நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 3,465 
 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

பதினைந்து நிமிடங்களில் கந்தன் மினர்வா சலூனை அடைந்தான். அழிந்து போயிருந்த அதன் போர்டில் சாக்கட்டியைக் கொண்டு ‘மினர்வா சிகை எழிலூட்டும் அகம்’ என்று எழுதியிருந்தார்கள். சலூனில் இரண்டு பழைய நாற்காலிகள் இருந்தன. ஒரு நாற்காலி யில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு முதலாளி முடி வெட்டிக்கொண்டிருந்தார். மற்றொரு நாற்காலி காலி யாக இருந்தது. அதன் பின்புறத்தை இரண்டு கைக ளாலும் தொட்டுக்கொண்டு, முதலாளி தொழில் செய் வதைக் கவனித்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். கந்தன் சலூனில் நுழையவும், முதலாளி அண்ணாந்து பார்த் தார். பிறகு ஒரு கையில் சீப்பும், மறுகையில் கத்தரிக் கோலும் இருக்க இரண்டு கைகளையும் கூப்பி, கந்தனிடம் “வணக்கம், தம்பி” என்றார். சிறுவன் ஒரு துண்டைக் கொண்டு காலி நாற்காலியைத் தட்டினான். கந்தன் நாற்காலியில் உட்காரவும், நாற்காலியைச் சரி செய்வது, ஒரு துண்டைக் கந்தனின் மார்பில் போடுவது, தலை யைச் சரியாக அமைத்து வைப்பது, கழுத்தைச் சுற்றிலும் மற்றொரு துணியைப் போர்த்துவது, சோப்பைக் குழைப் பது போன்ற சடங்குகள் அடுத்தடுத்து முறையே நடந் தன. சிறுவன் கந்தனின் முகத்தை வழிக்க ஆரம்பிக்கவும், கந்தன் ஓரிரு தடவைகள் சிறுவன் முகத்தை நேரிலும் கண்ணாடியிலுமாகப் பார்த்தான். சிறுவனின் கரங்கள் கந்தனின் முகத்திலும் கழுத்திலும் படும்போதும், சிறுவ னின் உடல் கந்தன் கையோடு உராயும் போதும் கந்த னுக்கு ஒரு ஆணுக்குரிய ஆசை ஏற்பட்டது. சிறுவன் தொட்டும் தொடாததுமாய் வேலை செய்வதும், திடீ ரென்று உராய்வதும், பிறகு விலகிவிடுவதும் கந்தனது ஆசையைப் பெருக்கின. 

ஒரு இளைஞன் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சேலை முந்தானையை வாயில் கவ்விக்கொண்டு ஜம்பரைக் கழற்றும் பெண்ணின் படத்திலிருந்து, கண்ணாடி உடைந்திருந்த முருகன் படம் வரை சுவரில் மாட்டியிருந்த எல்லாப் படங்களையும் அவன் ரசனையோடு நோக்கினான். அவற்றில் ஒரு படம் இளைஞனது கவனத்தை அதிகமாக ஈர்த்ததுபோல் தெரிந்தது. அப்படத்தில் ஒரு இளம் பெண் பஞ்சு மெத்தையில் கைகளை அகல விரித்து, அவளது தலை, தலைகீழாக உள்ளதுபோல் கட்டிலின் ஒரு விளம்பிலிருந்து தொங்கிக்கொண்டிருக்க, மல்லாந்து படுத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். ஓவியன் அவளது உறுப்புகளை மிகுந்த கற்பனையோடு தீட்டிவிட்டு அவளுக்கு ஒரு மஸ்லின் சேலையை அணிவித்திருந்தான். இளைஞன் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டே, “அண்ணே அந்தப் படம் எங்கே கெடெச்சுது?” என்று கடை முதலாளி யைக் கேட்டான். முதலாளியின் கையில் சிக்கிக்கொண்டு, ‘சிகு, சிகு, சிகு, சிகு…’ என்று உளறிக்கொண்டிருந்த கத்திரிக் கோல் ஒரு கணம் வாய் மூடியாய் ஆயிற்று. முதலாளி இளை ஞனின் பக்கம் திரும்பி, “வந்தா வெறுமனே முடியை வெட்டிக் கிட்டுப் போவியா – எங்கே கெடெச்சுது? எங்கே கெடெக்கும்னு தொணதொணக்கிறியே” என்று சினந்துகொண்டார். “இல்லே, படம் ரொம்ப நேச்சரா இருக்கு; அதான் கேட்டேன்” என்று இளைஞன் சமாளித்துக்கொண்டான். 

அடுத்தபடியாக இளைஞனின் கவனத்தைக் கவர்ந்தது பெஞ்சில் கிடந்த அன்றைய பத்திரிகை. அவன் அதை எடுத்துப் பார்க்கவும், “இன்னெக்கி ஞாயித்துக் கௌமேயில்லே?” என்றான் கந்தன். 

“ஆமாம்” என்றார் முதலாளி. 

“தம்பீ, ராசிபலன் எடுத்து ‘மிதுனம்’ வாசித்துக் காட்டு” என்றான் கந்தன். 

“மிதுனமா அண்ணே?” என்று கூறிக்கொண்டே, இளைஞன் பத்திரிகைத் தாள்களைப் புரட்டி, ராசிபலன் பக்கத்தை எடுத் தான். மீண்டும் ஒருமுறை “மிதுனம்தானே? கேளுங்கண்ணே’ என்று சொல்லிவிட்டு வாசிக்க ஆரம்பித்தான். 

“இந்த ராசிக்காரர்களுக்கு போக பலனைத் தரும் வியாழனும், தனபாக்கியபதி சுக்கிரனும் அனுகூல நிலையில் காணப்படுகிறார்கள். இத்துடன் சந்திரனின் சம்சாரத்தைக் கொண்டு (கடை முதலாளி வெடித்துச் சிரித்தார்; இளைஞன் அதைப் பொருட்படுத்தவில்லை) இவ்வாரம் பூராவும் நல்ல பலன்களாக நடந்துவரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் தானாகவே வசூலாகும். இந்த நாட்களில் மனதில் உள்ள குழப்பங்கள் போய், தைரியம், உற்சாகம் இவைகளில் நல்ல நிலைமை இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். (கந்தன் தனக்குள் ரசித்துக் கொண்டான்) புதிய முயற்சிகளையும், வியாபார ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளலாம். இந்த ராசிக் காரர்களுக்கு சந்திராஸ்டம் தினங்கள் ஞாயிறு மாலை 6.28 முதல் திங்கள் பகல் 10.47 முடிய உண்டு.” இளைஞன் பெருமூச்சு விட்டுவிட்டு, “நல்லாத்தானே சொல்லி இருக்கண்ணே?” என்றான். 

“நல்லாத்தான் சொல்லி இருக்கு; ஆனா நடக்கணுமே?” என்றான் கந்தன். 

“அதுக்கு அவங்க என்ன செய்வாங்கண்ணே? கெடுதியா ஒண்ணும் சொல்லலேயில்லே?” என்றான் இளைஞன். 

“தம்பி, என்ன செய்யுது?” என்றான் கந்தன். 

“அவன் மொகணையைப் பாத்தாத் தெரியலே? சினிமா வுலே சேரப்போறாராம்” என்றார் கடை முதலாளி. 

நாவிதச் சிறுவன் கந்தனின் முகத்தை வழித்து, கழுவி, மீசையையும் சரிசெய்து, ஸ்னோ, முகத்துமாவு இவற்றைக் கொண்டு அவனுக்கு எழிலூட்டி முடித்தான். கந்தன் எழுந்து நின்று, முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சுன்னங்களைச் சொறிந்துவிட்டு முதலாளியிடம் சில்லரையைத் தந்துவிட்டு சலூனை விட்டகன்றான். 

கந்தன், ரோட்டையும் அவனது குடிசையையும் பிரிக்கும் சாக்கடை மீது குறுக்காகப் போடப்பட்டிருந்த மரப்பலகை யின் மீது நடந்து சென்றுகொண்டிருக்கையில், வேலாயியின் வீடு வெளிப்புறமாக அடைத்திருந்ததைக் கவனித்தான்.ஜீவா. வீட்டின் சிறு மரப்படியில் இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு குந்தியிருந்தாள். 

“அம்மா வீட்டுலே இல்லே?” என்று கந்தன் அவளைக் கேட்டான். 

“இல்லை” என்று சொல்வது போல ஜீவா இரண்டு கை களையும் செங்குத்தாக உயர்த்தி உருட்டினாள். 

“வீடுகளுக்கு வேலைக்குப் போயிரிச்சா?” என்றான் கந்தன். 

‘ஆமா’ என்பதுபோல் ஜீவா தலையை அசைத்தாள். 

குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு மெழுகப்பட்டி ருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்தக் குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரை யளவுக்குத் தண்ணீர் இருந்தது. 

கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். 

“துணியை வாங்கிட்டு வந்தயா?” என்றான் கந்தன். “உம், பெட்டியுள்ளாற இருக்கு” என்று சொல்லிக்கொண்டே மீனா நிமிர்ந்து நின்றாள். “உம், கூட்டு” என்றான் கந்தன். 

அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின் சென்று, அவளைப் போலவே வளைந்து அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தான். 

“உம், விடுங்க. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே?” கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின் புறமாகக் கட்டிக் கொண்டான். 

“அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு” என்று தொடர்ந்தாள் மீனா. 

“கதவே வேணா அடச்சிடறேன்” என்று சொல்லிக் கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான். 

“ஆனா, வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு” என்று சொல்லிக்கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்று மொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான். ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிரு வென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியையும் சரி செய்து கொண்டிருந்த மீனா, “பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்?” என்றாள். 

“உண்மையைச் சொல்லட்டுமா? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிட்டுப் போச்சி” என்று சொல்லிவிட்டுக் கந்தன் சிரித்தான். 

“ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க” என்று சொல்லிக்கொண்டே, மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணை யையும் தட்டிப் போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி அணைந்து விட்டது. அதைப் பற்றவைத்துக்கொண்டிருந்த கந்தன், “அன்னைக்கு அந்த அணில்க எப்படி? நாம் எவ்வளவு பக்கல்லே போய் வேடிக்கை பார்த்தோம்; எப்படி ரெண்டும் ரொங்கிக் கிடந்திச்சு?” என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே சென்று உட்காரவும் அவள் “நாமும்தான் ரொங்கிக் கிடந்திருக்கோம்” என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை. அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர். 

“நாய்க செய்யறது அசிங்கமில்லையா?” என்றாள் அவள். 

“அபூர்வம், ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல” என்றான் கந்தன். 

“யானைங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டாள் மீனா. 

“ஆமா ஆமா, கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்திலே வேலை பார்த்தான். சுத்து வட்டாரத்திலே யானைங்க வருமாம், போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். லைன்ல உள்ளவங்க பதறிப் போயிட்டாங்க. ராவு பூராவும் அந்த யானை அலறிக் கிட்டிருந்திருக்கு. காலேலேயும் அலறல் கேட்டிட்டிருக்கவும், ஆளுங்க என்னேன்ட்டுப் போயி பார்த்திருக்காங்க. ஒரு பெண் யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிக்கிட்டு இருந்திருக்கு. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி அடிச்சிதாம்… கொஞ்சம் தலையைத் தூக்கிக்க. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.” 

“அப்புறம்?” என்று கேட்டாள் மீனா. 

“ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை அலறவுமா இருந்திருக்கு.” 

“அய்யோ, மெள்ள” என்றாள் மீனா. 

“சரி மெள்ளத்தான். கதையை முளுக்கக் கேக்கலேயே? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க என்னேன்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. பெண் யானை செத்துக்கிடந்தது. ஆண் யானையைக் காணோம்.” 

“கண்றாவி” என்றாள் மீனா. 

“அப்ப மறந்திடு” என்றான் கந்தன். 

“எதெ” 

“யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க.” 

கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான். 

“ஆமா, ஒண்ணு கேக்கணூம்ன்ட்டு தோணுது” என்றான் கந்தன். 

“என்ன?” 

“நைட்லே அக்கா வூட்டுக்குக் கண்டவனெல்லாம் வர்றானே அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா?” 

“அக்கா வூட்டுக்குக் கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும் காலேஜு ஸ்டூடன்ட்ஸ் வந்தா குஷியா இருக்கும்.” 

“எப்படி குஷியா இருக்கும்?” 

“அய்யோ கடிக்காதீங்க, வலிக்குது” என்று இலேசாக அலறினாள் மீனா. 

“சரி, சரி கடிக்கலே, எப்படி குஷியா இருக்கும்?” என்று திரும்பக் கேட்டான் கந்தன். 

“பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்” என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள். 

“உம்” என்றான் கந்தன். 

“பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே, இந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே எம்பாங்க.” 

“உம்.” 

“நாம ரெண்டு பேரும் எங்காச்சும் ஓடிலாம்பாங்க செலர். போன வாரம்னு நெனெக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?” 

“உம்… என்ன சொல்லிச்சு?” 

“என்னெப் பொம்பளேன்னுட்டு நெனைச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு” என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள். 

“ஊஹூம்.” 

“ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப் போட்டுக்களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அழுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான். இருந்திட்டுப் போங்கன்னேன். ‘பைத்தியக்காரத்தனம்’னு சொல்லிட்டுப் போயிட்டான்.” 

“அப்படியா?… சரி, நல்லாப் படுத்துக்க” என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே. 

“சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடு வோமானு தோணுது; ஆனா ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்” என்றான். 

“அவர் சொந்தத்திலே கார் வச்சிருக்காராமே?”

“அவனுக்கென்ன? காரும் வாங்குவான்; ஏரோப்பிளே னும் வாங்குவான். எங்கிட்டே மட்டும் பத்தாயிரம் தாப்பாப் போட்டிருப்பானே?” 

“பத்தாயிரம் இருக்குமா?” 

“பின்னே? பதினெட்டு, பத்தொன்பது பெர்ற வீட்டே பத்துக்கு விக்க வச்சான். வீடு வாங்கின பார்ட்டிகிட்டேந்து மூவாயிரமோ, நாலாயிரமோ வாங்கியிருக்கான். எங்கிட்டேந்து வேறே கமிஷன்ட்டு ஐந்நூறு வாங்கிக்கிட்டான்.” 

“நீங்க அப்போ வெவரம் தெரியாதவரு” 

“அம்மாவும் போயிட்டாங்க…” 

“சரியா இருக்கா?” 

அவள் தலையை அசைத்தாள். 

“தலையணை வச்சிட்டிருக்கயா?” 

“இல்லே, வேணுமா?” 

“வேண்டாம், சரியாத்தான் இருக்கு.” 

சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயத்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஸ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறிதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாகப் பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது. கொஞ்சமும் ஓசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடிப் படுத்துக் கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக் கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிட மிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக் கொண்டு, கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது. 

“என்னங்க, சந்திரனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா?” என்று உளறுவதுபோல் அவள் கேட்கிறாள்.

“நாம் தேடாத இடமா?” என்கிறான் அவன். “நாலு வருஷமாயிரிச்சே!” 

“உம்.” 

“ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா?”

கந்தன் பதிலளிக்காது கதவைத் திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது. 

துவைத்து வெளுக்கப்பட்டிருந்த உள்ளாடைகளையும், சலவை செய்யப்பட்ட எட்டு முழ வேட்டியையும், சில்க் சட்டையையும் அணிந்துகொண்டு, தலையைச் சீவிவிட்டு, கந்தன் குடிசையை விட்டுக் கிளம்பத் தயாரான போது மணி ஒன்பதரை இருக்கும். மீனா ஆடைகளைச் சரி செய்து கொண்டு ஒரு ஓரமாகப் படுத்திருந்தாள். கந்தன் உறையோடு கூடிய தனது ஸ்பிரிங் கத்தியைக் கூரையில் ஒரு இடத்திலிருந்து எடுத்து இடுப்பில் சொருகவும், “அது எதுக்குங்க?” என்றாள் மீனா. “சும்மாத்தான்” என்று கூறிவிட்டுக் கந்தன் காலணியை அணிந்துகொண்டே, “வர்றேன்” என்றான். 

“மீன் வந்திச்சு, வாங்கினேன். மீன் கொளம்பு வைக் கிறேன்; மதியம் சாப்பாட்டுக்கு வந்திருங்க” என்றாள் மீனா. “பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே, கந்தன் வீட்டை விட்டு வெளியே வந்தான். 

கந்தன் வீட்டிலிருந்து அரை பர்லாங்கு நடந்த பிறகே, காலுக்கு உருப்படியான ஒரு ரோடு படுகிறது. ஆங்காங்கு டீக்கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகளைக் காணலாம். ஆனால் இதுவெல்லாம் நகரத்தின் ஒதுக்குப்புறந்தான். இவற்றைக் கடந்து நடக்க நடக்க மக்கள் நடமாட்டம் கூடுகிறது. அடுத்தடுத்த கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஜன இரைச்சல் மிகுகிறது. இன்று ஜன இரைச்சல் என்றையும் விட அதிகமாக உள்ளது. 

கந்தன் பெரிய மசூதிக்கு அருகே இருந்த வெற்றிலை பாக்குக் கடையருகே வந்து நின்றான். அதற்கு அருகே ஒரு டீக்கடையும் இருந்தது. சமயங்களில் கந்தன் அங்கு பத்துப் பதினைந்து நிமிடங்கள் நிற்பதுண்டு. அந்நேரத்தில் அவனுக்கு வேண்டியவர்கள் சிலர் அங்கு வருவார்கள். கடைக்கு அருகே தரையில் ஆண்களும் பெண்களுமாகப் பத்துப் பனிரெண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். அநேகமாக ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒரு அலுமினிய அல்லது பித்தளைத் தூக்கு இருந்தது. அவர் கள் பேசிக்கொண்டிருக்கவில்லை. அரைப்பாக்கு, ஒரு வெத்திலை, ஒரு கிள்ளுப் புகையிலை இவை சிலர் வாய்களில் வதை பட்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக் கிடந்தது. ஒருத்தியைத் தவிர எல்லோரும் சற்று வயதுவந்தவர்கள். ஒரு மணி அல்லது ஒன்றரை மணி முன்னதாக வந்திருந்தால், முப்பது நாற்பது பேர் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், உரக்கப் பேசிக்கொண்டும் இருப்பதைக் கண்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் கட்டிட வேலை செய்யும் கூலிக்காரர்கள். கட்டிடங் கள் கட்டுவோரும், காண்ட்ராக்டர்களும் அங்கு வந்து கூலி களை வேலைக்கு அமர்த்திச் செல்வது வழக்கம். 

“குருசாமிக் கொத்தனார் வந்தாரா?” என்றான் கந்தன், கடைக்காரரிடத்து. 

“குருசாமி அண்ணனா? அவர் ஏது இப்ப இங்கே வர்றார்? அவர் மச்சினன்தான் இப்ப வந்து போச்சு. பெரிய வேலை போல; இருபது, முப்பது ஆளுங்களெக் கூட்டிக் கிட்டுப் போச்சு” என்றார் கடைக்காரர். இதற்குள்ளாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், “தேதி பத்தாகலே; வியாபாரம் மசிரு கணக்கா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளுலே சனங்க செத்தொளியப் போறாங்க” என்று உரக்க ஆரூடம் கூறினான் டீக்கடை சேட்டன். “அப்படித்தான் தெரியுது” என்று சேட்டனை ஆமோதித்தார் வெற்றிலைபாக்குக் கடைக்காரர். 

“இப்பெல்லாம் கசாயம் விக்கிறது இல்லையா?” என்றான் கந்தன் வெற்றிலைபாக்குக் கடைக்காரரிடத்து. 

“இல்லை” என்பது போலத் தலையை அசைத்துவிட்டு “இன்னைக்கு ஏதோ மாநாடு போல” என்று அவராகவே சொல்லிக்கொண்டார் கடைக்காரர். 

“மூளைகெட்ட சனங்க! பொளப்பப் பாத்துக்கிடு வாங்களா; அதை விட்டிட்டு, ‘அவன் வாள்க’ ‘இவன் வாள்க’ன்ட்டுத் தொண்டத் தண்ணி வத்தக் கூச்சல் போட றாங்க” என்று எரிந்து விழுந்தான் டீக்கடை சேட்டன். தரையில் உட்கார்ந்திருந்த கூலிக்காரர்கள் ‘புளிச் புளிச்’ சென்று எச்சிலைத் துப்புவதும் கனைப்பதுமாக இருந்தனர். 

கோட்டும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, கையில் ஒரு குடையுடன் நடுத்தர வயது மனிதர் ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் கூலிக்காரர்கள் எழுந்து நின்றனர். ஒரு கிழவனும் எழுந்து நின்றான். ஒரு பதினைந்து வயதுச் சிறுமியும் எழுந்து நின்றாள். கிழவனின் கால்கள் படபடத்தன. குடைக்காரர் எல்லார்மீதும் நோட்டமிட்டவாறே சிறுமியையும் கிழவனை யும் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, மற்றவர்களிடத்து, “சரி, வாங்க” என்றார். அவர்கள் குனிந்து அவரவர்களது தூக்கு களை எடுத்துக்கொண்டனர். ஆண்கள் தங்கள் முண்டாசு களை அணிந்துகொண்டனர். பெண்கள் சேலையின் ஒரு பகுதியைக் கொண்டு தலையை மூடிக்கொண்டனர். இலேசாகச் சிரிப்பொலி கேட்டது. அவர்கள் பேசிக் கொண்டே குடைக்காரர் பின்னால் நடந்தனர். “ஆட்டுச் சந்தே, மாட்டுச் சந்தே மாதிரி மனுசச் சந்தேதான்!” என்றுவிட்டுச் சிரித்தான் சேட்டன். சிகரெட்டு ஒன்றைப் புகைத்துக்கொண்டே, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கந்தன் பதினைந்து வயதுச் சிறுமியைப் பார்த்து, ஏதோ கேட்க வாயெடுத்தான். ஆனால் அவளது வயிற்றைப் பார்க்கவும் வாயை அடக்கிக்கொண்டான். நாலு அடி எடுத்து, அவள் அருகே சென்று, மெதுவான குரலில், “ஏம்பிள்ளே, இந்த அளவுக்கா விட்டிடுறது?” என்றான். 

சிறுமி திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினாள். “எனக்கு ஒண்ணும் தெரியலீங்க” என்றாள் சிறுமி. 

“நான் ஒரு டாக்டரம்மா சொல்றேன், அவங்ககிட்டே போறயா?” என்றான் கந்தன். 

“எந்த அம்மா? தந்தி ஆபீசுக்குப் பக்கல்லே இருக்கே, அந்த டாக்குட்டரா?” என்றாள் சிறுமி. 

“ஆமா, ஆமா, அவங்களே தான்; மேரியம்மானு பெயரு”. 

“நேத்துதான் போயிருந்தேன். புருஷனைக் கூட்டியானாங்க. யாரும் வரமாட்டாங்கன்னேன். கல்யாணம் கட்டினவங்கண்ணா நூறு ரூபாய், இல்லாட்டி எரநூறு ரூபாய்னாங்க. சித்தாள்னேன். சித்தாள்னா முன்னூறு ரூபாய்னுக்கிட்டே உள்ளே போயிட்டாங்க.” 

ஒரு நெல்லிக்காயைச் சுவைத்துக்கொண்டே ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள். தரையில் மீண்டும் உட்கார்ந்து விட்ட கிழவனின் கையைப் பிடித்துக்கொண்டு, “வாங்க தாத்தா, வூட்டுக்குப் போகலாம்” என்றாள். அவன் ஒரு கையைச் சிறுமி பிடித்திருக்க, மறு கையைத் தரையில் ஊன்றி எழுந்திருந்தான். அவன் கால்கள் நடுங்கின. அவனது அலுமினியத் தூக்கைச் சிறுமி ஒரு கையில் எடுத்துக்கொண்டாள். தூக்கு காற்றில் ஊசலாடியது. “தாத்தா, இன்னொரு கைலே ஒரு தடி வச்சிக் கோங்க” என்றார் வெற்றிலைபாக்குக் கடைக்காரர்.”உம், தடியில்லாதபோதே இந்த லச்சணமா இருக்கு. இன்னும் தடியும் ஒண்ணு இங்கே கொண்டு வந்திட்டா வேறெ வெனெயே வேண்டாம்” என்றுவிட்டு “வயசானவங்களுக்கு ஒரே நிம்மதி தான் இருக்கு” என்று திட்டவட்டமாக அறிவித்தான் டீக்கடை சேட்டன். இதற்குள்ளாக எதிர்ப்புறத்தில் ரோட்டோரமாகச் சென்று கொண்டிருந்த முத்துச்சாமியைப் பார்த்துவிட்டான் கந்தன். 

“ஏய் முத்துச்சாமி” என்று உரக்கக் கூப்பிட்டான் கந்தன். சட்டென்று நின்ற முத்துச்சாமி, ரோட்டைக் கடந்துகொண்டே, “அண்ணே ஒங்களைத்தான் தேடிப்போறேன்” என்றான். கந்தனும் நான்கு அடி எடுத்து வைக்க அவனும் முத்துச்சாமி யும் ரோட்டின் ஒரு ‘நியாயமான’ ஓரத்தில் ஒன்றுசேர்ந்தனர். 

“என்ன தம்பி சொகமா?” என்றான் கந்தன்.

“சொகந்தான் அண்ணே, விஷயத்தெக் கேளுங்க.”

கந்தன் முத்துச்சாமியைத் தட்டிக் கொடுத்தான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் கந்தன். 

“எல்லாம் நல்ல விஷயந்தாண்ணே. அன்னைக்குச் சொல்லிக்கிட்டிருந்தேனே, அந்தக் கைம்பெண்டாட்டி, அது காலையாட்டத்துக்கு சினிமாவுக்கு வந்திருக்கு. நீங்க நெனெச் சீங்கன்னா இன்னெக்கு ‘புக்’ பண்ணிரலாம். இப்ப சந்தேக மில்லே அண்ணே, அதுவும் நோங்கித்தான் கிடக்கு.” 

“அது மட்டும் தனியாவா வந்திருக்கு?” 

“ஆமா அண்ணே, அந்தக் கொளெந்தையைத் தூக்கிட்டு.” 

“சரி வா, இன்னைக்கு எப்படியும் முடிச்சிடலாம். ஆனா என்னை மறந்திரமாட்டியே?” என்றான் கந்தன். 

தன் தோள்பட்டையின் மீது விழுந்திருந்த கந்தனின் கையிலிருந்து விடுபடும் அளவுக்கு, கந்தனைவிட வேகமாக நடக்க விரும்புபவன் போல் நடந்தான் முத்துச்சாமி. இருவரும் சிறிது நேரம் நடக்கவும் முத்துச்சாமி பேசாதிருக்கவே, “தம்பீ, ஒனக்கு மயங்காத பொம்பளையும் இருக்குமா?” என்றான் கந்தன். 

தனது கழுத்தின் மீது விழுந்திருந்த கந்தனின் கையை விலக்கியவாறே லேசாகச் சிரித்தான் முத்துச்சாமி. 

கந்தனும் முத்துச்சாமியும் கிருஷ்ணாபுரம் சாராயக்கடைக்கு வந்தனர். கடையை ஒட்டியிருந்த வெற்றிலைபாக்குக் கடை யில் முத்துச்சாமி கந்தனுக்காக ஒரு பாக்கெட் சிகரெட்டும் தீப்பெட்டியும் வாங்கினான். கடைக்காரச் சிறுவன் முத்துச் சாமி கொடுத்த ஒரு ரூபாய்த் தாளைப் பெற்றுக்கொண்டு, ஒரு காலித் தகரப் பெட்டியைச் சத்தம் ஏற்படும் வகையில் அப்படியும் இப்படியும் திருப்பிவிட்டு “சில்லரை இல்லை; வெளியே வரும்போது பாக்கி வாங்கிக்கோங்க” என்றான். 

“டேய் தம்பி, நீ பொழச்சிக்கிடுவேடா. வெளியே வரும்போது எத்தனை பேர் நெனெப்போடு ஒங்கிட்டே சில்லரை கேட்டு வாங்கப் போறாங்க” என்று சிறுவனைப் பாராட்டினான் கந்தன். 

“அப்படி ஒண்ணும் இல்லீங்க, அண்ணே. வேணா தாளைக் கொண்டு போய்ட்டு வரும்போது சில்லரையைத் தாங்க அண்ணே” என்று சொல்லிச் சமாளித்துக்கொண்டான் சிறுவன். ஆனால் முத்துச்சாமியின் ரூபாய்த் தாள் வேறு சில தாள் களோடு ஏற்கெனவே ஒரு ‘கிளிப்’பில் சேர்க்கப்பட்டு விட்டது. 

“அது மார்க்கம் இல்லாதது, அபாதா; அது வரம்பில் அடங்காதது, அனந்தோகாரா; அது தங்குமிடமில்லாதது, அநிகேதா; அது எதுவுமில்லாதது, சூன்யா…” போன்ற சொற்கள் காதில் விழவும் கந்தன் திரும்பிப் பார்த்தான். வேறு யாருமில்லை, சாராயச் சாமியார்தான் (அவருக்கு ‘டிரம்’ சாமியார் என்றும் பெயர்). அவர்தான் சாராயக் கடைமுன் நின்றுகொண்டு ஒரு இளைஞனுக்கு – இளைஞனின் முகத்தில் ஏகப்பட்ட பக்தி, கலக்கம், சோகம் எல்லாம் – தத்துவம் போதித்துக்கொண்டிருந்தார். முத்துச்சாமி தன்னைக் கவனிப்பதில் சாமியாருக்கு மகிழ்ச்சி மாதிரி தெரிந்தது. ஆனால் “அது விப்பமுக்தா, அது அசுந்தசின், அது வைதாத்தான் ஹா…” என்று சாமியார் தொடரவும், கந்தன் பின்னால் முத்துச்சாமி சாராயக்கடைக்குள் நுழைந்தான். 

கடையில் கூட்டம் அதிகம் இருந்தது; என்றுமில்லாத கூட்டம். ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ என்று நினைத்துக் கொண்டான் கந்தன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை களில்கூடக் காலை நேரங்களில் இவ்வளவு கூட்டம் இருக்காது. இப்போதோ, ஒரே இரைச்சல், கூச்சல். 

“நான் சொல்கிறேன் பிரதர், என்னே எவனும் அசெச்சுக்க முடியாது.” 

“ஆமாம், எந்த எம்.எல்.ஏ., எம்.பி. அவனவன் தேர்தல் செலவுக் கணக்கே ஒளுங்காக் காட்டியிருக்கான்?” 

“நா சந்தோசமாத்தான் இருக்கேன் தம்பி; இது மாதிரியே வண்டி கடேசி மட்டும் ஓடிட்டாப் போதும்.” 

“காரியம்ன்னா என் மசுத்தே வேணும்னாலும் புடுங்கு வாரில்லே.” 

“மரகதம்னு சொல்லிச்சு. உருப்படி கலரா ஸ்டார் மாதிரி இருக்கும்.” 

“அண்ணே, துட்டிருந்தாத்தான் அரசியல், கிரசியல் எல்லாம்.” 

“அதுவும் ஒரு சொகம்டா; அனுபவிச்சாத்தான் ஒனக்குப் புரியும்.” 

“ஈரலா இது ஈரல்? பொடலங்கா மாதிரி இருக்கு.” 

“வாங்க தம்பி,வாங்க. என்னே நெனெவிருக்கா?” என்றார் சாக்கனாக்கடை முதலாளி, திருமூர்த்தி, சாக்கனாக்கடை அயிட்டங்களின் மீது நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கந்தன் திருமூர்த்தியைக் கண்ணெடுத்துப் பார்த்தான். 

“சோலை அண்ணாச்சி சொகமா இருக்காரா?” என்றான் கந்தன். 

“இருக்கான், இருக்கான். அவனுக்கென்ன கேடு?” “நீங்க என்ன இப்ப அண்ணாச்சியோட கூட்டு இல்லையா?” “கூட்டிருந்தா இங்கெயா கடையெப் போட்டுக்கிட்டு உக்காந்திருப்பேன்? ஆனா அவங்கூடக் கூட்டுச் சேர்ந்தவன் எவன்தான் உருப்பட்டான்?. அது கிடக்கட்டும் தம்பி, நீ போயி உக்காரு. ஒனக்கு வேண்டியதெ அனுப்பறேன்” என்றார் திருமூர்த்தி.

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *