நிஜங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 2,255 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சார்…சார் வடுவூர் ஒண்ணு!” விடிந்தால் தீபாவளி. பஸ் எல்லாம் ஒரே கூட்டம். பட்டாசும் புதுத்துணியும் வாங்க தஞ்சாவூர் டவுன் முழுவதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் திரிந்தனர். வாங்கியவர்கள் ஊருக்குப் போகிற அவசரத்தில் பஸ் ஸ்டாண்டில் மொய்த்தனர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் கண்டக்டர்கள் திண்டாடினர். 

“டிக்கெட் வாங்காம யாரும் பஸ்ல ஏறாதீங்க” 

கீழே நின்ற காக்கிச் சட்டைக்காரர் எச்சரித்தார். சாதாரண நாட்களில் வடுவூர், மன்னார்குடி என்று போகிற வழிகளில் உள்ள ஊர்களை எல்லாம் ஏலம்கூவி பஸ்ஸுக்கு கூட்டம் சேர்க்கத் துடிக்கிறவர், இன்றைக்கு மிதப்பில் எச்சரித்துக் கொண்டிருந்தார். 

“சார்… சார்… வடுவூர் ஒண்ணு” 

கண்டக்டர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்து வயசு முருகேசனுக்கு அதற்கு மேல் முண்டியடித்து டிக்கட் வாங்க முடியவில்லை. கூட்டம் நெருங்கியது. 

“எல்லாம் துரு டிக்கெட் தான்” 

கண்டக்டர் இடைவழியில் உள்ள ஊர்களுக்கு டிக்கெட் போட மறுத்தார். இந்த பஸ் வடுவூர் வழியா மன்னார்குடி போனாலும் வடுவூருக்கு டிக்கெட் கிடையாது. முருகேசன் யோசித்தான். 

“அப்படின்னா மன்னார்குடிக்கு டிக்கெட் ஒண்ணு குடுங்க!”

அவன் முடிவெடுத்து ‘துரு’ டிக்கெட் கேட்கும் போது கண்டக்டர் டிக்கெட்டை முடித்து விசில் கொடுத்தார். இனி அடுத்த பஸ் தான். எஞ்சி நின்ற கூட்டம் ஆசுவாசமடைந்தது.

‘அடுத்த பஸ்ஸுக்கு எடுத்த, ஒடனேயே ‘துரு’ டிக்கெட்ட கேட்ற வேண்டியதுதான்’ 

அவன் யோசனையில் பையைத் துழாவினான். மன்னார்குடி வரை டிக்கெட்டுக்குக் காசு இருந்தது. மன்னார்குடிக்கு டிக்கெட் எடுத்து இடையில் வடுவூரில் இறங்கி மூணு மைல் நடந்து ஊர் போகவேண்டும். இப்போதே இருட்டி விட்டது. தீபாவளி பட்டாசு வெளிச்சம் துணிச்சலைத் தந்தது. டவுனுக்குச் சீக்கிரமாகவே தீபாவளியும் வந்துவிட்டது. வானத்தில் ராக்கெட் பூக்கள் சிதறின. சிறிது நேரம் முருகேசன் வேடிக்கைப் பார்த்தான். அத்தான் கொடுத்த பணத்தில் அவன் வாங்கிய பட்டாசுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ‘வீட்டுக்குப் போவதற்குள் தங்கச்சி தூங்கிடக் கூடாது. தூங்கினாலும் எழுப்பி வெடிக்கணும்’ மனசுக்குள் யோசனையில் நின்றான். 

“சார்… சார்… மன்னார்குடி ஒண்ணு”

பஸ் வந்து நிற்பதற்குள் கண்டக்டரை நோக்கிப் போட்ட கூப்பாடுகளில் முருகேசனும் கலந்தான். 

“வேதாரண்யம் இருக்கா?” 

“நாலு குடுங்க” 

பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை நீட்டினார் கண்டக்டர் வெகு சிரமத்தோடு டிக்கெட் வாங்கியவர் வெளியேறினார். 

இது வேதாரண்யம் பஸ். வேராரண்யம், திருத்துறைப்பூண்டி முடிந்து தான் மன்னார்குடி. மன்னார்குடி போகிறவர்களும் வேதாரண்யத்திற்கு டிக்கெட் கேட்பார்கள். முருகேசனுக்கு வியர்த்தது. கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். 

‘பட்டாசு வாங்கலேன்னா வேதாரண்யத்துக்கே டிக்கெட் கேக்கலாம். கையில் அவ்வளவு காசு இல்லை. இப்பே என்ன பண்றது?’ முருகேசன் தனக்குத்தானே பேசிக் கொண்டான். 

“அடுத்த பஸ் எப்பங்க?” 

“டிக்கெட் வாங்காதவங்க பஸ்ல ஏறாதீங்க” எச்சரித்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டையைக் கேட்டான். 

“இதுதான் கடைசி பஸ்” 

சொல்லிக் கொண்டே காதில் இருந்த பீடியை கையில் எடுத்துக் கொண்டு பற்ற வைக்க நெருப்பு தேடிப் போனார். பஸ்ஸும் போனது. 

சிறுவர்களுடன் பெரியவர்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லாடினர். அடம் பிடித்துப் பட்டாசு வாங்க வந்த சிறுவர்கள் ஊருக்குப் போக முடியாத கவலையில் மௌனத்தில் அலைந்தார்கள். பட்டாசு வெடிக்க ஊதுவத்தி, பலூன், பொம்மை, கிலுகிலுப்பை கூவிக் கொண்டு கூட்டத்தில் சிலர் புகுந்து விற்றனர். இந்த நெருக்கடியில் அதிஷ்டத்தைச் சுமந்த சிறுவர்கள் லாட்டரி சீட்டை வாங்கச் சொல்லி, கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். முருகேசன் வருத்தமாய் இருந்தான். 

“தீபாவளிக்கென்று ஸ்பெஷல் பஸ் விடுவாங்க” 

கூட்டத்தில் யாரோ நம்பிக்கையை விதைத்தார்கள். கூட்டம் நின்றது. வெடிசத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. 

நேரமும் கடந்து கொண்டிருந்தது. இனிமேல் பஸ் இல்லை என்றதும் வசதியுள்ளவர்கள் கூட்டணியாய் டாச்சி ஸ்டாண்டுக்குப் சிலர் லாரியை மறிக்கலாம் என்று சாலையில் போனார்கள். இறங்கினர். 

“தீபாவளியும் அதுவுமா லாரி எங்க வரப் போவுது” 

அவ நம்பிக்கையில் சிலர் தயங்கினர். பஸ் ஸ்டாண்டு மக்களால் நிரம்பிக் கிடந்தது. தஞ்சாவூர்க் கதம்பமும், மல்லிகையும் முகம் வாடிச் சுருண்டு கிடந்தன. கடைக்காரர்கள் அதில் தண்ணீர் தெளித்தனர். எடை பார்க்கும் எந்திரத்தின் ‘பளிச் பளிச்’ என்ற விளக்கொளி கண்ணைக் கூசியது. ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் அந்த நேரத்திலும் காசுக்காக நின்று நின்று நகர்ந்தனர். வெளியூரிலிருந்து வரும் பஸ் எல்லாம் ஷெட்டுக்கு விரைந்தன. இளைஞர்கள் தியேட்டர் பக்கம் நடை கட்டினார்கள். பஸ் ஸ்டாண்டு கடைகளும் மூடப்பட்டன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா அசமடங்கியது. மூடிய கடைகளின் முன் படுக்க பலர் இடம் பிடித்தனர். மற்றவர்கள் நடைபாதையிலேயே கால் நீட்டினர். 

முருகேசன் பட்டாசுப் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓரமாகப் படுத்தான். பஸ் ஸ்டாண்டு வெளிச்சமும், வெடிச்சத்தமும் அவனைத் தூங்க விடவில்லை. நினைவும், கனவுமாக அவன் புரண்டு கொண்டிருந்தான். 

அவன் அக்கா வீட்டிலேயே தங்கி விட்டதாக ஊரில் அப்பாவும்,அம்மாவும் நினைப்பார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். இல்லையென்றால் அப்பாவை விட அம்மா ரொம்பவும் கவலைப்படும். கிராமத்தில் பொழுது பட்டும் அவன் வல்லேனா, வீட்டில் இருந்தே அம்மா கூப்பாடு போடும். குளத்தங்கரையில் இருந்தாலும் அவன் ஓடி வருவான். இதுவரைக்கும் தீபாவளிக்கு அவன் வீட்டில் இல்லாமல் போனதில்லை. 

அப்பா எங்காவது கடன் வாங்கிக்கிட்டு வந்து ‘வாடா பட்டாசு வாங்கப் போவோம்னு’ டவுனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாரு. தீபாவளி டவுனே பார்க்க வேடிக்கையா இருக்கும். பட்டாசு கடையில கூட்டம் தாங்கமுடியாது. கூட்டத்திலேருந்து நூறு இருநூறு ரூபாய்கெல்லாம் வெடி வாங்கிகிட்டு இருப்பாங்க. கூட்டம் குறைஞ்சு இவன் கிட்டே போவும் போது அவன் வாங்க நினைச்சதெல்லாம் தீர்ந்து போயிருக்கும். கடைகடையா ஏறி இறங்கி அடுத்த தீபாவளிக்குப் பாத்துக்கலாம்னு அப்பா ஆறுதல் சொல்ல அவனும் திரும்பி நடப்பான். 

சரின்னு திரும்பி துணி எடுக்கப் போனா, நடைபாதை பூரா ரெடிமேடு துணிக்கடை. அங்கேயும் கூட்டம்தான். அப்பா கையிலுள்ள பணத்திற்கே துணி தேடுவார். எப்பவும் அவனுக்குத்தான் முதலிடம். அவன் தான் பள்ளிக்கூடம் போகிறவன். தீபாவளி முடிந்து எல்லோரும் புதுச்சட்டையில் பள்ளிக்கு வருவார்கள். அவனுக்காக சட்டை தேடும்போது அதனுடைய நிறமோ தரமோ எல்லாம் அவன் பார்க்க மாட்டான். சட்டையில ‘சீல்’ இல்லாமல்தான் தேடுவான். இப்படி துணி எடுக்கிற ஒவ்வொரு தடவையும் எல்லோருக்கும் பளிச்னு தெரியும்படி வெள்ளை நிறத்தில் பெரிய பெரிய எழுத்துக்களாய் ‘சீல்’.. இருக்கும். அதுவே போதும் இந்தச் சட்டையின் பிளாட்பாரப் பூர்வீகத்தைச் சொல்ல. 

இந்த முறையாவது சீல் இல்லாத சட்டையாய் எடுக்கணும் என்று அவன் முடிவெடுப்பான். ஆனால் அப்படி ஒரு சட்டையே அங்கே கிடைக்காது. அளவும் அப்படித் தான். உத்தேசமா இருக்கும். அவன் அரணாக்கயிறு போட்டிருப்பது இதற்குத்தான். கால்சட்டைப் பொத்தானை அவன் போட்டுக் கொண்டதாய் நினைவில்லை. வயிறும் ஒரே நிலையில் இருக்காது. சாப்பிட்டதும் சரியாக இருக்கிற கால் சட்டை குளத்துப் பக்கம் போய் வந்தால் இடுப்புக்குக் கீழே சரியும். அரணாக்கயிற்றைக் கால்சட்டைக்கு மேல் அடிக்கடி போட்டுக் அதனால் அதுவும் அறுந்துவிடும். 

கொள்வான். அப்போதெல்லாம் வயிற்றை எக்கி இரண்டு கைகளாலும் கால்சட்டையின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு இடுப்பில் இறுக்கி சொறுகி விட்டுக் கொள்வான். 

முருகேசன் இடுப்பைத் தடவிப் பார்த்தான். இப்போதும் அரணாக் கயிறு இல்லை. ‘அம்மாவிடம் சொல்லணும்’ முணகிக் கொண்டே புரண்டு படுத்தான். 

‘இந்தத் தீபாவளிக்கு அப்பா டவுனுக்குப் போயிருப்பாரா? நான் இல்லாதது அப்பாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும் தங்கச்சிக்குப் பாவாடை வாங்கியிருப்பாரு. பட்டாசு கொளுத்தத் தங்கச்சி என்னைத் தேடும்… பக்கத்து வீட்டு கோபால் இன்னேரம் வெடிச்சிக்கிட்டிருப்பான். அவனுக்குப் போட்டியா வெடிக்க முடியாமப் போச்சே. இந்த வருஷம் தான் ஆசைப்பட்ட மாதிரி பட்டாசு வாங்க முடிஞ்சுது. ஆனா அதுவும் இப்ப வெடிக்க முடியாம பஸ் ஸ்டாண்டுலே படுத்துக் கெடக்க வேண்டியிருக்கே… பேசாம அக்கா வீட்டுக்கே போயிடலாமா… வேண்டாம். அப்பா சொல்ல சங்கடப்பட்டு தான என்னை அனுப்புனாரு.அங்க அத்தானோட மொதத்தாரத்துப் புள்ளைகளும், அக்காவோட மாமியாரும் என்ன நெனைப்பாங்க. 

அக்கா எதுக்கு அழுதுச்சுன்னும் தெரியல. அம்மாகிட்ட சொல்லனும்… 

தலைத் தீபாவளிக்கு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துச் சீர் செய்ய அவன் அப்பா கடன் கேட்காத ஆள் இல்லை. சில நாள் அவனையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கார். கடன் கிடைத்தால் உடனே போய் துணி எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் அவனும் அப்பாவுடன் நடந்திருக்கான். ஆனால் கடைசி நாள் வரைக்கும் அலைய வைத்துக் கழுத்தறுத்து விட்டனர். 

முருகேசன் வெடிச்சத்தத்தில் விழித்தபோது தான் அவன் தூங்கிப் போனதே தெரிந்தது. பட்டாசுப் பையைப் பார்த்தான். பத்திரமாக இருந்தது. எழுந்து நடந்தான். 

“வடுவூர்… மன்னார்குடி… வடுவூர்… மன்னார்குடி” 

காக்கிச் சட்டைக்காரர் கூப்பாடு போட்டார். முருகேசன் ஓடி வந்து ஏறிக் கொண்டான். பஸ்ஸில் கூட்டம் இல்லை. டிரைவரும் கண்டக்டரும் நெற்றியில் திருநீறும் தீபாவளி மகிழ்ச்சியுமாய் இருந்தனர். டிரைவருக்கு மேலே இருந்த சாமிப்படம் ஊதுவத்திப் புகையில் மறைந்தது. 

பஸ் வேகமாகச் சென்றது. ஐப்பசி குளிர் ஊசியாய் குத்தியது. பஸ் ஸ்டாண்டு தரையில் படுத்துக் கிடந்ததும் பஸ் வேகமும் அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கின. கையையும், காலையும் கட்டுப்படுத்திக் கொண்டாலும், ஈரக்குலையே உள்ளுக்குள் நடுங்கியது. பல்லைக் கடித்துக் கொண்டான், முடியவில்லை. 

வெளியே தீபாவளி வானத்தில் வெளிச்சப்பூக்கள் சிதறின.

வடுவூர் வந்தது. இறங்கினான். இப்போது இன்னும் நடுங்கியது. டீ கடையைத் தேடினான். டீ கடைகள் தனியாக இல்லை. இரவில் அவையும் வீடுகளாகவே இருந்தன. அங்கேயும் கொண்டாட்டம் தான். நடந்தால் நடுக்கம் சரியாகிவிடும் என்ற நம்பிகையில் ஊரை நோக்கி நடந்தான். ‘மூணு மைல் நடக்கணும்’ மனசுக்குச் சொல்லிக் கொண்டான். பட்டாசுப் பையைக் கைமாற்றிக் கொண்டு நடையில் வேகம் கூட்டினான். 

வழியெங்கும் வீட்டு வாசல்களில் மத்தாப்பு வெளிச்சங்கள். புதுத்துணியில் குழந்தைகளும், பெரியவர்களும் சிரித்து நின்றனர். 

அவன் அப்பா இந்த வருசம் யாருக்கும் துணி எடுத்திருக்க முடியாது. அதனால் தீபாவளி முடிந்த மறுநாள் அவன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டியிருக்காது. எல்லாரும் புதுச் சட்டையில் பள்ளிக்கூடம் வரும்போது அவன் மட்டும் பழைய சட்டையில் போவது கஷ்டம். அவன் அப்பாவே அவனைப் போக வேண்டாம் என்பார். அதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது. காலையிலேயே தூண்டிலை எடுத்துக்கொண்டு புறமடுவுக்கோ,உப்புக் குளத்துக்கோ, ஒட்டக்குளத்துக்கோ போய்விடலாம்… முழங்கால் தண்ணீரில் நாள் முழுக்க நின்று தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் சுகத்தை நினைத்துக் கொண்டே நடந்தான். 

“டேய்… டேய்… வராத நில்லு” 

இவன் வயதுப் பையன்கள் சாலையை மறித்து நின்றார்கள். முருகேசன் நின்று பார்த்தான். அணுகுண்டு வெடிக்கவில்லை. ஒதுங்கி நடந்தான். ரொம்ப தூரம் வந்த பிறகும் அவன் திரும்பிப் பார்த்தான். அது வெடிக்கவில்லை. அவர்கள் நெருங்கவுமில்லை. வெடி வெடிக்க வேறு இடம் மாறிச் சென்று கொண்டிருந்தனர். 

நிலம் வெளுத்தது. புஸ்வாணம் கொளுத்தியதாய் கீழ்வானத்தில் பிரகாசம் வந்தது. அவன் ஊரும் வந்தது. அவனுடைய கூட்டாளிகள் எல்லாம் சாலையில் வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களுக்குப் படாமல் சுற்றி வயல்காட்டு வழியாக அவன் வீட்டின் கொல்லைப்புறம் வந்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தங்கச்சிக்கு அம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். வேலிப்படலைத் திறந்து கொண்டு இவன் நுழைய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தது அம்மா தான். 

“முருகேசு… இந்த நேரத்துல… ஏதுடா பஸ்..”

அம்மா ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கவலையுடன் கேட்டாள். அப்பாவும் சத்தம் கேட்டு வந்தார். 

“அக்கா நல்லா இருக்கா…? அத்தான் கோவிச்சுக்கலியே.. நீ என்ன சொன்ன?”

அடுக்கடுக்காய் வந்த கேள்விகளில் அப்பாவின் மன உளைச்சல் தெரிந்தது. அவருக்குத் தன் மீதே வெறுப்பு. தலைத் தீபாவளிக்கே இப்படி நேர்ந்து விட்டதில் சங்கடம். 

“அம்மா…அம்மா…” 

கண்ணில் விழுந்த சீயக்காய்தூளைக் கசக்கிக் கொண்டே எரிச்சலில் தங்கச்சி அழுதது. அம்மா தலை துவட்டி விட்டதும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஈரத்தோடு ஓடி வந்து அவனிடமிருந்த பட்டாசுப் பையைப் பிடுங்கிக் கொண்டது. 

“நான் அப்பா சொன்னதைத் தான் சொன்னேன்”

“என்ன சொன்னேன்னு விவரமா சொல்லுடா” 

சீக்கிரம் வெடி வெடிக்கப் போக நினைத்த முருகேசனை அப்பா விடவில்லை. அவன் ஏதாவது மாற்றாகச் சொல்லி இருப்பானோ! புள்ளையை விட்டே சொல்ல வேண்டியதாச்சே, அப்பா கவலைப்பட்டார். அம்மா அவன் தலையைக் கோதினாள். வெடிச்சத்தத்தில் மிரண்ட பறவைகள், திடீரென்று மக்களுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்து ஊரை விட்டு கத்திக் கொண்டே வெளியேறின. முருகேசனுக்கு அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. 

“தலைத் தீபாவளிக்கு வேட்டி, புடவை எல்லாம் வாங்கியாச்சு. அக்காவுக்கு அரக்கு நெறத்துல புடவை எடுத்திருக்கு. திடீர்னு அப்பாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். அப்புறமா அம்மாவுக்கு அம்மாவாத்துப் போச்சு. அதான் அப்பா வரமுடியலை. என்னை சீர்மட்டும் குடுத்துட்டு வரச் சொன்னாங்க. தலைக்குத் தண்ணி ஊத்துனதுக்கப்பறம் அழைக்க வர்றோம்னு சொல்லச் சொன்னாங்கன்னேன்!” 

அம்மா ‘ஊம்’ கொட்டி கேட்டது.

“அவுங்க என்ன சொன்னாங்க?”

அப்பா மீண்டும் கேட்டார். 

“ஒண்ணும் சொல்லலை. அக்கா தான் என்னைத் தனியா கூட்டிப் போயி ‘அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்குன்னுச்சு?’ நான் அதுகிட்டே அப்பாவுக்கு ஒண்ணுமில்லே. கேட்ட எடத்திலேருந்து அப்பாவுக்குப் பணம் கெடைக்கலை. அதனால் வேட்டி, புடவையெல்லாம் வாங்க முடியலை. அப்பாதான் இப்படி சொல்லச் சொன்னுச்சுன்னேன்!” 

“அக்கா மாமியா என்ன சொன்னுச்சு?”

அம்மாவின் பங்குக்கு ஒரு கேள்வி வந்தது. 

“நான் போனப்ப அவுங்க இல்லை. மொதத்தாரத்து புள்ளைகளுக்கு வளையல் வாங்கப் போயிருந்தாங்க” 

“அப்புறம்…” 

“அப்புறம் அத்தானுக்கும் நெலமை தெரிஞ்சிபோச்சு, அக்கா சொல்லிச்சு” 

மௌனம் கனத்தது. முருகேசன் கலைந்தான். 

“ஆனா… அத்தான் வந்து, நீ இதெல்லாம் சொல்லாதே, எங்கம்மா வந்ததும் தலைத் தீபாவளிக்கு அழைச்சிக்கிட்டுப் போவ நீ வந்திருக்கிறதா சொல்லுன்னாரு. அழைச்சிக்கிட்டுப் போனா அப்பா என்னைத் திட்டும்னு சொன்னேன். நீ சும்மா கூப்புடு. நாங்க யாரும் வர மாட்டோம்னு சொன்னாரு. அவுங்க அம்மாவுக்கு மட்டும் தெரிய வேணாம்னாரு. சரின்னு நானும் அழைச்சேன்? 

“அக்கா மாமியா என்ன சொன்னாங்க?” 

“விடிஞ்சா தீபாவளி இப்ப வந்து கூப்புட்டா எப்படின்னாங்க? ஓடனே அத்தான் தான் மாமாவுக்கு எதோ ஓடம்பு சரியில்லையாம். அதனால் தான் முருகேசனை அனுப்பியிருக்காங்கன்னு சொன்னாரு. ஒடனே அவுங்க சரி அப்படின்னா நீ ஓம் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வான்னாங்க. எனக்கு தின்னுக்கு ஆயிடுச்சி. 

“அதெல்லாம் நான் புள்ளைங்களையும், ஒன்னையும் விட்டுட்டுப் போவ முடியாது. வேணும்னா அவன் அக்காவை அழைச்சிக்கிட்டுப் போவட்டும்னு அத்தான் சொல்ல, நீங்க வல்லன்னா நானும் போக மாட்டேன்னு அக்கா சொல்லுச்சு. தலை தீபாவளிக்குப் பொண்ணை மட்டும் அனுப்பப்படாதுடான்னு அவுங்க அம்மா சொல்ல, அப்படின்னா லட்சுமியும் இருக்கட்டும். அப்புறம் போய்க்கலாம்னு அத்தான் சொல்ல, சரின்னு நானும் கோவிச்சுகிறது மாதிரி புறப்பட்டு வந்துட்டேன்” 

“ராத்திரியேவா பொறப்புட்டே”

அம்மா ஆதங்கப்பட்டாள். 

“ஆமாம்மா… பஸ் கெடைக்கல. பஸ் ஸ்டாண்டுலேயே. படுத்துக் கெட்ந்துட்டு மொத பஸ் ஏறி வந்தேன்.” 

“பஸ் இல்லேன்னா அக்கா வீட்டுக்குப் போயிருக்குறது தானேப்பா… இப்படி அனாதை மாதிரி பஸ் ஸ்டாண்டுல படுத்திருந்து வந்திருக்கியே…ங்ங் 

“இல்லம்மா…தலைத் தீபாவளிக்கே அழைக்க துப்பில்ல. புள்ளையை வேற இங்க அனுப்பிட்டாங்கன்னு அக்கா மாமியார் சொல்லுமோன்னுதான் போவலம்மா.” 

குரல் அம்மாவுக்குத் தொண்டை அடைத்தது. தழுதழுத்தது. முருகேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு செறுமினாள். அவனுக்கு அக்கா தஞ்சாவூரில் அழுதது நினைவுக்கு வந்தது. ஆனாலும் அம்மாவிடம் சொல்லவில்லை.

ம.ராஜேந்திரன் 

தஞ்சை – எடஅண்ணவாசலைப் பிறந்த மண்ணாகக் கொண்டவரான ம.ரா. வின் சிறுகதை வெளிப்பாட்டின் சிறப்பம்சம் சொல் சிக்கனம். செற்களை இவர் விரயம் செய்வதேயில்லை. – 

தான் பார்த்த தெரிந்துக் கொண்டுள்ள – அனுபவித்த வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வருவதில்லை. கதைக்கருவிற்கு ஏற்ப பன்முகப்பட்டு வெளிவரும். பல குரல் தன்மை ஒரு படைப்பில் இருந்தால் தான் அது இலக்கியமாகும் என்ற நிலைபாட்டைக் கொண்டவர். 

“இவரது கதைகள் கிராமப்புறங்களில் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்கள் பக்கம் நிற்கின்றன. நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அனுதாபத்தோடு சித்திரிக்கின்றன. அதிகாரத்துவப் போக்கை அம்பலப்படுத்துகின்றன. இத்தகைய கதைகள் இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையானவை” என்று முனைவர் கோ. கேசவன் மதிப்பீடு செய்துள்ளார். 

“…பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலையொட்டியதாகவே ‘நடை’ உள்ளது. பெரும்பாலும் சின்னச்சின்ன சொற்கள் கவிதை மாதிரி சுண்டக் காய்ச்சிய உரைநடை. கதை நிகழ்வுக்கு அடர்த்தியைக் கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இயற்கை வருணனைகள். இப்படி எழுத்துக்களில் எங்கேயும் துருத்திக் கொள்ளாது தன்னைக் கரைத்துக் கொள்கிற படைப்பாளி படைப்பு முழுக்க நிறைந்திருப்பான். இந்தச் சூட்சுமம் தெரிந்திருப்பது தான் இவரது வெற்றி” என்று ‘வளர்ப்பு’ தொகுதிக்கு மதிப்பீடு செய்திருக்கும் கே.எம். வேணுகோபால் சொல்லிருப்பதை ம.ரா. வின் படைப்புகளைப் படிக்கும் போது நாமும் உணரலாம். 

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

1 thought on “நிஜங்கள்

  1. பொதுவாக திருவிழா காலங்களில் பேருந்துகளில் கூட்டம் நிறையும் போது, நடத்துனர்கள் இடைவழி ஊர்களுக்கு ஏறும் பயணிகளை ஏற்ற மறுப்பார்கள். சிலர் ஏமாற்றத்தோடும் எதிர்பார்ப்போடும் ஓரமாக ஒதுங்கி இருந்து, பேருந்து புறப்படும் போது கேட்டுப் பார்க்கலாம் என்று ஒதுங்கி நின்று நடத்துனரின் முகத்தையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    கதாசிரியர் இந்த யதார்த்தத்தைச் சரியாகக் கையாண்டுள்ளார். கதாபாத்திரம் இந்த சூழலில் சிக்கி இருக்கும் போதே, தங்கை பாசத்தையும் அத்துடன் சேர்த்து விட்டிருப்பது, கதையை சுவாரசியப்படுத்துகிறது.

    தீபாவளிக்குப் புதுசட்டை மற்றும் பட்டாசு வாங்கும் படலம் அருமையாக விவரிக்கப்படுகிறது. 1999 இல் ஒருசிலர் பட்டாசு வாங்கும் செலவை ஓரிடத்தில் செருகி இருப்பது பாராட்டுக்குரியது.

    காட்சி விவரிப்புகள் சிறப்பாக உள்ளன. ஒரு குடும்பத்தின் நிலைமை ஒரு சம்பவத்தினூடாக நன்றாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *