நிராயுதபாணி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,814 
 
 

அந்த உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தன் சித்தார்த்.

முகம் வாடவில்லை, வதங்கவில்லை. அன்று பறித்தப் பூவாய், சிறு புன்னகை ததும்பும் மலர்ச்சியுடன் கண் மூடிக் கிடந்தாள் அவன் மனைவி விஜி என்கிற விஜயலெட்சுமி.

இவனுக்குள் அழுகையோ ஆத்திரமோ வரவில்லை. மாறாக மனதில் சூன்யமான வெறுமை. போரில் எல்லாம் இழந்து நிராயுத்தபாணியாக நிற்கும் தன்மை.

‘ இவள் உயிராய் இருந்தபோது நான் ஆடிய ஆட்டம் ! ‘ – அவள் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் மண்டையில் படம் ஓடியது.

சித்தார்த்துக்குத் திருமணம் பிடிக்கவில்லை. காரணம்…?….

இவன் வேறு பெண்ணிலிருந்தான். இந்த மைதிலித்தான் இவன் வாழ்வில் இணைந்து உயிராய், உடலாய் இருக்க வேண்டுமென்று கனவு கண்டான்.

விதி வேறு பாதை காட்டிவிட்டது. காதலுக்கே உள்ள சாபம். பெற்றவர்கள் சாதி, மதம், பணம், கவுரவம், அந்தஸ்த்து எல்லாம் காட்டி எதிர்த்தார்கள், பிரித்தார்கள். பிடிவாதமாய்ப் பெண் பார்த்தார்கள்.

விஜி தகைந்தாள்.

சித்தார்த்துக்குத் தாலி கட்டும்போதே கசந்தது. முகத்தில் மலர்ச்சி இல்லை. வாட்டம்.

முதலிரவிலேயே அதன் தாக்கம் உளறினான்.

“நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். பேர் மைதிலி…!” ஆரம்பித்தான்.

விஜி அதிரவில்லை. ஆடவில்லை.

இவனைப் பற்றி பெற்றவர்கள் விபரம் சொல்லி ஏற்பாடுகள் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

இவன் தொடர்ந்தான்.

“இந்த ஊர்தான். மறக்க முடியல. மறக்க நாளாகும்ன்னு தோணுது. நீ தான் கொஞ்சம் பொறுமையாய் இருந்து இதை பொறுத்துக்கனும்.” குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போலிருந்தது.

விருப்போ. வெறுப்போ கொள்ளாமல்…..

காயம் வலிக்கும்.! ஆற நாளாகும்! – என்று உணர்ந்தவள் போல் இருந்தாள்.

என்றாலும் முதல் மாதமே குளிக்கவில்லை.

‘வேதனையில் உருவான கரு. கட்டிக் கொண்டு தொட்டுவிட்டதால் வந்த தோசம். விளைவு எப்படி இருக்குமோ..? குழந்தை எப்படிப் பிறக்குமோ..? ‘ என்கிற பயம் உள்ளுக்குள் தோன்ற…

“கலைச்சிடலாம் விஜி !” சொன்னான்.

முதல் கரு. எந்தப் பெண்ணிற்கு மனசு வரும்…? கேட்ட மாத்திரத்தில் ஆத்திரம் வரும், அதிர்ச்சி வரும்.

விஜிக்கு எதுவும் வரவில்லை.

‘ சரி ‘ – தலையாட்டினாள்.

ஆனால் டாக்டர் சியாமளா கரு கலைப்பதில் கைதேர்ந்த நிபுணி.

“முடியாது.! நான் மாட்டேன் !” என்று ஆணித்தரமாகச் சொன்னாள்.

“முதல் குழந்தையை எதுக்காக அழிக்கனும்..? உடனே வேணாம். இரண்டு மூணு வருசம் கழிச்சி பெத்துக்கலாம்ன்னு சொல்றீங்களே… அன்னைக்கு தாங்காமல் போனால் என்ன செய்வீங்க..? இன்னைக்கு கரு தங்குறதே பெருசு சித்தார்த் சார்.

இப்போ… தினம் நாம் சாப்பிடும் உணவு, புழங்கும் பொருள் அனைத்திலும் விசம் கலந்திருக்கு. விளைவு…?! ஆண், பெண்ணுடலில் மாற்றம். கரு தரிப்பு எட்டாக்கனியாய் இருக்கு.

இரண்டாவதை இஷ்டத்துக்குத் தள்ளிப் போடுங்க. இல்லை…. இல்லாமேலே இருங்க. அது உங்க விருப்பம். ஆனா இதை மட்டும் கலைக்காதீங்க.” அனுப்பினாள்.

அவளிடம் எதிர்த்துப் பேசாத சித்தார்த் வெளியில் வந்து…

“அவுங்க சொல்றதைச் செய்யலாமா விஜி…?” கேட்டான்.

“அது உங்க விருப்பம் !” சொன்னாள்.

அந்த பொறுப்பை விருப்பு, வெறுப்பின்றி இவனிடம் ஒப்படைத்தாள்.

“சரி. இருக்கட்டும் !” இவனும் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

ஒரு நாள் இவனுக்கு காதலியைச் சந்தித்து வந்து விட்ட துக்கம். பெற்றவர்களை எதிர்த்து முடிக்க முடியாத கையாலாகாத இறுக்கம்.

குடித்துவிட்டு வந்தான்.

விஜி , ஏன்…? கேட்கவில்லை. முகத்தில் வெறுப்பும் காட்டவில்லை. மாறாக…

தள்ளாடி வந்தவனை விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்தாள். அப்படியே கொண்டு படுக்கையில் சாய்த்தாள்.

ஆளைப் புரட்டி….. சட்டை, பேண்ட் கழற்றி…..லுங்கி மாற்றினாள்.

“வேணாம் விஜி. நான் இப்படியே இருக்கேன். !” என்று இவன் குழறியும் அவள் கேட்கவில்லை.

உச்சகட்டமாக முதல் குடி. இவன் குபுக்கென்று வாந்தி எடுத்ததை அந்த நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு வழித்துக் கொண்டு போட்டபோது இவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

மறுநாள் குற்ற உணர்வில் இவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே வெட்கப்பட்டான்.

“நீ எனக்கு எவ்வளவோ பணிவிடை செய்யுறே. கண்ணைப் போல காக்குறே. நீ ரொம்ப நல்லவள் விஜி. நீ எனக்கு வாய்ச்சிருக்கக்கூடாது. இவ்வளவு நல்லவள்கிட்ட என் மனா நாட மாட்டேங்குதே. மைதிலி குத்துக்களாட்டம் மனசுல உட்கார்ந்து நகரமாட்டேன்கிறாளே..? எனக்கு அவமானமாக இருக்கு. சத்தியமா… நான் உன் கழுத்துல தாலி கட்டிய கட்டாயத்துக்காக இருக்கேன். உன் நல்ல மனசை நோகடிக்க எனக்கே வருத்தமா இருக்கு..”என்று இவன் நொந்து வருத்தத்துடன் சொன்னபோது…. விஜி கண்களில் கழிவிரக்கம்தான் தென்பட்டதே யொழிய கலக்கமில்லை.

புத்தனா..? ஞானியா..? உணர்ச்சிகள் எதுவும் காட்டாத முனியா..? என்ன மனம் இவளுக்கு..? என்ன திடம் மனதுக்கு..? – நினைத்துப் பார்க்க சித்தார்த் வியப்பின் உச்சிக்கேப் போனான்.

விஜி இவன் மனதில் உயர்ந்து கொண்டு போனாளேத் உள்ளே உட்காரவில்லை.

மனித மனம் குரங்கு.

சித்தார்த்துக்கு மறுபடியும் சோகம். குடிக்குப் போனான்.

மனதிலிருக்கும் காதல் வேதனை பிரவாகமாக பொங்கி…. போதையும் சேர்ந்து கொள்ள…. ஒரு நாள் இவளிடம் காரண காரியமில்லாமல் சண்டை !

அடி, உதை. விளைவு…?

உடனே ஒரு மணி நேரத்தில் விஜி சுட்டெரிக்கும் நெருப்பாக படுக்கையில் கிடந்தாள்.

இவன் உக்கிரம் தெரிய…. இதயம் வலித்தது.

“மன்னிச்சுக்கோ விஜி…”கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு நடுவே இருக்கும் தன் நல்ல மனதைத் திறந்து காட்டினான்.

விஜி அவன் கையை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து கனிவாகப் பார்த்தாள்.

இவள் வயிற்றைத் தள்ளிக் கொண்டிருக்க… இன்னொரு நாள் விஜியை உற்சாகமாக கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றான்.

எதிர்பாராதவிதமாக எதிரில் மைதிலி.

“ஹாய் !” பளிச் உற்சாகத்தில் அவளுக்குக் கை கொடுத்து இவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

விஜி முகம் சுளிக்காமல் புன்னைகை பூத்து இரு கை குப்பி அவளுக்கு ‘ வணக்கம் ! ‘ சொன்னாள்.

காதலியை எதிர்பாராதவிதமாக சந்தித்த இன்ப அதிர்ச்சியில்…

”இதோ ஒரு நிமிசம் விஜி !” சொல்லி ஆவலுடன் அவளோடு சென்றான்.

ஒரு மணி நேரம் போனது தெரியாமல் வந்து திரும்பிய போது…

விஜி… அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றாள்.

மறந்தே போனோமே..! இவனுக்குள் அதிர்ச்சி. இதயத்திற்குள் ஈட்டி.

“மறந்துட்டேன். நீயாவது வீட்டுக்குப் போயிருக்கக் கூடாதா…?” தழு தழுத்தான்.

குற்ற உணர்வில் குறுகுறுத்தான்.

இவள் புன்னகைத்தாள்.

‘விஜி ! உனக்கு எந்தவித ஆசாபாசமும் இல்லையா..? மலர்ச்சியைத் தவிர உனக்கு வேறு பக்கமேத் தெரியாதா..? ‘ இவன் உள்ளத்தில் வைத்து உறங்கினான்.

அன்றைய இரவு நிறைய சிகரெட்டுகள் பிடித்தான்.

விஜி உறங்கினாள்.

இவ்வளவு தாங்கிய உடல்… பிரசவத்தில் ஆடிவிட்டது. அடங்கி விட்டது.

எவ்வளவு பெரிய அடக்கம். பொறுமை, மவுனம். ! வேறொரு பெண்ணாக இருந்தால் இவன் மனத்திற்கும், நடப்பிற்கும் கொதித்துப் போயிருப்பாள். துடித்துப் போயிருப்பாள். இந்த வாழ்வே வேண்டாமென்று வெறுத்துப் பிரிந்து போயிருப்பாள். இல்லை… செத்தவது இருப்பாள்.

விஜி எதற்கும் ஆடவில்லை அசங்கவில்லை.

எதற்கும் வாய்ப் பேசா மவுனம். மன்னிக்கும் மனம் !

கருக்கலைப்பு, அடி, உதை, குடி.

“இதோ பார். காதலி !” என்று அறிமுகம் ஆட்டம்.

விஜிக்கு எதிலும் அதிரா மனம். அசையா அன்பு.

இதோ இனி எல்லாம் இல்லாமல் போய்… சடலம். எக்காலமும் கிடைக்காத வரம்.

இனி ஒரு முறை இந்த வைரம் மண்ணில் பிறக்குமா..? பிறந்தாலும் நம் கைக்குக் கிடைக்குமா..?

சித்தார்த்துக்கு ஆடி வயிற்றில் அமிலம் ஆறாக ஓடினாலும் அழுகை வரவில்லை.

மாறாக தெளிவு வந்தது.

இன்னும் ஆழமாக மனைவி விஜியான விஜயலச்சுமியின் யின் உடலை வெறித்துப் பார்த்தான்.

“விஜி ! நீ வாழும்போது நான் தடுமாற்றத்திலிருந்தேன். செத்ததும் தெளிஞ்சுட்டேன். நல்ல பொருளாய்க் கையில் கிடைத்தாலும் அதை வைத்துப் படைக்க வழி தெரியாமல் வாழ்ந்துட்டேன். இதுக்குப் பிராயச்சித்தமாய் நான் ஏதேனும் செய்யனும். அதுக்கு நீ என்னோட வாழனும். உன் நினைவுகளோட இருக்கனும். கடைசிவரைக்கும் உன் புன்னைகையும், மவுனமும் என் மனசுல மாறாக இருக்கனும் விஜி. இருப்பியா..? இருக்கனும்..!! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா..? கேட்கலாம்..? இருட்டுலதான் சூரியனோட வெளிச்சம் சுத்தமாய்த் தெரியுது விஜி. !” மனசுக்குள் சொல்லி… சித்தார்த் மெல்ல எழுந்து வெளிய வந்தான்.

எவள் மடியிலோ விஜி பெற்ற இவன் பிள்ளை அழுதது.

இவன் அதை மௌனமாய் வாங்கி தன் தோளில் சாய்த்தான்.

“மனசுல போட்டு துக்கத்தை இறுக்காதேடா. ஆபத்து. அழுடா.. அழு ! ”- சித்தார்த்தின் நண்பன் இவன் பின்னாலேயே எச்சரிக்கை மணி அடித்துச் சொல்லிக் கொண்டு வந்தான்.

சித்தார்த் அழவே இல்லை !!

மனத்தில் விஜி என்றும் மாறா புன்னைகையில் சிரித்துக் கொண்டிருந்தாள் !!

எப்படி அழுகை வரும்…?!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *