கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 2,135 
 
 

(1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னவோ தெரியவில்லை; மனம் ஆனந்தத்தால் துள் ளிக்கொண்டிருக்கிறது! சுற்றுப்புற சூழ்நிலையில் அமைதி கார ணமோ அல்லது மலைமுகட்டுக்குப் பின்னால் விழுந்துகொண் டிருக்கும் அந்திச் சூரியன், வானக்கிழியில் செய்யும் வர்ண ஜாலம் காரணமா? அதுவுமல்லாமல் வெகு காலத்துக்குப் பிறகு இந்தத் தோட்டத்துக்கு வந்து எனக்குப் பிடித் தமான மலை உச்சியில் நிற்பதால் ஏற்படும் எக்களிப்பா? எதுவென்று புரியவில்லை.

‘இதுதான் நான் முதன்முதல் வேலை ஏற்றுத் தொழில் பழகிய எஸ்டேட்; இங்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நான் இருந்தேன்; இதோ நின்றுகொண்டிருக்கும் இந்த இட மெல்லாம் அப்போது என் சாம்ராஜ்யம்’ என்று சொல்லிக் கூத்தாட வேண்டும்போல்- அசட்டு எண்ணந்தான் – தோன்றுகிறது.

பழகிய இடமென்றாலே மண்ணும் மரமும் கூட உயிர் பெற்று வாஞ்சை தருகின்றன.

மலையின் அடிவாரத்திலே, நான் இருந்த ‘ஒரேஞ்ச்வெலி’ தோட்டம் விரித்த பாயாகக் கிடக்கிறது. அதோ சுவரில் மஞ்சள்நிற ‘டிஸ்டெம்பர்’ பூசி, சிவப்புத் தகரக் கூரையோடு தெரிகிறதே, அதுதான் எங்கள் பெரியவரின் வீடு – மன்னிக் கவும், ‘பங்களா!’ அதற்குப் பின்னால் பங்களாவை ஒட்டித் தெரியும் சின்னவீடுதான் நான் இருந்த இடம். முன்னால் படர்ந்து விரிந்து நிழல் தந்துகொண்டிருக்கும் அந்தப் பலா மரம் ……. இன்னும் சிரஞ்சீவியாக நிற்கிறதே!

பலாமரம் மட்டுமல்ல, மற்ற எல்லாமே, ‘டாக்டரையா’ பங்களாவுக்கு முன்னால் ‘சம்மர் கிராப்’ வெட்டிக் கொண்ட பையன்மாதிரி மட்டம் வெட்டிய சப்பாத்திக் கள்ளி வேலி, கறுப்புத்தார் பூசிய ‘டிராம்வே’க் கம்பிநிலையம், கொழுந்து மடுவம் எல்லாமே தவமிருக்கும் கன்னிபோல மாற்றமற்று ருக்கின்றன். புதுமையை எதிர்பார்த்த நெஞ்சுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். அத்துடன் இனம் புரியாத ஒரு திருப்தியுங்கூட!

பின்னால் ஏதோ அரவம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கி றேன். யாரோ ஒரு பெண், வெற்றுக் கொழுந்துக் கூடைய முதுகில் அங்குமிங்குமாக அசைய, கையில் ஒரு சிறுவனைப் பிடித்தவண்ணம் வந்துகொண்டிருக்கிறாள். உற்றுப் பார்க் கிறேன்.

அட! அலமேலு…

முன்பு நான் இங்கு கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்த போது என்னுடைய மலையில் வேலைசெய்தவள். வழக்கமாக மூன்றாம் மனிதர்களைப் போகிற போக்கில் பார்ப்பதுபோல் என்னையும் பார்த்தவள், திடுக்கிடுகிறாள். மறுகணம் முகம் மலருகிறது. பக்தியும் நன்றியுணர்வும் கலந்தால் வருமே ஒரு முகபாவம். அப்படி,

“ஐயா கும்புடுறேன்”

நானும் கைகூப்புகிறேன். “வா அலமேலு! எப்டி சொகமா?”

“இருக்கிறேங்க. ஐயா சொகமா இருக்கீங்களா?”

“சொகமா இருந்ததுனாலேதாலே ஒங்க தோட்டத்துக்கு வந்துருக்கேன்” மரியாதையாய்ச் சிரிக்கிறாள்,

“இன்னைக்கி இங்கேயா மலை?”

“ஆமாங்க இருவத்திநாலாம் நம்பரு”

கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். அது மணி ஐந்து முப்பது என்று காட்டுகிறது. வழக்கமாக நான்கு மணிக்கு வேலைமுடிந்து இந்நேரம் வீட்டிலே இருக்கவேண்டிவள்.

“சொணங்கிட்ட போலே இருக்கே”

“மே டிவிசனுக்குபோயி எங்க ஆயியெ பார்த்துட்டு வர்றேன்”

“தங்கச்சியா?”

“ஆமாங்க. எனக்கு எளையது பாக்கியம்”

“அடடே பாக்கியமா, இங்கேயா இருக்குது?”

“இங்கேதானே கட்டிக்குடுத்துருக்கோம். ‘புளி குடிச்சி ருக்குது’ இதுதான் மாசம், பார்த்துட்டு போறேன்”

அவளுடைய விரலைக் பிடித்துக்கொண்டுநிற்கும் சிறுவன் என்னையும் அவளையும் மாறிமாறிப் பார்க்கிறான். இப்போது தான் அவனைக் கவனிக்கிறேன். இடுப்புக்குக்கீழே ‘டிரௌசர்’ இல்லாமல் மேலே ஒரு கோடுபோட்ட சட்டைமட்டும். சட் டையின் முன்புறத்தை வயிறு தள்ளிக்கொண்டு நிற்கிறது. இரண்டு கையிலும் வெள்ளிக் காப்பு. மூக்கிலே இரண்டு வெள்ளை அட்டை எட்டிப்பார்த்து மேலே ஓடுகிறது!

“இது யாரு அலமேலு?”

“எம்மவனுங்க’ என்று என்னைப் பார்க்கிறாள். புருவங்கள் வளைந்து ‘ஞாபகமில்லையா’ என்று கேட்கின்றன. “மூத்தவன் தனுசுகோடி”

என் மண்டைக்குள் பளிச்சென்று ஒரு மின்னல் நெளிகி றது. அவன இது? அட…

எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. “எலே அம்பி! இங்கே வாடா என்று கையை நீட்டுகிறேன். அவன் மருண்ட அம்மாவோடு ஒட்டிக்கொள்கிறான். அலமேலு தன் சேலைத்தலைப்பால் அவன் மூக்கைத் துடைத்துவிட்டு “ஐயா கூப்பிடுறாரு. போய் ஏன்னு கேளு என்று அவனைத் தள்ளு கிறாள். இரண்டடி முன்னால்வந்து எனக்கும் அவளுக்கும் மத்தியில் நிற்கிறான். முன்னால் வர மனமில்லை. பின்னால் போகவும் தயக்கம். நானே இரண்டடி முன்னால்வந்து அவன் கையைப் பிடிக்கிறேன். மழையைக் கொட்டத் தயாரான சூல்கொண்ட மேகம்போல், அவன் முகம் கறுத்துப்போய்ப் பார்க்கிறான். நான் மெதுவாக அவனுடைய கலைந்த தலை மயிரை ஒதுக்கி முதுகைத் தட்டியவுடன் அவன் பயம் குறை கிறதுபோலும் என்னைப் பார்க்கின்றான்.

“உன் பேரு என்ன” என்று கேட்கிறேன். அவன் மொச் சைக்கொட்டை விழிகளைப்பிதுக்கி வெட்கப்படுகிறான். தலை குனிகிறது. நாக்கு வெளியேவந்து சுழன்று கீழுதட்டை ஈரப் படுத்தி உள்செல்கிறது. அலமேலு உற்சாகப்படுத்துகிறாள்.

‘சொல்லுய்யா பேரு என்னான்னு சொல்லு’

சிறுவன் குனிந்ததலை நிமிராமல் “தலுசுகோட்டி’ என்று முணுமுணுக்கிறான். ‘ன’கரம் வராத அந்த மழலைப் பேச்சைக்கேட்டு நான் சிரிக்க, அவளும் சிரிக்கிறாள். பையன் இன்னும் வெட்கப்படுகிறான். சட்டையின் வலது கைப்புறத் தில் மூக்கை இழுத்துக்கொள்கிறான். அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு மூச்சுக் காற்றையும் ஆழ்ந்து ரசிக்கிறேன். மனதுக்குள் மெல்லிய ஒரு தாய்மைச் சிலிர்ப்பு!

அவனுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்று தோன்றுகி றது. ஆனால் ‘மணிப்பர்ஸை’ அண்ணா வீட்டிலேவிட்டு வந்தா யிற்று. காலாற நடக்க எண்ணியவன், வந்த இடத்தில் இப் படி இவர்களைச் சந்திக்கநேருமென்று எதிர்பார்க்கவில்லை.

சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அலமேலு விடை பெறுகிறாள்.நானும் கைகுவித்து வழி அனுப்புகிறேன். மக னையும் கும்பிட்டு விடைபெறும்படி சொல்கிறாள்.

“ஐயா பொய்ட்டு வாறேன்னு சொல்லு கும்புட்டுச் சொல்லு” கையைக் குவிக்கப் பழக்குகிறாள். இப்டி இரண்டு கையாலே” அவன் சிறு புன்னகையோடு அவள் மடிக்குள் முகம் புதைக்கிறான். இருவரும் நடக்கிறார்கள்.

அவன் ஏதோ கேட்கிறான்போலும். அவள் பதில் சொல் கிறாள். சொல்விளங்காத தூரத்து இசையாக அவர்கள் பேச் சுக் கேட்டுத் தேய்கிறது. என் கண்ணிலிருந்து அவர்கள் மறைந்தபிறகு மீண்டும் எஸ்டேட் மலைகள் மீது கண்ணோட் டம் செலுத்துகிறேன்’ ஏதேதோ நினைவுகள். ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு மரமும் கதை சொல்கிறது.

மெல்லிய சிரிப்பொலி கேட்கிறது.

அவர்கள்தான். மலையின் முகட்டில் திரும்பி, மறுபடி நான் நிற்கும் இடத்துக்குக்கீழே நடந்துகொண்டிருக்கிறார்கள். பையன் அவளுடன் சமதையாக நடக்க முடியாமல் விரலைப் பிடித்துக்கொண்டு ஓடுகிறான். அந்த ஓட்டத்திலும் வாய் ‘சள சள’ வென்று பேசுகிறது. தூரத்தில் சென்று மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.

மனம் அவனுடனே ஓடுகிறது.

***

காலைப் பொழுது.

அயர்ச்சிக்குப் பிறகு வரும் ஒரு புத்துணர்ச்சி எங்கும் மல ருகிறது. சிரித்துக் குலவிக்கொண்டு நிறைபோடும் கங்காணி அவசர அவசரமாக நிறையை எண்ணிச் சொல்ல, படங்குச் சாக்கை கட்டியதுபாதி கட்டாதது பாதியாக பெண்கள் நிறைக்குப் பாய்கிறார்கள். நான் வந்துவிட்டேனே!

தட்டுச் சுற்றாகக் கட்டிக்கொண்டுவந்த சேலையை நிறை பிடிக்குமுன் பாதி அவிழ்த்துத் தோளில் ஒரு முடிச்சும், இடுப்பில் இன்னொரு முடிச்சுமா வேறு மாதிரியில் கட்டிக் கொள்ள வேண்டியவர்கள் தயங்கி, பெரிய சவுக்கு மரங்க ளுக்குப் பின்னால் மறைந்து கட்ட முயல்கிறார்கள். நான் சிரித் துக்கொண்டு நழுவுகிறேன். எதிரே அவள் வருகிறாள், அலமேலு.

முகம் வெளுத்து, வயிறு பருத்து கணுக்கால்வரை தொங் கும் சேலை வயிற்றுப்பருமனால் முழங்கால் கெண்டைச் சதை கள்வரை தூக்கிநிற்க, காலில் பச்சை நரம்பு தெரிகிறது. ஒருகை இடுப்பில், நிதானமில்லாத நடையினால் இட்ட அடிக் கும் எடுத்த அடிக்கும் உடல் பக்கம் பக்கமாகச் சாய்கிறது.

நின்று கவனிக்கிறேன். ‘ஐயோ பாவம்’ என்றிருக்கிறது எனக்கு. ‘நிறைமாதக் கர்ப்பிணி’ வேலைக்கு வருகிறாள்.

வேலைத்தளத்துக்கு வந்துவிட்டால் வேலைகொடுக்க வேண் டும், இது சட்டம். வந்தபிறது யாருக்கும் ஏதேனும் ‘எசகு பெசகு’ வராமல் பார்த்துக்கொண்டு முன் ஜாக்கிரதையா கவே அவசியமானதைச் செய்யவேண்டும். இது கடமை.

எனக்கு எதைச் செய்வதென்றே புரியவில்லை.

அதற்குள் அவள் கூட்டத்துக்குள் கலக்கிறாள். வழக்க மாக அவள் மங்களக் கிழவியோடுதான் நிற்பாள். மங்களத் தைக் கூப்பிடுகிறேன். அந்தக் கிழவி ‘என்னமோ ஏதோ’ வென்று ஓடி வருகிறாள்.

“என்னங்க ஐயா”

“அலமேலுக்கு ‘இதோட’ வேலை செய்ய முடியுமா?”

கிழவி திரும்பி அலமேலுப் பக்கம் பார்த்துவிட்டு மௌனம் சாதிக்கிறாள். ஆயினும் அவள் சொல்லாத பதில் என் மனதுக்குள் கேட்கிறது – ஏழைகளுக்குச் சுகமாவது சொகுசாவது! கஷ்டமோ நஷ்டமோ அன்றைக்கு வந்து ‘பேரு’ போட்டால்தானே முப்பதுநாளும் அடுப்பெரிக்கமுடி யும்! அதிலும் அவள் புருஷன் ஒரு குடிகார மொட்டை!

“மங்களம்!”

“ஏங்க”

“அலமேலு ‘இதோட’ நெறை ஏறி இறங்கறது சரியில்லே. எங்னேயாவது தன்னையான எடமாப்பாத்து துண்டு எடுவையா எடுக்கச்சொல்லு”

“நல்லம்”

“தொணைக்கு நீயும் வேணும்னா நில்லு”

“நல்லம்ங்க”

“ஆளைப் பாத்தா இப்பவோ அப்பவோன்ல இருக்கு”

“இல்லைங்க, இன்னம் ஒரு கெழமை இருக்குதாம்”

‘ம்’ நான் நகருகிறேன். கொஞ்சநேரம் மனம் அலமே லுவைச் சுற்றிவருகிறது. அப்புறம் உழைப்பின் வேகத்தில், கடமையின் பொறுப்புணர்ச்சியில் நினைவு நழுவுகிறது.

காலைப் பனிக்காற்று உடைகளைத் தாண்டி, எலும்புக் குருத்துவரை போய்க் குசலம் விசாரிக்கிறது. வேஷ்டியைச் சண்டிக்கட்டாக மடித்து, கரையின் இரு நுனிகளையும் தூக்கி வயிற்றுப்புறம் சொருகி, நிறைக்குள் இறங்குகிறேன்.

குளிரைப் பார்த்துக்கொண்டு நின்றால் சரிப்படாது!

தேயிலைச் செடிகளின் இலைகள் அசைந்து, இரவுபெய்த பனித்துளிகளைக் காலடியில் முத்தாகச் சமர்ப்பிக்கின்றன. உள்ளங்காலிலிருந்து குளிர் வியாபித்துப் பரவுகிறது. உடல் புல்லரிக்கிறது. முன்னால் போன பெண்கள் ‘மடமட’வெனக் கொழுந்து எடுத்துக்கொண்டே போக பின்னால் செடிகளைப் பார்த்துக்கொண்டு போகிறேன். சற்றுத் தள்ளி, ஒரு பெண் கொழுந்து எடுக்கும் இலாவகம் நெஞ்சை அள்ளுகிறது.

விழாக் காலங்களில் சிங்களப் பெண்கள் ‘ரபான்’ அடிக் கும்போது ஒழுங்காக கைவிழும் தாளகதி இவள் கைகளிலும் தெரிகிறது. கரங்களில் நடனத்துக்கு, கைக்கு நான்காகக் கிடக்கும் கண்ணாடி வளையல் ‘சிணுங் சிணுங்’கென்று மோதி இசை எழுப்புகிறது. என் திருஷ்டி தோஷமோ, என்னவோ கைகளின் இசை நடனம் தடைப்படுகிறது. நான் அவளைப் பார்க்கிறேன். அவள் ரோடுபக்கமாகத் திகைப்போடு பார்க் கிறாள்.நானும் திரும்புகிறேன். அங்கே மங்களக்கிழவி ஓடி வந்துகொண்டிருக்கிறாள்.

“மங்களம் என்னது?” என்று சத்தமிடுகிறேன்.

அதற்குள் அவளே இடைமறித்து, கங்காணியைப் பார்த் துச் சத்தமிடுகிறாள். ‘கங்காணி ஒரு நாலைஞ்சு பெண்டுகளெ வரச்சொல்லுங்க, சுருக்கா, அலமேலுவுக்கு வலிகண்டுருச்சி?”

எனக்குத் திகைப்பு, அப்புறம் எரிச்சல். என்ன பெண்கள் இவர்கள்! பிரமாதமாக நாள்கணக்கு வைத்திருப்பவர்கள் போல் வந்துவிட்டு …

கங்காணி நான்கைந்து கிழவிகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் போகச்சொல்கிறான். அவர்கள் கூடைகளை இறக் கிப் பக்கத்து நிறைப் பெண்களிடம் கொடுத்துவிட்டு, நெருங்கி நிற்கும் செடிகள் சலசலக்க ‘மடமடவென இறங்குகிறார் கள். வேகத்தில் செடிகளின் கிளைகள் வளைந்து படீரென நிமிர்கின்றன.

“ஐயா” கங்காணி நெருங்கி வருகிறான்.

“என்ன கங்காணி?’

“அலமேலுவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகணுமே.லொறி?”

“லொறி எங்கே நிக்குதோ தெரியல்லியே! எதுக்கும் ஒரு புள்ளையை அனுப்புங்க”

கங்காணி திரும்பிச் சத்தமிடுகிறாள். “இந்தா செவாக்கியம்! இஞ்சவா”

ஒரு துண்டுக் கடிதத்தில் அவசரமாகக் கிறுக்கி, சிவபாக் கியத்திடம் கொடுக்கிறேன். அவள் கடிதத்தோடு ஓடுகிறாள். இல்லை பறக்கிறாள்! இம்மாதிரியான வேளைகளிலே அவள் தான் எங்கள் ‘பியூன்!’ நானும் ரோடுக்கு இறங்குகிறேன்.

முன்னால் இறங்கிப்போன பெண்களில் ஒருத்தி ‘லொறி வாரதுக்குள்ளே ஒண்ணும் ஆயிடப்படாதுடாப்பா, அப்பனே சம்முவா!” என்று ‘பினாத்திக்’ கொண்டே ஓடுகிறாள். தனி யான ஓர் இடத்தில் நான்கைந்து செடிகள் இல்லாமல் மொட்டையாக இருந்த இடத்தில் அலமேலு அமர்ந்திருக்கி றாள். ரோடிலிருந்து சற்று மேடான இடம். தேயிலைச் செடி களுக்குமேல் அவள் முகம் மட்டும் பாதியளவு தெரிகிறது. நெற்றியில் முத்துமுத்தாக வியர்வை. பக்கத்து முருங்கை மரத்தின்மீது அயர்வாகச் சாய்ந்து இருக்கிறாள்.வாய் ஏதோ புரியாத வார்த்தைகளை அரற்றிக்கொண்டிருக்கிறது.

போன கிழவிகள் அனைவரும் அவளைச்சுற்றிக் கூடுகிறார் கள். அலமேலு அருகில்சென்று அவளைப் பார்த்துவிட்டு ஆறு தலாக இரண்டு வார்த்தை சொல்லலாமா என்று எண்ணுகிறேன்.

அதற்குள் சுற்றிநின்ற கிழவிகளில் ஒருத்தி கூறும் சொல் என்னைத் தயங்கவைத்துவிடுகிறது.

“இப்பவே ஆயிடும்போலிருக்கே!”

நான் நின்றுவிடுகிறேன். அவர்கள் அலமேலுவைத் தூக்கி நிறுத்துகிறார்கள். அவள் எழும்பிநிற்க முடியாமல் நின்று மரத்தின் தாழ்ந்த கிளையொன்றில் தொங்குவதுபோல் இரண்டு கைகளாலும் பிடித்து ஒரு கரத்தின் முழங்கை மடிப் புக்குள் தலையைப் புதைத்துக்கொள்கிறாள். கூந்தல் அவிழ்ந்து சரிந்து விரிகிறது. இடுப்புப் படங்கைக் காணவில்லை. சேலை கூட ஒப்புக்குச் சுற்றினாற்போலத் தொளதொளத்துக் கிடக்கிறது.

நெற்றியில் துளிர்த்துநிற்கும் வியர்வை. கண்களிலிருந்து வழியும் கண்ணீர்,

உலகைப் பார்க்கத் துடிக்கும் ஜீவனுக்கு வழிவிடுகிறாற் போல் நிற்கும் நிலை…

ஒரு கணத்துக்குள் அந்தக் காட்சி கண்களிலும், மனதி லும் அப்பிக் கொள்கிறது. முகத்தைத் திருப்பிக் கொண்டு அகல்கிறேன். மனதுக்குள் ஒரு தவிப்பு, பயம்.

உடலுக்குள் உயிரைப் பாய்ச்சி, பின்னர் உடலைக் கிழித் துக்கொண்டு வரும் இந்தக் கண்ணா பூச்சி விளையாட்டையும் இதற்குக் காரணமாக இருக்கும் எல்லாவற்றையும் மனம் சபிக்கிறது. அலமேலுவுக்கு ‘வக்காலத்தாக!

நடந்துகொண்டிருக்கும் என் காதுகளில், மேட்டிலிருந்து புரிந்தும் புரியாததுமாக ஏதேதோ வார்த்தைகளும், முக்க லும் முனகலும் எனக்கு விரும்பாமலே வந்து புகுந்துகொள் கின்றன. மனம் பொங்குகிறது. கண்களில் கண்ணீர் துளிர்த்து, மெல்ல இரண்டு விம்மல் வெடிக்கிறது. தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் முண்டாசின் பிடரிப் புறத்துண்டால் வாயைப் பொத்துகிறேன்.

என்ன மனித வாழ்க்கை!

கண்களைத் துடைத்துக்கொண்டு நிறைக்குள் இறங்குகி றேன். இயந்திரகதியாக வேலை நடக்கிறது. எல்லோருக்குமே மனம் வேலையிலில்லை. கண்களும், காதுகளும் பெண்கள்கூடி நிற்கும் மேட்டைநோக்கி நிற்கின்றன.

பயங்கரமான பலநிமிஷங்களுக்குப் பிறகு ஒருத்தி வருகி றாள். ஓரடி முன்வைத்து பதற்றத்தோடு ‘என்ன தெய் வானை” என்கிறேன்.

“புள்ளை பொறந்திரிச்சு! ஆம்பளைப் புள்ளே'”

“அலமேலு?”

”சொகமா இருக்குது’

மனப்பாரம் இறங்குகிறது; பெருமூச்சாக.

***

அன்று மாலை…

அந்திக் கொழுந்து நிறுத்துப் போட்டுவிட்டுப் போகும் வழியில்தான் ‘வார்ட்’ இருக்கிறது. அலமேலுவைப் பார்த்து விட்டுப்போக உள்ளே நுழைகிறேன். சுருட்டைத் தலைமயிரும், கட்டை குட்டையான உடம்பும் உள்ள ஆயம்மா “எண்ட மாத்யா” என்கிறாள். எனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்க ளத்தில் “அலமேலு பலாண்ட ஆவா” என்கிறேன். சிரித் துக்கொண்டு முன்நடக்கிறாள், நானும் தொடருகிறேன்.

ஒரு நீண்ட அறையின் வாசலில் நின்று “அலமேலு அம்மே! ஒங்கட ஐயா வந்துருக்காங்க” என்று கட்டியம் கூறுகிறாள்.

அறைக்குள் சிறு சலசலப்பு.

ஆயம்மா ஒதுங்கி வழிவிட நான் உள்ளே நுழைகிறேன். வரிசைக்கு ஏழாக இரண்டுவரிசைக் கட்டில்களில் சிலவற்றில் மட்டும் இருக்கும் பெண்கள் மரியாதையாக எழும்பி உட்கா ருகிறார்கள்.

அலமேலுவும் முழங்கையை ஊன்றி எழும்ப முயல்கி றாள். நான் தடுக்கிறேன்.

பக்கத்தில் நிற்கும் அவள் கணவன், அத்தை, இன்னும் யார் யாரோ ‘என்னைக்கண்டு கைகூப்புகிறார்கள். நானும் கும் பிடுகிறேன்.

“சொகமா அலமேலு”

“ஆமாங்க’”

காற்றுப் போன பலூன் மாதிரி துவண்டு கிடக்கிறாள். கட்டிலுக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறு தொட்டிலுக்குள் குழந்தை உறங்குகிறது. குனிந்து பார்க்கிறேன்.

செலூலயிட் பொம்மை மாதிரி துணிக்குள் சுருண்டு கிடக்கிறது. கடுமையான ஒரு பிரச்சினைக்கு முடிவு கண்டது போல் மனதில் ஒரு தெளிவு. அலமேலுவின் கணவன் குறுக் கிடுகிறான்.

“புள்ளைக்கு ஐயாசொன்ன பேரையே வச்சுட்டோம்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “பேரா? என்ன பேரு?”

“தனுஷ்கோடின்னு வைக்கலாம்னு சொன்னீங்களாம். அதையே வைச்சுட்டோம்”

“அட!” எனக்குச் சிரிப்பு. அன்றைக்கு நாங்கள் கொழுந்து எடுத்த மலைக்கு நம்பர் உண்டு. என்றாலும் ஒரு காலத்தில் தனுஷ்கோடி என்று பெயர் உள்ள கிழவி அந்த மலைபூராவையும் ‘கண்டிராக்டாக’ எடுத்து, புல்வெட்டினாள் என்பதற்காக அந்த மலைக்குத் ‘தனுஷ்கோடி மலை’, என்று ஒரு செல்லப் பெயர்.

“இந்த மலையிலே வந்து பிறந்ததுக்காக இந்தப் பயலுக் னை” என்று குக் கிழவி பேரையே வக்கிறதுதான் தண்டனை” நான் கங்காணியிடம் ஹாஸ்யம் பண்ண

அதுவே பெயராகிவிட்டது!

நான் இளைஞன்தான் என்றாலும் வார்டைவிட்டு வெளி யேறும்போது நூறு வயதுக் கிழவனின் நிறைவு மனதில் இடம் பிடித்துக்கொள்கிறது.

ஆயம்மா கதவைச் சாத்திக்கொள்கிறாள்.

***

நினைவு நழுவுகிறது.

அன்றைய அந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியும், பயமும் இப்போது எண்ணிப்பார்க்கும்போது பொருளற்ற கவிதைபோல, நிழலே அற்றதாக உணர்கிறேன்.

ஆயினும், அந்தச் சிறுவனைப் பார்க்கும்போதும் நினைக்கும்போதும் ஏற்படும் அந்த நிறைவுமட்டும் குறையவில்லை. ஏனோ தெரியவில்லை.

– தினகரன் 18-3-62

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *