நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 3,234 
 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

கந்தனுக்கு அசதியாக இருந்தது. எங்காவது சென்று படுத்துறங்கலாம் போல் இருந்தது. ராவுத்தர் கடையிலிருந்து சற்றுத் தொலைவிலேயே ஒரு குதிரை வண்டி நின்றுகொண் டிருந்தது. அதன் அருகே வந்து நின்றான் கந்தன். வண்டியின் வெளிப்புறத்தில் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. 

பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்!
கண்ணகியின் ஆவேசம், நக்கீரனின் உறுதி,
புறநானூற்றுத் தாயின் மான உணர்வு
அத்தனையும் பெற்றுக் களம் புகுவோம்!!
விற்பனை வரியிலிருந்து விதி விலக்குக் காண
போர்க்கொடி உயர்த்துவோம்!!! 

இவண் 
கார்கோட்டை வெற்றிலை பாக்கு அங்காடியினர். 

போஸ்டரைக் கந்தன் படித்துக்கொண்டிருக்கையில், ஒரு கையில் ஒரு பீடிக்கட்டை இடுப்பில் சொருகிக்கொண்டு, மறு கையில் பற்ற வைத்த ஒரு பீடியோடு வண்டிக்காரக் குப்பு, கந்தன் பின் நின்றுகொண்டு, “அது எதுக்கூன்னு பாத்திட்டி ருக்கையா? அந்த நோட்டீசை வண்டிலே ஒட்டினா, இந்தக் கடைக்காரப் பசங்ககிட்டே ஒரு பீடி, ரெண்டு பீடி ஓசி வாங்க முடியுது” என்றான். 

“ஒன் வண்டீன்னு தெரிஞ்சுதான் நின்னேன். கருப்புக்குக் கால் எப்படி இருக்கு?” என்று கேட்டான் கந்தன், குதிரையின் முன் வலது காலைப் பார்த்தவாறே. 

“பரவாயில்லே, இப்ப சுமாரா ஓடறான். அந்த மாட்டு டாக்டர்கிட்டே கொண்டு போயிருக்கக் கூடாது. குதிரைப் பக்கம் போகவே பயப்பட்டாரு; என்ன வைத்தியத்தைச் செஞ்சிருப்பாரு?’ 

“சரி, என்னே தேவி லாட்ஜ் வரை கொண்டுபோய் விடு” என்றான் கந்தன். 

“ஏறிக்க, வண்டிக்குள்ளாற டிரைவர் கருப்பையா உக்காந்து இருக்கான். கதெ பேசிட்டே போவலாம்.” 

“மொதலியார் வீட்டுக் கருப்பையாவா?” 

“அவன்தான். நேத்து அவன் கோர்ட்டிலே சாட்சி சொன்ன தெல்லாம் பேப்பர்லே வந்திருக்காம். அதெப் படிச்சிகிட்டி ருக்கான்.” 

கந்தன் பின்புறமாகவும், குப்பு முன்புறமாகவும் வண்டிக் குள் ஏறிக்கொண்டனர். கையில் ஒரு பத்திரிகையுடன் உட்கார்ந் திருந்த கருப்பையா சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, “வாங்கண்ணே, வாங்க” என்று கந்தனை வரவேற்றான். குப்பு வண்டியை முடுக்கி விட்டான். நொண்டிக் குதிரை சற்று மெது வாக ஓடியது. 

“பத்திரிகைலே என்ன போட்டிருக்கு தம்பி?” என்று கேட்டான் கந்தன். 

“நம்ப மொதலாளி வீட்டு வளக்கு விவரம் வந்திருக்கு” “ஒரக்கப் படி தம்பி, நானும் கேட்டுக்கறேன்.” “தொவக்கத்துலேந்து படிக்கட்டுமா?” 

*உம்.” 

கருப்பையா பத்திரிகையை நன்றாக மடித்துக்கொண்டு உற்சாகத்தோடு படிக்க ஆரம்பித்தான். 

“கார்கோட்டை நகரத்துப் பிரபல சுகஜீவியான சிவானந்தம் (61) தனது ஒரே மகனான சிவராஜனை(9) விஷமிட்டுக் கொன்ற தாக, சிவானந்த முதலியார்மீது வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு கார்கோட்டை செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதி கனம் எஸ்.ராமசாமி அய்யங்கார் முன்னிலையில் நடைபெற்று வருவது ‘செய்திப்புயல்’ வாசகர்கள் அறிந்ததே. நேற்று (சனிக்கிழமை) முதல் சாட்சியாக அரசாங்கத் தரப்பு சாட்சி எண் 3 விசாரிக்கப் பட இருந்தார். ஆனால் சீக்கிரமே கோர்ட்டுக்கு வந்திருந்த அரசாங்கத் தரப்பு சாட்சி 5 ஆன சிவில் அசிஸ்டென்ட் சர்ஜன் டாக்டர் வேதமுத்து, எம்.ஆர்.சி.பி. தன்னை முதலில் விசாரிக்கும் படி கோரவும், நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார். (அரசாங்கத் தரப்பு சாட்சி 3 ஆன டிரைவர் கருப்பையா சில காலம் ‘செய்திப் புயல்’ அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. பக்கத்தில் இருப்பது டிரைவர் கருப்பையாவும் அவரது மனைவியும் அவர்களது திருமணத்தின்போது ‘செய்திப் புயல்’ மானேஜர் திரு. தாமசுடன் எடுத்துக்கொண்ட படம்)” 

கருப்பையா படிப்பதை நிறுத்திவிட்டுப் படத்தைக் கந்தனிடம் காட்டினான். படத்தைப் பார்த்துவிட்டு, “ஆமா, அந்த மானேஜர் எதுக்கு அப்படித் திருட்டு முழி முழிக்கிறார்? உம், படி” என்றான் கந்தன். குப்பு, தெருவில் அவனை முந்திக் கொண்டிருந்த சைக்கிள் ரிக்ஷாக்காரனைத் திட்டிவிட்டு, தன் கையிலிருந்த கயிற்றைச் சுழற்றிக் கொண்டே “அய், அய்” என்று ‘கருப்பு’வுக்கு உற்சாகம் அளித்துக்கொண்டிருந்தான். கருப்பையா தொடர்ந்து படிக்கலானான். 

“சிவானந்த முதலியார் தலையைக் கீழே கவிழ்த்துக்கொண்டு குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்தார். டாக்டர் வேதமுத்து கூண்டுக்கு அருகே இருந்த நாற்காலி முன்பு நின்று கொண்டு, சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். விசாரணை ஆரம்பிக்க இருக்கவும், அரசாங்கத் தரப்பு சாட்சி 1 ஆன வேதவல்லியும், அ.சா.2 ஆன சந்திரசேகர முதலியாரும் கோர்ட்டு அறையைவிட்டு வெளியேறினர். (வேதவல்லி – வயது 28 – சிவானந்த முதலியாரின் மூன்றாவது தாரம் என்பதும், சந்திரசேகர முதலியார்(35) வேதவல்லியின் மூத்த சகோதரர் என்பதும் வாசகர்கள் அறிந்ததே. வேதவல்லி நீலநிறப் பட்டுப் புடவையும், மஞ்சள் நிறச் சோளியும் அணிந்து, முடியைப் பிரிமணைக் கொண்டை யாகப் போட்டிருந்தார்.)” 

“சந்திரசேகர முதலியார் வேட்டி கட்டியிருந்தார்னு போடலையா?” என்று கேட்டான் கந்தன். 

“உஹும்” என்றுவிட்டுக் கருப்பையா தொடர்ந்து படித்தான். “முதலில் டாக்டர் வேதமுத்துவை அரசாங்கத் தரப்பு வக்கீல் திரு.கே.சீனிவாசன் விசாரணை செய்தார். 

அ.வ : டாக்டர், உங்களுக்கு எத்தனை வருஷ சர்வீஸ்? 

டா : பதினெட்டு வருடங்கள். 

அ. வ : உங்களை நீங்கள் எதிலாவது ‘ஸ்பெஷலிஸ்டு’ எனக் கருதிக் கொள்ள முடியுமா? 

டா : ஆமாம், டாக்சிகாலஜியில். அதாவது விஷம் சம்பந்தப் பட்ட மருத்துவப் பிரிவில். 

அ.வ : அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? 

டா : உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப் பிட்ட கம்பெனி தயாரித்த செயற்கை நூலிழையில் சரும நோய் ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை விஷச்சத்து கலந்துவிடுகிறதா என்று ஆராய அரசாங்கம் நியமித்த ஒருநபர் குழுவாக நான் பணியாற்றினேன். தேவைப்பட்டால் நியமன உத்தரவைச் சமர்ப்பிக்க முடியும். 

நீதிபதி : அவசியமில்லை. 

அ. வ : (நீதிபதியிடத்து) கனம் கோர்ட்டார் அவர்களே, டாக்டர் அவர்களது மருத்துவ அறிக்கையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையும் எக்ஸிபிட்டுகள் எண் 3, எண் 4 ஆகக் கோர்ட்டிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ளதை விட்டுவிட்டு, வேறு சில அம்சங்களில் மட்டும் டாக்டரை விசாரிக்க அனுமதி கோருகிறேன். 

நீதி : (டாக்டரிடத்து) நீங்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கை களில் ஏதாவது திருத்தங்கள் செய்ய விரும்புகிறீர்களா? 

டா : (நீதிபதியிடத்து) இல்லை, யுவர் ஆனர். 

நீதி : (அ. வ. யிடத்து) நீங்கள் மேலே செல்லலாம். 

அ. வ : (டாக்டரிடத்து) கடந்த மார்ச்சு மாதம் பத்தொன்ப தாம் தேதி சுமார் ஒரு மணிக்கு உங்களிடம் கொண்டு வரப் பட்ட சிவராஜின் மரணத்துக்கு என்ன காரணம் என்று நினைத்தீர்? 

டா : சிறுவனின் முகமும், கழுத்தும், கைகளும் நீலம் பாரித்து இருந்தன. கண்கள் விரிந்து இருந்தன. உதடுகளில் நுரை கக்கியிருந்தது. வலிப்பு ஏற்பட்ட நிலையில் என் முன் கிடத்தப்பட்டான். இவை சாதாரணமாக பொட்டாசியம் சையனைடு வயிற்றுக்குள் செல்வதால் ஏற்படும் அறிகுறிகள். எனவே சையனைடு பாய்சனிங்காக இருக்கலாம் என்று நினைத்தேன். 

அ.வ : உங்கள் யூகம் சரியா என்று பார்க்க என்ன செய்தீர்கள்? 

டா : உடனே ஜில்லா மாஜிஸ்டிரேட்டுக்கும் போலீஸ் சூப்பரன்டன்ட்டுக்கும் தகவல் கொடுத்துவிட்டு. 

நீதி : அதெல்லாம் தேவையில்லை டாக்டர். 

டா : எஸ்,யுவர் ஆனர். ஐந்து சாட்சிகளின் முன்பாக சிறுவனின் வயிற்றிலிருந்து ‘வாஷ்’ எடுத்து, அதில் ஒரு பகுதியை அரசாங்க பிரதான கெமிஸ்டுக்கு அனுப்பவும், மற்ற பகுதியை நான் ஆராயவும் வைத்துக் கொண்டேன். எனது ஆராய்வின் படி சிறுவனின் வயிற்றில் அதிகமான அளவுக்கு ஹைட்ரோசயனிக் அமிலமும், சிறிதளவு பொட்டாசியம் சையனைடும் இருந்தது தெரிந்தது. 

அ.வ: இவற்றுள் எது விஷத்தன்மை கொண்டது? 

டா : இரண்டுமேதான். 

அ.வ: அப்படியானால் இறந்தவர் இரண்டையுமே உட்கொண்டிருக்க வேண்டுமா டாக்டர்? 

டா : அவசியமில்லை. பொட்டாசியம் சையனைடை உட்கொண்டாலே போதும். அது வயிற்றிலுள்ள ஒரு வகை அமிலத்தோடு செயல்பட்டு ஹைட்ரோசயனிக் அமிலம் ஏற்பட்டுவிடும். 

அ.வ : பொட்டாசியம் சையனைடு எந்த நிறத்தில் இருக்கும்? 

டா : ‘ஷூகர்’ மாதிரி வெண்மையாக இருக்கும். 

அ.வ : அதைச் சாதாரண உணவுப் பொருள்களோடு கலந்தால் உணவுப் பொருளில் எதாவது நிற மாற்றம் ஏற்படுமா? 

நீதி: (அ.வ.யிடத்துச் சிரித்துக்கொண்டே) இதெல்லாம் தேவையில்லை. 

அ. வ : யெஸ், யுவர் ஆனர். (டாக்டரிடத்து) குறைந்தது எவ்வளவு வயிற்றுக்குள் சென்றால் பொட்டாசியம் சையனைடு சாவை ஏற்படுத்தும்? 

டா : வயது வந்த திடகாத்திரமானவர்களாக இருந்தால் 160 மில்லி கிராம் சையனைடி லேயே சாவு ஏற்பட்டுவிடும். சிறுவர்களுக்கு இதைவிடக் குறைந்த ‘டோசே’ போதும். 

அ.வ: நீங்கள் குறிப்பிடும் இந்த அளவை ஒருவர் தனது இரண்டு விரல்களுக்குள் ஒளித்து வைத்துக்கொள்ள முடியுமா? 

டா : முடியும். 

அ. வ : இந்த விஷம் வயிற்றுக்குள் சென்றால் எவ்வளவு நேரத்தில் சாவு ஏற்படலாம். 

டா : சில செகண்டுகளில், சில நிமிடங்களில், சில மணி நேரத்தில் சாவு ஏற்படலாம். விஷத்தின் அளவையும் ‘பேஷன்டி’ன் உடல் நிலையையும் பொருத்தது. 

அ.வ : டாக்டர், குற்றவாளிக் கூண்டில் இருக்கும் எதிரியை உங்களுக்கு எத்தனை வருடங்களாகத் தெரியும்? 

டா : மூன்று வருடங்களாகத் தெரியும். 

அ. வ : இந்த மூன்றாண்டு காலத்தில் அவர் வைத்திய சம்பந்தமான யோசனை ஏதாவது உங்களிடம் கேட்ட துண்டா? 

டா : (நீதிபதியிடத்து) கனம் கோர்ட்டார் அவர்களே, இந்தக் கேள்விக்கு நான் பதில் தருவது அவசியந்தானா? நீதி : (அ.வ.யிடத்து) நீங்கள் டாக்டரைக் கேட்கும் கேள்வி இவ்வழக்கு சம்பந்தப்பட்டதுதானா? 

அ.வ : ஆம், யுவர் ஆனர். 

நீதி : (டாக்டரிடத்து) டாக்டர், வழக்கு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்; வழக்கு சம்பந்தப்பட்ட எந்தக் கேள் விக்கும் இந்தக் கோர்ட்டில் நீங்கள் பதிலளிக்கக் கடமைப் பட்டிருக்கிறீர்கள். 

டா : எஸ், யுவர் ஆனர். ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த வழக்கில் எதிரியாக உள்ளவர், என்னிடத்து வந்து ஒருவ னுடைய ரத்தத்தையும், அவனுடைய தகப்பன் என்று சொல்லப் படும் வேறொருவருடைய ரத்தத்தையும் பரிசோதித்து, உண்மையிலேயே அவர்கள் தகப்பன், மகன் என்று உறுதிப் படுத்த முடியுமா என்று கேட்டார். 

அ. வ : நீங்கள் என்ன சொன்னீர்கள்? 

டா : இந்த இருவருடைய ரத்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வர முடியாதென்றும், தாயினுடைய ரத்தத்தையும் சேர்த்துப் பரிசோதித்தால், சில சமயங்களில்- சில சமயங்களில் மட்டும் – ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப் பிட்டவனுக்குத் தகப்பனாராக இருக்க முடியாதென்ற முடிவுக்கு மட்டும் வர முடியும் என்றேன். 

அ.வ : பிறகு என்ன நடந்தது? 

டா : ஒரு வாரத்துக்குப் பிறகு முதலியார் அவர்கள் அதாவது எதிரி, ஒரு பெண்ணோடு – அவள் ஒரு நர்ஸாக இருக்கலாம் என்று எனக்குப் பட்டது – என்னிடத்து வந்து மூன்று சாம்பிள் ரத்தம் கொடுத்தார். எதிரி என்னிடத்துத் தந்த மூன்று சாம்பிளில் ஒன்று ஒரு சிறுவனுடையதென்றும். இரண்டாவது அவனுடைய தாயினுடையதென்றும், மூன்றாவது சிறுவனுடைய தகப்பனாராகக் கருதப்படக் கூடியவருடைய தென்றும் கூறி, உண்மையிலேயே மூன்றாவது நபர் சிறுவனு டைய தகப்பனாராக இருக்க முடியுமா என்று பார்த்துத் தரச் சொன்னார். 

அ.வ: நீங்கள் என்ன செய்தீர்கள்? 

டா : நான் எதிரியிடத்து சில சமயங்களில்தான் உறுதி யான முடிவுக்கு வர இயலுமென்றும், குறிப்பிட்ட ரத்தத்தைக் கொண்டவர் சிறுவனுக்குத் தகப்பனாராக இருக்க முடியும் என்று ஆராய்ச்சி தெரிவித்தாலும், அவர்தான் தகப்பனார், வேறொருவர் தகப்பனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வர முடியாதென்றும் எச்சரித்துவிட்டு, மூன்று சாம்பிளையும் பரிசோதனை செய்தேன்.” 

அடைத்துக் கிடந்த ஒரு ரயில்கேட்டின் முன் குதிரை வண்டி வந்து நின்றது. கருப்பையாவும் கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுத்துக்கொள்ள விரும்பினான். 

“நீ அந்த வீட்டிலே வேலே பாக்கறயே ஒனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான் கந்தன், கருப்பையாவிடத்து. 

“ஆமாம் கருப்பையா, பெரிய மொதலாளிங்க வீட்டுலே வேலை பாக்கற டிரைவர்ங்கல்லாம் மொதலாளி அம்மாவெ… பாத்துடுவாங்க எங்கறாங்களே, அதெல்லாம் நெசமா?” என்று ஊடே கேட்டான் குப்பு. 

“அண்ணே அண்ணே, இந்த வில்லங்கத்துலே எல்லாம் என்னை மாட்டிவிட்டிராதே குப்பண்ணே; வேதவல்லி அம்மா எங்கிட்டே கொஞ்சம் ஸ்பெசலா பிரியமாத்தான் நடந்துக்கும், ஆனா, இதெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டிருந்தா ஆபத்தாத் தான் முடியும்.” 

“ஆமாம், மொதலியார் செய்திருப்பாரா?” என்று கேட்டான் கந்தன். 

“ஒண்ணும் சொல்லிக்கிட முடியாது. இந்த மூணாங் கண்ணாலம் செய்துக்கிட்டதிலிருந்தே, அவர் ஒரு மாதிரியா மாறிட்டதாகத்தான் பேசிக்கிட்டாங்க. கண்ணாலத்துக்கு முன்னாடி ஏதோ டாக்டர் கிட்டே போயி அவருக்குக் கொளந்தே பொறக்க முடியுமானுட்டு சோதிச்சுக்கிட்டாரு எம்பாங்க. சிவராசுகிட்டே ஆரம்பத்துலே ரொம்பப் பிரியமாத்தான் இருந்தாரு. எவனோ படுகாலிப்பய அவரு காதுலே ஏதோ தொடர்ந்து ஓதிட்டிருந்திருக்கான். கொஞ்சமா மாறினாரு. சிவராசை செல சமயம் கொஞ்சுகொஞ்சுன்னு கொஞ்சு வாரு; சமயத்துலே பளீர்பளீர்னு அடிச்சிடுவாரு. நானே கண்ணாலே கண்டிருக்கேன்.” 

ரயில் கேட் திறந்தது. சுற்றிலும் இருந்த இரைச்சல் அதிகப் பட்டது. அத்தனை இரைச்சலுக்கும் மேலே குப்புவின் ‘ஹே’யும் கெட்ட வார்த்தைகளும் கம்பீரமாகவே ஒலித்தன. கருப்பையா பேசுவதை நிறுத்திக்கொண்டான். கந்தன் வெளியே இருந்த நெரிசலைக் கவனித்துக்கொண்டிருந்ததுபோல் தெரிந்தது. 

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *