுக்க முழுக்க பாத்துக்கிட்டார். சேர்மக்கனியின் பெரியய்யாவுக்கு, முதுகெலும்பு உடைஞ்சு, போன மாதம் வரை உயிரோடு இருந்தவர், போனவாரம் இறந்து போனார். அதுக்கு வேற ஊருக்குப் போகணும். இந்தக் காலை வச்சுட்டு எங்கேயும் போக முடியறதில்லே, சொன்னாப் புரியாது என்ன கருமத்துக்கு சொந்தம்பந்தமெல்லாம் என்று தனக்குத்தானே வாய் விட்டு சொல்லிக் கொண்டான்.

கடையை அடைந்தவுடன் அண்ட்ராயரில் போட்டிருந்த சாவியைத் துழாவி, அடிதண்டாவில் இருக்கும் பூட்டுக்களை முதலில் திறந்து, கதவை ஒவ்வொன்றாக பிரித்து ஒதுக்கி வைத்தான். முன்னால் தார்சாலில் தொங்கிக் கொண்டிருந்த சாக்குப்படுதாவை லேசாக இறக்கிவிட்டான். கடைக்குள் கை விட்டு தென்னமாரை எடுத்துப் முன்வாசலை பெருக்கினான். டிரைசைக்களில் சாமான்கள் கொண்டு வந்தவன், கடைக்குள் இறக்கிவிட்டு, தலைப்பாகையில் இருந்து எடுத்த பீடியைப் பத்தவைத்துக் கொண்டான்.

அண்ணே! எப்படிண்ணே யாவாரமெல்லாம், போயிக்கிட்டு இருக்கு? என்றான் வந்தவன், பல்லில் பீடியின் நுனியைக் கடித்துக் கொண்டே.

நீதான் பாக்குறேல்ல பாண்டி! சாமான் எவ்வளவு வாங்கிட்டு வந்தேன்னு! இந்த அரிசியும் பருப்பும், ஒரு மாசத்துக்கு ஓடும்! பலசரக்குக் கடை மாதிரியா இருக்கு! ஸ்டிக்கர், லக்கிபிரைஸ், வாடகை சைக்கிள், சின்னப்புள்ளைகளுக்கு தீப்பெட்டிப்படம், பாட்டுபுஸ்தகம், பிளாஸ்டிக் சாமான் இது தான் அதிகமா ஓடுது. பலசரக்கு மட்டுமேன்னு இருந்திருந்தா அவ்வளவு தான்! இந்த லட்சணத்தில கடஞ்சொல்ற கிராக்கி தான் நிறைய்ய இந்த தெருவுல. அதே எங்க மொதலாளி தங்கராஜண்ணே கடைக்குப் போய்ப் பாரு, ஒரு பய கடஞ்சொல்லமாட்டான். நமக்கு வர்றவன் போயிடக்கூடாதேன்னு பயம். சரி ஒங்கிட்ட பொலம்பி என்ன பண்ண? எவ்வளவு ஆச்சு என்று பேசி அவனிடம் கூலியைக் கொடுத்து அணுப்பி வைத்தான்.

கடையைத் திறந்ததும் முதலில் ஒரு தேங்காயை எடுத்து உடைப்பான். முதல்ல உடைக்கிற தேங்காய்த் தண்ணீரை அப்படியே தரையில் விட்டுவிடுவது தான் வழக்கம். அவங்க அய்யாகிட்ட இருந்து இப்ப அவனும் அதையே பழகிவிட்டான். உடைத்த தேங்காய் மிச்சமிருந்தாலும், புதிதாய் தேங்காய் உடைக்கவேண்டும். மற்ற நேரங்களில் சிறு பிள்ளைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களை அழைத்து சிரட்டையில் தேங்காய்த் தண்ணீர் தருவது சேர்மக்கனிக்கு வழக்கம். தேங்காய் உடைத்தபிறகு, பத்தி கொளுத்தி வைத்து, தராசுத் தட்டில் சூடம் ஏற்றி, அவன் அப்பா, அம்மா படத்திற்கு, சின்னய்யாபுரம் பேச்சிக்கு எல்லாம் காட்டி பயபக்தியாய் சாமி கும்பிட்டான்.

வாங்கிவந்த காய்கறிகளை சரிபார்த்தவன், முன்னால் வைத்திருக்கும் கூடைகளிலும், கொட்டான்களிலும் பரப்பி வைத்தான். உள்ளிருந்து வாடகைக்கு விடும் சைக்கிள்களை வெளியே நிறுத்தினான், லக்கிபிரைஸ் அட்டைகளையும் வெளியே எடுத்து மாட்டினான் கடைக்குள் நுழைந்து சின்ன மரஸ்டூலை இழுத்து, கால்களை நீட்டி உட்கார்ந்தான். கால் புண்களில் வழிந்த நீரை, அப்போது தான் கவனித்தான். அங்கிருந்த பேப்பரை கிழித்து துடைத்தான், பிறகு வேறொன்றை எடுத்து ஒட்டியது போல வைத்தான். ஈக்களுக்கு எப்படித்தான் தெரியுமோ, உடனே கால்களில் வந்து மொய்க்க ஆரம்பித்து விட்டது. ஈ ஒண்ணொன்னும் மாட்டு ஈ கணக்கா பெரிசா இருந்தது. அது புண்ணில் உட்காரும்போது வலி மண்டைக்குள்ள ஏறும் தாங்க முடியாது. கடை ஒண்ணும் பெரிசு இல்லை, வெறும் ஆறுக்கு நாலு தான், அதனால தாராளமா ஒண்ணும் நீட்டமுடியாது. இருப்பதற்குள்ளேயே சமாளிக்கணும். உள்ள வச்ச பிளேட்ட எப்ப எடுக்குறதுன்னு தெரியலை.

காந்தியக்கா மகன் டவுசரில் அண்ணாக்கயிற்றை ஏத்திக்கிட்டே வந்தான். அண்ணாச்சி! சைக்கிள் குடுக்கீயளா? அப்பாவுக்கு டீ வாங்கியாறனும்னு, கையில் இருந்த தூக்குவாளிய ஆட்டிக்கிட்டே கேட்டான். காசு எவ்வளவுடா வச்சிருக்கே? எட்டணா என்றவனிடம் இருந்து காசை வாங்கிக் கொண்டு போயிட்டு பெரிய முள்ளு ரெண்டுக்கு வரும்போது வந்துடணும் என்று கடிகாரத்தைக் காட்டினான். வாங்கிக் கொண்டு பறந்தான் காந்தியக்கா மகன். புஷ்பம் வந்தாள், முகம் கழுவி புதிதாய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். அவள் கையில் தூக்குப்போணி இருந்தது. காலையில் ஏழு மணிபோல சரியா வந்துடுவாள் டீத்தண்ணிய எடுத்துக்கிட்டு. கழுத்தை முந்தானையில் துடைத்தபடியே தலைசாய்த்து சிரித்தபடியே வந்தாள். எவ்வளவு அழகு நம்ம பொண்டாட்டி என்று நினைத்துக் கொண்டான்.

மாமா இந்தாங்க டீ! ஜீனி தீந்து போச்சு, கடையில இருக்கிறது எடுத்துப் போட்டுக்கிடுங்க என்றாள். கடையின் எதிரில் இருக்கும் காம்பவுண்டை அப்பப்போ பார்த்துக் கொண்டாள். இவனுக்கு எரிச்சலாய் இருந்தது, டீயக் கொடுக்க வந்தவ, கொடுத்துட்டு வீட்டுக்குப் போகணும் இல்லேன்னா, கடைக்குள்ள வரணும், ரெண்டுமில்லாம அங்க என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு? என்று தோன்ற, அவனேயறியாமல், தாடை எலும்புகள் விடைத்தது. இவ வர்ற நேரம்பாத்து கரெக்டா அவனும் வந்துடுவான், ஊர்ல இருந்தா. வந்துட்டான்! பூப்போட்ட லுங்கி, ஒரு சிகப்புக் கலர் முண்டாபணியன், கழுத்தில ஒரு கருப்புக்கயிறு தாயத்து, வழியிற மீசை, சப்பையா ஒரு மூஞ்சி, கோரை முடி பாக்க சகிக்கமாட்டான், அவன் நிறத்தைத் தவிர வேற ஒண்ணும் கிடையாது. அவன் கூட நின்னு மணிக்கணக்கா பேசுவா!

அண்ணே கத்திரி சிகரெட் பாக்கெட் ஒண்ணு கொடுங்க அண்ணே என்று சொன்னவன், இவளைப் பார்த்து நமக்கெல்லாம் டீ கெடையாதா? என்று ஒருவகையா இழுத்தமாதிரி உரிமையுடன் கேட்பது போல கேட்டான். ம்… எதுல பிடிப்பீக, உங்க லுங்கியிலயா? என்று சொல்லிவிட்டு சிரித்தாள். இவன் கத்திரி சிகரெட் இல்லை பரமா? என்றான். இவனிடம் இருக்கு, கொடுத்தா, பிடிச்சுக்கிட்டு இங்கேயே நிப்பான், அவளும் அவம்போகிற வரை போகமாட்டா! இதெல்லாம் பாத்துட்டு நிக்கணுமா? என்று தோன்றியது அவனுக்கு.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *