நாளைக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,160 
 

கடித உறையைப் பார்த்ததுமே ராஜேஸ்வரிக்கு மனசுக்குள் கிலி பிடித்துவிட்டது. “அரசாங்கச் சேவையில்” என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பழுப்பு உறை. எங்கிருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. யார் எழுதியிருப்பார்கள் என்று புரிந்தது. ஓரத்தைக் கிழித்துப் படித்தாள். பத்மாதான் எழுதியிருந்தாள். தமிழில் சுருக்கமாக எழுதியிருந்தாள். இது படிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடிதம் என்று காட்ட இளங்குற்றவாளிகள் நிலையத்தின் அரசாங்க முத்திரையும் இருந்தது.

“அன்புள்ள அக்காவுக்கு, வணக்கம்.

இங்கு சுகம். உங்கள் சுகம் அறிய ஆவல்.

நிற்க, அடுத்த மாதக் கடைசியில் என்னை இங்கிருந்து விடுவிக்கப் போகிறார்களாம். இன்று காலை மீட்டிங் போட்டு முடிவு செய்தார்களாம். என்னுடைய மேற்பார்வை அதிகாரி சொன்னார். ஒரு வருஷம் இடையிடையே வீட்டுக்கு வந்து மேற்பார்வை பார்ப்பார்களாம். யாராவது பொறுப்புள்ளவர்கள் வந்து கையெழுத்துப் போட்டு அழைத்துப் போக வேண்டும். எனது கார்டியன் என்ற முறையில் உங்களுக்கும் விரைவில் கடிதம் எழுதுவார்களாம்.

அக்கா, தயவு செய்து அடுத்த மாதக் கடைசியில் வந்து கையெழுத்துப் போட்டு என்னை அழைத்துப் போங்கள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நேரில் வந்து பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

இப்படிக்கு

பத்மா”

மனதில் திகில் படர்ந்தது. இவ்வளவு சீக்கிரமாகவா இரண்டு வருஷம் ஓடிவிட்டது? இல்லை. இரண்டு வருஷம் இன்னும் முடியவில்லை. நன்னடத்தைக்காக தண்டனைக் காலத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

கடிதத்தை மேசை டிராவரில் ஒளித்து வைத்தாள். அது எளிது. ஆனால் விஷயத்தை ஒளித்து வைக்க முடியுமா? நாளை இது வெடிக்காதா?

இன்று ராத்திரிக்கு கணவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சொன்னால் என்ன ஆகும் என்று தெரியும். புயலும் பூகம்பமும் வெடிக்கலாம். நிச்சயம் வெடிக்கும். ஆனால் சொல்லாமல் என்ன செய்வது? இரவுக்காகக் காத்திருந்தாள்.

*** *** ***

டிவியில் ஏதோ ஒரு அமெரிக்க சிரிப்புப் படம் ஓடிக் கொண்டிருந்தது. கையில் பியருடனும் வாயில் சிகிரெட்டுடனும் சிரித்துச் சிரித்துப் படம் பார்த்துக் கொண்டிருந்த கணவன் சேகரனை ஓரக் கண்ணால் பார்த்தாள் ராஜேஸ்வரி. எத்தனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான்! இப்போது சொல்லலாமா? சொல்லி நிம்மதியைக் கெடுக்க வேண்டுமா? வீட்டில் நிலவியிருக்கும் இந்த அமைதியைக் குலைக்க வேண்டுமா?

பிள்ளைகள் இருவரும் தூங்கப் போய்விட்டார்கள். மாமியாரும் இன்று வெள்ளென போய்ப் படுத்து விட்டாள். டிவியில் ஏதாவது தமிழ்ப்படம் இருந்தால் இரவிரவாக கண் விழித்து உட்கார்ந்திருப்பாள். இல்லையானால் வெள்ளென தூக்கம்தான்.

வீடு சாயந்திர அவசரங்கள் முடிந்து ஓய்ந்திருந்தது. பிள்ளைகள் விளையாடி, சண்டை போட்டு, சோறு சாப்பிட அடம் பிடித்து டிவியின் முன்னால் சத்தம் போட்டுச் சிரித்து, விரட்டியவுடன் போய்ப் படுக்கையில் சுருண்டு அடங்கினார்கள். சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுப் பாத்திரங்கள் கழுவி மேசை துடைத்து மாமியாருக்கும் வேலை முடிந்தது. வீடே கொட்டாவி விட்டுச் சோர்ந்து அடங்கிவிட்ட நேரம்.

அவன் டிவியிலிருந்து கண்கள் பெயராமல் சிரித்தவாறே பியரைக் குடித்து கோப்பையைக் கீழே வைத்த சமயமாகப் பார்த்துச் சொன்னாள்: “ஒரு லெட்டர் வந்ததுங்க!”

அவன் கண்களைத் திருப்பி அவளைப் பார்த்தான். “லெட்டரா? என்ன லெட்டர்?”

“பத்மா எழுதியிருக்கா!”

சிரிப்பு மறைந்தது. அவன் முகம் சுரீர் என்று மாறியது. அவளைக் கொஞ்சம் முறைத்தவாறிருந்தான். புயலின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன. “என்னாவாம்?” என்றான் மொட்டையாக.

“அவளுக்கு அடுத்த மாசம் விடுதலை கொடுக்கிறாங்களாம்!”

டிவிக்கு முகம் திருப்பினான். அது கடுகடுவென்று ஆகிவிட்டிருந்தது. அவன் மனம் அந்தப் படத்தில் இப்போது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றும் கேட்கவில்லை. கேட்டால் இந்தப் பேச்சு வளரும் என்பதால் கேட்காமலேயே முடித்து விடவேண்டும் என்று நினைத்தான் போலிருக்கிறது.

இரண்டு நிமிட மௌனத்தை ராஜேஸ்வரி கலைத்தாள்: “வந்து அழச்சிட்டுப் போ அக்கான்னு கேட்டிருக்கா!”

இன்னுமொரு நிமிடம் கடுகடுவென்று இருந்தான். அப்புறம் முகம் திருப்பிக் கேட்டான்: “சரி, கேட்டா, நீ என்ன பண்ணப் போற?”

பயந்து தயங்கிச் சொன்னாள்: “போய் அழச்சிக்கிட்டு வரலான்னுதான் இருக்கேன்!”
அவன் குரல் ஓங்கியது. கத்தினான். “ஏன் ராஜி, பைத்தியமா ஒனக்கு? சுத்தமா முட்டாளாயிட்டியா? இப்படி நெனச்சிக்கூடப் பாக்கலாமா?”

“ஏங் கத்திறிங்க? புள்ளங்க முளிச்சிக்கப் போறாங்க!” என்றாள்.

“ஆகா, புள்ளங்க மேல மகா அக்கறை உள்ளவதான் நீ! அதுனாலதான் ஒரு கொலைகாரப் பேய கொண்டாந்து ஊட்டுக்குள்ள வச்சிக்கிறேங்கிற! நாளக்கி உன் புள்ளங்களயும் குத்தி கொல பண்ணிட்டு போவட்டும்னு!”

“அநியாயமாப் பேசாதிங்க! அவ அப்படிப் பட்டவ இல்ல!”

“தோ பாரு ராஜி. நான் ஒரு வருஷத்துக்கு மிந்தியே உங்கிட்ட சொல்லியாச்சி! என் முடிவில ஒரு மாத்தமுமில்ல! ஒன் தங்கச்சிக்கு இந்த வீட்டில இனி எடம் கிடையாது! அதப் பத்திப் பேச்சையே எடுக்காத!” என்றான். டிவியை முறைத்தான். பியரை எடுத்துப் பருகினான்.

“அவ வேற எங்கங்க போவா? எங்க போவா சொல்லுங்க!” ராஜேஸ்வரி அழுதாள்.

“எங்க போனா ஒனக்கென்ன? அந்த கொலைகாரச் சண்டாளிக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இனி சம்பந்தமில்ல. விஷயம் முடிஞ்சது” அவனுக்குக் கோபத்தில் மூச்சிரைத்தது.

கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். கோபத்தால் சிவந்த கண்களுடன் டிவியின் அசையும் பிம்பங்களின் அர்த்தத்தை இழந்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று திரும்பிச் சொன்னான்: “இனிமே இந்தப் பேச்ச எடுத்தீனா நமக்குள்ள உறவே கெட்டுப் போவும், பாத்துக்க!” எழுந்தான். கதவைத் திறந்து வெளியே போய் கேட்டருகில் நின்று கொண்டு சிகெரட்டை ஆத்திரமாக உறிஞ்சி ஊதிக் கொண்டிருந்தான்.

அவள் சென்று படுக்கையில் சாய்ந்தாள். உடம்பில் எல்லா இடங்களிலும் முட்கள் குத்தின. மனம் முழுக்க ரணமாக இருந்தது. என்ன எளிதாக விஷயத்தை முடித்து விட்டான்? ஆனால் அவளுக்கு இந்த பிரச்சினை இதோடு முடிந்து விடுமா? எப்படி முடியும்? பத்மாவின் கையிலிருந்த கொலை அரிவாளிலிருந்து சிந்திய இரத்தக் கறைகள் காய்ந்திருக்கலாம். ஆனால் அவள் மனத்திலும் தன் மனத்திலும் ஏற்பட்ட காயங்கள் காயவில்லை. இன்னும் அங்கே ரத்தம் கசிகிறது. தொட்ட போதெல்லாம் சுரீரென்று வலிக்கிறது.

*** *** ***

திருமணம் முடிந்து சேகரனுடனும் அவனுடைய அம்மாவுடனும் ஒரே தம்பியுடனும் வாழ வந்த போதே அந்தக் குடும்பத்தில் இருந்த நெருக்கத்தையும் இறுக்கத்தையும் ராஜி உணர்ந்து கொண்டாள். அந்தக் குடும்பம் மூடிய குடும்பமாக இருந்தது. அவளை அன்னியமாகவே வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் பல ரகசிய விஷயங்கள் பேசிக் கொண்டார்கள். ராஜியைக் கண்டால் பேச்சுக்கள் நின்றுவிடும்.

போகப் போக அது பெரும்பாலும் சேகரனின் தம்பி பாஸ்கரனைப் பற்றியதுதான் என அவள் ஊகித்துக் கொண்டாள். பனிரெண்டு பதின்மூன்று வயதில் அவன் உடல் பெருத்திருந்தான். முரடனாக இருந்தான். அவன் ராஜியிடம் அதிகம் பேசுவதில்லை. பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தான். வீட்டில் அதிகம் தங்குவதில்லை. மாலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே எங்காவது போய்விடுவான்.

ராஜி வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். பக்கத்திலேயே ஒரு தொழிற்சாலையில் அவளுக்கு அசெம்பிளி லைனில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்திருந்தது.. சில சமயம் ஷி·ப்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது. கஷ்டமாக இருந்தாலும் ஒரு கம்பெனியில் கணக்கு அலுவல் பார்த்து வந்த சேகரனுக்கு நிகரான வருமானம் வந்ததால் வேலை பிடித்திருந்தது.

அப்படி வெளியில் போக வர இருந்த போதுதான் பாஸ்கரனைப் பற்றி அவள் கேள்விப்பட ஆரம்பித்தாள். அவன் எடுத்ததெற்கெல்லாம் மற்ற பையன்களுடன் சண்டை பிடிப்பது, எப்பொழுதும் நண்பர்கள் இல்லாமல் தனியாகவே சுற்றுவது, போதைப் பொருள் பழக்கம் இருக்குமோ என்ற வதந்திகள், அவன் பெண்களைப் பார்த்து இளிப்பது எல்லாம் கேள்விப் பட்டாள்.

ஆனால் எதையும் வீட்டில் சொல்ல முடியாது. அந்தப் பேச்சை எடுத்தால் “உனக்கென்ன, விடு! பொம்பிளகளுக்கு வேற வேல கெடையாது!” என்பான் சேகரன்.

வீட்டுக்கும் அவனைப் பற்றி அடிக்கடி முறையீடுகள் வந்து கொண்டிருந்தன. பள்ளிக் கூடத்தில் சண்டை போட்டு வருவான். திருட்டு பற்றிய முறையீடுகளும் வந்தன. ஆனால் முறையீடு பண்ண வந்தவர்களை சேகரனும் அவன் தாயும் முரட்டுத் தனமாகத் திட்டி அனுப்பினார்கள். இரவில் தாயின் அறையில் மூவரும் சேர்ந்து பேசுவார்கள். சில சமயம் பாஸ்கரனை சேகரன் அடிப்பான். பாஸ்கரன் திரும்பிச் சண்டை போடுவான். மாமியார் பாஸ்கரனை அணைத்துக் கொண்டு சேகரனோடு சண்டை போடுவாள்.

இந்த விஷயங்களில் அவர்கள் ராஜியை ஒரு நாளும் நெருங்க விடுவதில்லை. ராஜி பாஸ்கரனைப் பற்றிக் கேட்க முனைந்த நாட்களில் சேகரன் அவள் வாயை அடைத்து விடுவான். ராஜி அந்த வீட்டில் வாழ்ந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றுவிட்ட இந்த மூன்று ஆண்டுகளில் அந்தக் குடும்பத்தில் யாரிடமும் அவளால் நெருங்க முடியவில்லை. பாஸ்கரனின் முரட்டுத் தனத்தை மறைப்பதற்காகவே தன்னை இப்படி அந்நியமாக வைத்திருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால் ஏன் என்று புரியவில்லை.

ராஜிக்கு இது விசித்திரமாக இருந்தது. அவள் கலகலவென சிரித்துப் பேசுகின்ற குடும்பத்திலிருந்து வந்தவள். தந்தையை இளவயதில் இழந்துவிட்ட குடும்பம். ஆனால் தன்னையும் தன் தங்கை பத்மாவையும் அவள் தாய் அன்பாகத்தான் வளர்த்தாள்.

சேகரனின் குடும்பத்தில் அவர்களுக்கிடையே நெருக்கமும் தற்காப்பு உணர்வும் அதிகமாக இருந்தன. ஆனால் மனம் விட்டுப் பேசுகின்ற திறப்பு இல்லை. ராஜி அதற்குள் நுழைந்து நிலைமையைத் தளர்த்தலாம் என்று முயன்றாள். கொஞ்சம் சுதந்திரக் காற்றை ஓடவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவள் நெருங்க நினைத்தால் அவர்கள் இறுக்கம் இன்னும் கூடியது. “நீயேன் இதிலெல்லாம் போய் தலையிட்ற? அம்மா எல்லாம் கவனிச்சிக்குவாங்க!” என்று அவளை உறுதியாகக் கதவிற்கு வெளியே நிறுத்தி வைத்தான் சேகரன்.

இந்த நிலையில்தான் பத்மாவுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ராஜியின் அம்மா ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துப் படுத்தவள் அடுத்த நாள் போய்விட்டாள். அம்மாவை சவவண்டியில் அனுப்பிவிட்டு உட்கார்ந்த போதுதான் பத்மாவின் நிலைமை என்ன என்ற பெரிய கேள்வி வந்து நின்றது. பத்மாவுக்கு அப்போதுதான் பனிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது.

அவளை வைத்துக் கொள்ளும் நெருங்கிய உறவினர் யாரும் இல்லை. தான்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ரகசியங்கள் நிறைந்திருக்கும் அந்த வீட்டிலா? எல்லோரும் மனதுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டிலா? ராஜிக்கு அதில் கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை.

ஆனால் வேறு வழியில்லை. அம்மாவின் வீட்டைப் பூட்டிவிட்டு பத்மாவைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். புகுந்த வீடு புதியவள் வரவால் இருப்புக் கொள்ளாமல் திணறியது. சேகரன் அவளை மிரட்டினான். “இது என்ன ராஜி! வேற எங்காவது கொண்டு விடு ஒன் தங்கச்சிய! இந்தச் சின்ன வீட்டில எங்க இடம் இருக்கு?” என்றான்.

“பரவால்லிங்க நான் பாத்துக்கிறேன்!” என்றாள் ராஜி. இடம் இருக்கிறது என்று காட்டினாள். தன் அறைக்குப் பக்கத்தில் சாமான்கள் போட்டு வைத்திருந்த ஸ்டோர் ரூமை ஒழித்து அவளுக்கு படுக்கை போட்டுக் கொடுத்தாள்.

ஆனால் வீட்டில் அனைவரும் கடுகடுப்புடன்தான் அவளுடன் பழகினார்கள். பாஸ்கரன் மற்றவர்கள் முன்னிலையில் பத்மாவைப் பார்த்து கடுகடுத்தாலும், மற்றவர்கள் பார்க்காத போது அவளைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு நன்றாக இல்லை என்பதை ராஜி கவனித்தாள்.

பத்மா உண்மையில் குடும்பத்துக்கு மிக உதவியாக இருந்தாள். பள்ளிக்கூடம் போய் இருக்கும் நேரம் தவிர வேறு வேளைகளில் ராஜியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டாள். வீடு அவளோடு ஒட்டாமல் இருந்தாலும் இரண்டு குழந்தைகளும் “சின்னம்மா, சின்னம்மா” என்று அவளோடு ஒட்டிக்கொண்டு அதற்காக மாமியாரிடம் முதுகில் அவ்வப்போது அறையும் வாங்கின. பத்மா வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். முதலில் அதை வெறுத்த மாமியார் அப்புறம் ஏதோ வேலைக்காரியை ஏவுவது போல ஏவ ஆரம்பித்தாள். சேகரன் பத்மா என்ற ஒரு பெண் அந்த வீட்டில் இருப்பதாகக் கண்டு கொள்வதே இல்லை.

இந்த நிலையில்தான் அது நடந்தது. பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்து கொண்டிருந்த பத்மா பூப்பெய்தி விட்டாள். அன்று நாளெல்லாம் அறைக்குள் ஒளிந்திருந்து மாலை ராஜி வேலை விட்டு வந்தவுடன் அழுதழுது சொன்னாள். ராஜி அவளை அணைத்துக் கொண்டாள். சிரித்துத் தலையைத் தடவிக் கொடுத்தாள். தனக்குத் தெரிந்த சில சடங்குகளை அடக்கமாகச் செய்தாள்.

வீடு பத்மாவை கொஞ்சம் அருவருப்பாகப் பார்த்தது. பாஸ்கரனின் பார்வையில் காமம் கூடியிருந்தது. அவன் நாசியில் மோப்பம் கூடியிருந்தது. வீட்டில் அதிகமாகத் தங்க ஆரம்பித்திருந்தான். பத்மா அவனைப் பார்த்து வெருண்டிருந்தாள். ஆனால் புறாக் கூடான அந்தச் சின்ன வீட்டில் ஒளிய இடமில்லை. பயந்தாலும் தவிர்க்க முடியாது. வளைய வளையத்தான் வரவேண்டும்.

ஒரு நாள் ராஜி வீடு திரும்பிய போது பத்மா கசங்கிக் கிடந்தாள். ராஜியின் தோள்களைக் கட்டிக் கொண்டு கதறினாள். “அந்த அண்ணன், அந்த அண்ணன் என்னைப் பிடிச்சி கீழ தள்ளி….” தொடைகளில் ரணம் இருந்தது.

ராஜி வெகுண்டெழுந்தாள். மாமியிடம் சொன்னாள். மாமி எதிர்க் கோபம் காட்டினாள். “இது என்ன அநியாயம்! பாஸ்கரன் இன்னக்கி முழுக்க வீட்டுக்கே வரலியே… அவன் மேல இப்படிப் பொய்ச்சாட்டு சாட்டுதே இந்த சனியன்…” என்றாள்.

“நீங்க இன்னக்கி முழுக்க வீட்டில இருந்திங்களா?” என்று கேட்டாள் ராஜி.

“ஆமா வீட்லதான் இருந்தேன்…!” என்றாள் மாமியார்.

“இல்லக்கா, இந்த மாமி கடைக்குப் போறன்னிட்டு போனாங்க, அப்பதான்…” என்றாள் பத்மா விக்கலுக்கிடையே.

“ஆமா ஒரு அஞ்சி நிமிஷம் போனேன்! அதுக்கென்ன? அதுக்குள்ள ஒரு கதய ஜோடிச்சிட்றதா?” என்றாள் மாமியார்.

மைத்துணனை வீட்டில் காணவில்லை. சேகரன் இரவு வந்ததும் அவனிடம் சொன்னாள். எடுத்தவுடன் “சீச்சீ அப்படி இருக்காது!” என்றான் சேகரன்.

இரவு விளக்கணைத்து அத்தனை பேரும் மனதில் தணல்களைச் சுமந்துகொண்டு தூங்காமல் சாய்ந்திருந்த நேரத்தில் எங்கோ திரியப் போயிருந்த பாஸ்கரன் சத்தம் போடாமல் வந்து கதவு திறந்தான். சேகரன் பேசாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து “நான் போய்க் கேக்கிறேன்!” என்று எழுந்தாள் ராஜி.

“இரு இரு! நானே போய்க் கேக்கிறேன்!” என்று அப்புறம் அவன் எழுந்து போனான். அவன் அம்மாவின் அறைக்குள் கூடித் தணிந்த குரலில் சச்சரவிட்டார்கள். சேகரன் திரும்பி வந்தான்.

“என்னங்க?” என்றாள் ராஜி.

“ஒன் தங்கச்சி பொல்லாதவ ராஜி. இதுக்குத்தான் அவள இங்க சேக்காதேன்னு சொன்னேன்.”

“ஏன்? அவ என்ன பண்ணினா?”

“பாஸ்கரன் மேல இத்தன அநியாயமா சொல்றாளே! அவன் சாப்பிட்டுட்டு வெளிய போனவன் இப்பதான் வர்ரான்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதாம்! அம்மாவும் அப்படிதான் சொல்றாங்க!”

“அப்ப பத்மா இப்படி ஒரு பொய்ய இட்டுக் கட்டிச் சொல்றாளா?”

“யாரோ ஒரு பையனோட அவளுக்குத் தொடர்பு இருக்காம். அவனாத்தான் இருக்கும்னு பாஸ்கரன் சொல்றான்!”

குளிக்காமல் உடை மாற்றாமல் அறைக்குள் துவண்டு கிடந்த பத்மாவை இழுத்து வந்தாள் ராஜி. “சொல்லுடி! யாரோ இன்னொரு பையனாமில்ல! அப்படியா?”

“ஐயோ!” என்று அழுதாள் பத்மா. “அந்தப் பையன் இல்லக்கா. நான் பள்ளிக்கூடத்தில இருந்து வரும்போது அவனோட நடந்து வர்ரத இந்த பாஸ்கரன் அண்ணன் பாத்திருக்கு. ஒருநாள் என்ன மிரட்டினிச்சி. “ஒன்னோட போய் ·பிரண்டான்னு கேட்டிச்சி!” இல்லைன்னேன். தான் செஞ்சிட்டு அவன் மேல வீணா பழி போடுதுக்கா!”

சேகரன் எரிந்து விழுந்தான். “யார நம்பப் போற நீ? என் தம்பின்னா அவ்வளவு இளக்காரமா? அவன் இந்த மாதிரி காரியத்த எல்லாம் செய்ய மாட்டான். இந்த பொய்க்கார நாயோட நடிப்பப் பார்த்து அவன குத்தம் சொல்லாத! இந்த நாய எங்காவது தெரத்து!” அவன் போய்ப் படுத்து விட்டான்.

தன் ஆத்திரத்துக்கு தங்கையின் முதுகில் ரெண்டு போட்டுவிட்டு அவளை அவள் ஸ்டோர் ரூம் அறைக்குள் இழுத்துக் கொண்டு போகும் போது பாஸ்கரன் தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். பத்மாவை முறைத்தான். “பிளடி ப்ராஸ்டிடியூட்” என்று சொல்லிவிட்டு வெடுக்கென்று அறையில் புகுந்து சாத்திக் கொண்டான்.

பத்மா “ஓ”வென்று அழுதாள். ராஜியின் ரத்தம் கொதித்தது. பத்மாவை அங்கேயே விட்டுவிட்டுத் தன்னறைக்கு வந்து கணவனை உலுக்கினாள். “என்ன சொன்னான் கேட்டிங்களா உங்க தம்பி?”

“என்னா?” என்றான்.

“செய்றத செஞ்சிட்டு என் தங்கச்சிய தேவடியாங்கிறாங்க!”

வெளியே யாரோ அலறினார்கள். ராஜியும் சேகரனும் ஓடி வந்த போது பாஸ்கரனின் அறை திறந்து கிடந்தது. பத்மா உள்ளே இருந்தாள். அவள் கையில் தேங்காய் உரிக்கும் அரிவாள் இருந்தது. அதை ஓங்கி ஓங்கிக் கொத்திக் கொண்டிருந்தாள். சேகரனின் மண்டையிலும் நெஞ்சிலும் கைகளிலும் வெட்டிப் பிளந்த காயங்களிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவன் கீழே விழுந்து கிடந்தான்.

*** **** ****

போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.

போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.

சேகரன் கொதித்தான். “கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி” என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது சஉஆத்

போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.

போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.

சேகரன் கொதித்தான். “கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி” என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது பெண்ணின் உருவமே நினைவுக்கு வந்து அவளை வதைத்தது.

சவச்சடங்குகள் முடிந்து கொதிப்புக் கொஞ்சம் தணிந்திருந்த ஒரு காலையில் கணவனிடம் கேட்டாள் ராஜி: “ஏங்க! பத்மாவுக்கு லாயர் ஏதாச்சும் ஏற்பாடு பண்ண வேணாமா?”

தணிந்திருந்தவன் மீண்டும் கிளர்ந்து எழுந்தான். “என்ன ராஜி பேசிற? எதுக்கு லாயர்? அந்தச் சனியன நானே தூக்கில போடுவேன்! இதுக்கு லாயர் வேற கேக்குதா?”

“ஏற்பாடு பண்ணாம எப்படிங்க?”

“என் தம்பிய கொன்னவளுக்கு நானே லாயர் ஏற்பாடு பண்றதா? ஊர் சிரிக்காது? மூடு வாய!”

ஊர் ஏன் சிரிக்கும் என ராஜிக்கு விளங்கவில்லை. ஆனால் வாயை மூடிக் கொண்டாள். இங்கு தனது பேச்சு எடுபடாது என விளங்கிக் கொண்டாள்.

பிற்பகலில் தனக்குத் தெரிந்த தொழிற்சாலை மேலாளர் மூலமாக ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசினாள். மூர்த்தி என்ற அந்த இளம் வழக்கறிஞர் அக்கறையாகக் கேட்டு பத்மாவைத் தற்காக்க ஒப்புக்கொண்டு உடனடியாக பத்மாவைப் போய்ப் பார்த்து விட்டும் வந்தார்.

பத்மாவை தற்காலிகமாக இளங் குற்றவாளிகள் நிலையத்தில் இருக்க வைத்தார்கள். வழக்கு நடக்கும் நாட்களில் மட்டும் ராஜி அவளைப் பார்க்க முடிந்தது.

ராஜி தற்காப்பு சாட்சியாக வரவேண்டும் என பத்மாவின் வழக்கறிஞர் கேட்டபோது அவள் ஒப்புக் கொண்டாள். ஆனால் சேகரன் கடுமையாக எதிர்த்தான். “அவதான் என் குடும்பத்த அழிச்சான்னா நீயும் சேர்ந்து எங்களுக்கு அவமானத்தப் பூசப் போறியா? நான் என் தம்பிக்கு சார்பா சாட்சியம் சொல்லப் போறேன், நீ எனக்கு எதிரா சாட்சியம் சொல்லப் போறியா? ஒனக்கு ஒன் தங்கச்சி முக்கியமா புருஷன் முக்கியமா?” என்று கேட்டான்.

“புருஷன் முக்கியந்தாங்க. ஆனா அவள இப்படி அனாதரவா விட்டுட்றதா? அவளுக்குள்ள ஒரே பந்தம் நான்தானே!”

“முடியாது. நீ அவளுக்கு சாதகமா சாட்சியம் சொல்றதுன்னா நமக்குள்ள உறவு அத்துப் போயிடும் பாத்துக்க!”

இரவு முழுவதும் அழுதிருந்துவிட்டு சாட்சி சொல்லும் காலை வேளையில் தெளிவானாள் ராஜி. அன்று வழக்குக்கு அனைவரும் போனார்கள். அவர்கள் வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி பார்வதி அத்தை என்ற ஒரு நடுவயது விதவை தன் மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவளிடம் குழந்தைகளை விட்டுவிட்டுப் போனார்கள்.

சேகரன் தன் தம்பியின் கொலை பற்றி சாட்சியம் சொன்னான். பத்மா எப்போதும் பைத்தியம் போல் நடந்து கொள்வாள் என்றும் பாஸ்கரனை எப்போதுமே வெறுத்தாள் என்றும், வேறு யாராலோ கற்பழிக்கப்பட்டு அதிலிருந்து தப்ப பாஸ்கரன் மேல் பழிபோட்டு அவன் அதை மறுக்க வெறி பிடித்துக் கொலை செய்தாள் என்றும் அவன் சாட்சியம் இருந்தது.

ராஜி கூண்டிலேறி உண்மையைச் சொன்னாள். சேகரனின் முறைக்கும் விழிகளைச் சந்திக்காமல் தவிர்த்துப் பேசினாள். பாஸ்கரன் மேல் ஏற்கனவே உள்ள ஒழுங்கீனங்களைப் பற்றிச் சொன்னாள். தற்காப்பு வழக்கறிஞர் பாஸ்கரனின் ஒழுங்கீனம் பற்றி சாதிக்க இன்னும் இரண்டு சாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்.

விந்துப் பரிசோதனையில் பத்மாவின் தொடையில் இருந்தது பாஸ்கரனின் விந்துதான் என உறுதிப் படுத்தப் பட்டிருந்தது. சவத்தின் முதுகிலிருந்த கீறல்கள் பத்மாவின் நக அமைப்புக்குச் சரியாக இருந்தன. மற்ற காயங்களும் தொடைச்சிராய்ப்புகளும் பத்மா தனியறையில் நீதிபதிக்குச் சொன்ன விவரங்களோடு ஒத்திருந்தன.

“இது தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தினால் உணர்ச்சி மேலீட்டால் ஓர் இளம் பெண் செய்த கொலை என இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இது தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலை அல்ல. சம்பவம் நடந்து முடிந்த சில மணி நேரத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்ட கொலை என்றே கருத வேண்டியுள்ளது. இதில் மூர்க்கம் உள்ளது. இது குற்றமே. ஆனால் இந்தக் குற்றம் நடந்த எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இந்தக் குற்றவாளி இரண்டு ஆண்டுகள் இளங் குற்றவாளிகள் நிலையத்தில் வைக்கப்பட்டு போதனை புகட்டப்படவேண்டும் என நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது.”

பத்மா “அக்கா” என்று அலறியவாறே போனாள். ராஜியால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது.

வழக்கறிஞரைப் பார்த்து நன்றி சொன்னாள் ராஜி. “என்னால செய்ய முடிஞ்சது அவ்வளவுதாம்மா!” என்றார் அவர். வழக்கறிஞரின் இந்தத் தற்காப்பு இல்லை யென்றால் பத்மா ஐந்து முதல் ஏழாண்டுகள் சிறைக்குச் சென்றிருக்கலாம் என்பதை ராஜி அறிந்து வைத்திருந்தாள்.

“உங்களுக்கு எவ்வளவு ·பீஸ்னு நீங்க சொல்லியே!” என்று ராஜி கேட்டாள்.

மூர்த்தி யோசித்தார். “நீங்க இவ்வளவு தைரியமா உங்க புருஷன எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட சாட்சியம் சொன்னதே எனக்கு மகிழ்ச்சி! இதுக்கு மேலும் உங்க புருஷனக் கோபப் படுத்தாம நீங்க எவ்வளவு பணம் எனக்குத் தரமுடியும், சொல்லுங்க!”

“என் தனி சேமிப்பா ஒரு ஆயிரம் ரிங்கிட் வச்சிருக்கேன்! அவ்வளவுதான்”

“அதில ஒரு ஐநூறு ரிங்கிட் கொண்டாந்து கொடுங்களேன்! ”

மூர்த்தி போய்விட்டார். ராஜியின் மனதுக்குள் இடையறாத அந்தத் துயரச் சுழலிலும் ஒரு நல்ல உணர்வு குமிழியாக மேலே மிதந்து வந்தது.

*** *** ***

கடுகடுப்பும் எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுதலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குடும்பத்தைக் குலைத்தவள் என்ற ஏச்சுக்களும் கணவன் கட்டிலறையில் கட்டையாக விறைத்துப் போய்க் கிடத்தலும் என்று ஆறுமாதங்கள் அந்த வீட்டில் புயல் அடிப்பதும் அப்புறம் பனிக்கட்டியாக உறைந்து போவதுமாக காலம் ஓடிற்று. மாமியாரின் புறக்கணிப்பையும் கோபத்தையும் பொறுக்க முடியாமல் ராஜி குழந்தைகளை அந்த மூன்றாம் வீட்டு பார்வதி அத்தையிடம் அடிக்கடி விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அப்புறம் காயங்கள் கொஞ்சம் ஆறி குடும்பம் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கியிருந்தது. பாஸ்கரன் அந்த வீட்டில் இல்லாமல் போனதால் கொஞ்சமாக சுதந்திரக் காற்றுக் கூட வீசத் தொடங்கியிருந்தது. மாமியார் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். ஆனால் ராஜியோடு பேசுவது அடியோடு குறைந்து விட்டது. சேகரன் வீட்டு விஷயங்கள் பற்றி மட்டும் பேசுவான். இரவில் அவனுடைய அணைப்புக்கள் இயந்திரத் தனமாக இருந்தாலும் முறையாக நடந்தன.

பத்மாவை இருமுறை ரகசியமாகப் போய்ப் பார்த்து வந்தாள் ராஜி. முதன் முறை போகும் போது அவளை இருள் படிந்த அறைக்குள் விலங்கு போலக் கட்டிப் போட்டிருப்பதை கற்பனை செய்துகொண்டு போன அவளுக்கு இன்பமான அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளங்குற்றவாளிகள் நிலையம் பிரகாசமாக இருந்தது. கடுமையும் கண்டிப்பும் இருந்தாலும் மனவளர்ச்சியை அதிகரிக்கும் பாடங்களும் கைத்தொழில்களும் கற்றுக் கொடுத்தார்கள். ஓர் இந்து சமயப் பிரச்சாரகர் வாரம் ஒரு முறை வந்து தேவாரம் திருவாசகம் கற்றுக் கொடுப்பதாகக்கூட ராஜி அறிந்து கொண்டாள்.

பத்மா சந்தோஷமாக இருந்தாள். அக்காவைப் பார்த்து முதலில் வாய்நிறையச் சிரித்தவள் அப்புறம் தான் அநியாயமாகத் தனிப்படுத்தப் பட்டதை எண்ணியோ என்னவோ ஓவென அழுதாள். இந்தச் சின்னப் பிள்ளையைத் தாயாக இருந்து தன்னால் அன்பாக வளர்க்க முடியவில்லையே என ராஜியும் அழுதாள்.

பத்மா அந்தப் பள்ளியிலுள்ள எல்லாரையும் கவர்ந்திருந்தாள். ராஜி சந்தித்த மலாய், சீன அதிகாரிகள் அவள் மிகவும் ஒழுக்கமான பெண் எனவும் பள்ளியில் மிக உதவியாக இருக்கிறாள் எனவும் சொன்னார்கள்.

ஆனால் இந்த இளந்தளிரைச் சுற்றிச் சில பயங்கரமான இளம் பெண் குற்றவாளிகள் இருந்தார்கள். விபச்சாரிகளாகவும் குழந்தைக் கொடுமை செய்தவர்களாகவும் பழக்கப்பட்ட திருடர்களாகவும் போதைப் பொருள் பழக்கம் உள்ளவரள்களாகவும் பலர் இருந்தார்கள். அவர்களைப் பற்றி பத்மா கதை கதையாகச் சொன்னாள். இவர்களிடம் காயப்பட்டு பத்மா மனத்தழும்புகள் இல்லாமல் மீண்டு வர வேண்டுமே என்று ராஜி கவலைப்பட்டவாறு திரும்ப வந்தாள்.

*** *** ***

பத்மா இல்லாமற்போன இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டார் ரூமில் அடையத் தொடங்கிவிட்ட பழைய சாமான்களை அகற்றிக் கூட்டிச் சுத்தப் படுத்தினாள் ராஜி. தண்ணீர் விட்டுக் கழுவும்போது கொஞ்சம் ரத்தக் கறையும் கொஞ்சம் விந்துக் கறையும் கூட இன்னும் இருப்பது போல அவளுக்குப் பட்டது. அது வெறும் மனப்பிரமை எனச் சொல்லிக் கொண்டாள். இரண்டு பலகைகள் வைத்து ஒரு பாயை விரித்தவுடன் அது படுக்கையாயிற்று. தனது இரண்டு தலையணைகளில் ஒன்றைக் கொண்டு வந்து போட்டாள். மங்கலான பழைய பல்பு ஒன்று இருந்தது. போதும்.

மாமியார் கொஞ்ச நேரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போனாள். அப்புறம் ஏதோ முனகியவாறு பாத்திரங்களைக் கழுவும் சாக்கில் சத்தமாக உருட்டிக் கொண்டிருந்தாள்.

ராஜி பிற்பகல் வேலைக்குப் போய் ஏழு மணி வாக்கில் வீடு திரும்பிய போது சேகரன் வந்து விட்டிருந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே அவன் முகம் கடுகடுத்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. குழந்தைகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் தனக்குத் தேநீர் கலப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்த போது பின்னாலேயே வந்தான்.

அவள் கேத்தலில் நீர் நிரப்பி கேஸ் அடுப்பின் மீது வைத்தாள்.

“ஸ்டோர் ரூமை ஒழிச்சி வச்சிருக்கியாமே!” என்று கேட்டான். மாமியார் ஓதியிருக்கிறாள் எனத் தெரிந்தது.

அடுப்பின் விசையைத் தட்டினாள். அடுப்பு “குப்” என்று பற்றியது. “ஆமா!” என்றாள்.

“ஏன்?”

“ரொம்ப அழுக்கா கிடந்திச்சி!”

“படுக்கையெல்லாம் போட்டிருக்கியாமில்ல!”

“ஆமா!”

“ஏன்?”

ஒரு கோப்பையை எடுத்து தேத்துகள் பையைப் போட்டாள். கொஞ்சம் மௌனித்துச் சொன்னாள்: “நாளைக்கு பத்மாவ போய் அழச்சிக்கிட்டு வரப் போறேங்க!”

அவன் கோபத்தில் மூச்சிரைத்தான். “இதப்பத்தி ஒங்கிட்ட முன்னமே நான் சொல்லியிருக்கேன்ல?”

“ஆமா!”

“என்ன ஆமா?”

“ஆமா, சொல்லியிருக்கீங்க!”

“அப்ப நீ செய்றது திமிர்தான?”

கேத்தல் நீண்ட விசில் அடித்தது. அவள் அடுப்பை அணைத்து கொதிநீரை எடுத்து கோப்பையில் ஊற்றினாள்.

“சொல்லுடி, திமிர்தான!”

“இல்லிங்க!”

“என்ன இல்ல? நானும் அம்மாவும் இவ்வளவு சொல்லியும் எங்க பேச்ச கேக்காம நீ பாட்டுக்கு உன் விருப்பம் போலச் செய்றதுன்னா, அது திமிர் இல்லியா?”

“இல்லைங்க அதுக்குப் பேரு மனிதாபிமானம்!” தேத்துகள் பை கொதி நீரில் ஊறிக் கொண்டிருந்தது.

“எதுடி மனிதாபிமானம்? ஒரு கொலைகாரியைக் கொண்டு வீட்ல வச்சிக்கிறது மனிதாபிமானமா?”

“அவ கொலைகாரி இல்ல. இதுக்கு முன்னால ஒரு புழுவைக் கூட அவ வேணுமின்னு கொன்னதில்ல. அவ பச்சப் பிள்ள!”

கோப்பையிருந்து தேத்துகள் பையை அகற்றி பால் விட்டுக் கலக்கினாள். சீனி போட்டுக் கொள்ளவில்லை.

“ஓஹோ! பச்சப் பிள்ளதான் அரிவாள எடுத்து கொத்து கொத்துன்னு கொத்தினாளோ?”

“அவள அப்படி கொத்த வச்சதினால கொத்தினா! அவளோட மனச அந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தினதினால அடக்க முடியாம….!”

“அவ ஒரு கொலைகாரப் பேய்!” இதுவரை மறைந்து நின்றிருந்த மாமியார் முன்னுக்கு வந்து கத்தினாள். “ஒரு சாதாரண பொண்ணா இருந்தா ஒரு கத்தி எடுத்து ரத்தத்துக்கு பயப்படாம கொத்து கொத்துன்னு கொத்த முடியுமா? உன்னாலியும் என்னாலியும் முடியுமா” என்று கேட்டாள்.

ராஜி அவளை முறைத்தாள். “முடியும் அத்தை! ஏன் முடியாம? இப்ப நீங்க வார்த்தைகளால அவள நாய் பேய்னு கொத்தல? போன ஒரு வருஷமா அவள மனசுக்குள்ளியே நீங்க கொத்தல? அப்படித்தான்”

மாமியார் அதிர்ந்து நின்றாள். ராஜி தேநீரைத் தூக்கி உதட்டருகே கொண்டு உறிஞ்ச முயன்றாள். உதடுகள் துடித்தன. தொண்டை அடைத்திருந்தது. குடிக்க முடியவில்லை.

சேகரன் அறைக் கதவை ஓங்கிக் குத்தினான். “ஓக்கே! நீ ரொம்ப தலைக்கு மேல போயிட்ட! இப்படியே விட்டா முடியாது. நீ உன் தங்கச்சிய இந்த வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாது. இது என்னோட கட்டளை!”

கொஞ்சம் குரல் இறங்கிச் சொன்னாள்: “இதோ பாருங்க! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அவளுக்கு வேற யார் இருக்கா? எங்க போவா? வேற வழியே இல்ல!” என்றாள்.

“வேற வழி இல்லியா? இருக்குடி. நீ இந்த வீட்ட விட்டு வெளியே போய் அவளோட குடும்பம் நடத்து. நீ அவளோட தொடர்பு வச்சிக்கிறதுன்னா நம்ம உறவு அறுந்து போகும். நானும் நீயும் கணவன் – மனைவி இல்ல!”

கோப்பையைக் கீழே வைத்தாள். “சரி” என்றாள்.

சேகரன் அதிர்ந்தான். “என்ன சரி?”

“அதான் ஒவ்வொரு முறையும் உறவு அறுந்து போகும்னு மிரட்டிக்கிட்டே இருக்கிங்கள! அவ்வளவு சுலபமா அறுத்துட முடியும்னா அறுத்துக்கத் தயார்! என் தங்கச்சிய நானே தனியா வச்சி காப்பாத்திறேன்”

ஒரு கணம் மௌனம் கனத்தது. மாமியார் முன்னே வந்தாள். “என்னடி பேசிற? ஒரு குற்றவாளிச் சிறுக்கிக்காக குடும்பத்த விட்டுப் போறேங்கிறியா?”

“அவ குற்றவாளிச் சிறுக்கி இல்ல. என் தங்கச்சி. குடும்பத்த விட்டு நான் போகல. நீங்கதான் வெரட்டுறிங்க!”

“சம்பாரிக்கிறோம்கிற திமிரா?” என்றான் சேகரன்.

“ஏன் இருக்கக்கூடாது? உங்களுக்கு சம்பாதிக்கிற திமிர் இருக்கும்போது உங்களுக்கு சமமா சம்பாதிக்கிற எனக்கு இருக்கக்கூடாதா?”

“உன்ன…” சீறிக் கொண்டு முன்னால் வந்து முஷ்டியை முறுக்கி ஓங்கினான். முகத்துக்கு முன்னால் வந்ததும் முஷ்டி அப்படியே உறைந்து நின்றது.

கையை இறக்கிக் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நடந்தான். மூச்சிரைத்தான். “அப்ப வீட்டவிட்டு வெளியே போயிடுவ?”

“ஆமா!” என்றாள்.

“அப்ப புள்ளைங்க?”

“உங்க இஷ்டம். நீங்களே வச்சிக்கலாம். வேண்டான்னா என்னோட அனுப்பலாம்!”

“புள்ளங்கள ஒருகாலும் ஒன்னோட அனுப்பி அந்த கொலைகாரியோட வாழ வைக்க மாட்டேன்!”

“சரி!”

“புள்ளங்கள விட்டுப் போக நீ தயாரா?”

“தயார்தான்!”

“போய் எங்க இருப்ப?”

“இதோ மூணாவது வீட்டில பார்வதி அத்தை இருக்காங்க. அவங்க ரூம் தர்ரன்னு சொல்றாங்க. அங்கயே இருந்துக்குவோம் நானும் பத்மாவும்!”

அவன் கண்களில் தணல் பறக்க முறைத்தான். மாமியாரும் முறைத்தாள். இருவரின் பார்வைத் தீக்கதிர்கள் மத்தியில் ராஜி தனது தேநீரை மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

*** *** ***

கொஞ்ச நேரம் கழித்து மாமியார் திடுதிடுவென்று அந்த பார்வதி அத்தை வீட்டுக்குப் போவது தெரிந்தது. ராஜி பின்னாலேயே போனாள்.

“எங்க வீட்டு மருமகளுக்கு இங்க ரூம் கொடுக்கப் போறிங்களா?” என்று சத்தமாகக் கேட்டாள் மாமி.

பார்வதி அத்தை ஏன் இந்த இருட்டு நேரத்தில் இந்த அம்மாள் சத்தம் போடுகிறாள் என்று புரியாமல் மேலும் கீழும் பார்த்து அமைதியாகச் சொன்னாள்: “ஒரு ரூம் காலியா இருக்கு, அதுக்கு யாராவது ஆள் பார்த்துக் குடுன்னு நாந்தான் ராஜிக்குச் சொல்லியிருந்தேன்!”

“அவ யாரக் குடி வைக்கப் போறா தெரியுமா?”

ராஜியைக் குழப்பமாகப் பார்த்தாள் பார்வதி மாமி. “எனக்கு சொல்லலிய அம்மா. யார்னு சொல்லலிய!”

“நான் சொல்றேன். அவ தங்கச்சி, அந்தக் கொலைகாரப் பிசாசு விடுதலை ஆகி வர்ராளாம். அவளக் கொண்டாந்து குடி வைக்கப் போறாளாம்!”

“அப்பிடியா? எனக்குத் தெரியாதே” பார்வதி மாமியின் குழப்பம் மேலும் அதிகமானது.

“அவளோட இவளும் வந்து இங்கயே இருக்கப் போறாளாம்!”

“அப்படியா ராஜி?” என்று திகைத்துக் கேட்டாள் பார்வதி அத்தை.

ராஜி பேசாமல் இருந்தாள்.

“ஏம்மா அப்படி? ஏன் ராஜி உங்க வீட்டவிட்டு இங்க வந்து இருக்கணும்?” என்று கேட்டாள் பார்வதி அத்தை.

“ஏன்னா, கொலைகாரிக்கு எங்க ஊட்ல எடம் இல்லன்னு சொன்னோம். அவள கூட்டிக்கிட்டு வந்தா எங்க ஊட்ல ஒனக்கும் இடம் இல்லன்னு சொன்னோம்! அதினால புள்ளங்களயும் புருஷனையும் விட்டுட்டு இங்க வந்து இருப்பாளாம்!”

“அப்படியா ராஜி?” பார்வதி அத்தையின் திகைப்பும் குழப்பமும் உச்சத்துக்குப் போயிருந்தன. ராஜி பேசாமல் இருந்தாள்.

“எத்தன கொளுப்பு நெஞ்சளுத்தம் பாத்திங்களா ஒரு பொம்பிளைக்கு? நீங்க எடம் கொடுப்பிங்கிளா? ஒரு கொலகாரிய வீட்டில வச்சிக்குவிங்களா?” மாமியார் கத்தினாள்.

பார்வதி அத்தை மாமியாரை நேராகப் பார்த்தாள். “உங்க மகன் கற்பழிச்சதினால வெட்டிட்டுப் போன சின்னப் பொண்ணப் பத்திதான சொல்றிங்க? நல்லா வந்து இருக்கட்டும். தன்னுடைய மானத்த காத்துக்கத்தான செஞ்சா? அதில என்னா தப்பு?”

மாமியார் அதிர்ச்சி அடைந்து நின்றாள். அப்புறம் கத்தினாள்: “என்னா தப்பா? நாளக்கி உங்களயும் அரிவாள எடுத்து வெட்ட மாட்டான்னு என்ன நிச்சயம்?”

“என்ன ஏன் வெட்டிறா? நான் என்ன அவளக் கீழத் தள்ளி கற்பழிக்கப் போறேனா?”

“அப்ப?”

“என்ன அப்ப? இந்த வீட்டில ராஜியோட தங்கச்சிக்கு எடம் வேணுமின்னா நான் குடுக்கத் தயார். நீங்க வெரட்றதினால ராஜியும் இங்க வந்து இருக்கிறதுன்னா அவளுக்கும் எடம் குடுக்கத் தயார்! அவ்வளவுதான்! உங்க குடும்ப சச்சரவ உங்களோட வச்சிக்குங்க!” என்றாள் பார்வதி அத்தை.

சேகரன் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தான். அவனோடு வந்திருந்த குழந்தைகள் இருவரும் பார்வதி அத்தை வீட்டில் சுதந்திரமாக உரிமையோடு நுழைந்து வேடிக்கை பார்த்தார்கள்.

“அம்மா இங்க வா!” என்று எரிச்சலுடன் கூப்பிட்டான் சேகரன். மாமியார்க்காரி வெளியே போனாள். தங்கள் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று இருவரும் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்து வீட்டார்கள் எட்டி எட்டிப் பார்த்தார்கள். அதைப் பொறுக்க முடியாமல் தாயின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு உள்ளே போனான் சேகரன்.

ராஜி பார்வதி அத்தையை நன்றியுடன் பார்த்துவிட்டுக் குழந்தைகளின் தலையைப் பாசத்துடன் கோதிவிட்டாள்.

“சின்னம்மா எப்ப வரும் அம்மா?” என்று மூத்த பெண் கேட்டாள்.

“நாளைக்கு!” என்றாள் ராஜி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *