கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 4,342 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவ்வளவு பெரிய கொட்டகையில் நாங்கள் சுமார் 60 பேர்கள் தான் இருந்தோம். அது விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிய அமெரிக்கப் படம். க்யூவில் வளரும் கூட்டம் கூடாததில் வியப் பொன்றுமில்லை. எனக்குப் பின்னால் ரூ.1-40 வீட்டில் ஒருவரும் இருந்ததாகத் தோன்றவில்லை. அறிவியல் சம்பந்தமான இந்தப் படத்திற்குப் பணம் படைத்தவர்கள் கூட வரவில்லையே, பாமர மக்கள் எப்படி வருவார்கள் என்று தானே எனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னால் திரும்பிப் பார்ப்பது உசித மல்ல என்ற தீர்மானம் இடைவேளை வரைதான் நீடித்தது. பின் வரிசையில் வந்த சோடாக்காரனிடம் கலர் வாங்கும் பாவளையில் திரும்பினேன். அங்கே சுமார் 8 பேர்கள் பல நாற்காலிகளில் சிதறி உட்கார்ந்திருந்தனர். எனக்குப் பின்னால் தேர் எதிரே ஓர் ஆடவனுடன் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணை , என்னை அறியாமலேயே சற்று அதிக நேரம் பார்த்து விட்டதை உணர்த்து, சட்டென முகத்தைக் திருப்பிக் கொண்டேன். திரும்பிய பிறகுதான் அப் பெண்ணின் முகத் தோற்றம் என் மனதில் நொடி நேரத்தில் எடுக்கும் புகைப் படம் போல் பதிந்ததை உணர்ந்தேன். எங்கோ பார்த்த முகம் மாதிரி இருக்கிறதே என்று, மீண்டும் திரும்பினேன், அதே சமயத்தில் தன் பார்வையால் என்னைச் சுட்டிக் காட்டி அப்பெண் அவன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்குத் தெரிந்தவன்தான்; என்னைப் பார்த்துத் தன் பழக்கத்தை வழக்கமான புன்முறுவலில் தெரிவிப்பாள் என்று நான் எண்ணியது கைகூடவில்லை. அவள் பார்வை, அவளுடைய கணவனை விட்டு, என்னை நாடுவதற்குள், விளக்குகள் அணைத்து, படம் மீண்டும் தொடங்கி விட்டது.

அதுவரை, அறிவாளி என்ற பெருமையால் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, படத்தின் மேல் கவனம் செல்ல வில்லை . திரையில் நடக்கும் படத்திற்குப் பதிலாக அப் பெண்ணின் முகத்தையே பார்த்தேன். பார்த்தவுடனே வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்டே அப்பெண் இந்தப் படத்திற்கு வந்தது அவள் மனப் பண்புக்கு ஒரு அறிகுறி என்று நினைத்துச் சந்தோஷப் பட்டேன். அவளாக இஷ்டப்படாமல், அவன் கணவன் வற்புறுத்தலின் பேரில் வந்தாளோ, என்று தோன்றிய சந்தேகத்திற்கு, உடனே நான் சமாதானம் தேடிக் கொண்டேன். நகரத்தில் வெறும் தமாஷாவுக்காக நாட்டியமும் பாட்டும் நிறைந்த படங்கள் எத்தனையோ ஒடும் போது இந்தப் படத்திற்கு இவர்கள் இருவரும் வர வேண்டும் என்றால், அது அப்பெண்ணின் விருப்பமாய்த்தாள் இருக்க வேண்டும் என்று முடிவு கூறி என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். எங்கேயோ பார்த்த பெண் என்று நான் என்னை ஏமாற்றிக் கொண்ட உணர்ச்சியை மட்டும் மறக்க முடியவில்லை.

பொதுவாய், பெண்களை அதிகம் கவனிப்பதில்லை என்ற வைராக்கியத்தைக் கொண்டிருந்த எனக்கு, அன்று தோன்றிய உணர்ச்சி, எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. என்னைப் பற்றி அப்பெண் தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் என்று நான் முதலில் நினைத்தது தவறாயிருக்கலாம் என்ற நினைவில் வேறு பல சந்தேகங்கள் தோன்றிவிட்டன.

அவளையே உற்றுப் பார்த்ததைப் பற்றி அவள் கணவனிடம் புகார் செய்து கொண்டிருந்தாளோ? ஆனால் அப்படி அனாவசிய மாய்ச் சந்தேகப்படும் பெண்ணாயிருந்தால் இப்படி நான்கு பேர் வரும் இடங்களுக்கு வர மாட்டாளே. அப்படித்தான், நான் பார்த்தது பிடிக்க வில்லை என்றாலும், உடனே அதை ஒரு புகாராகக் கணவனிடம் சொல்வாளா? நான் பார்த்தது எப்படித் தெரிந்தது என்று அவன் கேட்டு விட்டால், அனாவசியமாக என்னால் அவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டு விட்டால்? முன் பின் தெரியாத என் மீது அவள் கணவனுக்குக் காரணமற்ற சந்தேகம் ஏற்பட்டு விடுமோ என்று ஒரு சங்கடமானநிலைமையை நானாகக் கற்பனை செய்து கொண்டு விட்டேன். அவளைப் பற்றி நினைக்க நினைக்க இந்தப் பயமும், கவலையும் அதிகரித்தது. அப் பெண்ணை மறந்து படத்தில் கருத்தைச் செலுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதாலும், மதிப்புக்கு மேற்பட்ட ஆடம்பரமான மரியாதைகள் கொடுப்பதாலும், அவர் களுக்கு வீண் பெருமை ஏற்பட்டு விடும் என்ற முடிவான கருத்தைக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஏற்பட்டது. என் புத்தி யின்மைக்கு நன்றாய் வேண்டியதுதான் என்று என்னையே கடித்து கொண்டேன். பின்னால் திரும்பிப் பார்த்ததே தவறு; அதிலும், ஒரு பெண்ணின் மீது அவ்வளவு கவனம் செலுத்தியது தவறு மட்டுமல்ல, தன் மதிப்புக்கே தகாதது என்று சொல்லிக் கொண்டேன். உடனே அவள் முகம் திரையில் தோன்றிய நாடக பாத்திரங்களின் தெளிவை மீறிக்கொண்டு தோன்றிற்று. இந்த மாதிரி அவள் முகத்தைத் திரையில் பார்த்துக் கொண்டு, அவளுடைய உணர்ச்சி யையும், அவள் கணவனுடைய உணர்ச்சியையுமே பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததில், படம் முடிந்ததே தெரியாமல் போய் விட்டது.

யூனியன் ஜாக் தோன்றும் போது பயந்து நின்றுவிட்டு, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவது அனாவசியம் என்ற கருத்துடன், படம் முடிவில் ஓட்டமெடுக்கும் சினிமா ரஸிகர்கள் சட்டென எழுந்து போவதைப் பார்த்த போதுதான் படம் முடிந்து விட்ட தென்பதை உணர்ந்தேன். நான் எழுந்து நிற்பதற்குள் திரையில் தோன்றிய கொடியும் மறைத்து விட்டது.

கொட்டகையை விட்டு வெளியே வரும்போது, அப் பெண்ணும் வெளியேறி விட்டாளா என்று பார்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண் டிருந்தானோ என்ற பயம் இடம் கொடுக்கவில்லை. இடை வேளையில் கவனத்தைச் சிதறவிட்ட தவறுக்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றேன்.

பஸ்ஸில் ஏறி, கடைசி ஸீட்டில் ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். நல்ல வேளையாக அதிகப் பெண்கள் இல்லை. ஆண்களுக்குச் சமானமாகச் சமூகத்தில் பெண்களுக்கு பஸ்களிலும் ட்ராம்களிலும் மட்டும் இடம் கொடுப்பானேன் என்ற வைராக்கியம் எனக்கு எப்பொழுதும் உண்டு. இந்த வைராக்கியத்தைக் கொண்டு செலுத்து வதற்காக எப்பொழுது மே முன் கூட்டுகளில் போய் உட்கார்ந்து விடுவது வழக்கம். அன்று ஓரத்தில் இரண்டு பேர் உட்காரக்கூடிய ஒரு ஸீட்டில் இன்னொரு பிரயாணியுடன் உட்கார்ந்திருந்தேன். அடுத்த நிற்குமிடத்தில் யாராவது பெண்கள் ஏறினால் எழுந்து இடம் கொடுக்க வேண்டியிருக்குமே என்ற கவலை உடனே தோன்றி விட்டது. என்ன நேர்ந்தாலும் எழுந்திருப்பதில்லை என்று உறுதி செய்து கொண்டதும், சினிமாவில் பார்த்த பெண்ணின் முகம் நிளைவுக்கு வந்தது. எல்லாப் பெண்களுக்குமே மரியாதை செய்ய வேண்டிய அவசியமில்லை; இருந்தாலும் அந்தப் பெண் விதி விலக்குதான் என்ற ஒரு எண்ணம் லேசாகத் தோன்ற ஆரம்பித்தது. அவள் இந்த பஸ்ஸில் வந்து ஏறி, இடம் இல்லாமற் போனால்தானே அந்தப் பிரச்னை என்று முடிவு கட்டி, அவளை மறக்க முயன்றேன். சினிமாவில் நடந்ததைப் போல் இங்கும் அந்த முயற்சியில் தோல்விதான் ஏற்பட்டது. அவளுடைய தோற்றம் அவ்வளவு தெளிவாய் மனதில் பதிந்திருந்ததற்குக் காரணம் என்னவென்று எவ்வளவு ஆராய்ந்தும் ஒன்றும் புலப்பட வில்லை. அவளை முந்தி எப்பொழுதாவது பார்த்திருந்தால், இப்பொழுது அந்த சந்தர்ப்பம் நினைவு வராமலா போகும்? இதென்ன அனாவசியமான சமாதானங்கள்!

பஸ் கொட்டகைக்கருகில் வந்து நின்றது. ஒரே சமயத்தில் 20,30 பேர் ஏற முயன்றார்கள். போராட்டம் முடிந்து 7,8 பேர் ஏறி பஸ்ஸக்குள் ஏற்கெனவே நிற்கும் கூட்டத்துடன் சேர்ந்தார்கள். பஸ் நகர்ந்தவுடன் அவர்களில் ஒரு பெண்ணும் இருப்பது போல் தோன்றிற்று. ஒரு புடவையின் வர்ணமும் வளையல்களின் கலகலப்பும் என் உணர்ச்சியில் லேசாகப் பட்டதுமே, என் இடத்திற்குப் பங்கம் விளைந்து விடும் என்று பயந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

“இங்கே உட்காரச் சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டே என்னருகில் இருந்தவர் எழுந்து நின்றார். நின்றால் நிற்கட்டும் என்று நான் ஒன்றும் அறியாதவனைப் போலவே இருந்தேன். என்னருகில் ஒரு பெண் உட்கார்ந்து விட்டான் என்ற உண்மை புலப் பட்டதும், எனது தைரியமும், வைராக்கியமும் தளர ஆரம்பித்தன. வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று தலையைத் திருப்பிப் பார்த்தேன். அவனைத் தவிர வேறு ஒரு பெண்ணும் தின்று கொண் டிருக்கவில்லை. நல்ல வேளை, நாமும் எழுந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று அறிந்து சந்தோஷப் பட்டேன். என்னருகி லிருந்து எழுந்து நின்ற தியாகி என்னைக் கொஞ்சம் வெறுப்புடன் பார்ப்பதுபோல் தோன்றிற்று. அது நானாகக் கற்பனை செய்து கொண்ட பிரமை என்று சமாளித்துக் கொண்டு, அவரைப் பார்க்காம லிருக்க முயன்றேன். அருகில் சரிநிகர் சமானமாக உட்கார்த்திருந்த பெண்ணுக்கும் எனக்கும் இன்னும் சற்று அதிகமான இடைவெளி ஏற்படுத்தும் முயற்சியில் ஓரத்தில் நகர்ந்து உட்காரும் பொழுதுதான் பார்த்தேன். ஆம், அவள் சினிமாவில் பார்த்த அந்தப் பெண்தான். தலை நிமிர்ந்து பார்த்தேன். அருகில் அவள் கணவன் நின்று கொண்டிருந்தான். உடனே விவரிக்க முடியாத பயம் ஒன்று என் மனதிலே தோன்றிற்று. கணவனும் மனைவியும் என்னைப் பார்த்து விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சினிமாவிவேயே அவர்கள் என் மீது சந்தேகப்பட்டார்கள் என்று நினைத்த எனக்கு, இப்பொழுது திகில் அதிகமாயிற்று. நான் அவளை வேண்டு மென்றே பின் தொடர்ந்து அவன் அருகில் உட்காருவதற்குச் சூழ்ச்சி செய்து விட்டேனோ என்று எனக்கே தோன்றிற்று. அத்துடன் கணவன் நிற்கும் போது மனைவி அருகில் நான் உட்கார்ந்திருக்கும் அசம்பாவிதம் அப்பொழுதுதான் எனக்குப் பட்டது. திடீரென்று எழுந்து, “நீங்கள் உட்காருங்கள், சார்,” என்று அவள் கணவனுக்கு இடம் கொடுத்தேன்.

“பரவாயில்லெ சார்; சும்மா உட்காருங்கள்” என்று சொல்லி என் முயற்சிக்குத் தடைமிட்டு விட்டுத் தன் மனைவியைப் பார்த்தான். அவள் முகத் தோற்றத்தில் புண்படக்கூடிய உணர்ச்சியைக் காண எனக்கு விருப்பமில்லை. முதலில் எழுந்து அவளுக்கு இடம் கொடுத்த மனிதன் என்னை இன்னும் வெறுப்புடன் பார்ப்பது போலவே இருந்தது. “பெண்ணுக்கு இடம் கொடுக்க முன் வராதவன் ஆணுக்கு இடம் கொடுக்க வந்து விட்டான்” என்று அவள் மனதிற்குள் என்னைக் கண்டனம் செய்வதாக நினைத்தேன். இந்தச் சங்கடமான நிலைமையைத் தவிர்க்க நடுவில் இறங்கி விடலாம் என்றுகூட நினைத்தேன். நல்ல வேளையாக அடுத்த நிற்குமிடத்தில் அந்த மனிதனே இறங்கி விட்டான். ஆனால் என் மனதில் ஏற்பட்ட குழப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்தப் பெண்ணும் கணவனும் என்னையே கவனித்துக் கொண்டு வருவது போலவே எனக்குத் தோன்றிற்று, ஏதோ பெரிய குற்றம் செய்தவனைப் போல, விவரிக்க முடியாத ஒரு பயத்துடன், பஸ்ஸின் முன் புறத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன், வெளியே ரோட்டில் பஸ்ஸைத் தாண்டி ஓடிச்சென்று மறையும் விளக்குகள் எல்லாம் என்னைப் பரிகசித்து விட்டு ஓடுவது போலவே இருந்தது. எதிர் முகமாயும் பக்கத்திலும் செல்லும் மற்ற வண்டிகளின் ஓசைகளும் ஏளனச் சிரிப்பாகவே ஒலித்தன. பஸ் நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் இரண்டொருவராக இறங்கி னார்கள். கூட்டம் சிறிது சிறிதாகக் குறையும் உணர்ச்சி மாத்திரம் ஏற்பட்டதே அன்றி நான் ஒன்றையும் குறிப்பாகக் கவனிக்க வில்லை.

“சார் கொஞ்சம் சரியாக உட்காருகிறீர்களா?” என்று பக்கத்திலிருந்து குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன். அந்தப் பெண் உட்கார்ந்திருந்த இடத்தில் வேறு ஒருவர் உட்கார்த் திருந்தார். அவன் எங்கே என்று என் கண்கள் தன்னிச்சையாகத் தேடின. பஸ்ஸில் கூட்டம் முழுவதும் குறைந்து விட்டது. எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சில இடங்கள் காலியாகக் கூட இருந்தன. அவள் நடுவில் இறங்கி விட்டாளோ என்று நினைத்து பஸ் முழுதும் ஆராய்ந்து பார்த்தேன். கடைசியில் கீழே இறங்கும் வழிக் கருகில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது. நான் பார்த்ததும் நிறுத்தி விட்டார்கள். என்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்ற உணர்ச்சி மீண்டும் என் மனதில் எழுந்தது. நான் பார்த்த அந்த நிமிஷத்தில் அவளும் என்னைப் பார்த்ததால் அவளுடைய முகத் தோற்றம் முழுவதும் சினிமாவில் பெரிதாகத் தோன்றும் குளோஸ் அப் படம் போல் என் பார்வையில் பதித்தது. மீண்டும் அதே உணர்ச்சி; அவளை வேறு எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு உணர்ச்சி நிலவிற்று.

மெதுவாகச் சென்று கொண்டிருந்த பஸ், கண்டக்டரின் ‘ரைட்’ என்ற குரலுக்கேற்ப, நிற்குமிடத்தைத் தாண்டி வேகமாகப் பாய்ந்த போதுதான் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டி விட்டதை அறிந்தேன். நான் அங்கேயே இறங்கி இருக்க வேண்டுமென்று கண்டக்டரிடம் தெரிவித்தபோது அவன் பதில் மிகவும் கடுமையாக இருந்தது. ”என்ன சார், பத்து தரம் கேட்டேனே, எங்கே பாத்துட்டிருத்தங்கள், இன்னும் ஒரு அணா எடுங்க,” என்று தண்டனை விதித்தான். ஒரு அணா இல்லை, ஒரு ரூபாய் கேட்டாலும் கொடுத்திருப்பேன். சினிமாவுக்குப் போனதே தவறு. போனவிடத்திலே சுற்று முற்றும் பார்த்தது மதியீனம் என்றெல்லாம் பல எண்ணங்கள் தோன்றி, என் மனதை இன்னும் அதிகமாகக் குழப்பின. பஸ் நின்றது. உடனே அவசர அவசரமாக இறங்கினேன்.

ரோட்டைக் கடக்கும்போது இரண்டு மூன்று கார்கள் தங்கள் வேகம் முழுவதையும் உலகத்திற்குக் காண்பிக்கும் தோரணையில் பறந்து சென்றன. சற்றுத் தயங்கி நின்று விட்டு, குறுக்கே சென்று, எதிரில் இருந்த தெருவில் நுழைந்தேன். என் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களும் அதே தெருவில் நுழைந்தார்கள். என் இருப்பிடத்திற்கு ரோடு மூலம் பஸ் வந்த வழியில் பின்னோக்கியும் போகலாம். இந்தத் தெரு வழியாகவும் போகலாம். குறுக்கு வழியாகத் தெருவைக் கடத்தே போய் விடலாம் என்று மேற் கொண்டு நடந்தேன். அதுவும் தவறு என்று மறு நிமிஷம் தெரிந்தது.

முரண்பட்ட எண்ணங்களுடன் மெதுவாய் நடந்து கொண்டிருந்த என்னைக் கடந்து இருவர் வேகமாய்ச் சென்றார்கள். அப் பெண்ணும் அவள் கணவனும்தான் என்று நான் கண்ட அதே நிமிஷத்தில் இருவரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள்.

‘அவர்தான்’ என்று அந்தப் பெண் ஏதோ சொல்வது போல் என் காதில் கேட்டது.

என்னுடைய அசம்பாவித நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. சினிமாவிலும் பஸ்ஸிலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது மல்லாமல், இன்னும் அவளைத் தொடர்ந்து வருகிறேன் என்ற சந்தேகம் அவள் மனதில் ஊர்ஜிதமாகி விட்டது என்று தெரிந்தது. இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் அதிகப் பணம் கொடுத்து இங்கு வந்து இறங்கி, இதே தெருவில் நடக்கும் நான் இல்லை என்று மறுத்தால் யார் நம்புவார்கள். இன்னும் தாமதித்தே செல்லுவோம், அவர்கள் போகட்டும் என்று தீர்மானித்து நடு ரோட்டில் நின்று ஒரு சிகரெட்டுப் பற்ற வைத்தேன். சினிமாவிலும் பஸ்ஸிலும் சிகரெட் புகைக்கக் கூடாதென்ற நிர்பந்தத்துடன், புகைத்தால் அப்பெண் என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தினால் இதுவரை பேசாமலிருந்து விட்டேன். இப்பொழுது நான் அவளைப் பின் தொடரும் போது அவள் என்னைப் பற்றி நினைக்கக் கூடியதை விட மோசமான கருத்து வேறு ஏற்பட்டு விடப் போவதில்லை. அந்த தாமதத்திற்குள் அவர்கள் நெடுந் தூரம் சென்று விடுவார்கள் என்பது என் நம்பிக்கை.

இல்லை. அவர்கள் அப்படிச் செல்லவில்லை. எனக்காகக் காத்திருப்பவர்கள் போல் அவர்களும் தெரு நடுவில் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை இருந்த சிறிது நம்பிக்கையும் என்னை விட்டகன்றது. நான் அவர்களை விடாமல் தொடர்வதைப் பற்றி அவர்கள் என்னை விசாரித்து விடுவது என்று தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிந்தது. என்னைப் பற்றி அவர்கள் ஏதாவது தூஷணையாகப் பேசுவதாயிருந்தால், சிறிதுகூட இடம் கொடுக்கக் கூடாது என்று மனதைத் தைரியப் படுத்திக் கொண்டேன். அசம்பாவிதம் முற்றி ஆபாசம் ஆகும் இந்த நிலையில், வெறும் வரட்டு மரியாதைகளுக்கு இடம் இல்லை . என்னதான் சொல்லுகிறார்கள் பார்த்து விடுவோம் என்று பயத்தில் பிறக்கும் துணிச்சலுடன் முன் நோக்கி நடந்தேன்.

அவர்கள் அருகில் வந்தவுடன் அவன் கணவன், “இந்தத் தெருவில்தான் இருக்கிறீர்களா?” என்றான்.

“இல்லை . ஏன்?” என்று சற்று கோபமாகவே கேட்டேன். முன்பின் அறியாத என்னைப் பார்த்து அவன் அம்மாதிரிக் குறுக்கு விசாரணை செய்ய அவனுக்கு உரிமை கிடையாது என்பதை வலியுறுத்தும் முறையில் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

“சும்மாதான் கேட்டேன். இதோ, இதுதான் எங்கள் வீடு. கொஞ்சம் வந்து விட்டுப் போங்களேன்…அவசரம் இல்லையே” என்றான்.

இதுவரை என் வழிக்கு வராமல் இப்பொழுது என்னை வீட்டுக்குள் அழைக்கும் சூழ்ச்சி என்னவென்று எனக்கு விளங்கவில்லை. மரியாதைக்காக அவர்கள் அழைப்புக்கு இசைந்தால், பிறகு அவர்கள் குற்றச் சாட்டுகளுக்குச் சரியான பதில் சொல்ல முடியாமல் போய் விடுமே.

”பாவாயில்லை. நான் போக வேண்டும். ரொம்ப வந்தனம்…” என்று நான் முடிப்பதற்குள், அப் பெண் குறுக்கிட்டாள்.

“அப்படிச் சொல்லக் கூடாது. ஒரு பத்து நிமிவுமாவது வந்து விட்டுப் போக வேண்டும். இங்கேயே சாப்பிட்டு விட்டுப் போகலாம்…உங்கள் சௌகரியம்…” என்றாள்.

என் கையிலிருந்த சிகரெட் தானாகவே நழுவிக் கீழே விழுந்தது. அவளுடைய குரலில் தொனித்த குழைவும் அன்பும் எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அவள் கணவன் அழைப்பும் மனப் பூர்வமாய்த் தொனித்தது வியப்பை அதிகரித்தது. அவளுடைய அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்தவுடன் மீண்டும் ஒரு பழக்க உணர்ச்சி தோன்றி என்னைக் குழப்பிற்று.

என்னுடைய மெய்யுணர்வே இன்றி, என் மனோதிடத்திற்கு மாறாக, அவர்களுடன் வீட்டிற்குள் நுழைந்தேன். என்னை வேறு கேள்விகள் கேட்காமல், அவள், “‘”சாப்பிட்டுவிட்டே போகலாமே!” என்றாள்.

“இல்லை . நாள் இரவில் சாப்பிடுவது வழக்கம் இல்லை ,” என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன். பழக்கமான தோற்றத்தை உடைய இவள் யார்? இவர்கள் ஏன் என்னை வரவேற்க வேண்டும் என்று பல கேள்விகள் என் மூளையில் மோதிச் சிதறின. வியப்புக்கு மேல் வியப்பாக, அவள் கணவன் என்னைக் கவனிப்பது போக, அவளே என்னை விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“ஆனால் கொஞ்சம் காபி மட்டும் சாப்பிடுங்கள்” என்று சொல்லி முறுவல் பூத்தாள்.

வேறு ஒரு பெண் உடனே உள்ளேயிருந்து காபி கொண்டு வந்து வைத்தாள்.

“இங்கே எப்பொழுதும் காபி தயாராயிருக்கும். அவருக்குக் காபிதான் ஆகாரம்,” என்று சிறிது குறும்பாகத் தன் கணவனைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தாள்.

ஏன் என்று புரியவில்லை . ஆனால் நடுங்கும் கைகளுடன், அவள் கலந்து கொடுத்த காபியை வாங்கிச் சாப்பிட்டேன். தன் கணவனுக்கும் அவள் கொடுத்தபோது இருவரும் ஒருவரை யொருவர் மிகவும் குறிப்பாகப் பார்த்தார்கள். அவள் சிரித்தவாறே தலையை ஆட்டிவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.

அவள் கணவன் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். நான் வேலை செய்யும் காரியாலயத்தைக் குறிப்பிட்டு தான் அங்குதான் இருக்கிறேனா என்று விசாரித்தான். இன்னும் என்னைப்பற்றி – அவன் எனக்குத் தெரிவித்த சில விவரங்கள் ஆச்சரியமாயிருந்தன. என்னைத் தினந்தோறும் சந்தித்து வருபவனைப் போல் பேசினான்.

உள்ளே சென்ற அப் பெண் கையில் ஏதோ ஒரு கார்டுடன் திரும்பி வந்தாள். திடீரென்று அவள் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. இதுவரை அவள் தோற்றத்தில் ஒளி கொடுத்த ஒரு அலக்ஷியமும் களிப்பும் மறைந்தன. என்னைப் பார்த்துச் சிறிது தயங்கிய குரலில் சொன்னாள்.

“மன்னிக்க வேண்டும். முழுவதும் மறந்து விட்டீர்கள். இப்பொழுது நினைவு வருகிறதா பாருங்கள்….. இப்படித் திடீரென ஞாபகப் படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கார்டை என்னிடம் கொடுத்தாள்.

என்னையே அறியாமல் அதை வாங்கினேன். அது ஒரு பழைய போட்டோ. அதைப் பார்த்தவுடன் என் மூளையில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. என் மனதில் ஏதோ திடீரெனக் கீல் விட்டு உடைந்தது போல் இருந்தது.

அது, எட்டு வருஷங்களுக்கு முன் காலஞ் சென்ற என் மனைவியின் படம். ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் மடியில் சுமார் பதினைந்து வயதுள்ள ஒரு சிறுமி அன்போடு சாய்ந்து கொண்டிருந்தாள். போட்டோவில் இல்லாத மற்றொரு தோற்றம் போட்டோவையும் மீறிக் கொண்டு தோன்றிற்று. என் மனைவியின் உயிர் உடலை விட்டு தீங்கும் சமயம், அச் சிறுமி அவளருகில் உட்கார்ந்து அவளைக் கட்டியணைத்துக் கொண்டிருக்கிறாள், கவர்ச்சி நிறைந்த அச்சிறுமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நான், மனதிற்குள் என்னையே நொந்து கொண்டு அவளை எழுந்து அப்பால் போகச் சொல்லுகிறேன்.

நிமிர்த்து பார்த்தேன். அதே சிறுமி இன்று இவ்வளவு அழகான பெண்ணாகப் பிரகாசிப்பதை இதுவரை அறியாத என் மடமையை உணர்ந்தேன். கொடுமையான சுவாச நோயினால் கஷ்டப்பட்டு, நாளுக்கு நாள் உடல் குன்றி இறந்த என் மனைவியருகில், சொந்தக் காரர்கள் இருக்க விரும்பாதது அவர்களுடைய சுகாதார உணர்ச்சியின் வளர்ச்சிக்கு நல்ல அடையாளமாயிருந்தது. ஆனால் இந்தப் பெண் மட்டும் அருகிலேயே இருந்து கடைசிவரை பாடுபட்டது அப்பொழுதே எனக்கு வியப்புதான். அடுத்த வீட்டுப் பெண், அன்பு நிறைந்தவள் என்பதைத் தவிர, வேறு அதிகமாய் எனக்கு அவனைப்பற்றித் தெரியாது. நாளடைவில் என் கருத்தைக் கவர்ந்த அவளை இதுவரை மறந்தே போனது பெருங்குற்றமாகப் பட்டது… ஏன்…. ஏன்…. அவ்வளவு அன்பாக இருந்தவளை அன்று ஏன் கடிந்து கொண்டேன். அதன் பிறகு இன்றுதான் பார்க்கிறேன்.

“உங்களைப் பற்றி எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பாள். எனக்கும் உங்களைச் சந்திக்க வேண்டுமென்று விருப்பம். இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது… இருந்தாலும் சினிமாவில் திடீரென்று பேசுவதென்றால் அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை…” இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நான் குறுக்கிட்டேன். அவள் கண்களிலிருந்து சில துளி நீர் சொட்டிற்று.

“இல்லை. நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். அன்று நான்…மன்னிக்க வேண்டும்…வருகிறேன்…” என்று தடு மாற்றத்துடன் சொல்லிக் கொண்டே எழுந்தேன், என் தொண்டை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் தவித்தது எனக்குச் சற்றுப் புதுமையா யிருந்தது. உணர்ச்சிக்கு, அதிலும் துக்கத்திற்கு தான் சலுகை காட்டி நெடுங்காலம் ஆகிவிட்டது.

“அடிக்கடி வாருங்கள். இனி அறிமுகம் ஆகிவிட்டதல்லவா?” என்றான் அவள் கணவன்.

“ஆகா, வருகிறேன்” என்று அவசரத்துடன் சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். அவளை இன்னொரு முறை பார்க்கத் தைரியம் இல்லை.

வாசல் வரையிலும் வந்து வழி அனுப்பிய அவனுக்கு நான் சொன்னது பொய் என்று எப்படித் தெரியும்? மறு நாளே வேலையை ராஜிநாமாச் செய்து விட்டு அந்த ஊரை விட்டே போய் விடுவது, அதிலும் சினிமாவே இல்லாத ஊருக்குப் போய் விடுவது என்று தான் தீர்மானித்தது அவனுக்கு எப்படித் தெரியும்?

தாம் மறக்க விரும்புவதை நம்முடைய மனத்தில் வேறொரு பகுதி அனுமதிப்பதில்லை என்பதை நாம் என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது உண்மையில் மறக்க வேண்டியதைத் தான் நான் மறப்பதில்லை. அது மனதிற்குள்ளேயே பொதிந்து கிடக்கும் என்றுதானே என்னவோ மனோ தத்துவ சாஸ்திரிகன் சொல்லுகிறார்கள்.

அவளை நான் ஏன் மறந்தேன், எப்படி மறந்தேன் என்று வியந்து கொண்டே வீடு சென்றேன். பாதி வழியில்தான், அவள் கொடுத்த போட்டோ என் கையிலேயே இருப்பதை உணர்ந்தேன்.

– மணிக்கொடி இதழ் தொகுப்பு, 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *