நிச்சயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 2,062 
 
 

நிச்சயமான பின் திருமணம் நடக்காமல் நின்று போனதில் நளனின் குடும்பம் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உறைந்து போயிருந்தது. ஆரவாரமேதுமின்றி அமைதியாக ‘குடும்பம்னா இப்படிதான் நல்லபடியா இருக்கனம்’ என பிறர் பேசும் அளவுக்கு ஒரே தங்கைக்கும் திருமணம் முடித்து, கடன் ஏதுமின்றி பூர்வீகம் தவிர தந்தையின் முயற்சியால் கட்டிய வீட்டில் இருந்தவாறு உயர்படிப்பு, உயர்ந்த வேலை, நல்ல சம்பளம் என இருந்தவனுக்கு பெற்றோராக பார்த்திருந்த பெண் பிடித்துப்போக ஒத்துக்கொண்டதால் நிச்சயம் நடந்தது. காரணங்கள் ஏதுமின்றி பெண் வீட்டிலிருந்து போனில் அழைத்து ‘பெண்ணுக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை’ எனக்கூறிவிட்டு பேச்சைத்துண்டித்து விட்டனர்.

‘பெண்ணுக்கு வேறு பையன் மேல் விருப்பமா?’ என்றால் அப்படி ஏதுமில்லையாம். பெண்ணின் அம்மாவின் பணக்கார உறவினர் நிச்சயத்துக்கு வந்த போது “இப்பேர்பட்ட பொண்ண எங்க பையனுக்கு கட்டாம விட்டுட்டேமே?” என பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது நளனின் அம்மா வித்யாவுக்கு. 

மூன்று மாதம் கழித்து அந்த பணக்கார உறவினர் வீட்டிற்கு பெண்ணை பெற்றோர் கட்டிக்கொடுக்க, “இப்படி வசதிக்கு ஆசைப்பட்டு இன்னொருத்தருக்கு நிச்சயமான பெண்ணை கட்டிக்கொடுத்துட்டாங்களே…? இத முன்னமே பண்ணியிருந்தா யாரு தடுத்தா..? என் மகனுக்கு இனி யாரு பொண்ணு கொடுப்பா?” என கவலைகொண்ட நளனின் தந்தை நாராயணணன் அருகில் அவரது நண்பர் மாறன் வந்து அமர்ந்து ஆதரவாக தோள் மீது கை வைத்து “கவலையை விடு நாராயணா, என்னோட அக்காவோட பொண்ணு அகிலாவை உன் வீட்டுக்கு மருமகளா அனுப்ப எங்களுக்கு சம்மதம்” என சொல்லக்கேட்டு மகிழ்ந்தவர், உடனே பெண் பார்க்க மகனை அழைத்துச்சென்றார்.

திருமணம் முடிந்து வேலை பார்க்கும் ஊருக்கு நளனும் மனைவி அகிலாவும் குடியேறினர். உடன் பெற்றோரையும் அழைத்துச்சென்றான். ஐந்து வருடங்களுக்குள் ஆண், பெண் என குழந்தைகளும் பிறக்க, அலுவலகத்தில் உயர் பதவியை தொட்டவனின் திறமையை மேலும் பயன்படுத்த எண்ணிய நிர்வாகம் அவனை பங்குதாரராகவும் ஆக்கியது. அதன் பின் பலகோடிகள் நிறுவனம் லாபமடைய, நளனுக்கு சில கோடிகள் கிடைக்க, தனியாக நூறு பேருடன் துவங்கிய தனி நிறுவனம் விரைவில் ஐநூறு பேர் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது.

காலையில் எழுந்து வீட்டின் முன் வந்த போது காவலாளி சிலரை விரட்டிக்கொண்டிருந்தார். “பங்களா பக்கமெல்லாம் வேலை கேட்டு வரக்கூடாது. அலுவலகத்தில் மேனேஜரை போய் பாருங்க” என்றது காதில் விழ, அதில் ஒரு பெண்ணின் முகம் பரிச்சயமாகப்பட ,”அவர்களை உள்ளே அனுப்பி விடு” என்று நளன் உத்தரவிட்டதும் காவலாளி அனுமதிக்க, வாடிய முகத்துடன் தனக்கு முன்பு நிச்சயம் செய்து, வசதிக்காக வேறிடத்தில் திருமணமான பெண், அவள் கணவர் மற்றும் பேராசை கொண்டு தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை வசதிக்காக வேறிடத்தில் திருமணம் செய்து கொடுத்த அவளது பெற்றோருடன் வந்திருந்தவர்களை சிட்டவுட்டில் உட்கார வைக்காமல் ஹாலில் அமரவைத்து உணவும் கொடுத்து, “உங்களுக்கு என்ன வேணும்?” என அன்பாக பண்புடன் கேட்டான் நளன்.

“இவருக்கு தொழில் நஷ்டமாயிடுச்சு. குடியிருந்த வீடும் கடனுக்கு போயிடுச்சு. அவரு வசதியா இருந்தாரே தவிர பெருசா ஏதும் படிக்கல. அதனால எங்கேயும் வேலை கிடைக்கில. உங்க கிட்ட ஏதாவது கார் டிரைவர் வேலை கொடுத்தாலும் போதும். “என கண்ணீர் விட்ட பெண்ணைப்பார்த்து, “கம்பெனில படிப்புக்கு ஏத்தாப்ல வேலை இருக்கு. இருந்தாலும் வேலை கொடுக்க எனக்கு விருப்பமில்லை” எனக்கூறிய நளனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் வேலை கேட்ட பெண்.

“வேலைக்கு பதிலா ஆபீஸ் கேன்டீனை நீங்க எல்லாரும் பாத்துக்கங்க. அதுக்கு முதலாளியா நீங்களே இருந்துக்கங்க. பெரிய தொழிலதிபரா இருந்துட்டு வேலைக்காரரா இருக்கறது மனசுக்கு எந்தளவு கஷ்டம் கொடுக்கும்னு எனக்கு தெரியும். பிறரோட மனசு நோகாம, நம்மால மற்றவங்க துன்பப்படாம, சக மனுசங்க சந்தோசமா வாழ வழிவகை பண்ணிக்கொடுக்கிறதுலதாங்க நமக்கும் மகிழ்ச்சியிருக்கு. புண் பட்ட உங்க மனசுக்கு என்னோட வார்த்தை மருந்தா இருக்கும்னு நம்பறேன். சிலர் மத்தவங்க மனச புண்படுத்தற ரகம். சிலர் புண்பட்ட மனசுக்கு தாமாகவே உழைப்பால உயர்ந்து மருந்து போடற ரகம். சிலர் யாராவது மருந்து போடுவாங்களான்னு தேட்டிப்போவாங்க. யாரையுமே தவறா நான் பார்க்கிறதில்லை. தவறுங்கறது சந்தர்ப்ப சூழ்நிலையால் உருவாகறது. பலர் சந்தர்ப்பத்துக்கு இழக்காயிருவாங்க. சிலர் அதுக்கு இலக்காகாம அறிவால, பொறுமையால கடந்திடுவாங்க. அப்படி கடந்ததால தான் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்” என நளன் சொன்னபோது நிச்சயம் நின்று போனபோது ஏற்பட்ட மனப்புண் ஆறியிருந்தாலும், அதன் வலி இன்னும் நளனுள் இருப்பது அறிவாளியான அந்தப்பெண்ணுக்கு மட்டும் புரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *