நீண்ட கூந்தலை முடிக்க மறந்த பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,830 
 

காலை மணி பத்து. எதிரிலிருக்கும் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள், அவளது பார்வை அதன் இடுப்பிற்கு மேலே சென்றிருக்க சாத்தியமில்லை. வலப்புறம் தெரிந்த, ‘தாய்ஏர்லைன்ஸின்’ புன்னகையை மறுத்தவள் மீண்டும் பார்வையைக் கட்டிடத்தின் மீது மேயவிட்டாள். கட்டிடத்தையும் இவளையும் நாற்பது அடி சாலைப் பிரித்திருந்தது.வீசிய குளிர்கால பனிக்காற்று கழுத்தைச் சுற்றியிருந்த ஸ்கார்•பின் ஒழுங்கை கலைக்க மீண்டும் சரிபடுத்திக்கொண்டாள். கம்பளி மேல்கோட்டின் கழுத்துப்பட்டையைத்தளர்த்தி, இருபுறமும் வழிந்திருந்த கூந்தலை ஓர் ஒழுங்குக்குக்கொண்டுவர நினைத்தவள்போல கழுத்தை இரண்டொருமுறை அசைத்துக்கொடுத்தாள்.கடிதப்பொதிகளை சுமந்த சைக்கிளை மிகவும் சிரமத்துடன் நடைபாதையில் தள்ளிவந்த தபால்காரருக்கு வழியை விட்டு ஒதுங்கி நின்றாள். அவர் பிரெஞ்சில் வணக்கம்!எனக் கூறியதோடு, நாசூக்காக தலையை மேலும் கீழுமாக ஒரு முறை அசைக்கவும் செய்தார். இவள் பதில் வணக்கம் தெரிவித்திருக்கலாம், செயற்கையாகவேணும்புன்னைகைத்திருக்கலாம், இல்லை எதுவுமில்லை, முகத்தை இறுக வைத்திருந்தாள்.

தலையைப் பக்கவாட்டில் திருப்பியபொழுதுதான் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் கடை கண்ணாடியில் பொம்மைக்கு ஆடை அணிகிற பெண்மணி இவளைப்பார்த்துக்கொண்டிருக்கிறாளென்பது புரிந்தது. சற்றுமுன்னர் நுரைவழிய சோப்பு நீரைக்கொண்டு கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்த போதும் அவள் இவளைஓரக்கண்ணால் பார்த்தவள். ஒருவேளை இவள் தானோ அவள்? இருக்க முடியாது, ஆண்களைப்போல இப்பெண் தலையைக் கிராப் செய்திருக்கிறாள், இவள் தேடும் பெண்இளமையாகவும் நீண்ட தலைமயிருக்குச் சொந்தக்காரியாகவும், அநேகமாக ஓர் ஆசியப்பெண்ணாகவும் இருக்கவேண்டும். தள்ளிப்போய் நிற்கலாமென்று தோன்றியது,அல்லது இங்கே நின்றுகொண்டு இப்படி காத்திருப்பதை தவிர்த்துவிட்டு, சாலையைக் கடந்து துணிச்சலுடன் ஒரு முறை கட்டிடத்திற்குள் நுழைந்துகூடபரிசோதித்துவிடலாம். அவளுக்குப் போட்டியாயாக வந்திருக்கிற பெண் இக் கட்டிடத்தில்தானிருக்கிறாள் என்பது மாத்திரம் உறுதி. உள்ளே சென்று நேருக்கு நேர்அப்பெண்ணைச் சந்திக்கும் துணிச்சல்தான் அவளிடத்திலில்லை.

வீட்டிலிருந்து புறப்பட்டபோது அந்தத் திட்டத்துடனேயே புறப்பட்டு வந்தாள். முகவரியை தெளிவு படுத்திக்கொண்டு ஐம்பது மீட்டர் தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தில்இறங்கிக்கொண்டு, சிக்னலுக்குக் காத்திருந்து, நெஞ்சின் குமுறல்களையும், வெப்பம் அடர்ந்த சுவாசங்களையும், துளிர்த்த கண்ணீர்துளிகளையும் மறந்தவளாய்பித்துபிடித்தவள்போல சாலையை ஓட்டமும் நடையுமாக தாவிக்கடந்து, கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்த லி•ப்டுக்குள் காலெடுத்துவைத்து, லிப்டின் பொத்தான்களில்இமேஜ் கார்ப்பரேஷன் என்றிருந்த 8வது மாடிக்குறிய பொத்தானை அழுத்தி மேலே வந்தாள். தரைவிரிப்பின் மணத்திலும் மிதமிஞ்சிய ஒளிவெள்ளத்திலும்அமிழ்ந்துகிடந்த கூடத்தைக் கடந்தாள். வரவேற்பிலிருந்த பெண் தலை நிமிர்ந்தபோது என்ன பேசுவதென்று விழிக்கிறாள். வார்த்தைகள் தடுமாறுகின்றன. இரண்டொருநிமிடம் கூடுதலாக நின்றிருந்தால் உடைந்து அழுதிருப்பாள். வரவேற்பு பெண் குழம்பியவளாய் இவளைப்பார்த்துக்கொண்டிருக்க மூச்சிறைக்க லிப்டை மீண்டும்தேடினாள். உதட்டைக் கடித்துகொண்டதில் நாக்கில் பரவிய இரத்தத்தின் கரிப்பு இன்னமுமிருக்கிறது. அவ்வப்போது நாக்கை புரட்டியபடி கடந்த ஒரு மணி நேரமாக இதேஇடத்தில் நிற்கிறாள். ஊர்பேர்தெரியாத ஒருத்தி கைகால்களில்லை, சரீரமில்லை கடந்த ஒருமாதமாக கனவிலும் நனவிலுமாக இவளை துரத்த்திக்கொண்டிருக்கிறாள்.

அன்றைக்கு மூத்தவள் பள்ளியிலிருந்து காலாண்டு மதிப்பெண் அறிக்கையைக் கொண்டுவந்திருந்தாள். போனவருடத்தோடு ஒப்பிடுகிறபோது நல்ல முன்னேற்றம்தெரிந்தது. வகுப்பாசிரியர் பாராட்டி எழுதியிருந்தார். அவளுக்கு அப்பாவிடம் காட்டவேண்டும். சின்னவளுக்கு பள்ளிக்குப் புதிதாய் வந்துள்ள டீச்சரைப் பற்றி நிறையசொல்ல இருந்தன. ஏற்கனவே அம்மாவிடம், ஒருமுறை கைகளை அசைத்துக்காட்டி விழிகள் மலர, குரலில் ஏற்ற இறக்கங்கள் சேர்ந்து நிறைய சொல்லியாகிவிட்டது.இடைக்கிடை கூன் விழுந்தவள்போல நடந்தும் காட்டினாள். புதிய டீச்சர் அப்படித்தான் நடக்கிறாளாம். வழக்கமாக ஒன்பது மணிக்கெல்லாம் டானென்று அவர்களை படுக்கவைத்துவிடுவாள். அன்றைய தினம் இருபெண்களுமே அப்பாவை பார்த்தபின்புதான் படுக்கை என்றார்கள். மாலை அலுவலகத்திலிருந்து போன் வந்திருந்தது.அவனுடைய செயலாளர் பெண்மணி பேசினாள். ”பார்த்தீபன் சார் இன்றைக்கு வர நேரமாகும், இந்தியாமலிருந்து ஏற்றுமதியாளர்கள் வருகிறார்கள் அவர்களோடு ஒருசந்திப்பு இருக்கிறது, பின்னர் அவர்களோடு டின்னர்”, என்றாள். அவளுக்குப் பொதுவாகக் கோபம் வராது, கோப்படவெல்லாம் கணவன்மார்களுக்குத்தான் உரிமையுண்டுஎன நம்பும் படித்தபெண் அவள். ஆனாலும் இப்படி எப்போதாவது வருகிறது. காலையிலேயே அவன் இவளிடம் தெரிவித்திருக்கலாம். தீடீரென்று ஏற்பாடானதென்றால்,அதைகூட நேரிடையாக இவளைப் போனில் தொடர்புகொண்டு கூறியிருக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையில் தகவல் பரிமாற்றத்றத்திற்கு ஒரு பெண்செயலாளர்எதற்கென தொலைக்காட்சி தொடரொன்றில் கதா நாயகி கேட்டது ஞாபகம் வந்தது.

ஒன்பதரை ஆயிற்று பிள்ளைகளை படுக்கவைத்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று பார்க்கவேண்டிய தமிழ் சீரியல்களையெல்லாம் பார்த்துமுடித்தாள், அவன்வரவில்லை. காத்திருந்தாள். சுவர்க்கெடிகாரம் பன்னிரண்டுமுறை அடித்து நிலைமையை உணர்த்தியது. வரவேற்பறை சோபாவிலேயே கண்ணயர்ந்திருந்தாள்.திடீரென்று விழிப்புவர, எழுந்து விளக்கைப் போட்டபோது அதிகாலை மூண்று மணி. சுவர்க்கடிகாரத்தின் வெண் திரையில் திடீர் ஒளியில் அசைவின்றி ஓர் எட்டுக்கால்பூச்சி. மனதில் ’பச்’சென்று ஒரு திரவம் சுரந்து வாயைக் கசக்கவைத்தது. ஒளி சோர்ந்திருந்த அல்லது மறுக்கப்பட்ட இடங்களில்லெல்லாம் சூன்ய அமைதி. இருள் புரண்டுநெளிவதுபோல தெரிந்தது. டாய்லெட் போகக் கூடத்தைக் கடந்தபோதுதான் நாற்காலியில் அவனது உள்ளாடைகளும், சட்டையும் பேண்ட்டும் கோட்டும் தாறுமாறாகதொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள், அவனுக்கு மிகவும் பிடித்த •பென்ஸ்பரி ஷ¥க்கள்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. டாய்லெட் போய்விட்டு வந்துபேண்டையும் கோட்டையும் முதலில் மடித்துவைத்துவிட்டு சட்டையை எடுக்கிறபோதுதான் கவனித்தாள் அதில் கழுத்துக்கு கீழே பட்டனையொட்டி நீன்டதலைமுடியொன்று ஒட்டிக்கிடந்தது. நல்ல கருமை நிறம். இளமையும், மின்சார ஒளியில் பளபளப்புடனும் இருந்தது, நடுவிரலையும் ஆள்காட்டிவிரலையும் இணைத்துநகத்தால் சுண்டி சட்டையிலிருந்து பிரித்தெடுத்தாள். சீயக்காய் வாசம்போல ஏதோவொரு வாசம். ஒன்றிணைந்தால், அக்கூந்தலுக்கு ஆண்களைக் கிறங்கச்செய்யும்ஆற்றலுண்டு என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அது நிச்சயம் அவளுடைய முடியல்ல, மூத்தவள் அல்லது சின்னவள்.. ம் இல்லை, வாய்ப்பே இல்லை. இருவரும் பாப்வெட்டிக்கொண்டிருந்தார்கள். பிற்பகலில் அவள் பார்த்த தமிழ் சீரியலில் கதா நாயகன் மார்பில் சாய்ந்திருந்த தனது இரண்டாவது மனைவியின் தலையை ஒதுக்கிவிட்டு, “இந்தா பாரு ஒன்னோட தலைமுடி சட்டையில் தங்கிட்டுது, இப்படியே வீட்டுக்குத் திரும்பினா என் கதை கந்தல்தான்”, என வசனம் பேசியது நினைவுக்கு வந்தது. ஒருசீரியலில் கணவனின் இரட்டைவாழ்க்கையை மனைவி ஏற்றுக்கொள்ள பழகியிருந்தாள், இன்னொன்றில் முதல் மனைவி சிலம்பெடுக்காத குறை. இருவரில் யாரைப்பின்பற்றலாமென்பதில் மிகவும் குழப்பம்.

அறைக்குத் திரும்பினாள், குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். எழுப்பி உடனே கேட்கவேண்டுமென நினைத்தாள். அவனுக்குச் சட்டென்று கோபம் வரும். இவளைவிமர்சிப்பதற்கென்று புது புது வார்த்தைகள் வந்து விழும். இவள் தலையணையையும் இழுத்துப்போட்டுக்கொண்டு தூங்குகிறான். தலையணையை எடுக்கக்குனிந்தபோது, அவனிடம் விஸ்கி நாற்றம், குமட்டிக்கொண்டுவந்தது. பக்கத்தில் தலைமயிரை முகத்தில் பரத்தியடி ஒரு பெண். இதயம் படபடக்க, பதட்டத்தில்ஸ்விட்சைக்கூட தேட வேண்டியிருந்தது. போட்டபோது, எல்லாம் பிரமையென்று புரிந்தது. ஒருக்களித்து படுத்திருந்தவன், திடீர் வெளிச்சத்தை மறுப்பவன் போலதலையாட்டினான், விளக்கை அணைத்தாள். தலையணையைக் கட்டிலிலேயே போட்டுவிட்டு மின் விளக்கை எரியவிடாமல் வரவேற்பறைக்கு வந்தாள். இருட்டில்சோபா நிறைய நீண்ட கூந்தலை முடிக்க மறந்த பெண்கள். அச்சமாக இருந்தது. எல்லாம் கற்பனையென்பதை உணர கூடுதலாக சில நொடிகள் தேவையாக இருந்தன.சோபாவில் சரிந்து விழுந்தவள், அப்படியே உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை வீட்டில் வழக்கம்போல எல்லாம் நடந்தது. ஆறுமணிக்கு எழுந்து அருகிலிருந்த ரொட்டிக் கடைக்குச் சென்று காலை உணவுக்கு வேண்டிய ரொட்டிகள்வாங்கிவரவென்று அவன் போயிருந்தான். இவள் பிள்ளைகளை பள்ளிக்கு தயார் பண்ணிகொண்டிருந்தாள். அவனே பாலை மைக்ரோஓவனில் சுடவைத்து இன்ஸ்டண்ட்காபிபொடியில் காப்பியைத் தயாரித்து ரொட்டி வெண்னெய் ஜாமென்று எடுத்துக்கொண்டு மேசையில் உட்கார்ந்தான். அவனாக பேசட்டுமென காத்திருந்தாள். நிறைய தமிழ்சீரியல்களில் அதுபோன்ற காட்சிகள் வருகின்றன என்ற நியாயம் அவளுக்கிருந்தது. அறைக்குள் நுழைந்து உடுத்திக்கொண்டுவந்தவன், “ கொஞ்சம் ஆபிஸ¤க்குச் சீக்கிரம்போகணும், பிள்ளைகளை பள்ளிக்கு இன்றைக்கு நீதான் அழைச்சுப்போகணும்!”. அவனிடத்தில் வேண்டுகோள்கள் இருக்காது. எல்லாம் கட்டளைகளாகத்தான் வரும்.அவனுடைய வெற்றியின் ரகசியமே அதில்தானிருக்கிறதாம், ஒரு முறை சொல்லியிருக்கிறான். கார் சாவியை எடுத்துக்கொண்டு மடமடவென்று படிகளில் இறங்கிபோயே போய்விட்டான்.

பொதுவாக அவள், கணவனின் வேலை விபரங்களை விசாரிப்பதில்லை. பிரான்சுக்கு வந்த பதினைந்து வருடத்திற்குள் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். இருபிள்ளைகளுக்கு தகப்பன். மூன்று வருடத்திற்கொருமுறை இந்தியாவுக்கு அழைத்துபோகிறான். இவளுடைய குடும்பத்தினருக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும்முடிந்த அளவு உதவி செய்கிறான். ஒரு மாதத்திற்கு முன்புவரை டெக்ஸ்டைல் நிறுவனமொன்றில் வேலையிலே இருந்தான். அடிக்கடி பிரான்சுக்கும் இந்தியாவுக்குமாகபயணம் செய்திருக்கிறான். ஒருமுறை, அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டு கேட்கப்போக, “ தெரிந்து என்ன செய்யப்போறே, அப்படி சொன்னாலும்புரியுமா? கூடாத வேலைன்னா என்ன செய்வ? பிடிக்கலைண்ணு தாலியை கழட்டி வச்சிடுவியா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டுபோக அரண்டுபோனாள். அவனுடையநண்பனிடம் நடத்திய தொலைபேசி உரையாடலிருந்து அண்மையில் ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறானென்று என்பது மட்டும் புரிந்தது.

இரண்டாவது முறையாக தலைமுடியை அவனுடைய சட்டையில் கண்டது நேற்று பகலில், துணிகளையெல்லாம் சலவை எந்திரத்தில் போடலாமென்று ஒழித்தபோதுநடந்தது. இம்முறை எடுத்த முடியை ஏற்கனவே கையிருப்பிலுள்ள முடியுடன் ஒப்பிட்டுப்பார்த்தாள் நீளத்தில் மட்டுமே வித்தியாசம், மற்றபடி அந்த ஒற்றை மயிரின் மினுமினுப்பு, கருமை, ஆரோக்கியம், கவர்ச்சி ஒன்றுபோலவே இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்த பிரெஞ்சு தோழி இசபெல்லாவிடம் பேசியபோது, “ஜாக்கிரதை!ஆண்களை நம்பாதே, பிரச்சினையென்றால் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியே வந்துவிடு.”, என்ற யோசனையைக் கேட்டு பயந்து போய்விட்டாள்.அம்மாவிடம் உடனே பேசவேண்டுமென நினைத்து, ஐந்தாறுமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, சென்னையிலிருக்கும் அண்ணன் வீட்டிற்குப் போன் செய்யஅண்ணனில்லை. அண்ணிதான் எடுத்தாள். அவளிடம் கூறினால் ஊரெல்லாம் தண்டோரா போட்டுவிடுவாளென்று தெரியும். “வீட்டிற்கு போன் போட்டேன் யாருமில்லை,அவசரமென்று சொல்லுங்கள், என்று போனை துண்டித்துவிட்டாள்.

மணி பன்னிரண்டு. எதிரிலிருந்த கட்டிடத்திலிருந்து மதிய உணவிற்காக வெளியேறிக்கொண்டிருந்தனர். அவனும் நீளமுடிக்காரியும் ஒருவேளை ஒன்றாக வெளியில்வரலாம். அப்படி வந்தால் எப்படி எதிர்கொள்வது, பார்த்தும் பார்க்காமல் வீட்டிற்குத் திரும்புவதா அல்லது அவளுடன் கட்டி புரளுவதா? இரண்டாவது காரியத்தைசெய்வதற்குத் தெம்புபோதாது. தவிர பன்னிரண்டரை மணிக்கு சின்னவளை பள்ளியிலிருந்து அழைத்து வரவேண்டும். இப்போதே வீடு திரும்பினால் தான் ஆச்சு.

மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரம் திரும்பியிருந்தான். பானு! பானு!…வென்று அழைத்தான். பெயரிட்டு அழைக்கிறபோது நல்ல மூடில் இருக்கிறான் என்பதைஅனுபவங்கள் சொல்லியிருக்கின்றன. அவளுக்கு வேண்டியவற்றை சில ஊடல்களுடன் நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு. அரிதாகத்தான் வரும். வந்திருக்கிறது.மீண்டும் எப்போதோ? தாறுமாறாகக் கிடந்த சின்னவள் அறையை ஒழுங்கு செய்துக்கொண்டிருந்தவள், அவன் குரலைக் காதில் வாங்காதவள்போல வேலையில்மும்முரமாக இருந்தாள். இதுபோன்ற தருணங்களில் அவளைத்தேடி வருவானென்று தெரியும். வந்தான். என்ன பானு. நான் கூப்பிட்டது காதில் விழலையா? இங்கே என்னசெய்யற?

– சொல்லுங்க என்ன விஷயம்? வேக்குவம் கிளீனரை வேக்குவம் கிளீனரை அணைக்காமலேயே கேட்டாள்.

– கிட்டே வாயேன், சொல்றேன்.

சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, வார்த்தைகளில் இறுக்கத்தை கொணர்ந்து பதிலிறுத்தாள்

– பக்கத்து அறையிலே பசங்க இருக்காங்க, எனக்கும் வேலைகளிருக்கு”,

– வழியில் ஒரு நகைக்கடையில் பார்த்தேன் நன்றாக இருந்தென்று வாங்கினேன். அவன் கையில் சின்னதாய் ஒரு ஜுவல் பாக்ஸ், திறந்திருந்தது உள்ளேஜொலித்துக்கொண்டு வைர மோதிரம். இடது கையை மெல்ல எடுத்து, வேக்குவம் கிளீனரை அணைக்காமலேயேவிரலில் போட்டுவிட்டான்.

திடீரென்று போன் அலறியது. போன் இவள் கைக்கெட்டும் தூரத்திலிருந்தது, ரிசீவரை கையிலெடுத்தபோது அவன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான்.எதிர்பார்த்ததுபோல அம்மாதான் மறுமுனையிலிருந்தாள்.

– என்னம்மா, ஏதாச்சும் சேதியா? அவசரமா என்கிட்டே ஏதோ பேசணும்னு சொன்னியாமே?

– ஆமாம்மா, உங்க மாப்பிள்ளை இன்றைக்கு ஒரு வைர மோதிரம் வாங்கித்தந்தார். அதைசொல்லத்தான் எடுத்தேன். மற்றபடி நீங்க நல்லா இருக்கீங்களா?…

அவன் காரை எடுப்பது சன்னல் வழியே தெரிந்தது. இருவரும் முத்தமிட்டுக்கொள்வதுபோல இருந்தது. அவளுக்கு தலைமுடியும் நீளமாகத்தான் இருந்தது. இவள் மோதிரவிரலைப்பார்த்துக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *