மாலை ஐந்து மணி.
ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. எனது இரு சக்கர வாகனம்…வாகனங்கள் வரிசையில் கடைசியாக நின்றது.
கும்பலாக நாலைந்து சிறுவர்கள்… பனை ஓலையில் நுங்கைக் கட்டிக் கொண்டு…
” சார் நுங்கு.. ! சார் நுங்கு…! ” – நிற்கும் பேருந்து, நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் என்று நிற்கும் அத்தனை வாகனங்களிடமும் விற்றுக் கொண்டு வந்தார்கள்.
கோடைக்கு ஏற்ற அருமையான பதார்த்தம். இதன் அருமை பெருமை புரிந்து பெரும்பாலோர் வாங்கினார்கள். சிலர் மட்டுமே வாங்கவில்லை.
எனக்கும் வாங்க ஆசை. கிடைக்குமோ கிடைக்காதோ. ?!
ரயில் சென்று வாகனங்கள் நகர்வதற்குள் வங்கியாக வேண்டும்.
விற்றுக்கொண்டு வரும் அவர்களைக் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
எல்லராருமே பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
படிக்க வேண்டிய வயதில்…. சம்பாத்தியம்.!! – நினைக்க வருத்தமாக இருந்தது. அவர்களை பார்க்கப் பாவமாகவும் இருந்தது.
வறுமை…..!!
இந்த வறுமையில் பள்ளிப்பருவம், இளமையைத் தொலைத்து விட்டால் எதிர்காலம்…? வாங்கி விசாரித்து விட்டு போவதென்று…. வண்டியை ஓரம் கட்டினேன்.
அப்போது ஒரு பையன் ஓடி வந்து…. ” சார் நுங்கு ! ” நீட்டினான்.
” எவ்வளவு…? ”
” பத்து சொலை இருபது ரூபா..”
” சரி ஒன்னு கொடு…”
” அதான் சார் இருக்கு. ” நீட்டினான்.
” அப்போ வியாபாரத்தை முடிச்சிட்டீயா…?? ”
” முடிச்சாச்சு…”
” இனி வியாபாரம்..? ”
” நாளைக்கு…”
” பள்ளிக்கூடம் போகலையா…? ”
” இல்லே சார்..”
” படிச்சியா..?”
” அஞ்சாம் கிளாஸோட நின்னாச்சி ”
” ஏன் அப்பா இல்லீயா..? ”
” இருக்காரே..!”
” அம்மா..? ”
” இருக்காங்க…”
” ரெண்டு பேரும் இருக்கும்போது உனக்கு ஏன் வியாபாரம்;;;? ”
” அப்பா குடிக்கும் சார்..” சட்டென்று அவன் குரலில் வருத்தம், கமறல்.
” சம்பாதிக்காதா..?…”
” சம்பாதிக்கும். அது போதாதுன்னு… அம்மா வருமானத்தையும் புடுங்கிப் போய் குடிக்கும்…”
” அம்மாவுக்கு என்ன வேலை..? ”
” சித்தாள்…சார் . இதை வாங்கிக்கிட்டா நான் போவேன்…”
” நூறு தர்றேன் பதில் சொல்லு…? ”
” இனாம் வேணாம் சார். இதுக்குப் பணம் கொடுங்க போதும். ”
நீட்டினேன்.
வாங்கிக்கொண்டு கொடுத்தான்.
” படிக்க வச்சா படிப்பியா…? ” – நுங்கை வாங்கிக் கொண்டு கேட்டேன்.
” மாட்டேன் சார்…”
” ஏன்…? ”
” என் தங்கச்சியக் கட்டிக்கொடுக்கணும் சார்..”
” உன் சம்பாத்தியத்துலேயா..”
” ஆமாம். என் அம்மா அப்பா அதைக் கரை ஏத்தாது. நான்தான் கரை ஏத்தனும்…அதுக்காகத்தான் சார் படிப்பை விட்டேன். அது மூணாவது படிக்குது. பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்கும். நான் போறேன்…” கடகடவென்று சொல்லிவிட்டு விரைவாக நடந்தான்.
பெற்றவர்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து எப்படிப் பட்ட பிள்ளை !! என்ன பொறுப்பு, பாசம் ! – அப்படியே நான் திக் பிரமை கொண்டு நிற்க….
‘ கூ கூ …’ கேட் திறக்க ரயில் வந்து கொண்டிருந்தது.