நீதானா அந்தக் குயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,463 
 
 

ஒரு வாரமாகிறது நாங்கள் இந்த ஊருக்கு வந்து. அழகான ஊர் என்று இங்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் சொன்னார்கள், வந்த பின்தான் தெரிந்தது, மிக மிக அழகான ஊர் என்று. சுற்றிலும் பச்சைப்பசேலென்ற மலைகள்…….

கீழே பெரிய தோட்டம். மாடியில் மூன்று அறைகளுடன் வீடு. தோட்டம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஓர் பக்கத்தில் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா என்று பழ மரங்கள். இன்னொரு பக்கத்தில் ‘கிச்சன் கார்டன்’ அமைக்கக் கூடிய அளவுக்கு இடம் இருந்தது. தோட்டத்தை ஆவலுடன் நான் பார்ப்பதைக் கண்ட என் கணவர், “நீ உன் ஆசை தீர செடி, கொடி வளர்க்கலாம்….” என்றார்.

புது வீடு, புது ஊர், எல்லாமே மனதுக்குப் பிடித்து சந்தோஷமாக இருந்தது.

வருடக் கணக்கில் சென்னை வெய்யிலை அனுபவித்த எங்களுக்கு, இங்கு வந்திறங்கிய அன்றே மழை பெய்தது ஆச்சரியமாக இருந்தது. வயதை மறந்து, ஆனந்தமாக மழையில் நனைந்ததன் விளைவு, காய்ச்சலும் தலைவலியுமாகப் படுத்து விட்டேன்.

புது ஊருக்கு வந்ததும் வராததுமாக இப்படிப் படுத்துக் கிடக்கிறோமே என்று நினைத்தபடியே, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். தோட்டத்திலிருந்த மரங்களில் சிலுசிலுவெனப் பறவைகளின் ஒலி.

‘க் க் கூ …….. க் க் கூ ……..’ – மிக அருகில் கூவியது ஒரு குயில்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.

‘க் க் கூ …….. க் க் கூ ……..’ – தட்டி எழுப்ப மனமின்றி வருடிக் கொடுக்கும் சகோதரியின் வாஞ்சைக் குரல் போல் விட்டு விட்டுக் கேட்டது குயிலின் குரல்.

‘இது கடற்கரைப் பட்டினம், மனிதர்கள் அதிகம் புழங்காத கடற்கரை வெள்ளை வெளேரென்ற மணலுடன், ஆரவாரமில்லாத அலைகளுடன் இருக்கும்; கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்’ என்று நண்பர்கள் கூறியிருந்தனர். குயில் கூவித் துயிலெழுப்பும் என்று சொல்லவில்லையே!

‘க் க் கூ …….. க் க் கூ ……..’

அடடா…..என்ன இனிமை! கருநிறக் குயிலுக்கு தேன்குரல் கொடுக்க வேண்டுமென்று கடவுளுக்கு தோன்றியதோ…? பாரதியும் இப்படி மயங்கித்தான் கவிதை எழுதினாரோ…?

கல்லூரி நாட்களில் வாசித்து மகிழ்ந்த குயில் பாட்டு, வரி பிசகாமல் நினைவுக்கு வந்து புரட்டிப் போட்டது என்னை.

அன்றிலிருந்து குயில் தினமும் என்னைத் தன் தீம்பாட்டால் துயிலெழுப்பியது. அதன் குரலினிமை கேட்டு நான் எழுகிறேனா அல்லது நான் எழுதுவது தெரிந்து அது கூவுகிறதா என்று சொல்ல முடியாதடி, இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தது.

மிகச் சமீபத்தில் இருந்து அதன் குரல் கேட்டதால், எங்கள் தோட்டத்தில் தான் அது இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காய்ச்சல் குறைந்தவுடன் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் தீர்மானித்தேன்.

ஒவ்வொரு நாள், ஒவ்வொரு உணர்ச்சியைத் தன் குரலில் குழைத்து, இழைத்து கீதமிசைத்தது குயில். ஒரு நாள் சோகமாக ஒலிக்கும் அதன் குரல், மறுநாள், கரை புரண்டோடும் காட்டு வெள்ளம் போல உற்சாகத்துடன் பொங்கிப் பெருகும். நிஜமாகவே குயில் அப்படிப் பாடியதோ….இல்லை, என் மனநிலைக்கு தகுந்தாற்போல குயிலின் குரலை நான்தான் இனம் பிரித்தேனோ…..தெரியவில்லை!

ஐந்தாவது நாளில் காய்ச்சல் நன்கு குறைந்திருந்தது. வெளியே வந்து பால்கனியில் நின்று கொண்டேன். பச்சை வண்ண ஆடை போர்த்திய மலைகளினூடே, சூல் கொண்ட பெண்ணைப் போல கருநிற மேகங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.

காலில் செருப்பை மாட்டிக் கொண்டு படியிறங்கி தோட்டத்துக்கு வந்தேன். ஒவ்வொரு மரமாக அண்ணாந்து பார்த்தபடியே நகர்ந்தேன். ஊஹும்… ஒரு பறவையைக் கூடக் காணவில்லை. எங்கே போயிருக்கும் இந்தக் குயில்…? குஞ்சுகளுக்கு இரை தேடப் போயிருக்குமோ…..?

“ஹலோ!”- குரல் கேட்டுத் திரும்பினேன்.

பக்கத்து வீட்டில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றிந்தாள்.

“புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு…!”

“ஆமா…ஒரு வாரமாகிறது!”

“ஊரைச் சுத்தி பார்த்தீங்களா…?”

“இன்னும் இல்லை! வந்தவுடன் கொஞ்சம் உடம்பு சரியில்லை……”

“அப்படியா! வீடு பிடிச்சிருக்கா…..?”

“ஓ! ரொம்ப பிடிச்சிருக்கு! ஊரும் பிடிச்சிருக்கு. சுற்றி வர மலை, சிலுசிலுன்னு காத்து, விட்டுவிட்டு பெய்ற மழை…..!”

“குயிலைக் கண்டு பிடிச்சுட்டீங்களா?”

அட! அதெப்படி இவளுக்குத் தெரிந்தது? இவளும் அந்தக் குயிலைத்தான் தேடுகிறாளோ? இவளும் பாரதி ரசிகையா…?

“எப்படி தெரிஞ்சது உங்களுக்கு…? நீங்களும் அந்தக் குரலுக்கு ரசிகையா?” – ஆர்வத்துடன் கேட்டேன் நான்.

“அட! நீங்க வேற! தினமும் விடிகாலைத் தூக்கமே இந்தச் சனியனால கெட்டுப் போச்சு. நீங்க மரத்தையே அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருந்தீங்களா… சரிதான், உங்களுக்கும் இந்தப் பாழாப் போன குயிலால தூக்கம் கெட்டிருக்கும்னு நெனைச்சேன்!”

சொல்லிக் கொண்டே போனாள் அந்தப் பெண்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *