கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 1,949 
 
 

தற்காலிகமாக வலி மறந்து, ஜம்பு அன்பாய் ஊட்டிவிட்ட இட்லி’களை ருசித்துச் சாப்பிட்டாள் அகிலா. கிண்ணத்திலிருந்தத் தண்ணீரை விரல்களால் நனைத்து உதட்டோரத்தைத் சுத்தம் செய்து கொண்டு, தேங்காய்ப்பூத் துவாலையால் முகத்தையும் விரல்களையும் நன்கு துடைத்துக் கொண்டாள்.

“என்னங்க…?”

“சொல்லு அகிலா…!”

“நம்ப பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லிடலாம்ங்க…!” – சொல்லும்போதே மூச்சு வாங்கியது, நிறைமாத கர்ப்பிணியான அகிலாவுக்கு.

“சாரி அகிலா…!

“………………” – அகிலா எதுவும் பேசவில்லை – ‘ஜம்பு பிடிவாதக்காரன். ரோஷக்காரன்; காலம்தான் கடந்தகாலத்தின் கசப்பான அனுபங்களையெல்லாம் சரி செய்ய வேண்டும்!’ – மனதிற்குள் மருகினாள்.

அகிலாவின் வலது இடுப்பில் ‘குத்தல்-வலி’ தொடங்கித் தொடர்ந்துத் தீவிரமாகியது; அந்த வலிதானா என்றுகூட அனுமானிக்கத் தெரியாத, முதலனுபவம் அவளுக்கு;

இரண்டு கைகளையும் மாற்றி மாற்றித் தலையணையில் ஊன்றி நிமிர்ந்தாள்; பக்கவாட்டில் இடுப்பைச் விடைத்து ‘ஸ்ரெட்ச்’ செய்தாள்.

படிப்படியாக வலி குறைந்தது. சற்றைக்கெல்லாம் நின்றது. சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது வலி.

இடைவெளிவிட்டு மீண்டும்… மீண்டும் வந்த வலி, நிற்காமல் தொடர்ந்தது. வலது இடுப்பிலிருந்து, நகர்ந்து நகர்ந்து, நடு வயிற்றைப் பற்றியது . விண் விண்ணென்று தெரிப்புடன் கூடிய வலியை “ம்…ம்…ம்…ம்…ம்…ம்…ம்…ம்……!”-  என முக்கியும் முனகியும், “உஷ்… உஷ்…” எனப் பெருமூச்சு விட்டும், “ஆங்…ஆங்…ஆங்…ஆங்…ஆங்…ஆங்…ஆங்…..!”- உரத்து முணுமுணுத்தும், “அய்யோ…அம்மா….ஆண்டவா..!” – என்றெல்லாம்  அடிவயிற்றைப் பிடித்தபடி கத்தியழுதும். அரற்றுவதுமாய் சிறிது நேரம் சென்றது.

வயிற்றைக் கண்டபடி அசைந்துகொடுத்தால் உள்ளிருக்கும் சிசு பாதிக்குமோ?’- பயம் வந்தது அவளுக்கு. மல்லாந்து படுத்தபடி வயிற்றின்மேல் உள்ளங்கைகளை லேசாகப் படறவிட்டபடி முக்குதலும் முனகுதலுமாய்த் தவித்தாள்.

“அகிலா ரொம்ப வலிக்குதாடா?.”- ஹாலில் அமர்ந்து ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ செய்துகொண்டிருந்த ஜம்பு, ஓடிவந்து அகிலாவை அணைத்தபடி ஆறுதலாகவும் ஆதரவாகவும் கேட்டான்.

“ம்……….! அந்த வலிதாங்க!”

“ஓ! அப்படியா?”

“ஆமாங்க..! பனிக்குடம் ஒடையறதுக்குள்ள சீக்கிரம் மருத்துவமனைக்குப் பேயிரணும்ங்க.!”

“சரி அகிலா! பதட்டப்படாதே…! ஆட்டோவுக்கு உடனே சொல்றேன்…!” – கைப்பேசி மூலம் ஆட்டோ முருகேசனுக்குச் சொன்னான்.

“என்னங்க…!”

“ம்?”

“பிடிவாதம் வேண்டாங்க. வீட்டுக்கு வீடு வாசப்படிங்க.அனுபவமிக்க ஆச்சிங்களோடத் துணையும் ஒத்தாசையும் தேவையான நேரம்ங்க இது. நீரடிச்சி நீர் விலகிடாதுங்க…!”- பிரசவ வலியிலும், கணவனிடம் கடமையை எடுத்துரைத்தாள்.

“இவளோடத்தான் கல்யாணம்ன்னா, எங்களை மறந்துடு. எங்களுக்கு ஒரு பிள்ளையே இல்லைனு நெனச்சுக்குறோம்..!” – என்றுப்  பேசியத் தன் அப்பாவும், அதற்கு அம்மா தலையாட்டிய தருணமும்…;  

“ஒரு வழியாப் போயிரு. தலை முழுகிடறோம்…!”- அகிலாவின் பெற்றோர்கள்  சாபம் விட்டுத் துரத்தியத் தருணமும் மின்னலாய்க் கண்முன் தோன்றி மறைந்தன. பழையக் கசப்பான அனுபவங்கள் வைராக்யத்தைப் புதுப்பித்ததோடு மேலும் உறுதியாக்கின.

இப்போதிருக்கும் நிலையில், அதையெல்லாம் விளக்கமாய்ப் பேச இது நேரமில்லையென்பதால், தன் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தான்.

“சொன்னாக் கேளு அகிலா…! நான் பாத்துக்கறேன். இனிமே அந்தப் பேச்சை எடுக்காதே! – மொத்தமாய் வாயடைத்துவிட்டான்.

ஜம்பு வெறும் வாய்ச் சொல் வீரன் அல்ல. செயல் வீரன்.

 “அகிலா, நீ படுக்கைல சாய்ந்தபடியேச் சொல்லு, தேவையானதை நான் எடுத்து பேக் பண்றேன்!” கரிசனத்தோடுச் சொன்னான் ஜம்பு.

“பிசரவ நேரத்துக்கு உதவுமென்று, கிழிந்த வேஷ்டித் துண்டுகள், காட்டன் புடவைத் கிழிசல்களையெல்லாம் நன்குத் துவைத்து, நேர்த்தியாக மடித்துப் பத்திரப்படுத்திவைத்திருந்த ஷாப்பர் பையை அடையாளம் காட்ட எடுத்துவந்து வைத்தான் ஜம்பு.

செய்தியறிந்து கையில் ஒரு சம்புடத்துடன் வந்தாள் பக்கத்துப் போர்ஷன் ஆச்சி. வைதீஸ்வரன்-விபூதி’ என்றுச் சொல்லி சம்புடத்திலிருந்துக் கிள்ளியெடுத்து நெற்றியில் தீட்டினாள்.

அவசரமாய்ச் சென்றுக் கொல்லைக்கட்டில் நிற்கும் வேப்பமரத்திலிருந்து ஒரு ஈக்கு வேற்பிலைக் கிள்ளிக் கொண்டுவந்து அகிலாவின் தலையில் செருகினாள்.

உரிமை எடுத்துக் கொண்டு, வெந்நீர் சுடவைத்துப் ‘பிளாஸ்க்’ல் ஊற்றி மூடினாள். டவராக்கள், டம்ளர்கள், வீட்டில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டில். ஜீனி பாட்டில், ஸ்பூன்கள் எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு கொண்டுவந்து வைத்தாள்  ஆச்சி.

“ராத்திரி தங்க வேண்டியிருந்தா இருக்கட்டும் தம்பி…!” கரிசனமாய்ச் சொல்லிக்கொண்டே, ஒரு ‘பெட்ஷீட்’ மடித்துப் பையில் அடைத்தாள்.

“பீம்…பாம்…பீம்…பாம்…”

ஆட்டோ வந்துவிட்டதற்காகக் கட்டியங்கூறினான் முருகேசு. இறங்கி உள்ளே வந்தான். வாசற்படியருகே வைத்திருந்தப் பைகளை எடுத்துவந்து ஆட்டோவின் பின்னால் வைத்தான்.

ஆட்டோவை முன்னும் பின்னுமாக நகர்த்தி கர்பிணியை உள்ளே ஏற்றுவதற்கு வாகாய் நிறுத்தினான்.

புது உலகைக் காணும் உந்துதலில், இதுவரை சுவாசித்தும், நீந்தியும் மிதந்தும், தன் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தப் பனிக்குடத்தை உதைத்து உதைத்து, உடைக்கத் தொடங்கியது சிசு. பிரசவ வலி உச்சத்தைத் தொடும் கணம் இதுதான். வலி அதிகரித்தது.

பனிக்குடம் உடைந்துவிட்டது. ‘குடநீர் முற்றிலும் வெளியேறுமுன் பிரசவ-வார்டுக்குப் போய்விடவேண்டுமே..!’- பரபரத்தது அகிலாவின் மனசு.

“நானும் உங்க கூட வரட்டுமா தம்பி?” – பக்கத்து போர்ஷன் ஆச்சி கேட்டாள்.

“வேண்டாம் ஆச்சி. நான் சமாளிச்சுக்கறேன்…!” – என்றான் ஜம்பு

ஜம்புவின் மடியில் சாய்ந்தபடி ஆட்டோவில் பயணத்தாள் அகிலா.

செவிலியர்கள் தேனீயாய் பரபரத்தார்கள். தோளில் கைபோட்டு நட்புடன் வார்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். மருத்துவர் வரும்முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் தலைமைச் செவிலியின் வழிகாட்டலின்படி முறையாக நடைபெற்றது.

‘எனிமா’க் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்தபொது வலி பன்மடங்கு அதிகமாக “ஆ…….! ஊ…….!” என அரற்றினாள் அகிலா.

“மேடம்…!” – லேபர்வார்டுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த மகப்பேறு மருத்துவரின் முன் வந்து நின்றான் ஜம்பு.

“சொல்லுங்க சார்…!”

“நானும் லேபர்-வார்டுக்குள்ள வரலாமா?”- தயங்கியபடிக் கேட்டான் ஜம்பு.

“பிரசவ அவஸ்தைப் படும்போது கணவன் கையை கெட்டியாப் பிடிச்சிக்கிட்டாத்தேவலைப்போலத்தான் இருக்கும் பெண்களோட மனசு; இதுதான் யதார்த்தம். இதுதான் சரியான அணுகுமுறையும்கூட. இதை வளர்ந்த நாடுளுகள்’ல விஞ்ஞானபூர்வமா நிரூபிச்சும் இருக்காங்க; ஆனாப் பாருங்க, அதை இன்னும் முழுசா ஏத்துக்கலை நம்ம சமூகம்; நீங்க விரும்பறதுனால, என் கன்ஸல்டேஷன் ரூம்ல இருக்கற, சிசி டிவி கேமரா ஸ்கிரீன்ல மொத்தப் ப்ரொசிஜர்களையும் பார்க்க உங்களை அனுமதிக்கறேன்.” என்றார் டாக்டர்.

லேபர் மேசையில் படுக்க வைத்தார்கள் அகிலாவை. கால்களை குறுக்கிவிடாமல், பிடித்துக் கொண்டார்கள் பிரசவ உதவியாளர்கள். மகப்பேறு மருத்துவர் முறையாகச் சோதித்தார்.

மருத்துவர் சொல்லச் சொல்ல, மூத்த செவிலி முன்ஜாக்கிரதைக்காகப் போடவேண்டிய ஊசி, மருந்துகளை முறையாகச் செலுத்தினார்.

மருத்துவரும், சில செவிலியர்களும் கையில் உறையை (க்ளவுஸ்) மாட்டிக் கொண்டனர்.

முதுகுத் தண்டுவடத்தின் ‘காக்ஸீஜல் தொடங்கி ஸாக்ரல்’ வரை உள்ள நுட்பமான நரம்பில், ‘சென்சிடிவ் ட்ராக்’கில், ஒரு கூரான இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி, நுழைத்துக் குத்திக் கிழிக்கிறார்போல பயங்கரமாக வலித்தது.

தண்டுவடத்தின் ‘லம்பார்’-அடுக்குப் பகுதியில்,  சுத்தியலால் தொடர்ந்துப் பலமாக தாக்குகிறாற்போலக் குத்துவலியெடுத்தது.

“முக்கு…! முக்கு…! புஷ்…! புஷ்…!” – விடாமல் குரல் கொடுத்தார்கள் மருத்துவர் உட்பட அனைவரும்.

‘எக்ஸ்பாண்ட்’ ஆகலையே…!” வாய் முணுமுணுக்கக், கண் சுருக்கி யோசித்தார் மருத்துவர்.

செருகியபின், ‘லிவரை’ மேற்புறமாய்த் தூக்கித் தேங்காய் மட்டையை விரித்து உரிக்கப் பயன்படுத்தும் உரி பாரைப் போல், ஒரு உபகரணத்தை மருத்துவர் கையில் கொடுத்தார் தலைமைச் செவிலி. அதை லாகவமாய் நுழைத்து, குழந்தையின் வரவேற்பை அனுசரித்து, தோரண வாயிலை விரியத் திறந்தார் மருத்துவர். கத்தினாள் கதறினாள் அகிலா.

மருத்துவர் கண் காட்ட, ஒரு செவிலி அகிலாவின் கதறலைப் பொருட்படுத்தாமல், மேல் வயிற்றில் பதமாக முழங்காலால், அழுத்தியழுத்திக் குழந்தையை கீழ் நோக்கி நகர்த்தினாள்.

மருத்துவரின் உறையணிந்த விரல்கள் உயவுக்காக ‘ஜெல்’ அப்பிக்கொண்டு நிதானமாய் விரல்களைவிட்டுத் துழாவி இறுக்கங்களைத் தளர்த்தினார்.

“ப்ளீஸ், கொஞ்சம் கோவாபரேட் பண்ணு… ப்ளீஸ்…”; “முக்கு முக்கு புஷ் புஷ்..” – மருத்துவரின், கைகள் பிரசவச் செயல்முறைகளைச் செய்ய, வாய் சொல்லிக்கொண்டேயிருந்தது.

“என்னால முடியல… வலிக்குது டாக்டர்…!” உச்சமாய்க் கத்தினாள் அகிலா.

“உன் வலிய மட்டும் பாக்காத, குழந்தை தலை தெரியுது…! அதுக்கு எவ்ளோ வலிக்கும் தெரியுமா? புஷ்… புஷ்…!;

கோவாபரேட் பண்ணலேன்னா ஆயுதம் (‘ஃபோர்ஸ்டெப்ஸ்) போட்டுத்தான் இழுக்கறாப்பல ஆகும். ஆயிரத்துல ஒரு கேஸ் காம்ளிகேட் கூட ஆகலாம். தலை தெரியுது ஒரு ‘லாங்-புஷ்’ கொடுத்தா சுகப்பிரசவமாயிரும். ம்.. ம்.. புஷ்…” – குழந்தைப்பாசத்தையும், பயத்தையும் உச்சநிலைக்குத் தூண்டினார் மருத்துவர்.

‘நம்ம குழந்தை கஷ்டப்படுதா?; ரத்த உறவுக்கு வலியா?; ம்ஹூம்… நாம் அனுபவிக்கலாம் வலி; நம் குழந்தை ஒருக்காலும் கஷ்டப்படக்கூடாது…!’ – வைராக்யம் உந்தியது அகிலாவை.

குழந்தைப் பாசமும், வைராக்யமும், அவள் நரம்புகளில் முறுக்கேற்ற, ஒட்டுமொத்த சக்தியும் திரண்டு ஓரிடத்தில் குவிந்தது.

முப்பது நொடிகள் விடாது, நீ…………………………………….ளமாய், முக்கினாள்…

“ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…”

விடாதே…! ம்… விட்டா ரப்சராயிடும்… ம்ம்… கன்டின்யூ… ம்… வெரிகுட்… சக்ஸஸ்…!”

“குவா…! குவா…! குவா…! குவா…! குவா…!”

“ஆண் குழந்தை பிறந்திருக்கு. நல்லா கோஆபரேட் பண்ணினீங்க…”

குழந்தையைக் காட்டிவிட்டு, அதைக் குளிப்பாட்ட எடுத்துப் போனார்கள்.

பிரசவத்தின்போது ஏற்பட்ட கிழிசல்கள் தையல் போடப்பட்டு, ஊசி மருந்துகளெல்லாம் ஏற்றி, அகிலாவை வார்டில் படுக்க வைத்தார்கள்.

பிரசவ வார்டு செயல்பாடுகள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில், கம்யூட்டர் திரையில் பார்த்த ஜம்புவிற்குத் ‘தாய்மையின் தவிப்பை’ முழுமையாய் உணரமுடிந்தது. அவனுக்குள் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன. ரசவாதங்கள் அரங்கேறின.

“உங்க ஒய்ஃப் ரொம்ப அனிமிக்கா இருக்காங்க, செடேஷன் கொடுத்திருக்கோம். டிஸ்ட்ரப் பண்ணாதீங்க…!”

கிழிந்தநாராய்ப் படுத்துக் கிடக்கும் அகிலாவைக் காட்டிச், சொல்விவிட்டுப் போனார் மருத்துவர்.

இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மயக்க நிலையிலிருந்தாள் அகிலா.

ஏதோ உள்ளுணர்வு உந்த விழிப்புத் தட்டியது அவளுக்கு.

கண்விழித்துப் பார்த்தாள்.

அம்மாவும், மாமியாருமாய், ரத்த சம்பந்தமுள்ள பாட்டிகள் பேரனை மாறி மாறி மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

– கொலுசு 100வது இதழ் (நவம்பர் 2023)

Print Friendly, PDF & Email
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *