கழுத்துப்புண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 9,674 
 

நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார் தான் பொறுத்துக் கொள்வார்கள். வீட்டுக்காரக் கிழவியும் வந்து சத்தம் போட்டுக் கொண்டு இருந்தது. வீட்டுக்காரக் கிழவிக்கு தயவு தாட்சன்யமே கிடையாது, காம்பவுண்டில் ஒரு சின்ன சேதாரம் நேர்ந்து விட்டாலும், அது பேசுவது கேட்க முடியாது. ஆனால் இது சின்ன தவறென்று சொல்ல முடியாது, பெரிய பிரச்னை தான். ஜோதிக்கு கையை ஊணி எழுந்திரிக்க முடியவில்லை, அனவாய் சுவரையும் பிடித்துக் கொண்டு எழுந்த போது மூச்சு வாங்கியது, எட்டு மாசம் தான் என்றாலும், வயிறு பெரிசாகி ரொம்ப சிரமமாய் இருந்தது. ரெட்டைப்பிள்ளை பிறந்து விடுமோ என்று பயமாகவும் இருந்தது. இத்தனை சிரமத்திலும், வீட்டுக்காரர் வேலைக்கு போக ஏற்பாடுகள் செய்து, முரளியை ஸ்கூலுக்கு அணுப்பி விட்டு வந்து விட்டாள். வந்த பிறகு தான் தெரிந்தது இத்தனை பிரச்னையும்.

வீட்டுக்காரக் கிழவி இவளைப் பார்த்ததும் சண்டைக்கு வருவது போல கூடியிருந்தவர்களை தள்ளிக் கொண்டு வந்து வசை மாரி பொழிந்தாள். அவள் வைறதைக் கேட்டு முசுமுசுன்னு அழுகை தான் வந்தது இவளுக்கு. நிறுத்த முடியலை அதுவும் நிறுத்தின பாடாய் இல்லை. எல்லாரும் மன்னிச்சுக்கிடுங்க, நான் வந்து சுத்தம் பண்ணித்தாரேன்! என்று கையெடுத்து கும்பிட்டவாறே கெஞ்சுவது போல பேசினாள். பக்கத்து வீட்டில் குடி இருக்கும் நாகு வெளியே வந்து, சரித்தா, ஜோதியக்கா சுத்தம் பண்ணிடும், அது என்ன செய்யும் பாவம், அவுக அத்தை பண்ண கூத்துக்கு என்று இவளுக்கு வக்காலத்து வாங்கி, வீட்டுக்காரக் கிழவியை அணுப்பி வைத்தாள்.

அளுகாதீங்கக்கா! அது கிடக்கு! அத்தையை, உங்க வொதுனை வீட்டுக்கு அணுப்பிடுக்கா! அங்க அது பாட்டுக்கு எங்கிட்டு திரிஞ்சாலும் குத்தமில்ல, அது தான் வசதி கூட. சின்ன ஊரு, சுத்தி சொந்தக்காரவுஹ வேற இருப்பாக? வயித்த வேற தள்ளிக்கிட்டு, இத்தனை லோல் படணுமாக்கா! அண்ணன்கிட்ட பேசறது தானே! அண்ணன் புரிஞ்சுக்கிட மாட்டாரா என்ன? என்று தேறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தாள். நாகு போனவுடன், கதவை மூடி விட்டு அடுப்படியில் உட்கார்ந்து அழுதாள், இயலாமையில் அழுகை தவிர ஆறுதல் இல்லை. அம்மா இல்லாதது எவ்வளவு பெரிய குறை என்று தோன்றியது அவளுக்கு.

கோமதி அம்மாள் தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். ஜோதியின் மாமியார். மாமனார், முரளி பிறந்த ஒரு வருஷத்திலேயே இறந்துவிட்டார். தண்ணி கொண்டு வா! என்று நெஞ்சை பிடித்தவர், நொடிகளில் தண்ணீர் குடிக்காமலே இறந்து விட்டார். ”அவம்பொறந்த நேரந்தான், மகராசன் போயி சேந்துட்டாரு”ன்னு எப்போதும் புலம்புவாள் ஜோதியோட மாமியார். அதனால முரளியக் கண்டாலே பிடிக்காது, ஒரு வெறுப்பு. அவன் பக்கத்துல போனாலே சிடு சிடு என்பாள். தலைல கல்லப் போடலாமா என்று மனசுக்குள் தோன்றும். என்ன மனுஷி இவ, எட்டு பத்து பிள்ளைய பெத்தும், குழந்தையக் கண்டா ஒரு பிரியம் இல்லையே என்று தோன்றியது. ஜோதியின் மாமியாருக்கு, மாமனாரை விட இரண்டு வயது அதிகம். சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று, மாமியாருக்கு பதினாறு வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைத்து விட்டார்கள் போல.

ஆறேழு வருஷம் கழிச்சு வரிசையா பத்து அல்லது பதினொரு பிள்ளைகள். இன்னைக்கும் இருப்பது மூணு மாத்திரம் தான். அதிகம் போனா எழுபது வயசு தான் இருக்கும். மாமனார் இறந்து பதினாறாம் நாள் காரியம் முடிந்தது, ரவிக்கை போடுவதை நிறுத்திவிட்டாள். வெறும் சுங்கடிச் சேலை, இல்லேன்னா, ஒன்பது கெஜம் சொசைட்டி சேலை. காலையில், குளிச்சிட்டு, சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு நெத்தி நிறைய துன்னூரைப் பூசிட்டு வந்து உட்கார்ந்ததுக்கு அப்புறம் தான் காஃபியே குடிப்பாள். அப்படி ஒரு சுத்தபத்தமான ஆளாகக் காட்டிக் கொள்வாள் எப்போதும்.

கோமதி அம்மாளுக்கு. ஞாபகமறதி அதிகம் வருகிறது இப்போதெல்லாம். ஞாபகமறதின்னா, வச்ச பொருள் எங்கேங்கிற மாதிரி இல்லை. புள்ளையவே மறக்குற மறதி… வீட்டோட வழி மறக்குற மாதிரி… சாப்பிட்டுக் கொஞ்ச நேரத்துலேயே… இவ ஒண்ணும் குடுக்க மாட்டிங்கா! என்று குற்றம் சொல்வது மாதிரி. இட்லிய அவிச்சு அவிச்சு இறக்குறா, இவ்வளவு நேரமாச்சு இன்னும் பலகாரம் கொடுக்கல்ல! இதுக்கு சின்னவன் வீட்டுக்கே போயிடலாம், ரெண்டு வசவோட பழையதாவது ஊத்துவா! என்று வீட்டுக்காரக் கிழவியிடமும், காட்டூரணி ரேணுகாவிடமும் புலம்புவாள். கடைசி வீட்டு ரஞ்சிதத்துக்கு, சொல்லவே வேணாம், மத்தவுகளாவது, அடி ஆத்தின்னு கேட்டுட்டு விட்டுடுவாக. ரஞ்சிதம் இன்னும் கூடுதலாய், அடிப் பாதகத்தி என்ற அளவுக்கு ஈரப் பேனாக்கி பேன பெருமாளாக்கிடுவா.

இன்று காலைல எழுந்து வழக்கமா கக்கூஸில் போவதை விட்டு, கிணத்தடியிலேயே போய்விட்டாள் ஜோதியின் மாமியார். பதினொரு வீடுகள் இருக்கிற காம்ப்வுண்டில் இது போல செய்தால்?. அதோட நிற்காமல், வெளியவே போயிட்டது தப்புண்ணு தோனி, அதை சுத்தம் செய்வதாய் நினைத்து கையில் எடுத்து கக்கூஸில் போட நினைத்திருக்கிறாள் போல. எடுத்து வழியெல்லாம் சிந்தி, வழித்து திரும்ப அள்ளி, கையெல்லாம், சீலைத்துணியெல்லாம் நரகல். அதோடு நிற்காமல் வாரி அலசி விட நினைத்து, கிணற்றில் நீர் சேந்த ஆரம்பித்திருக்கிறாள். ராட்டினக்கயிறு, ராட்டினம், கிணற்று மேல் உறை எல்லாம் நரகல். இதைப் பார்த்ததும் தான் வீட்டுக்கார கிழவி கத்த ஆரம்பித்து விட்டாள் போல. இதை எப்படி சுத்தம் பண்ணுவது என்று நினைக்கும் போதே அவளுக்கு குமட்டியது. அவரிடம் எது சொன்னாலும் எடுபடாது, கொஞ்ச நாளைக்கு இருக்குமா? அணுசரிச்சுக்கோ என்று சொல்லிவிடுவார். நாகு சொல்வது போல, ஜோதியின் கணவர் புரிந்து கொள்கிற ஆளில்லை. இதுபற்றி அவள் பேசியபோதெல்லாம், முடியாதென்று மறுத்து தான் இருக்கிறார்.

”அங்கெல்லாம் அணுப்பமுடியாது ஜோதி! எங்க அக்கா புருஷன் ஒழுங்கா பாத்துக்க மாட்டாரு. வாசத்திண்ணையில கிடத்திடுவார், அது பாட்டுக்கு, சீந்து வாரில்லாம கிடக்கும். இதப்பத்தி பேசுனாலே போ, மாசாமாசம் முன்னூறு நானூறு ரூவா அணுப்பச் சொல்லுவார், நம்மால முடியாது. அதுக்கு இங்கேயே வச்சுட்டு சிரமத்தோட சிரமமா நாம பாத்துக்குறது தான் தேவலை” என்று முற்றிலும் மறுத்து விட்டார். அவருடைய அக்கா பொண்ணை வந்து பாத்துக்கொள்ள சொன்னபோதும் அணுப்பவில்லை. நாத்தனார் வீட்டிலிருந்து, ஒத்தாசைக்கு யாரும் இல்லாம கஷ்டப்படும் போது உதவிக்கு ஒரு வாரம் சமைஞ்ச குமரிகள்ல ஒண்ணை அணுப்பிச்சா என்ன குறைந்து விடப்போகிறார்கள் என்று தோன்றும். ஆனால் பேசிப் பலனில்லை. இரும்பு வாளியை தண்ணீரோடு தூக்கிக் கொண்டு நடந்தாள். நாகு வீட்டைத் தாண்டும் போது, மேலும் தூக்க முடியாமல் நங்கென்று அங்கேயே வைத்துவிட்டாள். நாகு! என்று குரல் கொடுத்தாள். நாகு கிணற்றடி வரை வாளியைத் தூக்கி வந்து கொடுத்தாள்.

நான் தண்ணீ ஊத்துறேன்க்கா, நீங்க கழுவுங்கக்கா என்று ஊற்றினாள். ராட்டினக்கயிற்றை முழுதும் இழுத்து வெளியே விட்டுக் கழுவினாள். புழங்கிய இடத்தில் எல்லாம் நீர் வாரி ஊற்றியதில் இடுப்பு பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது. இரவில் வெந்நீர் வைத்து ஊற்ற வேண்டும் இடுப்பிலும் என்று நினைத்துக் கொண்டாள். நாகுவின் உதவி கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது. மொத்தமும் கழுவி நிமிர்ந்து, முரளிக்கு சாப்பாடு கொண்டு போக வேண்டும் என்று அவசரமாக முடித்து விட்டு, நாகுவின் கையைப் பிடித்துக் கொண்டு நன்றியாய் பார்த்து சிரித்தாள். நாகுவைத் தவிர வேறு யாரும் பெரிதாய் உதவிக்கு வருவதில்லை இந்த காம்பவுண்டில். ஆனால் உச் கொட்டி கதை கேட்க ஆட்கள் அனேகம் உண்டு.

வாளியையும் தென்னமாரையும் கழுவி விட்டு, வீட்டிற்கு திரும்பினாள். எலும்பு சூப்பை தூக்குச்சட்டியில் ஊற்றிக்கொண்டு, பருப்பும், நெய்யும் சேர்த்து பிசைந்த சாதத்தையும், மிளகுக்கறியையும் எடுத்து வயர்கூடையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள், முரளிக்கு சாப்பாடு கொடுக்க.

வாசலைக் கடந்து தெருவில் காலை வைத்தபோது, மாணிக்கம் கடையின் முன்னால், கோமதி அம்மாள், அவளைக் கடந்து போகும் யாரோ ஒருவரிடம், காசு கேட்டுக்கொண்டிருந்தாள். ஜோதிக்கு அவமானமாயிருந்தது, எத்தனை செய்தாலும், போய் மற்றவரிடம் கையேந்துவது கண்டு கலக்கமாய் இருந்தது. முரளிக்கு ஏதாவது வாங்கி வரும்போது, கோமதி அம்மாளுக்கும் ஒரு பங்கு நிச்சயம் இருக்கும். கையில் செலவுக்கு மட்டும் சில்லறை கொடுப்பது இல்லை. கொஞ்சம் சில்லறை கொடுத்தால், காசி கடையில் போய் சுருட்டு வாங்கிப் பிடிப்பாள் என்பதால், சில்லறை கொடுப்பதில்லை. அதனால தான் தெருவில் போகிற வருகிறவரிடம் காசு கேட்க ஆரம்பித்து விட்டாள் போல.

முரளிக்கு அவனுடைய பாட்டியைக் கண்டாலே பிடிக்கவில்லை. பாட்டியால் அம்மா அழுவது, அவனுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கிவிட்டது போல. சாப்பாடை மாணிக்கத்திடம் சொல்லி, அவன் கடையில் வேலை பார்க்கும் பையனிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்லிவிட்டு, கோமதி அம்மாளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். ஒவ்வொரு நாளு ஒவ்வொரு பிரச்னை, இதெல்லாம் வேலை முடிந்து இரவில் வருபவரிடம் சொன்னால் அவருக்கு கேட்கக் கூட நேரமிருக்காது.

ஒருமுறை தெருவில் நின்று கொண்டு முழுச்சீலையையும் உருவி கீழே போட்டுவிட்டு, திரும்ப எடுத்து கட்ட முயற்சித்துக் கொண்டிருந்த மாதிரி தான் தெரிந்தது. என்னதான் வயதானவள் என்றாலும், துணியில்லாமல் ஒருத்தி தெருவில் நிற்பது சகிக்கமுடியுமா என்ன? மீசைக்கார நவநீதன், முரளியிடம் டேய்! உங்க அம்மாகிட்ட வந்து கூட்டிட்டு போகச் சொல்லு, என்று தலையில் அடித்துக் கொண்டார் போல. அதைப் பார்த்த போது, முரளிக்கு கோவம் வந்து விட்டது, ஜோதியிடம் வந்து சொல்லிவிட்டு, அம்மா! இந்த பாட்டி நமக்கு வேண்டாமா? எங்கேயாவது போயி விட்டுடலாம்மா என்று அழ ஆரம்பித்தான். ஜோதி போயி இழுத்து வந்து அவளைத் திட்டிய போது, சீலை சரியா இல்ல, அதான் கட்டிட்டு இருந்தேன், அதுக்கு போயி கத்துற… என்று ஏதோ கெட்ட வார்த்தையிலும் திட்டினாள்.

ஜோதிக்கு பதில் பேசவே வரலை, என்ன கருமத்துக்கு இதெல்லாம் கேட்கணும் என்று அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பாத்துக் கொண்டிருந்த முரளி, கையில் கிடைத்த கிளியாஞ்சட்டியை எடுத்துப் பாட்டியின் தலையில் அடிக்க, நல்லா அடிபட்டு ரத்தம் வந்து விட்டது. ஒரு கையில் தலையைப் பிடித்துக் கொண்டு, ஒரு கையால் தூத்தி வாரிக் கொண்டிருந்தாள். தூமியக்குடிக்கி, தூமச்சீலை என்று ஏதேதோ திட்ட ஆரம்பித்தாள். ஜோதி கதவப்பூட்டிட்டு, முரளியையும் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அக்கா வீட்டிற்கு போய், அந்த அக்காவிடம் எல்லாவற்றையும் சொல்லி சொல்லி அழ ஆரம்பித்தாள். மீனாட்சி அக்காவுக்கும் எப்படி இவளைத் தேற்றுவது என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதுவும் கொஞ்சம் அழுததும், இவளுக்கு மேலும் சங்கட்டமாக போயிவிட்டது.

பேசிக்கொண்டிருக்கும் போதே தடாரென்று சத்தம் கேட்டது. பதறிப்போய் வெளியே வந்தபோது, சீலை காயவைக்க மாடி ஏற முயற்சித்த கோமதி அம்மாள், கீழே கிடந்தாள், தலையெல்லாம் ரத்தம் வழிய, படிகளைத் தாண்டி. ஜோதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாமியாரை பார்த்த படியே நின்றாள். மற்ற வீடுகளில் இருந்து பாகீரதி அம்மாளைச் சுற்றி கூட ஆரம்பித்தார்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *